ஓதுவோம் வாருங்கள்! -4
“மவ்லிது” மறுக்கப்படுவது கவிதை என்பதற்காக அல்ல” என்பதை இதுவரை நாம் கண்டோம். வேறு பல காரணங்களுக்காகவே மவ்லிது மறுக்கப்படுகின்றது.
முதல் காரணம்
இன்று தமிழக முஸ்லிம்கள் ஓதி வருகின்ற ‘மவ்லிது’ களில் இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரண்பட்ட பல கருத்துக்கள் அடங்கியுள்ளன. பொய்யான கதைகள் பல அவற்றில் மலிந்துள்ளன. இது மவ்லிது மறுக்கப்படுவதற்கான முதற்காரணம். இதை ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக நாம் அறிய வேண்டுமானால் இன்றைய மவ்லிதுகளில் உள்ள வரிகளுக்கு நேரடியான அர்த்தத்தை நாம் தெளிவுபடுத்த வேண்டும். பிறகு, அவை எவ்வாறு குர்ஆனுக்கும் நபிமொழிகளுக்கும் முரண்படுகின்றன என்பதை நாம் விளக்கியாக வேண்டும்.
நம் தமிழகத்தில் பரவலாக ஓதப்படுகின்ற ‘புர்தா’ சுப்ஹான மவ்லிது’ முஹ்யித்தீன் மவ்லிது, ‘யாகுத்பா’ யாஸையிதீ ஆகிய மவ்லிதுகளைக் குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் நாம் அலசுவோம்.
“புர்தா” ஓர் அறிமுகம்
முதன் முதலில் ‘புர்தா’ என்ற கவிதையை நமது விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்வோம். விமர்சனம் செய்வதற்கு முன் ‘புர்தா’ பற்றி ஓர் அறிமுகம்
நபி(ஸல்) அவர்களின் காலத்துக்கு சுமார் 600 ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்த முஹம்மது அல்பூசிரி என்ற கவிஞரால் இயற்றப்பட்டது தான் இந்தக் கவிதை. நபி(ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் அறுநூறு ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட இந்தக் கவிதை மவ்லிது ஆதரவாளர்களால் மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டிய காரணம் என்ன?
திருக்குர்ஆனுக்கு நிகராக, ஏன் அதை விடவும் அதிகமாக இந்தக் கவிதைக்கு போலி முல்லாக்கள் ஏன் முக்கியத்துவம் தந்தனர்? வறுமை நீங்கிட, செல்வம் பெருகிட, நோய் அகன்றிட, உள்ளங்கள் அமைதிபெற,பைத்தியம் தெளிய, தேவைகள் நிறைவேற்றப்பட நாற்பது நாட்கள் ‘புர்தா’வை ஓதி தண்ணீரில் ஊதி அதைக் குடித்து விட்டால் போதும். உடனே நிவாரணம் கிடைத்து விடும் என்று அப்பாவி மக்களை ஏன் நம்ப வைத்து விட்டனர்? திருக்குர்ஆனைக் கூட இவ்வளவு பக்தி சிரத்தையோடு ஓத மாட்டார்கள். (சில பகுதிகளில் ஒளூ இல்லாமல் புர்தாவை ஓதக்கூடாது என்ற நம்பிக்கை வேறு.
மார்க்க அறிஞர்(?) களை உருவாக்குகின்ற அரபிப் பள்ளிக்கூடங்களில் பல, வெள்ளி இரவுகளில் பக்தி சிரத்தையோடு ஓதி வருவது ஏன்? இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்? இந்தக் கவிதைக்கு பல(வீன)மான பிண்ணனி ஒன்று உள்ளது. அதுதான் இவற்றுக்கெல்லாம் காரணம். இந்தக் கவிதையின் தவறுகள் கண்டு கொள்ளப்படக் கூடாது கண்டு கொள்ளப்பட்டு விட்டாலும் கண்டிக்கப்ட்டு விடக்கூடாது என்பதற்காகவும், புனித மிக்கதாக இந்தக் கவிதை ஆக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அந்த பல(வீன) மான பின்னணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பல(வீன) மான பின்னணி
இந்தக் கவிதையை இயற்றிய பூசிரி என்பவர் ‘பாரிஸ வாயு’ என்ற நோயால் பீடிக்கப்பட்டிருந்தாராம்! அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தக் கவிதையை இயற்றினாராம். அவரது கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி தங்கள் போர்வையைப் போர்த்தினார்களாம். உடனே அவர் பூரண குணம் அடைந்து விட்டாராம்! அதன் காரணமாகவே ‘புர்தா’ (போர்வை) என்று பெயர் வந்ததாம்!
இப்படி ஒரு கதையைக் கட்டிவிட்டால் ஏன் புனிதமிக்கதாக ஆகாது? இதற்குக் துணையாக இன்னொரு கதையும் உண்டு. இந்த ‘புர்தா’வின் 51வது அடியை அவர் பாடி வரும்போது அடுத்து எப்படிப் பாடுவது என்று தெரியவில்லையாம்! பாதியிலேயே திக்கித் திணறிக் கொண்டே படுத்துறங்கி விட்டாராம். அன்றிரவு அவரது கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி அந்த அடியை முடித்துக் கொடுத்தார்களாம்!
நபி(ஸல்) அவர்கள் தங்கள் திருவாயால் இதற்கு அடிஎடுத்துக் கொடுத்தார்கள் என்ற கூறிவிட்டார்கள் அல்லவா? அதற்குத்தான் இந்தக் கதை, நபி(ஸல்) அவர்களே தங்கள் திருக்கரத்தால் தனது போர்வையைப் போர்த்தினார்கள் என்று கூறிவிட்டால் அப்பாவி மக்கள் ஏன் புனிதமானதாகக் கருதமாட்டார்கள்.
உமறுப்புலவர், காசிம் புலவர் உட்பட பல கவிஞர்களின் கனவில் நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்ததாககக் கூறப்படுவதற்கு மூலஆதாரம் இந்தக் கதைகள் தான். புர்தாவின் பெயரால் சொல்லப்பட்ட அதே கதைகளை அடிப்படையாகக் கொண்டுதான் மற்ற கவிஞர்களுக்கும் அந்தக் கதைகள் பொருத்தப்பட்டன. நபி(ஸல்) அவர்களுக்குக் கவிபாடத் தெரியாது என்பதையும், கனவில் வந்து அடி எடுத்துக் கொடுத்திருக்க மாட்டார்கள் என்பதையும் நாம் தெளிவு படுத்தியுள்ளோம். இந்தப் பொய்யான கதைகளின் காரணமாகவே மவ்லிது பக்தர்களால் ‘புர்தா’ உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படுகின்றது. உண்மையில் இதன் கருத்துக்களை நாம் ஆராயும்போது, குர்ஆன் ஹதீஸுக்கு முரண்பட்ட பல கருத்துக்களைக் காண்கிறோம்.
விமர்சிக்குமுன்
‘புர்தா’வில் உள்ள தவறுகளை நாம் விமர்சனம் செய்வதற்கு முன்னால் சில விபரங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ‘மவ்லிது’ என்ற பெயரால் ஓதப்படக் கூடிய பாடல்களில் இந்த ‘புர்தா’ பல விதங்களில் தரமானது என்பதை நாம் மறுக்க முடியாது. இலக்கணத்திற்கும் இலக்கியத்திற்கும் சம்மந்தமில்லாமல் அரை குறை அரபி ஞானமுடையோரால் மற்ற மவ்லிதுகள் எடுதப்பட்டுள்ளன. ஆனால் ‘புர்தா’ மிகவும் இலக்கியத் தரமானது. இலக்கணச் சுத்தமானது. மிகச் சிறந்த நடையழகைப் பெற்றுள்ளது.
திருக்குர்ஆனின் சிறப்பு, அல்லாஹ்வின் வல்லமை, போன்றவற்றைக் குறிப்பிடும் இடங்களிலும், வேறு சில இடங்களிலும் நல்ல கருத்துக்களைக் காண முடிகின்றது. மற்ற மவ்லிதுகளில் காணப்படும் தவறுகளை விட புர்தாவில் குறைந்த எண்ணிக்கையிலேயே தவறுகள் உள்ளன.
உமறுப்புலவரின் சீறாப்புராணம் எப்படித்தமிழ் இலக்கியத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளதோ, அதுபோல் அரபி இலக்கியத்தில் புர்தாவுக்குத் தனி இடம் உண்டு. இலக்கண, இலக்கியத்திற்கும் எடுத்துக்காட்டாக கூறப்படும் அளவுக்கு அந்தக் கவிதைக்கு தகுதி உண்டு. ஆனால் மார்க்க ஆதாரங்களாகும் அளவுக்கு அந்தக் கவிதைக்குத் தகுதியும் கிடையாது. அதைப் புனிதமானது என்று கருதுவதற்கும் அருகதை இல்லை. இனி புர்தாவின் தவறுகளை ஒவ்வொன்றாக நாம் காண்போம்.
புர்தாவின் தவறுகள்
ஃப இன்னமின் ஜுதிகத் துன்யா வழர்ரதஹா வமின் உலூமிக இல்முல் லவ்ஹி வல்கலமி
இது புர்தாவில் வருகின்ற வரிகள். மூன்று முறை ஓதப்படுகின்ற கவிதைகளில் இந்த வரிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தக் கவிதையின் கருத்து திரக்குர்ஆனுடன் நேரடியாக மோதுகின்ற நச்சுக் கருத்தாகும். ‘பர்தா’ ஓதக்கூடாது என்று முடிவெடுக்க இந்த இரண்டு வரிகளே போதுமாகும். அவ்வளவு மோசமான கருத்தை இந்த வரிகள் தன்னகத்தே கொண்டுள்ளன. இதன் நேரடிப் பொருளை முதலில் காண்போம்.
(“நபியே!) இந்த உலகமும் , அதன் சக்களத்தியாகிய மறுமையும் உங்கள் அருட்கொடைகளிலிருந்து உள்ளதாகும்.
(பாதுகாக்கப்பட்ட பலகையாகிய) லவ்ஹுல் மஹ்ஃபூழில் உள்ள ஞானம் உங்கள் ஞானத்தின் சிறு பகுதிதான்!”
இது அந்த வரிகளின் நேரடிப் பொருள். திருக்குர்ஆனுடன் ஓரளவு தொடர்பு வைத்திருக்கின்ற ஒரு முஸ்லிம் இந்த வரிகளின் பொருளைப் பார்த்ததுமே புர்தாவின் இலட்சணத்தை எளிதில் புரிந்து கொண்டு விடலாம். இதில் முதல் வரியை திருக்குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் நாம் அலசுவோம்.
மேற்கூறிய கவிதை வரிகளில் மூன்று செய்திகளைக் கூறுகிறார்.
அ. இந்த உலகம் நபி(ஸல்) அவர்களின் அருட்கொடை என்கிறார்.
ஆ. இவ்வுலகம் மட்டுமல்ல! மறு உலகமும் நபி(ஸல்) அவர்களின் அருட்கொடை என்கிறார்.
இ. லவ்ஹுல் மஹ்பூலில் உள்ளவைகள் நபி(ஸல்) அவர்களின் ஞானத்தில் ஒரு பகுதிதான் என்கிறார். இம்மூன்றையும் ஒவ்வொன்றாக நாம் ஆராய்வோம். அவர் முதன் முதலில் குறிப்பிடுகின்ற “இவ்வுலகம் நபி(ஸல்) அவர்களின் அருட்கொடை” என்ற நச்சுக் கருத்து குர்ஆனின் எத்தனை வசனங்களுடன்மோதிப் பார்க்கின்றது. எத்தனை வசனங்களைப் பொய்ப்படுத்துகின்றது; நபி(ஸல்) அவர்களின் வாழ்வுக்கும், வாக்குக்கும் எவ்வளவு முரண்பட்டு நிற்கிறது! என்பதைக் காண்போம்.
இவ்வுலகம் அல்லாஹ்வின் அருட்கொடையே!
இந்த உலகம் தனது அருட்கொடைதான். அதில் எவருக்கும் பங்கில்லை என்று அல்லாஹ் கூறுகின்ற வசனங்களில் சிலதை பார்ப்போம்.
“இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த அருட்கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.” (அல்குர்ஆன் 2 : 47,122)
“அருட்கொடை எல்லாம் நிச்சயம் அல்லாஹ்வின் கையிலேயே இருக்கிறது. தான் விரும்பியவர்களுக்கு அதனை அவன் அளிக்கிறான்”. (அல்குர்ஆன் 57 : 29, 3 : 73)
எல்லா அருட்கொடைகளும் தனக்கே உரியது என்று அல்லாஹ் கூறுகிறான். கவிஞர் பூசிரி இந்த உலகமும், மறு உலகமும் நபி(ஸல்) அவர்களின் அருட்கொடை என்கிறார். நபி(ஸல்) அவர்கள் எந்த கொள்கையை நிலைநாட்ட இறைத் தூதராகப்பட்டார்களே அந்த நோக்கத்தையே அவர்கள் பெயராலேயே ஆழப்புதைக்கிறார்.
“இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும். இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கிறான்” (அல்குர்ஆன் 54 : 5)
சுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் மகத்தான அருட்கொடைகளை வழங்கிய நேரத்தில், இது எனது இறைவனின் அருட்கொடையாகும்” (அல்குர்ஆன் 27 :40)
என்று கூறினார்கள். எந்த மனிதருக்கும் வழங்காத மகத்தான உலகப் பேறுகளை அவர்களுக்கு வழங்கி இருந்தான். இவற்றை எண்ணிப் பார்த்து இது எனது இறைவனின் அருட்கொடை” என்று கூறுகிறார்கள். மேலும் சுலைமான்(அலை) கூறுகிறார்கள்.
“இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக நான் நன்றி செலுத்தவும், நீ பொருத்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும் எனக்கு அருள் செய்வாயாக! (அல்குர்ஆன் 27 :19)
இவ்வாறு அல்லாஹ் கூறிக் கொண்டிருக்க இந்தக் கவிஞர் பூசிரி, பகிரங்கமாக மறுத்துக் கொண்டிருக்கிறார்.
யூனூஸ்(அலை) ஒரு தவறு செய்துவிட்ட போது, அவர்களை மீன் வயிற்றில் சிறை வைத்த அல்லாஹ் இறுதியில் அவர்களை மன்னிக்கிறான். அவர்களை மன்னிக்க வேண்டுமென்ற கட்டாயம் அவனுக்கில்லை. தன் அருட்கொடையினால் அவரை மன்னித்ததாகத்தான் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.
அவருடைய (யூனுஸுடைய) இறைவனிடமிருந்து அருட்கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். (அல்குர்ஆன் 68 : 49)
மிகச்சிறந்த நபியாக இருந்தும், அவரைக் கூட தனது அருட்கொடையினாலேயே மன்னித்ததாக அல்லாஹ் கூறுகிறான். எவ்வளவு உயர்ந்த அந்தஸ்துகளை சில நபிமார்களுக்கு அல்லாஹ் வழங்கினாலும், எவருக்கும் தனது ஆட்சியில் அவன் பங்கு கொடுக்க விரும்பமாட்டான் என்பதற்கு யூனுஸ் நபியின் வரலாறு போதுமானதாகும்.
அதிசயமான முறையில் – தன் வல்லமையினால் படைத்த ஈஸா(அலை) அவர்களை ஒரு சாரார் இவ்வாறு வரம்பு மீறிப் புகழ்வதைப்பற்றி அல்லாஹ் கடும் சொற்களைப் பிரயோகம் செய்கிறான்.
“மர்யமுடைய குமாரர் ஈஸாவையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்து விட நாடினால், அல்லாஹ்விடமிருந்து (காப்பாற்ற) எவர் அதிகாரம் பெற்றிருக்கிறார்? என்று (நபியே) நீர் கேளும்! வானங்களிலும், பூமியிலும் அவற்றிற்கு இடையே உள்ள பொருட்களின் மீதுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம், அவன் நாடியதைப் படைக்கிறான்”. (அல்குர்ஆன் 5 : 17)
ஈஸா நபிதான், நம்மை இரட்சிப்பவர், நம்மை மன்னிப்பவர் என்று சிலர் கூறியதற்கு அல்லாஹ், எவ்வளவு கோபப்பட்டு ஈஸாவைக் கூட நான் நினைத்தால் அழித்து விடுவேன். எவராலும் காப்பற்ற இயலாது என்று தன் ஆதிக்கத்தைப் பறை சாற்றுகின்றான். ஈஸாவை மட்டுமல்ல. உலகமாந்தர் அத்தனை பேரையும், எவரையும் விடாமல் நான் அழித்துவிட்டாலும் என்னை எவரும் தடுக்க இயலாது என்கிறான். பூசிரியோ, இந்த உலகமே நபி(ஸல்) அவர்களின் அருட்கொடை என்கிறாரா? அல்லாஹ் கூறுவதை நாம் எடுத்துக் கொள்வதா? இந்தக் கவிஞரின் கூற்றை ஏற்றுக் கொண்டு நிரந்தரமாக நரகத்தை அனுபவிப்பதா?
நாம் அளித்ததை உண்ணுங்கள்! நாம் அளித்தவற்றிலிருந்து செலவிடுங்கள்! என்று திருமறையில் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். உணவு, உடை, இன்னும் அனைத்துமே எனது அருட்கொடை என்று தெளிவாகக் அல்லாஹ் குறிப்பிடுகிறான். இந்தக் கருத்தை 2:172, 2:254, 8:3, 2:3, 16:75, 63:10, 30:28, 20:81, 7:160, 10:93, 13:22, 14:31, 16:56, 17:70, 22:35, 28:54, 32:16, 35:29, 42:38, 45:16 ஆகிய வசனங்களில் காணலாம்.
இத்தனை வசனங்களில் எனது அருட்கொடை, நான் அளித்தவை என்றெல்லாம் அல்லாஹ் கூறுவதை இந்தக் கவிஞர் பார்த்திருக்கக் கூடாதா? அல்லாஹ்வின் தனித்தன்மையை அவனது திருத்தூதருக்கு உரியது என்று எழுத எப்படித் துணிந்தார்?
உங்களுக்கு உணவு தருபவன் யார்? மழையை இறக்குபவன் யார்? என்றெல்லாம் நபி(ஸல்) அவர்களை அந்த மக்களிடம் கேட்கும்படி ஆணையிட்டு விட்டு ‘அல்லாஹ்வுக்கு உரியது’ என்று பதில் கூறும்படி உத்தரவிடுகிறான் இந்தக் கருத்துக்களை 10:31, 27:64, 34:24, 35:3, 67:21 இந்த வசனங்களில் காணலாம். இவ்வளவு வசனங்களையும் ஒரு மூலையில் போட்டு விட்டு “இவ்வுலக நபி(ஸல்) அவர்களின் அருட்கொடை என்று வாய் கூசாமல் பாடுகிறார் பூசிரி.
“(நபியே!) உம்மிடம் நாம் உணவைக் கேட்கவில்லை. நாம் உமக்கே உணவு தருகிறோம்” (அல்குர்ஆன் 20 :132) என்ற விசயத்தில் நபி(ஸல்) அவர்களுக்கே அல்லாஹ்தான் அருள் புரிவதாக குறிப்பிடுகின்றான்.
எந்த அருட்கொடைகளுக்கும் சொந்தம் கொண்டாட நபி(ஸல்) அவர்களையே அல்லாஹ் அனுமதிக்கவில்லை.
“அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 11:31)
இதே கருத்தை 6:50 வசனமும் குறிப்பிடுகின்றது.
“(நபியே!) நீர் கூறுவீராக! நாயனே! ஆட்சிகளெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகின்றாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். இன்னும் நீ நாடுவோரிடமிருந்து ஆட்சியை அகற்றியும் விடுகிறாய்! நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய் நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்! நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. (அல்குர்ஆன் 3 : 26)
அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடை என்று நபி(ஸல்) அவர்களைக் கூறும்படி உத்தரவிடுகிறான். அல்லாஹ்வுக்கும் அவனது திருத்தூதருக்கும் மாற்றமாக இவையெல்லாம் நபி(ஸல்) அவர்களின் அருட்கொடை என்கிறார் பூசிரி.
“அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர வேறு எவரும் நீக்க முடியாது” (அல்குர்ஆன் 10: 107, 6:17)
“நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்ய சக்தி பெறமாட்டேன்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 7 : 188, 10: 49)
ஃப இன்ன மின்ஜுதிகத் துன்யா என்ற கவிஞரின் கருத்தை தெளிவாக, ஆணித்தரமாக இந்தக் குர்ஆன் வசனங்கள் மறுத்துரைக்கின்றன.
நபி(ஸல்) அவர்களும் இந்தக் கவிஞரின் கூற்றுப்படி ஒருபோதும் சொன்னதில்லை. அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டுள்ளானோ அந்த போதனையின்படியே அவர்கள் வாழ்ந்து
காட்டியுள்ளார்கள்!
“இவ்வுலகமும், மறு உலகமும் நபியே! உங்கள் அருட்கொடைதான்” என்று பூசிரி பாடியிருப்பதை திருக்குர்ஆன் வெளிச்சத்தில் நாம் ஆராய்ந்தோம். “இவ்வுலகம் அல்லாஹ்வின் அருட்கொடைதான்” என்பதைக் கண்டோம். இனி ஹதீஸ்களின் வெளிச்சத்தில் இதை நாம் ஆராய்வோம்.
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குப் பின்பும், “இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவனில்லை! நீ தடுத்தவற்றைக் கொடுப்பவனுமில்லை! நீ விதித்ததை மாற்றியமைப்பவன் எவனுமில்லை” என்று கூறுவார்கள். அறிவிப்பவர் : முக்ரா இப்னுஷுயைா(ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம். அஹ்மத்
அனைத்தையும் கொடுப்பவன் அல்லாஹ்தான் என்பதை அடிக்கடி நபி(ஸல்) அவர்கள் ஓதிவந்ததன் மூலம் அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடை என்று உணர்த்துகிறார்கள்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்தபோது, நபி(ஸல்) அவர்களின் பேரப்பிள்ளை மரண தரவாயில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பதை அவர்களின் ஒரு மகள் சொல்லி அனுப்பினார். அதைக் கேட்ட நபி(ஸல்) “அவன் கொடுத்ததும் அவனுக்கே உரியது”, (நம்மிடமிருந்து) எடுத்துக் கொண்டதும் அவனுக்கே உரியது. ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட காலக்கெடு அவனிடமே உள்ளது”, என்று தன் மகளிடம் சொல்லும்படி கூறி அனுப்பினார்கள். (சுருக்கம்) அறிவிப்பவர் : உஸமா இப்னு ஸைது(ரழி), நூல் : புகாரி.
தன் பேரப்பிள்ளையின் மரண தருவாயில் கூட ‘இது அல்லாஹ்வின் அருட்கொடை’ என்று தன் மகளுக்கு போதனை செய்கிறார்கள், அந்த சோதனையான வேதனையான நேரத்திலும் கூட இந்த போதனையை நபி(ஸல்) அவர்கள் செய்யத் தவறவில்லை. ‘அந்தக் குழந்தை என்னுடைய அருட்கொடை’ என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லவில்லை. ஆனால் இந்த கவிஞர் “உலகம் நபி(ஸல்) அவர்களின் அருட்கொடை” என்கிறார். எந்த ரசூல்(ஸல்) அவர்களைப் புகழ்ந்து பாடுகிறாரே அந்த தூதரின் வாழ்க்கை வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்திருக்கக் கூடாதா?
தன் மனைவியரிடம் பாரபட்சமின்றி நடக்க வேண்டும் என்ற இறைக் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்கள் தன் மனைவியரிடம் மிகவும் நேர்மையாகவும், பாரபட்சமின்றி நடப்பார்கள். அப்படி இருந்தும் சில மனைவிகளிடம் இயல்பாகவே அன்பு மேலோங்கி விடும், எந்த மனிதரும் இந்த நிலையிலிருந்து தப்ப முடியாது. இது பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது,
“இறைவா! என் சக்திக்கு உட்பட்டவைகளில் நான் இவ்விதமாக பங்கிட்டு (நேர்மையாக நடந்து) கொள்கிறேன். என் கைவசத்தில் இல்லாமல், உன் கை வசத்தில் உள்ளவை பற்றி என்னை நீ இழிவு படுத்தி விடாதே!” என்று கூறுவார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள் : திர்மிதி, அபுதாவூத், நஸயீ, இப்னுமாஜா, தாரமீ
தன் சக்திக்கு உட்பட்டவை மிகவும் குறைவு என்பதையும், தன் இயலாமையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறார்கள் நபி(ஸல்) அவர்கள்.
நபி(ஸல்) அவர்களின் அருமை மகன் மரணமடைந்த போது, நபி(ஸல்) அவர்கள் தன்னையே இழந்தவர்களாக, கண்கள் கண்ணீர் சிந்த “கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன. உள்ளமும் வருத்தமுற்றுள்ளது. (எனினும்) நம் இறைவன் விரும்பாதவற்றை நாம் கூறிவிட மாட்டோம்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்
உலகமே நபி(ஸல்) அவர்களின் அருட்கொடை என்கிறார் புர்தாவின் ஆசிரியர். ஆனால் தூதரோ “என் மகன் கூட அல்லாஹ்வின் கொடை தான். அவன் விரும்பிய போது எடுத்துக் கொள்வான் இதில் கருத்துச் சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கின்றது? என்று உணர்த்துகின்றார்கள். மனிதன் நிதானம் தவறி எதையாவது சொல்லிவிடக் கூடிய நேரத்தில் கூட “அல்லாஹ்வின் அருட்கொடைதான் அனைத்தும்” என்பதை உணர்த்தத் தவறவில்லை.
இந்தக் கவிஞர் சாதாரண நிலையிலேயே நிதானம் தவறி அல்லாஹ்வுக்கு இணையாக அல்லாஹ்வின் திருத்தூதரை சித்தரிக்கிறார். கிறிஸ்தவர்கள் தங்கள் நபி விஷயத்தில் இவ்வாறு வரம்பு மீறியதால் தான் குர்ஆனிலும், நபிமொழியிலும் வன்மையாகக் கண்டிக்கபட்டார்கள்.
“மர்யமுடைய மகன் ஈஸாவை கிறிஸ்தவர்கள் வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்” (நபிமொழி) அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக்(ரழி) நூல்கள் : அபூதாவூத் பாடம் : ஜனாயிய்
கிறிஸ்தவர்களுக்கக் கொஞ்சமும் சளைக்காமல் இவர் வரம்பு மீறுகிறார். இதில் வேதனை என்னவென்றால் இவர் தெரிந்து கொண்டே வேண்டுமென்ற இவ்வாறு பாடி இருப்பதுதான். வரம்பு மீறிப் புகழக்கூடாது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டே வரம்பு மீறுகிறார். இதே புர்தாவில் அவரே கூறுகிறார்.
தஃமத்த அத்ஹுன்னஸாரா ஃபீ நபிய்யிஹிம் “கிறிஸ்தவர்கள் தங்கள் நபியின் விஷயத்தில் கூறியவற்றைத் தவிர்த்துக் கொள்!” என்று அவரே கூறுகிறார். இந்த வார்த்தையை அவரை நோக்கி நாம் கூறக் கூடிய நிலையில் இருக்கிறோம்.
எதைச் செய்யக் கூடாது என்று மற்றவர்களுக்குப் போதனை செய்கிறாரோ அந்தப் போதனைக்கு அவரே இலக்காகி நிற்கிறார்.
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தன் வாழ்நாளில் செய்துவந்த எண்ணற்ற பிரார்த்தனைகளும் கவிஞரின் இந்தக் கருத்தை மறுத்து விடுகின்றன.
“இறைவா! உன் அருட்கொடை (என்னை) விட்டு, விலகி விடுவதை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்” என்பது நபி(ஸல்) அவர்களின் துஆக்களில் உள்ளதாகும்.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி) நூல் : முஸ்லிம்
அருட்கொடைகள் அல்லாஹ்வுடைய புறத்திலிருந்து உள்ளவை என்று தெளிவாகவே கூறிவிட்டார்கள்.
“யா அல்லாஹ்” வறுமையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறென்.” என்று நபி(ஸல்) அவர்கள் சொல்பவர்களாக இருந்தனர்.” அறவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல்கள் : அபூதாவூத், நஸயீ
யா அல்லாஹ்! பசிக் கொடுமையை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்பதும் நபி(ஸல்) அவர்களின் துஆக்களில் உள்ளதாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல்கள் : நஸயீ, இப்னுமாஜா
“யா அல்லாஹ்! குஷ்ட நோய்கள், பைத்தியம் பெரும் வியாதிகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” (நபி(ஸல்) அவர்களின் துஆ.
அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள் : அபூதாவூத் , நஸயீ
இறைவா! நீ அதிகமாகத் தருவாயாக! குறைத்து விடாதே! என்பதும் நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனை.
அறிவிப்பவர் : உமர்(ரழி) நூல்கள் : திர்மிதீ, அஹ்மத்
தன்னுடைய வாழ்வுக்குத் தேவையானவற்றைக் கூட அல்லாஹ்விடமே கேட்டிருக்கிறார்கள். தனக்குரியதையே தன்னால் பெற்றுக் கொள்ள முடியாது என்று தன் இயலாமையை அல்லாஹ்விடம் வெளிப்படுத்துகிறார்கள். இந்தக் கவிஞர் இந்த உலகமே நபி(ஸல்) அவர்களின் அருட்கொடை என்கிறார்.
இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் இந்த நச்சுக்கருத்துக்கள் தான் புனிதமிக்கதாக கருதப்படுகின்றது. குர்ஆனும், அனுமதிக்காத -திருத்தூதர் (ஸல்) அவர்களும் அனுமதிக்காத – எந்த இமாம்களும் ஆதரிக்காத – மதரஸாக்களில் ஓதிக் கொடுக்கும் கிதாபுகளும் ஆதரிக்காத – இந்தப் பாடல்களை ஏன் சில மவ்லவிகள் ஆதரிக்கிறார்களோ?
தொடரும்.....
நன்றி: ரீட்இஸ்லாம்.நெட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக