ரமழானும் இறையச்சமும்
மௌலவியா எம். வை. மஸிய்யா B.A. (Hons)
இஸ்லாமிய மாதங்களில் றமழான் மாதம் மிகவும் விஷேடமும் புனிதத்துவமும் நிறைந்த மாதமாகும். இம்மாதத்திலே புனித அல்குர்ஆன் அருளப்பட்டது; இம்மாதத்தில் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன; சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க றமழான் மாதத்திலே நோன்பு நோற்பதை இறைவன் முஸ்லிம்கள் மீது கடமையாக்கியுள்ளான். மேலும், றமழான்மாத நோன்பை இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகவும் ஆக்கியுள்ளான். இஸ்லாம் என்ற கட்டடத்தின் முக்கிய தூணாக இந்த நோன்பு திகழ்வதற்கான காரணத்தை இறைவன் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
மேற்படி வசனத்தின் மூலம், அல்லாஹ் முஸ்லிம்களை இறையச்சமுள்ளவர்களாக்குவதற்காகவே நோன்பை விதியாக்கியுள்ளான் என்பதைப் புரிந்து கொள்கிறோம். இதுவே நோன்பின் உண்மையான நோக்கமாகும். நன்மைகளை இறைவனுக்காகவே செய்யும் உளப் பயிற்சிகளையும், பாவங்களை இறைவனுக்காகவே விடுகின்ற உளப்பக்குவத்தையும் நோன்பு மனித உள்ளங்களுக்கு வழங்குகின்றது. ஆகவே, எந்நிலையிலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளக் கூடியவனாக மனிதனை உருவாக்குவதே நோன்பின் முக்கிய நோக்கமாகும் என்பதையே மேற்கண்ட இறைவசனம் தெளிவுபடுத்துகின்றது.
‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.’ (அல்-பகரா: 183)
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “இறையச்சமுள்ளவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தண்டனைக்கும் அஞ்சி எச்சரிக்கையுடன் நடந்துகொள்வர்.”
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “(தக்வா என்றால்) அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, அவனுக்கு மாறு செய்யாது இருப்பதாகும்; அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனை மறந்து வாழாது இருப்பதாகும்; அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, அவனை நிராகரித்து வாழாமல் இருப்பதாகும்.”
எனவே, இறையச்சம் ஒருவனிடம் ஏற்பட்டு விட்டால், அவன் எப்போதும் நன்மைகளில் ஆர்வமும், அல்லாஹ்வின் தண்டனைகள் பற்றிய அச்சமும் கொண்டவனாகவே வாழ்வான். இவ்வாறு இறையச்சத்துடன் வாழும் மனிதனுக்கு இறைவன் இம்மையிலும் மறுமையிலும் பல்வேறு பயன்களையும் வெகுமதிகளையும் வைத்துள்ளான். அவற்றை நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நோன்பின் மூலம் முழுக்க, முழுக்க ஈமானியப் பயிற்சி பெற்று, இறையச்சம் உள்ளவர்களாக மாறமுடியும். (தக்வா) இறையச்சம் தருகின்ற பலன்கள் அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும் (விரிவஞ்சி) அவற்றுள் சிலதைப் பார்ப்போம்.
மக்களை இறையச்சமுள்ளவர்களாக்குவதே நோன்பின் முக்கிய நோக்கமாகத் திகழ்வதற்கான காரணம் என்ன? அந்தளவுக்கு இறையச்சத்தின் மகிமையும், தாத்பரியமும் என்ன? என்பதை சீர்தூக்கி, சிந்தித்துப் பார்ப்பது அனைவரதும் கடமையாகும். தக்வா எனும் இறையச்சத்தைப் பற்றி நபித்தோழர்கள் கூறியுள்ள கருத்துக்களைப் பார்ப்போம்.
1. காரியங்கள் இலகுவாகிவிடும்
தனிமனிதர்களதும் சமுதாய மக்களதும் விடயங்கள் எளிதாகிவிடுகின்றன. அல்லாஹ் கூறுகின்றான்:
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا
மேலும் எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். (அத்-தலாக்: 4) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:
فَأَمَّا مَنْ أَعْطَىٰ .وَاتَّقَىٰ وَصَدَّقَ بِالْحُسْنَىٰ . فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ
“எனவே எவர் (தானதர்மம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ, அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை ) இலேசாக்குவோம். (அல்-லைல்: 5-7)
2. பரக்கத்து – அபிவிருத்தி கிடைக்கும்
அனைத்து விதத்திலும் பரக்கத்துக்கள் – அபிவிருத்திகள் கிடைப்பதற்கு தக்வா காரணமாக அமையும். தக்வா உள்ளவர்கள் மீது வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் பரக்கத்தின் வாயில்கள் திறந்து கொள்ளும். அல்லாஹ் கூறுகின்றான்:
وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلٰكِن كَذَّبُوا فَأَخَذْنَاهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ
நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் – பரக்கத்துக்களை – பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால், அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர். ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம். (அல்–அஃராஃப்: 96)
இறையச்சம் உள்ளவர்களுக்கு எல்லா வகையான பொருளாதார வசதியும் ஏற்படுவதுடன், அவர்கள் எண்ணாத விதத்தில், எதிர்பாராத வளங்களை இறைவன் கொடுக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்:
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا. وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا
தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன்; திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான். (அத்-தலாக்: 2,3)
3. அருளும் ஒளியும் கிடைக்கும்
இறையச்சம் உள்ளவன் மீது இறைவன் தன் அருளை இருமடங்காக அருளி அவனை அரவணைத்துக் கொள்கிறான். மேலும், அவன் நேர்வழி பெறுவதற்காக அவனுக்கு ஒளியையும் வழங்கி சிறப்பிக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَآمِنُوا بِرَسُولِهِ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِن رَّحْمَتِهِ وَيَجْعَل لَّكُمْ نُورًا تَمْشُونَ بِهِ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன் தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான்; அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள்; இன்னும், உங்களுக்காக (உங்கள் குற்றங்களையும்) அவன் மன்னிப்பான். அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்.” (அல்-ஹதீத் – 28)
4. பகுத்தறியும் ஆற்றல் கிடைக்கும்
இறைவனை அஞ்சி நடக்கின்றவனுக்கு சத்தியத்தையும் அசத்தியத்தையும், நன்மையையும் தீமையையும், பிரித்தறிகின்ற ஆற்றல் திறமை போன்றவற்றை அல்லாஹ் வழங்குவான். எவனுக்கு நன்மை, தீமையைப் பிரித்தறியும் ஆற்றல் வழங்கப்படுகிறதோ அவன் பெரும் பாக்கியத்தை வழங்கப்பட்டவனாவான். அல்லாஹ் கூறுகிறான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَتَّقُوا اللَّهَ يَجْعَل لَّكُمْ فُرْقَانًا وَيُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான். ஏனெனில், அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன். (அல்-அன்ஃபால்: 29)
5. சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும்
இறையச்சம் உள்ளவர்களை சூழ்ச்சியாளர்களின் சூழ்ச்சிகளிலிருந்தும், காபிர்கள், நயவஞ்சகர்கள் போன்றோரின் தீங்குகளிலிருந்தும் அல்லாஹ் பாதுகாக்கின்றான். இதனால், அச்சமற்று வாழ்வதற்கு அவனுக்கு வழி கிடைகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:
إِن تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُوا بِهَا وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ
நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனும் இருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்ததை (எல்லாம்) சூழ்ந்து அறிகின்றவன். (ஆல இம்ரான்:120)
மனிதனுக்கு மாபெரும் சூழ்ச்சி செய்யக்கூடிய எதிரியாக ஷைத்தான் காணப்படுகின்றான். இறையச்சமுள்ளவர்களை இறைவன் தன் அருளின் காரணமாக ஷைத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாக்கிறான். அல்லாஹ் கூறுகின்றான்:
إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِّنَ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُم مُّبْصِرُونَ
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள். அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள். (அல்–அஃராஃப்: 201)
6. நேர்வழி கிடைக்கும்
இறையச்சமுள்ளவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டி, சுவனத்துக்குச் செல்ல வழியமைக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான்:
الم . ذٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ
அலிஃப், லாம், மீம் இது (அல்லாஹ்வின்) திருவேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமுமில்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்பகரா: 1,2)
7. அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்
அல்லாஹ் கூறுகிறான்:
وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்பகரா: 194)
இறையச்சமுள்ளோருடன் எந்நிலையிலும் அல்லாஹ் இருக்கின்றான். சகல விடயங்களிலும் அவர்களுடன் இருந்து, அவர்களுக்குத் துணை நிற்பான் என்பதையே மேற்கண்ட வசனம் விளக்குகிறது.
8. அல்லாஹ்வின் நேசம் கிடைக்கும்
அல்லாஹ் கூறுகிறான்
بَلَىٰ مَنْ أَوْفَىٰ بِعَهْدِهِ وَاتَّقَىٰ فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ
அப்படியல்ல! யார் தன் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சி நடக்கின்றார்களோ (அவர்கள்தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்.); நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான். (ஆல இம்ரான்: 76) இறைவன் பல்வேறுபட்ட நல்லறங்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, அதனைத் தொடர்ந்து, ‘நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களை நேசிக்கின்றான்’ என்று கூறுவான். இவ்வாறு அல்குர்ஆனில் பலவசனங்கள் காணப்படுகின்றன. ஸூரா அத்-தவ்பாவில் மாத்திரம் முறையே 4 ம், 7 ம், 36 ஆம் வசனங்களில் இவ்வாறு தனது அன்பும் நேசமும் இறையச்சமுள்ளோருக்கு உண்டு என்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளான்.
9. கல்வி அறிவு கிடைக்கும்
அல்லாஹ் கூறுகின்றான்:
وَاتَّقُوا اللَّهَ وَيُعَلِّمُكُمُ اللَّهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ்தான் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றான். தவிர, அல்லாஹ்வே எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கு அறிபவன். (அல்பகரா: 282)
மனிதன் பாவம் செய்யும் போது, இறைவனை மறந்து வாழ்கின்ற போது அவனது உள்ளம் இறந்துவிடுகின்றது. அப்போது எப்படி அவனுக்குக் கல்வி கிடைக்கும்? மாறாக, அவன் நன்மை செய்யும் போது, இறைவனை நினைவு கூர்ந்து வாழ்கின்ற போது அவனது உள்ளம் உயிர் பெறுகின்றது; ஒளி பொருந்திய அவனது உள்ளத்தில் கல்வி எனும் ஒளி அதிசீக்கிரமாகவே படர்ந்துவிடுகின்றது என்ற ஆழ்ந்த கருத்தையே மேற்படி வசனம் தெளிவுபடுத்துகின்றது.
10. நன்மாராயம் உண்டு
இறையச்சம் உள்ளவர்கள் இறைநேசர்கள்; எனவே இவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து நற்செய்தியுண்டு. அல்லாஹ் கூறுகின்றான்:
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ. الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ. لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
(முஃமீன்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்துகொள்வார்கள். அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயம் உண்டு; அல்லாஹ்வின் வாக்கு (றுதி) களில் எவ்வித மாற்றமுமில்லை. இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும். (யூனுஸ்: 62-64)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக