ஞாயிறு, 16 செப்டம்பர், 2012



இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம் - 3
P. ஜைனுல் ஆப்தீன் அவர்களின் நூலிலிருந்து 

இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பார்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது உண்மையாக இருந்தால் அவர்களை அன்றைய மக்கள் இறைத் தூதர் என்று நம்பியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை இறைத் தூதர் என்று நம்பியிருந்தவர்களில் பலரும் அவர்களை விட்டு விலகியிருப்பார்கள்.

ஒருவரை இறைத் தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டால் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

இறைத்தூதர்கள் என்பதற்கான சான்றுகள்

இறைத் தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள்.

எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்? என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது (திருக்குர்ஆன் 17:94)

'நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்' என்று கூறினர் (திருக்குர்ஆன் 36:15)

நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம். (திருக்குர்ஆன் 26:186)

'நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!' (என்றும் கூறினர்) (திருக்குர்ஆன் 26:154)

'இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?' என்று கேட்கின்றனர். (திருக்குர்ஆன் 25:7)

'இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்' என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர். (திருக்குர்ஆன் 23:33)

'இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?' என்றனர். (திருக்குர்ஆன் 23:47)

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. 'இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?' என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர். (திருக்குர்ஆன் 21:3)

மனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத் தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் மக்கள் கருதினார்கள்.

மக்கள் இவ்வாறு எண்ணியதிலும் நியாயங்கள் இருந்தன. இறைத் தூதர் என்று ஒருவர் கூறியவுடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத் தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

மற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத் தூதர் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.

தனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத் தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களை அவர்களுக்குக் கொடுத்து அனுப்புகிறான்.

மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அந்த அற்புதங்களைக் காணும் போது அவர் இறைவனின் தூதர் தான் என்று நம்புவதற்கு நேர்மையான பார்வையுடயவர்களுக்கு எந்தத் தயக்கமும் ஏற்படாது.

இதன் காரணமாகவே எந்தத் தூதரை அனுப்பினாலும் அவருக்கு அற்புதங்களை வழங்கியே அனுப்பி வைத்ததாக திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் சுட்டிக்காட்டுகிறது.

(முஹம்மதே!) உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர். (திருக்குர்ஆன் 3:184)

(முஹம்மதே!) இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான். (திருக்குர்ஆன் 7:101)

அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளிவீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர். (திருக்குர்ஆன் 35:25)

அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவரவர் சமுதா யத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் முன்னரே பொய்யெனக் கருதியதால் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே வரம்பு மீறியோரின் உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம். (திருக்குர்ஆன் 10:74)

உங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறை யினரை அழித்திருக்கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம். (திருக்குர்ஆன் 10:13)

அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அவன் வலிமையுள்ளவன்; கடுமையாகத் தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 40:22)

அவர்களுக்கு முன் சென்ற நூஹுடைய சமுதாயம், ஆது, மற்றும் ஸமூது சமுதாயம், இப்ராஹீமின் சமுதாயம், மத்யன் வாசிகள், (லூத் நபி சமுதாயம் உள்ளிட்ட) தலைகீழாகப் புரட்டப்பட்டோரைப் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைத்தவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர். (திருக்குர்ஆன் 9:70)

அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்ததும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததும் இதற்குக் காரணம். அவர்களைத் தேவையற்றோராக அல்லாஹ் கருதினான். அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன். (திருக்குர்ஆன் 64:6)

'உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா?' என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ஆம் என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும். (திருக்குர்ஆன் 40:50)

நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம். இரும்பையும் அருளினோம். (திருக்குர்ஆன் 57:25)

இறைத் தூதர்கள் அனைவருக்கும் அற்புதங்கள் வழங்கப்பட்டன. அற்புதம் வழங்கப்படாமல் ஒரு இறைத் தூதரும் அனுப்பப்படவில்லை என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து அறியலாம்.

தான் செய்து காட்டும் அற்புதங்கள் மூலம் தான் ஒரு இறைத் தூதர் தன்னை இறைத் தூதர் என்று நிரூபிக்கும் நிலையில் இருக்கிறார்.

இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும். இறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்?

'நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத் தூதர் என்று நம்பினோம்; இன்று அவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே; இவரை விட யூதர்கள் அல்லவா ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள்' என்று அம்மக்களில் கனிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.

'இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள்' என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.

'எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத் தூதரை வீழ்த்தினார்கள்' என்பது தவறான தகவல் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம் புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.

சூனியம் வைக்கப்பட்டவர் அல்லர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த மக்கள் முரண்பட்ட இரண்டு விமர்சனங்களைச் செய்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது 'இவர் சூனியம் செய்கிறார்' என்று சில வேளை விமர்சனம் செய்தனர்.

வேறு சில வேளைகளில் 'இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும்' என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும்.

பல நபிமார்கள் இவ்வாறு விமர்சனம் செய்யப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

'நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்' என்று அவர்கள் கூறினர். (திருக்குர்ஆன் 26:153)

'நீர் சூனியம் செய்யப்பட்டவர்' என்று அவர்கள் கூறினர். (திருக்குர்ஆன் 26:185)

தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! 'மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்' என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான். (திருக்குர்ஆன் 17:101)

மற்ற நபிமார்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக எதிரிகள் விமர்சனம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர் என்று விமர்சனம் செய்ததாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.

'சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்று கிறீர்கள்' என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம். (திருக்குர்ஆன் 17:47)

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?' என்றும் 'சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்று கிறீர்கள்' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர். (திருக்குர்ஆன் 25:8)

'நபிகள் நாயகம் சூனியம் செய்யப்பட்டவர்' என விமர்சனம் செய்தவர்களை அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம் செய்கின்றன.

இறைத் தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விசயம். அதனால் அவரது தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றிருந்தால் இந்த விமர்சனத்தை இறைவன் மறுக்க மாட்டான்.

இறைத் தூதர் சாப்பிடுகிறார், குடிக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்ட போது சாப்பிடுவதாலோ குடிப்பதாலோ தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத் தான் செய்தார்கள் என்று பதிலளித்தான்.

ஆனால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறிய போது அநியாயக்காரர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான். சூனியம் வைக்கப்பட்டு இறைத் தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப் பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான்.

'இந்த வசனம் அருளப்படும் போது சூனியம் வைக்கப்படாமல் இருந்து, பின்னர் சூனியம் வைக்கப்படிருக்கலாம் அல்லவா?' என்று சிலர் பேசுவார்கள். இது ஏற்க முடியாததாகும்.

பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்கு சூனியம் வைக்கப்படுவதை அறிந்துள்ள இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை.

மேற்கண்ட இரண்டு வசனங்களையும் அடுத்த வசனங்களையும் இவர்கள் கவனித்தால் இத்தகைய தத்துவங்களைக் கூற மாட்டார்கள்.

(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது. (திருக்குர்ஆன் 25:9)

உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டு கிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது. (திருக்குர்ஆன் 17:48)

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்' என்று விமர்சனம் செய்தவர்களை வழி கெட்டவர்கள் என்று இங்கே இறைவன் பிரகடனம் செய்கிறான். சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின் படி நபிகள் நாயகத்துக்கோ, வேறு எந்த இறைத்தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ, முடக்கவோ இயலாது இதன் மூலம் உறுதியாகிறது.

அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டதாக வரும் ஹதீஸ்களின் நிலை என்ன? அவை ஆதாரப்பூர்வமானவை அல்லவா? புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான நூல்களில் நம்பகமானவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லையா?

இத்தகைய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நீங்கள் மறுக்கிறீர்களா? என்று சிலருக்கு கேள்வி எழலாம்.

திருக்குர்ஆனுக்கு முரணாக இருப்பதாலும், இஸ்லாத்தின் பல்வேறு அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதை நாம் மறுக்கும் போது ஹதீஸ்களையே மறுக்கிறோம் என்ற தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்த முயல்கின்றனர். திருக்குர்ஆனை மறுக்க வேண்டிய நிலை வந்தாலும் கூட அதற்குக் காரணமாக அமைந்த ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று இவர்கள் நினைக்கின்றனர்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸ்களைப் பற்றிப் பேசுவதற்கு முன் குர்ஆனும் நபிவழியும் மார்க்க ஆதாரங்கள்' என்பதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பேசுவோம்.


ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்களே!

திருக்குர்ஆன் எவ்வாறு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரமும் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் தான் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஹதீஸ்களின் துணையின்றி மார்க்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனாலும் ஒரு அடிப்படையான விசயத்தை நாம் மறந்து விடக் கூடாது.

நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல. குர்ஆனைப் பொருத்த வரை அனைத்து நபித்தோழர்களும் அது இறை வேதம் என்பதற்கு சாட்சிகளாக உள்ளனர்.

குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி 'இது என் இறைவனிடமிருந்து வந்தது' என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழார்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர்.

ஹதீஸ்களைப் பொருத்த வரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்.

ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும் ஒருவரே சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது.

எவ்வளவு தான் நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) இப்படிச் சொல்லியிருப்பார்களா என்ற கடுகளவு கூட குர்ஆன் விசயத்தில் சந்தேகம் வராது. ஹதீஸ்களைப் பொருத்த வரை இந்த நிலை கிடையாது.

ஆனாலும் நபித்தோழர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம். குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் ஏற்பட முகாந்திரம் இல்லை. குர்ஆனுடன் மோதும் போது 'இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது' என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிப்பது தான் முறையாகும்.

'ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது' என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடாமல், குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைப்பது தான் நேர்மையான பார்வையாகும். இந்த நேரத்தில் மட்டும் இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டு விட வேண்டும்.

இத்தகைய ஹதீஸ்கள் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் சரி தான்.

புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்ட சில ஹதீஸ்களை இங்கே நாம் உதாரணமாகக் குறிப்பிட்டால் இதில் அதிகத் தெளிவு கிடைக்கும்.

ஒரு குழந்தை தனது தாய் அல்லாத வேறு பெண்ணிடம் பாலருந்தினால் அந்தப் பெண், அக்குழந்தைக்குத் தாய் என்ற அந்தஸ்தை அடைந்து விடுவாள் என்பதை நாம் அறிவோம்.

இது பற்றி முஸ்லிம் 2634, 2635 வது ஹதீஸ்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

பத்து தடவை பாலருந்தினால் தான் தாய் பிள்ளை' எனும் உறவு ஏற்படும் என்று குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் இது ஐந்து தடவை என்று மாற்றப்பட்டது. இது திருக்குர்ஆனில் ஓதப்பட்டு வந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.

இதை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

அதாவது ஐந்து தடவை பால் அருந்தினால் தாய் என்ற உறவு ஏற்பட்டு விடும் என்று ஒரு வசனம் குர்ஆனில் இருந்ததாகவும், இந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆனில் இருந்ததாகவும் இந்த ஹதீஸில் கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை குர்ஆனில் அப்படி ஒரு வசனம் இருந்திருந்தால் அந்த வசனம் இன்றும் குர்ஆனில் நிச்சயம் இருந்தாக வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்திற்குப் பின் குர்ஆனில் உள்ள எதையும் நீக்கவோ, இல்லாததைச் சேர்க்கவோ முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே குர்ஆன் முழுவதும் எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டு விட்டதாலும், ஏராளமான நபித்தோழர்கள் முழுக் குர்ஆனையும் மனனம் செய்திருந்ததாலும் குர்ஆனில் இருந்த ஒரு வார்த்தை கூட விடுபடுவதற்கு வழியே இல்லை.

ஆனால் ஆயிஷா (ரலி) கூறுவது போல் ஒரு வசனம் குர்ஆனில் காணப்படவில்லை.

இந்த நிலையில் 'முஸ்லிம் நூலில் இடம் பெற்ற ஹதீஸாயிற்றே? நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே' என்று காரணம் கூறி இதை ஏற்றுக் கொண்டால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

'குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; நபிகள் நாயகம் காலத்திற்குப் பின் குர்ஆனில் இருந்த பல வசனங்கள் நீக்கப்பட்டன' என்ற கருத்து இதனால் ஏற்படும். குர்ஆன் இறைவனின் நேரடிப் பொறுப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதையே இந்தச் செய்தி கேள்விக்குறியாக்கி விடும்.

எனவே இந்த ஹதீஸை நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும்.

'முஸ்லிம் நூலில் நம்பகமானவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இதை நாங்கள் உண்மை என்று நம்புகிறோம்' என்ற முடிவுக்கு நாம் வந்தால் ஹதீஸை நாம் மறுக்கவில்லை என்ற பெயர் நமக்குக் கிடைக்கலாம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை குர்ஆனில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு வசனம் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அனைத்து நபித்தோழர்களாலும் நீக்கப்பட்டு விட்டதாக இதன் விளைவு அமையுமே? இதற்கு என்ன பதில்?

'குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; எந்த வசனத்தையும் யார் வேண்டுமானாலும் நீக்கி விடலாம்' என்ற நிலையில் தான் குர்ஆன் இருந்தது என்ற கருத்து ஏற்படுமே? இதற்கு என்ன பதில்?

இதற்கு நம்மிடம் பதில் இல்லையானால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதில் எங்கோ தவறு நேர்ந்திருக்க வேண்டும். இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்து விடும் கருத்தை ஆயிஷா (ரலி) கூறியிருக்க மாட்டார்கள் என்று நல்லெண்ணம் வைப்பது தான் உண்மை விசுவாசிகளின் நிலையாக இருக்க வேண்டும்.

இது போல் சுலைமான் நபியைப் பற்றி புகாரி உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்ற ஒரு செய்தியையும் உதாரணமாகக் கூறலாம்.

'இன்று இரவு நான் நூறு பெண்களுடன் உடலுறவு கொள்வேன். அவர்களில் ஒவ்வொருத்தியும் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் என்று சுலைமான் நபி கூறினார். அப்போது வானவர் 'இன்ஷா அல்லாஹ் கூறுங்கள்' என்று கூறினார். ஆனால் சுலைமான் நபி கூறவில்லை. மறந்து விட்டார். அவர் கூறியவாறு நூறு பெண்களுடன் உடலுறவு கெண்டார். அவர்களில் ஒருத்தியும் குழந்தை பெறவில்லை. ஒரே ஒருத்தி மட்டும் பாதி மனிதனைப் (குறைப் பிரசவம்) பெற்றெடுத்தார்.

இந்தச் செய்தி புகாரி 5242 வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுலைமான் நபிக்கு நூறு மனைவிகளோ நூறு அடிமைப் பெண்களோ இருந்ததாக வைத்துக் கொண்டாலும் ஒரு இரவில் அனைவருடனும் உடலுறவு கொள்வது சாத்தியமற்றதாகும். இது சாத்தியமற்றதா அல்லவா என்ற சர்ச்சையைத் தவிர்த்து விட்டு மார்க்க அடிப்படையில் மட்டும் இதனை ஆய்வு செய்வோம்.


தொடரும்...........


இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம் - 2
P. ஜைனுல் ஆப்தீன் அவர்களின் நூலிலிருந்து 

சூனியம் என்று பொருள் படும் ஸிஹ்ர் என்ற சொல் எந்தக் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டே நாம் தெளிவான முடிவுக்கு வந்து விடலாம்.

மூஸா நபி, ஈஸா நபி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளிட்ட நபிமார்கள் இறைவனின் அனுமதியுடன் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய போதெல்லாம் அவர்களின் எதிரிகள் 'இது சூனியம்' என்று வாதிட்டுத் தான் அவர்களை நம்ப மறுத்தனர் என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

'சூனியம் என்பது உண்மை அல்ல. அது ஓர் ஏமாற்றும் வித்தை. அந்த வித்தையைத் தான் இவர்கள் செய்து காட்டு கின்றனர்' என்று எதிரிகள் விமர்சனம் செய்ததிலிருந்து ஸிஹ்ர் என்றால் என்ன என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

ஸிஹ்ர் என்பது உண்மையாகவே நிகழ்த்தப்படும் அதிசயம் என்றிருக்குமானால், நபிமார்களின் அற்புதத்தைக் குறித்து ஸிஹ்ர் என்று விமர்சனம் செய்திருக்க மாட்டார்கள். ஸிஹ்ர் என்பது ஏமாற்றும் தந்திர வித்தை தான் என்பதற்கு இந்த வசனங்களும் வலுவான சான்றுகளாகத் திகழ்கின்றன.

மூஸா நபியின் காலத்தில்...
மூஸா நபியவர்கள் தம்மை இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்கான சான்றுகளை ஃபிர்அவ்ன் எனும் கொடுங்கோல் மன்னனிடம் முன் வைத்தார்கள்.

அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களை உண்மை என்று ஃபிர்அவ்ன் நம்ப மறுத்தான். இது சூனியம் (தந்திர வித்தை) என்றான். இவரை விடச் சிறந்த தந்திரக்காரர்கள் தனது நாட்டில் இருப்பதாகக் கூறி மூஸா நபியைப் போட்டிக்கு அழைத்தான்.

மூஸா நபியவர்க்ள அந்தப் போட்டிக்கு உடன்பட்டார்கள். இது பற்றி திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் எடுத்துக் காட்டுகிறது.
போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள் மகத்தான சூனியத்தைச் செய்து காட்டியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

'நீங்களே போடுங்கள்!' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.  (திருக்குர்ஆன் 7:116)

அவர்கள் செய்தது சாதாரண சூனியம் அல்ல. மகத்தான சூனியம் என்று மேற்கண்ட வசனம் கூறுவதுடன் அந்த மகத்தான சூனியம் என்ன என்பதையும் தெளிவுபடக் கூறுகிறது.

'மக்களின் கண்களை மயக்கினார்கள்' என்ற சொற்றொடரின் மூலம் அவர்கள் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. மாறாக மக்களின் கண்களை ஏமாற்றினார்கள். மகத்தான சூனியத்தின் மூலம் செய்ய முடிந்தது இவ்வளவு தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மற்றொரு வசனம் இதை இன்னும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

'இல்லை! நீங்களே போடுங்கள்!' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. (திருக்குர்ஆன் 20:66)

அவர்கள் செய்தது மகத்தான சூனியமே ஆனாலும் கயிறுகளையும், கைத் தடிகளையும் சீறும் பாம்புகளாக மாற்ற இயலவில்லை. மாறாக சீறும் பாம்பு போன்ற பொய்த் தோற்றத்தைத் தான் அவர்களால் ஏற்படுத்த முடிந்தது என்று இவ்வசனம் கூறுகிறது.

மற்றொரு வசனத்தில் சூனியம் என்பது மோசடியும் சூழ்ச்சியும் தவிர வேறில்லை என்று கூறப்படுகிறது.

'உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்' (என்றும் கூறினோம்.) (திருக்குர்ஆன் 20:69)

இவர்கள் செய்து காட்டியது சூனியக்காரன் செய்யும் சூழ்ச்சி தான் என்ற சொற்றொடரிலிருந்து சூனியம் என்பது தந்திர வித்தை தவிர வேறு இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

சூனியத்தை உண்மை எனக் கூறுவோரின் ஆதாரங்கள்

'சூனியம் என்பது கற்பனை அல்ல; மெய்யான அதிசயமே. அதன் மூலம் ஒரு மனிதனின் கை கால்களை முடக்கலாம். படுத்த படுக்கையில் அவனைத் தள்ளலாம். பைத்தியமாக ஆக்கலாம்' என்றெல்லாம் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் தமது கூற்றை நிரூபிக்க சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர்.

நபிகள் நாயகத்துக்கு சூனியம்

புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புக்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ்களை தங்களின் கருத்தை நிரூபிக்கும் முதல் ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

அந்த ஹதீஸ்கள் வருமாறு:

நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒரு நாள் என்னை அழைத்தார்கள். 'எனக்கு நிவாரணம் கிடைக் கும் வழியை இறைவன் காட்டிவிட்டான் என்பது உனக்குத் தெரியுமா' என்று கேட்டார்கள். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைப் பகுதியில் அமர்ந்து கொண்டார். மற்றொரு வர் என் கால் பகுதியில் அமர்ந்து கொண்டார். 'இந்த மனிதருக்கு ஏற்பட்ட நோய் என்ன?' என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். 'இவருக்குச் சூனியம் வைக்கப் பட்டுள்ளது' என்று மற்றவர் விடையளித்தார். 'இவருக் குச் சூனியம் செய்தவர் யார்' என்று முதலாமவர் கேட்டார். 'லபீத் பின் அல் அஃஸம் என்பவன் சூனி யம் வைத்துள்ளான்' என்று இரண்டாமவர் கூறினார். 'எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று முதலாம வர் கேட்டார். அதற்கு இரண்டாமவர் 'சீப்பிலும் உதிர்ந்த முடியிலும் பேரீச்சை மரத்தின் பாளையிலும் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று விடையளித்தார்.

'எந்த இடத்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று முதலாமவர் கேட்டார். 'தர்வான் என்ற கிணற்றில் வைக்கப்பட்டுள்ளது' என்று இரண்டாமவர் கூறினார் என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். பின்னர் அந்தக் கிணற்றுக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார்கள். அங்கு உள்ள பேரீச்சை மரங்கள் ஷைத்தான் களின் தலைகளைப் போன்று இருந்தது என்று என்னி டம் கூறினார்கள். 'அதை அப்புறப்படுத்தி விட்டீர் களா?' என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இல்லை. எனக்கு அல்லாஹ் நிவாரணம் அளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமையைப் பரப்பக் கூடாது என்று நான் அஞ்சுகிறேன்' என்று கூறினார்கள். பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 3268

தமது மனைவியருடன் தாம்பத்தியம் நடத்தாமல் தாம்பத்தியம் நடத்தியதாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. (புகாரி 5765)

இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) ஆறு மாதங்கள் நீடித்ததாக முஸ்னத் அஹ்மத் 23211 வது ஹதீஸ் கூறுகிறது.

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தன்னிலை மறந்து விடும் அளவுக்கு சூனியத்தால் ஆறு மாத காலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால் மற்றவர்களுக்கு ஏன் சூனியம் செய்ய முடியாது' என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான கருத்து போல தோன்றலாம். ஆனால் ஆழமாகப் பரிசீலனை செய்யும் போது நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவோ, அதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கவோ முடியாது என்ற கருத்துக்குத் தான் வந்தாக வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட இறை வேதம்

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது; அந்த பாதிப்பு ஆறு மாதம் நீடித்தது; தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு அமைந்திருந்தது' என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால் அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன.

திருமறைக் குர்ஆனின் நம்பகத் தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு முதலாவது விபரீதமாகும்.

தமக்குச் சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்றால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ - இறை வேதம் - சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும்.

தம் மனைவியிடம் இல்லறத்தில் ஈடுபட்டதைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால் இறைவனிடமிருந்து வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும். ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகி விடும்.

அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்ட காலம், எந்த ஆறு மாதம் என்ற விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் 'இது அந்த ஆறு மாதத்தில் அருளப்பட்ட தாக இருக்குமோ?' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடும்.

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் உள்ள ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும்.

திருக்குர்ஆனில் பொய்யோ, கலப்படமோ கிடையாது. முழுக்க முழுக்க அது இறைவனின் வார்த்தையாகும் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் நற்சான்று கூறுகிறது. குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்து வாசல்களையும் இறைவன் அடைத்து விட்டான். 'இது இறைவேதமாக இருக்காது' என்ற சந்தேகம் எள் முனையளவும் ஏற்படக் கூடாது என்பதற்காக இறைவன் பலவிதமான ஏற்பாடுகளையும் செய்தான்.

இதை விரிவாக நாம் அறிந்து கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது என்பதை நிச்சயம் நம்ப மாட்டோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருக் குர்ஆன் பண்டிதர்களும் பிரமிப்புடன் பார்க்கும் அளவுக்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மக்கள் திருக்குர்ஆனை இறைவனின் வேதம் என்று நம்பியிருக்க மாட்டார்கள். 'முஹம்மது தனது புலமையைப் பயன்படுத்தி உயர்ந்த நடையில் இதைத் தயாரித்து இறை வேதம் என்று ஏமாற்றுகிறார்' என்று அந்த மக்கள் நினைத்திருப்பார்கள்.

அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே முஹம்மது நபிக்கு எழுத்தறிவை வழங்கவில்லை என்று இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்.

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன் 29:48)

எழுத்தறிவு என்பது பெரும் பாக்கியமாக இருந்தும், (68:1, 96:4) அந்த பாக்கியத்தை வேண்டுமென்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கவில்லை என்று இறைவன் கூறுகிறான்.

திருக்குர்ஆன் இறை வேதம் என்பதில் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதே இதற்குக் காரணம் என்று மேற்கண்ட வசனத்தில் அறிவிக்கிறான்.

ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக குர்ஆனை வழங்கினால் அனைத்துச் சட்டங்களும் மக்களுக்கு ஒரே நேரத்தில் கிடைத்து விடும். ஆனாலும் இதை வேண்டுமென்றே தான் தவிர்த்ததாக இறைவன் அறிவிக்கிறான்.

மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம். (திருக்குர்ஆன் 17:106)

இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம். (திருக்குர்ஆன் 25:32)

சிறிது சிறிதாக அருளினால் மனனம் செய்ய இயலும். உள்ளத்தில் பதிய வைக்க இயலும் என்பதற்காகவே இவ்வாறு சிறிது சிறிதாக அருளியதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

இந்த அறிவுரையை நாமே அருளினோம். நாமே அதைப் பாதுகாக்கவும் செய்வோம் எனவும் இறைவன் பிரகடனம் செய்கிறான். (பார்க்க திருக்குர்ஆன் 15:9)

இந்தக் குர்ஆனில் கோனலோ, குறைகளோ, முரண்பாடுகளோ இல்லை என்றெல்லாம் கூறி திருக்குர்ஆனின் நம்பகத் தன்மையை நிலை நாட்டுகிறான். (பார்க்க திருக்குர்ஆன் 18:1, 39:28, 41:42, 4:82)

திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனின் கற்பனையா என்ற சந்தேகம் வரக் கூடாது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தை உறுதிப் படுத்த வேண்டும்.

அவர்கள் செய்யாததைச் செய்ததாகச் சொன்னாலோ அல்லது செய்ததைச் செய்யவில்லை என்று சொன்னாலோ அவர்கள் கூறுவது அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகி விடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதை நம்புவதால் குர்ஆனைப் பாதுகாப்பதாகக் கூறும் மேற்கண்ட வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டது என்று கூறப்படுவதை நம்ப முடியாது.

'வஹீ விஷயத்தில் மட்டும் உள்ளது உள்ளபடி கூறினார்கள். மற்ற விஷயங்களில் தான் மனநிலை பதிப்பு ஏற்பட்டது' என்று சிலர் இதற்கு விளக்கம் கூறுகின்றனர்.

இந்த விளக்கம் நகைப்பிற்குரியதாகும். குர்ஆன் இறைவேதம் தான் என்பதை முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்து கொண்டு இவர்கள் இந்த விளக்கத்தைக் கூறுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பார்த்துத் தான் அவர்கள் கூறுவது இறைவாக்கா அல்லவா என்பதை முடிவு செய்யும் நிலையில் மக்கள் இருந்தனர்.

ஆறு மாத காலம் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களிடம் இந்த வாதம் எடுபடுமா என்பதைச் சிந்திக்கத் தவறி விட்டனர்.

செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் அதைச் சந்தேகத்திற்குரியதாகத் தான் மக்கள் பார்ப்பார்களே தவிர வஹீக்கு மட்டும் விதிவிலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள்.

எனவே நபி(ஸல்) அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருந் தால் அன்றைய மக்களால் திருக்குர்ஆன் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலை நாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள்.

'முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்; செய்ததைச் செய்யவில்லை என்கிறார்; செய்யாததைச் செய்தேன் என்கிறார்; இவர் கூறுவதை எப்படி நம்புவது?' என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவறவிட்டிருக்க மாட்டார்கள்.

இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாத காலம் நீடித்த இந்தப் பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது.

மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் தம்மைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். எனவே நபிகள் நாயகத்துக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்து பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களின் எதிரிகளில் ஒருவர் கூட இது பற்றி விமர்சனம் செய்ததாக எந்தச் சான்றும் இல்லை.

எனவே அவர்களுக்கு சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

தொடரும்.......



இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம் - 1
P. ஜைனுல் ஆப்தீன் அவர்களின் நூலிலிருந்து 

முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பாழாக்குவதில் பில்லி சூனியம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

திருக்குர் ஆனையும், உரிய முறையில் நபிமொழிகளையும் சிந்தித்தால் பில்லி சூனியம் என்பது ஏமாற்றும் தந்திர வித்தை தவிர வேறில்லை என்பதை அறியலாம்.

ஈமான் தொடர்புடைய பிரச்சனையாக இது உள்ளதால் இது பற்றி முழுமையாக ஆய்வு செய்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதால் கீழ்க்காணும் தலைப்புக்களில் பில்லி சூனியம் பற்றி விரிவாக அலசும் நூல்

• இறைத்தூதர்களுக்கு சூனியக்காரர் என்ற பட்டம்
• மூஸா நபியும் அற்புதங்களும்
• ஈஸா நபியும் அற்புதங்களும்
• நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அற்புதங்களும்
• மூஸா நபியின் காலத்தில்...
• சூனியத்தை உண்மை எனக் கூறுவோரின் ஆதாரங்கள்
• நபிகள் நாயகத்துக்கு சூனியம்
• பாதுகாக்கப்பட்ட இறை வேதம்
• எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?
• இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர்
• இறைத்தூதர்கள் என்பதற்கான சான்றுகள்
• சூனியம் வைக்கப்பட்டவர் அல்லர்
• ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்களே!
• முரண்பட்ட அறிவிப்புக்கள்
• 113, 114வது அத்தியாயங்கள்
• முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்
• தவறான மொழிபெயர்ப்பு
• சரியான மொழி பெயர்ப்பு
• ஹாரூத் மாரூத்

இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்
'ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும்' என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுடையோர் கனிசமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். இது பில்லி, சூனியம், ஏவல், செய்வினை என்று பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகின்றது.
'ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ, வேதனையையோ ஏற்படுத்த முடியும்' என்பதை நாம் நம்பலாம். கண் கூடாக இது தெரிவதால் இதற்கு மார்க்கத்தின் அடிப்படையில் எந்த ஆதாரத்தையும் நாம் தேட வேண்டியதில்லை.

ஆனால் புறச் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

திருக்குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளிலும் இது பற்றி கூறப்படுவது என்ன என்பதை நாம் மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கும் இடம் தருவது போல் அமைந்துள்ளன.

இதன் காரணமாகத் தான் முஸ்லிம் அறிஞர்களும் இந்த விஷயத்தில் முரண்பட்டு நிற்கின்றனர்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கு இடமிருப்பது போல் தோன்றினாலும் கவனமாக ஆராயும் போது ஒரு கருத்து தான் சரியானது என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.

'மக்களை ஏமாற்றுவதற்காகவும், கவர்வதற்காகவும் செய்து காட்டப்படும் தந்திர வித்தைகள் தான் சூனியம்; உண்மையில் சூனியத்தின் மூலமாக எந்த அதிசயமும் நிகழ்வதில்லை' என்பது தான் சரியான அந்த முடிவாகும்.

சூனியம் என்பதற்கு அரபு மொழியில் ஸிஹ்ர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இந்தச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை நாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தால் ஸிஹ்ர் என்பது பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றும் தந்திர வித்தை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

இறைத்தூதர்களுக்கு சூனியக்காரர் என்ற பட்டம்

மக்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு தம்மை இறைத் தூதர்கள் என்று நிரூபிக்க சில அற்புதங்களை இறைவன் வழங்கினான்.

உதாரணமாக மூஸா நபியவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது கைத்தடியைக் கீழே போட்டவுடன் அது சீறும் பாம்பாக உருமாறியது. கைத்தடி பாம்பாக உருமாறிய நிலையில் அதைத் தொட்டுப் பார்த்தாலும், எந்த வகையான சோதனைக்கு உட்படுத்தினாலும் அது பாம்பு தான்' என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகும். இது தான் அற்புதம் எனப்படுவது.
கைத்தடி பாம்பு போல் தோற்றமளித்து அதைத் தொட்டுப் பார்த்தாலோ, சோதனைக்கு உட்படுத்தினாலோ அது கைத்தடியாக இருந்தால், நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது தெரிய வந்தால் அதைத் தந்திர வித்தை - மேஜிக் எனக் கூறுவோம்.

இறைத் தூதர்கள் செய்து காட்டிய அற்புதம் முதல் வகையிலானது. அதில் எந்த விதமான தில்லுமுல்லும், ஏமாற்றுதலும் கிடையாது.

ஆனாலும் இறைத் தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்கும் அற்புதங்களைச் செய்து காட்டிய போது அதனை அந்த மக்கள் அற்புதம் என்று நம்பவில்லை. மாறாக 'இவர் நமக்குத் தெரியாத வகையில் ஏதோ தந்திரம் செய்கிறார்; நம்மை ஏமாற்றுகிறார்' என்று அவர்கள் நினைத்தனர்.
இதைக் குறிப்பிட ஸிஹ்ர் - சூனியம் என்ற சொல்லையே அவர்கள் பயன்படுத்தினார்கள்.

இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ சூனியக்காரர் (ஸிஹ்ர் செய்பவர்) என்றோ கூறாமல் இருந்ததில்லை. திருக்குர்ஆன் 51:52

ஸிஹ்ர் என்ற சொல்லுக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட அற்புதம்' என்பது பொருள் என்றால் இறைத் தூதர்களை நிராகரிப்பதற்கு ஸிஹ்ர் என்ற காரணத்தைக் கூறியிருக்க மாட்டார்கள்.

'இவர் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. தந்திரம் செய்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். நடக்காததை நடந்தது போல் நம்ப வைக்கிறார்' என்ற கருத்தை உள்ளடக்கித் தான் நபிமார்களின் அற்புதங்களை ஸிஹ்ர் (சூனியம்) எனக் குறிப்பிட்டு நிராகரித்தனர்.

மூஸா நபியும் அற்புதங்களும்

மூஸா நபியவர்களுக்கு மகத்தான அற்புதங்கள் சிலவற்றை இறைவன் வழங்கி இருந்தான். அந்த அற்புதங்களை ஏற்க மறுத்தவர்கள் அவற்றை ஸிஹ்ர் எனக் கூறியே நிராகரித்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.

அப்போது அவர் தமது கைத் தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது. 'இவர் தேர்ந்த சூனியக்காரராக (ஸிஹ்ர் செய்பவராக) உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?' என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 7:107, 108, 109

அவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் நமது சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் செய்த கூட்டமாக இருந்தனர். நம்மிடமிருந்து அவர்களுக்கு உண்மை வந்த போது 'இது தெளிவான சூனியம் (ஸிஹ்ர்)' என்றனர். 'உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் (ஸிஹ்ர்) என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் (ஸிஹ்ர் செய்பவர்கள்) வெற்றி பெற மாட்டார்கள்' என்று மூஸா கூறினார். திருக்குர்ஆன் 10:75, 76, 77

'நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்' என்று அவன் கூறினான். அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது. தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது. 'இவர் திறமை மிக்க சூனியக்காரர் (ஸிஹ்ர் செய்பவர்)' என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான். 'தனது (ஸிஹ்ர்) சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்? (என்றும் கேட்டான்). திருக்குர்ஆன் 26:31, 32, 33, 34, 35

மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது 'இது இட்டுக்கட்டப்பட்ட (ஸிஹ்ர்) சூனியம் தவிர வேறில்லை; இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை' என்றனர். திருக்குர்ஆன் 28:36

மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பிய போது, அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். 'இவர் சூனியக்காரரோ (ஸிஹ்ர் செய்பவரோ) பைத்தியக்காரரோ' எனக் கூறினான். திருக்குர்ஆன் 51:38, 39

உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக!) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர் (என்றான்). நமது சான்றுகள் பார்க்கக் கூடிய வகையில் அவர்களிடம் வந்த போது 'இது தெளிவான சூனியம் (ஸிஹ்ர்)' என்று அவர்கள் கூறினர். அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும், ஆணவமாகவும் மறுத்தனர். 'குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?' என்று கவனிப்பீராக! திருக்குர்ஆன் 27:12, 13, 14

மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். 'பெரும் பொய்யரான சூனியக்காரர்' என்று அவர்கள் கூறினர். திருக்குர்ஆன் 40:24

மூஸா நபி கொண்டு வந்த அற்புதங்களை நிராகரிக்க ஸிஹ்ர் எனும் சொல்லை அவர்கள் பயன்படுத்தியதிலிருந்து ஸிஹ்ர் என்றால் தந்திரம் தான். உண்மையில் ஏதும் நடப்பதில்லை என்று அறிந்து கொள்கிறோம்.
இந்த இடத்தில் சிலர் ஒரு சந்தேகத்தை எழுப்புவார்கள்
.
ஸிஹ்ர் என்ற சொல்லை பித்தலாட்டம் என்ற பொருளில் இறைத் தூதரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பயன்படுத்தியதாகத் தான் மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. ஸிஹ்ர் என்ற சொல்லை இறைவன் தனது சொல்லாகப் பயன்படுத்தவில்லை. இறைத் தூதர்களின் எதிரிகள் பயன்படுத்திய சொல்லை எடுத்துக் காட்டுகிறான்.

எனவே இதை ஆதாரமாகக் கொண்டு ஸிஹ்ர் என்பது உண்மையில்லை என்று எவ்வாறு வாதிடலாம் என்பது தான் அந்தச் சந்தேகம்.

இந்தச் சந்தேகத்திற்கு மேலே நாம் சுட்டிக் காட்டிய 10:77 வசனத்தில் தெளிவான விளக்கம் உள்ளது.

மூஸா நபி கொண்டு வந்த அற்புதத்தை ஸிஹ்ர் எனக் கூறி அம்மக்கள் மறுத்த போது மூஸா நபியர்கள் பின்வருமாறு எதிர்க் கேள்வி எழுப்பியதாக 10:77 வசனம் கூறுகிறது.

உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் (ஸிஹ்ர்) என்று கூறுகிறீர்களா?

இவ்வாறு மூஸா நபியவர்கள் உண்மைக்கு எதிர்ப் பதமாக ஸிஹ்ர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். உண்மையை நீங்கள் எப்படி (ஸிஹ்ர்) பித்தலாட்டம் என்று கூறலாம் என்று இறைத் தூதர் கேள்வி எழுப்பியதால் ஸிஹ்ர் என்பது ஏமாற்றும் வித்தை தான்; உண்மையானது அல்ல என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

ஈஸா நபியும் அற்புதங்களும்

மூஸா நபியைப் போலவே ஈஸா நபியும் அதிகமான அற்புதங்களைச் செய்து காட்டினார்கள். அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைப் பார்த்த பின்னரும் அதை உண்மை என்று அவரது சமுதாயத்தினர் நம்பவில்லை. இவர் ஏதோ தந்திரம் செய்கிறார்' என்று தான் நினைத்தனர். இவர் ஸிஹ்ர் செய்கிறார் (தந்திரம் செய்கிறார்)' எனக் கூறி நிராகரித்து விட்டனர்.

'மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட் கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீ ராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களி டம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடை யவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீ ராக! இறந்தோரை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப் படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது 'இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை' என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக! என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக! திருக்குர்ஆன் 5:110

'இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது 'இது தெளிவான சூனியம்' எனக் கூறினர். திருக்குர்ஆன் 61:6

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அற்புதங்களும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்காக இறைவன் வழங்கிய சில அற்புதங்களைச் செய்து காட்டினார்கள். மாபெரும் அற்புதமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆனையும் மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார்கள்.

அவர்கள் செய்து காட்டிய உண்மையான அற்புதங்களை ஏற்க மறுத்த எதிரிகள் அவற்றை ஸிஹ்ர் (சூனியம்) எனக் கூறினார்கள்.

(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும். 'இது வெளிப்படையான சூனியத்தைத் தவிர வேறு இல்லை' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள். திருக்குர்ஆன் 6:7

மக்களை எச்சரிப்பீராக' என்றும், நம்பிக்கை கொண்டோருக்குத் தம் இறைவனிடம் அவர்கள் செய்த நற்செயல் (அதற்கான கூலி) உண்டு என நற்செய்தி கூறுவீராக' என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? 'இவர் தேர்ந்த சூனியக்காரர்' என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். திருக்குர்ஆன் 10:2

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. 'இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?' என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர். திருக்குர்ஆன் 21:3

நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்த போது 'மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா?' எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? 'இரண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் சூனியங்களே' என்று கூறுகின்றனர். 'அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம்' எனவும் கூறுகின்றனர். திருக்குர்ஆன் 28:48

நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் 'இவர் உங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு உங்களைத் தடுக்க நினைக்கும் மனி தராகவே இருக்கிறார்' எனக் கூறுகின்றனர். 'இது இட்டுக்கட்டப்பட்ட அவதூறு தான்' எனவும் கூறுகின்றனர். தங்களிடம் உண்மை வந்த போது இது தெளிவான சூனியம் தவிர வேறு இல்லை என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். திருக்குர்ஆன் 34:43

சான்றை அவர்கள் கண்ட போதும் கேலி செய்கின்றனர். 'இது தெளிவான சூனியம் தவிர வேறில்லை' என்று அவர்கள் கூறுகின்றனர். திருக்குர்ஆன் 37:14, 15

அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். 'இவர் பொய்யர், சூனியக்காரர்' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர்.
திருக்குர்ஆன் 38:4

அவர்களிடம் உண்மை வந்த போது 'இது சூனியம், இதை நாங்கள் மறுப்பவர்கள்' எனக் கூறினர். திருக்குர்ஆன் 43:30

இவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் தம்மிடம் வந்த சத்தியத்தை மறுப்போர் 'இது தெளிவான சூனியம்' என்று கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 46:7

அவர்கள் சான்றைக் கண்டால் 'இது தொடர்ந்து நடக்கும் சூனியம்' எனக் கூறிப் புறக்கணிக்கின்றனர். திருக்குர்ஆன் 54:2

தொடரும்........

வெள்ளி, 14 செப்டம்பர், 2012



ஜும்ஆ நாளின் சிறப்புகள்

சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு,
நூல்: திர்மிதி

'இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகழவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்கள் கூறினார்கள்: 'வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்'

ஆதாரம்: முஸ்லிம்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'எவரொருவர் ஜும்ஆ தினத்தில் அல்லது அன்று இரவில் மரணிக்கின்றாரோ அவர் மண்ணறை வேதனையை விட்டும் காப்பாற்றப்டும்'(ஆதாரம்: அஹ்மத்)
மற்றொரு அறிவிப்பில் ஜும்ஆ அரஃபா நாளைவிடவும், இரு பெருநாட்களை விடவும் சிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள்:

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. அல்குர்ஆன் 62:9.

ஜும்ஆ என்ற சொல்லுக்கு ஒன்று கூடுதல் என்று பொருள். தொழுகைக்காக மக்கள் ஒன்று கூடுவதினால் இத் தொழுகைக்கு ஜும்ஆ தொழுகை என்றும், இதே நாளில் ஆதி நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்கள் துணைவியார் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அரஃபா பெருவெளியில் ஒன்று சேர்ந்ததினால் இந்நாளுக்கு ஜும்ஆ நாள் என்றும் பெயர் வழங்கலாயிற்று. இந்நாளில் அதிகமாக ரஹ்மத்தின் வாயில்கள் திறந்து விடப்படுவதாலும், இந்நாளில் அல்லாஹ்வின் மட்டில்லா அருட்கடாட்சங்கள் வழிந்தோடுவதாலும் இந்நாளை யவ்முல் மஜீது (அதிகம் நற்கூலி பெறும் நாள்) என வானவர்கள் குறிப்பிடுகின்றனர். ஜும்ஆ தொழுகை உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டுமே உரிய வணக்கமாகும்.

மிஃராஜ் இரவில் கடமையாக்கப்பட்ட இத் தொழுகை பெருமானாரின் ஹிஜ்ரத்திற்கு முன்பாக மதீனாவின் அருகிலுள்ள நகீவுல் கல்மாத் என்னும் சிற்றூரில் அஸ்அத் இப்னு ஜியாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இமாமாக நின்று ஜும்ஆ நடத்தினார்கள். ஜும்ஆ என்று முதன் முதலில் பெயர் சொல்லியது கஅபு இப்னு லுஅய் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

'அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜும்ஆத் தொழுகை கடமையாகும்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: அபூதாவூத்

'உங்களில் எவரும் ஜும்ஆத் தொழுகைக்கு வந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: புகாரீ

எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குளித்து, பல் துலக்கி, தன்னிடம் இருக்கின்ற வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு, தன்னிடம் இருக்கின்றவற்றில் நல்ல ஆடையை அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்கு சென்று, பள்ளியில் இருக்கின்ற மனிதர்களை கடந்து செல்லாமல் தன்னால் முடியுமான அளவு தொழுதுவிட்டு மௌனமாக இருந்து இமாம் சொல்வதை சிறந்த முறையில் செவிமெடுத்துவிட்டு தொழுகை முடியும் வரை இருக்கின்றாரோ அவருடைய முந்தைய வெள்ளிக்கிழமைக்கும் இந்த வெள்ளிக்கிழமைக்கும் இடைப்பட்ட சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்' (ஆதாரம்: அஹ்மத்)

கிழக்கு வெளுத்ததிலிருந்து ஜும்ஆவுக்குப் போகுமவரை எந்த நேரத்திலாவது குளிக்கலாம். அது சுன்னத்து முஅக்கதாவாகும். ஆனால் ஜும்ஆவுக்கு நெருக்கமான நேரத்தில் குளிப்பது ஏற்றமாகும். ஜும்ஆவுடைய குளிப்பு தவறிவிட்டால் அந்த நிய்யத்தைக் கொண்டு மறுபடி களா செய்வது சுன்னத்தாகும். தண்ணீரை உபயோகிக்க முடியாவிட்டால் மண்ணைக்கொண்டு தயம்மும் செய்வது சுன்னத்து.

ஹன்பலீ மத்ஹபில் ஜும்ஆவின் குளிப்பு வாஜிபாகும். அதில் தேய்த்துக் குளிப்பதை விட்டாலும் அதனைக் களாச் செய்வது அந்த மத்ஹபில் அவசியமாகும்.

'ஜும்ஆ நாள் வந்து விட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும், அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும், அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும், அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போன்றவரும் ஆவார்கள். இமாம் வந்து விட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டி விட்டுச் சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : நஸயீ

'ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், திர்மிதி

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, 'ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு' என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். 'அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை' என்றும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி

ஹாஷியா இக்னாஃ என்ற நூலில் எழுதப் பட்டுள்ள மிகப் பொருத்தமான நேரமாகிறது, கதீப் மிம்பரில் ஏறிய நேரத்திலிருந்து தொழு முடிக்கும் நேரம் வரையிலாகும். ஆகையால் கதீப் குத்பாவில் ஓதுகின்ற துஆவுக்கு உள்ளச்சத்துடன் மெதுவாக கைகளை உயர்த்தாமல் ஆமீன் கூறிக் கொள்ள வேண்டும்.

'ஒருவர் குளித்து விட்டு ஜும்ஆவிற்கு வந்து தனக்கு நிர்ணயிக்கப்ட்ட அளவைத் தொழுகின்றார். பிறகு இமாம் தன் உரையை முடிக்கும் வரை மவ்னமாக இருந்து பிறகு அவருடன் தொழுகின்றார் என்றால் அவருக்கு அவருடைய அந்த ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. மேலும் மூன்று நாட்கள் மன்னிக்கப்படுகின்றன' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்

வெள்ளிக்கிழமை கிழக்கு வெளுத்ததிலிருந்து மதியம் வரையிலுள்ள நேரத்தை ஆறு பகுதிகளாக பிரித்து அதன் முதல் பகுதியிலிருந்து இறுதி பகுதிவரைக்கும் ஜும்ஆவிற்கு வரும் நபர்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

'ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி

'மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும்.

இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான்.

மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்இமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும்.

ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ்,

'நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப் படுவார்' என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு,நூல்: அபூதாவூத்

ஜும்ஆவிற்கு செல்கிறவன் அழகிய உடையணிந்தும், நோன்பில்லாதவன் கண்ணுக்கு தோற்றாத மணம் பூசுவதும், தாடியை ஒதுக்கி முகவேலை செய்து மூக்கு, அக்குள் ஆகியவற்றின் முடிகளைக் களைந்து, நகம் வெட்டிக் கொள்வதும் சுன்னத்தாகும்.

தாடியை சரிபடுத்தி சீப்பைக் கொண்டு சீவுவதும், ஒற்றைப்படையாகக் கண்களுக்கு சுருமாக்ககோலால் சுருமா இடுவதும், தனக்குத் தகுதியான தலைப்பாகைக' கட்டுவதும், அதைப் பின் பக்கத்தில் தொங்கவிடுவதும் சுன்னத்தாகும்.

கதீபுக்கு அருகிலிருப்பதும், அவரைப் பார்ப்பதும் சுன்னத்து. ஒருவர் தான் உட்கார்ந்த இடத்தில் வேறொருவரை மாற்றி வைத்துவிட்டு அவர் வேறு இடத்திற்கு மாறிச் செல்வது மக்ரூஹ். மனிதர்களை மிதித்துக் கொண்டு செல்வது ஹராம். தான் உட்காருவதற்காக மற்றொருவரை அவ்விடத்திலிருந்து எழுப்புவது ஹராம்.

ஜும்ஆவிற்கு போகும்போது தூரம் கூடுதலான வழியில் கண்ணியமான முறையில் காலால் நடந்து போய், பிறகு தூரம் குறைவான வழியில் திரும்பி வருவது சுன்னத்தாகும். ஆனால் நேரம் நெருக்கடியாக இருப்பின் சுன்னத்தல்ல.

ஜும்ஆவின் பலனை இழக்கும் செயல்கள்:

'இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம் வாய் மூடு என்று நீ கூறினால் வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

'ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்; அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

'அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுல் ஜஃது ரலியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களை கொழுத்தி விட எண்ணி விட்டேன்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

கதீபு மிம்பரில் உட்கார்ந்த பிறகு எந்தத் தொழுகையைத் தொழுவதும் மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும். ஆனால் ஒருவர் தொழ ஆரம்பித்த பின் குத்பா துவக்கப்பட்டு விட்டால் விரைவாக  தொழுது முடிப்பது வாஜிபாகும்.

ஷாபிஈ மத்ஹபில் குத்பா ஓதும் போது ஒருவர் வந்தால் தஹிய்யத்துல் மஸ்ஜித் மட்டும் தொழுவது சுன்னத். அதை விரைவாக முடிப்பது வாஜிப்.

ஜும்ஆ நாளில் ஓத வேண்டியவைகள்:

ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீது (ரலியல்லாஹு அன்ஹு), நூல் : ஹாகிம்

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸீர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, 'நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்

ஜும்ஆ தொழுகை முடிந்து காலை மடக்கும் முன்பாக அல்லது யாரிடமும் பேசும் முன்பாக ஸூரத்துல் பாத்திஹா, இக்லாஸ், பலக், நாஸ் ஸூராக்கள் ஆகியவற்றை ஏழு முறை ஓதுவதும் அத்துடன் ஸலவாத்தை ஓதுவதும் சுன்னத்.

அத்துடன் ஆயத்துல் குர்ஸி, குர்ஆனிலுள்ள அத்தியாயம் 3 வசனம் 18 யை ஓதுவது சுன்னத்தாகும்.

அத்துடன் ஸூரத்துல் பகராவின் கடைசி ஆயத்துக்களை (2:285) கடைசி வரையிலும், ஸூரத்துல் காபிரூன் ஸூராவையும் ஓதுவது ஸுன்னத்.

ஈமான் பாதுகாப்பிற்காக ஜும்ஆ தொழுதபின் பின்வரும் இரண்டு பாடல்களையும் ஐந்து தடவை மனநெகிழ்வுடன் படிப்பது நல்லதென்று அப்துல் வஹ்ஹாப் ஷஹ்ரானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக பாஜூரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

 என்னுடைய இரட்சகனே! நான் பிர்'தவ்ஸ் என்னும் சொர்க்கத்திற்குத் தகுதியானவன் அல்லன், நரக நெருப்பின் மீது நான் சக்தி பெறவும் மாட்டேன்.

எனவே எனக்கு தவ்பா செய்யும் தன்மையை வழங்கி என்னுடைய பாவங்களை மன்னித்திடுவாயாக! நிச்சயமாக நீ மிகப்பெரும் பாவத்தையும் மன்னிக்கிறவனாய் இருக்கிறாய்.

குத்பாவுடைய பாங்குக்குப் பின் ஜும்ஆ தொழுமுடியும் வரை வியாபாரம், தொழில் ஆகியவை செய்வது ஹராமாகும். அன்று ஜவால் ஆனபின் குத்பாவுடைய பாங்குக்கு முன் வியாபாரம் தொழில் செய்வது மக்ரூஹ்.

வெள்ளிக்கிழமை கிழக்கு வெளுத்தபின் ஆகுமான பிரயாணம் செய்வது ஹராம். ஆனால் இடைவழியில் ஜும்ஆ கிடைக்கும் என்ற நம்பிக்கையிருப்பின் அல்லது வழித்தோழர்கள் அவனை விட்டுச் சென்று அதனால் சிரமம் ஏற்பட்டுவிடுமென்றிருந்தால் செல்வது ஹராமல்ல. வெள்ளிக்கிழமை இரவில் பிரயாணம் செய்வது மக்ரூஹ்.

நன்றி: சுபிமன்சில்.ஒர்ஜ்

புதன், 12 செப்டம்பர், 2012



மூடப் பழக்கங்களை தவிர்த்து வாழ்வதே அல்லாஹ் காட்டிய நேர்வழி!

அன்று அரபு நாட்டில் ஒருவனுக்கு நோய் ஏற்பட்டு விட்டால் அனேகமானோர் மூடத்தனமான வழிகளினாலே நிவாரணங்களை மேற்கொண்டனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து வைத்தியம் செய்ய வில்லை. போலிச் சிலைகளுக்கு நேர்ச்சை செய்தனர்; சூன்யகாரர்களிடம் சரணடைந்தனர்; சோதிடர்களை நம்பினர்; தாயத்துகளை அணிந்தனர்; சகுனம் பார்த்தனர்; இது போன்ற போலி நம்பிக்கைகளினால் பகைமையை வளர்த்தனர். சில சமூகத்தவர்கள் பெண் பிள்ளைகள் பிறந்தால் உயிருடன் புதைத்தனர். இவ்வாறான பெரும் பாவங்களிலிருந்து மக்களை மீட்பதற்கு அல்லாஹ் இறுதித் தூதரை அனுப்பி அல்குர்ஆனின் ஒளியில் நேர்வழி காட்டினான். நோய் வாய்ப்பட்டவன் செய்ய வேண்டிய நிவாரணத்தை இறைத் தூதர்(ஸல்) பின்வருமாறு போதித்தார்கள்.

ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும். (முஸ்லிம்: 4432)

ஒரு மனிதனுக்கு இரண்டு முறைகளில் நோய் ஏற்படலாம். அவையாவன:

1. அவனின் உடலுக்கு ஏற்படும் நோய்.
இதனை உலகில் மனிதனுக்காக அல்லாஹ் படைத்துள்ள மருந்துகளை மனிதன் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.

2. மனிதனின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் உள்ளத்தில் எழும் நோய்..
இதற்குரிய மருந்து அல்லாஹ்வின் இறை நெறி நூலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும்.
இதனை இறுதி இறைநெறி நூல் அல்குர்ஆன் எவ்வாறு விபரிக்கின்றது என்பதை அவதானியுங்கள்.
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “”நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), பின், நீ எல்லா விதமான கனி(களின்) மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில்(உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கி னான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (நோய் தீர்க்க வல்ல மருந்து) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது. (அல்குர்ஆன் 16:68,69)

இறைவன் தேனீக்களின் செயற்பாடுகளை வெளிப்படுத்தி ஒவ்வொரு மரம், மலர்களை அவதானித்து சிந்தித்து மனிதன் ஆராய்ச்சி செய்தால் மனிதனுக்கு உபயோகமான அனேகமான நோய் தீர்க்கும் மருந்துகளைக் கண்டு பிடிக்கலாம் என்ற உள்ளுணர்வை ஏற்படுத்துகின்றான்.

 1433 ஆண்டுகளுக்கு முன்பே உம்மி நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்ட லுக்கமைய மெளட்டீக வழிகளைத் தவிர்த்து மனிதன் சிந்தித்து ஆராய்ந்தால் மனித வாழ்வுக்கு உகந்த பல மருந்துகளைப் பெறமுடியும் என விளக்கினார்கள். இதன் பயனாக இஸ்லாத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் பல மருத்துவர்கள் உலகில் மருத்துவம் பற்றி பல ஆராய்ச்சி நூல்களை உலகம் பயன்பெற விட்டுச் சென்றனர். இதன் தாக்கமாக ஸ்பெயினில் பல வாசக சாலைகள், கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன.

அன்று மக்கள் சில நோய்களைக் கண்டு தனக்கும் தொற்றிவிடும் எனக் கருதி தப்பியோடினர். இதனால் மக்களைப் பாதுகாத்தல் என்ற பெயரில் பக்தி என்ற பெயரில் மெளட்டீக மத சடங்குகளும் சம்பிரதாயங்களும் மலிந்தன. அறியாமையிலிருந்த மக்கள் பல தெய்வ சிலை வணக்கங்களுக்கு ஆட்பட இந்த சந்தர்ப்பங்கள் வழிவகுத்தது. அல்லாஹ்வின் சோதனைகளும் அதிகரித்தது. இந்த அறியாமையிலிருந்து மக்களை மீட்க அல்லாஹ் அல்குர்ஆனின் ஒளியுடன் இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான். அவர்கள் மூலம் அல்லாஹ் வெளிப்படுத்திய போதனைகள் சிலவற்றை அவதானியுங்கள்.

ஒரு மனிதன் அறியாமையிலிருந்து நீங்க வேண்டுமாயின் அவனது உள்ளம் நோய்கள் அற்று தூய்மையாக இருத்தல் வேண்டும். அவனது உள்ளம் தூய்மை அடைய, அறியாமை என்ற நோய் நீங்க, மனித உடலை நேர்வழியின் பக்கம் இட்டுச் செல்ல அருள் மருந்தாக மனிதக் கற்பனைகள் உள் நுழையாத இயற்கையான தூய இறைநெறி நூலின் வழிகாட்டல் அவசியம்; இன்று மக்களின் நோய் தீர்க்கும் மருந்தாக இறுதி இறைநெறி நூல் அல்குர்ஆன் மட்டுமே இருப்பதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அவதானியுங்கள்.

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கின்றது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும்,  நல்லருளாகவும் உள்ளது.

"அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது. எனவே) இதில் அவர்கள் மகிழ்ச்சி அடையட்டும். அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக மேலானது” என்று (நபியே!) நீர் கூறும்". (அல்குர்ஆன் 10:57,58)

நாம் இதை(குர்ஆன்) அரபியல்லாத வேறு மொழிகளில் இறக்கியிருந்தால், இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “”இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத் தன்மை இருக்கின்றது; இன்னும், அவர்(கண்)களில் குருட்டுத் தனமும் இருக்கின்றது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின் றனர்). (அல்குர்ஆன் 41:44)

அன்று வேதங்கள் அரபு மொழியில் இருக்கவில்லை. வேற்று மொழிகளிலேயே இருந்தன. ஆகவே, அரபியர்களும் வேதக்காரரும் அரபு மொழியில் அல்குர்ஆன் இறங்கியதை ஆச்சரியமாக அவதானித்தனர். அதுபோல் இன்றும் புரோகிதர்கள் மக்கள் பேசாத, விளங்காத மொழியிலேயே இறைநெறி நூல்கள் இருப்பதை விரும்புகின்றனர். அப்போதே தமது வயிற்றுப் பிழைப்புக்கு ஏற்ற விதத்தில் மக்களை கண்மூடிப் பின் தொடரச்செய்து தாம் விரும்பும் மெளட்டீக மார்க்கத்தில் வைத்திருக்கச் செய்ய முடியும் என்பதனாலாகும். ஆனால் அல்லாஹ் ஒரு இறைத்தூதருக்கு இறைச் செய்திகளை இறக்கும்போது அவர் பேசும் தாய் மொழியிலேயே இறக்கி அருளினான். காரணம் அப்போதே தமது பிரதேச மக்களுக்கு இம் மொழி விளங்கும் என்பதனாலாகும். இந்த அல்குர்ஆனின் விளக்கம் அரபிகளையும், வேதக்காரர்களையும் ஏற்கச் செய்தது. அத்துடன் மனிதனின் இதயத்திலுள்ள நோய்கள் இறைநெறி நூலின் மருந்தைக் கொண்டே சுகமடைய செய்ய முடியும். இதன் மூலமாகவே அறியாமையிலிருந்து மனிதன் தவிர்ந்து வாழ முடியும். இதன் மூலமாகவே எல்லா அழுக்குகள் நிறைந்த நோய்களிலிருந்து தவிர்க்க முடியும். மேலும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நேரிய வழிகாட்டலை அவதானியுங்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கொள்ளை நோய் என்பது தண்டனையின் அடையாளமாகும். அதன் மூலம் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தன் அடியார்களில் (தான் நாடிய) சிலரைச் சோதிக்கின்றான். அது (ஓர் ஊரில் இருப்பது) குறித்து நீங்கள் கேள்விப்பட்டால், அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற பகுதியில் அது ஏற்பட்டுவிட்டால், அங்கிருந்து வெருண்டோடாதீர்கள். (முஸ்லிம்: 4456)

அன்றைய அரபியரிடையே இருந்து வந்த சில மூடப் பழக்க வழக்கங்களான தொற்று நோய் என பயந்து மனித நேயத்தை மறந்து விடல் இதனால் மக்கள் நோயாளிகளை விட்டு இடம் பெயர்ந்தனர். அதுபோல் பறவை சகுனம், ஆந்தை பற்றிய நம்பிக்கை, ஸஃபர் என்னும் வயிற்று நோய் தொற்று நோய் என்ற நம்பிக்கை, நட்சத்திர இயக்கத்தால் தான் மழை பொழிகின்றது என்னும் நம்பிக்கை, வர்ண ஜாலம் காட்டும் சாத்தான் பற்றிய நம்பிக்கை போன்றவற்றை நபி(ஸல்) அவர்கள் பாவமான நம்பிக்கைகளாக இனம் காட்டித் தடை செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “”தொற்று நோய் கிடையாது; ஸஃபர்(தொற்று நோய்) என்பது கிடையாது; ஆந்தையால் சகுனம் பார்ப்பது கிடையாது” என்று சொன்னார்கள். அப்போது கிராமவாசி ஒருவர், “”அல்லாஹ் வின் தூதரே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) ஒட்டகங்களிடம், சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து, அவற்றுக்கிடையே கலந்து அவை அனைத்தையும் சிரங்கு பிடித்தனவாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலையயன்ன (தொற்று நோயில்லையா)? என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “”அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?” என்று திருப்பிக் கேட்டார்கள். (முஸ்லிம்: 4464)

முஸ்லிம் 4468ம் ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிவிட்டு, நோய் கண்ட கால் நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டு செல்லக் கூடாது’ என்றும் அல்லாஹ் வின் தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூஹு ரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தொற்று நோய் கிடையாது; ஆந்தை பற்றிய (மூட) நம்பிக்கையும் (உண்மை) இல்லை; நட்சத்திர இயக்கத் தால்தான் மழை பொழிகின்றது என்பதும் (உண்மை) இல்லை; ஸஃபர்(தொற்று நோய்) என்பதும் கிடையாது. (முஸ்லிம்: 4469)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினர்கள்:
தொற்று நோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; வர்ணஜாலம் காட்டும் சாத்தானும் கிடையாது. (முஸ்லம்: 4470)

அன்று அரேபியாவில் காணப்பட்ட மூடக் கொள்கைகளை அறியாமைக் கால செயற்பாடுகளாக முன்வைத்து அவற்றை முஸ்லிம்கள் நம்பக்கூடாது எனத் தடை செய்தனர். அத்துடன் தொழுநோயாளிகளிலிருந்து விலகியிருந்த சந்தர்ப்பங்களும் உண்டு.

ஸகீஃப் தூதுக்குழுவில் தொழுநோயாளி ஒருவர் இருந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் “”நாம் உம்மிடம் உறுதிமொழி பெற்று விட்டோம். நீர் திரும்பிச் செல்லலாம்” என்று கூறியனுப்பினார்கள். (முஸ்லிம்:4489)

இங்கு தொற்று நோய் என மனிதன் எண்ணாது, இவை அல்லாஹ்வின் சோதனைகள் எனக் கொண்டு பொறுமையாக இருக்க வேண்டும் என்பதே இதன் உண்மை நிலையாகும். அத்துடன் ஒரு மனிதனுக்கு நோய் ஏற்பட்டுவிடின் மக்கள் நோய் பிடித்தவரை நோவினை செய்கின்ற, தூற்றுகின்ற சந்தர்ப்பங்கள் அன்று காணப்பட்டது. இந்த மூட நம்பிக்கைகள் ஓர் இறைக் கொள்கைக்கு மாற்றமானதாகும். ஏக இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்ற அல்லாஹ்வின் தூதர்கள் காட்டிய வழி முறைக்கு மாற்றமானதாகும். ஷைத்தானின் சூழ்ச்சியால் முன்னைய வேதங்களைக் களங்கப்படுத்திய பல தெய்வ சிலை வணங்குவோரின் தீய வழிமுறையாகும். இச்செயற்பாடுகள் மனிதனின் அழிவுக்கே வழிகாட்டும். இவ்வாறு செயற்படும் குருமாரின் வழிமுறையாகும். இச்செயற்பாடுகள் மனிதனின் அழிவுக்கே வழிகாட்டும். இவ்வாறு செயற்படும் குருமாரின் வழி நரகை அடையவே வழிகாட்டும். அறிவுமிக்க இன்றைய மனித சமுதாயமே இருளின் பக்கம் செல்லாதீர்கள். அல்குர்ஆனின் பக்கம் வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மன வேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. (புகாரி: 5641)

நன்றி: ரீட்இஸ்லாம்.நெட்




பெற்றோர்களே பிள்ளைகளை கண்காணிக்கிறீர்களா?


பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்காணித்து கணினியில் எதைப்படிக்கிறார்கள் எழுதுகிறார்கள் என்பதையும் எதனைப் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் கவனமாக கவனித்துக்கொண்டே வரவேண்டும். அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதையும் கவனிப்பதுடன் பிள்ளைகளுடன் சேர்ந்து உட்கார்து உறையாடி அவர்களின் நன்பர்களைப் பற்றியும் பள்ளி முடிந்ததும் வேறு எங்கும் செல்கிறார்களா என்பதையும் கண்கானிக்க வேண்டும்.

அவர்கள் படிக்கும்  நிலையில் அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லாமலிருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிவதுடன் அவர்கள் தீய நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனரா தீய இடங்களுக்கு செல்கின்றனரா புகை பிடித்தல் பழக்கம் உள்ளனவா என அவர்கள் அறியாத வண்ணம் கண்கானித்து பிள்ளைகளிடம் மென்மையான முறையில் தீய பழக்கத்தின் கெடுதிகளை உணர்த்தி நேர் வழியின் பக்கம் கொண்டு வரவேண்டும்.

எனவே தான் நபி ஸல் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :
“ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹூதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.” (ஸஹீஹுல் புகாரி)

பிள்ளைகள் படிப்பதற்காக தேர்ந்தெடுக்கும் நூல்கள் அவர்களது அறிவைப் பெருக்கும் நூல்களா அல்லது சினிமா அல்லது ஆபாசம் கலந்த கதைகளை படிக்கின்றனரா எனவும் கண்கானிக்க வேண்டும்.   சில நூல்கள் அறிவை அழித்து நற்பண்புகளை சிதைக்கக்கூடியதான நூல்களை படிப்பதிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.

அவர்களது பழக்க வழக்கங்கள் பொழுது போக்குகள் அவர்களிடம் நன்மையை வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும்.  நன்பர்கள் நன்மையின் பக்கம் செல்பவர்களாகவும் தீமையை வெறுக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். எத்தனையோ நன்பர்களின் நட்பு அவர்களை தீமையின் பக்கம் சென்று வழி தவறிவிடுகிறார்கள்.  இதனை கண்காணிக்க வேண்டிய பெற்றோர்கள் அலட்சியத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள்.

பெற்றோர்கள் அவசியம் ஏற்படும்பொழுது அந்தப் பிள்ளைகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தையும் கண்கானித்து அவர்களது காரியங்களில் தலையிட்டு அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சில குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றியடைவதின் ரகசியத்தையும் சில குடும்பங்கள் தோல்வியடைவதின் ரகசியத்தையும் இந்த விளக்கத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

பிள்ளை வளர்ப்பு விஷயத்தில் தங்களது பொறுப்பை உணர்ந்த பெற்றோர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததினால் அவர்கள் வாழும் சமுதாயத்திற்கும் நன்மை செய்தவர்களாகவும், இவ்வாறு பொருப்பை உணராமல் அந்த கடமையைப் பாழாக்கியவர்களின் பிள்ளைகள் சமுதாயத்திற்கு கேடாக அமைந்து இவ்வுலகிலும் மறு உலகிலும் துன்பமே அடைவார்கள்.

“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.  (அல்குர்ஆன் 8:28)

பெற்றோர்கள் நேரான வழியில் உறுதியாக இருந்து  பிள்ளைகளை வளர்ப்பதில் தங்கள் கடமைகளை பொறுப்புகளை முறையாக நிறைவேற்றினால் அந்தப் பிள்ளைகள் ஒரு போதும் அவர்களுக்கு எதிரியாக மாட்டார்கள்.

நன்றி: ரீட்இஸ்லாம்.நெட்


தொழுகையும், ஜக்காத்தும்

எந்த ஆத்மாவையும்,அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்பந்திப்பதில்லை. அல்குர்ஆன் 23:62 நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது மூஃமீன்கள் மீது கடமையாகும். அல்குர்ஆன் 2:45

(நபியே!) தொழுது வருமாறு நீர் உம் குடும்பத்தினரை ஏவும்.நீரும் அதன் மீது உறுதியாக இரும். நாம் உம்மிடம் யாதொன்றையும் கேட்கவில்லை. எனினும், உமக்கு வேண்டியவற்றையெல்லாம் நாமே கொடுத்து வருகின்றோம். முடிவான  நன்மை பரிசுத்த தன்மைக்குத்தான். அல்குர்ஆன் 20:132

தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். அல்குர்ஆன் 2:110

“ஈமானுக்கும் குஃப்ருக்கும் இடையே வித்தியாசம் தொழுகையை விடுவதே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி) நூல்: முஸ்லிம்,திர்மிதி, அபூதாவூத் நீங்கள் தொழுகையை கடைப்பிடித்துத் தொழுகுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள், ‘ருகூவு’ செய்பவர்களுடன் நீங்களும் (குனிந்து)’ருகூவு’ செய்யுங்கள்.அல்குர்ஆன் 2:43

விசுவாசிகளே உங்களுடைய பொருள்களூம், உங்களுடைய சந்ததிகளும் அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து உங்களைத்  திருப்பிவிட  வேண்டாம். எவரேனும்  இவ்வாறு செய்தால், அத்தகையோர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்தாம். அல்குர்ஆன் 63:9

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). அல்குர்ஆன் 2:171

யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அல்குர்ஆன் 2:277

நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்;. எவர் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம். அல்குர்ஆன் 2:277

(மறுமையின் சுவனவாசிகள்) சுவனபதியில் இருந்துக் கொண்டு, (நரகவாசிகளை நோக்கி) உங்களை நரகத்தில் புகுத்தியது எது” என்று குற்றவாளிகளைக் கேட்பார்கள். அதற்கவர்கள், நாங்கள் தொழக்கூடியவர்களில் இல்லை, நாங்கள் ஏழைகளுக்கு  ஆகாரமளிக்கவில்லை வீணான காரியங்களில் மூழ்கிக்  கிடந்தவர்களுடன் நாங்களும் மூழ்கிக்   கிடந்தோம். கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம். (நாங்கள் மரணித்து இதனை உறுதியாகக் காணும் வரையில்(இவ்வாறே இருந்தோம்) என்றும் கூறுவார்கள். அல்குர்ஆன் 74:40-47 வர்கள் தாம்  உண்மையானவர்கள்; பயபக்தியுடையவர்கள். அல்குர்ஆன் 2:177

……எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு, அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாது இருக்கின்றாரோ அவர்களுக்கு, (நபியே!) நீர் துன்புறுத்தும் வேதனையை, நன்மாராயங் கூறுவீராக! (பொன், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக்காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு” உங்களுக்கா நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றை சுகித்துப் பாருங்கள்” என்று கூறப்படும் நாளையும் (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டும்!) அல்குர்ஆன் 9:34,35

மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு, அல்லாஹ்வும் இரக்கம்  காட்ட மாட்டான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜரீ இப்னு அப்துல்லாஹ்(ரழி) நூல்: புகாரி,முஸ்லிம்,அஹ்மத்

நன்றி: ரீட்இஸ்லாம்.நெட்