நோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்!
பெருநாட்கள் அல்லது பண்டிகைகள் அரபி மொழியில் ஈத் என அழைக்கப்படுவதுண்டு. ஈத் என்றால் மீண்டும் மீண்டும் வருதல் என்ற கருத்தை கொடுக்கின்றது. ஆண்டுதோறும் வருவதால் பெருநாட்களுக்கு இவ்வாறு பெயர்கள் உண்டு!
இஸ்லாத்தை பொறுத்தமட்டில் ஆண்டுதோறும் இரண்டு பெருநாட்கள் மட்டுமே! அவை தவிர ஒவ்வோர் வார இறுதியிலும் வெள்ளிக் கிழமை நாள் முஸ்லிம்களுக்கு பெருநாளாக கருதப்படுகிறது. இது தவிர வேறு எவ்விதமான கொண்டாட்டங்களும் இஸ்லாத்தில் கிடையாது!
பெருநாட்களின் நோக்கம்!
யாவற்றையும் அறிந்த வல்ல இறைவன் மிக உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் இரு பெருநாட்களையும் அவனது நல்லடியார்களுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றான். ஒன்று ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாள். மற்றொன்று ஈதுல் அல்ஹா எனும் தியாகத் திருநாள்.
பெருநாள் கொண்டாட்டம்!
இஸ்லாத்தை பொறுத்தமட்டில் நன்மைகள் செய்யக்கூடிய நல்வாய்ப்பாகவே பெருநாட்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இறைவனை அதிகமாக நினைவுகூர்ந்து திக்ர் செய்தல், அவனுக்கு நன்றி செலுத்தல், தான தருமங்கள் செய்தல், நல்வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளல் மூலம் இணக்கத்தையும் சகோதரத் துவத்தையும் வலிமையாக்கிக் கொள்ளல், பகையும் குரோதமும் களைந்து உற்றார் உறவினர்களை சந்தித்து உறவுகளை பலப்படுத்திக் கொள்ளல், நோயாளிகளை நலன் விசாரித்தல், அண்டை அயலாரோடு பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொள்ளல், பகை கொண்ட உள்ளங்களை சேர்த்து வைத்தல், பெற்றவர்களை மனம் குளிரச்செய்தல், நன்மையை ஏவி தீமையை தடுத்தல் போன்ற நற்செயல்களில் ஈடுபடுவதுடன் அனுமதிக்கப்பட்ட வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு இன்புற்று மகிழுமாறு இஸ்லாம் எமக்கு கற்றுத் தருகின்றது.
இதற்கு மாற்றமாக பண்டிகை என்ற பெயரில் மது அருந்தி, போதையில் மிதந்து, சூதாட்டத்தில் புதைந்து, வீடுகளிலும் வீதிகளிலும் வன்முறையை ஏற்படுத்தி சண்டைசச்சரவுகளில் ஈடுபட்டு, துன்புற்று சீரழியும் நிலையை இஸ்லாம் தடுத்துள்ளது.
நோன்புப் பெருநாள்!
ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளை பொறுத்தமட்டில் புனிதமிகு ரமளான் மாதத்தில் நோன்பு எனும் உயர்தரமான கடமையை நிறைவேற்றி களைப்புற்ற மனிதர்களை களிப்பூட்டி மகிழ்வித்து அவர்களின் உள்ளங்களில் உவகைப் பெரூற்றினை பீறிட்டுப் பாயச்செய்து தனது இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஆம்! தனது அடியார்கள் இழைத்த பாவக்கறைகளை புனித ரமளான் மாத நோன்பின் மூலம் அகற்றி சுத்தப்படுத்தி சலவை செய்து, நரகவாசிகள் என்ற கருப்புப் பட்டியலிலிருந்து அவர்தம் பெயர்களை நீக்கி, அளவிட முடியாதளவு அபரிமிதமான நன்மைகளை வழங்கி அவர்களின் மதிப்பை உயர்த்துகின்றான் ஏக இறைவன்! அத்தகையவனுக்கு நன்றி செலுத்தாமலும் உள்ளத்தால் எவ்வாறு களிப்படையாமலும் இருக்க முடியும்?!
இந்த இன்பக்களிப்பை வெளிப்படுத்தி கொண்டாடி மகிழவே ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாளை இறைவன் எமக்களிதுல்லான்.
பெருநாள் தொழுகை!
இஸ்லாமிய மார்க்க சட்டத்தில் – ஷரீஅத்தில் – ஹிஜ்ரி முதலாம் ஆண்டு பெருநாள் தொழுகை விதியாக்கப்பட்டது. இது சுன்னத் முஅக்கதா வகையை சேர்ந்ததாகும் என எல்லா இமாம்களும் ஏகோபித்து ஏற்றுக்கொள்வதாக இமாம் நவவி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நபி (ஸல்) அவர்களும் ஸஹாபக்களும் தொடர்ந்து இதனை தொழுது வந்திருக்கிறார்கள்.
“நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது அஞ்ஞான கால வழக்கத்தில் இருந்து வந்த இரண்டு தினங்களை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் இந்த இரண்டு தினங்களுக்கும் பகரமாக வேறு இரண்டு தினங்களை உங்களுக்கு கொண்டாடுவதற்குரிய தினங்களாக ஆக்கிவிட்டான். அவை ஈதுல் அள்ஹா தினமும் ஈதுல் பித்ர் தினமும் ஆகும் என்பதாக குறிப்பிட்டார்கள்”
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல் : அபூ தாவுத்
தொழுகைக்குரிய நேரம்!
பெருநாள் தொழுகைக்குரிய நேரம் சூரியன் உதித்து சுமார் 15 நிமிடங்களின் பின் தொடங்கி லுதார் தொழுகைக்குரிய நேரம் ஆரம்பிப்பதுடன் முடிவடைகிறது என இப்னு உசைமீன் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
முஸல்லா – தொழுகைக்குரிய இடம்!
பெருநாள் தொழுகை எல்லோருக்கும் வசதியாக ஒரு திறந்த வெளியிலேயே நடத்தப்படுவது சிறந்ததாகும்.
“நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாட்களையும் திறந்த வெளியிலேயே நிறைவேற்றியிருக்கிறார்கள்” (புகாரி)
எனினும் மஸ்ஜிதில் அதனை நிறைவேற்றுவதில் எந்த தவறும் கிடையாது, ஆயினும் மிகச்சிறந்ததை விட்டுவிட்டு சிறந்ததை செய்வதாகவே அது நோக்கப்படும்.
தொழுகைக்குச் செல்லும் ஒழுங்கு!
பெருநாள் தொழுகைக்குச் செல்லும் போது குளித்து சுத்தமாகி சிறந்த ஆடை அணிந்து ஆண்கள் மட்டும் நறுமணம் பூசி செல்லுதல்.
ஈதுல் பித்ர் தினத்தில் காலை உணவை முடித்து விட்டு செல்லுதல்.
முஸல்லாவை அடையும் வரை தக்பீர் சொல்லிக்கொள்ளல்.
தொழுகைக்கு செல்லும்போது ஒரு பாதையையும் திரும்பி வரும் போது வேறு பாதையையும் பயன்படுத்துதல்.
பார்வையை தாழ்த்திக் கொள்ளல்.
ஆண், பெண் கலந்துறவாடும் வகையிலான அமைப்பை தவிர்த்துக் கொள்ளல்.
தக்பீர் – கொள்கை முழக்கம்!
நோன்புப் பெருநாளில் ஷவ்வால் தலைப் பிறை தென்பட்டது என உறுதி செய்யப்பட்டது முதல் இமாம் தொழுகையை ஆரம்பிக்கும் வரை தக்பீர் எனும் கொள்கை முழக்கம் முழங்குவதட்குரிய நேரமாகும்.
தக்பீர் சொல்லும் முறை!
தக்பீர் சொல்வதற்கு பல்வேறு முறைகள் காணப்படுகின்றன. எனினும் “அல்லாஹு அக்பர் (2 தடவை) லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து” என கூறிக் கொள்ளலாம்.
தொழும் முறை!
பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துக்களை கொண்டது. முதல் ரக்அத்தில் முதலாவது தக்பீர் தவிர 7 தக்பீர்கள். இரண்டாவது ரக்அத்தில் முதல் தக்பீர் தவிர 5 தக்பீர்கள் சொல்லப்பட வேண்டும். தக்பீர்களுக்கு இடையில் சொல்லப்பட வேண்டியவை என நபிமொழிகளில் எதுவும் குறிப்பாக இல்லை.
தவிர்க்கப் பட வேண்டியவை!
அதிகமான சகோதரர்கள் பெருநாள் தினத்தன்று அடக்கஸ்தளங்களை தரிசிக்கின்றனர். இது உண்மையில் பித்அத் எனும் நூதன கிரியை ஆகும். பெருநாள் தினம் என்பது எமது கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே விதியாக்கப் பட்டிருக்கும் போது எமது கவலைகளை புதுப்பித்துக் கொள்ளும் தினமாக இந்த தினத்தை மாற்றிக் கொள்ளவது இஸ்லாமிய சட்டத்துக்கு முரணான செயலாகும் என்பதனை நாம் கவனத்தில் கொண்டு உரிய முறையில் பெருநாளை கொண்டாடி ஈருலக பயன்களையும் அடைந்துகொள்ள முயற்சிப்போம். அதற்கு இறையருள் என்றும் துணை நிற்கட்டும்.
நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்:திர்மிதி, தாரகுத்னீ.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.
தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.
நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள்.அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.
இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.
நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.
நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர்இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.
நபி (ஸல்) ஏழு – ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்:அஹ்மத்.
இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா…’ என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் ‘ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..’ என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.
இரு பெருநாள் தொழுகைகளில் ‘காஃப் வல் குர்ஆனில் மஜீத்’ என்ற (50வது) அத்தியாயத்தையும் ‘இக்தரபதிஸ்ஸாஅத்’ என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள்.அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.
நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் – உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.
உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.
பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.
புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள், “இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா…” என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், “அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடுங்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும்” என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர்அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.
தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “அந்தச் சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும்” என்றார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.
நன்றி: ஐபிசி பிளாக்கர். நெட்
ரஹ்மத்துல்லாஹ். பிளாக்.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக