ஞாயிறு, 16 செப்டம்பர், 2012



இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம் - 4
P. ஜைனுல் ஆப்தீன் அவர்களின் நூலிலிருந்து 


இறைத் தூதராக இருந்தாலும் எந்த மனிதரும் அறிந்து கொள்ள முடியாத ஐந்து விசயங்கள் உள்ளன. எந்தக் கருவறைகளில் எத்தனை குழந்தைகள் உண்டாகும்? ஒரு கருவறையில் குழந்தை உருவாகுமா? ஆகாதா என்பதும் அவற்றில் ஒன்றாகும்.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன். (திருக்குர்ஆன் 31:34)

தனது நூறு மனைவிகளும் கருவுறுவார்கள் என்று சுலைமான் நபியவர்கள் நிச்சயம் கூறியிருக்க முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விசயத்தில் எந்த இறைத்தூதரும் மூக்கை நுழைக்க மாட்டார்கள்.

'நூறு மனைவிகளும் கருவுறுவார்கள் என்று இறைவன் சுலைமான் நபிக்கு அறிவித்துக் கொடுத்திருக்கலாம் அல்லவா?' என்று சிலர் விளக்கம் கூறுவது கேலிக் கூத்தாகும். இறைவன் அறிவித்துக் கொடுத்திருந்தால் நூறு மனைவிகளும் நூறு ஆண் குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு நடக்காததால் சுலைமான் நபி தன்னிச்சையாகத் தான் இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்ற கருத்தைத் தான் மேற்கண்ட ஹதீஸிலிருந்து பெற முடியும்.

இறைவன் அறிவித்துக் கொடுக்காத இந்த விசயம் குறித்து எந்த நபியும் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள்.

ஜக்கரிய்யா நபி அவர்களுக்கு தள்ளாத வயது வரை குழந்தை இல்லை. அல்லாஹ்விடம் அவர்கள் செய்து வந்த பிரார்த்தனையை ஏற்று அவர்களுக்கு ஒரு குழந்தையை அளிப்பதாக இறைவன் தெரிவிக்கிறான். தனது மனைவி கருவுற்று விட்டார் என்றால் அதை உடனடியாக அறிந்து கொள்ள அவர்கள் ஓர் அடையாளத்தைக் கேட்டார்கள். மூன்று நாட்கள் உனக்குப் பேச முடியாமல் போவது தான் அடையாளம் என்று இறைவன் கூறினான். 'ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப் பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத் தியதில்லை' (என இறைவன் கூறினான்) 'என் இறைவா! எனக்கு எப்படி புதல்வன் பிறப்பான்? என் மனைவியோ பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். நானோ முதுமையின் இறுதியை அடைந்து விட்டேன்' என்று அவர் கூறினார். 'அப்படித் தான். அது எனக்கு எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் உம்மைப் படைத்தேன்' என்று உமது இறைவன் கூறுகிறான் என்றார். 'என் இறைவா! எனக்கொரு அடையாளத்தைக் காட்டு!' என்று அவர் கேட்டார். 'குறைபாடற்ற நிலையில் நீர் இருந்தும் மூன்று இரவுகள் மனிதர்களிடம் நீர் பேச மாட்டீர் என்பதே உமக்கு அடையாளம்' என்று அவன் கூறினான். (திருக்குர்ஆன் 19:7, 8, 9, 10)

தமது மனைவியின் கருவறையில் குழந்தை உருவான பின்னரும் கூட அதை ஜக்கரியா நபியால் அறிந்து கொள்ள முடியவில்லை என்று குர்ஆன் கூறும் போது நூறு மனைவியரும் குழந்தை பெற்றெடுப்பார்கள் என்று சுலைமான் நபி கூறியிருக்க முடியாது. அவ்வாறு கூற அவர்களுக்கு அதிகாரம் கிடையாது.

நூறு மனைவிகளும் குழந்தை பெறுவார்கள் என்பதை மட்டும் சுலைமான் நபி கூறவில்லை. ஆண் குழந்தையைத் தான் பெற்றெடுப்பார்கள் என்று அடித்துக் கூறுகிறார்கள். அந்த நூறு பேரும் வளர்ந்து பெரியவர்களாகி நல்லடியார்களாக வாழ்ந்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் என்றெல்லாம் எதிர் காலம் பற்றி பல விசயங்களை அவர்கள் கூறியதாக அந்த ஹதீஸ் கூறுகிறது.

அவர்கள் கூறியவாறு எதுவுமே நடக்காததால் சுயமாகத் தான் அவர்கள் இவ்வாறு கூறியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படியெல்லாம் சுலைமான் நபியும் கூற மாட்டார்கள். சுலைமான் நபி கூறியதாக நபிகள் நாயகமும் கூறியிருக்க மாட்டார்கள்.

மேலும் இன்ஷா அல்லாஹ்' என்று கூறுமாறு வானவர் சுட்டிக் காட்டிய பிறகும் அவர்கள் கூறவில்லை என்பது ஏற்கும்படி இல்லை.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட இன்ஷா அல்லாஹ் கூற மறந்து விட்டால் யாராவது சுட்டிக் காட்டினால் உடனே திருத்திக் கொள்கிறோம். ஒரு வானவர் நினைவூட்டிய பின்னரும் சுலைமான் நபி அதைச் செய்யவில்லை என்பது அவர்களின் தகுதிக்கு ஏற்புடையதாக இல்லை.

எனவே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கும் வகையில் இது அமைந்திருப்பதால் இதை அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களாக இருந்த போதும் இதை நாம் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும். இதை உண்மை என நம்பினால் குர்ஆனின் பல வசனங்களை நாம் மறுத்தவர்களாகி விடுவோம்.

இது போக அந்த அறிவிப்பில் காணப்படும் முரண்பாடுகள் இந்த முடிவை மேலும் உறுதிப்படுத்துகிறது.

நூறு பெண்களுடன் இன்றிரவு உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி 5242

எழுபது பெண்களுடன் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி 3424

தொண்ணூறு பெண்களுடன் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி 6639, 6720

அறுபது மனைவியரிடம் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி 7469

ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன.

இந்த அனைத்து ஹதீஸ்களும் அபூஹுரைரா (ரலி) வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. 60, 70, 90, 100 என்று முரண்பட்ட எண்ணிக்கை இதில் சந்தேகத்தை அதிகமாக்குகிறது.

'நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது' என்று காரணம் கூறி இதை உண்மை என்று நம்பினால் சுலைமான் நபி அவர்களின் தகுதிக்கு அது குறைவை ஏற்படுத்தும். திருக்குர்ஆனின் பல வசனங்களுடனும், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுடனும் மோதும் என்பதைக் கவனத்தில் கொண்டு நம்மால் கண்டு பிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை இதில் இருக்கலாம் என்று கருதி இதை நிராகரித்து விட வேண்டும்.

மற்றொரு ஹதீஸையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

உயிரைக் கைப்பற்றும் வானவர் மூஸா நபியிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்ததும் மூஸா நபியவர்கள் அவரை அறைந்து விட்டார். உடனே வானவர் இறைவனிடம் சென்று 'மரணத்தை விரும்பாத அடியாரிடம் என்னை நீ அனுப்பி விட்டாயே?' என்று முறையிட்டார். அதற்கு இறைவன் 'நீ மீண்டும் அவரிடம் செல்! காளை மாட்டின் முதுகின் மேல் அவரது கையை வைக்கச் சொல்! அவரது கையின் அடியில் உள்ள ஒவ்வொரு முடிக்கும் ஒரு வருடம் என்ற அளவில் வாழ் நாள் கொடுக்கப்பட்டதாகக் கூறு!' என்று சொல்லியனுப்பினான். அவர் வந்து மூஸா நபியிடம் இதைத் தெரிவித்தார். அதற்கு மூஸா நபியவர்கள் 'இறைவா! அதன் பின்னர் என்ன?' என்று கேட்டார். 'அதன் பின்னர் மரணம் தான்' என்று இறைவன் கூறினான். 'அப்படியானால் இப்போதே மரணிக்க நான் தயார்' என்று மூஸா (அலை) கூறினார்.

இது அபூஹுரைரா (ரலி)யின் கூற்றாகவும், நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகவும் புகாரி 3407 வது ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரியில் இது பதிவு செய்யப்பட்டதாலும், இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருப்பதாலும் இதை அப்படியே ஏற்க இயலுமா?

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டுக்கோ, திருக்குர்ஆன் வசனங்களுக்கோ முரணாக இல்லாவிட்டால் இதை ஏற்றுத் தான் ஆக வேண்டும்.

இந்த ஹதீஸைப் பொருத்த வரை திருக்குர்ஆனின் ஏராளமான வசனங்களுடன் முரண்பட்டு நிற்கிறது.

ஒரு வானவர் இறைக் கட்டளையை நிறைவேற்றாமல் தோல்வியுடன் திரும்பிச் சென்றார் என்று இதில் கூறப்படு கிறது. இது சரி தானா என்பதை முதலில் ஆராய்வோம்.

வானவர்களுக்கு என்று சில இலக்கணங்கள் உள்ளதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர். (திருக்குர்ஆன் 16:49, 50)

'அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்' எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள். (திருக்குர்ஆன் 21:26,27)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள். (திருக்குர்ஆன் 66:6)

இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பினானோ அதைச் செய்து முடிப்பது தான் வானவர்களின் இலக்கணம். மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற ஒரு வானவரை இறைவன் அனுப்பினால் அவர் அந்த வேலையைச் செய்யாமல் திரும்ப மாட்டார். இந்த இலக்கணத்திற்கு எதிரான கருத்தை அந்த ஹதீஸ் கூறுகிறது.

மேலும் நபிமார்கள் இறைவன் அனுப்பி வைத்த தூதரை அடித்து விரட்டுவார்களா? இறைவனின் ஏற்பாட்டுக்கு செவி சாய்க்க மறுப்பார்களா என்றால் நிச்சயம் அப்படிச் செய்ய மாட்டார்கள்.

மிகச் சிறந்த இறைத் தூதர்களில் ஒருவரான மூஸா நபியவர்கள் இந்த ஹதீஸில் கூறப்பட்டவாறு நடந்திருப் பார்களா? என்பதும் சிந்தித்துப் பார்க்க வேண்டியதாகும்.

'இவ்வுலக வாழ்க்கை அற்பமானது. மறுமை வாழ்வு தான் நிலையானது' என்பது எல்லா இறைத் தூதர்களின் போதனையாக இருந்தது. தமக்கு மரணம் வந்து விட்டது என்பதை மூஸா நபியவர்கள் அறிந்து கொண்டால் அதற்கு தம்மை தயார் படுத்திக் கொள்வார்களே தவிர அதை எதிர்த்து எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டார்கள்.

மேலும் வானவர்கள் சுயமாக எந்தக் காரியத்திலும் இறங்க மாட்டார்கள். அல்லாஹ் இட்ட கட்டளையைத் தான் செய்வார்கள் என்பது நமக்கே தெரியும் போது மூஸா நபிக்கு இந்த உண்மை தெரியாமல் இருக்க முடியாது.

'இறைவனால் அனுப்பப்பட்ட தூதரை அறைவது இறைவனை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்குச் சமமாகும்' என்பதைக் கூட மூஸா நபியவர்கள் அறிந்திருக்கவில்லை என்ற கருத்திலமைந்த ஹதீஸை நாம் எவ்வாறு நம்ப இயலும்?

அப்படியே மூஸா நபியவர்கள் வானவரை அறைந்தால் இறைவன் பணிந்து கெஞ்சிக் கொண்டிருப்பானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

யூனுஸ் நபியவர்கள் இறைவனுடன் கோபித்துக் கொண்டு போனதற்காக அவரை எவ்வாறு நடத்தினான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். 'உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்' என்று இருள் களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்த னையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம். (திருக்குர்ஆன் 21:86,87)

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான் (திருக்குர்ஆன் 68:49)

மூஸா நபி இவ்வாறு நடந்திருந்தால் இது போன்ற கடும் நடவடிக்கை எடுப்பது தான் இறைவனது தனித்தன்மை. தனது பெருமை விசயத்தில் அவன் சமரசம் செய்து கொண்டதே இல்லை. இறைவனைப் பொருத்த வரை அவனது கௌரவம் தான் அவனுக்கு முதன்மையானதாகும்.

இந்த அடிப்படையையும் இந்த ஹதீஸ் அறவே தகர்த்து எறிவதால் இந்த ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

இது போல் அமைந்த மற்றொரு ஹதீஸையும் இறுதியாக நினைவு படுத்துகிறோம்.

ஸாம் எனும் இளைஞர் அபூஹுதைபா (ர) வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தமது மனைவியுடன் ஸாம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபூஹுதைபாவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. இது பற்றி அபூஹுதைபாவின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது 'ஸாமுக்குப் பாலூட்டு! இதனால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்ம் 2638, 2636, 2639, 2640 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

அன்னிய இளைஞர் ஒருவருக்குப் பால் கொடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) நிச்சயம் கட்டளையிட்டிருக்க மாட்டார்கள். பால் ஊட்டுதல் என்பது இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தான் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியை ஏற்காது நாம் விட்டு வருகிறோம். நம்மால் கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை இந்த அறிவிப்பில் இருக்கலாம். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்கிறோம்.

இதை சரியானது என்று எவராவது வாதிட்டால் இன்றைக்கு இதனடிப்படையில் நடக்கலாம் என்று ஃபத்வா வழங்குவார்களா? நிச்சயம் வழங்க மாட்டார்கள்.

அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில ஹதீஸ்களின் கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராக உள்ளன. இது போன்ற ஹதீஸ்களை நம்பி இஸ்லாத்தின் அடிப்படையையும் குர்ஆன் வசனங்களையும் மறுக்கும் நிலை ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இதைக் குறிப்பிடுகிறோம்.

இது போல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டார்கள் என்று நம்பி மேலே நாம் எடுத்துக்காட்டிய அத்தனை வசனங்களையும் மறுப்பதை விட அந்த வசனங்களை ஏற்று அந்த ஹதீஸை ஏற்காது விட்டு விடுவது தான் சிறந்ததாகும்.

அந்தச் செய்தியில் எங்கோ தவறு ஏற்பட்டுள்ளது என்பதை இந்தச் செய்தி பலவிதமாக அறிவிக்கப்படுவதிலிருந்தே நாம் முடிவு செய்து விடலாம்.

சீப்பு, உதிர்ந்த முடிகள் ஆகியவற்றின் மூலம் சூனியம் செய்யப்பட்டு கிணற்றில் புதைக்கப்பட்டதாக இது குறித்த ஹதீஸ்களில் கூறப்படுகிறது.

முரண்பட்ட அறிவிப்புக்கள்

எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா என்று ஆயிஷா (ரலி) கேட்ட போது 'அப்புறப்படுத்தவில்லை; அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரியின் 3268, 5763, 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

'நபி(ஸல்) அவர்கள் உடனடியாக அக்கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தினார்கள்' என்று புகாரியின் 5765, 6063 வது ஹதீஸ்களின் கூறப்பட்டுள்ளது.

அப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் அறிவிப்பிலும் முரண்பாடு காணப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தியதாக, அப்புறப்படுத்தக் கட்டளையிட்டதாக புகாரியின் 5765, 6063 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நஸயீயின் 4012 வது ஹதீஸில் ஆட்களை அனுப்பி வைத்து அதை அப்புறப்படுத்தியதாகவும், அப்புறப்படுத்திய பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவும் உடனே அவர்கள் குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அஹ்மத் 18467 வது ஹதீஸிலும் இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அருகில் இரண்டு வானவர்கள் அமர்ந்து தமக்கிடையே பேசிக் கொண்டதாகவும் அதன் மூலம் தனக்கு சூனியம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரி 6391வது ஹதீஸ் கூறுகிறது.

நஸயீயின் 4012வது ஹதீஸில் ஜிப்ரீல்(அலை) வந்து 'உமக்கு யூதன் ஒருவன் சூனியம் வைத்துள்ளான்' என்று நேரடியாகக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்திகளின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டாலும் அதில் கூறப்படும் கருத்துக்கள் குர்ஆனுக்கு எதிராக அமைந்துள்ளதாலும், அந்த அறிவிப்புக ளில் முரண்பாடு இருப்பதாலும் இதை நாம் ஏற்கக் கூடாது.

இவ்வாறு விரல் விட்டு எண்ணக் கூடிய ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை மட்டும் தான் ஏற்கக் கூடாது என்று தக்க காரணத்துடன் கூறுகிறோம்.

இவ்வாறு இல்லாத பல்லாயிரம் ஹதீஸ்களை நாம் ஏற்கிறோம். ஏற்கத் தான் வேண்டும் என்கிறோம். குர்ஆன் மட்டும் போதும், நபிவழி அவசியமில்லை எனக் கூறுவோர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டனர் என்பதை திர்மிதீ தமிழாக்கத்தின் முன்னுரையிலும், அல்முபீன் மாத இதழில் தொடர் கட்டுரையிலும் தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதை நினைவூட்டுகிறோம்.

113, 114வது அத்தியாயங்கள்

திருக்குர்ஆனின் 113, 114வது அத்தியாயங்களின் அடிப்படையிலும் சூனியத்தின் மூலம் அதிசயங்களை நிகழ்த்த இயலும் என்று வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட போது அதை நீக்குவதற்காக ஃபலக், நாஸ் எனும் அத்தியாயங்கள் அருளப்பட்டன. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்வதற்காக 12 முடிச்சுக்கள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்தது என்ற செய்தியின் அடிப்படையிலும் நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதை நிரூபிக்க முயல்கின்றனர்.

சில தஃப்ஸீர்களில் அறிவிப்பாளர் வரிசையில்லாமல் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாகவும் இதில் ஏராளமான ஆட்சேபனைகள் உள்ளதாகவும் இப்னு கஸீர் அவர்கள் தமது விரிவுரையில் கூறுகிறார்கள்.

மேலும் மேற்கண்ட இரண்டு அத்தியாயங்களும் மதீனாவில் தான் அருளப்பட்டது என்பதற்குக் கூட ஆதாரமில்லை. இதிலேயே கருத்து வேறுபாடு உள்ளது.

அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் மொழி பெயர்த்த தமிழாக்கத்தில் 'இவ்விரு அத்தியாயங்களும் மக்காவில் அருளப்பட்டவை' என்று கூறுகிறார்.

நிஜாமுத்தீன் மன்பயீ அவர்கள் மொழி பெயர்த்த தமிழாக்கத்தில் 'இவ்விரு அத்தியாயங்களும் மதீனாவில் அருளப்பட்டவை' என்று கூறுகிறார்.

எங்கே அருளப்பட்டது என்பதற்கே ஆதாரம் கிடையாது என்பதால் 12 முடிச்சுக்கள் அவிழ்ந்ததாகக் கூறுவது கட்டுக்கதை என்பது உறுதியாகிறது.

முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்

'முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்' (113:4) என்ற சொற்றொடரை வைத்துக் கொண்டு சூனியத்தினால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று வாதிடுகின்றனர்.

முடிச்சுக்களில் ஊதி சூனியம் செய்யும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடச் சொல்வதால் அவர்களால் தீங்கிழைக்க இயலும் என்பது உறுதியாகிறதே என்று இவர்கள் கேட்கின்றனர்.

இவர்களின் வாதப்படி நபிகள் நாயகத்துக்கு லபீத் என்ற ஆண் தான் சூனியம் வைத்தான். எனவே சூனியம் செய்யும் பெண்களுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை.

இவர்கள் வாதப்படி இந்த அத்தியாயத்தில் சூனியம் வைக்கும் பெண்களிடமிருந்து தான் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். ஆண்கள் சூனியம் செய்தால் அதிருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லை என்ற கருத்து வரும்.

'முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்' என்பதற்கு சூனியக் காரிகள் என்று அல்லாஹ்வின் தூதர் விளக்கம் கூறவில்லை.

ஹதீஸ்களின் துணையுடன் இதை விளங்கினால் ஷைத்தானைத் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் என்பதை அறியலாம்.

மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது. தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2269, 1142)

நாம் நல்லறங்கள் செய்து விடாதவாறு ஷைத்தான் தடைகளை ஏற்படுத்துகிறான். அந்தத் தடைகளைத் தான் இங்கே முடிச்சுக்களில் ஊதுதல் எனப்படுகிறது. அதிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு தான் இறைவன் இவ்வசனத்தின் மூலம் நமக்குக் கற்றுத் தருகிறான்.

முடிச்சு என்றவுடன் நூல் போடப்படும் முடிச்சு என்று சிலர் நினைத்து விடுகின்றனர். மூஸா நபியவர்கள் தமது நாவில் உள்ள குறைபாட்டை நீக்குமாறு அல்லாஹ்விடம் கேட்ட போது முடிச்சு என்று தான் கூறினார்கள்.

எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

(திருக்குர்ஆன் 20:26, 27) நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

மேலும் ஊதுதல் என்ற சொல்லும் ஹதீஸ்களில் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது. ஷைத்தானின் ஊதுதலை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அபூதாவூத் 651

தீய சக்திகளைக் குறிக்கும் போது பெண் பாலாகக் குறிக்கும் வழக்கம் அரபு மொழியில் உள்ளது. இதன் காரணமாகவே பெண் பாலாக இங்கே குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும், சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

அடுத்து மற்றொரு வசனத்தையும் ஆதாரமாகக் காட்டி சூனியத்தால் எதையும் செய்யலாம் என்று கூறுகின்றனர்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். 'நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே மறுத்து விடாதே!' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். 'இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா? (அல்குர்ஆன் 2:102)

ஹாரூத், மாரூத் என்பவர்களிடம் மக்கள் வந்து ஸிஹ்ரைக் கற்றுக் கொண்டதாக குறிப்பிடும் இறைவன், அதன் அதிகபட்ச விளைவு என்ன என்பதை நமக்கு அடையாளம் காட்டுகின்றான்.

ஸிஹ்ர் எனும் கலை மூலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றிருந்தால் அந்த மிகப்பெரிய பாதிப்பை இறைவன் இங்கே கூறியிருப்பான். அந்த மக்களும் அதனையே கற்றிருப்பார்கள்.

கை, கால்களை முடக்க முடியும் என்றோ, ஒரு ஆளைக் கொல்ல முடியும் என்றோ இருந்திருந்தால் அதைத் தான் அம்மக்கள் கற்றிருப்பார்கள். அல்லாஹ்வும் அதைத் தான் சொல்லியிருப்பான்.

ஸிஹ்ருடைய அதிகபட்ச விளைவு என்னவென்றால் கணவன் மனைவியரிடையே பிளவையும், பிரிவையும் ஏற்படுத்துவது தான் என்பது இதிலிருந்து புலனாகிறது.

அதாவது இருவருடைய உள்ளத்திலும் சந்தேகத் தீயை மூட்டி அதனால் பிரிவை ஏற்படுத்த முடியும். இல்லாத ஒன்றை இருப்பதாகவோ, இருப்பதை இல்லாதது என்றோ மனித மனங்களில் ஐயத்தை ஏற்படுத்த முடியும். இது தான் ஸிஹ்ருடைய அதிகபட்சமான விளைவு.

ஒருவனது கை, கால்களை இந்தக் கலையின் மூலம் முடக்க முடியாது என்றாலும், தனது கைகால்கள் முடங்கி விட்டன என்ற எண்ணத்தை அவனுக்கு ஏற்படுத்த முடியும்.

'உனக்கு இந்த நபர் இந்த மாதிரியான ஸிஹ்ர் செய்துள்ளார்' என்று தெரிவித்து விட்டால் அதுவே ஒருவனைப் படுக்கையில் தள்ளிவிடப் போதுமானதாகும். இல்லாததை எல்லாம் இருப்பதாக எண்ண ஆரம்பித்து விடுவான்.

இந்த விளைவைக் கூட திட்டவட்டமாகச் செய்து விட முடியுமா? முடியாது என்கிறான் இறைவன். இதன் மூலம் அல்லாஹ் நாடினால் அன்றி அவர்களால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று மேற்கண்ட வசனத்தில் தெரிவிக்கின்றான்.

2:102 வசனத்தை ஆதாரமாகக் கொண்டு சூனியம் என்பது உண்மையில் நிகழ்த்தப்படும் அதிசயமே என்று வாதிடுவது தவறு என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.

சூனியம் என்பது தந்திரமான ஏமாற்று வித்தையாக இல்லாமல் உண்மையாக நிகழ்த்தப்படும் அதிசயமாக இருந்தால் என்ன நிகழ வேண்டும்?

சூனியம் வைக்கிறேன் என்று ஏமாற்றும் பேர்வழிகள் அவர்களது பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடும் நாத்திகர்கள் மற்றும் நம்மைப் போன்றவர்களுக்கு எதிராக சூனியம் செய்து வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும். அப்படி அவர்களால் செய்ய முடிவதில்லை.

ஒரு சில தந்திரங்களைக் கற்று வைத்துக் கொண்டு அதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர். யார் அவர்களின் பித்தலாட்டத்தை உண்மை என்று நம்புகிறார்களோ, அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் செய்வது பித்தலாட்டம் தான் என்பதில் யார் உறுதியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

தவறான மொழிபெயர்ப்பு

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். ஆனால், ஸுலைமான் ஒரு போதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். இன்னும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் பின்பற்றினார்கள். ஆனால் அவர்கள் இருவரும் 'நிச்சயமாக நாங்கள் சோதமையாக இருக்கிறோம். (இதைக்கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்களாகி விடாதீர்கள்' என்று சொல்லி எச்சரிக்காத வரையில் எவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. அப்படி இருந்தும் கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி, அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும் எந்தவித நன்மையும் தராததையுமே அவர்கள் கற்றுக் கொண்டார்கள். சூனியத்தை விலைக்கு வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளனர். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப் பெற்றுக் கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 2: 102)

திருக்குர்ஆனின் 2:102வது வசனத்திற்கு மேற்கண்டவாறு தான் பெரும்பாலான விளக்கவுரைகளிலும் மொழிபெயர்ப்புகளிலும் பொருள் காணப்படுகின்றது. வார்த்தைகளில் வித்தியாசம் இருந்தாலும் இந்தக் கருத்தைத் தான் பெரும்பாலான மொழி பெயர்ப்புக்கள் தருகின்றன.

அரபு இலக்கண அடிப்படையில் மேற்கண்டவாறு பொருள் கொள்ள இடமிருந்தாலும் வேறு பல காரணங்களால் இந்த மொழி பெயர்ப்பை ஏற்க முடியவில்லை. அதே அரபு இலக்கண அடிப்படையில் மற்றொரு விதமாகப் பொருள் கொள்ளவும் இடமிருக்கின்றது. அந்தப் பொருளே சரியானதாகவும் தோன்றுகின்றது.
 
தொடரும்.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக