இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம் - 3
P. ஜைனுல் ஆப்தீன் அவர்களின் நூலிலிருந்து
இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பார்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது உண்மையாக இருந்தால் அவர்களை அன்றைய மக்கள் இறைத் தூதர் என்று நம்பியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை இறைத் தூதர் என்று நம்பியிருந்தவர்களில் பலரும் அவர்களை விட்டு விலகியிருப்பார்கள்.
ஒருவரை இறைத் தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டால் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
இறைத்தூதர்கள் என்பதற்கான சான்றுகள்
இறைத் தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள்.
எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்? என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது (திருக்குர்ஆன் 17:94)
'நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்' என்று கூறினர் (திருக்குர்ஆன் 36:15)
நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம். (திருக்குர்ஆன் 26:186)
'நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!' (என்றும் கூறினர்) (திருக்குர்ஆன் 26:154)
'இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?' என்று கேட்கின்றனர். (திருக்குர்ஆன் 25:7)
'இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்' என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர். (திருக்குர்ஆன் 23:33)
'இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?' என்றனர். (திருக்குர்ஆன் 23:47)
அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. 'இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?' என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர். (திருக்குர்ஆன் 21:3)
மனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத் தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் மக்கள் கருதினார்கள்.
மக்கள் இவ்வாறு எண்ணியதிலும் நியாயங்கள் இருந்தன. இறைத் தூதர் என்று ஒருவர் கூறியவுடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத் தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
மற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத் தூதர் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.
தனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத் தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களை அவர்களுக்குக் கொடுத்து அனுப்புகிறான்.
மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அந்த அற்புதங்களைக் காணும் போது அவர் இறைவனின் தூதர் தான் என்று நம்புவதற்கு நேர்மையான பார்வையுடயவர்களுக்கு எந்தத் தயக்கமும் ஏற்படாது.
இதன் காரணமாகவே எந்தத் தூதரை அனுப்பினாலும் அவருக்கு அற்புதங்களை வழங்கியே அனுப்பி வைத்ததாக திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் சுட்டிக்காட்டுகிறது.
(முஹம்மதே!) உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர். (திருக்குர்ஆன் 3:184)
(முஹம்மதே!) இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான். (திருக்குர்ஆன் 7:101)
அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளிவீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர். (திருக்குர்ஆன் 35:25)
அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவரவர் சமுதா யத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் முன்னரே பொய்யெனக் கருதியதால் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே வரம்பு மீறியோரின் உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம். (திருக்குர்ஆன் 10:74)
உங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறை யினரை அழித்திருக்கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம். (திருக்குர்ஆன் 10:13)
அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அவன் வலிமையுள்ளவன்; கடுமையாகத் தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 40:22)
அவர்களுக்கு முன் சென்ற நூஹுடைய சமுதாயம், ஆது, மற்றும் ஸமூது சமுதாயம், இப்ராஹீமின் சமுதாயம், மத்யன் வாசிகள், (லூத் நபி சமுதாயம் உள்ளிட்ட) தலைகீழாகப் புரட்டப்பட்டோரைப் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைத்தவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர். (திருக்குர்ஆன் 9:70)
அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்ததும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததும் இதற்குக் காரணம். அவர்களைத் தேவையற்றோராக அல்லாஹ் கருதினான். அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன். (திருக்குர்ஆன் 64:6)
'உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா?' என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ஆம் என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும். (திருக்குர்ஆன் 40:50)
நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம். இரும்பையும் அருளினோம். (திருக்குர்ஆன் 57:25)
இறைத் தூதர்கள் அனைவருக்கும் அற்புதங்கள் வழங்கப்பட்டன. அற்புதம் வழங்கப்படாமல் ஒரு இறைத் தூதரும் அனுப்பப்படவில்லை என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து அறியலாம்.
தான் செய்து காட்டும் அற்புதங்கள் மூலம் தான் ஒரு இறைத் தூதர் தன்னை இறைத் தூதர் என்று நிரூபிக்கும் நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும். இறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்?
'நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத் தூதர் என்று நம்பினோம்; இன்று அவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே; இவரை விட யூதர்கள் அல்லவா ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள்' என்று அம்மக்களில் கனிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.
'இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள்' என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.
'எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத் தூதரை வீழ்த்தினார்கள்' என்பது தவறான தகவல் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம் புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.
சூனியம் வைக்கப்பட்டவர் அல்லர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த மக்கள் முரண்பட்ட இரண்டு விமர்சனங்களைச் செய்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது 'இவர் சூனியம் செய்கிறார்' என்று சில வேளை விமர்சனம் செய்தனர்.
வேறு சில வேளைகளில் 'இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும்' என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும்.
பல நபிமார்கள் இவ்வாறு விமர்சனம் செய்யப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
'நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்' என்று அவர்கள் கூறினர். (திருக்குர்ஆன் 26:153)
'நீர் சூனியம் செய்யப்பட்டவர்' என்று அவர்கள் கூறினர். (திருக்குர்ஆன் 26:185)
தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! 'மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்' என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான். (திருக்குர்ஆன் 17:101)
மற்ற நபிமார்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக எதிரிகள் விமர்சனம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர் என்று விமர்சனம் செய்ததாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.
'சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்று கிறீர்கள்' என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம். (திருக்குர்ஆன் 17:47)
அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?' என்றும் 'சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்று கிறீர்கள்' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர். (திருக்குர்ஆன் 25:8)
'நபிகள் நாயகம் சூனியம் செய்யப்பட்டவர்' என விமர்சனம் செய்தவர்களை அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம் செய்கின்றன.
இறைத் தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விசயம். அதனால் அவரது தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றிருந்தால் இந்த விமர்சனத்தை இறைவன் மறுக்க மாட்டான்.
இறைத் தூதர் சாப்பிடுகிறார், குடிக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்ட போது சாப்பிடுவதாலோ குடிப்பதாலோ தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத் தான் செய்தார்கள் என்று பதிலளித்தான்.
ஆனால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறிய போது அநியாயக்காரர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான். சூனியம் வைக்கப்பட்டு இறைத் தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப் பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான்.
'இந்த வசனம் அருளப்படும் போது சூனியம் வைக்கப்படாமல் இருந்து, பின்னர் சூனியம் வைக்கப்படிருக்கலாம் அல்லவா?' என்று சிலர் பேசுவார்கள். இது ஏற்க முடியாததாகும்.
பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்கு சூனியம் வைக்கப்படுவதை அறிந்துள்ள இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை.
மேற்கண்ட இரண்டு வசனங்களையும் அடுத்த வசனங்களையும் இவர்கள் கவனித்தால் இத்தகைய தத்துவங்களைக் கூற மாட்டார்கள்.
(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது. (திருக்குர்ஆன் 25:9)
உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டு கிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது. (திருக்குர்ஆன் 17:48)
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்' என்று விமர்சனம் செய்தவர்களை வழி கெட்டவர்கள் என்று இங்கே இறைவன் பிரகடனம் செய்கிறான். சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின் படி நபிகள் நாயகத்துக்கோ, வேறு எந்த இறைத்தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ, முடக்கவோ இயலாது இதன் மூலம் உறுதியாகிறது.
அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டதாக வரும் ஹதீஸ்களின் நிலை என்ன? அவை ஆதாரப்பூர்வமானவை அல்லவா? புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான நூல்களில் நம்பகமானவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லையா?
இத்தகைய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நீங்கள் மறுக்கிறீர்களா? என்று சிலருக்கு கேள்வி எழலாம்.
திருக்குர்ஆனுக்கு முரணாக இருப்பதாலும், இஸ்லாத்தின் பல்வேறு அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதை நாம் மறுக்கும் போது ஹதீஸ்களையே மறுக்கிறோம் என்ற தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்த முயல்கின்றனர். திருக்குர்ஆனை மறுக்க வேண்டிய நிலை வந்தாலும் கூட அதற்குக் காரணமாக அமைந்த ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று இவர்கள் நினைக்கின்றனர்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸ்களைப் பற்றிப் பேசுவதற்கு முன் குர்ஆனும் நபிவழியும் மார்க்க ஆதாரங்கள்' என்பதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பேசுவோம்.
ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்களே!
திருக்குர்ஆன் எவ்வாறு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரமும் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் தான் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஹதீஸ்களின் துணையின்றி மார்க்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனாலும் ஒரு அடிப்படையான விசயத்தை நாம் மறந்து விடக் கூடாது.
நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல. குர்ஆனைப் பொருத்த வரை அனைத்து நபித்தோழர்களும் அது இறை வேதம் என்பதற்கு சாட்சிகளாக உள்ளனர்.
குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி 'இது என் இறைவனிடமிருந்து வந்தது' என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழார்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர்.
ஹதீஸ்களைப் பொருத்த வரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்.
ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும் ஒருவரே சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது.
எவ்வளவு தான் நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) இப்படிச் சொல்லியிருப்பார்களா என்ற கடுகளவு கூட குர்ஆன் விசயத்தில் சந்தேகம் வராது. ஹதீஸ்களைப் பொருத்த வரை இந்த நிலை கிடையாது.
ஆனாலும் நபித்தோழர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம். குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் ஏற்பட முகாந்திரம் இல்லை. குர்ஆனுடன் மோதும் போது 'இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது' என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிப்பது தான் முறையாகும்.
'ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது' என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடாமல், குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைப்பது தான் நேர்மையான பார்வையாகும். இந்த நேரத்தில் மட்டும் இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டு விட வேண்டும்.
இத்தகைய ஹதீஸ்கள் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் சரி தான்.
புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்ட சில ஹதீஸ்களை இங்கே நாம் உதாரணமாகக் குறிப்பிட்டால் இதில் அதிகத் தெளிவு கிடைக்கும்.
ஒரு குழந்தை தனது தாய் அல்லாத வேறு பெண்ணிடம் பாலருந்தினால் அந்தப் பெண், அக்குழந்தைக்குத் தாய் என்ற அந்தஸ்தை அடைந்து விடுவாள் என்பதை நாம் அறிவோம்.
இது பற்றி முஸ்லிம் 2634, 2635 வது ஹதீஸ்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
பத்து தடவை பாலருந்தினால் தான் தாய் பிள்ளை' எனும் உறவு ஏற்படும் என்று குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் இது ஐந்து தடவை என்று மாற்றப்பட்டது. இது திருக்குர்ஆனில் ஓதப்பட்டு வந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.
இதை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
அதாவது ஐந்து தடவை பால் அருந்தினால் தாய் என்ற உறவு ஏற்பட்டு விடும் என்று ஒரு வசனம் குர்ஆனில் இருந்ததாகவும், இந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆனில் இருந்ததாகவும் இந்த ஹதீஸில் கூறப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை குர்ஆனில் அப்படி ஒரு வசனம் இருந்திருந்தால் அந்த வசனம் இன்றும் குர்ஆனில் நிச்சயம் இருந்தாக வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்திற்குப் பின் குர்ஆனில் உள்ள எதையும் நீக்கவோ, இல்லாததைச் சேர்க்கவோ முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே குர்ஆன் முழுவதும் எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டு விட்டதாலும், ஏராளமான நபித்தோழர்கள் முழுக் குர்ஆனையும் மனனம் செய்திருந்ததாலும் குர்ஆனில் இருந்த ஒரு வார்த்தை கூட விடுபடுவதற்கு வழியே இல்லை.
ஆனால் ஆயிஷா (ரலி) கூறுவது போல் ஒரு வசனம் குர்ஆனில் காணப்படவில்லை.
இந்த நிலையில் 'முஸ்லிம் நூலில் இடம் பெற்ற ஹதீஸாயிற்றே? நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே' என்று காரணம் கூறி இதை ஏற்றுக் கொண்டால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
'குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; நபிகள் நாயகம் காலத்திற்குப் பின் குர்ஆனில் இருந்த பல வசனங்கள் நீக்கப்பட்டன' என்ற கருத்து இதனால் ஏற்படும். குர்ஆன் இறைவனின் நேரடிப் பொறுப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதையே இந்தச் செய்தி கேள்விக்குறியாக்கி விடும்.
எனவே இந்த ஹதீஸை நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும்.
'முஸ்லிம் நூலில் நம்பகமானவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இதை நாங்கள் உண்மை என்று நம்புகிறோம்' என்ற முடிவுக்கு நாம் வந்தால் ஹதீஸை நாம் மறுக்கவில்லை என்ற பெயர் நமக்குக் கிடைக்கலாம்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை குர்ஆனில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு வசனம் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அனைத்து நபித்தோழர்களாலும் நீக்கப்பட்டு விட்டதாக இதன் விளைவு அமையுமே? இதற்கு என்ன பதில்?
'குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; எந்த வசனத்தையும் யார் வேண்டுமானாலும் நீக்கி விடலாம்' என்ற நிலையில் தான் குர்ஆன் இருந்தது என்ற கருத்து ஏற்படுமே? இதற்கு என்ன பதில்?
இதற்கு நம்மிடம் பதில் இல்லையானால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதில் எங்கோ தவறு நேர்ந்திருக்க வேண்டும். இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்து விடும் கருத்தை ஆயிஷா (ரலி) கூறியிருக்க மாட்டார்கள் என்று நல்லெண்ணம் வைப்பது தான் உண்மை விசுவாசிகளின் நிலையாக இருக்க வேண்டும்.
இது போல் சுலைமான் நபியைப் பற்றி புகாரி உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்ற ஒரு செய்தியையும் உதாரணமாகக் கூறலாம்.
'இன்று இரவு நான் நூறு பெண்களுடன் உடலுறவு கொள்வேன். அவர்களில் ஒவ்வொருத்தியும் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் என்று சுலைமான் நபி கூறினார். அப்போது வானவர் 'இன்ஷா அல்லாஹ் கூறுங்கள்' என்று கூறினார். ஆனால் சுலைமான் நபி கூறவில்லை. மறந்து விட்டார். அவர் கூறியவாறு நூறு பெண்களுடன் உடலுறவு கெண்டார். அவர்களில் ஒருத்தியும் குழந்தை பெறவில்லை. ஒரே ஒருத்தி மட்டும் பாதி மனிதனைப் (குறைப் பிரசவம்) பெற்றெடுத்தார்.
இந்தச் செய்தி புகாரி 5242 வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுலைமான் நபிக்கு நூறு மனைவிகளோ நூறு அடிமைப் பெண்களோ இருந்ததாக வைத்துக் கொண்டாலும் ஒரு இரவில் அனைவருடனும் உடலுறவு கொள்வது சாத்தியமற்றதாகும். இது சாத்தியமற்றதா அல்லவா என்ற சர்ச்சையைத் தவிர்த்து விட்டு மார்க்க அடிப்படையில் மட்டும் இதனை ஆய்வு செய்வோம்.
தொடரும்...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக