ஜும்ஆவின் சிறப்பு
எம்.முகமது சித்திக் - மலேசியா
1) ஜும்ஆ என்றால் என்ன?
வெள்ளிக்கிழமைக்கு யவ்முல் ஜும்ஆ என்று பெயர். ஜும்ஆ என்றால் ஒன்று சேருதல் என்பது இதன் பொருளாகும். அத்தினத்தில் மக்கள் யாவரும் ஒன்று கூடி தொழுவதாலும், ஜமா அத்தாக ஒன்று கூடித்தொழாமல் தனித்து தொழ அனுமதியில்லாததாலும் இப்பெயர் வந்துள்ளது. யூதர்களுக்கு சனிக்கிழமையும், கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் பெருநாட்களாக ஒன்றுகூடி வணக்கம் புரியும் நாளாக இருப்பதுபோல் முஸ்லீம்களுக்கு வெள்ளிக்கிழமையானது ஒன்று கூடி தொழும் பெருநாளாக ஜும்ஆ தினம் அமைந்திருக்கிறது.
இதற்கு யவ்முல் மஸீத் என்ற பெயரும் உண்டு. இதன் பொருள் அதிகமான நாள் என்பதாகும். இறைவன் அகிலத்தின் படைப்பை சனிக்கிழமை துவக்கி ஆறு நாட்களில் முடித்தான் என்றும் அத்துடன் இந்நாளை அதிகமாக சேர்த்து ஏழாவது நாளாக ஆக்கியதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதற்கு யவ்முல் ஹர்பு (சண்டை நாள் ) என்னும் பெயரும் உள்ளது. ஒருவன் தன் மனோ இச்சையோடு போர் செய்யும், அதாவது தன் பாவத்தை நினைத்து வருந்தி மன்னிப்பு கோரும் நாள். ஆதலால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
இதற்கு யவ்முல் அரூபா (சந்தை கூடும் நாள்) என்றும் பெயர் உள்ளது. காரணம் முற்காலத்தில் இருந்தே அரபு நாடுகளில் சந்தை கூடி வந்தது. இதற்கு சையிதுல் அய்யாம் நாட்களின் நாயகம் என்ற பெயரும் உள்ளது.
இந்த ஜும்ஆத் தொழுகை வாரத்திற்கு ஒரு முறையாவது மக்களை ஒன்று சேர்க்கும் அரிய பணியை செய்கிறது. இரண்டு பெருநாட்களை விட சிறப்புடையது என்றும், இது பக்கீர்களின் ஹஜ் என்றும், மிஸ்கீன்களின் ஈத் ( ஹஜ்ஜுல் புகராயீ வஈதுல் மஸாகீன் ) என்றும் அண்ணல் நபி (ஸ்ல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாம் இறுதியாக வந்த சமுகத்தவராயினும் நாமே மறுமையில் எல்லோருக்கும் முந்தி இருப்போம். நம்முடைய ஜும்ஆ தான் எல்லோருடைய ஜும்ஆ வுக்கும் முந்தி உள்ளது.யூதர்கள் நமக்கு ஒரு நால் பின்பும், கிறிஸ்தவர்கள் யூதர்களுக்கு ஒரு நாள் பின்பும் உள்ளனர் என்று அன்னல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஜும்ஆ விற்கான அழைபொலி கேட்டதும் வியாபாரத்தை விட்டுவிட்டுத் தொழுகைக்கு விரைந்து செல்லுமாறு இறைவன் குர்ஆனில் கூறியுள்ளான். விசுவாசிகளே ! (வெள்ளிக்கிழமையாகிய) ஜும்ஆ நாளன்று தொழுகைக்காக பாங்கு சொல்லி நீங்கள் அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டு விட்டு அல்லஹ்வை தியாணிக்க விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிவுடையோராக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்தது.
( குர் ஆன் அத்தியாயம் 62, வசனம் 9. அல்லாஹ் இவ் வசனத்தில் ஜும் ஆ வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளான். )
2) நாயகம் (ஸல்) அவர்களின் முதல் ஜும்ஆ
நாயகம் (ஸ்ல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மதீனாவுக்கு வெளியே குபா என்னுமிடத்தில் தங்கினார்கள். மக்காவில் விட்டு வந்த ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களை எதிர்பார்த்தேதான் அவ்வாறு நாயகம் (ஸல்) அவர்கள் தங்கியிருந்தார்கள்.
பதினாகு நாட்களுக்கு பின்னர் ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் சுகமே வந்து சேர்ந்தார்கள். இதற்கிடையே நாயகம் (ஸல்) அவர்கள் குபாவில் ஒரு பள்ளிவாசலை நிர்மாணிக்க அஸ்திவாரமிட்டு பதினான்கு நாட்களுக்குள் சரித்திரப்பிரசித்தமான அப்பள்ளிவாசலை கட்டி முடித்தார்கள். தாங்களும் மற்ற கூலி ஆட்களுடன் சேர்ந்து கொண்டு அயராது உழைத்து அக் கட்டிடத்தை எழுப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.
நாயகம் (ஸல்) அவர்கள் முதன் முதலாக நிர்மாணித்த பள்ளிவாசல் இதுவேயாகும். இதைப்பற்றி இறைவன் குர்ஆனில் பக்தியின் மீது அஸ்திவாரமிடப்பட்ட முதல் பள்ளிவாசல் என்று சிறப்பித்து கூறியுள்ளான். குபாவில் பதினான்கு நாட்கள் தங்கியிருந்த பின்னர் நாயகம் (ஸ்ல்) அவர்கள் ஜும் ஆ தொழுகையை இங்கேயே நிறைவேற்றினார்கள். தொழுகைக்கு முன்னர் நாயகம் (ஸ்ல்) அவர்கள் முஸ்லீம்களுக்கு வணக்கத்தின் முக்கியத்துவம் பற்றியும் பக்தி, நேர்மை ஆகியவற்றின் அவசியம் பற்றியும் அழகியதோர் உபதேசம் செய்தார்கள்.இதற்குத்தான் ஜும்ஆ வின் குத்பா என்று கூறப்படும். நாயகம் (ஸ்ல்) அவர்கள் முதல் ஜும்ஆத் தொழுகையும் முதல் குத்பாவும் இதுவேயாகும்.
3) ஜும்ஆ வின் சிறப்பு பற்றி நாயகம் (ஸ்ல்) அவர்கள் கூறியது என்ன ?
சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஜும் ஆ நாளாகும். அத்தினத்திலேயே ஆதம் நபி (அலை) படைக்கப்பட்டு அதிலேயே அவர்கள் சுவர்க்கத்தில் நுழைவிக்கப்பட்டார்கள். அத்தினத்திலேயே சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றவும் பட்டார்கள். இறுதி நாளும் ஜும்மா தினத்திலேயே நிகழும் என்று நாயகம் (ஸ்ல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)- நூல்-முஸ்லீம்.
அபூமூஸன் அஷஅரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நாயகம் (ஸ்ல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹு தஆலா உலகத்தினுடைய நாட்களை அந்தந்த நாட்களுக்குறிய அலங்காரங்களுடன் கொண்டு வருவான். ஜும்ஆவை உடையவர்கள் ஜும்ஆ நாளை மாப்பிள்ளையை பெண் வீட்டிற்கு அழைத்துச் செல்வது போன்று மறுமை நாளில் அதனை சூழ்ந்து கொள்வார்கள். அந்த நாளாகிறது அவர்களுக்கு ஒளி சிந்தும் அந்த ஜும்ஆ நாளை பெற்றவர்கள் மறுமை நாளில் அதன் ஒளியினால் நடப்பார்கள். அவர்களது நிறம் பனிக்கட்டியைவிட வெண்மையானதாக இருக்கும்.அவர்கள் மீது கஸ்தூரி மணம் வீசும். அவர்கள் அந்நிலையிலேயே சுவர்க்கத்தின் மண்டபத்தில் நுழைவார்கள். அப்போது ஜின்களும் மனிதர்களும் அவர்கள் குறித்து வியந்து பேசுவார்கள். அவர்கள் சுவர்க்கதில் நுழையும் வரை ஜின்களும் பிற மக்களும் சூழ்ந்து கொள்வார்கள்.
ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், நாயகம் (ஸ்ல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள் ஜிப்ராயில் (அலை) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுடைய கையில் வெண்மையான கண்ணாடி ஒன்று இருந்தது. அக் கண்ணாடியின் நடுவில் ஒரு வெண்மையான புள்ளியிருந்தது. நான் அவர்களிடம் இதுவென்ன ? என்று கேட்டேன். அதற்கவர்கள் இது ஜும் ஆவினுடைய நாளாகும். அப்புள்ளி அந்த நாளுடைய இருபத்து நான்கு மணிநேரத்தில் ஒரு மணி நேரமாகும். எனவே ஒருவன் அந்த நேரத்தில் அல்லாஹ்விடம் ஒன்றை கேட்டு அவன் அதை கொடுக்காதிருப்பதில்லை. அந்த நாள் தங்களுடைய சமுதாயத்தவருக்கு பெருநாள் ஆகும் என்பதை எடுத்துரைக்கவே அல்லாஹ் தங்களிடம் காண்பிக்குமாறு கூறினான். அந்த நாளில் தங்களுக்கு மிகுதியான நன்மைகள் குவிந்து கிடக்கின்றன.
அந்த நாளில் ஒருவன் அல்லாஹ்விடத்தில் தனக்கென்று பங்கிடப்பட்டதை கேட்பானாயின் அல்லாஹ் அவனுக்குறியதை கொடுப்பான். அடியான் கேட்டது கொடுக்கப்படாவிட்டால் அதற்கு பகரமாக அவனின் பிழைகள் மன்னிக்கப்படுகிறது. மேலும் எங்களிடம் வெள்ளிக்கிழமையாகிறது அருட்கொடைகளை அதிகப்படுத்தப்பட்ட நாளாகும் என்றும் அதன் பெயர் சையதுல் அய்யாம் நாட்களுக்கெல்லாம் தலைமையானது என்போம் என்று ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறினார்கள். நான் அவர்களிடம் அவ்வாறு கூறுவதன் காரணம் என்ன என்று கேட்டேன். அல்லஹுத்தாஆலா சுவனபதியில் அஃபீஹ் எனப்படும் ஓர் ஓடையை உண்டாக்கியுள்ளான். அதில் வெண்மை நிறத்தில் கஸ்தூரி மணல் மேடை உண்டாக்கப்பட்டுள்ளது. ஜும் ஆ நாளன்று நபிமார்கள் அந்த மணல் மேட்டில் வந்து கூடுவார்கள். அவர்களுக்கு அவர்கள் அமர்வதற்கு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒளியினால் ஆன இருக்கைகள் போடப்படும். அவர்கள் அவற்றில் அமர்வார்கள். அதன் பின்னர் சுவனவாசிகள் வருகை தருவார்கள். அவர்கள் கஸ்தூரி மேடையில் அமர்வார்கள். அதன் பின்னர் அவர்கள் முன் அல்லாஹ் தன்னை வெளிப்படுத்துவான். நான் உங்களுக்கு என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். உங்கள் மீது எனது அருட்கொடைகளை முழுமையாக்கி விட்டேன். இந்த நாள் நான் உங்களை கண்ணியப்படுத்திடும் நாளாகும்.எனவே நீங்கள் உங்களுக்கு வேண்டியவற்றை என்னிடம் கேளுங்கள் எனக் கூறுவான். அப்போது அவர்கள் நாங்கள் உனது திருப்பொருத்தத்தையும் சுவனபதியையும் கேட்கிறோம் என்பார்கள். அதற்கு அல்லாஹ் எனது திருப்பொருத்தம்தான் உங்களுக்கு கண்ணியத்தையும் தந்து எனது வீட்டிலும் கொண்டுவந்து சேர்த்துள்ளது என்று கூறுவான். மீண்டும் அவர்கள் ரிள்வான் என்னும் திருப்பொருத்தத்தை கேட்பார்கள். அல்லஹ் அவர்களது மேலெண்ணங்களுக்கு மேலாகவே அவனது திருப்பொருத்தத்தை வழங்குவான். இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கும் போது உஙளுடைய இமாம் ஜும் ஆத் தொழுகையை முடிக்கும் நேரத்தில், அந் நேரத்தில் நபி மார்களுக்கும் மற்றவர்களுக்கும் மட்டற்ற மகிழ்சி உண்டாகும். அதன் பின்னர் மீண்டும் வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்ற ஆவலை விட வேறொரு ஆவல் உண்டாகாது. அதனால்தான் அதற்கு யவ்முல் மஜீத் என்று பெயர் வழங்கிற்று என்பதாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள்.
( ஆதாரம், அல் மவ்யிலத்துல் குத்பா)
நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளை பற்றி குறிப்பிட்டுவிட்டு பின்னர் அதில் ஒரு நேரம் இருக்கிறது. முஸ்லீம் அடியான் தொழுதுவிட்டு அந்நேரத்தில் தன் தேவைகளில் ஏதாவது ஒன்றை அல்லஹ்விடம் கோரினால் அவன் அதை வழங்குகிறான் என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல் புஹாரி)
ஒருவர் ஜும்ஆ தினத்தன்று குளித்துவிட்டு தம் சக்திக்குட்பட்ட உடைகளை அணிந்துகொண்டு தன் இல்லத்திலிருக்கும் நறுமணத்தை பூசி பள்ளிவாசலுக்கு சென்று அங்கு அமர்ந்திருப்பவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் தம் மீது விதியாக்கப்பட்டுள்ளதை தொழுது இமாம் உபதேசம் செய்ய எழுந்ததும் அவரது உபதேசத்தை செவிசாய்த்து கேட்டால் அத்தினத்திற்கும் மறு ஜும் ஆ விற்குமிடயில் அவரால் நிகழ்த்தப்படும் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : ஸல்மான் (ரலி) நூல்: புகாரி)
4) எழுபது வருட வணக்கத்தைவிட ஜும்ஆ வின் நன்மை பெரிதா ?
அன்றொரு நாள் அல்லாஹ்வின் அருமைத்தூதர் மூசாநபி (அலை) அவர்கள் பைத்துல்முகத்தஸ் எனப்படும் புனிதப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள மலைத்தொடர் ஒன்றின் பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்களின் கண்கள் அங்கே தென்பட்ட காட்சி ஒன்றை கண்ட மாத்திரத்தில் மலைத்து நின்றுவிட்டார்கள். அந்த அபூர்வ காட்சி நபியவர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. அங்கே பெருங்குன்றின் ஒரு புறம் மனித கூட்டம் ஒன்று இறைவணக்கத்தில் ஈடுபட்டிருந்தது. இதுதான் நபி மூசா (அலை) அவர்களின் வியப்பிற்கு காரணமாயிருந்தது. அவர்களின் மணம் சந்தோஷத்தில் திலைத்திருந்தது. ஆனந்தமும் ஆச்சரியமும் அவர்களை அம்மக்கள் பக்கம் அழைத்துச்சென்றது. யா அல்லாஹ் ! மனித நடமாட்டமே இல்லாத இந்த கானகத்தில் இப்படியும் ஒரு திருக்கூட்டமா? என்று அவர்களின் மனம் எண்ணியது. அம்மக்களை நெருங்கிய நபி மூசா (அலை) அவர்கள் நீங்கள் யார் என்று விசாரித்தார்கள். அதற்கு அந்த மக்கள் எங்கள் நபியவர்களே ! நாங்கள் எல்லோரும் தங்களின் உம்மத்தினர்கள். தங்களையும் தங்கள் கொண்டுவந்த மதத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் என்று பதில் கூறினார்கள். இதை கேட்ட நபி மூசா (அலை)அவர்களுக்கு ஆனந்தம் அலைமோதியது. அப்படியா ! நீங்கள் எல்லோரும் எனது உம்மத்தினரா? என்று வியப்புற்றவர்களாக அவர்களை விசாரிக்கலானார்கள். நீங்கல் எவ்வளவு காலமாக இங்கே வசிக்கிறீர்கள் ? உங்களின் உணவுத்தேவைகள் ஏனைய பிரச்சனைகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன ? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நபி அவர்களே ! நாங்கள் இங்கே எழுபது ஆண்டு காலமாக தங்கி இறைவனை வணங்கி வழிபட்டு வருகிறோம். எங்களின் உணவு இங்கே முளைக்கின்ற இலை, தலைகளும், புற்பூண்டுகளுமாகும். பொறுமை என்னும் ஆடையை உடுத்தியும் , மழைநீரை அமுத பானமாகவும் கருதி வாழ்கிறோம். எங்களின் குறிக்கோள் இறைவழிபாடு மட்டுமே. இம் மனிதப்புனிதர்களின் தியாக சீலத்தை, தீன் வழிப்பற்றை எண்ணி எண்ணி வியந்து மகிழ்ந்தார்கள் நபி மூசா (அலை) அவர்கள். அப்போது அல்லாஹ் அவர்களுக்கு (வஹீ) இறைத்தூது அனுப்பி வைத்தான். நபி மூசாவே ! இங்கே உங்களின் உம்மத்தினர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் நண்மைகளைவிட அதிகமான நண்மைகளை பெறப்போகின்றவர்களை பற்றி அறிந்து கொள்வீராக !
இறுதி காலத்தில் முகம்மத் எனும் பெயர் கொண்ட எனதருமை தூதுவர் ஒருவர் தோன்றுவார். அவரே என் இறுதித்தூதர். அவருக்குப்பின் எந்த நபியும் தோன்றப்போவது இல்லை. அவருக்கும் அவரை பின் தொடரும் சமூகத்தினரருக்கும் ஒரு புனித நாளை நான் அன்புப்பரிசாக அளிக்க இருக்கிறேன்.அத் திருநாளில் அவர்கள் எனக்காக இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதானது , உமது உம்மத்தினர்கள் வருந்தி வழிபடுகின்ற இந்த எழுபது ஆண்டு வணக்கங்களைவிட பன் மடங்கு பதவியுடையதாக அதிக நன்மைகளை அடைகின்றதாக இருக்கும். அல்லாஹ்வின் வாயிலாக இந்த அற்புத தினத்தின் அறிவிப்பை கேட்ட நபி மூசா (அலை) அவர்கள் , யா அல்லாஹ் ! அது எந்த நாள் ? எனக்கேட்டார்கள். அதுவே ”ஜும்ஆ” நாள் என்றான் இறைவன். ஜும்ஆ தினத்தின் தன்னிகரற்ற உயர் தன்மையை உணர்ந்து கொண்ட மூசா நபி (அலை) அவர்கள் யா அல்லாஹ் ! அச் சிறப்பு மிகு ஜும்ஆ நாளை எனக்கும் என் உம்மத்தினருக்கும் வழங்குவாயாக எனக் கெஞ்சிக்கேட்டார்கள். அப்போது அல்லாஹ் நபி மூசாவே ! அந்நாளை உங்களுக்கு தருவதற்கு இல்லை. ஏனெனில் ஒவ்வொரு நபிக்கும் ஒரு குறிப்பிட்ட நாளை சிறப்பு மிக்க நாளாக ஏற்படுத்திவிட்டேன். அதாவது:-
1) நபி மூசா சனிக்கிழமை
2) நபி ஈஸா ஞாயற்றுக்கிழமை
3) நபி இப்ப்ராஹிம் திங்கள்கிழமை
4) நபி ஜக்கரிய்யா செவ்வாய்கிழமை
5) நபி யஹ்யா புதன்கிழமை
6) நபி ஆதம் வியாழக்கிழமை
7) நபி முகம்மது (ஸல்) வெள்ளிக்கிழமை என்று அறிவித்தான்.
இறுதித்தூதர் எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் உம்மத்தினர்களுக்கும் கிடைக்க இருக்கின்ற இவ்வுயர் கொடையை அறியப்பெற்ற நபி மூசா (அலை) அவர்கள் அந்த தினம் தங்களுக்கு கிடைக்க வில்லையே என்ற ஏக்கம் கொண்டவர்களாக, நிராசைப்பட்டவர்களாக மீண்டும் இறைவனிடம் வேண்டி நின்றார்கள். யாஅல்லாஹ் ! ஜும்ஆ நாளை எனக்கு வழங்காவிடினும் என்னை அந்த நபி முகம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒருவனாக படைத்துவிடு என்றார்கள். அல்லாஹ் அரவணைப்புடன் அப்போது அவர்களுக்கு அறிவித்தான். நபி மூசாவே ! உமக்கு தவ்ராத் எனும் வேதத்ததை தந்து தூதராக நியமித்திருக்கிறேன். இங்கனமிருக்க எவ்வாறு உம்மை அந்த இறுதிநபியின் சாதாரண உம்மத்தினராக படைப்பது ? பிறகே நபி மூசா (அலை) அவர்கள் அமைதி கொண்டார்கள். சிந்தயை கவரும் இச்சீர்மிகு சம்பவம் நமது சமுதாய மக்களின் ஆழ்ந்த கவனத்திற்கு உரியதாகும்.
ஒரு மாபெரும் சமூகத்தவரின் நபியவர்களே நம் நெஞ்சில் நிறைந்த நபிமணி (ஸல்) அவர்களின் ஒரு சாதாரண உம்மத்தினராக தம்மை ஆக்கியருளும்படி அல்லாஹ்விடம் மன்றாடினார்கள் என்றால் நம்மவர்களின் சிறப்பையும் நமக்கு அருளப்பட்டுள்ள ஜும்ஆ வின் மகத்துவத்தையும் என்னவென்று சொல்வது ? அதன் உயர்வை எவ்வாறு கோடிட்டு காட்டுவது ? இந்த அழியும் உலகின் சில அற்ப காசுகளுக்காக நம் சமுதாய வியாபாரிகளும், தொழிலாளர்களும் இச் சிறப்புமிகு ஜும்ஆவை தவறவிட்டு விடுகிறார்களெனின் அவர்கள் எவ்வளவு துர்பாக்கியவான்கள் என்பதை நினைத்துப்பார்பார்களாக.
5) மண்ணுலகில்தான் ஜும்ஆ தொழுகை விண்ணுலகிலுமா ஜும்ஆ தொழுகை ?
இம்மண்ணகத்தில் எங்கு எங்கு நமது கிப்லாவான கஃபா அமையப்பெற்றுள்ளதோ, அதற்கு நேர் மேலே விண்ணகத்தில் (நான்காவது வானில்) பைத்துல் மக்மூர் எனப்படுகின்ற மலக்குகளின் பள்ளி வாசல் அமைந்துள்ளது. இப்பள்ளியினுடைய மினோராவின் உயரம் ஐநூறு ஆண்டுகள் தொலைவுள்ளது என்பதாக நூல்களில் காண்கிறோம். பிரதி வெள்ளிதோறும் இம்மினோராவின் உச்சியில் ஏறி நின்று ஹலரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஜும்ஆவிற்காக பாங்கு கூறுவார்கள். ஹலரத் இஸ்ராபீல் (அலை) அவர்கள் இப் பள்ளியின் மிம்பர் மேடையில் ஏறி நின்று குத்பா ஓதுவார்கள். ஹலரத் மீக்காயீல் (அலை) அவர்கள் அங்கே குழுமியிருக்கின்ற மலக்குகளுக்கெல்லாம் இமாமாக முன் நின்று ஜும்ஆத் தொழ வைக்கிறார்கள். இவ்வாறாக ஜும்ஆ தொழுகை நிறைவேற்றப்பட்டவுடன் ஹலரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் , நான் கூறிய பாங்கிற்கு அல்லாஹ் வழங்கும் நண்மையை பூமியில் ஜும்ஆவிற்காக பாங்கு கூறிய முஅத்தின்கள் அனைவருக்கும் வழங்குகிறேன் என்பார்கள். இவ்வாறே ஹல்ரத் இஸ்ராபீல் (அலை) அவர்கள் நான் நிகழ்திய குத்பாவின் நண்மையை பூமியில் குத்பா நிகழ்திய கத்தீபுகள் அனைவருக்கும் வழங்குகிறேன் என்பார்கள். இவ்வாறே ஹலரத் மீக்காயீல் (அலை) அவர்கள் நான் இமாமத் செய்த நண்மையை பூமியில் இமாம்களாக நின்று ஜும்ஆத் தொழ வைத்த இமாம்களுக்கெல்லாம் வழங்குகிறேன் என்பார்கள்.
மேலும் அவ்விண்ணகத்தில் ஜும்ஆத்தொழுகையை நிறைவேற்றிய மலக்குகளெல்லாம் நாங்கள் தொழுத் இத் தொழுகையின் நண்மையை பூமியில் ஜும்ஆ தொழுத யாவருக்கும் வழங்குகிறோம் என்பார்கள். அப்போழுது அல்லஹுத்தாஆலா அவர்களை நோக்கி கூறுவான் மலக்குகளே ! எனது அடியார்களுக்கு நீங்கள் வெகுமதி வழங்குகிறீர்களா? வள்ளல்களுக்கெல்லாம் மாபெரும் வள்ளல் நானாக அல்லவா இருக்கிறேன் ! எனவே ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றிய எனது அடியார்கள் எல்லோருடைய பாவங்களையும் பொறுத்துக்கொண்டதற்கு மண்ணித்தருளியதற்கு நீங்கள் எல்லோரும் சாட்சிகளாக இருங்கள் என்று அல்லாஹ் கூறுவான். என்னே அல்லஹ்வின் வள்ளல் தன்மை ! என்னே அவனது கருணை மழை !
6) கத்தியின்றி இரத்தம் சிந்தாமல் குர்பானி கொடுப்பவர் யார் ?
வெள்ளிக்கிழமை தோறும் ஒவ்வோரு பள்ளிவாசலின் வாசல்களிலும் மலக்குகள் நின்று கொண்டு ஜும்ஆத் தொழுகைக்கு வருகை தருவோரின் பெயர்களை வரிசைக்கிரமமாக தங்களின் பதிவேட்டில் பதிவு செய்கிறார்கள். இமாம் குத்பா பேருரையை துவங்கிவிட்டால் அவ்வானவர்கள் தங்களின் பதிவேடுகளை மூடிவிட்டு அங்கே நிகழும் சொற்பொழிவில் தாங்களும் பங்குபெற பள்ளிக்குள் நுழைந்துவிடுகிறார்கள். ஜும்ஆ தொழுகையை நிறைவேற்ற முதன் முதலாக பள்ளிவாசலுக்குள் நுழைபவர் ஒரு ஒட்டகத்தை குர்பானி செய்த நண்மையையும் , அடுத்து வருபவர் ஒரு மாட்டை குர்பானி செய்த நண்மையையும் ,மூன்றாமவர் ஒரு ஆட்டை குர்பானி செய்த நண்மையையும் , அதற்கு அடுத்தவர் ஒரு கோழியை, பின்னவர் ஒரு முட்டையை குர்பானி செய்த நண்மையும் அடையப்பெறுகிறார்கள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
7) ஜும்ஆத் தொழுகையை விடுவதின் வளைவு என்ன ?
நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள், எவரொருவர் தக்க காரணமின்றி மூன்று ஜும்ஆவை விட்டு விடுகிறாரோ, அவர்தாம் இஸ்லாத்தை முதுகுப்புறத்தில் எறிந்துவிட்டவர் போலாகின்றார்.அவரது இதயத்தில் முனாஃபிக் ( நயவஞ்சகன்) என்று முத்திரை இடப்படும்.
ஹலரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வருகை தந்து விசாரிக்கலானார். ஹலரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே ! ஒரு மனிதர் இறந்து விட்டார். அவர் ஜும்ஆவும் தொழவில்லை, ஜமாஅத் தொழுகையிலும் பங்கேற்கவில்லை. அவருடைய நிலை என்ன? என்று கேட்டார். இதற்கு ஹலரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உடனே பதில் கூறினார்கள். அவர் நரகவாதி , இதுபற்றி அந்த மனிதர் ஒரு மாதம் வரை பல தடவை வந்து ஹலரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் விசாரித்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு தடவையும் அவருக்கு ஹலரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் , அவர் நரகவாதி, நரகவாதி என்றே தீர்ப்பு சொல்லி வந்தார்கள். (ஆதாரம் : முகாஷபத்துல் குலூப்)
நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் , நான் உங்களில் ஒருவரை மக்களுக்கு தொழுகை வைக்குமாறு கூறிவிட்டு ஜும்ஆத் தொழுகைக்கு வருகை தராதோரின் வீடுகளை நெருப்பால் கொளுத்திவிட நாடுகிறேன். (நூல்: முஸ்லீம்)
ஜும்ஆ நாளில் ஜும்ஆவுக்கு முன் (வழியில் ஜும்ஆ கிடைக்காதென்று இருந்தால் பிரயாணம் விலக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றி அவ்த் தாயீ (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊரில் வேட்டை காரன் ஒருவன் இருந்தான். அவன் ஜும்ஆ அன்று வேட்டைக்கு போனதில் அவனும் அவனது கோவேறு கழுதையும் பூமிக்குள் இழுக்கப்பட்டு விட்டனர். நாங்கள் போய் பார்க்கும்போது கழுதையின் காதை தவிர மற்ற பாகங்களெல்லாம் பூமிக்குள் இறங்கிவிட்டதை கண்டோம்.
முஜாஹிது (ரலி) அவர்கள் கூறியிருப்பதாவது :- சில மனிதர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆவுடைய நேரம் யாத்திரை போனார்கள். அவர்கள் தங்கியிருந்த தலத்தில் ஆகாய மார்க்கமாக நெருப்பு இறங்கி அந்த தலத்தையும் அதில் இருந்தவர்களையும் கரித்துவிட்டது. பார்த்தீர்களா ? ஜும்ஆ வை விடுவதின் கேட்டை இவ்வளவு தெரிந்தும் நாம் ஜும்ஆவை விடலாமா ?
8) ஜும்ஆவை நிறைவேற்றியதால் அல்லாஹ் அடியானுக்கு கொடுத்த பரிசு என்ன ?
ஹாமிது லப்பாப் (ரஹ்) என்பவர்கள் பிரபல்யமான சூபியாக்களில் ஒருவராவார்கள். ஒரு ஜும்ஆ தினத்தன்று ஜும்ஆத் தொழ செல்லவேண்டிய நேரத்தில் அவர்களுடைய கழுதை காணாமல் போய்விட்டது. ரொட்டிக்குரிய மாவு அரைப்பதற்காக கோதுமை ஆலையில் இருந்தது. அவர்களுடைய நிலத்திற்கு அந்த நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய கட்டாய நிலையும் ஏற்பட்டிருந்தது. ஜும்ஆ தொழச்சென்றால் இவ்வேலைகள் எல்லாம் தவறிவிடும் என்ற எண்ணம் அன்னாருக்கு ஏற்பட்டது. எனினும் உலகத்தின் இந்த கவலைகளைவிட மறுமைக்குறிய அமல் மிகச்சிறந்தது என்ற உறுதியில் ஜும்ஆத் தொழுவதற்கு புறப்பட்டு விட்டார்கள். ஜும்ஆத்தொழுது திரும்பி வந்தபோது அவர்களுடைய கழுதை வீட்டில் கட்டிக்கிடக்க கண்டார்கள். அன்னாரின் மனைவி ரொட்டி சுட்டுக்கொண்டிருந்தார்கள். அன்னாரின் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டிருந்தது. ஹாமிது (ரஹ்) அவர்கள் தம் மனைவியிடம் விபரம் கேட்டபோது நீங்கள் தொழச் சென்ற பின் நம் வீட்டுக்கதவை யாரோ தட்டினார்கள். நான் திறந்து பார்த்தபோது நம்முடைய கழுதை நின்றுகொண்டிருந்தது. அதற்கு பின்னர் ஒரு ஒரு சிங்கம் நின்றுகொண்டிருந்தது. கழுதை வீட்டிற்குள் வந்ததும் அந்த சிங்கம் திரும்பி சென்றுவிட்டது. நம்முடைய பக்கத்து நிலத்துக்குரியவர் தன் நிலத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டு தூங்கிவிட்டார். அவருடைய நிலத்தில் தண்ணீர் நிரம்பி அது நம்முடைய நிலத்திற்கும் பாய்ந்துவிட்டது.
நமது பக்கத்துவீட்டுகாரர் தன்னுடைய கோதுமையை அரைப்பதற்காக ஆலைக்கு சென்றிருந்தார், அங்கு தவறுதலாக நம்முடைய கோதுமையை அரைத்து எடுத்து வந்துவிட்டார். வீட்டிற்கு வந்தபின் தவற்றை தெரிந்து அவர் மாவை நம் வீட்டிற்கு கொடுத்தனுப்பி விட்டார்.அதில் நான் ரொட்டி தயார் செய்து கொண்டிருக்கிறேன். என்று கூறினார். இதை கேட்ட ஹாமிது (ரஹ்) அவர்கள் தம்முடைய தலையை வானத்தின் பக்கம் உயர்த்தி என்னுடைய நாயனே ! நான் உன்னுடைய ஒரு கட்டளையை நிறைவேற்றினேன். ஆனால் நீயோ என்னுடைய மூன்று தேவைகளை நிறைவேற்றிவிட்டாய் என்று என்று கூறி அல்லாஹுத்தாஆலாவை போற்றி புகழ்ந்தார்கள். பார்த்தீர்களா ? தோழர்களே ! ஜும்ஆ வின் தொழுகையை நிறைவு செய்ததால் அல்லாஹ் அடியானுக்கு கொடுத்த பரிசை பார்த்தீர்களா ? இவ்வளவு தெரிந்தும் நாம் ஜும்ஆ தொழாமல் இருக்கலாமா ? (நூல்:நவாதிர்)
9) ஜும்ஆத் தொழுகை யார்மீது கடமை ? யார் மீது கடமை இல்லை ?
முஸ்லீமாகவும் சித்த சுவாதீனமுள்ளவராகவும் வயது வந்தவராகவும் பின்னர் கீழே குறிப்பிடபோகும் தடைகள் இல்லாதவராகவும் இருக்கும் ஒவ்வொருவர் மீதும் இத் திழுகை கடமையாகும். இத் தொழுகைக்கு மார்க்க அறிஞர்கள் 11 விதிகளை குறிப்பிடுகின்றனர். அவைகள்:-
1) சுதந்திர புருஷரக இருத்தல், அடிமைய்யின் மீது கடமையில்லை.
2) ஆணாக இருத்தல், பெண்களுக்கு கடமை இல்லை
3) ஒரு ஊரில் 15 நாட்களுக்கு குறையாமல் தங்கியிருத்தல், இதற்கு குறைவான நாள் தங்கும் முஸாபிர், பிரயாணி மீது கடமையில்லை.
4) ஜும்ஆத் தொழுகைக்கு ஆஜராவதற்குறிய உடல் நலமிருத்தல், ஆஜராக முடியாத நோயாளி மீது கடமையில்லை.
5) இரு கால்களும் நடப்பற்குறிய சக்தியுடையவையாக இருத்தல், நொண்டியாகவோ, கால்கள் செயலற்றவைகளாகவோ இருப்பவர் மீது கடமையில்லை
6) கண் பார்வையுடையவராக இருத்தல், குருடர் மீது கடமையில்லை
.
7) மிகச்சிறிய குக்கிராமமாக இல்லாமல் கடைவீதிகள் உள்ள ஊராக இருத்தல், எந்த ஊரில் நாற்பது ஆண்கள் ஜும்ஆ விற்கு ஆஜராக சக்தி பெற்றிருக்கின்றனரோ, அவ்வூரில்தான் ஜும்ஆ கடமையாகும் என்று இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
8) ஜமாஅத்தாக ஒன்று கூடித்தொழ சக்தி பெற்றிருத்தல், இந்நிலை இல்லாவிட்டால் ஜும்ஆ கடமையாகாது. ஜும்ஆத் தொழுகையின் ஜமாஅத் நிறைவேற்றுவதற்கு குறைந்த பட்சம் இமாமை தவிர்த்து மூன்று நபர்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று ஹனபி மத்ஹபின் இமாம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்கள் கூறூகின்றார்கள்.
9) சூரியன் நடு உச்சியிருந்து சாய்ந்த பின்னர் அதாவது லுஹர் தொழுகை தொழும் நேரத்தில் நிறைவேற்றல், இந்நேரத்திற்கு முன்னர் நிறைவேற்றினால் கூடாது.
10) ஜும்ஆத்தொழுகையை பகிரங்க படுத்துவதுடன் அதனை யாவருக்குன் அறிவித்தல் வேண்டும். மறைமுகமாகவோ ரகசியமாகவோ தொழுதல் கூடாது.
11) ஜும்ஆவின் பர்லான தொழுகைக்கு முன்னர் குத்பா என்னும் உபதேசம் செய்யவேண்டும். இது நிகழ்த்தப் படாவிட்டால் ஜும்ஆ கூடாது.( ஆதார சட்ட நூல்: ஹிதாயா)
10) ஜும்ஆ விற்கு குளிக்க வேண்டுமா ?
பருவமடைந்த ஒவ்வோறு ஆண் மீதும் ஜும்ஆ வுடைய குளிப்பு கடமையாகும். அன்றி அவர் மிஸ்வாக்கும் செய்யவும், நறுமண பொருள் இருப்பின் அதையும் பூசிக்கொள்ளவும்.என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர் அபூஸஈதுல்குத்ரீ (ரலி) புஹாரி, முஸ்லீம்)
பருவமடைந்த ஒவ்வோறு ஆண் மீதும் முழுக்கு குளிப்பை பொன்று ஜும்ஆ குளிப்பும் கடமையாகும் என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) புஹாரி, முஸ்லீம்)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை அன்று முஸ்லீம்களே ! இந்த நாளை இறைவன் பெரு நாளாக ஆக்கியிருக்கிறான். எனவே நீங்கள் குளித்து வாருங்கள். அன்றி எவரிடம் நறுமணப்பொருட்கள் இருக்கின்றதோ அவர் அதனை பூசிக்கொள்ள யாதொன்றும் தடையாக இருக்க வேண்டாம். மேலும் மிஸ்வாக் செய்வதை உங்கல் மீது கடமையாக்கிகொள்ளுங்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸிபாக்(ரலி ) ஆதாரம் முஅத்தா)
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது ஒவ்வொரு முஸ்லீம் மீதும் கடமையாக்கப்பட்டிருக்கிறது என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் முஆதுப்னுஅனஸ்(ரலி) திர்மிதி)
11) ஜும்ஆ தொழுகைக்கு செல்பவர்கள் பள்ளியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் யாவை ?
1) எவர் வெள்ளிக்கிழமையன்று மக்கள் பிடரியை பதற்றத்துடன் தாண்டி தாண்டி செல்கிறாரோ, அவரை நரகத்தின் பாலமாக்கப்பட்டுவிடும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் முஆதுப்னுஅனஸ்(ரலி) திர்மிதி)
2) வெள்ளிக்கிழமை அன்று உங்களில் எவரும் வீட்டில் அமர்ந்துவிட்டு இமாம் மிம்பரின் மீது ஏறி நின்று குத்பா பேருரை நடத்தும் போது மக்களின் பிடரியை பதற்றத்துடன் தாண்டி தொழச்செல்வதைவிட அவர் பின்னிருந்து சுடுகின்ற தரையில் தொழுவது அவருக்கு மேலாக இருக்கும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம் முஅத்தா)
3 ) வெள்ளிக்கிழமையன்று இமாம் குத்பா பேருரை நிகழ்த்தும்போது முழங்காலக்கட்டிகொண்டு எவரும் அமர்ந் திருப்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (அறிவிப்பவர் முஆதுப்னுஅனஸ்(ரலி) திர்மிதி)
4) உங்களில் எவரும் வெள்ளிக்கிழமையன்று இமாம் குத்பா பேருரை நிகழ்த்தும்போது உறக்கம் மேலிட்டு தூங்கி விழுந்தால், அவர் தம் இருந்த இடத்திலிருந்து எழுந்து மற்ற இடத்தில் மாறி அமர்ந்துகொள்ளவும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) திர்மிதி)
12) ஜும்ஆ குத்பாவின் சட்ட திட்டங்கள் யாவை ?
ஜும்ஆ குத்பாவின் சட்ட திட்டங்கள் ஹனபி மதுஹபின் படி எவ்வாறு என்பதை பர்ப்பபோம்:-
1) ஜும்ஆ வாஜிபாக குத்பா ஓதப்பட வேண்டும். ஜும்ஆ தொழுகைக்கு முன் குத்பா ஓதப்பட வேண்டும். குத்பா ஓதும்முன் அதான் (பாங்கு) சொல்லப்படவெண்டும்.
2) ஆண்கள் தான் குத்பா ஓத வேண்டும்
3) குத்பா ஓதுபவர் தலைப்பாகை ஆணிந்திருக்க வேண்டும்.
4) அவர் தம் கையில் ஒரு வால் அல்லது ஒரு கோல் போன்ற ஒன்றை வைத்துக்கொண்டிருப்பது சுண்னத் ஆகும்.
5) அவர் ஒளுவுடன் இருப்பது சுண்ணத்.
6) அவர் மெதுவாக அவூது சொல்லிக்கொள்ள வேண்டும்.
7) அவர் குத்பாவை பிஸ்மியுடன் துவக்கக்கூடாது.
8) அவர் மிம்பர் மீதோ உயரமான மேடை மீதோ நின்று கொண்டே குத்பாப்பேருரை நிகழ்த்த வேண்டும். உட்கார்ந்து நிகழ்த்துவது மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும்.
9) அவர் குத்பா பேருரை நிகழ்த்தும்போது இடம்,வலம் திரும்புவது பித்அத் ஆகும்.
10) குத்பாவில் அம்மாபஅது என்று சொல்லிக்கொள்வது சுன்னத் ஆகும்.
11) முதலாவது குத்பாப்பேருரையில் தனாவும் கலிமா ஷகாதத்தும் சலவாத்தும் இறைவனுக்கு அஞ்சி நடக்குமாறு கூறும் அறிவுருத்தும் பொதுவான அறிவுறைகளும் இறுதியாக குர்ஆனின் திருவசனங்களும் அடங்கியிருக்க வேண்டும்.
12) இரண்டாவது குத்பாவில் தனா, கலிமா ஷகாதத்து , சலவாத்து, இறைவனுக்கு அஞ்சி நடக்குமாறு கூறும் அறிவுரை ஆகியவற்றை கூறியபின் ஆண்,பெண் ஆகிய இருபாலர்களுக்காக இறைஞ்ச வேண்டும். மேலும் நாற்பெரும் கலீபாக்கள். பாத்திமா(ரலி) ஹஸன் (ரலி) ஹுஸைன் (ரலி) அப்பாஸ் (ரலி) ஆகியேரைபற்றி குறிப்பிடுவது முன்னோர்களின் வழக்கமாக உள்ளது.
13) இரண்டு குத்பாக்களும் சுருக்கமாக இருக்க வேண்டும். திவாலு முபஸ்ஸலை விட அதிகமாகவோ அத்தஹிய்யாத் தை விட குறைவாகவோ இருத்தல் கூடாது. எனினும் அல்ஹம்துலில்லாஹ் என்றோ லா இ லாஹ இல்லல்லாஹ் என்றோ ஒருமுறை கூறினாலும் மக்ரூஹுடன் குத்பா நிறைவேறிவிடும்.
14) முதல் குத்பாவுக்கும் இரண்டாவது குத்பாவுக்கும் இடையில் மூன்று ஆயத்துக்களை ஓதும் நேர அளவு குத்பா ஓதுபவர் மேடை மீது அமர்ந்திருப்பது சுன்னத் ஆகும்.
15) தாம் ஆற்றும் குத்பா பேருரையை கேட்க மக்கள் இல்லாத போது கத்தீப் தாம் மட்டும் மேடைமீதேரி குத்பாப்பேருரை நிகழ்த்தக்கூடாது. குறைந்த அளவு எவ்வளவு பேர் இருக்க வேண்டும் என்பது பற்றி இமாம்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. கத்தீப் குத்பா பேருரை நிகழ்த்தியபின் போதுமான மக்கள் ஜும்ஆ தொழுகையி வந்து கலந்து கொண்டால் அவர்களுக்கு குத்பாவும் நிறைவேறாது, தொழுகையும் நிறைவேறாது.
16) குத்பாப் பேருரை நிகழ்ந்து கொண்டிருக்கும் போது தொழக்கூடாது. எந்தப்பேச்சும் பேசக்கூடாது.
17) தொழும் போது செய்யக்கூடாத அத்தனை செயல்களையும் குத்பா பேருரை நிகழ்ந்து கொண்டிருக்கும் போது செய்யக்கூடாது.
18) குத்பா பேருரை முடிவுற்றதும் தொழுகைக்கான இகாமத் சொல்லப்பட வேண்டும். தாமதிப்பது மக்ரூஹ் ஆகும்.
19) குத்பாவுக்கும் ஜும்ஆ தொழுகைக்கும் இடையில் வேறு எந்த செயலும் செய்யக்கூடாது. செய்தால் குத்பா முறிந்துவிடும், அப்போது திரும்பவும் அதை ஓதுவது வாஜிபு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக