திங்கள், 6 ஆகஸ்ட், 2012




டாக்டர் ஜாகிர் நாயக்கின் பதில்கள் (21 - 25)
தமிழில் : அபு இஸாரா


கேள்வி எண் 21.


ஆணுக்கு ஒரு பாகம் எனில் பெண்ணுக்கு பாதி பாகம்தான் என்ற பாரபட்சமான நிலை இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் உள்ளதே. இது ஏன்?


பதில்:

அருள்மறை குர்ஆன் - வாரிசுகளுக்கு - முறையாக சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது பற்றி சரியான விளக்கமளிக்கிறது. சொத்துக்கள் பிரித்துக் கொடுப்பது பற்றி அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 180வது வசனத்திலும், அதே அத்தியாயத்தின் 240வது வசனத்திலும், நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஷாவின் 7முதல் 9வது வசனங்களிலும், அதே அத்தியாயத்தின் 19வது வசனத்திலும், 33வது வசனத்திலும், ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 106 முதல் 108வது வசனங்களிலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 11 மற்றும் 12 வது வசனமும் 176 வது வசனம் ஆகிய மூன்று வசனங்களும் நெருங்கிய உறவினர்களுக்கிடையே சொத்துக்களை பங்கிடுவது பற்றி மிகத் தெளிவான விளக்கமளிக்கிறது.
'உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து, அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.' (அல்-குர்ஆன் 4 : 11)

'இறந்தவருக்குக் குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்குக் குழந்தை இல்லாதிருந்து, பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம். (மீதி தந்தைக்கு உரியதாகும்): இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான். (மீதி தந்தைக்குச் சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான், உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்: ஆகையினால் (இந்த பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்: நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.'(அல்-குர்ஆன் 4 : 11)

'இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்குக் கால் பாகம்தான். (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். தவிர, உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின், நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான். உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான். (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான். தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஒரு ஆணோ, அல்லது ஒரு பெண்ணோ, இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ இருந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. ஆனால் அதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். (இதுவும்) அவர்களின் மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். ஆனால் (மரண சாஸணத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது: (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.'. ( அல்-குர்ஆன் 4 : 12)

'(நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்;: ஒரு மனிதன் இறந்து விட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு. யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன், அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான். இரு சகோதரிகள் இருந்தால், அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள். அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும், பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு. நீ;ங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.' (அல்-குர்அன் 4 : 176).

சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் பெண் வாரிசுகளுக்கு, ஆண் வாரிசுகள் பெறும் பங்கைவிட பாதி பாகம் அவர்களின் (பெண்வாரிசுகளின்) பங்காக கிடைக்கிறது. இறந்து போனவர் - தனக்கு வாரிசுகள் எதுவுமின்றி - தனது மனைவியின் முந்தைய கணவருக்குப் பிறந்த இரண்டு வாரிசுகள் - (அதாவது ஒரு மகனும் - மகளும்) இருந்தால் -அந்த மகனுக்கும், மகளுக்கும் - இறந்து போனவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆறில் ஒரு பாகமே - அவர்களது பங்காக கிடைக்கும். மேற்படி நபருக்கு வாரிசுகள் இருந்தால் - இறந்து போனவரின் சொத்தில் ஆறில் ஒரு பாகம் அவரது பெற்றோருக்கும் - கிடைக்கும்.

சில சமயங்களில் பெண் வாரிசுகள், ஆண் வாரிசுகளைவிட இரண்டு மடங்கு சொத்துக்களை தங்களது பங்காக பெறுவதும் உண்டு. இறந்து போனவர் ஒரு திருமணமாகிய பெண்ணாக இருந்து - அவருக்கு குழந்தைகளோ அல்லது சகோதர - சகோதரிகளோ இல்லாத பட்சத்தில் - அவரது கணவருக்கும் - இறந்து போன பெண்ணுடைய பெற்றோருக்கும் கிடைக்கும் பங்கு என்னவெனில் - கணவருக்கு பாhதி பங்கும், இறந்து போன பெண்ணுடைய - தாயாருக்கு(உயிரோடு இருக்கும் பட்சத்தில்) மூன்றில் ஒரு பங்கும் - தந்தைக்கு ஆறில் ஒரு பங்கும் கிடைக்கும். இது போன்ற வேளையில் பெண்ணுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு - ஆணுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கைவிட இரு மடங்கு அதிகமாகும்.

ஆயினும் பெண்களுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கை விட - ஆண்களுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு அதிகம் என்பது உண்மை. கீழ்க்காணும் உதாரணங்களை அதற்கு எடுத்துக் காட்டாக கொள்ளலாம்:

1. மகளுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு - மகனுக்கு கிடைக்கும் சொத்தை விட பாதி பாகம்.
2. இறந்து போனவருக்கு குழந்தைகள் இல்லை என்னும் பட்சத்தில் - இறந்த போனவரின் தாயாருக்கு எட்டில் ஒரு பகுதியும் - இறந்து போனவரின் தந்தையாருக்கு நான்கில் ஒரு பகுதியும் சொத்தில் பங்காக கிகை;கும்.
3. இறந்து போனவருக்கு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் - இறந்த போனவரின் தாயாருக்கு நான்கில் ஒரு பகுதியும் - இறந்து போனவரின் தந்தையாருக்கு இரண்டில் ஒரு பகுதியும் சொத்தில் பங்காக கிடைக்கும்.
4. இறந்து போனவருக்கு முன் வாரிசு அல்லது பின் வாரிசு இல்லாத பட்சத்தில் - அவரது சகோதரருக்கு கிடைக்கும் பங்கைவிட பாதி பாகமே அவரது சகோதரிக்கு கிடைக்கும்.

இஸ்லாத்தில் பெண்கள் மீது பொருளாதாரச் சுமையோ அல்லது குடும்பத்தைக் கவனிக்கும் பொருப்போ சுமத்தப்படவில்லை. ஒரு பெண் திருமணம் முடிக்கப்படும் வரை அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அவளது தந்தை அல்லது அவளது சகோதரனின் கடைமயாகும். அவளது திருமணத்திற்குப் பிறகு, அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அவளது கணவன் அல்லது அவளது மகனின் கடைமையாகும். இஸ்லாத்தில் குடும்பத்தின் பொருளதார தேவைகள் அனைத்தையும் நிiவேற்றும் பொறுப்பு ஆண்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. மேற்படி குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டே இஸ்லாமிய ஆண்களுக்கு, பெண்களைவிட சொத்தில் அதிக பங்கு அளிக்கப்படுகிறது.

 உதாரணத்திற்கு இரண்டு மக்களை உடைய ஒரு மனிதர் ( ஒரு ஆண், ஒரு பெண்) இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இறந்து போன மனிதருக்கு ரூபாய் 150,000 மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தால் - இறந்து போனவருடைய மகனுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும், இறந்து போனவருடைய மகளுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்புள்ள சொத்துக்களும் அவர்களது பங்காக கிடைக்கும். ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக கிடைக்கப்பெற்ற மகனுக்கு குடும்பத்தில் உள்ள எல்லா செலவினங்களின் மீதும் பொறுப்பு உண்டு. அவருக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முழுவதையுமோ அல்லது அந்து சொத்துக்களில் பெரும் பங்கையோ (ரூபாய் என்பது ஆயிரம் மதிப்பள்ள சொத்துக்களை) - அவர் குடும்பத்திற்காக செலவு செய்துவிட்டு - எஞ்சியுள்ள இருபதினாயிரம் மதிப்புள்ள சொத்துக்களை மாத்திரம் அவர் தனது பங்காக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஐம்பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்ற மகள் - அதிலிருந்து ஒரு பைசா கூட எவருக்கும் செலவு செய்யாது (ஏனெனில் இஸ்லாம் பெண்கள் மீது குடும்பத்தின் எந்த பொருளாதார சுமையையும் சுமத்தாத காரணத்தால்) முழு மதிப்புள்ள சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்க முடியும்.

இஸ்லாமிய சொத்துரிமையால் பயன் பெறுவது யார் என்று இப்போது சொல்லுங்கள். ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்று, அதில் என்பதாயிரம் ரூபாயைச் செலவு செய்து விட்டு மீதி இருபதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கும் - ஒரு இஸ்லாமிய ஆண்வாரிசா? அல்லது ஐம்பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்றுக் கொண்டு, அதிலிருந்து ஒரு பைசா கூட செலவு செய்யாது முழு மதிப்புள்ள சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்வாரிசா?.



கேள்வி எண்: 22


மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.


பதில்:

1. மறுமை ( இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கை கண்மூடித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல.
அறிவியல் அறிவும் - தர்க்கரீதியான உணர்வும் கொண்ட இந்த காலத்தில் இறப்புக்கு பின்பும் ஒரு வாழ்வு உண்டு என்பதை நம்புவது எப்படி?. என ஏராளமான பேர் வியப்படைகிறார்கள். மனிதன் இறந்த பிறகும் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்புவது கண்மூடித்தனமானது என்று ஏராளமானபேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
என்னுடைய மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியை அடிப்படையாகக் கொண்டது.

2. மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியான நம்பிக்கையாகும்.
அருள்மறை குர்ஆனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் உண்மைகளைப் பற்றி சொல்லுகின்றன. (இது பற்றிய முழு விபரம் அறிய டாக்டர். ஜாகிர் நாயக் எழுதிய 'ஞரசயn யனெ ஆழனநசn ளுஉநைnஉந ஊழஅpயவiடிடந ழுச ஐnஉழஅpயவடைடிடந' என்ற புத்தகத்தை படியுங்கள். மேற்படி புத்தகம் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது). குர்ஆன் சொல்லும் அறிவியல் உண்மைகளில் பல சரியானதுதான் என்று கடந்த சில நூற்றாண்டுகளில்தான் கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் குர்ஆன் சொல்லும் அறிவியல் உண்மைகள் அனைத்தும் சரியானதுதான் என்று கண்டறியப்படும் அளவிற்கு, அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை.

உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட அறிவியல் உண்மைகளில் 80 சதவீதம் உண்மைகள் 100 சதவீதம் சரியானதுதான் என்று கண்டறியப் பட்டுள்ளதாக வைத்துக்கொண்டால், எஞ்சியிருப்பது 20 சதவீத உண்மைகள்தான். அறிவியலில் ஒரு குறிப்பிட்ட உண்மையை பற்றிய விபரம் உடனடியாக கண்டறியப் படுவதில்லை. ஏனெனில் ஒரு உண்மையை உடனடியாக அது உண்மை என்று ஒப்புக் கொள்ளம் அளவிற்கோ அல்லது உடனடியாக அது பொய் என்று ஒதுக்கித் தள்ளும் அளவிற்கோ அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை. இவ்வாறு மனித குலம் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவைக் கொண்டு - அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் இதுவரை அறிவியல் ரீதியாக சரி காணப்படாத 20 சதவீத வசனங்களில் - ஒரு சதவீத வசனம் கூட சரியானது அல்ல என்பதை திட்டவட்டமாக வரையறுத்துக் கூற முடியாது. அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் என்பது சதவீதம் உண்மைகள் - 100 சதவீதம் சரியானதுதான் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் - எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் சரியானது அல்ல என்று அறிவியல் ரீதியாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே தர்க்க ரீதி விதியின்படி குர்ஆன் சொன்ன அறிவியல் உண்மைகளில் எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் - சரியானதாகவே இருக்க வேண்டும். மறுமை வாழ்க்கைப் பற்றி அருள்மறை சொல்லும் வசனங்கள் யாவும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத 20 சதவீத உண்மைகளுக்குள் அடங்கியுள்ளது. எனவே தர்க்க ரீதியாக மறுமை வாழ்க்கை பற்றிய எங்களது நம்பிக்கை சரியானதுதான்.

மறுமை வாழ்க்கை பற்றிய நம்பிக்கை இல்லாமல், மனித நலம் மற்றும் மனித அமைதி போன்ற கருத்துக்களை கொண்டிருப்பது தேவையில்லாத ஒன்று.
சமுதாயத்தில் திருடுவது நல்லதா? கெட்டதா? என்று கேட்டால் சாதாரண நிலையில் உள்ள ஒரு மனிதன் சமுதாயத்தில் திருடவது கெட்டது என்றே பதிலளிப்பான். சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க, பலம் மிகுந்த ஒரு சமுதாய திருடனுக்கு, திருடுவது தவறானது என்று ஒரு சாதாரண நிலையில் உள்ள மனிதன் எவ்வாறு உணர்த்த முடியும்?.

உதாரணத்திற்கு நான் சமுதாயத்தில் செல்வாக்கு மிகுந்த - பலசாலியான ஒரு திருடன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயம் நான் மிகுந்த அறிவுடைய ஒரு தர்க்கவாதியும் கூட. திருடுவது சரியானதுதான் என்று நான் சொல்கிறேன். ஏனெனில் திருடுவதால் சமுதாயத்தில் ஒரு சிறந்த ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கலாம். எனவே திருடுவது என்னைப் பொருத்தவரை, எனக்கு நல்லது என்று நான் சொல்கிறேன்.

திருடுவது சரியானது அல்ல என்று யாராவது என்னிடம் தர்க்க ரீதியாக வாதிட முயலுவார்கள் எனில் அவர்களின் வாதத்தை என்னால் உடனடியாக முறியடிக்க முடியும். திருடுவது சரியானது அல்ல என்று என்னிடம் வாதிட முற்பட்டவர்கள் வைத்த வாதங்கள் பின்வருமாறு.

அ. திருடுபவன் கஷ்டங்களை அனுபவிப்பான்.:
யார் திருடுகிறானோ, அவன் கஷ்டங்களை அனுபவிப்பான் என்று சிலர் வாதிடுவார்கள். திருட்டுக் கொடுத்தவர் வேண்டுமெனில் கஷ்டங்களை அனுபவிப்பார்களேத் தவிர, திருடியவர் கண்டிப்பாக கஷ்டங்களை அனுபவிப்பதில்லை. திருடியவன் நல்லதையே அனுபவிப்பான். ஆயிரம் டாலர்களை திருடிய ஒருவன், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆடம்பர உணவு உண்ணலாம்.

ஆ. நீ திருடினால், உன்னிடம் வேறு எவராவது திருடுவார்கள்.
நீ யாரிடமாவது திருடினால், உன்னிடமிருந்து வேறு எவராவது திருடுவார்கள் என்று சிலர் வாதிடுவார்கள். என்னிடமிருந்து எவரும் திருட முடியாத அளவுக்கு நான் ஒரு பலம் படைத்த திருடன். தவிர என்னைப் பாதுகாக்கவென்று பல அடியாட்களை நான் வைத்திருக்கிறேன். நான் வேறு எவரிடமிருந்தும் திருட முடியுமேத் தவிர, என்னிடமிருந்து எவரும் திருட முடியாத அளவுக்கு நான் ஒரு பலம் பொருந்திய திருடன். திருடுவது ஒரு சாதாரண மனிதனுக்கு வேண்டுமெனில் கஷ்டமான வேலையாக இருக்கலாம். ஆனால் என் போன்ற படைபலம், பணபலம் உள்ள ஒருவனுக்கு திருடுவது எளிதானது.

இ. திருடினால் காவல் துறை கைது செய்யும்.
திருடினால் காவல் துறை கைது செய்யும் என்று சிலர் வாதிடலாம். நான் திருடினாலும் காவல் துறை என்னை கைது செய்ய முடியாத அளவுக்கு நான் காவல் துறையினரை விலைக்கு வாங்கியிருக்கிறேன். மந்திரிகளை கூட நான் விலைக்கு வாங்கக் கூடிய அளவிற்கு எனக்கு பணபலம் உண்டு. ஒரு சாதாரண மனிதன் திருடினால் அவனை காவல் துறை கைது செய்யும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நானோ காவல் துறை கூட கைது செய்ய முடியாத அளவிற்கு படைபலமும், பணபலமும் உள்ளவன். எனவே நான் திருடினால் என்னை காவல் துறை கைது செய்யாத அளவிற்கு நான் ஒரு பலம் பொருந்திய குற்றவாளி.

ஈ. திருடுவதன் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.
திருடுவதன் மூலம் எளிதாக பணம் கிடைக்கிறது. பணம் கிடைக்க அதிகமாக கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் வாதிடலாம். திருடுவதால் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். பணம் எளிதாக கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்தால்தான் நான் திருடுகிறேன். ஓரு மனிதன் எளிதான முறையிலும் பணம் சம்பாதிக்கலாம். கடினமான முறையிலும் பணம் சம்பாதிக்கலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புத்திசாலியான மனிதன் எளிதான முறையில் பணம் சம்பாதிக்கும் வழியைத்தான் தேர்ந்தெடுப்பான்.

உ. திருடுவது மனிதத் தன்மைக்கு எதிரானது.
திருடுவது மனித குலத்திற்கு எதிரானது. ஓரு மனிதன் மற்ற மனிதர்களின் நலத்தைப் பற்றியும் சிந்தித்து செயல்பட வேண்டும் என சிலர் வாதிடலாம். இவ்வாறு வாதிடுபவர்களைப் பார்த்து நான் சில கேள்விகளை கேட்கிறேன். 'மனிதத் தன்மை' என்கிற சட்டத்தை எழுதி வைத்தது யார்?. நான் எதற்காக அந்த சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்?.

மனிதத் தன்மை என்கிற சட்டம் - உணர்வு பூர்வமான மனிதர்களுக்கு வேண்டுமெனில் சரியானதாகத் தெரியலாம். ஆனால் நான் ஒரு தர்க்க ரீதியான, சுயநலம் கொண்ட மனிதன். பிறருடைய நலம் பேணுவதால் எனக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே மனிதத் தன்மை என்பது எல்லாம் எனக்கு ஒரு பொருட்டேயல்ல.

ஊ. திருடுவது சுயநலம்.
திருடுவது சுயநலம் என்று சிலர் வாதிடலாம். திருடுவது சயநலம் என்பது நூறு சதவீதம் உண்மையானதுதான். திருடுவதால் நான் எனது வாழ்க்கையை கஷ்டமின்றி சுகமாக அனுபவிக்கலாம் என்கிற சூழ்நிலையில், நான் ஏன் ஒரு சுயநலவாதியாக இருக்கக் கூடாது?.

திருடுவது தவறு என்கிற தர்க்கரீதியான வாதம் ஒன்றைக் கூட எவராலும் எடுத்து வைக்க முடியாது.

இவ்வாறு திருடுவது தவறு என்கிற தர்க்கரீதியான வாதம் ஒன்றைக் கூட எவராலும் எடுத்து வைக்க முடியாது. மேற்காணும் தர்க்க ரீதியான வாதங்கள் யாவும் சாதாரண மனிதர்களை வேண்டுமானால் திருப்தி கொள்ள வைக்கலாம். ஆனால் மேற்படி தர்க்க ரீதியான வாதங்கள் சமுதாயத்தில் பலம் வாய்ந்த குற்றவாளிகளை திருப்தி படுத்த முடியாது. மேற்கூறப்பட்ட வாதங்கள் எதுவும் சரியான காரண காரியங்களுடன் நிரூபிக்க பட முடியாத வாதங்கள் ஆகும். எனவேதான் தற்போது உலகம் முழுவதும் எண்ணற்ற குற்றவாளிகள் இருக்கின்றனர்.

இவ்வாறுதான் சமுதாயத்தில் மலிந்து போய்க் கிடக்கும் இன்னபிற குற்றங்களான வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்றவையும் சரியானது அல்ல என்று சமுதாயத்தில் பலம் வாய்ந்த குற்றவாளிகளுக்கு முன்பு தர்க்க ரீதியாக நிரூபிக்கப்படாத குற்றங்கள் ஆகும்.

3. ஒரு முஸ்லிம் சமுதாயத்தில் பலம் வாய்ந்த, செல்வாக்கு மிகுந்த குற்றவாளியை, அவன் செய்வது குற்றம் என்று எளிதாக நம்ப வைக்க முடியும்.

இ;ப்போது நாம் இடம் மாறிக் கொள்வோம். நீங்கள் உலகத்தில் பலம் வாய்ந்த, செல்வாக்கு மிக்க ஒரு குற்றவாளி என்று வைத்துக் கொள்வோம். உங்களது கட்டளைக்கு அடிபணிய ஆட்களும், அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். தவிர உங்களை பாதுகாப்பதற்கு தனியாக ஒரு கூலிப்படையும் இருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். திருடுதல், வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்ற எல்லா தீயச் செயல்களும் தவறு என்று - நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் - என்னால் நிரூபிக்க முடியும்.
திருடுவது குற்றம் என்பது பற்றி - ஒரு குற்றவாளியின் முன்பு - நாம் மேலே விவரித்துள்ள விவாதங்களை எடுத்து வைக்கும்போது - அந்த குற்றவாளி திருடுவது குற்றம் அல்ல என்று மேலே குறிப்பிட்டுள்ளது போல் வாதாடினாலும் திருடுதல், வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்ற எல்லா தீயச் செயல்களும் தவறு என்று - நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் - என்னால் நிரூபிக்க முடியும்.
சமுதாயத்தில் சக்தி மிக்க மற்றும் செல்வாக்கு மிக்க ஒரு குற்றவாளி - அவன் செய்யும் குற்றங்கள் எதுவுமே குற்றமல்ல என்று தர்க்க ரீதியாக செய்யும் விவாதங்கள் யாவும் உண்மை நான் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் திருடுதல், வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்ற எல்லா தீயச் செயல்களும் தவறு என்று - நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் - என்னால் நிரூபிக்க முடியும்.

4. எல்லா மனிதர்களும் நீதி நிலை நிறுத்தப்படுவதை விரும்புகிறவர்களே!
எல்லா மனிதர்களும் நீதி நிலை நிலை நிறுத்தப்படுவதை விரும்புவார்கள். பிறருக்கு நீதி கிடைப்பதை வெறுப்பவர்களாக இருந்தாலும், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விரும்புபவர்களாத்தான் இருப்பார்கள். சிலபேர் பதவி மற்றும் செல்வாக்கு என்னும் அதிகார போதை தலைக்கேறியவர்களாக - பிறரை துன்புறுத்தவும் - அநியாயம் இளைக்கவும் துணிந்து விடுவார்கள். பதவியும், செல்வாக்கும் கொண்டவர்கள் - அதன் பலத்தைக் கொண்டு பிறருக்கு அநியாயம் செய்ய முனைவதோடு - மேற்படி பதவியும் - செல்வாக்கும் - தங்களுக்கு பிறர் அநியாயம் செய்வதை தடுக்கும் என்றும் கருதுகிறார்கள். பதவி மற்றும் செல்வாக்கு என்னும் அதிகார போதையை கையில் வைத்திருப்பவர்கள் கூட - தங்களுக்கு ஒரு அநியாயம் இளைக்கப்படும் போது - நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.

இறைவன் மிக்க நீதியும், வல்லமையும் கொண்டவன்.
நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் குற்றவாளிக்கு முதலில் - இறைவன் இருக்கின்றான் என்பதை தெளிவாக்குவேன். (இறைவன் இருக்கின்றான் என்பதை எப்படி தெளிவாக்குவது என்ற கேள்விக்கான விடையை பாருங்கள்) இறைவன் எல்லோரையும்விட வல்லமை மிக்கவன். இறைவன் நீதியும் நேர்மையும் உடையவன் என்பதையும் அந்த குற்றவாளிக்கு தெளிவாக்குவேன். அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துந் நிஷாவின் 40வது வசனம் கூறும் ' நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்' என்கிற வசனத்தை எடுத்துரைப்பேன்.

5. இறைவன், என்னை தண்டிக்கவில்லை. ஏன்?
அறிவியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும், அருள்மறை குர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகளை உணர்ந்து, இறைவன் இருக்கின்றான் என்பதை ஒப்புக் கொண்ட குற்றவாளி, இத்தனை வல்லமையும், நீதியையும் கொண்ட இறைவன் தன்னை ஏன் தண்டிக்கவில்லை என்று வாதம் செய்யலாம்.

6. யாரெல்லாம் அநியாயம் செய்கிறார்களோ, அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப் படவேண்டும்.
பணபலம், மற்றும் சமுதாய செல்வாக்கு இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, யாரெல்லாம் அநியாயம் செய்யப்பட்டார்களோ அவர்கள் - தங்களுக்கு குற்றம் இழைத்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விரும்புவார்கள். வல்லுறவு கொண்டவர்களுக்கும், திருடியவர்களுக்கும் சரியான ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று எல்லா சாதாரண மனிதர்களும் எண்ணுவது இயல்பு. இவ்வுலகில் ஏராளமான குற்றவாளிகள் அவர்கள் செய்த குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டாலும், பலர் அவர்கள் செய்த குற்றங்களுக்காக தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்படுவதை பார்க்கிறோம். அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியாக, ஆடம்பரமாக தொல்லையற்ற நிம்மதியோடு இவ்வுலகில் வாழ்வதை நாம் காண்கிறோம். பணபலமும், செல்வாக்கும் நிறைந்த ஒருவருக்கு, அவரைவிட அதிக பணபலமும், அதிக செல்வாக்கும் பெற்ற ஒருவரால் அநியாயம் செய்யப்படும்போது, தனக்கு அநியாயம் செய்தவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விரும்புவார்.

7. இவ்வுலகில் நாம் வாழுகின்ற வாழ்க்கை, மறு உலக வாழ்க்கைக்கான ஒரு தேர்வு.
இவ்வுலகில் நாம் வாழுகின்ற வாழ்க்கை, மறு உலக வாழ்க்கைக்கான ஒரு தேர்வுதான் என்பதை அருள்மறை குர்ஆனின் அறுபத்து ஏழாவது அத்தியாயம் ஸுரத்துல் முல்க்கின் 02வது வசனம் கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டுகின்றது.

'உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும், வாழ்வையும் படைத்தான். மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்: மிக்க மன்னிப்பவன்.'

8. இறுதித் தீர்ப்பு மறுமை நாளில் இருக்கிறது.
இறுதித் தீர்ப்பு மறுமை நாளில் இருக்கிறது என்பதை பற்றி அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் - ஸுரத்துல் ஆல இம்ரானின் 185வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது.

'ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.' (அல்-குர்ஆன் 3 : 185).

இறுதித் தீர்ப்பு மறுமை நாளில்தான் வழங்கப்படும் என்பதை மேலே சொல்லப்பட்ட அருள்மறை வசனத்தின் மூலம் நாம் அறியலாம். ஒரு மனிதன் இறந்த பிறகு - அவன் மீண்டும் உயிர்பிக்கப்படுவான். ஓரு மனிதன் தான் செய்த தவறுக்காக இவ்வுலகில் கொஞ்சமாக தண்டிக்கப்படலாம். அல்லது தண்டிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால் அவன் செய்த தவறுக்கு முழு தண்டணையும் மறுமைநாளில்தான். வல்லறவு குற்றத்தில் ஈடுபட்டவனையோ அல்லது திருடனையோ இறைவன் இவ்வுகத்தில் தண்டிக்காமல் விட்டு விடலாம். ஆனால் அவர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் மறுமை நாளில் பதில் சொல்லியேத் தீர வேண்டும். மறுமைநாளில் அதாவது மரணித்தபின் உள்ள வாழ்க்கையில் அவர்கள் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்.

9. நாஜி கொடுங்கோலன் ஹிட்லருக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டம் என்ன தண்டனை வழங்கியிருக்க முடியும்?.
அறுபது லட்சம் யூதர்களை எரித்துக் கொன்ற சம்பவம் நாஜி கொடுங்கோலன் ஹிட்லர் ஆட்சி காலத்தில் நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காவல்துறையினர் ஹிட்லரை கைது பண்ணி சட்டத்தின் முன்பு நிறுத்தியிருந்தால் - மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் அறுபது லட்சம் யூதர்களை எரித்துக் கொன்ற ஹிட்லருக்கு என்ன தண்டனை வழங்கியிருக்க முடியும்?. சட்டத்தின் மிகக் கூடுதல் தண்டனையான மரண தண்டனையை வழங்கியிருக்க கூடும். ஆனால் மேற்படி மரண தண்டனை ஒரேயொரு யூதரை கொன்றதற்கு ஈடான தண்டனைதான். எஞ்சியுள்ள ஐம்பத்து ஒன்பது லட்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது யூதர்களை எரித்துக் கொன்றதற்கான தண்டனை என்ன?.

10. அல்லாஹ் - ஹிட்லரை - அறுபது லட்சம் தடவை நரக நெருப்பினால் எரிக்கக்கூடிய வல்லமை பெற்றவன்:
அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
'யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் பொதெல்லாம், அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டேயிருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கிறான்.'
அல்லாஹ் - அவன் நாடினால் - ஹிட்லரை - அறுபது லட்சம் தடவை நரக நெருப்பினால் எரிக்கக்கூடிய வல்லமை கொண்டவன்.

11. மறுமை நம்பிக்கை இல்லாமல் மனித நலன் மற்றும் நல்லது, கெட்டது என்ற சிந்தனையே இல்லை.

மறுமை வாழ்க்கை அதாவது மனிதனின் இறப்புக்குப் பின்பும் ஒரு வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கை இல்லையெனில், மனித நலன் மற்றும் நல்லது, கெட்டது என்ற சிந்தனையே மனித வர்க்கத்திடம் இல்லாமல் போய்விடும். அநியாயம் செய்பவர்கள் - குறிப்பாக பணபலமும், படை பலமும், சமூக செல்வாக்கும் பெற்றவர்கள் அநியாயம் செய்யும் போது - மறுமை வாழ்க்கை என்ற நம்பிக்கை இல்லையெனில், மனித நலன் மற்றும் நல்லது, கெட்டது என்ற சிந்தனையே மனித வர்க்கத்திடம் இல்லாமல் போய்விடக் கூடும். எனவே ஒவ்வொரு மனிதருக்கும் - இறப்புக்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்கிற மறுமை நம்பிக்கை அவசியம்.



கேள்வி எண்: 23


குர்ஆனின் ஏராளமான இடங்களில் அல்லாஹ் மிக்க கருணையாளன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் உண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆகவே இறைவன் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?.


பதில்:

1. அல்லாஹ் அளவிலா கருணையாளன்..!
அல்லாஹ் அளவிலா கருணையாளன் - என்று அருள்மறை குர்ஆன் பலமுறை கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 114 அத்தியாயங்களில் ஒரேயொரு அத்தியாயம் (அத்தியாயம் 9 ஸுரத்துத் தௌபாவைத் தவிர, மற்ற அனைத்து அத்தியாயங்களும் 'பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்' - என்கிற அழகிய வாக்கியத்தோடு ஆரம்பமாகின்றன. 'பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்' - என்கிற அரபிப் பதத்தின் பொருள் - அளவிலா கருணையும், இணையிலா கிருபையுமுடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் - என்பதாகும்.

2.அல்லாஹ் மன்னிப்பாளன்.
அருள்மறை குர்ஆனின் உள்ள ஏராளமான வசனங்கள் அல்லாஹ் மன்னிப்பாளன் என்று கூறுகின்றது. குறிப்பாக அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன்னிஸாவின் 25வது வசனமும், ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 74வது வசனமும் கீழ் கண்டவாறு கூறுகின்றன.

'..இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். ( 4:25).
'..அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், பெரும் கருணையாளனாகவும் இருக்கின்றான். ( 5:74).

3.அல்லாஹ் தண்டனை பெறத் தகுதியானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குகிறான்.
அல்லாஹ் கருணையாளனாகவும், மன்னிப்போனாகவும் இருந்தாலும் - தண்டனை பெறத் தகுதியானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதில் விதிவிலக்கில்லாமல் தண்டனை வழங்குகிறான். அருள்மறை குர்ஆனின் வசனங்கள் பலவற்றில் இறை விசுவாசம் கொள்ளாதவர்களுக்கும், இறை உண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு என்று குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்க மறுத்தவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகிறது. அருள்மறை குர்ஆனின் பல வசனங்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்க மறுத்தவர்களுக்கு நரகத்தில் வழங்கப்படும் கடுமையான தண்டனைகளின் வகைகள் என்ன?. அவைகள் எவ்வாறு வழங்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றது.

'யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்: அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.' ( 4:56)

4.அல்லாஹ் நீதியாளன்.
அல்லாஹ் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?. என்பதே இங்கு கேட்கப்பட்ட கேள்வி. இங்கு ஒரு முக்கியமான கருத்தை நாம் கவனிக்க வேண்டும். அல்லாங் மன்னிப்பவன். மிக்க கருணையாளன். அதே நேரத்தில் அல்லாஹ் நீதி பரிபாலிப்பவனும் ஆவான். எனவே நீதி பரிபாலிக்கப்பட வெண்டுமெனில், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கியேத் தீர வேண்டும்.
அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன்னிஷாவின் 40வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
'நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஒரு அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்;...' ( 4:40)

மேலும் அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியாவின் 47வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது.
'இன்னும் கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது: மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறு கணக்கெடுக்க நாமே போதும்.' ( 21:47)

5. தேர்வில் காப்பி அடிக்கும் மாணவனை - மன்னிக்கக்கூடிய ஆசிரியர் ஓர் உதாரணம்:
ஆசிரியர் ஒருவர் தேர்வு நடந்து கொண்டிருக்கும் பொழுது மாணவன் ஒருவன் காப்பி அடிப்பதை கையும் களவுமாக பிடித்து விடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆசிரியர் கருணை உள்ளம் கொண்டவர். மன்னிக்கும் மனோ பக்குவமும் உள்ளவர். எனவே தொடர்ந்து காப்பி அடிக்க மாணவனை அனுமதித்து விடுகிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். இரவு முழுவதும் கண் விழித்து படித்து விட்டு வந்து தேர்வு எழுதும் மற்ற மாணவர்கள் ஆசிரியரை கருணை உள்ளம் கொண்டவர் என்றும், மன்னிக்கும் மனோ பக்குவம் உள்ளவர் என்றும் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், மாணவர்கள் - ஆசிரியரை அநியாயக்காரர் என்று அழைப்பார்கள். ஆசிரியரின் கருணையுள்ளம் மேலும் பல மாணவர்களை தேர்வில் காப்பி அடிக்கத் தூண்டும். இதுபோல எல்லா ஆசிரியர்களும் கருணையுள்ளம் கொண்டு மாணவர்களை தேர்வில் காப்பி அடிக்க அனுமதித்தால், எல்லா மாணவர்களிடமும் தேர்வுக்காக படித்து எழுதும் பழக்கம் மாறி, காப்பி அடிக்கும் பழக்கம் உருவாகும். காப்பி அடித்ததால் எல்லா மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவார்கள். தேரிவியலில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறும் மாணவர்கள், நடைமுறை வாழக்கையில் தோல்வியைத்தான் சந்திப்பார்கள். மாணவர்களுக்காக தேர்வு நடத்துவதின் முழு நோக்கமும் தோல்வியைத் தழுவும் என்பது நிச்சயம்.

6. மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை, மறுமை வாழ்க்கைக்கான தேர்வு.
நம்முடைய இவ்வுலக வாழ்க்கையானது மறுமை வாழ்க்கைக்கு உரிய தேர்வுதான். அருள்மறை குர்ஆனின் 67வது அத்தியாயம் ஸுரத்துல் முல்க் - ன் 2வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது.

'உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்: மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்: மிக மன்னிப்பவன்.'( - 67:2)

7. அல்லாஹ் எல்லா மனிதர்களையும் தண்டனை அளிக்காமல், மன்னித்து விடுவதாக இருந்தால் யார்தான் அல்லாஹ்வுக்கு அடிபணிவார்?.
அல்லாஹ் எந்த மனிதருக்கும் தண்டனை அளிப்பதில்லை. எல்லா மனிதர்களுக்கம் மன்னிப்பளித்து விட்டு விடுவான் என்கிற நிலை இருக்கும் எனில் - மனிதர்கள் ஏன் அல்லாஹ்வுக்கு அடி பணிந்து நடக்க வேண்டும்?. யாரும் நரகத்துக்கு போகமாட்டார்கள் என்பதை நானும் ஆதரிக்கிறேன். ஆனால் மனிதர்கள் வாழும் இந்த உலகம் அல்லவா நரகமாகப் மாறி விடும். எல்லா மனிதர்களும் பாரபட்சமின்றி சொர்க்கத்திற்குத்தான் செல்வார்கள் எனில் - மனிதன் இவ்வுலகில் படைக்கப் பட்டதின் நோக்கம்தான் என்ன?. எனவே இவ்வுலக வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைக்கு உண்டான ஒரு தேர்வேயன்றி - வேறில்லை.

8. அல்லாஹ் - தன் கட்டளைகளுக்குக் கீழ் படிகிறவர்களுக்கு மாத்திரம்தான் மன்னிப்பு வழங்குவான்.
அல்லாஹ் - தன் கட்டளைககளுக்குக் கீழ் படிகிறவர்களுக்கு மாத்திரம்தான் மன்னிப்பு வழங்குவான். அருள்மறை குர்ஆனின் 39வது அத்தியாயம் ஸுரத்துஜ் ஜுமரின் 53 முதல் 55வது வசனங்கள் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

'என் அடியார்களே!. (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன்' (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.' ( - 39:53)

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்: (வேதனை வந்து விட்;டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். ( - 39:54)

நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறவைனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றை பின்பற்றுங்கள். ( - 39:55)

நான்கு வகையான செயல்கள் மூலம் நிங்கள் செய்கிற தவறுகளிலிருந்து திருந்திக் கொள்ள முடியும். அவையாவன:

1. முதலில் நீங்கள் செய்யும் தவறான செயல்கள் சரியானது இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
2. இரண்டாவதாக செய்யும் தவறுகளை உடனடியாக நிறுத்துங்கள்.
3. மூன்றவதாக நீங்கள் செய்த தவறுகளை இனி ஒருபோதும் செய்யாதீர்கள்.
4. கடைசியாக நீங்கள் செய்த தவறுகளால் எவரேனும் பாதிக்கப் பட்டிருந்தால், பாதிக்கப் பட்டதற்கான பரிகாரம் தேடுங்கள்.



கேள்வி எண்: 24


இறைவன், 'காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களில் முத்திரை வைத்துவிட்டேன். ஆகவே அவர்கள் விசுவாசம் கொள்ள மாட்டார்கள்.' என்கிறான். செய்திகளை புரிந்து கொண்டு - விசுவாசம் கொள்வதற்கு காரணமாக அமைவது - மனிதனின் மூளையேத் தவிர - மனிதனின் இதயம் அல்ல என்பது இன்றைய அறிவியல் நமக்கு கற்றுத் தரும் பாடம். மேலே சொல்லப்பட்ட குர்ஆனிய வசனம் அறிவியல் உண்மைக்கு முரணானது இல்லையா?.


பதில்:


அருள்மறை குர்ஆனின் 2வது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 6 மற்றும் 7வது வசனங்கள் கீழ் கண்டவாறு கூறுகின்றன:
நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள். அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்களின் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்து விட்டான்: இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது: மேலும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (2: 6)\

2. அரபி வார்த்தையான 'கல்ப்' என்பதற்கு அறிவுத்திறன் என்றும் பொருள் உண்டு.
மேற்படி அருள்மறை வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அரபி வார்த்தையான 'கல்ப்' என்பதற்கு இதயம் என்ற பொருள் தவிர, அறிவுத்திறன் என்றும் பொருள் உண்டு. எனவே மேற்கண்ட வசனத்திற்கு அல்லாஹ் - இறை நிராகரிப்பாளர்களின் -அறிவுத்திறன் மீது முத்திரையிட்டு வி;ட்டான் எனவே அவர்கள் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள் - இறை நம்பிக்கை கொள்ளவும் மாட்டர்கள் - என்று பொருள் கொள்வதே சரியானதாக இருக்கும்.

3. அரபி மொழியில் இதயம் என்பதற்கு புரிந்து கொள்ளக்கூடிய மையம் என்றும் பொருள் கொள்ளலாம்.
அரபி மொழியில் ஒருவரின் புரிந்து கொள்ளக்கூடிய மையத்தை குறிப்பிடுவதற்கு 'கல்ப்' (இதயம்) என்ற வார்த்தையையும் பயன்படுத்துகிறார்கள்.

4. ஆங்கில மொழியில் ஏராளமான வார்த்தைகள் - எழுத்தில் ஒரு அர்த்தத்தைக் கொண்டிருந்தாலும் - அவைகளை பயன்படுத்தும் போது மாற்று அர்த்தத்தை தரக்கூடிய வார்த்தைகள் ஏராளம் உள்ளன.
ஆங்கிலத்தில் 'லுனாடிக்'  (Lunatic) என்ற வார்த்தை நிலவு சம்பந்தப்பட்டது ஆகும். ஆனால் மேற்படி வார்த்தை இன்றைக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. நிலவுக்கும் - மன நலம் பாதிக்கப்பட்டவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும் மன நலம் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை செய்யக் கூடிய மருத்துவர் கூட மேற்படி வார்த்தையை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை பார்க்கிறோம். மொழிப் பரிணாமத்தில் இது போன்ற நிகழ்வுகள் என்பது சாதாரணம்.

i. டிஸ்ஆஸ்டர் (Disaster) என்பது ஒரு நட்சத்திரம்.
ஆங்கிலத்தில் டிஸ்ஆஸ்டர் (Disaster)  என்றால் ஒரு தீய நட்சத்திரம். ஆனால் மேற்படி வார்த்தை இன்றைக்கு திடீரென தோன்றும் ஒரு துர்அதிர்ஷ்டம் அல்லது பெருந்துயரம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. டிஸ்ஆஸ்டர் (Disaster)  என்ற நட்சத்திரத்திற்கும், பெருந்துயரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.

ii. டிரிவியல் (Trivial) என்ற ஆங்கில வார்த்தைக்கு மூன்று சாலைகள் சந்திக்கும் இடம் என்று பொருள்.டிரிவியல் (Trivial)  என்ற ஆங்கில வார்த்தைக்கு மூன்று சாலைகள் சந்திக்கும் இடம் என்று பொருள். ஆனால் மேற்படி வார்த்தை இன்றைக்கு முக்கியத்துவம் இல்லாத விஷயங்கள் என்ற பொருளில் பயன் படுத்தப்படுகிறது. டிரிவியல் (Trivial) என்ற ஆங்கில வார்த்தைக்கும் - முக்கியத்தவம் அல்லாத விஷயங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லi என்பது நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.

iii. சன்ரைஸ் (Sunrise) மற்றும் சன்செட் (Sunset) சன்ரைஸ் (Sunrise) என்றால் நேரடி பொருள் கொள்வதாக இருந்தால் சூரியன் மேலெழுவது என்று பொருள் கொள்ள வேண்டும். ஆனால், சூரிய உதயத்தின் போது உண்மையிலேயே சூரியன் மேலெழுகிறதா என்றால் - இல்லை. மாறாக பூமி சுழல்வதால் உள்ள மாற்றத்தால் சூரியன் மேலெழுவது போன்றும் - சூரியன் மறைவது போன்றும் தெரிகிறதேத் தவிர, உண்மையில் சூரியன் மேலெழுவதோ அல்லது மறைவதோ இல்லை. இருப்பினும் இன்றைக்கும் நாம் சன்ரைஸ் (Sunrise) மற்றும் சன்செட் (Sunset) என்கிற ஆங்கில வார்த்தைகளை சூரியன் மெலெழுவது - சூரியன் மறைவது போன்ற பொருளில்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

5. ஆங்கில மொழியில் இதயம்தான் அன்பு செலுத்துவதற்கும் - உணர்ச்சிவயப் படுவதற்கும் மையமாக கருதப்படுகிறது.
ஆங்கில மொழியில் Heart அதாவது இதயம் என்றால் இரத்தத்தை ஓடச் செய்யும் ஓர் உடலுறுப்பு என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் Heart அதாவது இதயம் என்கிற வார்த்தை நினைப்பதற்கும், அன்பு செலுத்துவதற்கும், உணர்ச்சி வயப்படுவதற்கும் உரிய மையம் என்ற பொருளில் பயன் படுத்தப்படுகிறது. இன்றைக்கு நினைப்பதற்கும், அன்பு செலுத்துவதற்கும், உணர்ச்சி வயப்படுவதற்கும் பயன்படக்கூடிய மனித உறுப்பு மூளை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், தனது உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பும் மனிதன், 'நான் உன்னை எனது இதயத்தின் அடிப்பகுதியிலிருந்து விரும்புகிறேன்,' என்று சொல்லக் கேட்கிறோம். உதாரணத்திற்கு ஒரு அறிவியல் அறிஞர் தனது மனைவியிடம் 'நான் உன்னை எனது இதயத்தின் அடிப்பகுதியிலிருந்து விரும்புகிறேன்,' என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே அவரது மனைவி சொல்கிறார்,' உங்களுக்கு அடிப்படை அறிவியல் அறிவு கூடக் கிடையாதா?. அன்பு செலுத்துவது மூளையேத் தவிர, இதயம் இல்லை?. நீங்கள் உங்கள் மூளையின் அடிப்பகுதியிலிருந்து என்னை விரும்புவதாகத்தான் சொல்லியிருக்க வேண்டும்?.என்று பதிலளித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

6. 'கல்ப்' அதாவது இதயம் என்பதற்கு சிந்திப்யதற்கும், உணர்ந்து கொள்வதற்கும் உரிய மையம் என்ற பொருள் என்பது அரபிமொழி தெரிந்த அனைவரும் அறிந்ததே.
'கல்ப்' அதாவது இதயம் என்பதற்கு சிந்திப்யதற்கும், உணர்ந்து கொள்வதற்கும் உரிய மையம் என்ற பொருள் என்பதை அரபி மொழி அறிந்தவர்கள்; தெரிந்திருப்பதால் அல்லாஹ் ஏன் நிராகரிப்பவர்களின் இதங்களில் முத்திரை வைத்து விட்டேன் என்கிறான் என்ற கேள்வியை அரபி மொழி அறிந்த எவரும் கேட்பதில்லை.



கேள்வி எண்: 25


உலகில் உள்ள எல்லா மதங்களும் - நல்லதையே செய்ய வேண்டும் - நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது - ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்.? மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே!.


பதில்:

1. இஸ்லாமிய மார்க்கத்திற்கும் - பிற மதங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்:
எல்லா மதங்களும் நல்லதையேச் செய்ய வேண்டும் - நல்லதையேப் பின் பற்ற வேண்டும் என்று சொல்கின்றன. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் நல்லதையேச் செய்ய வேண்டும் - நல்லதையேப் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதோடு நின்று விடாமல் - தனிமனிதனிடமும் - முழு மனித சமுதாயத்திடமும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக் கூடிய செயல்களை நடைமுறைப்படுத்துகிறது. இஸ்லாம். நன்மையை ஏவி - தீமையைத் தடுக்கக் கூடிய செயலை செய்யும் போது மனித சமுதாயத்தில் இருக்கும் மனிதத் தன்மையையும், சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையே இருக்கும் நடைமுறைச் சிக்கலையும் கணக்கில் கொள்கிறது. மனிதர்களை படைத்த இறைவனால் வழிகாட்டப்பட்ட மார்க்கம் இஸ்லாம். எனவேதான் இஸ்லாம் - தீனுல் ஃபித்ர் - அதாவது இயற்கையான மார்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

2. உதாரணம்: மனிதர்கள் திருட்டை விட்டொழிக்க வேண்டும் என்று சொல்வதோடு, சமுதாயத்திலிருந்து திருட்டை எப்படி ஒழிக்க முடியும் என்பத தீர்வையும் வைத்திருக்கிறது.

அ. இஸ்லாம் திருட்டை ஒழிக்கும் வழிவகைகளை நமக்கு கற்றுத் தருகிறது.
எல்லா முக்கிய மதங்களும் திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிக்கின்றன. இஸ்லாமும் அதனைத்தான் போதிக்கின்றது. அப்படியெனில் மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன?. திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிப்பதோடு நின்று விடாமல் - நடைமுறையில் திருடர்களே இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவது எப்படி என்றும் வழிகாட்டுகின்றது இஸ்லாம்.

ஆ. இஸ்லாம் 'ஜக்காத்' என்னும் தர்மம் வழங்க வலியுறுத்துகிறது.
இஸ்லாம் 'ஜக்காத்' என்னும் மார்க்க வரி வழங்குவதை ஒவ்வொரு இஸ்லாமியர் மீதும் கடமையாக்கியுள்ளது. இஸ்லாமியர்களில் யாரெல்லாம் 85 கிராம் தங்கம் அல்லது அதற்குரிய விலை அளவில் சேமித்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் ஒவ்வொரு வருடமும் இரண்டரை சதவீதம் அளவிற்கு 'ஜக்காத்' என்னும் மார்க்க வரி வழங்குவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு பணக்காரரும் தமக்குள்ள சொத்துக்களில் இரண்டரை சதவீதம் தர்மமாக கொடுத்தால், உலகத்தில் ஏழ்மை என்ற நிலையே இல்லாமல் போகும். இவ்வுலகில் ஓரு மனித உயிர் கூட பசியால் மரணிக்கக் கூடிய நிலை இருக்காது.

இ. திருடுபவனுக்கு தண்டனையாக அவனது கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது.
திருடினாhன் என்று நிருபிக்கப்பட்டவனின் கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது. அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் ஐந்து ஸுரத்துல் மாயிதாவின் 38வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது:
'திருடனோ, திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.'
(அல்-குர்ஆன் 5 : 38)

'ஆ!. இருபதாம் நூற்றாண்டில் திருடியவனுக்கு கையை வெட்டுவதா?. இஸ்லாம் கருணையில்லாத, காட்டுமிராண்டித் தனமான மார்க்கம்' என்று இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் சொல்லலாம்

ஈ. இஸ்லாமிய சட்டம் நடை முறைப்படுத்தப் பட்டிருந்தால் - சரியான பலன் கிடைத்திருக்கும்:
உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் மிக முன்னேறியுள்ள நாடாக இருக்க வேண்டும். ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக அமெரிக்காதான் குற்றங்களும், திருட்டுக்களும், கொள்ளைகளும் நிறைந்துள்ள நாடாகவும் இருக்கின்றது. அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால், அதாவது எல்லா செல்வந்தர்களும் ஜக்காத் என்னும் தர்மம் வழங்க வேண்டும் (ஒவ்வொரு வருடமும் தமக்குள்ள சொத்துக்களில் 2.5 சதவீதம் தர்மமாக கொடுத்தல்) என்ற சட்டமும், திருடப்பட்டதாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையாக அவர்களது கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற சட்டமும் அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் திருட்டுக் குற்றம் குறையுமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதே போன்றுதான் இருக்குமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதிகரிக்குமா?. கண்டிப்பாக அமெரிக்காவின் திருட்டுக் குற்றங்கள் குறையத்தான் செய்யும். இஸ்லாம் வகுத்துள்ள கடுமையான சட்டங்கள் இருப்பதன் காரணத்தால் மேலும் திருட வேண்டும் என்று எண்ணமுள்ளவர்களும் திருடுவதற்கு தயங்கும் நிலைதான் உருவாகும்.

இன்றைக்கு உலகில் இருக்கும் திருட்டுக் குற்றங்களுக்கு தண்டனை என்ற பெயரில் கைகளை வெட்டுவோம் எனில் இன்று உலகில் லட்சக் கணக்கானோரின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற உங்களது வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். - ஆனால் நான் இங்கே வலியுறுத்த விரும்பும் கருத்து என்னவெனில் திருடுவோருக்கு தண்டனையாக கைகள் வெட்டப்படும் என்கிற சட்டம் அமல்படுத்தப்பட்ட உடனேயே திருட்டுக் குற்றங்கள் குறைய ஆரம்பித்துவிடும் என்பதைத்தான். திருட்டுத்தொழிலை வழக்கமாகக் கொண்டிருக்கும் திருடர்கள் கூட, திருடுவதற்கு முன்பு மிகவும் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். திருடுவது பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டாலே - திருட்டு தொழில் செய்பவர்கள் பலர் திருடுவதை விட்டு விடுவார்கள். அதனையும் மீறி ஒரு சிலர் மாத்திரம் திருட்டுத் தொழிலை தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் பிடிபட்டால் அவர்களின் கைகள் மாத்திரம் வெட்டப்படும். இவ்வாறு ஒரு சிலரின் கைகள் வேண்டுமெனில் வெட்டப்படலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் திருட்டு பயமின்றி நிம்மதியாக வாழமுடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியவையும், மனித சமுதாயத்திற்கு பலன்களை தரக் கூடியவையும்தான்.

1. மூன்றாவது உதாரணம்: இஸ்லாம் பெண்கள் மானபங்கபடுத்தப்படுவதையும், வல்லுறவு கொள்ளப்படுவதையும் கடுமையான குற்றங்கள் என தடை செய்துள்ளது. அத்துடன் இஸ்லாமிய ஆடை முறைகளை பின்பற்ற சொல்வதோடு, வல்லறவு குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படுபவருக்கு கடுமையான தண்டனைகளையும் வலியுறுத்துகிறது.

அ. வல்லுறவு கொள்வதையும், மானபங்கப் படுத்தப்படுவதையும் தடுக்கும் முறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
பெண்களோடு வல்லுறவு கொள்வதையும், பெண்கள் மானபங்கப்படுத்தப் படுவதையும் எல்லா மதங்களும் கொடுமையான பாவம் என்றுதான் சொல்லுகின்றன. இஸ்லாமிய மார்க்கமும் அதைத்தான் போதிக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் மற்றுமுள்ள மதங்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?. பெண்களை மதிக்க வேண்டும் அறிவுரை கூறுவதோடு நின்று விடாமல் அல்லது பெண்களை மானபங்கப்படுத்துவதை வெறுத்துத் தள்ளுவதோடு நின்று விடாமல், வல்லுறவு கொள்வது மகாப்பெரிய பாவம் என்று சொல்வதொடு நின்று விடாமல், மேற்படி குற்றங்கள் சமுதாயத்தில் இல்லாமல் செய்வது எப்படி என்று வழிகாட்டவும் செய்கிறது.

ஆ. இஸ்லாம் வலியுறுத்தும் ஆண்களுக்கான ஆடைமுறையும் - நடை முறையும்.
இஸ்லாம் மனிதர்கள் முறையாக அணிய வேண்டிய ஆடைகளை (ஹிஜாப்) வலியுறுத்துகின்றது. அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்; பெண்களுக்கான 'ஹிஜாப்' பற்றி அறிவிப்பதற்கு முன்பாக, ஆண்களுக்கான 'ஹிஜாப்' பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் '(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்:

அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்-குர்ஆன் 24 : 30)

ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் - வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் - அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.

இ. பெண்களுக்குரிய 'ஹிஜாப்'
அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் '(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர, (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்.....ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஹிஜாப் அணிவதற்கான வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் - கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.

ஈ. ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:
பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.

பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் - அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் - ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

உ. இரட்டை சகோதரிகள் - ஓர் உதாரணம்:
இரட்டைப் பிறவியான சகோதரிகள் - இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் - மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் - கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?. கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். உடல் உறுப்புகளை மறைப்பதைவிட அதிகம் வெளியில் தெரியும்படியான ஆடைகளை பெண்கள் அணிவது - ஆண்பாலரை கேலியும் கிண்டலும் - தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

ஊ. வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.
இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் - அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். ஒருசிலர் இஸ்லாம் கருணையில்லாத - காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ - அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு - தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?. நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் - வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து அவனைக் கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் - யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு - வல்லுறவு கொண்டு விட்டால் - மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் - வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ - அல்லது தாயோ வல்லுறவு கொள்ளப்பட்டு - வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?.

எ. அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.
உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1990 ஆம் ஆண்டில் மாத்திரம் அமெரிக்காவில் 1,02,555 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை தெரிவிக்கிறது. நடந்த வல்லுறவு குற்றங்களில்; 16 சதவீதம் குற்றங்கள் மாத்திரமே புகார் செய்யப்பட்டதாகவும் மேற்படி அறிக்கை தெரிவிக்கிறது. அப்படியெனில் அமெரிக்காவில் 1990 ஆம் ஆண்டில் மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்கள் எத்தனை என்று அறிய மேற்படி தொகையை (102,555) 6.25 கொண்டு பெருக்கினால் மொத்த வல்லுறவு குற்றத்தின் எண்ணிக்கை 640,968 ஆகும். மேற்படி கிடைக்கும் தொகையை 365 நாட்களை கொண்டு வகுக்கும் போது 1990 ஆம் ஆண்டு மாத்திரம் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக நடந்த வல்லுறவு குற்றங்களின் எண்ணிக்கை 1,756 ஆகும்.
அதன் பிறகு சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவில் 1996 ஆம் ஆண்டு மாத்திரம் 307,000 வல்லுறவு குற்றங்கள் புகார் செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறையின் மற்றொரு பிரிவான குற்றம் இழைக்கப்பட்டோர் பற்றி தேசிய அளவில் ஆய்வு செய்யும் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்களில், 31 சதவீதம் மாத்திரமே புகார் செய்யப்பட்டுள்ளது என்றும் மேற்படி அறிக்கை கூறுகிறது. அவ்வாறெனில் 1996 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த மொத்த வல்லுறவு குற்றங்கள் (307,000 ஒ 3.226) 990,322. ஆகும். சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது ஒவ்வொரு 32 வினாடிக்கு ஒரு வல்லுறவு குற்றம் நிகழ்ந்திருக்கிறது. மற்றுமுள்ள வருடங்களில் அமெரிக்கர்கள் இன்னும் கூடுதலாக வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம். இவ்வாறு வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 10 சதவீதம் பேர்கள்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக 1990ஆம் ஆண்டு எஃப். பி. ஐ. வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தத்தில் 1.6 சதவீதம்தான். மேற்படி கைது செய்யப்பட்டவர்களில் ஐம்பது சதவீதம்பேர் அவர்கள் செய்த வல்லுறவு குற்றம் நீதி மன்றத்தின் முன்பு நிருபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு அர்த்தம் 0.8 சதவீதம் குற்றவாளிகள்தான் நீதி விசாரனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் 125 பேர் வல்லறவு குற்றங்கள் நிகழ்ந்தால் தண்டனை வழங்கப்படுவது ஒரேயொரு குற்றத்திற்கு மாத்திரம்தான். இவ்வாறான சட்டங்கள் இருந்தால் மனிதர்களில் பலர் வல்லுறவு குற்றம் புரிவதை ஒரு தொழிலாகவே வைத்திருப்பார்கள்.

இவ்வாறு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டபின் 1 வருடத்திற்கும் குறைவான சிறை தண்டனையைத்தான் பெறுகின்றனர் என மேற்படி அறிக்கை மேலும் கூறுகிறது. இவ்வளவுக்கும் ஒரு வல்லுறவு குற்றம் புரிந்த குற்றவாளிக்கு அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும். முதன் முறையாக வல்லறவு குற்றம் புரிந்த ஒருவனுக்கு கடுமையான தண்டனைகள் இன்றி நீதிபதி விடுதலை செய்யலாம் என்பது அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின் விதி. கற்பனை செய்து பாருங்கள்!. ஒரு மனிதன் 125 முறை வல்லுறவு குற்றம் செய்தாலும், அவன் தண்டனை பெறுவதற்குரிய சாத்தியக்கூறு ஒரேயொரு முறைதான். அந்த ஒரு முறையிலும் நீதிபதியின் கருணையினால் விடுதலை செய்யப்படலாம். அல்லது ஒரு வருடத்திற்கும் குறைந்த சிறை தண்டனையைப் பெறலாம்.

ஏ. இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டால் சரியான பலன்களைப் பெறலாம்:
அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் - அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி - மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் - அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும். மேற்கண்டவாறு இஸ்லாமிய சட்டங்கள் அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் - அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?. கண்டிப்பாக அமெரிக்காவின் வல்லுறவு குற்றங்கள் குறையத்தான் செய்யும்.

4. மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு, இஸ்லாமிய மார்க்கம் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய தீர்;வுகளை கொண்டுள்ளது.
இஸ்லாம் உலக வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாகும் . ஏனெனில் அதன் கொள்கைகள் நடைமுறைக்கு ஒத்து வராத வாய் வார்த்தைகளை கொண்டதல்ல. மாறாக இஸ்லாமிய கொள்கைகள் மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது. தனி மனித அளவிலும், முழு மனித சமுதாய அளவிலும் இஸ்லாமிய மார்க்கம் சிறந்த தீர்வுகளை கொண்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கமே உலகில் உள்ள மார்க்கங்களில் எல்லாம் சிறந்த மார்க்கமாக திகழ்வதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியக் கூறான அதன் கொள்கைள்தான். இஸ்லாமிய மார்க்கம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட தேசத்தினருக்கோ சொந்தமானதல்ல. மாறாக இஸ்லாமிய மார்க்கம் அகிலம் முழுவதற்கும் சொந்தமானது.

நன்றி: ஒற்றுமை.நெட்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக