டாக்டர் ஜாகிர் நாயக்கின் பதில்கள் (26 - 33)
தமிழில் : அபு இஸாரா
கேள்வி எண்: 26
இறைவன் காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களை முத்திரை வைத்துவிட்டேன் என்கிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் - (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு) எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?.
பதில்:
இறை மறுப்புக் கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வரும் இறை நிராகரிப்பாளர்களின் உள்ளத்தை அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்:
அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் ஆறாவது மற்றும் ஏழாவது வசனங்களில் அல்லாஹ் கீழ்க்கண்டவாறு கூறுகின்றான்:
'நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.' 'அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்களின் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்து விட்டான். இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது. மேலும் அவர்களுக்கு கடுமையான தண்டணையும் உண்டு.'. (அல் குர்ஆன் 2: 6-7)
மேற்படி வசனம் உண்மையை மறுக்கக் கூடிய பொதுவான நிராகரிப்பவர்களை பற்றி கூறவில்லை. இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ' என்பதன் பொருள் என்னவெனில் தொடர்ந்து உண்மையை நிராகரிக்கக் கூடியவர்கள் என்பதாகும். இவ்வாறு தொடர்ந்து உண்மையை நிராகரிக்கக் கூடியவர்களான இவர்களுக்கு நீங்கள் எச்சரிக்கை செய்தாலும் சரி, எச்சரிக்கை செய்யாவிட்டாலும் சரியே. அவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு தொடர்ந்து உண்மையை நிராகரிக்கக் கூடியவர்களின் உள்ளங்களிலும், செவிப் புலனிலும் முத்திரை வைத்து விட்டதாகவும், அவர்களின் பார்வைகளில் திரையிட்டுவிட்டதாகவும் அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் முத்திரையிட்டு விட்டதால் அவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதல்ல இதன் பொருள். தொடர்ந்து உண்மையை நிராகரிக்கக் கூடியவர்கள், உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அவர்களை பார்த்து அல்லாஹ் மேற்கண்டவாறு கூறுகின்றான். எனவே மேற்படி உண்மையை நிராகரிப்பவர்கள் தொடர்ந்து உண்மையை நிராகரிப்பதற்கு அல்லாஹ் பொறுப்பாளி அல்ல. மாறாக உண்மை என்னவென்று அறிந்திருந்தும் - மேற்படி உண்மையை தொடந்து நிராகரித்து வருகின்ற நிராகரிப்பவர்கள்தான் இதற்கு பொறுப்பாவார்கள்.
2. உதாரணத்திற்கு வகுப்பாசிரியர், மாணவன் தேறமாட்டான் என்று கணிப்பது.
உதாரணத்திற்கு பள்ளிக் கூடத்தின் அனுபவமிக்க வகுப்பாசிரியர் ஒருவர், வகுப்பில் கவனம் செலுத்தாத - அதிகமாக தொந்தரவு செய்கிற - தனது வீட்டுப்பாடங்களை செய்து வரத் தவறுகிற மாணவன் ஒருவனை - அவன் இறுதித் தேர்வில் தேற மாட்;டான் என்று கணிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மாணவனும் இறுதித் தேர்வை எழுதி மேற்படித் தேர்வில் வெற்றியடையவில்லை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். மாணவன் இறுதித் தேர்வில் தோல்வியுற்றதற்கு யாரை குற்றம் சொல்வீர்கள்?. மாணவனையா? . ஆசிரியரையா?. மாணவன் இறுதித் தேர்வில் வெற்றி பெறமாட்டான் என்ற கணித்த காரணத்திற்காக ஆசிரியரை யாரும் குற்றம் சொல்ல மாட்டார்கள். மாறாக படிப்பில் சரியாக கவனம் செலுத்தாத மாணவன்தான் தனது தோல்விக்கு பொறுப்பாவான்.
அதுபோலவே உண்மையை தொடர்ந்து நிராகரித்து வரும் மனிதர்களை பற்றி அல்லாஹ் அறிவான். இவ்வாறு உண்மையைத் தொடர்ந்து நிராகரித்து வருபவர்கள்தான் தங்களது செயலுக்குப் பொறுப்பேத் தவிர, அல்லாஹ் அல்ல.
கேள்வி எண்: 27
இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே குர்ஆனை ஏற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்களிடையே பல பிரிவுகளையும் - பல வித்தியாசமான கொள்கைகளையும் கொண்டிருப்பது ஏன்?.
பதில்:
1. முஸ்லிம்கள் ஒன்று பட வேண்டும்:
முஸ்லிம்கள் தங்களுக்கிடையே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவெனில் பிரிவு என்பது இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒன்று. இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிவுகளின்றி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதுதான் இஸ்லாம் கற்றுத் தரும் பாடம்.
'நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்: நீ;ங்கள் பிரிந்தும் விடாதீர்கள்' என்று அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல இம்ரானின் 103 வது வசனம் கூறுகிறது.
மேற்கண்ட குர்ஆனின் வசனத்தில் சொல்லப்படும் அல்லாஹ்வின் கயிறு எது தெரியுமா?. அருள்மறை குர்ஆன்தான். அருள்மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பற்றிப் பிடிக்க வேண்டும். இந்த வசனத்தில் இரண்டு கருத்துக்கள் தொணிக்கின்றன. அருள் மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் பற்றிப்பிடிப்பதுடன் - இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிந்துத் போகக் கூடாது என்கிற இரண்டு கருத்துக்களை மேற்படி வசனம் வலியுறுத்துகிறது.
'அல்லாஹ்வுக்கு கீழ் படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்.' என்று அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 59வது வசனம் கூறுகின்றது. மேற்படி வசனங்களிலிருந்து இஸ்லாமியர்கள் பெறும் தெளிவு என்னவெனில் - அருள்மறை குர்ஆனையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் பின்பற்ற வேண்டும் என்பதேயாகும்.
2. இஸ்லாமிய மார்க்கம் பிரிவினைகள் உண்டாக்குவதை தடை செய்துள்ளது:
'நிச்சயமாக எவர்கள் தங்களளுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினராக பிரிந்து விட்டனரோ அவர்களுடன்(நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.' என அருள்மறை குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் ஸுரத்துல் அன்ஆம் - ன் 159வது வசனம் கூறுகிறது. மேற்படி இறை வசனத்திலிருந்து நமக்கு தெரிவிக்கப்படும் செய்தி என்னவெனில் எவர் இஸ்லாமிய மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து பல வகுப்பினராக பிரிந்து விட்டனரோ - அவர்களைவிட்டு உண்மையான இஸ்லாமியர்கள் விலகிவிட வேண்டும் என்பதுதான்.
ஆனால், ஒரு இஸ்லாமியனைப் பார்த்து, 'நீ யார்?. என்று கேள்வி எழுப்பப்பட்டால் அவரிடமிருந்து வரக்கூடிய பொதுவான பதில் 'நான் ஒரு ஸுன்னி' என்பதாகவோ அல்லது 'நான் ஒரு ஷியா' என்பதாகவோத்தான் இருக்கிறது. இன்னும் சிலர் தங்களை, 'ஷாஃபிஈ' என்றும், 'ஹனஃபிஈ' என்றும் 'ஹம்பலி' என்றும் 'மாலிக்கி' என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் 'நான் ஒரு தேவ்பந்திஈ' என்றும் 'நான் ஒரு பெரல்விஈ' என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றனர்.
3. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு உண்மையான இஸ்லாமியராக இருந்தார்கள்:
மேற்கண்டவாறு தங்களை அழைத்துக் கொள்ளும் இஸ்லாமியர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த பிரிவைச் சார்ந்தவர்கள் - அதாவது அவர்கள் 'ஷாஃபியா' அல்லது 'ஹனஃபியா' அல்லது 'ஹம்பலியா' அல்லது 'மாலிக்கியா?' என்று கேட்டுப் பாருங்கள். இல்லை. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு முன்புள்ள அல்லாஹ்வின் தூதர்களைப் போன்று ஒரு உண்மையான முஸ்லிம் என்பது மட்டுமே அவர்களது பதிலாக இருக்கும்.
அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல - இம்ரானின் 54வது வசனம் நபி ஈஸா (அலை) அவர்கள் ஓர் இஸ்லாமியர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. மேலும் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல - இம்ரானின் 67வது வசனம் நபி இப்றாஹிம் (அலை) அவர்கள் ஓர் யூதரோ அல்லது கிறிஸ்துவரோ அல்ல. அவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட ஓர் முஸ்லிம் என்பதை சுட்டிக் காட்டுகின்றது.
4. உங்களை நீ;ங்கள் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டுங்கள் என அருள்மறை குர்ஆன் வலியுறுத்துகிறது:
எவராவது இஸ்லாமியர்களை நீங்கள் யார் என்று கேட்டால் - இஸ்லாமியர்கள் தாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவர் என்று சொல்ல வேண்டுமேத் தவிர தாங்கள் ஓர் ஷாஃபிஈ என்றோ அல்லது தாங்கள் ஓர் ஹனஃபி என்றோ சொல்லக் கூடாது.
அருள்மறை குர்ஆனின் நாற்பத்து ஒன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹாமீம் ஸஜ்தாவின் 33வது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.
'எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்து, 'நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?.(இருக்கின்றார்?)
வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் - நான் ஒரு முஸ்லிம் - என்று சொல்லுங்கள் என்பதாகும்.
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ( ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத மன்னர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தபால் மூலமாக இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள். அவ்வாறு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் 64 வது வசனத்தின் கடைசி வரிகளாக அமைந்திருக்கும் 'நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்' என்கிற வசனத்தை குறிப்பிட்டு தபால்களை அனுப்பி வைப்பார்கள்.
5. இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களுக்கு கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும்.
மரியாதைக்குரிய மார்க்க அறிஞர்களான இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்), இமாம் ஹம்பல் (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்) ஆகியோர் உட்பட இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்கள் அனைவருக்கும் நாம் கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும். இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்து இஸ்லாத்திற்கு தந்த பல நல்ல செய்திகளுக்காக அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்கூலியை வழங்கட்டும். இஸ்லாமியர்கள் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ அல்லது இமாம் ஹனஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ - வெளியிடப்பட்ட கருத்துக்கள் குர்ஆன் - ஹதீஸுக்கு மாற்றமில்லாத பட்சத்தில் - எடுத்து செயல் படுத்துவதை எவரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் 'நீ யார்?' என்று இஸ்லாமியரை நோக்கி கேட்கப்படும் கேள்விக்கு 'நான் ஒரு முஸ்லிம்' என்பதுதான் பதிலாக இருக்க வேண்டும்.
1. ஒரு சிலர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ' எனது சமுதாயம் 73 பிரிவினராக பிரிவர்' (மேற்படி செய்தி அபூதாவூத் என்னும் ஹதீஸ்(செய்தி) புத்தகத்தின் 4579வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது) என்கிற செய்தியை தங்களது பிரிவினை வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டி வாதிடுவர்.
மேற்படி செய்தியை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் - இஸ்லாமிய சமுதாயம் 73 பிரிவாக பிரியும் என்று முன்னறிவிப்பு செய்தார்களேத் தவிர, அவர்கள் அறிவித்த நோக்கம் இஸ்லாமிய சமுதாயம் தங்களுக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிய வேண்டும் என்பதற்காக அல்ல. அருள்மறை குர்ஆன் இஸ்லாமியர்கள் பல பிரிவுகளாக பிரிந்து விடக்கூடாது என்று இஸ்லாமியர்களுக்கு கட்டளை இடுகின்றது. அருள்மறை குர்ஆன் கட்டளையின்படி - அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி யார் இஸ்லாத்தில் பிரிவினைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ - அவர்கள்தான் உண்மையான இஸ்லாமிய வழியில் நடப்பவர்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் - என்னுடைய உம்மத்தினர் 73 கூட்டத்தினராக பிரிவர். அதில் ஓரேயொரு கூட்டத்தைத் தவிர மற்ற அனைத்து பிரிவினரும் நரகத்துக்குச் செல்வார்கள். மேற்படி அறிவிப்பை கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்கள் கேட்டனர் சொர்க்கத்துக்கு செல்லும் அந்த கூட்டம் எது?. என்று. அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: அந்த கூட்டம் நானும் எனது அன்புத் தோழர்களும் உள்ளடங்கிய கூட்டம் என்று. ( மேற்படி செய்தி திர்மிதி என்ற செய்திப் புத்தகத்தின் 171வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. )
'அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள். அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுங்கள்' என்று அருள்மறை குர்ஆன் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. ஒரு உண்மையான முஸ்லிம் அருள்மறை குர்ஆனையும ; - அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும்தான் பின்பற்ற வேண்டும். அருள்மறை குர்ஆனுக்கும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் மாற்றமில்லாத பட்சத்தில் எந்த மார்க்க அறிஞர்களின் கருத்துக்களையும் ஒரு உண்மையான முஸ்லிம் ஏற்றுக் கொள்ளலாம். ஒரு மார்க்க அறிஞரின் கருத்து - அருள்மறை குர்ஆனுக்கும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் முரண்படுமாயின் அந்த கருத்துக்கு ஒரு உண்மையான முஸ்லிம் மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை. மேற்படி மார்க்க அறிஞர் எவ்வளவு கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் சரியே.
இஸ்லாமியர்கள் அனைவரும் அருள்மறை குர்ஆனை - கற்றறிந்து - அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையை சரிவர பின்பற்றுவோம் எனில் இறை நாட்டத்தில் நமக்கிடையே இருக்கும் இந்த பிரிவினை என்ற வேறுபாடு நம்மிடமிருந்து மறையும். நமக்குள்ளே பிரிவினையற்ற சிறந்த ஒற்றுமையும் உருவாகும்.
கேள்வி எண்: 28
இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது - முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை - நாணயமற்றவர்களாகவும் - ஏமாற்றுபவர்களாகவும் - லஞ்சம் வாங்குபவர்களாகவும் - போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.
பதில்:
1. ஊடகங்கள் பரப்பும் அவதூறுகள்:
இஸ்லாம் ஓர் சிறந்த மார்க்கம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் உலகின் பெரும்பாலான ஊடகங்கள் இஸ்லாத்தைக் கண்டு பயந்து கொண்டிருக்கும் மேற்குலகத்தின் கையில் இருக்கிறது. இந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை அச்சிட்டும், ஒலி-ஒளி பரப்பியும் வருகின்றன். இந்த ஊடகங்கள் இஸலாத்தைப் பற்றிய தவறான தகவல்களை தருவதையும், இஸ்லாமிய கருத்துக்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதையும் தொழிலாக கொண்டுள்ளன.
எப்போது, எங்கு வெடிகுண்டு வெடித்தாலும் - எந்தவித ஆதரமுமின்றி - முதன் முதலில் குற்றம் சாட்டப்படுவது முஸ்லிம்கள்தான். இந்த குற்றச் சாட்டுக்கள் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கும். பின்னர் அவர்கள் வெளியிட்ட செய்தி தவறு என்று தெரியும் பட்சத்தில் - அந்த செய்தி முக்கியத்துவம் அளிக்கப்படாத செய்தியாக மாறிவிடும்.
ஓரு ஐம்பது வயது முஸ்லிம் பெரியவர் 15 வயது பெண்ணை - அந்த பெண்ணிண் சம்மதத்தோடு - திருமணம் செய்து கொண்டால் அந்த செய்தி ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கும். அதே சமயம் ஐம்பது வயது முஸ்லிம் அல்லாத ஒருவர் 6வயது சிறுமியுடன் வல்லுறவு கொண்டு விட்டால் அந்த செய்தி முக்கியத்துவம் அளிக்கப்படாமல் - செய்திக் குறிப்புகள் போன்று பிரசுரிக்கப்படும். அமெரிக்காவில் தினமும் 2,713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. அந்த செய்திகள் எதுவும் ஊடகங்களில் வெளியிடப்படுவதில்லை. ஏனெனில் வல்லுறவு குற்றங்கள் செய்வது அமெரிக்கர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போய் விட்டது.
2. ஒவ்வொரு சமுதாயத்திலும் குற்றவாளிகள் உண்டு.
இஸ்லாமியர்களில் சிலர் நம்பிக்கை, நாணயம் அற்றவர்களாகவும், ஏமாற்றுபவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் இந்த ஊடகங்கள் இஸ்லாமியர்கள் மாத்திரம்தான் இவ்வாறு இருப்பதாக பெரிது படுத்திக் காட்டுகின்றன. ஒவ்வொரு சமுதாயத்திலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் சிலர் குடிகாரர்களாக இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் இஸ்லாம் அல்லாதவர்களில் பெரும்பான்மையோர் குடிகாரர்கள் என்பது என்பது அனைவரும் அறிந்த செய்தி.
3. மொத்த சமுதாயத்திலும் இஸ்லாமியர்களே சிறந்தவர்கள்:
இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு சில குற்றவாளிகள் இருந்தாலும் - உலகில் உள்ள மொத்த சமுதாயத்துடன் இஸ்லாமியர்களை ஒப்பிடும்போது - இஸ்லாமியர்கள்தான் சிறந்தவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை. மொத்த சமுதாயத்திலும் இஸ்லாமியர்கள் தான் சிறந்தவர்கள். இஸ்லாமியர்கள் மது அருந்துவதை ஆதரிப்பதில்லை. இஸ்லாமியர்கள்தான் உலகத்திலேயே அதிகமாக தர்மம் வழங்குபவர்கள். நன்னடத்தை, பண்பாடு, மனித மாண்புகளைப் பொறுத்தவரை இஸ்லாமியார்களோடு வேறு எவரையும் ஒப்பிடமுடியாத அளவுக்கு இஸ்லாமியர்கள் சிறந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
4. வாகனம் ஓட்டுபவரை வைத்து வாகனத்தை பற்றிய கணிப்புக்கு வர வேண்டாம்.
ஒரு புதிய மாடல் 'மெர்ஸிடிஸ் கார்' சிறந்ததா இல்லையா என்பது பற்றி அறிய வேண்டுமெனில் - அந்த காரை ஓட்டுபவரை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. காரை ஓட்டுபவர் திறமை சாலியாக இல்லாமல் இருப்பதால் 'மெர்ஸிடிஸ் கார்' சிறந்தது இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. ஒரு கார் சிறந்ததா இல்லையா என்று அறிய வேண்டுமெனில் காரை மோசமாக ஓட்டுபவரை வைத்து - கார் சிறந்தது இல்லை என்ற முடிவுக்கு வரக் கூடாது. மாறாக அந்த காருடைய திறமை என்ன?. அந்த காருடைய மற்றுமுள்ள பயன்கள் என்ன?. அந்த கார் என்ன வேகத்தில் செல்லும் - அந்த காருடைய எரிபொருள் நுகர்வு என்னவாக இருக்கும் - அந்த காருடைய பாதுகாப்புத் தன்மை என்ன?.. எனபதையெல்லாம் வைத்துதான் மேற்படி கார் சிறந்ததா? இல்லையா என்ற முடிவுக்கு வர வேண்டும். ஒரு வாதத்திற்காக இஸ்லாமியர்கள் நல்லவர்கள் அல்ல என்று வைத்துக் கொண்டாலும், இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களை வைத்து - இஸ்லாம் மார்க்கம் பற்றிய ஒரு முடிவுக்கு வருதல் கூடாது. இஸ்லாம் எந்த அளவுக்கு சிறந்த மார்க்கம் என்ற ஒரு முடிவுக்கு வரவேண்டுமெனில் - இஸ்லாத்தின் உண்மையான - தெளிவான ஆதாரங்களான - அருள்மறை குர்ஆனையும் - அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளையும் வைத்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
5. இஸ்லாத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வர, இஸ்லாமிய கடமைகளை சரிவர பின்பற்றியவர்களை பாருங்கள். இஸ்லாத்தை சரிவர பின்பற்றியவர்களில் முதன்மையானவர் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்:
ஒரு வாகனத்தைப் பற்றிய முடிவுக்கு வர வேண்டுமெனில் - அந்த வாகனத்தை இயக்கக் கூடிய ஒரு சிறந்த வாகன ஓட்டியை வைத்து - வாகனத்தை இயக்கினால்தான் வாகனத்தை பற்றிய ஒரு முடிவுக்கு வர முடியும். அதுபோலவே - இஸ்லாத்தைப் பற்றிய ஒரு முடிவுக்கு வர - இஸ்லாத்தை சரியான முறையில் பின்பற்றுவதற்கு எடுத்துக் காட்டாய் விளங்கக்கூடிய - அல்லாஹ்வின் இறுதித் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளைப் பார்க்க வேண்டும் இஸ்லாமியர்கள் அல்லாத - ஏராளமான வரலாற்று ஆசிரியர்கள் - அல்லாஹ்வின்தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஓர் சிறந்த மாமனிதர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். மைக்கேல் எச். ஹார்ட் எழுதிய 'தி ஹன்ட்ரட் மோஸ்ட் இன்ஃபுளுயன்சியல் மென் இன் ஹிஸ்டரி' (The Hundred Most Influential Men in History) என்ற புத்தகத்தில் - மனித மனங்களை கவர்ந்த நூறு மனிதர்களில் முதலிடம் வகிப்பது அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். இவ்வாறு அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு சிறந்த மரியாதை வழங்கிய வரலாற்று ஆசிரியர்களில் தாமஸ் கார்லில், (Thomas Carlyle) லா-மார்டின் (La - Martin)ஆகியோரும் அடங்குவர்.
கேள்வி எண்: 29
'காஃபீர்' என்று அழைத்து மாற்று மதத்தவர்களை, முஸ்லிம்கள் அவமதிப்பது ஏன்?.
பதில்:
'காஃபீர்' என்றால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர் என்று பொருள்:
'காஃபீர்' என்கிற அரபு வார்த்தை 'குஃப்ர்' என்கிற அரபு மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. 'குஃப்ர்' என்கிற அரபு வார்த்தைக்கு நிராகரித்தல் அல்லது உண்மையை மறைத்தல் என்று பொருள். இஸ்லாமிய கலைச்சொல் களஞ்சியத்தின்படி மேற்படி வார்த்தைக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர் அல்லது இஸ்லாம் பற்றிய உண்மைகளை மறைப்பவர் என்று பொருள் உண்டு. அதனை தமிழ் மொழியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர் என்று பொருள் கொள்ளலாம்.
மாற்று மதத்தவர்களே! - 'காஃபீர்' என்ற சொல் உங்களை புண்படுத்துவதாக கருதினால் , இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.
மாற்று மதத்தவர்களே! 'காஃபீர்' என்ற நீங்கள் அழைக்கப்படுவது உங்களை புண்படுத்துவதாக கருதினால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களை எவரும் 'காஃபீர்' (இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவர்) என்று அழைக்க மாட்டார்கள்.
கேள்வி எண்: 30
மனிதன் விந்திலிருந்து படைக்கப்பட்டான் என்று ஒரு இடத்தில் குறிப்பி;டும் குர்ஆன், மற்றொரு இடத்தில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வசனங்களும் முரண்படுகிறது இல்லையா?. மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அறிவியில் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?.
பதில்:
1. மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும் படைக்கப்பட்டான்:
அருள்மறை குர்ஆனின் 75வது அத்தியாயம் ஸுரத்துல் கியாமாவின் 37வது வசனம் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
'(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத் துளிக்குள் அவன் இருக்கவில்லையா?.'( அல் குர்ஆன் 75:37)?
மேலும் அருள்மறை குர்ஆனின் பல வசனங்களில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 5வது வசனம் மனிதன் மண்ணிலிருந்தும், இந்திரியத் துளியிலிருந்தும், படைக்கப்பட்டான் என்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
'.....நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்: பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்து படைத்தோம்.....' என்று குறிப்பிடுகிறது.
மனித உடல் படைக்கப்பட்டிருக்கும் மூலக்கூறுகள் யாவும் (மனித உடலின் ஆக்கக் கூறுகள்) ஒரு சிறிதளவோ அல்லது பெரும் அளவோ பூமி இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாம் தெரிந்து கொண்டுள்ள மேற்படி உண்மையானது, மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்கிற அருள்மறை குர்ஆனின் கூற்றுக்கு அறிவியல் தரும் விளக்கமாகும்.
அருள்மறை குர்ஆனின் சில வசனங்கள் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்றும், சில வசனங்கள் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்றும் கூறுகிறது. மேற்படி கூற்று முரண்பாடானது அல்ல. ஒரே நேரத்தில் நடைபெற முடியாத எதிர்மறையான இரண்டு செயல்களுக்கு முரண்பாடு என்று பெயர்.
2. மனிதன் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான்:
அருள்மறை குர்ஆனின் சில வசனங்கள் மனிதன் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான் என்று கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 25வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபுர்கானின் 54வது வசனம் சொல்லும் பொருளை உதாரணமாகக் கொள்ளலாம்:
இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து....'(அல் குர்ஆன் 25:54).
மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் படைக்கப்பட்டான் என்று அருள்மறை குர்ஆன் சொன்ன மூன்று கருத்துக்களையும் நவீன அறிவியல், உண்மை என்று நிரூபித்துக் காட்டியுள்ளது.
3. மேற்படி கருத்துக்கள் எதுவும் முரண்பாடாணது (Contradiction) அல்ல. மாறாக, மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும். (Contradistinction).
உதாரணத்திற்கு, ஒரு கோப்பை தேநீர் தயாரிக்கப் பட வேண்டுமெனில் - அதற்கு தேவையான அளவு வெந்நீர் வேண்டும். தேவையான அளவு தேயிலைத் துகளும் வேண்டும். தேநீர் தயாரிக்க வெந்நீர் வேண்டும். அதுபோல தேநீர் தயாரிக்க தேயிலைத் துகளும் வேண்டும் என்று சொல்வதால் - மேற்படி இரண்டு கூற்றுக்களும் வெ வ்வேவேறாக இருந்தாலும், அவைகள் இரண்டும் ஒன்றுக் கொன்று முரண்படவில்லை. அத்துடன் இனிப்பான தேநீர் வேண்டுமெனில், சர்க்கரையும் வேண்டும். இவ்வாறு மேற்சொன்ன எந்த கருத்தும் ஒன்றோடு ஒன்று முரண்படவில்லை.
இவ்வாறு அருள்மறை குர்ஆன் மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் படைக்கப் பட்டான் என்று சொன்ன எந்த கருத்தும் ஒன்றொடொன்று முரண்படவில்லை. மேற்படி கருத்துக்கள் எதுவும் முரண்பாடாணது (Contradiction) அல்ல. மாறாக, மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும். (Contradistinction). உதாரணத்திற்கு ஒரு மனிதன் எப்போதும் உண்மையே பேசக் கூடியவன். அதேசமயம் அவன் ஒரு பொய்யன் என்றும் நான் சொல்கிறேன். மேற்படி எனது கூற்றுக்கள் முரண்பாடானது (Contradiction).
ஆனால் ஒரு மனிதன் நேர்மையானவன். அதே சமயத்தில் கருணை உள்ளம் கொண்டவன். மனிதர்களை நேசிப்பவன் என்று கூறுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும். (Contradistinction). முரண்பாடில்லாத தனிப் பண்புள்ள கருத்தாகும்.
கேள்வி எண்: 31
இரண்டு கிழக்குகளுக்கும் - இரண்டு மேற்குகளுக்கும் சொந்தக்காரன் இறைவன் என்று குர்ஆனில் ஒரு வசனம் குறிப்பிடுகின்றது. ஒரு கிழக்கு - ஒரு மேற்கு மாத்திரமே உள்ள நிலையில் இரண்டு கிழக்குகளையும் - இரண்டு மேற்குகளையும் அறிவியல் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?.
பதில்:
1. அல்லாஹ் - அவனே இரண்டு கிழக்கு திசைகளுக்கும் - இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன் என்று அருள்மறை குர்ஆன் கூறுகிறது.
அருள்மறை குர்ஆனின் 55வது அத்தியாயம் ஸுரத்துர் ரஹ்மானின் 17வது வசனம் அல்லாஹ் - அவனே இரண்டு கிழக்கு திசைகளுக்கும் - இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன் என்று கூறுகிறது.
'இரு கீழ்த் திசைகளுக்கும் இறைவன் அவனே. இரு மேல் திசைகளுக்கும் இறைவன் அவனே.'(அல் குர்ஆன் 55:17)
அருள்மறை குர்ஆனில் இரண்டு மேல்திசைகள், இரண்டு கீழ்திசைகள் என பொருள்படும் Dual அரபி வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி வார்த்தைகள் அல்லாஹ் - அவனே இரண்டு கிழக்கு திசைகளுக்கும் - இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன் என்று பொருள் கொள்ள வைக்கிறது.
2. அல்லாஹ் - அவனே இரண்டு கிழக்கு எல்லைகளுக்கும், இரண்டு மேற்கு எல்லைகளுக்கும் இறைவன்.
சூரியன் கிழக்குத் திசையில் உதிக்கிறது என்பது புவியியல் அறிவு நமக்கு கற்றுத் தந்த பாடம். ஆனால் சூரியன் உதிக்கும் நிலை (Point of Sunrise) வருடம் முழுவதும் மாறிக் கொண்டே இருக்கும். வருடத்தின் இரண்டு நாட்களில் மாத்திரம் - அதாவது சூரியன் நில நடுக்கோட்டை கடந்து செல்லும் அந்த இரண்டு நாட்களில் மாத்திரம், சூரியன் கிழக்குத் திசையின் சரியான நிலையிலிருந்து (மத்தியில் இருந்து) உதயமாகிறது. வருடத்தின் மற்ற நாட்களில் சூரியன் உதிப்பது கிழக்குத் திசையின் சற்று வடக்கிலிருந்தோ அல்லது கிழக்குத் திசையின் சற்று தெற்கிலிருந்தோதான் உதிக்கிறது. கோடைகாலத்தின் உச்சக்கட்டம் வரும் பொழுது (ஜுன் மாதம் 21 ஆம் தேதி என்று கணக்கிடப்பட்டுள்ளது) கிழக்குத்திசைக்கு அதிகபட்ச வடக்குப் பகுதியிலும், குளிர் காலத்தின் உச்சக் கட்டம் வரும் பொழுது ( டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி என்று கணக்கிடப்பட்டுள்ளது) கிழக்குத் திசைக்கு அதிகபட்ச தெற்குப் பகுதியிலும் சூரியன் உதிப்பதை நாம் நேரடியாக காணலாம்.
அதேபோல சூரியன் மேற்குத் திசையில் மறையும் போதும் மேற்குத் திசையின் அதிக பட்ச வடக்குப் பகுதியிலும், மேற்குத் திசையின் அதிக பட்ச தெற்குப் பகுதியிலும் மறைவதை காணலாம். மேற்படி இயற்கையின் செயலை, சூரியன் உதிப்பதையும் - மறைவதையும் காண்பதற்கு வசதியான இடங்களில் இருந்து நாம் எளிதாக காண முடியும். இவ்வாறு சூரியன் வருடம் முழுவதும் கிழக்குத் திசையின் ஒரே மையத்திலிருந்து உதிக்காமல் கிழக்குத் திசைக்கு சற்று வடக்குப் பகுதியிலிருந்தும், கிழக்குத் திசைக்கு சற்று தெற்குப் பகுதியிலிருந்தும் கிழக்குத் திசையின் பல மையங்களிலிருந்து உதிப்பதையும், அதே போன்று மேற்குத் திசையின் பல மையங்களில் அடைவதையும் பார்க்கிறோம். மேற்படி செயல், குர்ஆனில் சொல்லப்பட்ட 'இரு கீழ்த் திசைகளுக்கும் இறைவன் அவனே. இரு மேல் திசைகளுக்கும் இறைவன் அவனே.'(அல் குர்ஆன் 55:17) என்கிற வசனத்தை உண்மை படுத்துவதை தெளிவாக உணர முடியும்.
3. அல்லாஹ் - இரண்டு கிழக்கு எல்லைகளுக்கும் இடையில் உள்ள அனைத்து மையங்களுக்கும், இரண்டு மேற்கு எல்லைகளுக்கும் இடையில் உள்ள அனைத்து மையங்களுக்கும் இறைவன் அவனே.!
அரபி மொழியில் பிற மொழிகளைப் போல் அல்லாமல் - ஒருமை (singular) - இருமை (Dual) பன்மை (Plural) (இரண்டுக்கு மேற்பட்ட எண்ணிக்கை - அதாவது மூன்றும், மூன்றுக்கு மேற்பட்டதும்) என மூன்று வகையாக அமைந்துள்ளன. அருள்மறை குர்ஆனின் 55வது அத்தியாயம் ஸுரத்துர் ரஹ்மானின் 17வது வசனத்தில் வரும் - 'மஷ்ரிக்கைனி' மற்றும் - 'மக்ரிபைனி' என்கிற வார்த்தைகள் இருமை (Dual) பன்மையை குறிப்பதால் - மேற்படி வசனம் இரண்டு கிழக்குகளையும், இரண்டு மேற்குகளையும் குறிப்பிடுகிறது.
அருள்மறை குர்ஆனின் 70வது அத்தியாயம் ஸுரத்துல் மஆரிஜ் - ன் 40வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
'எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.' (அல் குர்ஆன் 70:40).
மேற்படி வசனத்தில் பயன் படுத்தப்பட்டிருக்கும் 'மஷ்ரிக்கி' மற்றும் 'மக்ரிபி' என்கிற அரபி வார்த்தைகளுக்கு கிழக்குத் திசைகள், மற்றும் மேற்குத் திசைகள் என்று பொருள். அதாவது மூன்று அல்லது மூன்றிக்கு மேற்பட்ட கிழக்குத் திசைகள் என்றும், மூன்றிற்கும் மேற்பட்ட மேற்குத் திசைகள் என்றும் பொருள்.
மேற்படி வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளும் செய்தி என்னவெனில் அல்லாஹ் - அவன் இரண்டு கிழக்கிற்கும் இடைப்பட்டுள்ள அனைத்து மையங்களுக்கும், இரண்டு மேற்கிற்கும் இடைப்பட்டுள்ள அனைத்து மையங்களுக்கும் இறைவன் என்பதுதான். தவிர இரண்டு கிழக்கிற்கும் - இரண்டு மேற்கிற்கும் இறைவனும் அவனே தான் என்பதுமாகும்.
கேள்வி எண்: 32
வானங்களையும் - பூமியையும் 6 நாட்களில் படைத்ததாக குர்ஆனின் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாயம் ஃபுர்ஸிலாத்தில் வானங்களும் - பூமியும் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடு இல்லையா?. மேலும் அதே வசனத்தில் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாகவும் - பின்னர் இரண்டு நாட்களில் வானங்களை படைத்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. வானங்களும் - பூமியும் ஒரே நேரத்தில் உருவாயின என்று அறிவியல் கூறும் 'பெரும் வெடிப்பு விதிக்கு' (Big bang theory) மாற்றமாக இந்த வசனம் அமைந்துள்ளதா இல்லையா?
பதில்:
வானங்களையும் - பூமியையும் ஆறு நாட்களில் (அதாவது ஆறு நீ;ண்ட காலங்களில்) படைக்கப்பட்டன என அருள்மறை குர்ஆன் சொல்கிறது என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். இது பற்றிய விபரம் அருள்மறை குர்ஆனின் கீழக்குறிப்பிட்ட அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் 7 ஸுரத்துல் அஃராஃபின் 54வது வசனம்
அத்தியாயம் 10 ஸுரத்துல் யூனுஸின் 3வது வசனம்
அத்தியாயம் 11 ஸுரத்துல் ஹுதுவின் 7வது வசனம்
அத்தியாயம் 25 ஸுரத்துல் ஃபுர்கானின் 59வது வசனம்
அத்தியாயம் 32 ஸுரத்துல் ஸஜ்தாவின் 4வது வசனம்
அத்தியாயம் 50 ஸுரத்துல் கஃப்வின் 38வது வசனம்
அத்தியாயம் 57 ஸுரத்துல் ஹதீதின் 04வது வசனம்
ஆகிய வசனங்களில் வானங்களும் - பூமியும் ஆறு நாட்களில் (அதாவது ஆறு நீ;ண்ட காலங்களில்) படைக்கப்பட்டன என அருள்மறை குர்ஆன் சொல்கிறது.
தாங்கள் சொல்வது போன்று வானங்களும் - பூமியும் எட்டு நாட்களில் படைக்கப்பட்டன என்கிற அர்த்தத்தில் வருகின்ற வசனம் அருள்மறை குர்ஆனின் 41வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபுர்ஸிலாத்தின் 9வது வசனம் முதல் 12வது வசனம் வரையிலானது. மேற்படி வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
'பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்படுத்துகிறீர்கள்?. அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன் என்று (நபியே!) நீர் கூறுவீராக.'. (அல் குர்ஆன் 41: 9)
அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்;;: அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான். இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான். (இதைப்பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்). (அல் குர்ஆன் 41: 10)
பிறகு அவன் வானம் புகையாக இருந்த போது (அதைப் படைக்க) நாடினான்: ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: 'நீங்கள் விருப்புடனாயினும், அல்லது வெறுப்பிருப்பினும், வாருங்கள்' என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் 'நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்' என்று கூறின. (அல் குர்ஆன் 41: 11)
ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக உயர்த்தினான். ஓவவொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான். இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகள் கொண்டு அலங்கரித்தோம். இன்னும் அதனை நாம் பாதுகாப்பாகவும் ஆக்கினோம். இது யாவரையும் மிகைத்தவனும், ஞானமிக்கோனுமாகிய (இறை) வனுடைய ஏற்பாடேயாகும். (அல் குர்ஆன் 41: 12)
மேற்படி வசனங்களை மேலோட்டமாகப் படித்துப் பார்த்தால் வானங்களும் - பூமியும் எட்டு நாட்களில் படைக்கப்பட்டன என்கிற அர்த்தம்தான் தொனிக்கும்.
2. மேற்படி வசனத்தில் பயன் படுத்தப்பட்டிருக்கும் 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'மேலதிகமாக' என்று பொருள்.
மேற்படி வசனத்தை நீங்கள் கூர்ந்து ஆராய்ந்தால் மேற்படி வசனம் இரண்டு வித்தியாசமான படைப்புகளான பூமி மற்றும் வானம் இவைகளைப்பற்றி சொல்வதை அறியலாம். மலைகள் இல்லாத பூமி இரண்டு நாட்களில் படைக்கப்பட்டது. பூமி அசையாது நிலையாக நிற்கும் பொருட்டு பூமியின் மீது மலைகளை நான்கு நாட்களில் படைத்தான். ஆக பூமியும் - அதன் மீது நிறுத்தப்பட்டிருக்கும் மலைகளும் நான்கு நாட்களில் படைக்கப்பட்டன என்பதை அருள்மறை குர்ஆனின் 41வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபுர்ஸிலாத்தின் ஒன்பது மற்றும் பத்தாவது வசனங்களின் பொருளாகும். மேற்படி அத்தியாயத்தின் 11 மற்றும் 12வது வசனம் கூறுவது என்னவெனில் அத்துடன் கூடி வானங்களும் இரண்டு நாட்களில் படைக்கப்பட்டது என்பதாகும். மேற்படி அத்தியாயத்தின் 11வது வசனத்தின் ஆரம்ப வார்த்தையான 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'மேலதிகமாக' அல்லது 'பின்னர்' என இரு அர்த்தங்கள் கொள்ளலாம். குர்ஆனின் ஆங்கில மொழியாக்கங்கள் சில வற்றில் 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'பின்னர்' என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது . 'பின்னர்' என்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டதை ஏற்றுக் கொண்டால், பூமியும், பூமியின் மீது மலைகளும் 6 நாட்களில் படைக்கப்பட்டுப், பின்னர் இரண்டு நாட்களில் வானங்கள் படைக்கப்பட்டது என்கிற தவறான பொருளைத்தான் தரும். மேற்படி பொருள் அறிவியல் சொல்லும் 'பெரும் வெடிப்பு விதியோடு'(டீபை டீயபெ வுhநசழல) முரண்படுவதோடு, அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியாவின் 30வது வசனமான 'வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்) தோம்' என்கிற வசனத்தோடும் முரண்படும்.
எனவே மேற்படி வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'மேலதிகமாக' என்று பொருள் கொள்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த அப்துல்லா யூசுப் அலி அவர்கள் 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'மேலதிகமாக' என்றுதான் மொழியாக்கம் செய்துள்ளார். அவ்வாறு மொழியாக்கம் செய்யப்பட்ட மேற்படி அருள்மறை குர்ஆனின் வசனத்திற்கு 'மலைகளுடன் கூடிய பூமியை ஆறுநாட்களில் படைத்தான். மேலதிகமாக வானங்களையும் படைத்தான்'. என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் கொள்ளும்பொழுது, எட்டு நாட்கள் என்கிற தவறான கருத்து கொள்வது தவிர்க்கப்பட்டு, ஆறு நாட்கள் என்கிற சரியான கருத்து நிலை நிறுத்தப்படுகிறது.
கீழ் குறிப்பிடும் உதாரணத்தின் மூலம் மேற்படி கருத்தை மேலும் சரியான முறையில் புரிந்து கொள்ளலாம்: ஒரு கட்டிடத்தை கட்டுபவர் - அவர் கட்டிய 10 மாடி கட்டிடத்தையும், கட்டிடத்தை சுற்றியுள்ள சுற்றுச் சுவரையும் கட்டி முடிக்க 6 மாதங்கள் எடுத்துக் கொண்டதாக குறிப்பிடுகிறார். முழுக் கட்டிடத்தையும் கட்டி முடித்த பின்பு - கட்டிடம் கட்டியது பற்றிய அறிக்கையில் கட்டிடத்தின் அடிப்பகுதிகளை கட்டி முடிக்க இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டதாகவும் - கட்டிடத்தின் மேற்பகுதியை கட்டி முடிக்க நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்டதாகவும் - அத்துடன் சேர்த்து - கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கும் பொழுதே - கட்டிடத்தின் சுற்றுச் சுவர்களையும் இரண்டு மாதங்களில் கட்டி முடித்ததாக தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மொத்தக் கட்டிடமும் கட்டி முடிக்க அவர் எடுத்துக் கொண்ட காலம் 6 மாதங்கள் என்பதை மேற்படி அறிக்கையிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம். அவர் சொன்ன முதலாவது அறிக்கை - அவர் சொன்ன இரண்டாவது அறிக்கையோடு முரண்படவில்லை. மாறாக கட்டிடம் கட்டி முடித்த காலத்தை பற்றிய அதிக விபரங்களைத்தான் தெரிவிக்கிறது.
3. வானங்களும், பூமியும் ஒரே சமயத்தில்தான் படைக்கப்பட்டன:
அருள்மறை குர்ஆன் பிரபஞ்சம் முழுவதையும் படைக்கப் பட்டதை பற்றி ஏராளமான வசனங்களில் குறிப்பிடுகிறது. அருள்மறை குர்ஆனீன் 7:54, 10:3, 11:7, 25:59, 32:4, 50:38, 57:4 ஆகிய வசனங்களில் வானங்களும், பூமியும் என்றும், அருள்மறை குர்ஆனீன் 49:9-12, 2:29, 20:4 ஆகிய வசனங்களில் பூமியும், வானங்களும் என்றும் குறிப்பிடுகிறது. மேலும் அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியாவின் 30வது வசனம் பெரும் வெடிப்பு பற்றி கூறுவதுடன், வானங்களும், பூமியும் ஒரே சமயத்தில் உருவாக்கப்பட்டன என்றும் குறிப்பிடுகிறது.
அது போன்று அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 29வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகிறது:
அ(வ் விறை) வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காக படைத்தான். பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான். அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 2:29)
மேற்படி வசனத்திலும் 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'பின்னர்' என்று பொருள் கொள்வோம் எனில் - இந்த வசனமும் பெரும் வெடிப்பு விதியுடன் முரண்படுவதோடு, வானங்களையும், பூமியையும் படைத்தது பற்றிக் குறிப்பிடும் அருள்மறை குர்ஆனின் மற்ற வசனங்களுடனும் முரண்படும். எனவே ஸுரத்துல் ஃபுர்ஸிலாத்தின் குறிப்பிட்ட வசனத்தில் வரும் 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'மேலதிகமாக' அல்லது 'அத்துடன் சேர்த்து' என்று பொருள் கொள்வதுதான் பொருத்தமானதாக இருக்கும்.
கேள்வி எண்: 33
பிரபல பத்திரிக்கையாளர் அருண்சூரியின் கருத்துப்படி குர்ஆனில் தவறான கணக்கு வகைகள் இருக்கின்றன. குர்ஆனில் உள்ள நான்காவது அத்தியாத்தின் 11ஆம் மற்றும் 12 ஆம் வசனத்தின்படி வாரிசுதாரர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுத்தால் - பிரித்துக் கொடுக்கப்படக் கூடிய சொத்து ஒன்றுக்கும் மேற்பட்டதாக வருகிறது. எனவே குர்ஆனை அருளியவருக்கு கணக்குத் தெரியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?.
பதில்:
வாரிசுதாரர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது பற்றி அருள்மறை குர்ஆனின் கீழ் குறிப்பிட்டுள்ள வசனங்கள் குறிப்பிடுகின்றன:
அத்தியாயம் இரண்டு ஸுரத்துல் பகராவின் 180 வது வசனம்
அத்தியாயம் இரண்டு ஸுரத்துல் பகராவின் 240 வது வசனம்
அத்தியாயம் நான்கு ஸுரத்துல் நிஷாவின் 7வது வசனம் முதல் 9வது வசனம் வரை
அத்தியாயம் நான்கு ஸுரத்துல் நிஷாவின் 19வது வசனமும் 33வது வசனமும்
அத்தியாயம் ஐந்து ஸுரத்துல் மாயிதாவின் 105வது வசனமும் 108வது வசனமும்.
வாரிசுதாரர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது பற்றி அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஷாவின் 11வது வசனமும், 12வது வசனமும், 176வது வசனமும் மிகத் தெளிவான விளக்கம் அளிக்கின்றன.
பத்திரிக்கையாளர் அருண்சூரி குறிப்பிடும் அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஷாவின் 11வது வசனத்தையும், 12வது வசனத்தையும் நாம் இப்போது ஆய்வு செய்வோம்.
'உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்: பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும், இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்): இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்குச் சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னர் தான்: உங்கள் பெற்றோர்களும் குழந்தைகளும் இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள்: ஆகையினால் (இந்த பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளiயாகும்: நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்.'
'இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு: அவர்களுக்குப் பிள்ளை இருந் தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர் தான் - தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம் தான், உங்களுக்குப் பிள்ளை இருந்தால் அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் தான்: (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே தான்: தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை பேரன் போன்ற பின்வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு,
ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்: ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்)எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது, (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும, மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்... (அல்-குர்ஆன் 4வது அத்தியாயம் ஸ}ரத்துன் னிஷாவின் 11 மற்றும் 12 வது வசனங்கள்).'
வரிசுகளுக்கு சொத்துக்களை பங்கிட்டுக் கொடுப்பது பற்றி இஸ்லாம் மிகவும் விரிவாக தெரிவிக்கின்றது. வரிசுகளுக்கு சொத்துக்களை பங்கிட்டுக் கொடுப்பது பற்றிய முக்கிய பகுதியை மாத்திரம் அருள்மறை குர்ஆன் சொல்கிறது. அருள்மறை குர்ஆன் சொன்ன முக்கிய பகுதியின் விளக்கங்களை நாம் ஹதீஸ்களில் - அதாவது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாம் வாரிசுகளுக்கு சொத்துக்களைப் பங்கிட்டு வழங்குவது பற்றிய சட்டங்களின் முழு விபரங்களையும் நாம் ஆய்வு செய்ய முயன்றோம் எனில் - ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்து - ஆய்வு செய்யக் கூடிய அளவிற்கு உண்டான செய்திகள் அதில் இருக்கின்றன. இஸ்லாம் வாரிசுகளுக்கு சொத்துக்களைப் பங்கிட்டு வழங்குவது பற்றிய சட்டத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்து கொள்ள விரும்பாத பத்திரிக்கையாளர் அருண்சூரி, அருள்மறை குர்ஆனின் இரண்டு வசனங்களை மேலெழுந்தவாரியாக படித்துவிட்டு, அதன் முழு சட்டத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்.
மேலே குறிப்பிடபட்டவரின் முயற்சியானது - கணிதவியலின் அடிப்படைத் தத்துவத்தை அறியாத ஒருவர், பின்னக் கணக்குகளை சரிசெய்ய முயற்சி செய்வது போன்றதாகும். கணிதவியலின் அடிப்படை தத்தவம் B O D M A S என்பதாகும். ஒரு பின்னக் கணக்கை முறைப்படி சரி செய்ய, பின்னக் கணக்கில் - எந்த கணக்குக்குறி முதலில் வந்தாலும் - கணிதவியலின் அடிப்படை தத்துவம் B O D M A S முறையில்தான் பின்னக் கணக்கை சரி செய்ய வேண்டும்.
1. Brackets Off - அடைப்புக் குறிகள் நீக்கப்படுதல்
2. Division - வகுத்தல்
3. Multification - பெருக்கல்
4. Addition - கூட்டல்
5. Subtraction - கழித்தல்.
அருண்சூரி பின்னக் கணக்கின் அடிப்படை தத்துவம் B O D M A S பற்றி அறியாதவராக இருப்பதால் - முதலில் பெருக்கலையும் - இரண்டாவதாக கழித்தலையும் - மூன்றாவதாக அடைப்புக் குறிகளை நீக்குதலையும் - நான்காவதாக வகுத்தலையும் - கடைசியில் கூட்டலையும் செய்திருக்கிறார். எனவே அவருக்கு கிடைக்கும் விடை நிச்சயமாக தவறானதாகத்தான் இருக்கும்.
அருள்மறை குர்ஆன் வாரிசுகளுக்கு சொத்துக்களை பங்கிட்டு வழங்குதல் பற்றிய வசனங்களில் ( 4: 11- 12) முதலில் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய பங்கு, பின்னர் பெற்றோருக்கு கிடைக்க வேண்டிய பங்கு மற்றும் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ (Spouse) கிடைக்க வேண்டிய பங்குகளை பற்றி தெரிவித்தாலும், இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டப்படி - முதலில் கொடுக்க வேண்டிய கடன்கள் கொடுக்கப்பட வேண்டும். பின்னர் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ (Spouse) கொடுக்கப்பட வேண்டிய பங்குகளும் - பெற்றோருக்கு கொடுக்கப்பட வேண்டிய பங்குகளும் கொடுக்கப்பட வேண்டும். மேற்படி பங்கீடு - இறந்தவர் பிள்ளைகள் உள்ளவரா? - இல்லையா? என்பதையும், அவரிடம் மேலே குறிப்பிடப்பட்ட வகையில் சொத்துக்களை பங்கீடு செய்த பின்பு, மேலும் சொத்துக்கள் எஞ்சியிருக்கிறதா என்பதையும் பொருத்தது. மேலும் எஞ்சியிருக்கும் சொத்துக்கள் அவரது ஆண் வாரிசுகளுக்கும் - பெண் வாரிசுகளுக்கும் உரிய முறைப்படி பங்கீடு செய்யப்பட வேண்டும்.
மேற்படி இஸ்லாமிய முறையில் சொத்துக்கள் பங்கீடு செய்யப்படும் பொழுது தவறுகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. கணிதவியல் தெரியாதவன் அல்லாஹ் அல்ல. கணிதவியல் அறியாதவர் பத்திரிக்கையாளர் அருண்சூரிதான்.
நன்றி: ஒற்றுமை.நெட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக