திங்கள், 6 ஆகஸ்ட், 2012



டாக்டர் ஜாகிர் நாயக்கின் பதில்கள் (16 - 20)
தமிழில் : அபு இஸாரா


கேள்வி எண் 16.


இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் - கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?.

பதில்:

கஃபா என்பது முஸ்லிம்கள் தொழுகையின் போது நோக்கி நிற்கும் திசையாகும். முஸ்லிம்கள் கஃபாவின் திசையை நோக்கி தொழுதாலும் - கஃபாவை தொழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்லாமியர்கள் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் அல்லது வேறு எதற்கும் தலைவணங்குவதும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அல்லது வேறு எதனையும் தொழுவதுமில்லை.

அருள்மறை குர்ஆன் இரண்டாவது அத்தியாயத்தின் 144 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
'(நபியே!.) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்.'

1. இஸ்லாமிய மார்க்கம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது:


உதாரணத்திற்கு இஸ்லாமியர்கள் இறைவனைத் தொழ விரும்பினால் - ஒரு சாரார் வடக்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். மற்றொரு சாரார் தெற்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். ஆனால் அந்த ஏக இறைவனாம் அல்லாஹ்வைத் தொழுவதில் கூட இஸ்லாமியர்கள் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்; இறைவனைத் தொழும்போது இஸ்லாமியர்கள் அனைவரும் கஃபாவை முன்னோக்க வேண்டும் என பணிக்கப்பட்டிருக்கிறார்கள். கஃபாவிற்கு மேற்குப்புறத்தில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிழக்குத் திசையில் கஃபா இருப்பதால்) கிழக்குத்திசை நோக்கியும் கஃபாவிற்கு - கிழக்;குத் திசையில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு மேற்குத் திசையில் கஃபா இருப்பதால்) மேற்குத் திசை நோக்கியும் தொழுவார்கள்.

2. உலக வரை படத்தின் மத்தியில் கஃபா அமைந்துள்ளது.


இஸ்லாமியர்கள்தான் உலக வரைபடத்தை முதன் முதலாக வடிவமைத்தார்கள். உலக வரைபடத்தை வடிவமைத்த இஸ்லாமியர்கள் உலக உருண்டையின் தெற்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் - வடக்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். அப்படி வடிவமைத்தபோது இஸ்லாமியர்கள் நோக்கித் தொழும் திசையான கஃபா - உலக வரைபடத்தின் மத்தியில் அமைந்திருந்தது. பின்னர் - மேற்கத்திய உலகின் வரைபடவல்லுனர்கள் உலக வரைபடத்தை வடிவமைத்தபோது - உலக உருண்டையின் வடக்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் - தெற்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். மேற்கத்தியர்கள் உலக வரைபடத்தை மாற்றி வடிவமைத்தாலும் - கஃபா அமைந்தது உலக வரைபடத்தின் மத்தியில்தான்.

3. கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறையைச் சுட்டிக்காட்டவே!


இஸ்லாமியர்கள் மக்காவிற்கு செல்லும் பொழுது மஸ்ஜிதே ஹரத்தில் உள்ள கஃபாவை சுற்றி வலம் வருவார்கள். அவ்வாறு கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறை என்னும் ஏக தெய்வ கொள்கையில் இஸ்லாமியர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுட்டிக் காட்டவும் ஒரு இறைவனையே வணங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவுமே ஆகும். ஒரு வட்டம் ஒரே ஒரு மத்திய புள்ளியை மாத்திரம் கொண்டிருப்பது போன்று வணக்திற்குரிய இறைவனும் அல்லாஹ் ஒருவனே என்பதை உணர்த்த வேண்டியும் ஆகும்.

4. உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஒன்று:


ஹஜ்ர் அல் - அஹ்வத் என்னும் கருப்புக் கல்லைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஒன்றில் கீழக்கண்டவாறு அறிவிக்கிறார்கள்:

'நல்லதோ அல்லது கெட்டதோ செய்ய முடியாத கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உன்னைத் தொட்டு - முத்தமிடுவதை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் உன்னைத் தொட்டு முத்தமிட்டிருக்க மாட்டேன்'.
மேற்படி செய்தி ஸஹீஹுல் புஹாரி என்னும் செய்தி புத்தகத்தில் 56வது அத்தியாயத்தில் 675வது செய்திகாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

5. கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்தல்:


அண்ணல் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் - நபித் தோழர்கள் கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்துள்ளனர். கஃபாவை வணங்குவதாக இஸ்லாமியர்களை நோக்கிக் குற்றம் சுமத்துபவரை பார்த்து கேட்கிறேன் - எந்தச் சிலை வணங்கி அவர் வணங்கக் கூடிய சிலையின் மீது ஏறி நிற்பார்?.



கேள்வி எண்: 17


மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே ஏன்?.


பதில்:

மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை என்பது உண்மை. அடியிற் காணும் விளக்கங்கள் மேற்படி தடையைப் பற்றி தெளிவாக்க உதவும்:

1. நாட்டிலுள்ள எல்லா குடிமக்களும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியாது.


நான் ஒரு இந்தியக் குடிமகன். ஆயினும்; ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல எனக்கு அனுமதியில்லை. ராணுவத்தில் பணிபுரிபவர்கள் - மற்றும் ராணுவத்தோடு தொடர்பு உடையவர்கள் மாத்திரம்தான் ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல அனுமதி உண்டு. அதுபோல- ஒவ்வொரு நாட்டிலும் - அந்த நாட்டின் சாதாரண குடிமக்கள் செல்ல முடியாதவாறு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சில இருக்கின்றன. அது போல இஸ்லாம் உலகத்திற்கும் - உலகத்தில் உள்ள மக்களுக்கும் பொதுவான மார்க்கமாக இருந்தாலும் - இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பது - இரண்டு புனித நகரங்களான மக்காவும் - மதினாவுமாகும். இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதியுள்ளவர்கள் இஸ்லாமியர்கள் மாத்திரமே.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தடை செய்திருப்பதை நாட்டின் சாதாரண குடிமகன் எதிர்ப்பது சரியானது அல்ல. அதே போன்றுதான் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதும் சரியானது அல்ல.

2. மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதிக்கும் 'விஸா'.


ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமெனில் அந்நாட்டிற்கு செல்வதற்காக 'விஸா' அதாவது அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது நாட்டிற்கு வர அனுமதி பெற வேண்டுமெனில் தமக்கென வித்தியாசமான சட்டங்களையும் விதிகளையும் தேவைகளையும் வகுத்துள்ளன. மேற்படி வகுக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கும் - விதிகளுக்கும் தேவைகளுக்கும் உட்படாதவர்களுக்கு தம் நாட்டிற்குள் வர அனுமதி கொடுப்பதில்லை.

இவ்வாறு தம் நாட்டிற்குள் வர அனுமதி கொடுப்பதில் கடுமையான சட்டங்களையும் விதிகளையும் தேவைகளையும் வகுத்துள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. குறிப்பாக மூன்றாம் தர நாடுகளில் உள்ள மக்களுக்கு அனுமதி கொடுப்பதற்கென கடுமையான சட்ட திட்டங்களை வைத்துள்ளது. மூன்றாந்தர நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல விஷா பெற வேண்டுமெனில் ஏராளமான தேவைகளையும் - நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கடந்த முறை நான் சிங்கப்பூருக்கு சென்றபோது போதைப்பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை என சிங்கப்பூர் இமிக்ரேஷன் படிவத்தில் எழுதப்பட்டிருந்தது. நான் சிங்கப்பூர் செல்ல வேண்டும் எனில் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும். மரண தண்டனை காட்டுமிராண்டித்தனம் என நான் வாதாட முடியாது. நான் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்படுவேன் என்றால் மாத்திரமே என்னை சிங்கப்பூர் செல்ல அனுமதிப்பார்கள்.

இஸ்லாத்தின் புனித நகரங்களான மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல விரும்பும் எந்த மனிதருக்கும் -இருக்க வேண்டிய ஒரேயொரு முக்கியத் தகுதி என்னவெனில் - தன் உதடுகளால் மொழிந்து உள்ளத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய
'லா இலாஹ இல்லல்லாஹ் - முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்' - வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி அவனது தூதராவார் - என்பதுதான்.



கேள்வி எண்: 18


குர்ஆனின் உள்ள ஒரு குறிப்பிட்ட வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. மற்றொரு வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. இவ்வாறு குர்ஆன் தனக்குத் தானே முரண்படுகிறதே. சரியா?.


பதில்:

அருள்மறை குர்ஆனின் இரண்டு வசனங்கள் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 47வது வசனமும், அத்தியாயம் 32 ஸுரத்துஸ் ஸஜ்தாவின் 5வது வசனமும் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது மனிதர்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. அருள்மறை குர்ஆனின் 70வது அத்தியாயம் ஸுரத்துல் மஆரிஜ்ன் 4வது வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது மனிதர்கள் கணக்கிடும் ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது.

மேற்படி வசனம் உணர்த்தும் பொதுவான கருத்து என்னவெனில் அல்லாஹ் கணக்கிடும் காலம் பூமியில் மனிதர்கள் கணக்கிடும் காலத்தோடு ஒப்பிட முடியாததது என்பதுதான். மேற்படி வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆயிரம் ஆண்டுகள் மற்றும் ஐம்பதினாயிரம் ஆண்டுகள் என்பது பூமியில் மனிதர்கள் கணக்கிடும் காலம் ஆகும். ஆயிரம் ஆண்டுகள் என்பது மனிதர்களின் பார்வையில் மிகவும் அதிகமான காலகட்டம் ஆகும். ஆனால் ஆயிரம் ஆண்டுகள் என்பது அல்லாஹ்வின் பார்வையில் ஒரு நாளைக்குச் சமமானது.

1. 'யவ்ம்' என்றால் காலம் என்றும் பொருள் கொள்ளலாம்:


மேற்படி வசனங்களில் 'யவ்ம்' என்ற அரபி வார்த்தை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 'யவ்ம்' என்ற அரபி வார்த்தைக்கு நாள் என்ற பொருள் தவிர, காலம் என்றும் ஒரு நீண்ட காலம் என்றும் பொருள் கொள்ளலாம். மேற்படி வசனங்களில் வரும் 'யவ்ம்' என்ற அரபி வார்த்தைக்கு நாள் என்று பொருள் கொள்ளாது, காலம் என்று பொருள் கொண்டால் எந்த குழப்பமும் இல்லை.

அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 47வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:
'(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளை போலாகும்.(அல் குர்ஆன் - 22:47)

இறை நம்பிக்கை கொள்ளாதவர்கள் தங்களது தண்டனைக்காக அவசரப் பட்ட பொழுது, அல்லாஹ் இறக்கியருளிய வசனம் இது. அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. அல்லாஹ்வின் பார்வையில் ஒரு நாள் என்பது, மனிதர்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளை போலாகும் என்று கூறுகிறது.

அருள்மறை குர்ஆனின் 32வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸஜ்தாவின் 5வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்: ஒருநாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும். அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். (அல் குர்ஆன் - 32:5)

மேற்படி அருள்மறையின் வசனம் ஒருநாளில் எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மேலேறிச் செல்லும் என்றும், அந்த நாளின் அளவு நாம் (மனிதர்கள்) கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும் என்றும் குறிப்பிடுகிறது.

அருள்மறை குர்ஆனின் 70வது அத்தியாயம் ஸுரத்துஸ் மஆரிஜ் - ன் 4வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:
ஒருநாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்: அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.(அல் குர்ஆன் 70:4)

மலக்குகளும், ஆன்மாக்களும் அல்லாஹ்வை சென்றடையக் கூடிய காலம் ஐம்பதினாயிரம் வருடங்களாக இருக்கும் என்று மேற்கண்ட அருள்மறை வசனம் குறிப்பிடுகிறது.

இரண்டு மாறுபட்ட செயல்கள் நடைபெறக் கூடிய காலகட்டங்கள் சமமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உதாரணத்திற்கு நான் சென்னையிலிருந்து செங்கல்பட்டைச் சென்றடைய இரண்டு மணி நேரம் பிடிக்கிறது என்கிறேன். அதே வேளையில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்றடைய 14 மணி நேரம் பிடிக்கிறது என்கிறேன். மேற்படி நான் சொன்ன எனது இரண்டு கூற்றுக்களும் ஒன்றோடு ஒன்று முரண்படவில்லை.

அதே போன்றுதான் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் ஒன்றோடு ஒன்று முரண்படுவதே இல்லை. மாறாக நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு சமன்படுகிறது.



கேள்வி எண்: 19


குர்ஆனின் பல வசனங்கள் ஷைத்தான் ஒரு மலக்கு இனம் என்று சொல்கிறது. ஆனால் அத்தியாயம் கஃபுவில் ஷைத்தான் ஒரு ஜின் இனம் என்கிறது. இவ்வாறு குர்ஆனில் முரண்பாடாண வசனங்கள் இருப்பது சரியா?.




பதில்:

நபி ஆதம் (அலை) அவர்களும் - இப்லீஸும் இருக்கின்ற வரலாற்று சம்பவங்கள் அருள்மறை குர்ஆனில் பல வசனங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அருள்மறை குர்ஆனின் 2வது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 34வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, 'ஆதமுக்கு பணி(ந்து ஸுஜுது செய்) யுங்கள்' என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். அவன் (இப்லீஸு) மறுத்தான்: ஆணவமும் கொண்டான்: இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.(அல் குர்ஆன் 2:34)

மேற்படி பொருள் தரக் கூடிய அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களின் பெயர்களும் வசனங்களின் எண்களும் பின் வருமாறு:
அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் வசனம் 28 - 31
அத்தியாயம் 17 ஸுரத்துல் பனீ இஸ்ராயீல் வசனம் 61
அத்தியாயம் 20 ஸுரத்துல் தாஹா வசனம் 116
அத்தியாயம் 38 ஸுரத்துல் ஸாத் வசனம் 71 - 74.
ஆனால் அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் 18 ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:
அன்றியும், 'ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள்' என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே) நினைவு கூர்வீராக: அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜுது செய்தார்கள்;: அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தை சேர்ந்தவனாக இருந்தான்:... (அல் குர்ஆன் 18:50)

2. அரபிய முறையில் பின்பற்றுதல்:
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, 'ஆதமுக்கு பணி(ந்து ஸுஜுது செய்) யுங்கள்' என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். அவன் (இப்லீஸு) மறுத்தான்: ஆணவமும் கொண்டான்: இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.(அல் குர்ஆன் 2:34)

மேற்படி அருள்மறை குர்ஆனின் மொழியாக்கத்தை நாம் மேலோட்டமாகப் படித்துப் பார்த்தால் - இப்லீஸும் மலக்கு இனத்தைச் சார்ந்தவன் தானோ என்று நம்மை எண்ணத் தூண்டும். அருள்மறை குர்ஆன் அரபி மொழியில் இறக்கியருளப்பட்டது என்பதை நாம் அறிவோம். அரபி இலக்கணத்தில் ஒரு கட்டளையை பின்பற்றுவதற்கென்று ஓர் முறை உள்ளது. அதற்கு 'தக்லீப்' என்று பெயர். மேற்படி முறைப்படி - பெரும்பாலானவர்களுக்கு விதிக்கப்படக்கூடிய கட்டளை -சிறுபான்மையாக உள்ளவர்களுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு 100 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பறையில் 99 பேர் ஆண்களும் மீதி ஒருவர் மாத்திரம் பெண்ணாகவும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆண் மாணவர்கள் அனைவரும் எழுந்திருங்கள் என்று நான் அரபி மொழியில் சொன்னால், அது வகுப்பறையில் அமர்ந்திருக்கும் பெண் மாணவிக்கும் பொருந்தும். பெண் மாணவியும் எழுந்திருக்க வேண்டும் என்று நான் அரபியில் தனியாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.

அதுபோலத்தான் அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனத்திலும், அல்லாஹ் மலக்குகளுக்கு கட்டளையிடும்போது - இப்லீஸும் அங்கு இருந்ததால் - இப்லீஸுக்கு என்று தனியாக கட்டளையிட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு இப்லீஸுக்கு என்று தனியாக கட்டளை இடாத காரணத்தால் - இப்லீஸும் - மலக்கு இனமோ என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது. ஆனால் இப்ல{ஸ் மலக்கு இனம் இல்லை. அவன் ஜின் இனத்தைச் சார்ந்தவன் என்பது அருள்மறை குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனத்திலிருந்து நாம் தெளிவாக அறியலாம். அருள்மறை குர்ஆனின் மற்ற எந்த வசனத்திலும் இப்ல{ஸ் மலக்கு இனம் என்று குறிப்பிடவில்லை என்பதாலும், அருள்மறை குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனம் இப்லீஸு ஜின் இனத்தைச் சார்ந்தவன் என்று தெளிவாக குறிப்பிடுவதாலும் - இப்லீஸு ஜின் இனத்தைச் சார்ந்தவன்தான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

3. ஜின்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்கவோ அல்லது ஏற்காமல் இருக்கவோ உள்ள சுதந்திரம் உண்டு.
அடுத்து ஜின்கள் சுதந்திரமானவை. அவைகள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடக்கவோ அல்லது அல்லாஹ்வின் கட்டளையை நிராகரிக்கவோ உள்ள உரிமை உண்டு. ஆனால் மலக்குகளுக்கு அல்லாஹ் அற்த உரிமையை வழங்கவில்லை. மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படக் கூடியவை. எனலே இப்லீஸ் மலக்கு இனமாக இருந்தால், அல்லாஹ்வின் கட்டளையை நிராகரிக்கும் செயலுக்கே இடமில்லை. இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை இப்லீஸ் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்ததிலிருந்தும் - இப்லீஸ் மலக்கு இனமல்ல, ஜின் இனம்தான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.



கேள்வி எண்: 20


பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் - அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என சாட்சி சொல்வதில் கூட இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லாத நிலை உள்ளதே. ஏன்?




பதில்:

இஸ்லாத்தில் எல்லா வேளைகளிலும் பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் - அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என்பது உண்மையானது அல்ல. ஒரு சில வேளைகளில் மாத்திரம் பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் - அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என்பது இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது. அருள்மறை குர்ஆனின் ஐந்து வசனங்கள் சாட்சிகள் பற்றிய விளக்கமளிக்கிறது. மேற்படி வசனங்களில் சாட்சிகள் பற்றி குறிப்பிடும்பொழுது -ஆண் அல்லது பெண் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், பொதுவாக சாட்சிகள் என்று மட்டும் குறிப்பிடுகிறது. மேற்படி ஐந்து வசனங்களில் உள்ள ஒரேயொரு வசனம் மாத்திரம் சாட்சிகளில் ஆண் என்றால் ஒருவர் என்றும் பெண் என்றால் இருவர் என்றும் குறிப்பிட்டு காட்டுகின்றது. அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 282வது வசனம் மேற்படி சாட்சிகள் பற்றி குறிப்பிடுகின்றது. அருள்மறை குர்ஆனின் மிக நீண்ட இந்த வசனம் பொருளாதார நடவடிக்கை பற்றி குறிப்பிடுகின்றது.

'(நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். ஆண்களில் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள். (பெண்கள் இருவர் ஏனென்றால்) அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்.' அல்-குர்ஆன்(2:184)

மேற்படி வசனம் பொருளாதார கொடுக்கல், வாங்கல் பற்றி அறிவிக்கிறது. பொருளாதார கொடுக்கல் வாங்கலின் போது ஒப்பந்தம் இடச் சொல்கிறது. அவ்வாறு ஒப்பந்தம் இடும்போது கொடுப்பவருக்கும் - வாங்குபவருக்கும் இடையில் இரண்டு நபர்களை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள் என் கட்டளையிடுகிறது. இரண்டு சாட்சிகளும் ஆண்களாக இருந்தால் நன்று என்று பரிந்துரைக்கிறது. இரண்டு ஆண்கள் சாட்சியாக கிடைக்கவில்லையெனில், ஒரு ஆண் சாட்சியையும் இரண்டு பெண் சாட்சிகளையும் கொண்டு ஒப்பந்தம் இடுங்கள் என்று மேற்படி வசனம் மனிதர்களுக்கு அறிவுறுத்துகிறது.

உதாரணத்திற்கு - ஒரு மனிதர் தனது நோய்க்கு ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்கிறார் எனில் - மேற்படி அறுவை சிகிச்சை பற்றி உரப்பித்துக் கொள்வதற்காக அவர் இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களை கலந்து ஆலோசிக்கலாம்.. அல்லது அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கிடைக்கவில்லையெனில், ஒரு அறுவை சிகிச்சை நிபுணரையும், இரண்டு சாதாரண மருத்துவர்களை கலந்து ஆலோசிப்பதில் அவர் திருப்தி அடையலாம்.

அது போலவே பொருளாதார கொடுக்கல், வாங்கலின் போது இஸ்லாம் இரண்டு ஆண்களை சாட்சிகளாக்கிக் கொள்ளச் சொல்கிறது. ஏனnனில் ஆண்கள் குடும்பத்திற்காக சம்பாதிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள். பொருளாதார ரீதியாக ஒப்பிடும்போது பெண்களைவிட, ஆண்கள் பொருளாதார ரீதியாக அதிகம் பொறுப்புடையவர்கள். பொருளாதார ரீதியாக ஆண்கள் அதிகம் பொறுப்புடையவர்கள் என்பதாலும், பெண்கள் மிகக் குறைவான பொறுப்புடையவர்கள் என்பதாலும் ஆண்கள் என்னும் பட்சத்தில் ஒருவரும், பெண்கள் என்னும் பட்சத்தில் இரண்டு பேரும் சாட்சியமாவது அவசியம் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இரண்டு பெண்கள் ஏனெனில் - பெண்களில் ஒருவர் தவறிழைத்து விட்டால், மற்றவர் அதனை சரிசெய்யலாம் என்ற காரணத்தால்தான் இரண்டு பெண்கள் சாட்சிகளாக தேவைப்படுகின்றனர். மேற்படி வசனத்தில் பயன்படுத்தப்பட்டள்ள 'தஷில்' என்ற அரபி வார்த்தைக்கு 'குழப்பம்' அல்லது 'தவறு' என்று பொருள். ஆனால் மேற்படி 'தஷில்' என்ற அரபி வார்த்தைக்கு 'மறதி' என்று தவறான மொழியாக்கம் செய்துள்ளனர் பலர். மேற்படி ஒரு ஆணும் இரண்டு பெண்ணும் சாட்சியாக இருக்க வேண்டும் என்பது பொருளாதார கொடுக்கல் - வாங்கல் சமடபந்தப்பட்டதற்கு மாத்திரமேத் தவிர, மற்ற இடங்களில் அல்ல.

தவிர, சில மார்க்க அறிஞர்கள் கொலை சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் மேற்படி ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இருவரும் சாட்சியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். ஏனெனில் - பயம் என்று வரும்போது, ஆண்களை விட பெண்கள் அதிகம் பயப்படும் தன்மை கொண்டவர்கள். பெண்கள் அதிகமாக பயப்படும் காரணத்தால் சாட்சி சொல்லும்போது, குழப்பமடைய நேரிடலாம். எனவே கொலை சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் ஆண் எனில் ஒருவரும், பெண் எனில் இரண்டு பேரும் சாட்சியாக இருக்க வேண்டுமென சில மார்க்க அறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேற்படி விவகாரங்கள் தவிர - எஞ்சியுள்ள அனைத்து விவகாரங்களிலும் சாட்சி சொல்வதில் ஆண் - பெண் இருவருக்கும் சமமான நிலையைத்தான் இஸ்லாம் வழங்குகிறது. அருள்மறை குர்ஆனின் ஐந்து வசனங்கள் சாட்சிகள் பற்றி குறிப்பிடுகின்றது. மேற்படி ஐந்து வசனமும் ஆண் - பெண் என்று வித்தியாசம் குறிப்பிடாமல் - சாட்சிகள் என்று மாத்திரம்தான் குறிப்பிடுகின்றது.

சொத்துக்கான உயில் எழுதும்போது - இரண்டு நபர்களை சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகின்றது. அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 106வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

'நம்பிக்கை கொண்டவர்களே!. உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரண சாஸணம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும்: அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் பொது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடைக்காவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்.' (அல்-குர்ஆன் 5:106)

விவாகரத்து செய்ய விரும்பினால் உங்களில் இரண்டு பேர் சாட்சியாக இருக்கட்டும் என்று அருள்மறை குர்ஆனின் அறுபத்து ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துத் தலாக்கின் இரண்டாவது வசனம் கூறுகின்றது. (அல்-குர்ஆன் 65:2)

'எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ, அவர்களை நீ;ங்கள் எண்பது கசையடி அடியுங்கள்' என்று அருள்மறை குர்ஆனின் இருபத்து நான்காவது அத்தியாயம் ஸுரத்துந் நூரின் நான்காவது வசனம் கூறுகின்றது.

தவிர, சில மார்க்க அறிஞர்கள் எல்லா விவகாரங்களிலும் சாட்சி சொல்ல ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இருவரும் சாட்சியாக இருக்க வேண்டும் என்றும் வாதாடுகிறார்கள். மேற்படி வாதம் சரியானதன்று. ஏனெனில் அருள்மறை குர்ஆனின் இருபத்து நான்காவது அத்தியாயம் ஸுரத்துந் நூரின் ஆறாவது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.

'எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால், அவன் நிச்சயமாக உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் நான்கு முறை சத்தியம் செய்து கூற வேண்டும்.' (அல்-குர்ஆன் 24:6).

மேற்படி வசனங்களில் எல்லா இடங்களிலும் சாட்சிகள் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறதேத்; தவிர, ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இரண்டு பேரும் என்று குறிப்பிடப்படவில்லை. மேற்படி வசனத்திலிருந்து பெண்களையும் தனி நபர் சாட்சியாக ஏற்கலாம் என்பது நமக்குத் தெளிவாவதுடன், எல்லா விவகாரங்களிலும் சாட்சி சொல்ல ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இருவரும் சாட்சியாக இருக்க வேண்டும் என்போரின் வாதமும் அடிபட்டு போய்விடுகின்றது.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி:
இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான நோன்பினை நோற்பதற்காக பிறை பார்த்தல் சம்பந்தமாக ஒரு பெண்மணியின் சாட்சி போதுமானது என்பதை அனைத்து மார்க்க அறிஞர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். சில மார்க்க அறிஞர்கள் நோன்பினை நோற்பதற்காக பிறை பார்க்கும்போது ஒரு சாட்சியும், நோன்பு நோற்று முடிந்து, பெருநாள் கொண்டாடுவதற்காக பிறை பார்க்கும்போது இரண்டு சாட்சியும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றார்கள். மேற்படி செய்தியிலும் சாட்சி பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளதேத் தவிர, ஆண் சாட்சி அல்லது பெண் சாட்சி என்று குறிபிடப்படவில்லை.

மேலும் சில விவாகரங்களில் பெண்களின் சாட்சியம் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும். உதாரணத்திற்கு பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளான - இறந்து போன பெண் மையங்களை குளிப்பாட்டுவது - போன்ற விரகாரங்களில் பெண்களின் சாட்சியம் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும். மேற்படி விவகாரங்களில் ஆண்களின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.

கேள்வி கேட்டவர் சொன்னது போன்று பொருளாதார விவகாரங்களில் மாத்திரம் ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இரண்டு பேரும் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று இஸ்லாம் நிபந்தனை வைத்துள்ளது. மேற்படி நிபந்தனை கூட ஏனெனில் இஸ்லாமிய சமுதாயத்தில் - பெண்களுக்கும் - ஆண்களுக்கும் பொருளாதார ரீதியாக இஸ்லாம் வழங்கியுள்ள பொறுப்புக்களின் காரணமாகத்தானேத் தவிர, ஆண் - பெண் என்கிற பாலியல் வேறுபாடு காரணம் அல்ல. மற்றபடி அனைத்து விவகாரங்களிலும் சாட்சியமளிப்பதில் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் சமமான உரிமையைத்தான் இஸ்லாம் வழங்குகிறது.

நன்றி: ஒற்றுமை.நெட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக