செவ்வாய், 31 ஜூலை, 2012



தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம்
எழுதியவர் மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ


தொழுகைக்கு என்ன முக்கியத்துவம் கூறப்பட்டிருக்கின்றதோ அதே முக்கியம் நேரத்திற்கும் கூறப்பட்டிருக்கின்றது. சென்ற இதழில் தொழுகையின் வரிசையில் நிற்கும் ஒழுங்குகள் பற்றி தெரிந்து கொண்டோம். இந்த இதழில் தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

‘நிச்சயமாக தொழுகை முஃமீன்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது’ 4.103

மேல் கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ்வே தொழுகைக்கு நேரத்தை குறிப்பிட்டதாகக் கூறுகின்றான். ஒரு வேலைக்கு நேரம் குறிப்பிடப்படுவதென்பது அதனுடைய ஆரம்பத்தையும் முடிவையும் காட்டுவதாகும். இவ்வாறே ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்பமும் முடிவும் இருக்கின்றது. ஒவ்வொரு தொழுகையையும் அதன் நேரத்தில் தொழுதுவிட வேண்டும். இஸ்லாம் அனுமதித்த காரணமின்றி ஒரு தொழுகையை அதன் நேரம் தவறி தொழுவது பெரும் குற்றமாகும். அப்படித் தொழுவதை தொழுகையாக கணக்கிடப்படமாட்டாது. ஓவ்வொரு வணக்கத்திலும் சில தியாகங்களை அல்லாஹ் கடமையாக்கியிருக்கின்றான். தொழுகையிலுள்ள முக்கிய தியாகமே உரிய நேரத்தில் ஒவ்வொரு தொழுகையையும் தொழுவதாகும். ஒரு தொழுகை (சுப்ஹு) தூங்கும் நேரத்திலும், அதனால்தான் சுப்ஹுடைய அதானில் மாத்திரம் தொழுகை தூக்கத்தை விட சிறந்தது என்ற வாசகம் கூறப்படுகின்றது.

இன்னுமொரு தொழுகை (லுஹர்) வேலை செய்யும் நேரத்திலும் மற்றொரு தொழுகை (அஸர் மஃரிப்) ஓய்வெடுக்கும் நேரத்திலும் இன்னுமொரு தொழுகை (இஷா) சொந்த வேலைகள் செய்யும் நேரத்திலும் கடமையாக்கப்பட்டிருக்கின்றது. அடியான் தன் பலதரப்பட்ட தேவைகளுக்குரிய நேரங்களிலும் ஒருசில மணித்துளிகளை அல்லாஹ்விற்காக அற்பணிக்கின்றானா என்பதை, இத்தொழுகையின் நேரங்களின் மூலம் அல்லாஹ் நம்மை சோதிக்கின்றான். ஒரு நாளில் ஐந்து நேரத் தொழுகையை நிறைவேற்றுவது எவ்வாறு கடமையோ அவ்வாறே ஒவ்வொரு தொழுகையையும் அதன் நேரத்தில் நிறைவேற்றுவதும் கடமையே! என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்று முஸ்லிம்களில் பலர் பல தொழுகைகளை ஒரு நேரத்தில் தொழுவதை வழக்கமாக்கியிருக்கின்றார்கள். அது முற்றிலும் சரி என்றும் கருதுகின்றார்கள். இது முற்றிலும் தவறாகும். இவர் அத்தொழுகையை தொழுததாக கருதப்படமாட்டாது. அப்படித் தொழுவது கூடுமென்றிருந்தால் தொழுகைக்கு அல்லாஹ் நேரத்தை கடமையாக்கி இருப்பதில் அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆகவே இஸ்லாம் நமக்கு வகுத்துத் தந்த தொழுகையின் நேரத்திற்குள் ஒவ்வொரு தொழுகையையும் எப்படியாவது தொழுது விட வேண்டும். நபி(ஸல்) அவர்களுக்கு தொழுகையையும் அதன் ஆரம்ப முடிவு நேரங்களையும், தொழுகை கடமையாக்கப்பட்ட முதல் இரு நாட்களிலும் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்ற ஜிப்ரீல்(அலை) அவர்கள் இந்த நேரத்திற்குள்தான் தொழுகையை தொழ வேண்டும் என்று கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. (இத்தொடரில் அந்த ஹதீதை நீங்கள் கண்டு கொள்ளலாம்)

எந்த ஒரு தொழுகையையும் அதன் நேரம் வருவதற்கு முன் நம்மில் யாரும் தொழுவதில்லை. காரணம் அத்தொழுகைக்குரிய நேரம் இன்னும் வரவில்லை என்ற ஒரே காரணத்திற்காகத்தான். அவ்வாறுதன் அத் தொழுகையின் நேரம் முடிந்த பின்பும் அதை தொழுவது கூடாது என்பதை யாரும் மறுக்க முடியாது. காரணம் அதற்குரிய நேரம் முடிந்து விட்டது. உதாரணத்திற்கு லுஹர் தொழுகையின் நேரம் முற்பகல் 12.25 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 3.45 மணிக்கு முடிவடைவதாக வைத்து கொள்ளுங்கள். யாராவது முற்பகல் 12.00 மணிக்கு லுஹர் தொழுகையை தொழுவார்களா? அப்படி தொழுதால் அத்தொழுகை ஏற்றுக்கொள்ளப்படுமா? இல்லை என்றே நாம் அனைவரும் கூறுவோம். காரணம் அதற்குரிய நேரம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. அவ்வாறுதான் 3.45மணிக்கு பின் லுஹரை தொழுவதும் கூடாது. காரணம் அதற்குரிய நேரம் முடிந்து விட்டது. இதை புத்தியுள்ள அனைவரும் அறிவர். இதைத்தான் இஸ்லாமும் கூறுகின்றது. காலத்திற்கு காலம் தொழுகையின் நேரங்கள் மாறும் என்பதையும் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.

சில குறிப்பிட்ட காரணங்களுக்காக ஒரு தொழுகையை இன்னொரு தொழுகையின் நேரத்தில் தொழலாம் அவைகள் பின்வருமாறு.

1. பிரயாணம்

அதாவது பிரயாணி லுஹர் நேரத்தில் அஸரை முற்படுத்தியும், அல்லது அஸர் நேரத்தில் லுஹரை பிற்படுத்தியும் தொழலாம். அவ்வாறே மஃரிப் நேரத்தில் இஷாவை முற்படுத்தியும் அல்லது இஷா நேரத்தில் மஃரிபை பிற்படுத்தியும் தொழலாம்.

2. தூக்கம்

ஆழ்ந்த தூக்கத்தின் காரணமாக ஒரு தொழுகையின் நேரம் முடியும் வரை தூங்கி அத்தொழுகையின் நேரம் முடிந்த பின் எழுந்திருந்தால் அவர் எழுந்ததும் அத் தொழுகையை தொழலாம். அவர் அல்லாஹ்விடத்தில் குற்றம் பிடிக்கப்படமாட்டார்.

யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

3. மறதி

ஒருவர் மறதியின் காரணமாக ஒரு தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை நிறைவேற்றாமல் இன்னுமொரு தொழுகையின் நேரத்தில் ஞாபகம் வந்தால் அவர் அதே நேரத்தில் தொழுது கொண்டால் போதுமானதாகும். அல்லாஹ்விடத்தில் அவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார்.

யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

4. அரஃபா மற்றும் முஸ்தலிபாவில்

அரஃபாவுடைய நாளில் அஸரை லுஹர் நேரத்தில் தொழுவதும் முஸ்தலிபாவுடைய இரவில் மஃரிபை இஷாவுடைய நேரத்தில் தொழுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
மேல் கூறப்பட்ட காரணமின்றி ஒரு தொழுகையை இன்னொரு தொழுகையின் நேரத்தில் தொழுவது அர்த்தமற்ற ஒன்றாகும். அவர் அல்லாஹ்விடத்தில் குற்றவாளியாவார்.

ஆரம்ப நேரம் சிறந்தது

ஒரு தொழுகையை அதன் நேரம் முடிவதற்கு முன் தொழுது கொண்டால் போதுமென்றிருந்தாலும் அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதே சிறந்ததாகும்.
அமல்களில் சிறந்தது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொழுகையின் நேரங்களை அறிந்து கொள்ளும் முறை

இன்று நம் நாள்காட்டிகளில் (காலண்டர்களில்) தொழுகையின் நேரம் குறிப்பிடப்பட்டிருப்பதை அனைவரும் அறிவோம். அதுவே இஸ்லாம் கூறும் தொழுகையின் நேரமாகும். நமது நலன்கருதி அறிஞர்கள் அதை நமக்கு இலகுபடுத்தியிருக்கின்றார்கள். இந்த நேர அட்டவணையை ஜிப்ரீல்(அலை) அவர்களே நபி(ஸல்) அவர்களுக்கு கற்று கொடுத்தார்கள் என்பதை பின்வரும் ஹதீது தெளிவு படுத்துகின்றது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், கஃபதுல்லாவில் இரு முறை எனக்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த போது எனக்கு லுஹரை தொழுவித்தார்கள் அப்போது (நிழல் செருப்பின்) வாரளவு இருந்தது. நிழல் அந்த பொருளின் அளவாக (நீளமாக) இருந்த போது எனக்கு அஸரை தொழுவித்தார்கள். நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் எனக்கு மஃரிபை தொழுவித்தார்கள். செம்மேகம் (சூரியன் மறைந்த போது) மறைந்த போது எனக்கு இஷாவை தொழுவித்தார்கள்.

நோன்பாளிக்கு குடிப்பதும் உண்பதும் தடுக்கப்பட்ட நேரத்தில் எனக்கு ஃபஜ்ரை தொழுவித்தார்கள். (இது முதல் நாள் தொழுவித்த நேரம்) அடுத்த நாள் ஒரு பொருளின் அளவு அந்த நிழல் வந்த போது எனக்கு லுஹரை தொழுவித்தார்கள். ஒரு பொருளின் நிழல் இரு மடங்கு வந்த போது எனக்கு அஸரை தொழுவித்தார்கள். நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் (சூரியன் மறைந்த போது) எனக்கு மஃரிபை தொழுவித்தார்கள். இரவின் மூன்றில் ஒரு பகுதி வந்தபோது எனக்கு இஷாவை தொழுவித்தார்கள்.

சூரியனின் மஞ்சள் (நிறம்) வருவதற்கு சற்று முன் எனக்கு ஃபஜ்ரை தொழுவித்தார்கள். பின்பு என் பக்கமாக திரும்பி முஹம்மதே! இது உங்களுக்கு முன் சென்ற நபிமார்களின் (தொழுகையின்) நேரமாகும். (ஆகவே உங்களுக்குரிய தொழுகையின்) நேரமும் இந்த இரண்டு நேரங்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும் எனக்கூறினார்கள். (அபூதாவூத்)

மேல் கூறப்பட்ட ஹதீதிலிருந்து நமக்கு கிடைக்கும் விளக்கங்கள்:

1. ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்ப நேரத்தையும் முடிவு நேரத்தையும் கற்றுக் கொடுத்தது அல்லாஹ்வே!

2. நமக்கு அறிமுகமில்லாத பகுதிகளுக்கோ நாடுகளுக்கோ நாம் பிரயாணம் செய்தாலும் யாருடைய உதவியுமின்றி தொழுகையின் நேரங்களை மேல் கூறப்பட்ட ஹதீதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

3. ஒரு தொழுகையின் நேரம் அடுத்த தொழுகைக்குரிய நேரம் ஆரம்பிக்கும் போது முடிவடைந்து விடுகின்றது. ஆனால் சுப்ஹு தொழுகையின் நேரம் அதற்கு அடுத்த தொழுகையாகிய லுஹர் தொழுகையின் நேரம் வரைக்கும் நீடிக்காது. சூரிய உதயத்தோடு அது முடிவடைந்து விடுகின்றது.

4. அஸர் தொழுகைக்கும் இஷாத் தொழுகைக்கும் முடிவடையும் நேரம் இரண்டு வகைப்படும். ஒன்று சிறப்புக்குரிய நேரம், மற்றொன்று நிர்பந்த நேரம். அதாவது நிர்பந்த சூழ்நிலைக்கு உட்படாதவர்கள் சிறப்பிற்குரிய நேரத்திற்குள் இவ்விரு தொழுகையையும் தொழுது கொள்ள வேண்டும். சிறப்பிற்குரிய நேரத்திற்கு முன் தொழ முடியாதவர்கள் நிர்பந்தமான நேரத்திற்குள் தொழுது கொள்ள வெண்டும். அஸர் தொழுகைக்கு சிறப்பிற்குரிய நேரம் ஒரு பொருளின் நிழல் அது போன்று இரண்டு மடங்காகும் வரையாகும். அதற்குரிய நிர்பந்தத்திற்குரிய நேரம் சூரியன் மறையும் வரையுமாகும். இஷாத் தொழுகைக்கு சிறப்பிற்குரிய நேரம் இரவின் மூன்றில் முதல் பகுதி வரையுமாகும். அதற்குரிய நிர்பந்த நேரம் சுப்ஹு வரையுமாகும்.

5. ஒவ்வொரு தொழுகையையும் அதற்குரிய நேரங்களுக்குள் தொழுதுவிட வேண்டும். (முற்படுத்தியோ பிற்படுத்தியோ தொழுவது கூடாது)

உரிய நேரத்தில் தொழுகையை பேணுவதற்கு வாசகர்களுக்கு நான் கூறும் சில கருத்துக்கள்.

1. தொழுகை நேரம் வருவதற்கு சற்று முன்பே தொழுகைக்காக உளு செய்து தயாராகிக் கொள்வதை வழமையாக்கிகொள்ளுங்கள்.

2. அதற்கு முடியாதவர்கள் அதான் சொல்லப்பட்டதும் தான் செய்து கொண்டிருந்த அனைத்து காரியங்களையும் நிறுத்தி விட்டு தொழுகைக்காக தயாராகி விடுங்கள்.

3. வெளியில் சென்று கொண்டிருந்தால் அதான் சொல்லப்பட்டதும் பக்கத்திலுள்ள பள்ளியில் தொழுது விடுங்கள்.

4. பெண்கள் அவர்களின் வீட்டிலே முதல் நேரத்திலேயே தொழுவதை வழமையாக்கிக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்றவாறு உங்களின் வீட்டு வேலைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேரத்தில் பாதுகாத்து தொழ நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக!

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்


தொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) நிற்கும் ஒழுங்குகள்
எழுதியவர் மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் தொழுகை, தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய முக்கிய சட்டங்களில் வரிசையை சீர் செய்வதும் ஒன்றாகும். தொழுகையில் வரிசையை சீர் செய்து கொள்ளும் விஷயத்தில் இன்னும் முஸ்லிம்களில் பலர் அறியாமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதை நாள்தோறும் பள்ளிவாசல்களில் பார்த்துக் கொண்டும் சீர்திருத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். அதுபற்றி மக்களிடம் நல்ல ஒரு தெளிவு கிடைக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொழுகையில் வரிசையில் நிற்பதற்கான ஒழுங்குகளில் பின்னுள்ளவைகளை பேணுதல் அவசியமாகும்.

1. முன் வரிசையின் சிறப்புகள்
2. வரிசையில் நேராக நிற்க வேண்டும்
3. வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும்
4. முதல் வரிசையை முழுமைபடுத்திய பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும்.
5. இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
6. பெண்கள் நிற்கும் வரிசை

1. தொழுகையில் முன் வரிசையின் சிறப்பு

மக்கள் பாங்கிலும், முன் ஸஃப்பிலும் உள்ள சிறப்புகளை அறிந்து, பிறகு அவ்விரண்டும் குலுக்கல் மூலம் தான் பெறமுடியுமென்றிருந்தால் (அவர்கள் அதற்கும் தயாராகி) குலுக்கல் மூலம் அவைகளைப் பெற்றுக் கொள்வர் என நபி (ஸல்) கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்)

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். மலக்குகள் தங்கள் இரட்சகனின் சமுகத்தில் அணிவகுப்பது போல், தொழுகையில் நீங்கள் அணிவகுக்கக் கூடாதா? எனக் கூறினார்கள். அப்பொழுது நாங்கள் யாரஸுலுல்லாஹ் மலக்குகள் தங்கள் இரட்சகனின் சமுகத்தில் எவ்வாறு அணிவகுக்குகிறார்கள்? எனக் கேட்டோம். அதற்கவர்கள், அவர்கள் முந்திய ஸஃப்புகளை முழுமைப் படுத்துகிறார்கள், ஸஃப்பில் நெருக்கமாக இருக்கிறார்கள் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

விளக்கம்: இவ்விரண்டு ஹதீதின் மூலம் முன் வரிசையில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ள முடியும். ஆகவே முடிந்த அளவு முன்வரிசையில் தொழ அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

2. வரிசையில் நேராக நிற்க வேண்டும்

நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் பொழுது (தொழுகைக்காக ஸஃப் நிற்கும் போது) எங்களின் தோள்பட்டைகளில் தடவி விடுவார்கள். பிறகு கூறுவார்கள், நீங்கள் ஸஃப்பில் சீராகவும் நேராகவும் நில்லுங்கள். ஒருவருக்கொருவர் (முன்பின்) முரண்பாடாக நிற்க வேண்டாம். அவ்வாறு நீங்கள் நின்றால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுப் போகும். (ஸஃப்பில்) என்னையடுத்து அறிவிற் சிறந்தோர் நிற்கட்டும். பின்னர், அவர்களுக்கு அடுத்தவர்கள் நிற்கட்டும், பின்னர் அவர்களுக்கு அடுத்தவர்கள் நிற்கட்டும். (முஸ்லிம்)

உங்கள் ஸஃப்பை சீர்படுத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஸஃப்பை சீர்ப்படுத்திக் கொள்வது தொழுகையை முழுமைப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்)

புகாரியின் அறிவிப்பில்: ஸஃப்பை சீர் செய்வது தொழுகையை நிலைநாட்டும் விஷயங்களில் ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களின் ஸஃப்புகளைச் சீராக்குங்கள்! நன்றாக நெருங்கி நில்லுங்கள், நிச்சயமாக நான் என் முதுகுக்கு பின்னால் உங்களைப் பார்க்கிறேன். (இது புகாரியின் வாசகமும், முஸ்லிமின் கருத்துமாகும்)

புகாரியின் மற்றொரு அறிவிப்பில்: (ஸஃப்பில் நிற்கும்பொழுது) எங்களில் ஒருவர் தம் தோள்பட்டையை அருகிலுள்ளவரின் தோள்பட்டையுடனும், தம் பாதத்தை அவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்வோம் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நீங்கள் உங்கள் ஸப்புகளைச் சீராக்கி கொள்ளூங்கள் இல்லையெனில் அல்லாஹுதஆலா உங்கள் முகங்களுக்கிடையில் (உங்களுக்கிடையில்) வேற்றுமையை ஏற்படுத்திவிடுவான் என நபி (ஸல்) கூறினார்கள்:. (புகாரி, முஸ்லிம்)

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: நாங்கள் புரிந்து கொண்டு சரியாக நிற்கிறோம் என்பதை பார்க்கும் வரை நபி (ஸல்) அவர்கள் அம்புகளை சீர்படுத்துவது போல் எங்கள் ஸஃப்புகளைச் சீர்படுத்துவார்கள். பின்பு ஒரு நாள் அவர்கள் தொழுகைக்காக வீட்டிலிருந்து வந்தார்கள். (தொழுகையை ஆரம்பிக்க) தக்பீர் சொல்ல நெருங்கிவிட்டார்கள். அப்பொழுது ஒருவர் ஸஃப்பை விட்டு தம் நெஞ்சை வெளிப்படுத்தி (ஸஃப்பை விட்டு சற்று முன்னால்) நிற்பதை அவர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே, அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் ஸஃப்புகளை சீராக்கிக் கொள்ளுங்கள் அவ்வாறு இல்லையெனில் அல்லாஹ் உங்களுக்கு மத்தியில் பிளவையும், வேறுபாட்டையும் ஏற்படுத்தி விடுவான் என எச்சரித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஸஃப்பின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்குப் புகுந்து செல்வார்கள். எங்கள் நெஞ்சுகளையும் தோள்பட்டைகளையும் தடவி விடுவார்கள். அப்பொழுது கூறுவார்கள்: (ஸஃப்பில்) நீங்கள் வேறு படாதீர்கள் அவ்வாறு நீங்கள் வேறுபட்டால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டு விடும். மேலும் அவர்கள் கூறுவார்கள், நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் முந்திய ஸப்புகளில் உள்ளவர்கள் மீது ஸலவாத் கூறுகின்றனர். (அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பதின் பொருள்: அல்லாஹ், அவர்கள் மீது தன் அருள்களைப் பொழிகிறான் என்பதாகும். மலக்குகள் ஸலவாத் கூறுகின்றார்கள் என்பதின் பொருள், மலக்குகள் அவர்களுக்காக துஆச் செய்கின்றனர் என்பதாகும்) (அபூதாவூது)

விளக்கம்: தொழுகையில் வரிசையில் நிற்கும் போது நெருக்கமாகவும் நேராகவும் நிற்க வேண்டும். நெருக்கமாக நிற்பதென்பது, நமது வலது இடது பக்கத்தில் உள்ளவர்களின் தோள்புயத்துடன் நமது தோள்புயமும் கால் பாதத்துடன் கால் பாதமும் சேர்ந்திருக்க வேண்டும். நேராக நிற்பதென்பது, நமது வலது இடது பக்கத்திலுள்ளவர்களின் கணுக்காலுடன் நமது கணுக்கால் சேர்ந்திருக்க வேண்டும். விரல் நுனிகளை வைத்து நேர் பார்க்கக்கூடாது. நமது காலை பக்கத்திலுள்ளவர்களின் காலுடன் சேர்க்கும்போது மிருதுவைக் கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு நோவினை ஏற்படும் அளவிற்கு கடினத்தை கைவிட வேண்டும். பின்வரும் ஹதீது அதை தெளிவுபடுத்துகின்றது.

உங்கள் ஸஃப்புகளை நேராக நிலை நாட்டுங்கள். உங்கள் தோள் பட்டைகளுக்கு நேர் படுங்கள், இடைவெளிகளை நிரப்புங்கள். உங்கள் சகோதரர்களின் கரங்களுடன் மென்மையைக் கடைபிடியுங்கள். ஷைத்தானிற்காக இடைவெளியை விட்டு விடாதீர்கள். யார் ஸஃப்பை (நல்லமுறையில்) சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். யார் ஸஃப்பை துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூது)

இந்த ஹதீதில், தொழுகையில் வரிசையில் இடைவெளி விடுவதுபற்றி கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டும் இன்னும் இது விஷயத்தில் மக்கள் அறியாமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதுபற்றி அறியாமையில் உள்ள மக்களுக்கு பக்கத்தில் தொழும் போது பல சிரமங்களையும் நாம் எதிர் நோக்கின்றோம், அவர்களின் கால் பாதத்துடன் நமது கால் பாதத்தை சேர்க்க முனையும் போது அவர்கள் ஏதோ அது ஒரு பாவகரமான செயல் போன்று நினைத்து, அவர்கள் நம்மை விட்டும் வெகு தூரம் நகர்ந்து விடுகின்றார்கள். அப்படிப்பட்டவர்கள், இச்சுன்னாவை நினைவில் வைத்து இனிமேலாவது இதை செயல் படுத்த முன்வர வேண்டும். யார் ஸஃப்பை (நல்லமுறையில்) சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். யார் ஸஃப்பை துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான் என்ற நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் இப்படிப்பட்டவர்கள் ஞாபகம் வைத்து கொள்ளட்டும்.

3. வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும்

நீங்கள் உங்களின் வரிசைகளை நெருக்கமாகவும் சமீபமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள், கழுத்துகளுக்கு நேராக நில்லுங்கள், என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக, வரிசையின் இடைவெளிகளில் சிறிய கறுப்பு ஆட்டுக்குட்டியின் தோற்றத்தில் ஷைத்தான் நுழைகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

விளக்கம்: வரிசையில் இடைவெளி விட்டு நின்றால் அங்கே ஷைத்தான் கருப்பு ஆட்டுகுட்டி உருவத்தில் நுழைந்து நமது உள்ளங்களில் பல எண்ணங்களை உண்டுபண்ணி நமது தொழுகைகளை பாழாக்கிவிடுவான், ஆகவே வரிசைகளில் இடைவெளி விடுவதை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

4. முதல் வரிசையை முழுமைபடுத்திய பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும்

முதல் ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள். பிறகு அடுத்த ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள். ஸஃப்பில் குறை இருக்குமாயின் அது கடைசி ஸப்பாக இருக்கட்டும். (அபூதாவூது)

விளக்கம்: முன் உள்ள வரிசையில் இடம் இருக்கும் போது அடுத்த வரிசையை ஆரம்பிக்கக் கூடாது, முன்வரிசையை முழுமை படுத்திய பின்பே அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும். இன்று சில பள்ளிகளில், தொழுகை முடிந்துதும் பள்ளியை விட்டும் புறப்பட்டு விட வேண்டும் என்பதற்காக அல்லது மின்விசிறிக்குக் கீழ் நிற்க வேண்டும் அல்லது எயர் கண்டிஸனுக்கு நேராக நிற்க வேண்டும் என்பதற்காக அல்லது இதுபோன்ற பல காரணங்களுக்காக முன் வரிசையில் இடமிருந்தும் தன் சுயநலத்திற்கு ஏற்றவாறு ஏதாவது ஓர் இடத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்கின்றார்கள். இது முற்றிலும் சுன்னாவிற்கு மாற்றமான முறையும் முற்றிலும் தடுக்கப்பட வேண்டியவையுமாகும். இப்படி நடந்து கொள்பவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.

5. இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்

தொழுகையில் இமாமை நடுவில் நிற்கச் செய்யுங்கள். ஸஃப்புகளுக்கு இடையில் இடைவெளியை அடையுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது)

இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்

ஒரு இரவு நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து இரவு தொழுகை தொழுவதற்காக அவர்களின் இடது பக்கம் எழுந்து நின்றேன். பின்பக்கமாக என் தலையை நபி (ஸல்) அவர்கள் பிடித்து அவர்களின் வலது பக்கத்திலே என்னை நிறுத்தினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி)

6. பெண்கள் நிற்கும் வரிசை

நானும் ஒரு அனாதையும் எங்களின் வீட்டிலே நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் (இரவுத் தொழுகை) தொழுதோம், என் தாய் உம்மு சுலைம்(ரலி) அவர்கள் எங்களுக்கு பின் நின்றுதொழுதார்கள். (புகாரி)

விளக்கம்: மேல்கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து பல சட்டங்களை நாம் விளங்கலாம், இருவர் ஜமாஅத்தாக தொழுதால் மஃமூமாக நிற்பவர் இமாமின் வலது பக்கத்தில் நிற்க வேண்டும். இரண்டாவது நபர் வந்து விட்டால் இவர் இமாமுக்கு பின்பக்கமாக சென்று அவ்விருவரும் இமாமுடைனய வலது இலது பக்கத்தில் நிற்க வேண்டும். அதன் பின் வருபவர்கள் வலது இடது பக்கமாக நிற்க வேண்டும். மஃமூம்கள் இருவராக இருந்து ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாக இருந்தால், ஆண் இமாமின் வலது பக்கத்திலும் பெண் பின் வரிசையிலும் தனியாக நிற்க வேண்டும். அந்தப் பெண் தனது தாயாக, மகளாக, மனைவியாக இருந்தாலும் சரியே. பெண்களுக்கு சிறந்த வரிசை பின் வரிசையாகும். பின்வரும் ஹதீது அதை தெளிவு படுத்துகின்றது.

தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது முதல் ஸஃப்பாகும். அந்த ஸஃப்புகளில் கெட்டது கடைசி ஸஃப்பாகும். பெண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது அவற்றில் கடைசி ஸஃப்பாகும். அவைகளில் கெட்டது ஆரம்ப ஸஃப்பாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)

ஆகவே, தொழுகையில் வரிசையில் நிற்கும் விஷயத்தில் மேல் கூறப்பட்ட விஷயங்களை முழுமையாக பின்பற்ற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானக!

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

திங்கள், 30 ஜூலை, 2012



நோன்பின் நோக்கம்: மாறாத, நிரந்தரத் தக்வா!


அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

“நம்பிக்கையாளர்களே! உங்களுக்குமுன்னிருந்தவர்கள்மீதுகடமையாக்கப்பட்டிருந்ததுபோன்றுஉங்கள்மீதும்நோன்பு(நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்)நீங்கள்(உள்ளச்சம் பெற்று)இறைபக்திஉடையவர்கள்ஆகலாம்“ (அல்குர்ஆன் 2: 183).

நோன்பைப் பற்றி ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறும்போது நோன்பு என்பது உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினர் போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டிருக்கிறது என்று தொடங்குகிறான். உலகில் வாழும் மனிதர்களில் நாத்திகர்களாகிப் போனவர்களைத் தவிர்த்து, எல்லா மதங்களிலும் நோன்பு (விரதம்) ஏதேனும் ஒரு வடிவில் பின்பற்றப் படுவது இங்கு நோக்கத் தக்கதாகும். உலக மாந்தர் அனைவருக்கும் வாழும் வழியாக இஸ்லாம்தான் ஆதியில் இருந்திருக்கிறது என்பதும் “மனிதர்கள்தங்களுக்குள்பிரிந்துகொண்டுபலமதங்களைஉண்டாக்கிக்கொண்டனர்“ என்ற (23:52-53) இறைவாக்கும் இதன் மூலம் உறுதியாகிறது.

நோன்பைப் பற்றிய உன்னதமான நோக்கத்தை நமக்கு அல்லாஹ் எடுத்துச் சொல்லும்போது,

….لَعَلَّكُمْ تَتَّقُونَ………

“…..நீங்கள்(உள்ளச்சம் பெற்று)இறைபயபக்திஉடையவர்கள்ஆகலாம்“ (அல்குர்ஆன் 2:183) என்ற தெளிவை நம் முன் வைக்கிறான்.

அதாவது மனிதர்கள் நோற்கும் நோன்பினால் இறைவனுக்கு ஏதும் தேவையோ, இலாபமோ பயனோ ஏற்படாது. இதை நாம் நோற்கத் தவறினால் இறைவனுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படாது. இதனை முறையாக நோற்றால், இதனால் மனிதன் இறையச்சம் உடையவன் ஆகலாம் (அதன் மூலம் அவனுக்கும், அவன் குடும்பத்தினர் அவனைச் சார்ந்துள்ள அவன் வாழுகின்ற சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் நிச்சயமாக பலன்கள் உண்டு) என்று கூறுகின்றான். ஆகையால் இந்த நோன்பின் மகத்துவத்தையும் அது நமக்கு ஏற்படுத்த வல்ல பலன்கள் யாவை? என்பது பற்றியும் அதனால் சமூகம் பெறும் நன்மைகள் யாவை? என்பனவற்றையும் ஆய்வு செய்ய நாம் கடமைப் பட்டுள்ளோம்.

“பட்டினி என்றால் என்ன என்பதை அறியாமல் செழிப்பில் வாழும் முஸ்லிம் செல்வந்தர்கள், வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருப்பதன் மூலம் பட்டினியை அறிந்து கொள்வதற்கும் அதன் மூலம் காலமெல்லாம் பட்டினியில் உழலும் வறியவர்க்கு உதவ வேண்டும் என்ற சிந்தனையைச் செல்வந்தர்களிடையே நோன்பு ஏற்படுத்துகிறது” என்றும்

“பதினொரு மாதங்கள் வேளை தவறாமல் நிரம்பிய வயிறுக்கு ஒரு மாத காலம் நோன்பிருந்து சற்றே ஓய்வு கொடுப்பதன் மூலம் உடல் ரீதியான ஆரோக்கியம் கிட்டுகிறது” என்றும்

“வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருப்பது ஆரோக்கிய வாழ்விற்கு நல்லதொரு பயிற்சி” என்றும்

உலக ரீதியான பல காரணங்கள் மக்களால், மருத்துவர்களால் சொல்லப் பட்டாலும் நோன்பின் நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்பதே இங்கு நம் சிந்தையில் கொள்ளத் தக்கதாகும்

தக்வா தரும் பாடம்

தக்வா எனும் அரபுச் சொல், விகாயா என்ற வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் “தற்காத்தல்” என்று பொருளாகும். இறைவன் மீதுள்ள அச்சம் மேலோங்கி, பாவச் செயல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருளில் தக்வா எனும் சொல், இறைமறை வழக்கில் “இறையச்சம் – பயபக்தி” என்று பொருள் கொள்ளப் படுகிறது. அதாவது மனிதனையும் இந்தப் பேரண்டத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து நிர்வகித்துவரும் (படைப்பாளியான) ஏக இறைவனாகிய “அல்லாஹ்” நம்மை எங்கிருந்தாலும் எந்நேரமும் கண்காணிக்கின்றான். எனவே, பாவச் செயல்களிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்கிறோம் என்னும் எண்ண உறுதியை ஏற்படுத்துவது “தக்வா”வாகும்.

நம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ, கூட்டத்திலோ, இரவிலோ, பகலிலோ, எங்கு நிகழும்போதும் அது அவன் பார்வைக்கு மறைந்தது அல்ல. நாம் நிச்சயமாக நம் அனைத்து செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். நன்மைச் செயல்களுக்குப் பரிசும் தீமைகளுக்கு (மன்னிப்பு இல்லையெனில்) தண்டனையும் பெறுவோம் எனும் எண்ணத்தில் உறுதியாக வாழ்வது என்பது தக்வாவின் விரிந்த பொருளாகும்.

“அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்” என்ற எண்ணத்தில் அல்லாஹ்விற்குப் பயந்து, அவன் ஏவியவற்றை செய்தும், விலக்கித் தடை செய்தவற்றைத் தவிர்த்தும் வாழ்வதன் மூலம் “தக்வா”வைப் பெற்றுக் கொள்ளலாம்; அதிகரித்துக் கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு நோன்பாளி அவர் சிறுவனாக இருந்தாலும் வயதான முதியவராக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தனிமையில் இருக்கும்போது பசியிருந்தும், தாகம் இருந்தும், சுவையான ஹலாலான உணவு வகைகள் வீட்டில் இருந்தாலும்கூட அதை நெருங்க மாட்டார். தன்னை யாருமே பார்க்கவில்லையே என்று அதனைச் சாப்பிடவோ குடிக்கவோ எண்ணங்கூட கொள்ள மாட்டார்.

ஏனெனில், தனிமையில் இருந்தாலும் தம்மை இறைவன் (அல்லாஹ்) கண்காணிக்கின்றான் எனும் எண்ணம் ஒரு நோன்பாளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஹலாலான உணவை உண்டாலும், “நாம் நோன்பை முறித்த பாவத்திற்கு அல்லாஹ்விடம் தண்டனை பெறுவோம்” என்று இறைவனுக்கு அஞ்சி, தமது பசியை தமது தாகத்தைக் கட்டுபடுத்தி வைக்கிறார்.

ஹலாலானவற்றையே இறைவனின் கட்டளைக்கு அஞ்சிக் கட்டுப்பாட்டுடன் தவிர்த்துக் கொண்ட நோன்புப் பயிற்சியின் பலனாக, மனதில் இறையச்சம் மிகுந்து என்றும், எங்கும், எந்நிலையிலும் ஹராமானவற்றை அதாவது அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத உணவுகள், போதைப்பொருட்கள், மதுபானங்கள் ஆகியவற்றை விலக்கி வாழ்வதோடு,  தவறான முறையில் ஏமாற்றித் திருடுதல், மோசடி செய்தல் போன்ற விலக்கப்பட்ட செயல்கள்கள் மூலம் சம்பாதித்தால் அல்லாஹ்விடம் கடுமையான தண்டனை உண்டு என்று எண்ணம் எற்பட்டு ஹராமானவற்றை விட்டு விலகி நேர்வழியில் வாழவும் நோன்புப் பயிற்சி வழி வகுக்கிறது.

இந்தச் சிந்தனை சிறுவர்களான பள்ளி மாணவ-மாணவியர் முதல் வீட்டில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கணவன், மனைவி, தந்தை, தாய், சகோதரன், சகோதரி, அண்டை வீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று முழுச் சமுதாயத்திற்கும் சீராக நீதமாக சுமூகமாக உண்மையாளர்களாக வாழக்கூடிய ஒரு நல் வாய்ப்பை அளிக்கிறது. இவ்வாறான அனைத்து நற்பண்புகளுக்கும் இறையச்சம் எனும் தக்வாவே அடிப்படையாகத் திகழ்கிறது

மாறாத, நிரந்தரத் தக்வா!

நோன்பின் மூலம் பெறும் தக்வாவினால் சமுதாயத்தில் உள்ள எல்லாவகையான பிரச்சினைகளும் மறைய வாய்ப்புள்ளது என்பதைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

தக்வா இல்லாத வாழ்க்கை அல்லது நோன்பு மாதத்தில் மட்டும் ஏற்பட்டு, நோன்பு முடிந்ததும் தீர்ந்து போகும் தக்வாதான் சமுதாயத்தில் உருவாகும் எல்லா/பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் என்றால் மிகையாகாது. உலகில் மனிதன் சந்திக்கும் சூழ்நிலைகளும் அதன் மூலம் அவன் எடுக்கும் முடிவுகளும் தக்வாவின் அடைப்படையில் எடுக்கப் படும்போது அவனுக்கும் சமுதாயத்துக்கும் நன்மை பயப்பதாகவும் தக்வா அற்ற அடிப்படையில் எடுக்கப் படும்போது தீமையாகவும் அமைந்து விடுகின்றது.

தக்வா என்ற இறையச்சம் இல்லாமல்/குறைந்து போவதே இவ்வுலகில் ஒவ்வொரு தனி மனிதன் முதல், பெரிய நாடுகள் வரை எடுக்கும் நடவடிக்கைகளும் மனித சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிப்பதாக அமைந்து விடுவதைக் காண்கிறோம். தனிமனிதக் கொலை, தற்கொலை முடிவுகள் முதல் “பிரச்சினைக்குத் தீர்வு” என்ற பெயரில் மனிதர்களைக் கொன்று குவிப்பது வரை இறையச்சம் என்ற தக்வா இல்லாததால், தட்டிக் கேட்கப் படமாட்டோம் என்ற அதீதத் துணிச்சலால் பெறப்படும் முடிவுகள்தாம் எனத் துணிந்து கூறலாம்.

இறையச்சம் நிரந்தரமாக உள்ள ஒருவர், எப்படிப் பட்ட இக்கட்டான, சோதனையான நிலையிலும் தற்கொலைக்கு முயல மாட்டார். ஏனெனில் தற்கொலை என்பது இறைவனால் மன்னிக்க முடியாத குற்றம் என்பதை அவர் உணர்ந்திருப்பார். தற்கொலை என்பது இவ்வுலகில் மனிதர்கள் சந்திக்கும் வறுமை, கடன், விரக்தி, ஏமாற்றம், தேர்விலோ வாழ்க்கையிலோ ஏற்படும் தோல்விகள், தாங்க முடியாத நோய்கள், இன்ன பிறவுக்கும் ஒரு தீர்க்கமான முடிவு என்று கருத மாட்டார்.

மரணத்தோடு மனித வாழ்க்கை முடிவு பெறுவதில்லை. மரணித்ததன் பின்னர் இறுதித் தீர்ப்புக் கொடுக்கப்பட்டு மறுமை எனும் நிரந்தர வாழ்க்கை துவங்குகின்றது. இம்மை எனும் இவ்வுலகில் எடுக்கப்படும் அவசர முடிவுகளால் நிலையான மறுமை வாழ்க்கைக்கு மாபெரும் இழப்பு ஏற்படும் என்றும் உணர்வார்.

சுருக்கமாக, இன்று மனித சமுதாயம் சந்தித்துவரும் வன்முறைகள், மோசடிகள், பொருளாதாரச் சுரண்டல்கள், காழ்ப்புணர்ச்சி, ஏற்றத்தாழ்வுகள், பற்பல ஊழல்கள், சொத்துத் தகராறுகள், மாமியார்-மருமகள், கணவன்-மனைவி, சகோதரர்கள் பிரச்சனைகள் உட்பட ஏனைய குடும்பப் பிரச்சினைகள், வரதட்சணைக் கொடுமைகள், தேர்வில் முறைகேடு செய்தல், (தேர்வுக்கு முன்பே) கேள்வித்தாள் விற்பனை, பொய்ச்சான்றிதழ்கள் விற்பனை, போதைப் பொருட்கள் வியாபாரம் தொடங்கி, தீய நோய்கள், பெண்களை இழிவு படுத்துதல், வல்லுறவு, விபச்சாரம் போன்ற சமுதாய சீர்கேடுகளும் ஒழிக்கப் படவேண்டும் என்றால் இறையச்சச் சிந்தனை மூலம் மட்டுமே முடியும்.

ரமளானில் நோன்பு நோற்பதன் மூலம் நாம் இந்த அரிய இறையச்சத்தைப் பெறுவதற்கு அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். அல்லாஹ் அருள் புரிந்து நாம் பெற்ற இறையச்சச் சிந்தனை இந்த ரமளான் மாத நோன்போடு முடிந்து விடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் வரும் நாட்களில் ஒவ்வொரு நொடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும்.
தக்வா என்ற இறையச்சத்தை உள்ளத்தில் ஏற்றிக் கொண்டவர், “தொழுகையை என் மீது கடமையாக்கிய இறைவன் என்னை இன்றும், என்றும் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்” என்ற நினைப்பை ஒருபோதும் மறந்து விடமாட்டார்.

கடந்த காலத்தில் பாவச் செயல்களில் மூழ்கி இருந்தவர், இறையருளால் ரமளானில் தக்வாவைப் பெற்றுக் கொண்டு விட்டால், “அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். கடந்த காலத்தில் ஈடுபட்ட பாவச் செயல்களை நான் மீண்டும் செய்தால் அவன் என்னை நிச்சயமாகத் தண்டிப்பான்” என்ற எண்ணம் மேலிட்டு, பாவச் செயல்களில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்த்து விடுவார். மேலும் முன்னர் செய்த பாவங்களில் இருந்து அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற முயற்சி மேற்கொள்வார்.
இவையெல்லாம் தக்வா என்பது நோன்புக்கு மட்டும் தற்காலிகமானதாக இல்லாமல் வாழ்நாள் முழுதும் நிரந்தரமாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்

தள்ள வேண்டியவையும் அள்ள வேண்டியவையும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

حَدَّثَنَا ‏ ‏آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي ذِئْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ الْمَقْبُرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏ 
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ لَمْ يَدَعْ قَوْلَ ‏ ‏الزُّورِ ‏ ‏وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ ‏

“யார்பொய்யானபேச்சையும்பொய்யானநடவடிக்கைகளையும்விட்டுவிடவில்லையோஅவர்தமதுஉணவையும்குடிப்பையும்விட்டுவிடுவதில்அல்லாஹ்வுக்குஎந்தத்தேவையுமில்லை” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி1903).

சிலர் நோன்பு வைத்த நிலையிலும் தீமைகளைக் கைவிடாமல்,பொய் பேசுவது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, சினிமா வீடியோக்கள் சீரியல்கள், ஆபாச இணையம் என்று பலவிதமான மார்க்க முரணான கேளிக்கைகளில் ஈடுபடுவது ஆகிய செயல்களால் தமது நோன்பையும் நன்மைகளையும் தமது மறுமை வாழ்க்கையையும் பாழாக்குபவர்களாக வாழ்வதையும் பார்க்கிறோம். அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக என்று பிரார்த்திப்பதுடன் அவற்றால் ஏற்படும் தீமைகளை அவர்களுக்கு நல்ல முறையில் உணர்த்தி அவர்களையும் நேர்வழிப்படுத்த நாம் முயல வேண்டும்.

சிலர் இந்த மாதத்திலும் நோன்பு மட்டும் வைத்துக் கொண்டு தொழாமல் பாராமுகமாக இருப்பதும், இன்னும் சிலர் தூங்குவதில் அதிக நேரத்தைக் கழிப்பதும் உண்டு. இதைவிடவும் வேதனை, இன்னும் சிலர் அலட்சியமாக நோன்பும் வைக்காமல் தொழுகைக்கும் செல்லாமல் வெறுமனே ஈத் பெருநாள் அன்று மட்டும் பள்ளிக்கு வருபவர்களும் நம் சமுதாயத்தில் உண்டு என்பது கசப்பான உண்மையாகும்.

அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ وَهُوَ الْقَطَوَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بِلَالٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏ 
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَدْخُلُ مَعَهُمْ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَدْخُلُونَ مِنْهُ فَإِذَا دَخَلَ آخِرُهُمْ أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ ‏

சொர்க்கத்தில்‘ரய்யான்’ என்றுகூறப்படும்ஒருவாசல்இருக்கிறது. மறுமைநாளில்அதன்வழியாகநோன்பாளிகள்நுழைவார்கள்.

அவர்களைத்தவிரவேறுஎவரும்அதன்வழியாகநுழையமாட்டார்கள். நோன்பாளிகள்எங்கே? என்றுகேட்கப்படும். உடனேஅவர்கள்எழுவார்கள். அவர்களைத்தவிரவேறுஎவரும்அதன்வழியாகநுழையமாட்டார்கள். அவர்கள்நுழைந்ததும்அவ்வாசல்அடைக்கப்பட்டுவிடும். அதன்வழியாகவேறுஎவரும்நுழையமாட்டார்கள். (அறிவிப்பாளர்: சஹ்ல்(ரலி) நூல்: புகாரி – 1896).

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ 
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الصِّيَامُ ‏ ‏جُنَّةٌ ‏ ‏فَلَا ‏ ‏يَرْفُثْ ‏ ‏وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ‏ ‏لَخُلُوفُ ‏ ‏فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي ‏ ‏الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا ‏

நோன்பு(பாவங்களிலிருந்து காக்கின்ற)கேடயம்ஆகும்.

எனவேநோன்பாளிகெட்டபெச்சுகளைப்பேசவேண்டாம்;

அறிவீனமானசெயல்களில்ஈடுபடவேண்டாம்.

யாரேனும்ஒருநோன்பாளியைத்தீயசொல்லால்திட்டினாலோவீண்வம்புக்குவந்தாலோ“நான்நோன்பாளி” என்றுஅவர்இருமுறைகூறிவிடவும்.

என்உயிரைக்கைவசம்வைத்திருப்பவன்மீதாணை!

நோன்பாளியின்வாயிலிருந்துவீசும்மணம்,

அல்லாஹ்வின்கணிப்பில்கஸ்தூரியின்நறுமணத்தைவிடச்சிறந்ததாகும். அல்லாஹ்கூறினான்:

எனக்காகநோன்பாளிதம்(ஹலாலான)உணவையும்குடிப்பையும்உடலிச்சையையும்துறந்துவிடுகிறார். (அவரது)நோன்புஎனக்குமட்டுமேஉரியது.அதற்குநானேகூலிவழங்குவேன். (நோன்பின்போது செய்யப்படும்)

ஒருநன்மைஎன்பதுபத்துமடங்குகள்பெருகக்கூடியதாகும். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 1894) .

பாவங்களிலிருந்து காக்க வேண்டிய நோன்பு பயனின்றிக் கழிவதால் யாருக்கு இழப்பு என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நோன்பை கேடயத்துக்கு உவமையாக்கிக்  குறிப்பிட்டுள்ளார்கள். கேடயம் உறுதியாக இருந்தால் அதைத் தாங்கிய ஒருவர் தன்னைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள இயலுவதைப்போல், நோன்பு எனும் இக்கேடயம் உறுதியாக இருந்து இறையச்சத்தை வழங்கினால் இந்த வாழ்க்கையில் சந்திக்கும் பல விதமான தீய காரியங்களின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இயலும் என்று இதன் மூலம் உணரலாம்.

மேலும் படைவீரர்கள் எவ்வாறு அன்றாடம் பயிற்சிகளும் சிறப்புப் பயிற்சிகளும் பெற்றுக் கொண்டே எப்போது ஏற்படும் என்று அறியாத, அல்லது சில நேரங்களில் ஒரு போரும் நடைபெறாமல் ஓய்வு பெறும் நிலையிலும், போருக்குத் தயார் நிலையில் இருக்கப் பயிற்சி தொடர்ந்து எடுக்கின்றனரோ அதே போல் நாமும் இந்த ரமளான் மாத நோன்பு மற்றும் திங்கள், வியாழன், மாதம் மூன்று நோன்புகள் போன்ற ஸுன்னத்தான நோன்புகள் மற்றும் உபரியான, நபிலான நோன்புகள், மேலும் இறையச்சத்தை எற்படுத்தும் செயல்கள் மூலம் நமது ஈமானையும் இறையச்சத்தையும் உறுதியாக்கி, சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் வழிகேடுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயல்வோமாக!

நோயாளிகள், பயணிகளின் நோன்பு


நோன்பாளிகளே  உங்களைத்தான்!



ஞாயிறு, 29 ஜூலை, 2012



ரமழானும் இறையச்சமும்
மௌலவியா எம். வை. மஸிய்யா B.A. (Hons)


இஸ்லாமிய மாதங்களில் றமழான் மாதம் மிகவும் விஷேடமும் புனிதத்துவமும் நிறைந்த மாதமாகும். இம்மாதத்திலே புனித அல்குர்ஆன் அருளப்பட்டது; இம்மாதத்தில் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன; சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க றமழான் மாதத்திலே நோன்பு நோற்பதை இறைவன் முஸ்லிம்கள் மீது கடமையாக்கியுள்ளான். மேலும், றமழான்மாத நோன்பை இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகவும் ஆக்கியுள்ளான். இஸ்லாம் என்ற கட்டடத்தின் முக்கிய தூணாக இந்த நோன்பு திகழ்வதற்கான காரணத்தை இறைவன் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
       
மேற்படி வசனத்தின் மூலம், அல்லாஹ் முஸ்லிம்களை இறையச்சமுள்ளவர்களாக்குவதற்காகவே நோன்பை விதியாக்கியுள்ளான் என்பதைப் புரிந்து கொள்கிறோம். இதுவே நோன்பின் உண்மையான நோக்கமாகும். நன்மைகளை இறைவனுக்காகவே செய்யும் உளப் பயிற்சிகளையும், பாவங்களை இறைவனுக்காகவே விடுகின்ற உளப்பக்குவத்தையும் நோன்பு மனித உள்ளங்களுக்கு வழங்குகின்றது. ஆகவே, எந்நிலையிலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளக் கூடியவனாக மனிதனை உருவாக்குவதே நோன்பின் முக்கிய நோக்கமாகும் என்பதையே மேற்கண்ட இறைவசனம் தெளிவுபடுத்துகின்றது.
‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.’ (அல்-பகரா: 183)

 இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “இறையச்சமுள்ளவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தண்டனைக்கும் அஞ்சி எச்சரிக்கையுடன் நடந்துகொள்வர்.”

 இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “(தக்வா என்றால்) அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, அவனுக்கு மாறு செய்யாது இருப்பதாகும்; அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனை மறந்து வாழாது இருப்பதாகும்; அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, அவனை நிராகரித்து வாழாமல் இருப்பதாகும்.”

எனவே, இறையச்சம் ஒருவனிடம் ஏற்பட்டு விட்டால், அவன் எப்போதும் நன்மைகளில் ஆர்வமும், அல்லாஹ்வின் தண்டனைகள் பற்றிய அச்சமும் கொண்டவனாகவே வாழ்வான். இவ்வாறு இறையச்சத்துடன் வாழும் மனிதனுக்கு இறைவன் இம்மையிலும் மறுமையிலும் பல்வேறு பயன்களையும் வெகுமதிகளையும் வைத்துள்ளான். அவற்றை நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நோன்பின் மூலம் முழுக்க, முழுக்க ஈமானியப் பயிற்சி பெற்று, இறையச்சம் உள்ளவர்களாக மாறமுடியும். (தக்வா) இறையச்சம் தருகின்ற பலன்கள் அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும் (விரிவஞ்சி) அவற்றுள் சிலதைப் பார்ப்போம்.

மக்களை இறையச்சமுள்ளவர்களாக்குவதே நோன்பின் முக்கிய நோக்கமாகத் திகழ்வதற்கான காரணம் என்ன? அந்தளவுக்கு இறையச்சத்தின் மகிமையும், தாத்பரியமும் என்ன? என்பதை சீர்தூக்கி, சிந்தித்துப் பார்ப்பது அனைவரதும் கடமையாகும். தக்வா எனும் இறையச்சத்தைப் பற்றி நபித்தோழர்கள் கூறியுள்ள கருத்துக்களைப் பார்ப்போம்.

1. காரியங்கள் இலகுவாகிவிடும்

 தனிமனிதர்களதும் சமுதாய மக்களதும் விடயங்கள் எளிதாகிவிடுகின்றன. அல்லாஹ் கூறுகின்றான்:

وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا

மேலும் எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். (அத்-தலாக்: 4) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:

فَأَمَّا مَنْ أَعْطَىٰ .وَاتَّقَىٰ وَصَدَّقَ بِالْحُسْنَىٰ . فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ

“எனவே எவர் (தானதர்மம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ, அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை ) இலேசாக்குவோம். (அல்-லைல்: 5-7)

2. பரக்கத்து – அபிவிருத்தி கிடைக்கும்
       
அனைத்து விதத்திலும் பரக்கத்துக்கள் – அபிவிருத்திகள் கிடைப்பதற்கு தக்வா காரணமாக அமையும். தக்வா உள்ளவர்கள் மீது வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் பரக்கத்தின் வாயில்கள் திறந்து கொள்ளும். அல்லாஹ் கூறுகின்றான்:

وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلٰكِن كَذَّبُوا فَأَخَذْنَاهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ

நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் – பரக்கத்துக்களை – பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால், அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர். ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம். (அல்–அஃராஃப்: 96)

 இறையச்சம் உள்ளவர்களுக்கு எல்லா வகையான பொருளாதார வசதியும் ஏற்படுவதுடன், அவர்கள் எண்ணாத விதத்தில், எதிர்பாராத வளங்களை இறைவன் கொடுக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்:

وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا. وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا

தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன்; திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான். (அத்-தலாக்: 2,3)

3. அருளும் ஒளியும் கிடைக்கும்

 இறையச்சம் உள்ளவன் மீது இறைவன் தன் அருளை இருமடங்காக அருளி அவனை அரவணைத்துக் கொள்கிறான். மேலும், அவன் நேர்வழி பெறுவதற்காக அவனுக்கு ஒளியையும் வழங்கி சிறப்பிக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَآمِنُوا بِرَسُولِهِ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِن رَّحْمَتِهِ وَيَجْعَل لَّكُمْ نُورًا تَمْشُونَ بِهِ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன் தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான்; அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள்; இன்னும், உங்களுக்காக (உங்கள் குற்றங்களையும்) அவன் மன்னிப்பான். அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்.” (அல்-ஹதீத் – 28)

4. பகுத்தறியும் ஆற்றல் கிடைக்கும்

இறைவனை அஞ்சி நடக்கின்றவனுக்கு சத்தியத்தையும் அசத்தியத்தையும், நன்மையையும் தீமையையும், பிரித்தறிகின்ற ஆற்றல் திறமை போன்றவற்றை அல்லாஹ் வழங்குவான். எவனுக்கு நன்மை, தீமையைப் பிரித்தறியும் ஆற்றல் வழங்கப்படுகிறதோ அவன் பெரும் பாக்கியத்தை வழங்கப்பட்டவனாவான். அல்லாஹ் கூறுகிறான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَتَّقُوا اللَّهَ يَجْعَل لَّكُمْ فُرْقَانًا وَيُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான். ஏனெனில், அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன். (அல்-அன்ஃபால்: 29)​

5. சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும்

இறையச்சம் உள்ளவர்களை சூழ்ச்சியாளர்களின் சூழ்ச்சிகளிலிருந்தும், காபிர்கள், நயவஞ்சகர்கள் போன்றோரின் தீங்குகளிலிருந்தும் அல்லாஹ் பாதுகாக்கின்றான். இதனால், அச்சமற்று வாழ்வதற்கு அவனுக்கு வழி கிடைகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:


إِن تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُوا بِهَا وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ

நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனும் இருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்ததை (எல்லாம்) சூழ்ந்து அறிகின்றவன். (ஆல இம்ரான்:120)
     
 மனிதனுக்கு மாபெரும் சூழ்ச்சி செய்யக்கூடிய எதிரியாக ஷைத்தான் காணப்படுகின்றான். இறையச்சமுள்ளவர்களை இறைவன் தன் அருளின் காரணமாக ஷைத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாக்கிறான். அல்லாஹ் கூறுகின்றான்:

إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِّنَ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُم مُّبْصِرُونَ

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள். அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள். (அல்–அஃராஃப்: 201)

6. நேர்வழி கிடைக்கும்

இறையச்சமுள்ளவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டி, சுவனத்துக்குச் செல்ல வழியமைக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான்:

الم . ذٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ

அலிஃப், லாம், மீம் இது (அல்லாஹ்வின்) திருவேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமுமில்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்பகரா: 1,2)

7. அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்

அல்லாஹ் கூறுகிறான்:

وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ

அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்பகரா: 194)

         இறையச்சமுள்ளோருடன் எந்நிலையிலும் அல்லாஹ் இருக்கின்றான். சகல விடயங்களிலும் அவர்களுடன் இருந்து, அவர்களுக்குத் துணை நிற்பான் என்பதையே மேற்கண்ட வசனம் விளக்குகிறது.

8. அல்லாஹ்வின் நேசம் கிடைக்கும்


அல்லாஹ் கூறுகிறான்

بَلَىٰ مَنْ أَوْفَىٰ بِعَهْدِهِ وَاتَّقَىٰ فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ

அப்படியல்ல! யார் தன் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சி நடக்கின்றார்களோ (அவர்கள்தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்.); நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான். (ஆல இம்ரான்: 76) இறைவன் பல்வேறுபட்ட நல்லறங்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, அதனைத் தொடர்ந்து, ‘நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களை நேசிக்கின்றான்’ என்று கூறுவான். இவ்வாறு அல்குர்ஆனில் பலவசனங்கள் காணப்படுகின்றன. ஸூரா அத்-தவ்பாவில் மாத்திரம் முறையே 4 ம், 7 ம், 36 ஆம் வசனங்களில் இவ்வாறு தனது அன்பும் நேசமும்  இறையச்சமுள்ளோருக்கு உண்டு என்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளான்.

9. கல்வி அறிவு கிடைக்கும்
       
அல்லாஹ் கூறுகின்றான்:

وَاتَّقُوا اللَّهَ وَيُعَلِّمُكُمُ اللَّهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ்தான் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றான். தவிர, அல்லாஹ்வே எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கு அறிபவன். (அல்பகரா: 282)
       
மனிதன் பாவம் செய்யும்  போது,  இறைவனை மறந்து வாழ்கின்ற போது அவனது உள்ளம் இறந்துவிடுகின்றது. அப்போது எப்படி அவனுக்குக் கல்வி கிடைக்கும்? மாறாக, அவன் நன்மை செய்யும் போது,  இறைவனை நினைவு கூர்ந்து வாழ்கின்ற போது அவனது உள்ளம் உயிர் பெறுகின்றது; ஒளி பொருந்திய அவனது உள்ளத்தில் கல்வி எனும் ஒளி அதிசீக்கிரமாகவே படர்ந்துவிடுகின்றது என்ற ஆழ்ந்த கருத்தையே மேற்படி வசனம் தெளிவுபடுத்துகின்றது.

10. நன்மாராயம் உண்டு

இறையச்சம் உள்ளவர்கள் இறைநேசர்கள்; எனவே இவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து நற்செய்தியுண்டு. அல்லாஹ் கூறுகின்றான்:

أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ. الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ. لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

(முஃமீன்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்துகொள்வார்கள். அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயம் உண்டு; அல்லாஹ்வின் வாக்கு (றுதி) களில் எவ்வித மாற்றமுமில்லை. இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும். (யூனுஸ்: 62-64)

ரமழானும் குடும்பமும்
ஷேக் முஹம்மத் ஸாலிஹ் அல்-முனஜ்ஜித்
தமிழில்: மௌலவியா எம். வை. மஸிய்யா BA (Hons)


கேள்வி:
         நான் ஒரு குடும்பத் தலைவன்; ரமழான் மாதம் வந்து விட்டது; சிறப்புக்குரிய இம்மாதத்தில், எனது குடும்பத்தவர்களை பராமரித்து, நன்னெறியில் பயிற்றிவிப்பது எப்படி?

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கேயுரியது. நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வானாக.


ரமழான் மாதத்தை அடைந்து கொண்டு, அதில் நின்று வணங்கும் சந்தர்ப்பம் ஒரு மனிதனுக்குக் கிடைப்பது அல்லாஹ்வின் பேரருளாகும். அம்மாதத்தில் நன்மைகளுக்குப் பன்மடங்கான கூலிகள் வழங்கப்படுகின்றன. மனிதனுடைய அந்தஸ்துக்கள் உயர்த்தப்படுகின்றன. அம்மாதத்தில், அல்லாஹ் அதிகமானோருக்கு நரக விடுதலை வழங்குகின்றான். ஆகவே, ஈருலக நற்பயன்களையும் அடைந்து கொள்ளும் வகையில் இம்மாதத்தைப் பயன்படுத்திக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

அந்த ரமழானில் கிடைக்கின்ற ஒவ்வொரு வினாடியையும் இபாதத்துக்களில் கழிக்க வேண்டும். அம்மாதத்தை அடைந்து கொள்ளுமுன்னர் இறையடி சேர்ந்து விட்டதன் காரணமாக அல்லது நோய்வாய்ப்பட்டு விட்டதன் காரணமாக, அல்லது வழிகேட்டில் சிக்கித் தடுமாறிக் கொண்டிருப்பதன் காரணமாக அந்த ரமழானைப் பயன்படுத்திக் கொள்கின்ற வாய்ப்புப் பலருக்குத் தவறியிருக்கும் போது நமக்குக் கிடைத்திருப்பது இறைவன் நமக்குச் செய்த பேரருள் ஆகும்.


1. பிள்ளைகள் நோன்பு நோற்கின்றனரா? என்பதைக் கண்காணித்து, அதில் அலட்சியம் காட்டும் பிள்ளைகளை அதன்பால் ஆர்வமூட்டல்.

2. நோன்பு என்பது உண்ணுவதையும், பருகுவதையும் விட்டுவிடுவது மாத்திரமல்ல. மாறாக, இறைபக்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கும், பாவ மன்னிப்புப் பெறவும் தகுந்த வழியாகும். அவ்வாறே நோன்பு குற்றச் செயல்களுக்குப் பரிகாரமும் ஆகும் என நோன்பின் யதார்த்த நிலையைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறுவதாவது: ஒருமுறை ரஸூல் (ஸல்) அவர்கள் மிம்பர் படிகளில் ஏறும்போது ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!!  என்று கூறினார்கள். (வழமைக்கு மாறாக) இன்று ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், (கீழ்வருமாறு) பதில் கூறினார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து கீழ்வரும் மூன்று விடயங்களைக் கூறினார்கள்.

¨ ‘யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்’ என்றார். அதற்கு நான் ‘ஆமீன்’ என்றேன்.

¨ பின்னர், ‘யார் பெற்றோர் இருவரையும், அல்லது அவ்விருவரில் ஒருவரை அடைந்துகொண்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்வதன் மூலம் சுவர்க்கத்தை அடைந்து கொள்ளவில்லையோ அவரும் நாசமாகட்டும்’ என்றார். அதற்கு நான் ‘ஆமீன்’ என்றேன்.

அவ்வாறே ரமழானில் பெற்றோர் தமது பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. ஆகவே, அவர்களைச் சிறந்த முறையில் பராமரித்து நன்நெறிப்படுத்தல், நல்லறங்களின்பால் அவர்களுக்கு ஆர்வமூட்டல், அவற்றில் ஈடுபடப் பயிற்றுவித்தல் போன்றன அவற்றில் அடங்கும். ஏனெனில், பிள்ளைகள் தமது பெற்றோரிடம் பெறுகின்ற பயிற்சியின் அடிப்படையிலேயே வளர்கின்றனர்.

அதிலும் குறிப்பாக ஆண் பிள்ளைகள், தமது தகப்பனிடம் காணப்படுகின்ற பழக்க வழக்கங்களின் அடிப்படையிலேயே வளர்கின்றனர். பரக்கத்துக்கள் நிறைந்த அந்த நாட்களில், பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் சரிவர நிறைவேற்ற முயற்சி செய்வது கடமையாகும். இதனால், பெற்றோருக்குக் கீழ்வருமாறு உபதேசம் செய்கிறோம்: அவையாவன:

பதில்:

3. வலது கையால் சாப்பிடுதல், தனக்கு முன்னால் இருப்பதைச் சாப்பிடுதல் போன்ற உண்ணும் ஒழுங்குகளை அவர்களுக்குக் கற்றுக்  கொடுக்க வேண்டும். அவ்வாறே உணவை வீண்விரயம் செய்யக் கூடாது. அளவுக்கு அதிகம் சாப்பிடுவதால் உடம்புக்குத் தீய விளைவுகள் போன்றவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும்.

¨ ‘உங்களுடைய பெயர் சொல்லக்கேட்டு, உங்கள் மீது யார் ஸலவாத்துச் சொல்லவில்லையோ அவரும் அழிந்து நாசமாகட்டும்’ என்றார். அதற்கும் ‘ஆமீன்’ என்றேன்.

நூல்கள்: திர்மிதீ: 3545, அஹ்மத்: 7444, இப்னு குஸைமா 1888, இப்னு ஹிப்பான்: 908

4. மஃரிபுத் தொழுகை ஜமாஅத்துடன் தவறிவிடும் அளவுக்கு நீண்டநேரம் (இஃப்தார்) நோன்பு திறப்பதைத் தடுத்தல்.

5. வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள உணவுக்கு வழியின்றித் தடுமாறும் ஏழை எளியவர்களுடைய நிலையையும், முஹாஜிர்களுடையவும், முஜாஹித்களுடையவும் நிலைமைகளையும் பிள்ளைகளுக்கு ஞாபகமூட்டல்.

6. ‘இஃப்தார்’ போன்ற நிகழ்ச்சிகள் உறவினர்களை ஒன்று சேர்ப்பதற்கும், அவர்களைச் சேர்ந்து நடப்பதற்கும் சிறந்த சந்தர்ப்பமாகும். இந்தப் பழக்கம் இன்னும் பல நாடுகளில் காணப்படுகின்றன. பிளவுபட்டிருப்போரை ஒற்றுமைப்படுத்தவும், விடுபட்டுள்ள உறவுகளைச் சேர்த்துக் கொள்வதற்கும் ‘இஃப்தார்’ போன்ற நிகழ்ச்சிகள் நல்ல சந்தர்ப்பமாகும் என்பதைப் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தல்.

7. உணவு தயார்செய்தல், அதனைப் பகிர்தல், அவற்றை எடுத்தல், திரும்பவும் பயன்படுத்தக் கூடிய உணவுகளைப் பாதுகாத்தல் போன்றவற்றைச் செய்வதற்குத் தாயாருக்கு உதவி செய்தல்.

8. நோன்பில் இரவுத் தொழுகையின் முக்கியத்துவம், அதற்காக நேரகாலத்துடன் தயாராகுதல், உற்சாகத்துடன் நின்று தொழக்கூடிய அளவுக்கு மாத்திரம் உணவு உட்கொள்ளல், முடிந்தவரை பள்ளிவாசலுக்குச்   சென்று  தொழுகையை நிறைவேற்ற முயற்சி எடுத்தல் போன்றவற்றைப் பிள்ளைகளுக்கு உணர்த்தல்.

9. ஸஹர் செய்வது ’பரகத்’ (அபிவிருத்தி) ஆகும். அதன்மூலம் ஒரு மனிதன் நோன்புவைக்கச் சக்தி பெறுகின்றான் என்பதைச் சொல்லிக் கொடுத்தல்.

10. (ஏற்கனவே) வித்ருத் தொழுகையை நிறைவேற்றாதவர்கள் ‘வித்ரு’த் தொழுது கொள்ளவும், இரவின் கடைசிப் பகுதியில் வித்ருத் தொழுகையை அமைத்துக் கொள்ளவும் தமது தேவைகளுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்ளவும் போதிய நேரம் வைத்து கண்விழித்தல்.

11. தொழுகை கடமையானவர்கள் அனைவரும் ஜமாஅத்துடன் ஸுபஹ் தொழுகையை நிறைவேற்றுதல். இன்று அதிகமானவர்கள் கடைசி நேரத்தில் கண்விழித்து, ஸஹர் மாத்திரம் செய்துவிட்டு, ஸுபஹ் தொழாமல் திரும்பவும் தூங்கிவிடுவதைக் காண்கிறோம்.

12. ரமழானின் கடைசிப் 10 நாட்களிலும், இரவுப் பகுதியை வணக்கத்தில் கழிப்பதும், அதற்காக தமது மனைவிமார்களை எழுப்பித் தயார்படுத்திவிடுவதும் நபி வழியாகும். இந்த நபி வழியைத் தழுவி, பாக்கியம் நிறைந்த இந்த ரமழான் மாதத்தை இறைவனுக்குப் பொருத்தமான வழிகளில் கழிப்பது கடமையாகும். ஆகவே, தனது மனைவி, பிள்ளைகள் போன்றோரை அல்லாஹ்வின் நெருக்கத்தைத் தேடித்தரும் வணக்கவழிபாடுகளில் கழிக்கத் தயார்படுத்திவிடுவது ஒவ்வொரு கணவன் மீதும் கடமையாகும்.

13. ரபீஃ பின் முஅவ்வித் (ரழி) அவர்கள் கூறுவதாவது: ஆசூரா (முஹர்ரம் மாதம் 10 ஆம்) நாள் காலையில், அன்ஸாரித் தோழர்கள் இருந்த கிராமங்களுக்கு ஒரு அழைப்பாளரை அனுப்பி  வைத்தார். அவர், ‘இன்றைய தினம் நோன்பு வைக்காதவர்கள் அப்படியே இந்த நாளைப் பூர்த்தியாக்கட்டும், நோன்பு வைத்தவர்கள், தமது நோன்புகளைப் பூரணப்படுத்தட்டும்’ என்று கூறினார்.

ரபீஃ (ரழி) அவர்கள் கூறுவதாவது:

அதன் பின்னர், ஆசூரா நாளில் தொடர்ந்து நோன்பு வைப்போம். எமது சிறார்களையும் நோன்பு வைக்கச் செய்வோம். இன்னும் அவர்களையும் பள்ளிவாசல்களுக்கு அழைத்துச் செல்வோம். அவர்கள் விளையாடுவதற்காக கம்பளியால் பாவைகளையும் செய்து வைப்போம். பசியால் அவர்கள் உணவு கேட்டு அழுதால், மஃரிப் வரை, பாவைகளை அவர்களுக்கு விளையாடக் கொடுப்போம்.
நூல்கள்: புகாரி: 1859, முஸ்லிம்: 1136

ஹதீஸ் தரும் படிப்பினைகள்

இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:

¨ சிறுவர்களை வணக்க வழிபாடுகளில் ஈடுபடப் பழக்குதல்.
¨ இபாதத்துக்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துதல். (அவர்கள், மார்க்கக் கடமைகளை நிறைவேற்றக் கடமைப்படாதவர்களாயினும் கூட.)
காழீ இயாழ் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:

நோன்பு வைக்க சிறுவர்கள் எப்போது சக்திபெறுகின்றனரோ, அப்போது அவர்கள் மீது நோன்பு கடமையாகும் என்று இமாம் உர்வா (ரஹ்) கூறுவர். இவருடைய இக்கருத்தப் பிழையானதாகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கூறுவதாவது: ‘3 பேர்களைவிட்டும் பேனா உயர்த்தப்பட்டு விட்டன. அவர்களில்...’ ஒரு சிறுவன். அவன் பருவ வயதை அடையும் வரை’
நூல்: அல் மின்ஹாஜ்: 8/14

14. பெற்றோருக்கு வசதியிருந்தால், பிள்ளைகளையும் அழைத்துச் சென்று ரமழான் மாதத்தில் உம்ராச் செய்ய வேண்டும். ஏனெனில், ரமழான் மாதத்தில் நிறைவேற்றுகின்ற உம்ராவுக்கு, ஒரு ஹஜ் செய்த சிறப்புக் கிடைக்கின்றது. ஜன நெருக்கடியைத் தவிர்த்துக் கொள்வதற்காக, ரமழான் மாதத்தின் ஆரம்பத்தில் உம்ராவை நிறைவேற்றுவதே பொருத்தமானதாகும்.

15. அளவுக்கதிகமான உணவுப் பொருட்களைச் செய்யுமாறு கணவன், மனைவியை நிர்ப்பந்திக்கலாகாது. ரமழான் மாதத்தில் இஃப்தார் செய்வதற்காக வகை வகையான உணவுகளைத் தயார் செய்வதில் ஈடுபடுவது இன்று அதிகமான குடும்பங்களின் பழக்கமாகிவிட்டது. இது ஒருவகையான வீண்விரயமாகும். இதனால், ரமழான் மாத்த்தின் உண்மையான ஈமானிய இன்பமும், அதனுடைய நோக்கமான இறையச்சத்தை அடைந்து கொள்வதும் தவறிவிடுகின்றது.

16. ரமழான் அல்குர்ஆனின் மாதமாகும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மஜ்லிஸ் ஏற்பாடு செய்து அதில், அல்குர்ஆனை மனைவியும். பிள்ளைகளும் ஓத, தகப்பன் திருத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறே சில அல்குர்ஆன் வசனங்களுடைய விளக்கங்களையும் அவர்களுக்குப் போதிக்க வேண்டும். அவ்வாறே, நோன்பின் சட்டங்கள், சிறப்புக்கள் தொடர்பான ஒரு நூலை எடுத்து, நாள்தோறும் 1 பாடத்தையாவது வாசிக்க வேண்டும். இன்று ரமழான் மாத 30 நாட்களுக்கும் என்றே 30 பாடங்கள் அடங்கிய சில நூற்கள் உள்ளன.

17. அண்டை வீட்டார், ஏழைகள் போன்றோரின் தேவைகளை அறிந்து அவர்களுக்காக செலவு செய்யத் தூண்டுதல்.

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் பெரும் கொடைவள்ளலாய்த் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது, நபி (ஸல்) அவர்கள் மிக அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழான் மாதத்தில் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்துவீசும் காற்றை விட வேகமாக நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்குவார்கள்.
நூல்கள்: புகாரி: 6, முஸ்லிம்: 2308

18. எந்த நன்மையுமின்றி, கண்விழித்துக் கொண்டு வீணாக நேரத்தைக் கழிப்பதிலிருந்து பெற்றோர், பிள்ளைகளைத் தடுத்துவிடவேண்டும். சில இடங்களில் பிள்ளைகள், ரமழானின் இரவு காலங்களில் தடுக்கப்பட்டவைகளைச் செய்வதிலேயே கழிக்கின்றனர்.

மனித ஷைத்தான்கள் ரமழான் மாத இரவிலும், பகலிலும், நோன்பாளிகளுக்கு தீங்கிழைத்துக் கொண்டும், அநியாயங்களைச் செய்துகொண்டும் திரிகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்துவது பெற்றோர் மீதுள்ள கடமையாகும்.

19. மறுமையில், அல்லாஹ்வின் சுவனத்தில் குடும்பங்கள் ஒன்றுசேர்கின்றன. அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலின் கீழ் ஒன்றுதிரளக் கிடைப்பது பெரும் பேறாகும். இந்த உலகில் ரமழான் மாதத்தில் நிறைவேற்றப்படுகின்ற மஜ்லிஸ்கள், கல்வி கற்கவும், இரவு வணக்கத்தில் ஈடுபடவும், தொழுகைக்காகவும் நடைபெறுகின்ற ஒன்றுகூடல்கள் யாவும், மறுமையில் அர்ஷின் நிழலில் ஒன்றுசேரும் நற்பேற்றை ஈட்டித் தருவனவாகும்.
அனைத்து விடயங்களிலும் உதவி செய்யவும், நேர்வழி காட்டவும் அல்லாஹ் போதுமானவன்.





ஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம்
எழுதியவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி


‘ஸகாதுல் ஃபித்ர்’ என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.

எவ்வளவு? எவர்களுக்காக?

‘ரமழானில் இருந்து விடுபடுமுகமாக ‘ஸகாத்துல் பித்ரை’ அனைத்து மனிதர்கள் மீதும் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம்பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை சுதந்திரமானவன், அடிமை, ஆண், பெண் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் வழங்க வேண்டும் என விதித்தார்கள்’
அறிவிப்பவர் : அலி இப்னு உமர்(ஸல்),
நூற்கள் :புகாரி, முஸ்லிம், முஅத்தா.

”ஒரு ‘ஸாஉ’ உணவு, அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை, அல்லது ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம் அல்லது ஒரு ‘ஸாஉ’ தயிர் அல்லது ஒரு ‘ஸாஉ’ வெண்னை என்பவற்றை ஸகாதுல் ஃபித்ராவாக நாம் வழங்குபவராக இருந்தோம்’ என அபூ ஸயீதில் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).

‘ஸாஉ’ என்பது நடுத்தரமான ஒரு மனிதரின் கைகளால் நான்கு அள்ளு அள்ளி வழங்குவதைக் குறிக்கும். இது அறபுகளிடம் காணப்பட்ட ஒரு அளவீட்டு முறையாகும். சாதாரணமாக அரிசி என்றால், ஒரு ‘ஸாஉ’ என்பது 2.3 kg. ஐக் குறிக்கும் என்பர்.

இந்த அளவு உணவையோ, உணவுத் தானியத்தையோ வழங்கவேண்டும். பெருநாள் செலவு போக மீதமிருக்கும் அளவு பொருளாதாரம் உள்ள அனைவரும் இதை வழங்கவேண்டும். ஒருவர் தனது பொறுப்பிலுள்ள அனைவருக்காகவும் இதை வழங்கவேண்டும்.

உதாரணமாக, ஒருவரிடம் மூன்று பிள்ளைகள், ஒரு மனைவி இருக்க, அவரது பொறுப்பில் அவரது பெற்றோர்களுமிருந்தால் தனது மூன்று பிள்ளைகள், தான், தனது மனைவி, பெற்றோர் இருவரும் என மொத்தமாக ஏழு பேர்களுக்காக ஏழு ‘ஸாஉ’ உணவு வழங்க வேண்டும். எனவே, இந்த ஸகாத் அனைவர் மீதும் விதியாகின்றது! சிறுவர்கள், வாய்ப்பற்ற முதியவர்கள் என்பவர்களுக்கும் விதியாகின் றது. அதை அவர்களது பொறுப்புதாரிகள் நிறை வேற்ற வேண்டும்.

எப்போது? எதற்காக!

‘நோன்பாளி வீண் விளையாட்டுக்கள், தேவையற்ற பேச்சுக்கள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால், அதற்குப் பரிகாரமாக அமைவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக அமைவதற்காகவும்’ ‘ஸகாதுல் பித்ரை’ நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.

‘யார் பெருநாள் தொழுகைக்கு முன்னர் அதை வழங்கினாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘ஸகாத்’தாகும். யார் தொழுகைக்குப் பின்னர் அதை வழங்கினாரோ அது (சாதாரணமாக) வழங்கப்பட்ட ஒரு தர்மமாகக் கணிக்கப்படும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அபூ தாவூத், இப்னு மாஜா).

இந்த நபி வழி ‘ஸகாதுல் பித்ரா’வின் நோக்கம், அது வழங்கப்பட வேண்டிய கால எல்லை என்பவற்றை விபரிக்கின்றது.

நோன்பாளிக்கு நோன்பில் ஏற்பட்ட குறைகளுக்குப் பரிகாரம் என்பது முதல் காரண மாகும்.

நோன்பு கடமையான சிறுவர்களுக்காகவும் ‘ஸகாதுல் ஃபித்ர்’ வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு முதல் காரணம் பொருந்தாவிட்டாலும், பெருநாள் தினத்தில் ஏழை, எளியவர்கள் யாரும் உண்ண உணவு இன்றி இருக்கக் கூடாது, என்பது இரண்டாவது காரணமாகும். இது இவர்களுக்கும் பொருந்தும்.

இதனை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் வழங்கிவிட வேண்டும். இது வழங்கப்பட வேண்டிய நேரத்தின் இறுதிக் காலமாகும். பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர், இதனை வழங்குபவராக இப்னு உமர்(ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். (அபூதாவூத்).

மற்றுமொரு அறிவிப்பில், இது ஸஹாபாக்களின் நடைமுறையாக இருந்தது என்ற கருத்தைப் பெறமுடிகின்றது. ‘அதை பெற்றுக் கொள்பவர்களுக்கு நாம் வழங்குபவர்களாக இருந்தோம். நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அதை வழங்கு பவர்களாக இருந்தார்கள்.’ (புகாரி)

எனவே, பெருநாளைக்கு ஓரிரு தினங்க ளுக்கு முன்னர் இருந்து இதை வழங்க ஆரம் பிக்கலாம்.

எங்கே? எவர்களுக்கு?

‘ஸகாதுல் பித்ரை’ அவரவர் வகிக்கும் பகுதிக்கே விநியோகிக்க வேண்டும். அதுவும் ஏழை எளியவர்களுக்கு மட்டுமே விநியோகிக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் இதை கூட்டாக சேகரித்து வழங்கியுள்ளார்கள். சிலர் ‘ஸகாதுல் பித்ரா’ என்ற பேரில் ‘பித்ரா’ கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு ‘பித்ரா’ வழங்குவது பொருத்தமல்ல. சொந்த ஊரிலுள்ள ஏழைகளுக்கு வழங்கி மீதமிருந்தால் வெளியூர் ஏழைகளுக்கு வழங்கலாம். அஃதின்றி வெளியூர்களிலிருந்து ‘பித்ரா’ கேட்டு வருபவர்களுக்கு ஒரு சுண்டு இரு சுண்டு அரிசி அல்லது சில்லறை வழங்குவது ‘பித்ரா’வில் அடங்குமா என்பது சிந்திக்க வேண்டியதாகும்.

எதை வழங்குவது?

‘ஸகாதுல் பித்ரா’வாக ஒரு ‘ஸாஉ’ உணவுக்கான பணத்தை வழங்க முடியுமா? எனற விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் நிகழ்கின்றது.

பெரும்பாலான அறிஞர்கள் உணவுப் பொருளையே வழங்க வேண்டும் என்கின்றனர். இது ஒரு இபாதத்தாக இருப்பதால் இபாதத்தை ஏவப்பட்ட விதத்தில் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்காமல் செய்வது தான் சரியானது என்ற அடிப்படையில் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.

பணத்தையும் ‘பித்ரா’வாக வழங்கலாம் எனக்கூறுவோர் ஏழைகளுக்கு இது நன்மையாக அமையும் என்ற காரணத்தைக் கூறி இதை ஆமோதிக்கினறனர். இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் இக்கருத்தைக் கொண்டுள்ளார்.

இதில் முதல் கருத்தே மிகவும் பொருத்தமானதாகத் திகழ்கின்றது. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பலின் மகன் ‘எனது தந்தை ‘ஸகாதுல் பித்ரா’வுக்குப் பகரமாக அதன் அளவுக்குப் பணம் வழங்கப்படுவதை வெறுப்பவராக இருந்தார். பணம் வழங்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாமோ என நான் அஞ்சுகின்றேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
(அல் மஸாயினுல் இமாம் அஹ்மத்., பக். 171 அல்மஸஅலா., 647)

இமாம் இப்னு குதாமா அவர்களும் இது அங்கீகரிக்கப்படாது ‘தவி முஃனி’யில் குறிப்பிடுகின்றார்.

இமாம் ஷவ்கானி அவர்களும் குறிப்பிட்ட பொருளிலிருந்து தான் ‘ஸகாதுல் ஃபித்ர்’ வழங்கப்பட வேண்டும். குறித்த பொருள் இல்லாத போது, அல்லது ஏதேனும் ஒரு நிர்ப்பந்தத்தால் அன்றி அதன் பெறுமதிக்குப் பணம் வழங்க முடியாது என்ற கருத்தை வலியுறுத்துகின்றார்கள். குறித்த ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ வழங்கப்படவேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து ‘ஸாஉ’ என்ற அளவு தான் முக்கியம். அதன் பெறுமதி கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்பது புலப்படுகின்றது என இமாம் நவவி (ரஹ்) அவர்கள் ‘ஷரஹ் ஸஹீஹ் அல் முஸ்லிமில் குறிப்பிடுகின்றார்கள். அத்துடன் ‘அல் மஜ்முஉ’விலும் இக்கருத்தை விளக்கியுள்ளார்கள்.

இமாம் அபூ ஹனீபா அவர்கள்தான் பணத்தை வழங்கலாம் என்று கூறியுள்ளார்கள். ஏனைய அறிஞர்கள் உணவுத் தானியங்களை வழங்க வேண்டும் என்றும், ஏதேனும் நிர்ப்பந்தம் இருந்தால் மட்டும் பணத்தை வழங்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

ஒரு ஆட்டை அல்லது மாட்டை ஸகாத் கொடுக்கவேண்டும் எனும் போது, அதன் பெறுமதியைக் கொடுப்பது கூடாது என்பது போல், இதுவும் கூடாது என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். இவ்வாறே, இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறித்த பொருட்களின் அளவு ஒரே அளவாக இருந்தாலும் பணமாக கணக்கிடும் போது, அதன் அளவுகள் மாறுபடும். எனவே,

(1) ‘ஸகாத்துல் ஃபித்ர்’ இபாதத்தாக இருப்பதால் அதைக் குறிப்பிட்ட விதத்திலேயே செய்ய வேண்டும்.

(2) ஏழைகளின் நலன் நாடியே பணத்தை வழங்கலாம் என்று கூறப்படுகின்றது. தெளிவான ஆதாரம் இருக்கும் போது, ‘இஜ்திஹாத்’ செய்வதற்கு இடம் இல்லை.

(3) நபித்தோழர்களுக்கு மத்தியில் ஏராளமான ஏழைகள் இருந்தபோதும், அவர்கள் உணவுத் தானியங்களையே வழங்கினர். பணத்தை வழங்கவில்லை. எனவே, இது பின்னால் வந்ததொரு கருத்தாகவும், நடைமுறையாகவும் திகழ்கின்றது.

(4) நபி(ஸல்) அவர்களும், கலீபாக்களும் உணவு வழங்கிய நடைமுறைக்கு இது முரண்பட்டதாகும். நிர்ப்பந்த நிலைகளில் அனுமதிக்கப்பட்ட பணம் வழங்கலாம் என்ற கருத்து இன்று ‘பித்ரா’ வாகப் பணம் தான் வழங்கப்படவேண்டும் என்ற அளவுக்கு, சுன்னாவை மிஞ்சி வளர்ந்துவிட்டது.

எனவே ‘பித்ரா’வை உணவாகவே வழங்க வேண்டும். என்றாலும் நிர்ப்பந்தமான, தவிர்க்க முடியாத நிலையில் இருப்பவர்கள் மட்டும் மாற்று வழிகளைக் கைக்கொள்ளலாம்.

ஒரு ஆலோசனை:

ஏழைகளுக்கு உணவை வழங்குவது அவர்களுக்குப் போதியதாக இருக்காது என்று கருதுபவர்கள் ‘பித்ரா’வாக குறித்த அளவுக்கு உணவை வழங்கி விட்டு மேலதிக தர்மமாக வேண்டுமானால் பணத்தையோ, வேறு பொருட்களையோ வழங்கலாம். பணத்தை ‘ஸகாதுல் பித்ரா’வாக ஆக்காமல், உணவை ‘ஸகாதுல் பித்ரா’வாக ஆக்கி, பணத்தை மேலதிக தர்ம மாக ‘ஸதகா’வைச் செய்யலாம். இது அவசியம் என்பதற்காகக் கூறப்படவில்லை. அதிக வசதியுள்ளவர்கள், ஏழைகள் மீது அனுதாபம் கொண் டவர்கள் அதற்காக மார்க்க நிலைப்பாட்டில் மாற்று முடிவு எடுக்காது, செயல்படுவதற்காகவே இவ்வாலோசனையாகும்.

-அல்லாஹ்வே மிக அறிந்தவன்-

நன்றி: உண்மை உதயம் மாதஇதழ் 


மௌலவி M.M.சஃகி, மதினா எழுதிய 
அல் குர்ஆனை விளங்குவோம் - 01 



அல் குர்ஆனை விளங்குவோம் - 02




அல் குர்ஆனை விளங்குவோம் - 03




அல் குர்ஆனை விளங்குவோம் - 04



இம்தியாஸ் சலபி எழுதிய 
அல் குர்ஆன் பாக்கியம் நிறைந்த வேதநூல்






ஈமானின் அடிப்படைகள்
ஆக்கம்: மனாருத் தஃவா

ஈமான் எனும் பதம் மொழியினடிப்படையில் நம்பிக்கை யெனும் கருத்தைக் கொண்டுள்ளது. ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் அதன் கருத்து, நாவினால் விசுவாசப் பிரமாணத்தை மொழிந்து, உள்ளத்தால் பூரணமாக நம்பி, புலன் உறுப்புக்களால் அதன்படி செயற்படுவதாகும். இறை விசுவாசமானது இறை வழிபாட்டின் மூலம் அதிகரிக்கும். அவ்வாறே, இறைவனுக்கு மாறு செய்வதன் மூலம் குறைந்துவிடும் என்பதாகும்.


எமது ஆத்மா இறைவனுடன் சிறந்ததொரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்ற விதத்திலும், மறுமையில் நாம் நிச்சயமாக நமது இறைவனைச் சந்திப்போம் என்பதில் அசையாத அழுத்தமான நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையிலும், மறுமையில் இறைவனைச் சந்திக்கும்போது, ‘நாம் இவ்வுலகிற் செய்த எல்லாச் செயல்களுக்கும் அவனிடத்தில் உரிய விளக்கம் தந்தாக வேண்டும்’ என்ற உறுதியை உள்ளத்தில் ஏற்படுத்துகின்ற விதத்திலும் நம்பிக்கையை நம்முள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கை நமது ஆத்மாவில் ஊடுருவி நமது சொல், செயல் அனைத்திலும் வெளிப்பட வேண்டும்.

ஈமானின் அடிப்படைகள் 6 உள்ளன. அவற்றை யொரு மனிதன் விசுவாசங்கொண்டு, அவற்றை மேலும் உறுதிப்படுத்தக் கூடியதாகத் தனது செயல்களை மாற்றிக் கொள்ளும்போதுதான் ஈமானின் ஒளி வாழ்க்கையிற் பிரகாசிக்கத் தொடங்கும். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஈமான் பற்றிக் கேட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்துள்ள பதிலிற் கீழ்க் காணும் 6 அம்சங்களும் இடம்பெறுகின்றன. அவை:

1. அல்லாஹ்வை நம்புதல்

2. அவனுடைய மலக்குகளை (வானவர்களை) நம்புதல்

3. அவனுடைய வேதங்களை நம்புதல்

4. அவனுடைய தூதர்களை நம்புதல்

5. மறுமையை நம்புதல்

6. விதியின்படியே நன்மை, தீமை யனைத்தும் ஏற்படுவதை நம்புதல்
(ஆதாரம்: முஸ்லிம்)


இறை நம்பிக்கை

அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்; படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது; அவனுக்கு நிகராகவோ துணையாகவோ யாருமில்லை; வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன்தான்; அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள், பண்புகள் உள்ளன (என்ற இறை நம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயிலூடாகவே இஸ்லாத்தின்பாற் பிரவேசிக்க வேண்டும். அவனைப்பற்றி அல்-குர்ஆன் மிகச் சிறந்த அறிமுகம் தருகின்றது.

الْحَيُّ الْقَيُّومُ


(அல்லாஹ் நித்திய ஜீவன்) – என்றென்றும் வாழ்பவன் (அல்-பகறா: 255).

كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُ

அவனது திருமுகத்தைத் தவிர மற்ற அனைத்தும் அழியக்கூடியவையே (அல்-கஸஸ்: 88). அவனுடைய ஆட்சி யதிகாரத்திற் பங்கு கொள்ளுமளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்குந் தகுதியில்லை.


வானவர்கள்

அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது ஈமானின் இரண்டாவது அம்சமாகும். கண்களுக்குப் புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனுடைய அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது.

இவர்களுள் பிரதானமானவரது பெயர் ஜிப்ரீல் (அலை) என்பதாகும். இவரது பொறுப்பு இறைச் செய்தியை இறைத் தூதர்களிடங் கொண்டுவந்து சேர்ப்பதாகும். இன்னும் பல முக்கியமான வானவர்கள் உள்ளனர். இவர்களது எண்ணிக்கையை யறிந்தவன் அல்லாஹ் மட்டுமே.

வேதங்கள்

அல்லாஹ் உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு கால கட்டங்களில் தனது வழிகாட்டல்கள் அடங்கிய வேதங்களை அருளியிருக்கிறான். அவற்றிற் சில வேதங்களின் பெயர்கள் மட்டுமே நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அவை:

¨ நபி மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட தௌறாத்
¨ நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட ஸபூர்
¨ நபி ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட இன்ஜீல்
¨ நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்-குர்ஆன்

ஒவ்வொரு முஸ்லிமும் மேற்கூறப்பட்ட வேதங்களை அவற்றின் பெயர்களோடும் அல்லாஹ்வால் அருளப்பட்ட ஏனைய வேதங்களைப் பொதுவாகவும் நம்பிக்கை கொள்ளவது இஸ்லாத்தில் இறை நம்பிக்கை சார்ந்த மூன்றாவது அம்சமாகும். இவ்வாறு அல்லாஹ் அருளிய அனைத்து வேதங்களிலும் இறுதியானது அல்-குர்ஆனாகும். இதில் முந்திய எல்லா வேதங்களுடைய சாராம்சங்களும் அடங்கியுள்ளன.

எனவே, யாராவது அல்-குர்ஆனைத் தனது வேத நூலாக ஏற்றுப் பின்பற்றினால் அவர் முந்திய வேத நூற்களையும் ஏற்றவர் ஆகின்றார். இதன்படி முன்னைய வேதங்கள் நம்பிக்கைக்கு உரியனவாகும்போது அல்-குர்ஆன் நம்பிக்கைக்கும் நடைமுறை வாழ்விற் பின்பற்றுவதற்கும் ஏற்றதாக அமைந்துவிடுகிறது. முழு உலகத்துக்குமுரிய பொது வேத நூலாகத் திகழ்வது அல்-குர்ஆனின் தனித்துவமாகும்.


இறைத் தூதர்கள்

வேதங்களைத் தெளிவாகப் புரிந்து அவற்றுக்கேற்ப வாழ்ந்து ஈருலக நற்பயன்களைப் பெறுவதெப்படி என்பதைக் கற்றுக்கொடுத்து அதற்கு முன்மாதிரியாக வாழும் மனிதர்களை அவர்கள் வாழ்ந்த சமுதாயங்களிலிருந்தே இறைவன் தோற்றுவித்தான். அவர்களையே இஸ்லாம் இறைத் தூதர்களென அறிமுகப்படுத்துகிறது. அல்லாஹ் கூறுகிறான்:

وَإِن مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ

“அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நம்முடைய தூதர் வராத எந்தச் சமுதாயத்தினரும் பூமியில் இருக்கவில்லை” (அல்-பாதிர்: 24). இப்படித் தோன்றிய தூதர்களில் 25 இறைத் தூதர்களின் பெயர்களையே அல்-குர்ஆன் கூறுகிறது. இவர்களில் இறுதியானவர் முஹம்மத் (ஸல்) அவர்களாவர்.

மறுமை நாள்

மறுமையை நம்ப வேண்டும் என்பது நம்பிக்கை சார்ந்த 5 ஆவது அம்சமாகும். இவ்விடயத்திற் கீழ்வரும் விடயங்களை நம்ப வேண்டும். அவையாவன:

¨ ஒரு நாளில் அல்லாஹ் முழு உலகையும் படைப்பினங்களையும் அழித்துவிடுவான். அந்நாளின் பெயர் ‘கியாமத்’ என்பதாகும்.

¨ பிறகு இறைவன் அனைவருக்கும் மறுவாழ்வு அளிப்பான். அப்போது அனைவரும் அல்லாஹ்வுக்கு முன்னால் ஆஜராவார்கள். அதனை ‘மஹ்ஷர்’ என்றழைக்கப்படும்.

¨ எல்லா மனிதர்களும் தாம் உலகில் எதைச் செய்தார்களோ, அவை முழுவதுங் கொண்ட பட்டியல் இறைவனின் நீதி மன்றத்திற் சமர்ப்பணமாகும்.
¨ அல்லாஹ் ஒவ்வொருவருடையவும் நல்ல, கெட்ட செயல்களை நிறுத்துப் பார்ப்பான். நன்மை, தீமைகளுக்கேற்ப மன்னிப்பும் தண்டனையும் அளிப்பான். யார் மன்னிப்புப் பெறுகிறார்களோ, அவர்கள் சுவர்க்கம் செல்வர். யாருக்குத் தண்டனை வழங்கப்படுகிறதோ, அவர்கள் நரகம் செல்வர்.


விதி

இந்தப் பிரபஞ்சமும் இதிலுள்ள படைப்புக்கள் அனைத்தும் அணுவும் பிசகாது அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படியே இயங்குகின்றன என்பது இஸ்லாத்தில் இறை நம்பிக்கை சார்ந்த 6 ஆவது அம்சமாகும். மனிதனுடைய கற்பனைகள், கருத்துக்கள்கூட அல்லாஹ்வின் நிர்ணயத்துக்கு உட்பட்டவையே.

அல்லாஹ்வின் ஞானத்திற்குப் புறம்பாகவோ அவன் நிர்ணயித்த விதிமுறைகளுக்கு மாறாகவோ எதுவும் இயங்காது. இதன் கருத்து, மனிதன் சுதந்திரமாக இயங்குவதற்கான அறிவையும் ஆற்றலையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். அதே வேளை அவற்றிற் தன் விதிமுறைகளையும் வைக்க அவன் தவறவில்லை. இது அவனது ஆற்றலில், அறிவில், திறமையில் உள்ளதாகும்.

இதுவரை ஒரு முஸ்லிம் நம்ப வேண்டிய 6 அம்சங்களையும் சுருக்கமாக நாம் பார்த்தோம். இவற்றை உறுதியாக நம்புவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். எனவே, இவற்றை விசுவாசங்கொண்டு, அவ்விசுவாசத்தின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்வோமாக.

சனி, 28 ஜூலை, 2012



நபித் தோழர்களின் சிறப்புக்கள்
மௌலவியா எம். வை. மஸிய்யா B.A. (Hons)


நபித் தோழர் என்ற பதத்தின் வரைவிலக்கணம்:

இவர் நபிகள் நாயகத்தைக் கண்ணால் கண்டு, அவரை அல்லாஹ்வின் இறுதித் தூதர் என விசுவாசித்து, அந்த விசுவாசத்துடனேயே மரணத்திருக்க வேண்டும்.

நபித் தோழர்கள் என்போர் யார்? நபித் தோழர்களை உருவாக்கியது யார்?

 இவர்கள் இஸ்லாம் அறிமுகப்படுத்திய அனைத்து விஷயங்களையும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட சமுதாயத்தினர். இவர்களை ‘குர்ஆனிய சமுதாயம்’ என்றழைப்பதே மிகப் பொருத்தம்.

அல்லாஹ்விடமிருந்து அல்குர்ஆனைப் பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்கள் தாமாக முன்னின்று வழிகாட்டி, 23 வருட காலத்திற்குள் கட்டியெழுப்பிய சமுதாயத்தினரே நபித் தோழர்கள் என்போர்.

நபித் தோழர்களது பண்புகள் எவ்வாறு காணப்பட்டன?

 மனிதப் புனிதர்களான இவர்கள், அழுத்தமான இறைவிசுவாசம், உறுதி குலையாமை, ஆழ்ந்த அறிவு, நீதி, நேர்மை, அன்பு, கருணை, உண்மை நிறையப் பெற்றவர்களாய்க் காணப்பட்டனர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உடையவர்கள். இவர்களது ஆடம்பரமற்ற வாழ்க்கை, சுயநலமற்ற சேவை, கற்பு நெறி தவறாமை, உளத் தூய்மை இளகிய மனம் போன்ற அனைத்தும் உலக வரலாற்றில் தன்னிகரற்றுத் திகழ்கின்றன. இவர்களது வீர தீரம், வணக்க வழிபாட்டில் காணப்பட்ட ஆர்வம், ஷஹாதத் எனும் உயிர்த் தியாக வேட்கை, உலகத்தைப் பற்றிய தெளிவான கண்ணோட்டம், அழகிய நிர்வாகம் போன்றவற்றுக்கு வரலாறு சாட்சி பகருகின்றது. இவர்கள் தராசின் முன் முனை போல் பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்கினார்கள். மக்களோடு பரிவோடும் பாசத்தோடும் பழகுவார்கள். நலம் நாடும் பண்பும், ஆழ்ந்த அன்பும் கொண்ட குடும்பத் தலைவர்களாய் மிளிர்ந்து, குடும்ப வாழ்வில் மிகவும் பொறுப்புணர்வுடனும், கரிசனையோடும், பணியார்வத்துடனும் செயற்பட்டனர். ஏழையாக இருந்தவர்கள் பொறுமையும், போதுமென்ற மனமும் கொண்டிருந்தனர். பணக்காரராய் இருந்தவர்கள் இறைவனுக்கு நன்றியுள்ளவராய், வாரி வழங்கும் வள்ளல்களாய்த் திகழ்ந்தனர்.

لَن تَنَالُواْ الْبِرَّ حَتَّى تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَ

உங்களுக்கு விருப்பமானவற்றை (இறை வழியில்) செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது [ஆல இம்றான்: 92] என்ற குர்ஆன் வசனம் அருளப்பட்ட மறுகணமே பெரும் செல்வந்தரான அபூதல்ஹா (ரலி) அவர்கள் அவருக்கு மிகவும் விருப்பமான செழிப்பான, பயன்மிக்க பைரஹா எனும் ஈச்சந்தோப்பை, தனது உறவினர்கள் மத்தியில் பகிர்ந்தளித்தார்கள். இவ்வாறு அல்குர்ஆன் வசனங்கள் இறக்கியருளப்பட்ட போது அவற்றை முழுமையாகச் செயற்படுத்தும் செயல்வீரர்களாகத் திகழ்ந்தார்கள்.
அறிவுத் தாகம் கொண்டவர்கள்:

குர்ஆனையும் சுன்னாவையும் கற்றுக் கொள்வதில் பேரார்வம் கொண்டவர்களாய்க் காணப்பட்டனர். கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய எண்ணமும், அதற்கான அர்ப்பணமும் அறிவொளி பரவக் காரணம் என்பதற்கு திண்ணைத் தோழர்களே உதாரணம். மஸ்ஜிதுந் நபவிக்குப் பக்கத்தில் ஒரு பெரிய திண்ணை. அதனை கல்வியின் மீது தீராத ஆர்வம் கொண்ட ஒரு குழுவினர் இருப்பிடமாகக் கொண்டனர். கற்பதும், கற்பிப்பதும் இவர்களது முக்கிய பணி. இரவு, பகல் என எந்நேரமும் அறிவொளி பரப்பி வந்த உத்தமர்களே அஸ்ஹாபுஸ்ஸுப்பா என்ற திண்ணைத் தோழர்கள். இவர்கள் மட்டுமன்றி ஏனைய நபித் தோழர்களும், கற்பதிலும், கற்பிப்பதிலும் பேரார்வம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். கல்வி கற்பதற்காகவும், அதனைப் போதிப்பதற்காகவும் மிக நீண்ட தூரம் பயணம் மேற்கொண்ட அறிவுத்தாகம் கொண்டவர்களே நபித் தோழர்கள்.

நபித் தோழர்களது சமுதாய வாழ்வு

ஒரே கொள்கையை ஏற்றுக் கொண்ட அவர்கள். அதன் வழியிலான ஒரு சமுதாயமாக அமைந்து, நபிகளார் தலைமையில் வீறுநடை போட ஆரம்பித்தனர். இதன் பயனாக பல்வேறு கூட்டு முயற்சிகள் உருவாகி, அவை வளர்ச்சியடைந்தன.

நபித் தோழர்களுக்கு மத்தியில் உருவான சமூக உணர்வுகள்

அண்டை, அயலாருடன் இணக்கமாக வாழ்தல், பரஸ்பரம் உதவிசெய்து கொள்ளுதல், பெரியோருக்கு மரியாதையும் சிறியோருக்கு அன்பும் செலுத்துதல், கோள், புறம், அவதூறு, பொய் போன்றவற்றைத் தவிர்த்தல், தீமைகளுக்கு இடம் கொடுக்காதிருத்தல், வீண் சண்டை சச்சரவுகளைத் தவிர்த்தல், ஏழைகளுக்கும் தேவையுள்ளோருக்கும் உதவுதல், ஒழுக்க வரம்புகளை மீறாத வகையில் இஸ்லாம் விரும்பும் கூட்டு முயற்சிகளில் ஈடுபடல் என்பனவாகும்.

நபித் தோழர்களது பொருளாதாரச் சிந்தனை

வியாபாரம், விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துதல். வட்டியில்லா நிதிமுறை உருவாக்கல். பொது நிதியம் (பைத்துல் மால்) உருவாக்கல், ஸகாத் மற்றும் தான தர்மங்களை நடைமுறைப்படுத்துதல், தொழிலாளர் உரிமைகளைப் பேணல், அழகிய கடன் வழங்கல், இஸ்லாத்திற்கு இணக்கமான வரிகள் கொண்டுவரல் போன்றனவாகும்.

நபித் தோழர்களது அரசியல் அமைப்பு

பொது நிர்வாகம், ஒழுங்கு, கட்டுப்பாடு, சட்டம், நீதி, தண்டனை, யுத்தம், சமாதானம், ஒப்பந்தங்கள், முஸ்லிமல்லாதாரின் பாதுகாப்பு, அவர்களது உரிமைகள் ஆகியன தொடர்பான அனைத்தும் பொதிந்ததாக அமைந்திருந்தது. அல்குர்ஆனின் பல இடங்களில் நபித் தோழர்கள் குறித்து இறைவன் தனது திருப்தியை வெளிக்காட்டியுள்ளான். மக்காவிலிருந்து மதீனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட, கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமைந்த பயணத்தில், நபியவர்களோடு தன்னையும் அர்ப்பணித்த அபூபக்கர் (ரலி), பயணம் மேற்கொள்ளப்பட்டதை காபிர்கள் அறிந்து கொள்ளாதிருப்பதற்காக நபியவர்களது விரிப்பில் தனது உயிரையும் பணயம் வைத்து உறங்கிய வீரர் அலி (ரலி) போன்ற நபித் தோழர்களது வரலாறுகள் ஏகத்துவத்துக்கான அவர்களுடைய பங்களிப்பைக் காட்டுகின்றன.

பெருமானாரது மகளைத் திருமணம் முடித்திருந்த உஸ்மான் (ரலி) அவர்களின் அருங்குணத்துக்காக, அம்மகள் இறந்தபின் மற்ற மகளையும் திருமணம் முடித்து வைத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் குணத்தின் குன்று, அமைதியின் உறைவிடம் என வரலாற்றில் போற்றப்படுமளவுக்கு உஸ்மான் (ரலி) அருங்குணங்கள் நிறைந்தவராயிருந்தார்கள்.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தையே நீதிப் பரிபாலனத்தால் விரிவடையச் செய்தவர் உமர். இவரது சில கருத்துக்களுக்கேற்ற வண்ணம் இறைவன் வேதவெளிப்பாட்டையே இறக்கியுள்ளான். கிப்லா மாற்றப்பட வேண்டும், நபியின் மனைவியர் ஹிஜாப் அணிய வேண்டும், நயவஞ்சகர்கள் மீது ஜனாஸாத் தொழுகையில்லை என்பன போன்ற இவரது கருத்துக்களுக்கேற்ப அல்குர்ஆன் இறங்கியது என்ற நபிகளாரின் பொன்மொழி புகாரி கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு உலக வரலாற்றையே சீர்த்திருத்திய இவர்களுக்கும், தம் உயிரைத் தியாகம் செய்து போர்க்களங்களில் ஷஹீதானவர்களுக்கெல்லாம் இறைவன் சுவனத்தை வாக்களித்துள்ளான்.

لَكِنِ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُواْ مَعَهُ جَاهَدُواْ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ وَأُوْلَئِكَ لَهُمُ الْخَيْرَاتُ وَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ أَعَدَّ اللّهُ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

எனினும், (அல்லாஹ்வின்) தூதரும் அவருடன் இருக்கும் முஃமின்களும் தங்கள் செல்வங்களையும் தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள். அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு. இன்னும், அவர்கள்தான் வெற்றியாளர்கள். அவர்களுக்காக அல்லாஹ் சுவனபதிகளைத் தயார் செய்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும் [அத்-தௌபா: 88-89].

رَّضِيَ اللّهُ عَنْهُمْ وَرَضُواْ عَنْهُ

(அவ்வாறே) இறைவன் இவர்கள் மீது திருப்தியடைகின்றான். இவர்களும் அல்லாஹ்வின் மீது திருப்தியடைகின்றார்கள் [அத்-தௌபா: 100]. சுருங்கக் கூறின் இவர்கள் சகல துறைகளிலும் மாணிக்கக் கற்களாய் ஒளிர்ந்தார்கள். பெருமானார் உருவாக்கிய மனிதப் புனிதர்களது வாழ்வுக்கு வரலாறு சாட்சி! இவர்களது புனிதத்துவம் பொருந்திய வாழ்வுக்கு இறைவனே சாட்சி!


ஹிஜ்ரீ பிறந்த வரலாறு 
ஆக்கம் : நூருத்தீன்


ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும். மாபெரும் இஸ்லாமியப் பேரணி, முஸ்லிம் மணமக்களைப் பல்லாண்டு வாழ்த்தி, ஹஜ்ஜிலிருந்து திரும்பியவர்களுக்கு என்று வாழ்த்து அச்சிட்டு ஊர்ப்பக்கம் போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள் அதிலும் “ஹி“ புள்ளி ஆண்டு எண் என்று இருக்கும். பெரிய எழுத்திலான ஆங்கில ஆண்டு விபரங்களுடன் அதைவிடச் சிறிய அளவில் ஹிஜ்ரீ விபரங்களும் குறிப்பிட்டிருப்பார்கள்.

நம்மில் மிகப் பெரும்பாலானவர்கள் அதைப் படித்துவிட்டு, ஹிஜ்ரீ விபரங்களை மட்டும் காஃபி ஃபில்டரில் கவனமாய் வடிகட்டிவிட்டு நிகழவிருக்கும் விசேஷத்தின் ஆங்கில ஆண்டு, மாதம், நாள் ஆகியனவற்றை மனதில், டைரியில், காலண்டரில், சுவற்றில், செல்ஃபோனில் இப்படி எங்காவது குறித்து வைத்துக் கொள்வோம்.

நோன்பு, அதைத் தொடரும் பெருநாள், ஹஜ் இதெல்லாம் ஹிஜ்ரீ ஆண்டுடன் சம்பந்தப்பட்டவை என்பது மட்டும் ஏறக்குறைய நம் அனைவருக்கும் தெரியுமே தவிர மற்றபடி அதற்குப் பெரிய முக்கியத்துவம் எதுவும் நம் வாழ்க்கையில் கிடையாது.

ஆங்கில ஏகாதிபத்தியம் பரவி, உலக நாடுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளை ”நல்லதுக்கும் கெட்டதுக்கும்” ஆதர்ச நாயகனாய் ஏற்றுக் கொண்டபின் அவர்களது காலண்டரும் உலகிலுள்ள பெரும்பாலான சமூகத்திற்கு அடிப்படையான நாள்காட்டியாகி விட்டது. முஸ்லிம் சமூகங்களும் “ஊரோடு ஒத்துவாழ்” என்று அப்படியே ஏற்றுக் கொண்டன. “ஹேப்பி நியூ இயர்” என்றால் அது சனவரி 1!

என்றாலும், சம்பிரதாயமோ, அவசியமோ, முஸ்லிம்களே அக்கறை செலுத்தாவிட்டாலும் அவர்களுடைய வாழ்வில் ஹிஜ்ரீ ஓர் அங்கம். அதனால்தான் விட்டகுறை தொட்ட குறையாக போஸ்டர்கள், காலண்டர்கள், அழைப்பிதழ்கள் என்று ஹி.!

ஹிஜ்ரீ துவங்கி 1432 ஆண்டுகள் ஆகிவிட்டன. அது ஏன், எப்படி என்பதை அறிந்து கொள்ள ஹிஜ்ரா பரிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஹிஜ்ரா?

அனைவருக்கும் புலம்பெயர்தல் தெரிந்திருக்கும். அதுதான் அரபு மொழியில் ஹிஜ்ரா. பிறமொழிகளில் migration, புலம்பெயர்தல் என்று யதார்த்தமாய்க் கையாளப்படுவதைப் போலன்றி ஹிஜ்ரா என்றதுமே அந்த வார்த்தைக்கு இஸ்லாமிய வழக்கில் பெரும் முக்கியத்துவம், புனிதம் வந்து ஒட்டிக் கொள்கிறது. காரணம் இருக்கிறது.


கையை இறுகப் பற்றிக்கொண்டால் 1432 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று மக்காவை எட்டிப்பார்த்துவிட்டு வந்துவிடலாம்.

அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மதுக்கு அப்பொழுது 40 வயதிருக்கும். அனாச்சாரத்தில் மூழ்கிக் கிடந்தது அரேபியா. அவற்றையெல்லாம் பார்த்து வெறுத்து ஓதுங்கி, மனைவியும் மக்களுமாய்த் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார் அவர். திடீரன்று ஒருநாள் வானத்திலிருந்து வந்திறங்கினார் வானவர் தலைவர் ஒருவர் - ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்). "எல்லாரையும் எல்லாவற்றையும் படைத்தவன் யார்?" என்ற ஒற்றைக் கேள்விக்கான விடை தேடிக் குகையில் அமர்ந்திருந்த முஹம்மதுவைத் தட்டியெழுப்பி, கட்டிப்பிடித்து இறுக்கித் தழுவி, ”இன்றிலிருந்து தாங்கள் இறைத்தூதர்” என்ற செய்தியையும் குர்ஆன் வசனங்கள் ஐந்தையும் அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

முஹம்மது, நபித்துவம் வழங்கப்பெற்ற தூதரானார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஆரம்பித்தது மனித குலத்தில் ஒரு திருப்பம்.

சிலை வணக்கம், அது சார்ந்த சாஸ்திரம், சம்பிரதாயம் இது எதுவும் கிடையாது, ஒரே ஒருவன்தான் இருக்கிறான். அவன்தான் அனைத்தையும் படைத்தான், பரிபாலிக்கிறான், முடித்து வைப்பான், தீர்ப்பு வழங்குவான், மறுமை துவங்கும் என்றெல்லாம் பேச ஆரம்பித்ததும்,  பலர் சிரித்தார்கள், மிகச் சிலர் “அப்படியா? ஏக இறைவன் ஒருவன்தானா? நீங்கள்தான் அவனது நபியா? எனக்கு நியாயமாய்ப் படுகிறது, ஏற்றுக்கொண்டேன்,” என்றார்கள்.

சிரித்தவர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது. நாளாக நாளாகக் கோபம் பெருக்கெடுத்தது. “இதென்ன இந்த மனிதர் புதிதாய்க் குழப்பம் விளைவிக்கிறார்? இவரை ஏற்றுக் கொண்டவர்களைக் கொடுமைப் படுத்தினால் வழிக்கு வருவார்கள்,” என்று துவங்கியது கொடுமை. அது எழுத்தில் எழுதி மாளாத கொடுமை!

“ஒரே இறைவன், முஹம்மதே இறுதி நபி,” என்று சொன்ன காரணத்திற்காக ஒருவரை, அதுவும் ஒரு பெண்ணை, அவருடைய பிறப்புறுப்பிலேயே ஈட்டி செருகிக் கொல்லுமளவுப் பெருங்கொடுமை தலைவிரித்தாடியது மக்காவில்.

இஸ்லாத்தை ஏற்ற சின்னஞ்சிறுக் கூட்டம், மக்கா நகரில் வாழ்ந்து கொண்டிருந்த பென்னம்பெரிய கூட்டத்தினரிடம் மிதி, உதை பட்டது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள். பொறுமையின் எல்லைக்கு விரட்டப்பட்ட அவர்களில் சிலர், நபியவர்கள் அனுமதியின் பேரில் சொத்து, சுகம், நிலம் ஆகியனவற்றை மக்காவில் விட்டுவிட்டு, எடுத்துச் செல்ல முயன்ற சுமையோடு அபீஸீனியா நாட்டிற்கு புலம்பெயர்ந்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் அன்றுதான் ஆரம்பித்தது ஹிஜ்ரா. முதல் ஹிஜ்ரா.

நாமறிந்த புலம் பெயர்தலெல்லாம் இன்றும் சர்வ சாதரணமாய் நடப்பதுதான். தொழிலுக்காக, வேலைக்காக, சொகுசுக்காக, திருமணத்திற்காக இப்படியான ஏதோ ஒரு காரணத்திற்காக நாள்தோறும் ஊர்தோறும் புலம்பெயர்தல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதிலெல்லாம் ஏதும் விசேஷமில்லை.


ஆனால் இஸ்லாத்தில் ஹிஜ்ரா என்பது மட்டும் சிறப்பு! தனிச் சிறப்பு!

இறைவன் ஒருவனே என்று ஏற்றுக்கொண்டு அவனைத் தொழ, வழிபட என்று ஆரம்பிக்கும்போது தனிமனித சுதந்தரம் என்பதெல்லாம் கெட்ட சொல்லாய் மாறி, அட்டூழியம் நிகழ்கிறதே, வழிபாட்டு உரிமையெல்லாம் தடுக்கப்படுகிறதே, அதற்கு இணங்கிவிடாமல், இறைவனுக்காகத் தனது அனைத்தையும் துறந்து அந்தத் தனிமனிதன், தனது உறவுகள், உடமைகள், சொத்துகள் என அனைத்தையும் துறந்து, தான் பிறந்த மண்ணிலிருந்து  வெளியேறுவதுதான் ஹிஜ்ராவிற்கு தனிச் சிறப்பைப் பெற்றுத் தருகிறது. அவனுக்காக, அந்த ஒரே இறைவனுக்காக, சட்டென்று அனைத்தையும் உதறிவிட்டுக் கிளம்பிவிடுவதுதான், உலக மகாச் சிறப்பைப் பெற்றுத் தருகிறது.

எந்த அளவிற்கு?

குழந்தையாய், பிறந்த பச்சிளங் குழந்தையாய் புதிதாய் ஆகிவிடுகிறான் அம்மனிதன். அப்படியானால் அதுவரை அவன் செய்திருக்கக்கூடிய பாவம், தீங்கு? அதெல்லாம் துடைத்து எறியப்பட்டு, புதிசாய், புத்தம் புதிசாய் அவனுக்கு மறுபிறப்புத் தொடங்குகிறது. அதனால்தான் ஹிஜ்ரா புனிதம். ஏக இறைவன் நிர்ணயித்த புனிதம்.

முதலில் ஒரு குழு அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரா மேற்கொண்டது என்று பார்த்தோமா? அதற்கடுத்து முஸ்லிம்கள் மற்றொரு குழுவாய்க் கிளம்பி மதீனாவுக்குச் சென்றார்கள். அந்த முஸ்லிம்களுக்கெல்லாம் அது மிகப்பெரும் சிறப்பையும் தரத்தையும் அளித்தது. பட்டமாய் ஒட்டிக்கொண்டது. ஹிஜ்ரா அவர்களின் தரச் சான்றிதழாய் மின்னியது. ஆஸ்கர், நோபல், இத்தியாதி என்று எதுவும் அதற்கு நிகரில்லை.

மக்காவிலோ நாளொரு வேதனையும், பொழுதொரு சோதனையுமாகத்தான் முஸ்லிம்களுக்கு வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது. 13 ஆண்டுகள் ஆகியும் அது முடிவிற்கு வரவில்லை. மாறாய், குரைஷிகளின் அட்டகாசம் பெருகிக் கொண்டு இருந்தது.

இந்நிலையில் மதீனாவில் உள்ள மக்கள் நபியவர்களுடன் அகபா உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு அங்கு இணக்கமான சூழ்நிலை உருவானதும் சிறுகச் சிறுக முஸ்லிம்கள் அந்நகருக்கு ஹிஜ்ரத் மேற்கொள்ள ஆரம்பித்தனர். நபியவர்கள் மட்டும் காத்திருந்தார்கள். ஆனால் நிலைமை நாளுக்குநாள் மோசமாகி, அவர்களைக் கொல்வதற்கே குரைஷிகள் தயாராகிவிட, நபியவர்களுக்கு இறைவனிடமிருந்து அனுமதி வந்தது. “புலம்பெயருங்கள்!”

தோழர்கள் வரலாற்றில் வாசகர்கள் படித்திருக்கலாம். இங்கு அதைச் சற்று விளக்கமாகப் பார்த்துவிடுவோம்.

அபூபக்ருவின் இல்லத்திற்குக் காலையிலோ மாலையிலோ நபியவர்கள் வருகை என்பது தவறாத வழக்கம். அந்தளவு தோழமை. மிகவும் அலாதியான தோழமை. இருவருக்கும் இடையே இருந்த அணுக்கம் ஓர் அழகிய உன்னதம். ஆனால் அன்று நண்பகல் நேரம். மக்காவில் மக்கள் வீட்டினுள் அடங்கிக் கிடந்தனர். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அந்நேரத்தில் அபூபக்ருவின் வீட்டிற்கு வந்தார்கள் நபியவர்கள். அந்நேரம் அங்கு அவரின் இரு மகள்கள் அஸ்மா, ஆயிஷா - ரலியல்லாஹு அன்ஹுமா - மட்டுமே இருந்தனர்.

"விஷயம் வெகுமுக்கியம் போலிருக்கிறது. இல்லையெனில் இந்நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் வரமாட்டார்களே" என்று ஆச்சரியத்துடன் அவரை வரவேற்றார் அபூபக்ரு.

அவரது கட்டிலில் அமைதியாக அமர்ந்து "உங்களுடன் உள்ள இவர்களை ஒதுங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்" என்றார்கள் நபியவர்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இவர்கள் என்னுடைய மகள்கள்தாம். என்ன விஷயம்?"

"நான் புலம்பெயர எனக்கு அனுமதி கிடைத்துவிட்டது"

"அல்லாஹ்வின் தூதரே, தோழமை?" நானும் உங்களுடன் வர அனுமதியுண்டா என்பதை அப்படிக் கேட்டார் அபூபக்ரு.

"ஆம்! தோழமை"

அழுதார் அபூபக்ரு; ஆனந்தத்தால் அழுதார்! மகிழ்ச்சியிலும் இப்படி அழமுடியுமா என்பதை ஆச்சரியத்துடன் பார்த்தார் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.


"அல்லாஹ்வின் தூதரே! இதோ என்னுடைய இரு ஒட்டகங்கள். இத்தருணத்திற்காகவே நான் தயார்ப்படுத்தி வைத்திருந்தேன்"

"அவற்றிக்கான விலைக்கே நான் பெற்றுக் கொள்வேன்" என்றார்கள் முஹம்மது நபி.

இதென்ன பேச்சு? அப்படியெல்லாம் இல்லை, "இது நான் தங்களுக்கு அளிக்கும் நன்கொடை" என்றார் அபூபக்ரு.

"ஓ அபூபக்ரு! இந்தப் பயணம் அல்லாஹ்விற்காக மேற்கொள்ளப்படும் பயணம். அதற்கு உண்டாகும் செலவை நான் எனது பணத்திலிருந்த அளிக்கவே விரும்புகிறேன். ஏனெனில் எனது செலவிற்கு உண்டான வெகுமதியை நான் இறைவனிடம் ஈட்ட விரும்புகிறேன்"

இறைவனின் தூதர், இறைவனுக்காகத் தான் அடைந்த துன்பம், மேற்கொள்ளப் போகும் அசாத்தியச் சோதனைகள் என்பதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. இறைவனின் அளவற்ற வெகுமதி – அதை எவ்வகையிலெல்லாம் ஈட்ட முடியுமோ அவ்வகையிலெல்லாம் ஈட்டுவதற்கு முன்நின்றார் அந்த மாமனிதர் - ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!

பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைக் கிடுகிடுவென செய்தார்கள் அஸ்மாவும் ஆயிஷாவும். உணவை எடுத்து வைத்து உண்பதற்கான விரிப்பு அடங்கிய பயண மூட்டை தயாரானது. அந்த மூட்டையின் பையை எதைக் கொண்டு கட்டுவது என்று யோசித்த அஸ்மா தமது இடுப்பு வார்த்துணியை இரண்டாகக் கிழித்து அதில் ஒன்றைக்கொண்டு கட்டினார். அன்றிலிருந்து அவருக்கு, "தாத்துந் நிதாக்கைன் வாரிரண்டு வனிதை" என்று பட்டமே ஏற்பட்டுவிட்டது.

மக்காவில் தன்னைக் காணவில்லை என்றதும் குரைஷிகளுக்கு நிச்சயமாய் மதீனா நினைவிற்கு வரும்; மதீனாவுக்குச் செல்வோர் அனைவரும் பயணிக்கும் பாதையைத் தவிர்ப்பதே உசிதம்; அதற்கு மாற்றுவழி தெரியவேண்டும். அதற்கென அப்துல்லாஹ் இப்னு உரைகத் என்பவரை நியமனம் செய்து கொண்டார்கள் நபியவர்கள். அப்துல்லாஹ் ஒரு மிகத் தேர்ந்த வழிகாட்டி. முஸ்லிம் அல்லன் என்றபோதிலும் நம்பிக்கைக்கு உரியவன். அவனிடம் இரு ஒட்டகங்களையும் ஒப்படைத்து, "இதைப் பாதுகாப்பாக பராமரிக்கவும் குறிப்பிட்ட நாளன்று குறிப்பிட்ட இடத்திற்கு இவற்றை ஓட்டிக் கொண்டு வரவும்" என்றும் தகவல் அறிவிக்கப்பட்டது.


நபியவர்கள் புலம்பெயர்ந்து மதீனாவுக்குச் செல்ல உருவான திட்டம் அலீ, அபூபக்ரு மற்றும் அவர் குடும்பத்தினர் - ரலியல்லாஹு அன்ஹும் - தவிர வேறு யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

இரவு கவிழ்ந்தது. முஹம்மது நபியை அவரது வீட்டில் புகுந்து கொலை புரிய குரைஷிகளின் கூட்டணிக் கூட்டம் பதுங்கிவர, அலீயைத் தமது கட்டிலில் உறங்க வைத்து, குரைஷிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தமது வீட்டிலிருந்து வெளியேறினார்கள் நபியவர்கள். அபூபக்ருவின் வீட்டிற்கு வர, அவர் தயாராய்க் காத்திருந்தார். அவரது வீட்டின் பின்புறமிருந்த ஒரு சிறு வாயிலின் வழியே இருவரும் வெளியேறினார்கள். அங்கிருந்து உடனே மதீனா கிளம்பாமல் மக்காவிலிருந்து மதீனா நகருக்குச் செல்லும் பாதையின் நேரெதிர்த் திசையில் - யமனுக்குச் செல்லும் வழியில் - இருவரும் பயணித்து தவ்ருக் குகையை அடைந்து, பதுங்கிக் கொண்டார்கள்.

குகை என்றவுடன் நம் கற்பனையில் மலை, மலையில் ஒரு பொந்துதான் தோன்றும். தவ்ருக் குகை அப்படியில்லை. ஒரு குழிபோல் ஆழமாயிருக்கும். அங்குதான் மறைந்திருந்தார்கள் முஹம்மது நபியும் அபூபக்ரும்.

நபியவர்கள் தப்பித்துவிட்டார்கள் என்பதை அறிந்த குரைஷிகள் கூட்டம் மக்காவெங்கும் தேடிப்பார்த்து அவர்களைக் காணவில்லை என்றதும் வழித்தட வித்தகர்களையெல்லாம் திரட்டிக் கொண்டு முஹம்மது எந்தப் பாதையில் தப்பித்திருப்பார் என்று தேடத் துவங்கியது. தேடித்தேடி பின்பற்றி, சரியாகத் தவ்ருக் குகை அமைந்துள்ள மலையின் அடிவாரம்வரை வந்துவிட்டது அக்குழு.

அபூபக்ரு நிமிர்ந்து பார்த்தால் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கும் அவர்களுடைய கால்கள் தெரிந்தன. திகிலில் வருந்தி கண்ணீர் விட்டார் அபூபக்ரு.

"ஏன் அழுகை?" என்பதுபோல் அவரை இதமாய்ப் பார்த்தார்கள் நபியவர்கள். அபூபக்ரு கிசுகிசுப்பான குரலில் கூறினார்.

"அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மேல் ஆணையாகக் கூறுகிறேன். நான் எனக்காக அழவில்லை. தங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மட்டுமே என் அச்சம்"

திடமான ஆறுதல் வார்த்தைகள் வெளிப்பட்டன நபியவர்களிடமிருந்து "வருந்தாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" அல்லாஹ் அபூபக்ரின் உள்ளத்திற்கு சாந்தியை அருளினான்.

மேலே நின்று கொண்டிருந்தவர்களின் கால்களைப் பார்த்தபடி மெல்லிய குரலில் கூறினார், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது அவர்களது கால்களைக் குனிந்து பார்த்தாலே போதும், நம்மைக் கண்டு விடுவார்கள்"

"இருவருடன் துணைக்கு மூன்றாவதாக அல்லாஹ் இருக்க என்ன கவலை அபூபக்ரு?" எத்தகைய உறுதி அது? எத்தகைய ஆழ்மன நம்பிக்கை அது?

இதற்குள் மேலே நின்று கொண்டிருந்த ஒருவன் கூறினான், "நாம் இந்தக் குகைக்குள் இறங்கி அங்கு என்ன இருக்கிறது என்று பார்த்துவிடுவோம்."

அதைக் கேட்ட உமைய்யா இப்னு ஃகலஃப் ஏளனமாய்ச் சிரித்து, "இங்கே பார், குகையின் வாசலை ஒரு சிலந்தி வலை அலங்கரித்துக் கொண்டிருப்பதை. அந்த வலைக்கு முஹம்மதைவிட வயது அதிகம் இருக்கும்" படு இலேசான படைப்பினத்தைக் கொண்டு, ஆளரவமற்ற பாழடைந்த குகை என்ற எண்ணத்தை பராக்கிரம எதிரிகளின் மனதில் ஏற்படுத்தி, வெகு சுலபமாய் அற்புதம் நிகழ்த்தினான இறைவன். யார் அறிவார் அவன் வீரர்களை?

ஆனால் அபூஜஹ்லுக்கு மட்டும் குறுகுறுப்பு இருந்து கொண்டேயிருந்தது. "அல்-லாத் மற்றும் அல்-உஸ்ஸாவின் மீது சத்தியமாகச் சொல்கிறேன், முஹம்மது இங்குதான் எங்கேயோ இருக்கிறார். நம்மைப் பார்த்துக் கொண்டும் நாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டும் இருக்கிறார். அவருடைய மந்திர வித்தைதான் நாம் அவரைக் காணமுடியாமல் நம் கண்களைக் கட்டிப் போட்டுவிட்டது"

அபூபக்ருக்கு அப்துல்லாஹ் என்றொரு மகன் இருந்தார். சிறப்பான புத்திக் கூர்மையுள்ளவர். இந்த நிகழ்வின்போது அவர் பதின்ம வயதுச் சிறுவர். பிரமாதமான உளவுவேலை புரிந்தார் அப்துல்லாஹ். பகலெல்லாம் குரைஷியர்களுடனேயே வலம் வந்து அடுத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், அவர்களுடைய திட்டம் என்ன, எவ்வளவு குடைச்சலில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிந்து கொள்வது அவர் வேலை. இரவு படர்ந்ததும் குரைஷியர் கண்களில் படாமல் தவ்ருக் குகைக்கு வந்துவிடுவார். மக்காவின் நிகழ்வுகளையெல்லாம் அவர்களுக்கு அறிவித்துவிட்டு இரவு முழுவதும் அவர்களுடனேயே குகையில் தங்கிக் கொள்வார். பிறகு பொழுது புலரும் முன்னரே கிளம்பி தனது வீட்டிற்கு வந்துவிடுவார். இவருக்கு இந்தப் பணி என்றால், ஆமிர் இப்னு ஃபுஹைரா என்பவருக்கு வேறொரு பணி இருந்தது.

அபூபக்ரிடம் பணியாளாக இருந்தார் ஆமிர் இப்னு ஃபுஹைரா. அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்த தோழர். இரவானதும் ஆட்டு மந்தையொன்றை மேய்ச்சலுக்கு ஓட்டுவதுபோல் ஓட்டிக் கொண்டு தவ்ருக் குகைக்கு வந்துவிடுவார். ஆட்டுப்பால் நபியவர்களுக்கும் அபூபக்ருக்கும் உணவாகிவிடும். பிறகு விடிந்ததும் அப்துல்லாஹ் கிளம்பிச் சென்றவுடன் தமது மந்தையை ஓட்டிக்கொண்டு ஆமிர் மக்கா வந்துவிடுவார். அதிலொரு தந்திரமும் இருந்தது. வழித்தட வித்தகர்கள் இருந்தார்கள் என்று பார்த்தோமல்லவா? குரைஷிகளுக்கு ஏதேனும் சிறு சந்தேகம் ஏற்பட்டு அப்துல்லாஹ்வின் வழித்தடத்தைப் பின்பற்றிவிட்டால்? எனவே அப்துல்லாஹ் குகைக்கு வந்து திரும்பிய வழித்தடத்தையெல்லாம் வீடுதிரும்பும் ஆடுகள் கலைத்துக் கொண்டே வந்துவிடும். இத்தகைய எளிய உத்திகள் ஆத்திரத்தில் புத்திமட்டுப் போன எதிரிகளை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

இவ்விதமாய் மூன்று இரவுகள் கழிந்தன. அதற்கு அடுத்தநாள் காலை முன்னரே பேசி வைத்துக் கொண்டபடி வழிகாட்டி அப்துல்லாஹ் இப்னு உரைகத் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு தவ்ருக் குகைக்கு வந்துவிட்டான். அவர்களுடன் ஆமிர் இப்னு ஃபுஹைராவும் சேர்ந்து கொள்ள, இஸ்லாமிய வரலாற்றுப் பயணம் துவங்கியது - ஹிஜ்ரீ பிறந்தது.

ஆனால், ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

ஸஃபர் மாதம் 27இல் துவங்கியது பயணம். ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப்பின் ரபீஉல் அவ்வல் 23ஆம் நாள் யத்ரிப் வந்தடைய அந்நகரம் மதீனத்துந் நபவீ - நபி புகுந்த பட்டணம் – என்ற புதுப்பெயருடன் புதுவரலாற்றிற்குத் தயாரானது. நவீன போக்குவரத்து இல்லாத காலகட்டமில்லையா? தவிரவும் பின்தொடரும் மக்கத்துக் குரைஷிகளிடமிருந்து தப்பிக்க சுற்றுவழியில் பயணித்து அவர்கள் ஒட்டகத்தில் மதீனா வந்தடைய ஒருமாத காலம் ஆகிப்போனது.

ஹஜ்ஜுக்குச் செல்ல நேரிடும்போது, மக்கா-மதீனா நாலரை மணி நேர பஸ் பிரயாணத்தின்போது எட்டரை மணி நேரம் அதிகப்படியாகக் காத்திருக்க நேர்ந்தால், நபியவர்களின் அந்தப் பயணத்தை அசைபோட்டுக் கண்ணை மூடிக்கொண்டால் தூங்கிவிடலாம். கனவில் ஓரிரு சொட்டு நீரும் சுரக்கலாம்.

அதன்பிறகு, மக்காவிலிருந்து ஏனைய முஸ்லிம்கள் சிறுகச் சிறுக மதீனா வந்து சேர்ந்தார்கள். பிற்பாடு, அபீஸீனியாவிலிருந்த மற்ற முஸ்லிம்களும் மதீனாவிற்குக் கிளம்பி வந்துவிட்டார்கள்.

அப்பொழுதும் ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

நபியவர்களின் மறைவிற்குப் பிறகு அபூபக்கரு ரலியல்லாஹு அன்ஹு ஏறத்தாழ இரண்டரை ஆண்டு ஆட்சி செலுத்திவிட்டு மறைய, அப்பொழுதும் ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

பிறகு கலீஃபாவாய்த் தலைமை ஏற்றுக்கொண்டார் உமர் ரலியல்லாஹு அன்ஹு. இந்த முதல் இரண்டு கலீஃபாக்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமும் அதன் ஆளுமையும் அரேபியா நாட்டு எல்லையைக் கடந்து பரவ ஆரம்பித்தன. இஸ்லாமிய வரலாறும் வளர ஆரம்பித்தது! வரலாறு வளர்ந்தால் குறிக்கப்படவேண்டுமில்லையா? அப்பொழுது அவர்களிடம் தேதி உண்டு, மாதம் உண்டு. ஆண்டு?

அப்பொழுதும் ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

உமர் பின் கத்தாப் ஆட்சி செலுத்த ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டிருக்கும். ஒருநாள் அவருக்குக் கடிதம் ஒன்று வந்தது. எழுதியவர் எத்துணைப் பெரிய ஒரு விஷயத்திற்குத் தனது கடிதம் வித்திடப்போகிறது என்பதை அப்பொழுது அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது, அது வெறும் குசலம் விசாரிக்கும் கடிதமா, நிர்வாகம் சம்பந்தப்பட்டதா என்பதெல்லாம் இங்கு முக்கியமில்லை. ஷஃ'பான் மாதம் இத்தனாம் தேதி என்று குறிப்பிட்டு கடிதம் எழுதப்பட்டிருந்தது.

கடிதத்தைப் படித்த உமர், “ஷஃ'பான் மாதம் என்றால்? கடந்த ஷஃ'பானா? அடுத்த ஆண்டின் ஷஃ'பானா? இந்த ஆண்டின் ஷஃ'பானா?,” என்றார்.

எந்த ஆண்டு என்று தெரிய வேண்டாமா? எப்படி நிர்ணயிப்பது? மக்காவிலிருந்து மதீனா புலம்பெயர்ந்த முஹாஜிரீன் தோழர்களையும், மதீனாவின் அன்ஸாரீத் தோழர்களையும் ஆலோசனைக்கு அழைத்தார் உமர்.

“நம் மக்களுக்காக ஆண்டு நிர்ணயம் செய்ய வேண்டும். எங்கிருந்து நம் வரலாற்றை ஆரம்பிப்பது? உதவுங்கள்.”

ஒருவர் ”ரோமர்களின் ஆண்டை உபயோகித்துக் கொள்ளலாமே” என்று தெரிவித்தார்.

”அட, அவர்கள் துல்கர்ணைன் காலத்திலிருந்து அல்லவா கணக்கு வைத்துள்ளார்கள். நமக்கு அது சரிபட்டு வராது,” என்று அந்த ஆலோசனை நிராகரிக்கப்பட்டது.

மற்றொருவர் பாரசீகர்களின் ஆண்டை உபயோகிக்கலாமே என்றதும், ”அது சரி, அவர்களுக்கு ஒவ்வொரு முறை ஒரு மன்னன் தேர்ந்தெடுக்கப்படும் போது, கர்ம சிரத்தையாய் முந்தைய மன்னனின் ஆண்டுக் கணக்கை கழித்துக் கட்டுவதுதான் வேலை. அதெல்லாம் சரிப்படாது,” என்று சொல்லிவிட்டார்கள். நமது அரசியல் கட்சிகளை மெச்சிக்கொள்ளலாம் போலிருக்கிறது. முந்தைய அரசின் திட்டங்களைத்தான் சொதப்புகிறார்கள். நல்லவேளையாக காலண்டரில் கைவைப்பதில்லை!

”எதற்கு அங்கேயும் இங்கேயும் தேடிக்கொண்டு? நமக்கு வாழ்வும், வழிகாட்டலும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்த வந்தது. இதையும் அவர்களிடமிருந்து பெற வேண்டியதுதான்,” என்று ஆலோசிக்க ஆரம்பித்தார்கள்.

”ஆம், அதுதான் சரி,” என்ற கருத்து வலுப்பெற்றதும் நபியவர்களின் வரலாற்றிலிருந்து நான்கு முக்கிய நிகழ்வுகளைத் தோழர்கள் குறிப்பிட்டனர்.

ஒன்று, நபியவர்கள் பிறந்த ஆண்டு, அடுத்தது அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தைத் துவங்கிய ஆண்டு, அடுத்தது அவர்களது ஹிஜ்ரா, கடைசியாக அவர்கள் இறந்த ஆண்டு. இதில் எந்த நிகழ்வை அடிப்படையாக அமைத்துக் கொள்வது என்று அடுத்தபடியாகத் தொடர்ந்தது விவாதம்.

நபியவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள் என்பதில் தோழர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அதைப் போலவே அவர்கள் எந்த ஆண்டு தனது பிரச்சாரத்தைத் துவக்கினார்கள் என்பதிலும் அவர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது.

அவர்கள் இறந்த ஆண்டு என்றாலோ அதை அவர்களால் நினைத்தே பார்க்க முடியவில்லை. அது அவர்களுக்கு ஆற்றமாட்டா துயர். அவர்களின் இழப்பு அவர்களுக்கு சோகத்தை மீட்டெடுக்கும் ஒரு நிகழ்வு. அன்றைய நாள் அவர்களுக்கு உலகமே இருண்டு போனதைப் போலான ஒன்று. எனவே அந்த எண்ணம் கைவிடப்பட்டது.

“மக்காவிலிருந்து மதீனாவிற்கு நபியவர்கள் புலம் பெயர்ந்ததே நமக்கெல்லாம் மிக முக்கிய நிகழ்வு. நமது வரலாறு அங்கிருந்துதான் பெரிய திருப்புமுனையை அடைந்தது. அங்கிருந்து ஆரம்பிப்போம்,” என்று இறுதியில் ஒரு முடிவிற்கு வந்தார்கள்.

அலீ ரலியல்லாஹு அன்ஹுவிடம் கலந்தாலோசித்தார் உமர். “ஷிர்க்கில் மூழ்கியிருந்த நகரைவிட்டு நபியவர்கள் வெளியேறிய நாளிலிருந்தே முஸ்லிம்களின் ஆண்டிற்கான ஆரம்பம் அமையவேண்டும், அதுவே சரியானதாக இருக்கும்” என்பது அலீயின் ஆலோசனை.

அப்படியே முடிவானது!

ஆனால், நபியவர்களின் ஹிஜ்ரா பயணம் துவங்கியதோ ஸஃபர் மாதம். அது இஸ்லாமிய ஆண்டின் இரண்டாம் மாதம். அவர்கள் மதீனாவில் நுழைந்ததோ ரபீஉல் அவ்வல். அது மூன்றாம் மாதம். பிறகு முஹர்ரம் எப்படி முதல் மாதமாக தேர்ந்தெடுக்கப்பட்டது?

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அதற்கான காரணத்தை விவரித்துள்ளார்கள். ”ஸஃபர் மாதம் பிரயாணம் துவங்கியிருந்தாலும், புலம்பெயர்வதற்கான உறுதியான தீர்மானம் முஹர்ரம் மாதமே உருவாகியது. ஹிஜ்ரா மேற்கொள்ள முன்னோடியாய் அமைந்த இரண்டாம் அகபா உடன்படிக்கை துல்ஹஜ் மாதம் நிகழ்வுற்றது. அதற்கடுத்த மாதமான முஹர்ரமில்தான் ஹிஜ்ரா எண்ணம் உறுதியானது. எனவே அதுவே இஸ்லாமிய ஆண்டிற்குப் மிகப் பொருத்தமான முதல் மாதமாக இருக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டது.”

ஹிஜ்ரீ ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆட்சி செலுத்திய காலகட்டம் இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலம். அதில் ஹிஜ்ரீ ஆண்டின் நிர்ணயம் மிக முக்கியத் தீர்மானம். எல்லை தாண்டி விரிவடைந்து கொண்டிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திலுள்ள முஸ்லிம்களை ஒருங்கிணைக்க அது பேருதவி புரிந்தது.

இன்று ஹிஜ்ரீ 1432ஆம் ஆண்டு என்றால் அது வெறும் எண் அல்ல. அதன் துவக்கத்தில் இஸ்லாமிய வரலாற்றின் வேர் படர்ந்திருக்கிறது; தியாகங்களின் வரலாறு ஒளிந்திருக்கிறது!