முரண்பட்ட இரு செய்திகளை
இணைத்துத் தீர்வு காண்பதே சிறந்தது!
எழுதியவர்/பதிந்தவர்/உரை
மௌலவி M.T.M.ஹிஷாம் மதனீ
முரண்பாடு என்பது இரு விஷயங்கள் ஒன்றுக்கொன்று
எதிராக அமையும் நிலையினைக் குறிக்கும்.
பரிபாசை அடிப்படையில்
இப்பதத்தை நோக்கினால், “இரண்டு ஆதாரங்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு, சரியானதொரு தீர்மானத்தை எடுக்கமுடியாமல் போகும் நிலையினைத்
தோற்றுவிப்பது” என்று அமையும்.
முரண்பாடுகளை எவ்வாறு
கண்டறிவது?
பொதுவாக, இரு செய்திகளுக்கு மத்தியில் உண்டாகும் முரண்பாடுகள் அனைத்தும் உண்மையான
முரண்பாடுகளாகக் கருதப்படுவதில்லை. மாற்றமாக, அதற்கென்று தனியான சில
நிபந்தனைகள் உள்ளன. அந்நிபந்தனைகள் எம்முரண்பாட்டில் தாக்கம் செலுத்துகின்றனவோ
அதனையே உண்மையான முரண்பாடாகக் கருதமுடியும். அவையாவன:
1. இரு செய்திகளும் குறித்த ஒரு விஷயத்தில்
ஒன்றுக்கொன்று முரணானதாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு செய்தி குறித்த
விடயத்தைக் கூடும் என்று மற்றைய செய்தி கூடாது என்றும் கூறக்கூடியதாக இருக்க
வேண்டும். ஏனெனில், இரு செய்திகளும் ஒரே வகையான தீர்வுகளை
முன்வைக்கும் போது அதனை முரண்பாடாகக் கருத முடியாது.
2. இரு செய்திகளும் தரத்தில் சமமானதாக
இருக்கவேண்டும். ஏனெனில், இரண்டுக்கும் மத்தியில் தரத்தில் வேறுபாடு
காணப்படும் போது அங்கு மிகவும் தரமானதே தேர்ந்தெடுக்கப்படும்.
3. இரு செய்திகளும் ஒரே காலத்தில் இடம்பெற்ற
விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். காலம் வேறுபடும் போது அங்கு முரண்பாட்டிக்கான
சந்தர்ப்பம் அற்றுப் போகின்றது. உதாரணமாக அன்னை ஆயிஷா (ரழி) மற்றும் அன்னை உம்மு
ஸல்மா (ரழி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள். ” நபியவர்கள் நோன்பாளியாக
இருக்கும் நிலையில் குளிப்பு கடமையானவராக காலைப்பொழுதை அடையவார்கள்.” (புகாரி, முஸ்லிம், அபூதாவுத்)
இச்செய்திக்கு மாற்றமாக
அபூஹுரைரா (ரழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்: ” யார் குளிப்பு கடமையானவராக காலைப்பொழுதை அடைகின்றாரோ, அவருடைய நோன்பு செல்லுபடியற்றதாகும்.” (புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, அஹ்மத், முஅத்தா)
மேலே குறிப்பிடப்பட்ட இரு
செய்திகளும் ஒன்றுக்கொன்று முரண்படுவதைக் காண்கின்றோம். இம்முரண்பாட்டின் உண்மையான
வடிவினைப்பற்றி அல் ஹத்தாபி (ரஹ்) பின்வருமாறு கூறுகின்றார்: “நான் இவ்விரு செய்திகளைப்பற்றிக் கேட்ட விளக்கங்களில்
மிகச்சிறந்தாகக் கருதுவது, அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தி
நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்பகாலத்திலும், நபியவர்களின் மனைவிமார்
அறிவிக்கும் செய்திகள் ரமழானுடைய இரவில் உடலுறவு கொள்ள அனுமதி
அளிக்கப்பட்டதிற்குப் பிறகும் அறிவிக்கப்பட்டனவாகும். ஏனெனில், நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ரமழானுடைய இரவுகளில் உடலுறவு
கொள்வது தடுக்கப்பட்டிருந்தது. பின்பு அத்தடை நீக்கப்பட்டது” என்கிறார். (மஆலிமுஸ்ஸுனன்)
எனவே மேற்குறிப்பிடப்பட்ட
விளக்கத்தின் மூலம் இரு செய்திகளும் ஒரே காலத்தில் இடம்பெறவில்லை என்பதை தெளிவாகப்
புரிந்துகொள்ளலாம். இதனால் இது விஷயத்தில் முரண்பாடு இருப்பதாகக் கூற முடியாது.
4. இரு செய்திகளினதும் முரண்பாடு ஒரே விஷயத்திலாக
இருக்க வேண்டும். ஏனெனில், இரு செய்திகளும் வௌ;வேறு அம்சங்களைப்
பற்றிப்பேசும் போது அங்கு முரண்பாடு காண முடியாது.
உதாரணமாக அல்லாஹ்
கூறுகின்றான்: “உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளைநிலங்கள். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு வாருங்கள்.” (2:223)
இவ்வசனம் திருமணமான பெண்
அவளது கணவனுக்கு ஹலாலானவள் என்று கூறுகின்றது. ஆனால் இவ்வனுமதி அவளது தாயை
அணுகுவது ஹராம் என்ற செய்தியுடன் முரண்படாது (பார்க்க: 4:23) காரணம், இவ்வசனம் யார் யாரைத் திருமணம் செய்ய முடியாது
என்பதைக் கூறுகின்றது. எனவே,
இவ்விரு விடயங்களும் இரு
இடங்களில் அமையப்பெற்று வௌ;வேறு தகவல்களைக் கூறுவதால் இதனை முரண்பாடாகக்
கொள்ள முடியாது.
மேற்குறிப்பிடப்பட்ட
நிபந்தனைகளுக்குற்பட்ட விதத்தில் இரு செய்திகளை முரண்பாடாக நாம் கண்டால்
இரண்டையும் சேர்த்துத் தீர்வு காண்பதா? அல்லது அவற்றில் ஒன்றைக்
கொண்டு மாத்திரம் சுருக்கிக் கொள்வதா? என்பதே எமது கட்டுரையில்
ஆராய இருக்கும் அம்சமாகும்.
இக்கேள்விக்கு பதிலளிக்க
முற்பட்ட அறிஞர்களின் கூற்றுக்களிலிருந்து இருவிதமான முடிவுகளைப் பெற முடிகின்றது.
அவர்களுள் முதலாவது சாரார்
கூறுகையில்: “நாம் அவ்விரு செய்திகளையும் ஏதாவதொரு வழிமுறை
மூலம் ஒன்றிணைத்துத் தீர்வு காணவேண்டும். அவ்வாறு தீர்வுகாண முடியாத போது ஏதாவதொரு
வழிமுறை மூலம் அவற்றில் ஒன்றைக்கொண்டு மாத்திரம் செயற்படுத்த வேண்டும். அப்படியும்
முடியாத போது இரண்டு செய்திகளும் அறிவிக்கப்பட்ட காலத்தைப் பார்க்கவேண்டும். அதன்
போது அவ்விரண்டும் வௌ;வேறு காலங்களில் அறிவிக்கப்பட்டதாகக் கண்டால்
இறுதியாக அறிவிக்கப்பட்ட செய்தியைக் கொண்டு செயல்படுத்த வேண்டும். அதற்கும்
முடியாத போது குறித்த அவ்விரு செய்திகளையும் விட்டுவிட்டு தீர்வுகாண முற்பட்ட
விஷயத்திற்கு அடிப்படையில் அனுமதியுள்ளது என்ற முடிவை வழங்க வேண்டும். காரணம் இரு
முரண்பட்ட செய்திகளில் சரியானதொரு தீர்வைக்காண முடியாத போது அவ்விரண்டும்
அடிப்படையில் செல்லுபடியற்றது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்” இக்கருத்தை பெரும்பான்மையான அறிஞர்கள் கூறுகின்றார்கள். மேலும், இக்கருத்துக்கு அவர்கள் பின்வரும் விடயங்களை ஆதாரங்களாக
முன்வைக்கின்றார்கள்.
1. இரு முரண்பட்ட செய்திகளும் உறுதியானதாக
இருக்குமானால் அவை இரண்டைக்கொண்டும் தீர்வு காண்பதே முறையானதாகும். மாற்றமாக ஏதாவது
ஒரு வழிமுறை மூலம் இரண்டைக் கொண்டும் தீர்வுகாண முடியுமான வேளையில் ஒன்றோடு
மாத்திரம் சுருக்கிக் கொள்வதோ அல்லது இரண்டையும் ஒதுக்கி விடுவதோ முறையற்ற
செயலாகும்.
2. முரண்பட்ட இரு செய்திகளையும் ஒன்றிணைத்து தீர்வு
காண்பது மிகச் சிறந்தது என்ற கருத்தை வலுப்படுத்தும் வித்தில் இப்னு அப்பாஸ் (ரழி)
அவர்களின் பின்வரும் செயல்முறை அமைந்துள்ளது.
இப்னு அப்பாஸ் (ரழி)
அவர்கள் அல்குர்ஆனிய வசனங்களான : “அந்நாளில் மனிதர்களோ ஜின்னோ
தம் பாவத்தைப் பற்றி (வாய் மொழியாக)க் கேட்கப்படமாட்டார்கள்.” (அர்ரஹ்மான்: 39)
“ஆகவே உமதிரட்சகன் மீது அவர்கள் அனைவரையும்
நிச்சயமாக நாம் (விசாரணை செய்து) கேட்போம்.” (அல்ஹிஜ்ர்: 92) ஆகிய வசனங்களை ஓதிவிட்டு பின்வருமாறு கூறினார்கள்: “ஓர் இடத்தில் அல்லாஹுத்தஆலா விசாரிப்பதாகவும் மற்றோர் இடத்தில்
விசாரிக்கமாட்டான் என்றும் கூறுகின்றான். எனவே, அவை இரண்டையும் இணைத்து
இவ்வாறு கூறமுடியும், “அல்லாஹுத்தஆலா மறுமை நாளில் மக்களிடத்தில் நீங்கள்
இதை இதையெல்லாம் செய்தீர்களா?
என்று செயல்களைக்
குறிப்பிட்டு கேட்கமாட்டான்;.
ஏனெனில், அவன் அவர்களை விட இது விடயத்தில் நன்கறிந்தவனாகவுள்ளான். எனவே, அவர்களை நோக்கி ஏன் நீங்கள் இப்படி இப்படியெல்லாம் செய்தீர்கள் என்றே
விசாரிப்பான்”" என்று அமைகிறது அவரது விளக்கம். (இப்னு கஸீர், அழ்வாஉல் பயான்)
எனவே, இங்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இரு வசனங்களையும் இணைத்தே தீர்வு
கண்டுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.
3. இரு செய்திகளையும் இணைத்துத் தீர்வு காண்பதின்
மூலம் குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. மேலும், இரு செய்திகளையும்
அமுல்படுத்தியவர்களாகவும் ஆக முடியும். மாற்றமாக இரண்டில் ஒன்றைக் கொண்டு
செயல்படுத்துவதினால் எப்போதும் ஒன்று கேள்விக்குறியாக இருந்து கொண்டே இருக்கும்.
அத்தோடு ஒரு செய்தி மாத்திரம் தான் அமுல்படுத்தப்படும். இவ்வாறான நிலையையே
இதற்கடுத்த படித்தரங்களும் ஏற்படுத்துகின்றன.
இரண்டாவது சாரார் கூறும்
போது: “இரு செய்திகள் முரண்பட்டால், முதலாவது அவ்விரு செய்திகளும் அறிவிக்கப்பட்ட காலத்தைப் பார்க்க
வேண்டும். அவ்வாறு பார்க்கும்போது காலத்தில் வேறுபாடு இருந்தால் காலத்தில்
பிந்தியதைக் கொண்டு செயற்படுத்த வேண்டும். அதற்கும் முடியாதபோது அவைகளில்
ஏதாவதொன்றைக்கொண்டு சுருக்கிக்கொள்ள வேண்டும். அதற்கும் முடியாதபோது அவை இரண்டையும்
இணைத்து ஒரு தீர்வுக்கு வரவேண்டும். அதற்கும் முடியாதபோது அவை இரண்டையும் விட்டுவிட்டு
அதற்குக் கீழ்தரத்தில் பதிவாகியுள்ள செய்திகளைக் கொண்டு தீர்வுகாண வேண்டும்.” இக்கருத்தை ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் கூறுகின்றார்கள். இதற்கு
பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள்.
1. ஸஹாபர்ககளிடத்தில் இரண்டு ஹதீஸ்கள் ஒன்றோடொன்று
முரண்பட்டால் அவற்றில் ஒன்றைக் கொண்டு மாத்திரம் தீர்வு காணும் வழிமுறையே
இருந்தது. உதாரணமாக நபியவர்கள் கூறினார்கள்: “ஆணுருப்பும் பெண்ணுருப்பும்
சந்தித்தால் குளிப்பு கடமையாகும்.” இந்த ஹதீஸிக்கு மாற்றமாகப்
பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது. “நிச்சயாமாக நீர் -இந்திரியம்- வெளியானால்
குளிப்புக்கடமையாகின்றது.” ஸஹாபாக்களைப் பொருத்தளவில் அவர்கள் முதலாவது
ஹதீஸான ஆயிஷா (ரழி) அவர்களின் ஹதீஸைத் தெரிவு செய்துள்ளார்கள். இதன்மூலம் இவ்விரு
ஹதீஸ்களையும் இணைத்து தீர்வு காண்பதைவிட ஏதாவதொன்றை மாத்திரம் தெரிவுசெய்து
செயல்படுத்துவதே சிறந்ததாகும் என்பது புலனாகின்றது.
இவ்வாதத்திற்கு பதிலளிக்க
முற்பட்ட அறிஞர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். “மேற்குறிப்பிடப்பட்ட
உதாரணம் இரண்டு முரணான செய்திகள் ஒன்றிணைக்கப்பட்டு தீர்வு காணப்பட முடியாத வேளையில்
அவற்றில் ஒன்றைக் கொண்டு தீர்வு காண்பதற்கு சிறந்த உதாரணமாகும். இதில் எக்கருத்து
வேறுபாடும் கிடையாது. மாற்றமாக,
இப்படியான சந்தர்ப்பங்களில்
எவ்வழிமுறை முற்படுத்தப்பட வேண்டும் என்பதே கருத்து வேறுபாட்டிற்குரிய விடயமாகும்.
மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரம் ஒருபோதும் இக்கருத்துவேறுபாட்டிற்கு தீர்வாக அமையாது
என்பதே எமது கருத்தாகும்” என்கிறார்கள்.
2. ஆய்வாளர்களின் கருத்துக்களில் இருந்து, “இரு முரண்பட்ட செய்திகளுக்கு மத்தியில் சரியான தீர்வைக் காண்பதற்கு
அவை இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும், மற்றையதை விட்டுவிட வேண்டும், அவற்றிற்கு மத்தியில் சமநிலை கிடையாது” என்பதைப் புரிந்து
கொள்ளலாம்.
ஆயினும், மேற்குறிப்பிட்ட வழிமுறைமூலம் இரு செய்திகளுக்கு மத்தியிலுள்ள
முரண்பாடு நீங்கிவிடுகின்றது. ஆனால், ஒரு செய்தி
செயலற்றுப்போகின்றது. மாற்றமாக,
இரண்டையும் ஒன்றிணைத்துத்
தீர்;வுகாணும் வழிமுறையை முற்படுத்தும் போது இரண்டும்
செயல்படுத்தப்படுகின்றன. அதுவே மிகவும் பொருத்தமானதும் கூட.
எனவே, மேலே குறிப்பிடப்பட்ட வாதப்பிரதிவாதங்களிலிருந்து முதலாவது சாராரின்
கருத்தே ஏற்புடையதாக இருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். மேலும், அவர்கள் முன்வைத்த ஆதாரங்கள் மிகவும் பலமானவையாகவும், கூடுதலான அநுகூலங்களைப் பெற்றுத்தரக் கூடியவையாகவும் இருக்கின்றன.
இரு ஆதாரங்களை
ஒன்றிணைத்துத் தீர்வு காண்பதற்கான நிபந்தனைகள்
மேற்குறிப்பிடப்பட்ட
முடிவுக்கு வந்த நாம் அவ்வழிமுறையை செயற்படுத்துவதற்கான நிபந்தனைகளைக் காண்போம்.
1. இரு முரண்பட்ட ஆதாரங்களும் உறுதியானதும், ஆதாரபூர்வமானதுமாக இருக்கவேண்டும். ஏனெனில், பலவீனமான இரு செய்திகளை ஒன்றிணைத்துத் தீர்வுகாண முடியாது. காரணம், அவை இரண்டும் அடிப்படையில் ஆதாரம் கிடையாது.
2. இரு முரண்பட்ட செய்திகளும் ஒரே தரத்தை உடையதாக
இருக்கவேண்டும். தரத்தில் ஏற்றத்தாழ்வுள்ள இரு ஆதாரங்களைக் கொண்டு தீர்வுகாண
முடியாது.
3. இரு ஆதாரங்களை ஒன்றிணைத்துத் தீர்வுகாணும் போது
பின்வரும் அம்சங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அறபு மொழிவழக்கில்
ஏற்படுத்திவைக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு முரணாக அமையக்கூடாது.
மார்க்கத்தில் ஏற்றுக்
கொள்ளப்பட்ட வழக்காறுகள் மற்றும் அடிப்படை அம்சங்களுக்கு முரணாக அமையக்கூடாது.
அல்லாஹ்வின் சொல்லுக்கு
பங்கமேற்படுத்தும் விதத்தில் வசனப்போக்குகள் அமையக்கூடாது.
4. இப்பணியில் ஈடுபடுபவர்கள் சட்ட மூலாதாரங்களை ஆய்வு
செய்து தீர்வுகாணத் தகுதியானவர்களாக இருக்கவேண்டும்.
5. இவ்வழிமுறை மூலம் எடுக்கப்பட்ட தீர்வுகள்
பின்வரும் தன்மைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
குறித்த விடயம்
மார்க்கமாக்கப்பட்டதற்குரிய எதார்த்தத்தைத் தெளிவுபடுத்தக்கூடியதாக இருக்க
வேண்டும். மாற்றமாக, அதனைவிட்டும் முற்றாக வெளியேறி சொந்த
வியாக்கியானங்களைச் செய்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எடுக்கப்பட்ட தீர்மானம்
மார்க்க சட்டதிட்டங்களில் கருத்தொருமித்த அம்சங்களை சீர்குலைக்கக்கூடியதாக
அமையக்கூடாது. அல்லது அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவில் உறுதியாகக் கூறப்பட்ட விடயங்களுக்கு
முரணானதாக அமையக்கூடாது. மேலும்,
மார்க்கத்தில் அவசியமெனக்
கருதப்பட்ட விடயங்களுக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் இருக்கக் கூடாது.
இவ்வாறான அம்சங்களைத்
தழுவிப் பெறப்பட்ட தீர்மானங்கள் நிச்சயமாக நிறைவானதாகவும், காத்திரமானதாகவும் இருக்குமென்பதில் ஐயமில்லை. எனவே, மேற்குறிப்பிடப்பட்ட விஷயங்கள்அனைத்தையும் கருத்திற்கொண்டு இப்படியான
சந்தர்ப்பங்களில் இவ்வாறான வழிமுறைகளைப் பின்பற்றி சரியான தீர்மானங்களை
எடுப்பதற்கு அல்லாஹ் எமக்கு அருள்புரிவானாக. அல்லாஹ் மிக அறிந்தவன்.
நன்றி: இஸ்லாம்கல்வி.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக