ஷவ்வால் மாத ஆறு நோன்பு
நோன்பு என்பது ஒரு வகை வணக்கமாகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ரமளான் மாத கடமையான நோன்புகளை நோற்பதோடு மட்டுமல்லாமல், கீழ்கண்ட தினங்களிலும் உபரியாக நோன்பு நோற்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
சுன்னத்தான நோன்புகள்
01. ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்.
02. பிரதி திங்கள், வியாழக் கிழமைகள்.
03. ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள். அவை அய்யாமுல் பீழ் என்ற வெள்ளை நாட்களாகும்.அதாவது மாதத்தின் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள்.
04. ஆஷுரா நாள்: முஹர்ரம் பத்தாம் நாள். மேலும் அதற்கு ஒரு நாள் முந்தி சேர்த்து வைப்பது சுன்னத்தாகும்.
05. அரபா நாள்: துல்ஹஜ் மாதம் 9 ஆம் நாள்.
இவையாவும் முஹம்மது(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்த சுன்னத்தான நோன்புகளாகும். ரமளான் மாதத்தை அடைந்த நாம் அதைத்தொடர்ந்து வரக்கூடிய ஷவ்வால் மாத ஆறு நோன்புகளைப் பற்றிய சிறப்புகளை அறிந்து அதை நோற்பது அவசியமான ஒன்றாகும்.
அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:
'யார் ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம; என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
ஷவ்வால் ஆறு நோன்பு வைப்பதன் முக்கியத்துவம்
அல்லாஹ் தன்னுடைய அடியார்களின் நல்லமல்களுக்கு ஒன்றுக்கு பத்து என்ற வீதத்தில் கூலி வழங்குகின்றான். எனவே, ரமளான் மாதத்து 30 நோன்பிற்குக் கூலியாக 300 நாட்கள் நோன்பு நோற்ற நன்மையும், அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் வைக்கவிருக்கின்ற 6 நோன்புக்கு 60 நாட்கள் நோன்பு நோற்ற நன்மையும் கிடைக்கச் செய்கின்றான். ஆக ரமளான் மாதத்துடன், ஷவ்வால் மாதத்தின் 6 நோன்புகளையும் நோற்பதால், ஒரு முஸ்லிமிற்கு 360 நாட்கள், அதாவது ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்ற பாக்கியம் கிடைக்கின்றது. இதனை விடச் சிறந்த பாக்கியம் வேறெதுவும் உண்டா? எனவே, இத்தனை சிறப்புக்கள் பொருந்திய ஷவ்வால் மாத 6 நோன்பைத் தவற விடுவது நல்லடியார்களுக்கு உகந்ததல்ல.
ஒவ்வொரு வருடமும் ரமளான் நோன்புகளை நிறைவுபடுத்தி தொடர்ந்து ஷவ்வால் மாத ஆறு நோன்புகளை நோற்பதன் மூலம் அல்லாஹ்விடத்தில் வருடமெல்லாம் நோன்பு நோற்ற பாக்கியம் நமக்கு கிடைக்கின்றது. அம்மனிதர் தன் வாழ்நாளில் தொடர்ந்து இந்நோன்புகளைப் பிடிக்கும்போது அவர் காலமெல்லாம் நோன்பு நோற்ற பாக்கியம் கிடைக்கின்றது என்பதுதான் அறிஞர்களின் விளக்கமாகும்.
இந்த ஹதீஸின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினை வருடமெல்லாம் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் எவ்வளவு பலனை அடைவாரோ அந்நன்மைகளை ரமளானின் 30 நோன்புகளையும் ஷவ்வாலின் ஆறு நோன்புகளையும் நோற்றால் கிட்டுகின்றது. அவர் அந்த அம்மலை தொடர்வாரானால் காலமெல்லாம் நோன்பு நோற்ற நன்மைகள் கிட்டுகின்றது. அல்லாஹ் நோன்பைப் பற்றிய சிறப்பையும், அதற்கான கூலியையும் திருமறையில் பல இடங்களில் சிலாகித்துக் கூறுகின்றான். நோன்பாளிக்கான பரிசு மறுமையில் சுவர்க்கம் தான். நோன்பாளிகள் மறுமையில் அர்ரைய்யான் என்ற வாயிலின் மூலமாக சுவர்க்கத்தில் புகுவார்கள். நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடையானது அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் நறுமணத்தைப்போன்றது.
எப்பொழுது இந்த ஆறு நோன்புகளை நோற்பது?
இந்த ஆறு நோன்புகளை ஈதுப் பெருநாள் முடிந்ததன் மறுநாளிலிருந்து துவங்கி, தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நோன்பிருக்க வேண்டும் என்பது இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களது கருத்தாகும்.
ஷவ்வால் மாதத்தின் ஏனைய நாட்களில், அந்த மாதம் முடிவடைவதற்குள் பிரித்து பிரித்துக் கூட 6 நோன்பையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று இமாம் அபூஹனிஃபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
'யார் ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம்" என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
இந்த ஆறு நோன்புகளை ஈதுப் பெருநாள் முடிந்ததன் மறுநாளிலிருந்து துவங்கி, தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நோன்பிருக்கலாம். இல்லையெனில் அம்மாதத்தில் ஏனைய தினங்களில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
இந்த ஹதீஸில் அதைத் தொடர்ந்து என்ற வாசகம் ரமளான் மாதத்தை தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தையே குறிக்கும். அதுவல்லாமல் தொடர்ந்து வரும் நாள் எனக் கணக்கிட்டால் பெருநாள் நாளையும் சேர்த்து நோற்கவேண்டும் என நாம் யாரும் வாதிடமாட்டோம். ஏனென்றால் இரு பெருநாட்களிலும் நோன்பு நோற்பது ஹராம் என்பதை நாம் பொதுவாக அறிந்த ஒன்றாகும். எனவே சுன்னத்தான ஷவ்வால் மாத ஆறு நோன்புகளை பெருநாளுக்கு பிறகு விரும்பினால் தொடர்ந்தோ அல்லது ஷவ்வால் மாதத்தில் எந்த நாளையிலும் விட்டுவிட்டோ நோற்கலாம். எனவே, இவற்றில் எது தங்களுக்கு இயலுமோ அந்த வகையில் ஷவ்வால் ஆறு நோன்பை நோற்பது சிறந்தது.
விடுபட்ட நோன்புகளோடு இதை சேர்த்து வைக்கலாமா?
பெண்கள் ரமலான் மாதத்தில் மாதவிடாயின் காரணமாக விடுபட்ட நோன்புகளை ஷவ்வாலில் வைக்கும்போது அது ஷவ்வால் மாத நோன்பையும் சேர்த்து பூர்த்தி செய்தது போல் ஆகாது. ஒரு நோன்பை நோற்றால் இரண்டு வகையான நோன்புகளும் நிறைவேறிவிடும் என்பதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை. இரண்டையும் தனித்தனியாகவே நிறைவேற்ற வேண்டும்.கடமையான நோன்பு பாக்கி இருக்கும் போது சுன்னத்தான நோன்பை நோற்பதை விட கடமையான நோன்பை நோற்பதே சிறந்தது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஏனெனில் விடுபட்டுப்போன கடமையான நோன்பை நோற்காமல் இறந்துவிட்டால் நாம் குற்றவாளியாகி விடுவோம்.
இளைஞர்களும், சிறுவர்களும் இந்த ஆறுநோன்பை நோற்கலாமா.
மார்க்கம் அறியாத சிலர் ஷவ்வால் நோன்புகளை வயதானவர்கள் மட்டும் தான் நோர்க்க வேண்டும் என்று கூறி வாலிபர்களையும், இளம் பெண்களையும் தடுத்து விடுகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். இந்நோன்பை வயதானவர்கள்தான் பிடிக்க வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. அனைவருக்கும் இக்கட்டளை பொதுவானதாகும்.
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்
நன்றி: இஸ்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக