வெள்ளி, 8 பிப்ரவரி, 2013



 முஸ்லிமின் வழிமுறை [பாகம்-4]


கணவன், மனைவி இடையே உள்ள உரிமைகள்.

கணவன், மனைவி இடையேயும் பரஸ்பரம் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள் உள்ளன என்பதை ஒரு முஸ்லிம் எற்றுக் கொள்ள வேண்டும். அவை அவர்கள் ஒவ்வொருக்கும் மற்றவரின் மீதுள்ள உரிமைகளாகும்

அல்லாஹ் கூறுகிறான்: மனைவியர் மீது கணவர்களுக்குள்ள உரிமைகள்போல முறைப்படி கணவர்கள் மீது மனைவியருக்கும் உரிமைகள் உள்ளன. ஆயினும் ஆண்களுக்குப் பெண்களைவிட ஒருபடி உயர்வு உண்டு. (அல்குர்ஆன்: 2:228)

இவ்வசனம் கணவன், மனைவி இருவருக்குமே பரஸ்பரம் உரிமைகள் இருப்பதை உறுதி செய்வதோடு பல்வேறு காரணங்களால் ஆணுக்கு அதிகப்படியான அந்தஸ்து இருப்பதாகவும் கூறுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின்போது கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் கடமைகள் இருக்கின்றன. உங்கள் மீது உங்கள் மனைவியருக்கு உரிமைகள் கடமைகள் இருக்கின்றன. அறிவிப்பவர்: அம்ர் பின் அல் அஹ்வஸ் (ரழி), திர்மிதி, அபூதாவூத்

ஆயினும் இந்த உரிமைகள் கடமைகளில் சில கணவன், மனைவி இருவருக்கும் பொதுவானவையாகவும் சில தனிப்பட்டதாகவும் இருக்கின்றன.

பொதுவான உரிமைகள்.

1. நம்பிக்கை: கணவன், மனைவியர் ஒவ்வொருவரும் பரஸ்பரம் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வது கடமையாகும். சிறிதும் துரோகம் செய்யக் கூடாது.

2. அன்பு, பாசம்: அவர்கள் ஒவ்வொருவரும் பரஸ்பரம் மிக அதிக அளவில் தூய்மையான அன்புடனும் பரிபூரணமான பாசத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் இருவரும் இறைவன் கூற்றை உறுதிப்படுத்தும் விதத்தில் காலம் முழுவதும் பரஸ்பரம் இத்தகைய அன்புடனும் பாசத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்

இறைவன் கூறுகிறான்: அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக, மேலும் உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான், நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடம் அன்பையும் கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன்: 30:21)

அன்பு செலுத்தாதவர், அன்பு செலுத்தப்பட மாட்டார் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

3. பரஸ்பர விசுவாசம்: அவர்கள் பரஸ்பரம் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும். தம் நம்பிக்கை, நன்னடத்தை வாய்மை ஆகியவற்றில் சிறு சந்தேகமும் ஏற்பட்டுவிடக் கூடாது.

அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கையாளர்கள் ஒருவர் மற்றவருக்கு சகோதரர் ஆவார். (அல்குர்ஆன்: 49:9)

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விருபாதவரை உங்களில் யாரும் இறைநம்பிக்கை கொண்டவராக மாட்டார். அறிவிப்பவர்: அனஸ்(ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்

ஆம்! கணவன், மனைவிய பந்தம் ஈமானிய சகோதரத்துவத்திற்கு உறுதியையும் செம்மையையும்  அதிகப்படுத்துகின்றது.

4. பொதுவான ஒழுங்குகள்: உதாரணமாக நடைமுறை பழக்கவழக்கங்களில் மென்மையான போக்கை மேற்கொள்வது, ஒருவரையொருவர் மலர்ந்த முகத்துடன் பார்ப்பது, மதிப்பது, கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடந்து கொள்வது. இவையனைத்தும் திருக்குர்ஆனில் இறைவன் கட்டளையிட்டிருக்கின்ற குடும்ப வாழ்க்கையின் சிறந்த ஒழுக்கங்களாகும். நபி(ஸல்) அவர்கள் ஏவியிருக்கின்ற நன்னடத்தைகளாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். (அல்குர்ஆன்: 4:19) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண்களை நல்லமுறையில் நடத்துங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

தனிப்பட்ட உரிமைகள், ஒழுக்கங்கள்

அதாவது கணவன் மீது மனைவிக்கும் மனைவியின் மீது கணவனுக்கும் தனிப்பட்ட உரிமைகளும் கடமைகளும் இருக்கின்றன.

கணவன் மீது மனைவிக்குரிய கடமைகள்.

மனைவி விஷயத்தில் பின்வரும் ஒழுக்கங்களை மேற்கொள்வது கடமையாகும்.

1. அவளுடன் நல்லமுறையில் வாழ்க்கை நடத்தவேண்டும். “அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள்” என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்: 4:19)

அவன் உண்ணும்போது அவளுக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும். அவன் ஆடை அணியும்போது அவளுக்கும் அணியக் கொடுக்க வேண்டும். தனக்கு அவள் மாறு செய்து விடுவாளோ என்று அஞ்சினால் அவளை எவ்வாறு பக்குவப்படுத்த வேண்டுமென்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அவ்வாறு அவளை பக்குவப்படுத்த வேண்டும்.

முதலில் அவளைத் திட்டாமல், ஏசாமல், கேவலப்படுத்தாமல் அவளுக்கு அறிவுரை கூறவேண்டும். அதற்கவள் கட்டுப்படவில்லையென்றால் படுக்கையிலிருந்து அவளை ஒதுக்கி வைக்க வேண்டும். அதற்கும் கட்டுப்படவில்லை என்றால் காயம் ஏற்படாதவாறு அவளை அடிக்க வேண்டும். முகத்தில் அடிக்கக்கூடாது. அடிக்கும்போது இரத்தம் வந்து விடக் கூடாது. அவையங்களுக்குக் கேடு வந்து அவை செயல்பாடுகளை இழந்துவிடக் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்: எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு நல்லறிவு புகட்டுங்கள்,  படுக்கைகளிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள், மேலும் அவர்களை அடியுங்கள், ஆனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்படிந்து விட்டால் பிறகு அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள். (அல்குர்ஆன்: 4:34)

எங்கள் மீது எங்கள் மனைவிக்குரிய கடமை என்ன? என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, நீ உண்ணும்போது அவளுக்கும் உண்ணக் கொடு. நீ ஆடை அணியும்போது அவளுக்கும் அணியக்கொடு. அவளை முகத்தில் அடிக்காதே. அவளை கேவலமாகப் பேசாதே. அவளை வெறுப்பதாக இருந்தால் வீட்டிலேயே வெறுத்துக் கொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரழி), நூல்; அபூதாவூத்

அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீது உங்கள் மனைவியருக்குரிய கடமைகள் அவர்களுக்கு நீங்கள் அழகிய முறையில் உணவளிப்பதும் உடையளிப்பதுமே! என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அம்ர் பின் அஹ்வஸ் (ரழி),- திர்மிதி

ஒரு முஃமினான ஆண் முஃமினான தன் மனைவியை வெறுத்துவிட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால் அவன்  விரும்பக்கூடிய வேறு குணத்தை அவளிடம் அவன் காணலாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: முஸ்லிம்

2. அவளுக்கு அத்தியாவசியமான மார்க்க விஷயங்களை அவன் கற்றுக் கொடுக்க வேண்டும்- அவற்றை அவள் தெரியாமலிருந்தால். அவற்றைக் கற்றுக் கொள்வதற்காக நற்போதனை நடக்கின்ற கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு அவளை அனுமதிக்க வேண்டும். ஏனெனில் உண்பதற்கும் பருகுவதற்குமுரிய தேவையை விட மார்க்கத்தை அறிந்து கொள்வதற்கான தேவை குறைந்ததல்லவே!

அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருளாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி, மக்களையும் காத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 66:6)

3. இஸ்லாமிய நற்போதனைகளை அவள் நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும். அழகையும் அலங்காரத்தையும் காட்டிக்கொண்டு செல்வது, அந்நிய ஆண்களுடன் கலந்திருப்பது போன்றவற்றை விட்டும் அவளை அவன் தடுக்க வேண்டும். காரணம் ஆண்தான் பொறுப்பாளன்; சட்டப்படி அவளைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவன்.

“ஆண்களே பெண்களை நிர்வகிப்போர் ஆவர்.” (அல்குர்ஆன்: 4:34) “…ஒரு ஆண் தனது குடும்பத்தார்களுக்குப் பொறுப்பாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்; இப்னு உமர்(ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்.

மனைவி மீது கணவனுக்குரிய கடமைகள்

கணவன் விஷயத்தில் பின்வரும் ஒழுக்கங்களையும் மேற்கொள்வது மனைவியின் மீது கடமையாகும்.

1. பாவமல்லாத காரியங்களில் அவனுக்கு அவள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

“அவர்கள் (மனைவியர்) உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் பிறகு அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள். (4:34)

ஒருவர் தன் மனைவியை படுக்கைக்கு அழைத்து அவள் செல்லவில்லையென்றால் அவன் அவள் மீது கோபம் கொண்டவனாக அன்றிரவைக் கழித்தால் காலையில் அவள் விழிக்கும்வரை வானவர்கள் அவளை சபிக்கின்றார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்

ஒருவர் மற்றவரின் காலில் விழுவதற்கு நான் அனுமதிப்பதாக இருந்தால் கணவனின் காலில் மனைவி விழுவதற்கு அனுமதித்திருப்பேன் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்:புகாரி, முஸ்லிம்

2. அவள் தனது கண்ணியத்தையும் தன் கணவனது மான மரியாதையையும் பாதுகாப்பதோடு கணவனது பொருள் அவனது பிள்ளைகள் மற்றும் வீட்டிலுள்ள அனைத்து காரியங்களையும் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: ஒழுக்கமான பெண்கள் (தம் கணவன்மார்களுக்கும்) கீழ்படிந்தே நடப்பார்கள். மேலும் தம் கணவன்மார்கள் வீட்டில் இல்லாத காலங்களில் பாதுகாக்கப்பட வேண்டியவற்றை அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு பேணிக் காத்து வருவார்கள். (4:34)

ஒரு பெண் தன் கணவன் வீட்டிற்குப் பொறுப்பாவாள். அவள் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவாள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: புகாரி,முஸ்லிம்.

3. கணவனின் வீட்டிற்குள்ளேயே அவள் இருக்க வேண்டும். அவனது அனுமதியும் திருப்தியும் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது. தன் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதுடன் தன் குரலையும் தாழ்த்திக் கொள்ள வேண்டும். மேலும் யாருக்கும் அவள் கெடுதி இழைக்கக் கூடாது. கணவனின் உறவினர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞான காலத்தைப் போன்று ஒப்பனையையும் ஒய்யாரத்தையும் காட்டிக் கொண்டு வெளியே திரியாதீர்கள். (33:33) மேலும் கூறுகிறான்: மென்மையாகப் பேசாதீர்கள். ஏனெனில் உள்ளத்தில் கெட்ட எண்ணம் கொண்டிருப்பவன் சபலம் கொள்ளக் கூடும். (33:32)

தீய சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. (4:148)

(நபியே!) ஈமான் கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தம் வெட்கத்தலங்களைப் பாதுகாக்கட்டும். தம் அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும். அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர. (24:31)

எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும்போது மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்குக் கீழ்படிந்து நடப்பாளோ, அவன் இல்லாத காலங்களில் தனது கற்பையும் தனது பொருளையும் பாதுகாத்துக் கொள்வாளோ அத்தகையவளே பெண்களில் சிறந்தவள் என நபி(ஸல்) அவகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்:நஸயி.

நன்றி: இஸ்லாம்குரல்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக