செவ்வாய், 18 செப்டம்பர், 2012


இல்லறம் இனிக்க

 திருமணமான புதிதில், எல்லாருமே சந்தோஷமா தான் இருக்காங்க. ஓரிரு வருஷம் கழித்து கேட்டால், கல்யாணம் செய்யாமலேயே இருந்திருக்கலாம்; ஏன் தான் கல்யாணம் செய்து கொண்டேனோ? என்று புலம்புபவர்கள் தான் அதிகம். நீங்களும் அப்படி புலம்பித் தவிப்பவரா? கவலையை விடுங்கள். சின்ன சின்ன அட்ஜஸ்மென்ட் செய்து கொண்டாலே போதும் உங்கள் பிரச்னை காணாமல் போய்விடும். இல்லறத்தை இனிதாக்க இதோ சில டிப்ஸ் உங்களுக்காக…

* உங்கள் கணவரது விருப்பு, வெறுப்புகளை அறிந்து, அதன்படி விட்டுக் கொடுத்து நடந்துங்கோங்க. அவருடைய விருப்பங்களை அலட்சியப்படுத்தாதீங்க. உங்களுக்கு பிடிக்காததா இருந்தாலும், அவருக்கு பிடித்ததை நீங்க ரசிக்கப் பழகிக்கோங்க.

* உங்க கணவர் உங்கள விட அறிவிலோ, கல்வியிலோ, பொருளாதாரத்திலோ குறைவாக இருந்தால், அவரை குறைகூறாதீங்க; மற்றவருடன் ஒப்பிட்டும் பேசாதீங்க.

* உங்க கணவருக்கு தேவையான சிறுசிறு உதவிகளை செய்ய மறக்காதீங்க.

*மத்தவங்க முன்னாடி உங்க கணவரை ஒரு போதும் விட்டுக் கொடுத்துப் பேசாதீங்க.

*கடுமையான வார்த்தையை பேசி காயப்படுத்தாதீங்க; அதுவும் மத்தவங்க முன்னாடி கூடவே கூடாது; கூலான, அன்பான வார்த்தைகளை மட்டுமே பேசுங்க. சந்தோஷமா இருக்கும் போது மட்டுமில்லை, சங்கடமான சமயங்களிலும் பேசணும்.

*நிறைய பேசுங்க, பேசவிடுங்க, பேசுறதை கேளுங்க… நீங்க மட்டும் பேசிபேசிப் போரடிக்காம, உங்க கணவர் பேசுவதையும் காதுகொடுத்து கேளுங்க.

*கணவருடன் சண்டை போட்டுட்டு மனக் குமுறலோடு படுக்கைக்குப் போகாதீங்க. படுக்கப் போகும் முன் சண்டையை சுமூகமாக தீர்த்துக்கோங்க.

*முடிந்த வரை இருவரும் சேர்ந்தே சாப்பிடுங்க. அட்லீஸ்ட் தினமும் டின்னர் மட்டுமாவது சேர்ந்து சாப்பிடுங்க.

*உங்க அன்பை, காதலை வெளிக்காட்ட அடிக்கடி கிப்ட்ஸ் கொடுங்க… விசேஷ நாட்கள்ல மட்டுமல்ல; மற்ற நாட்களிலும் கொடுக்கலாமே!

*வீட்டில் பர்ஸ்ட் பிரிபரன்ஸ் உங்க கணவனுக்கு தான் இருக்கணும்; அதுக்கு அப்புறமா தான் குழந்தைங்க கூட.

*நமக்கு தான் வயசு நாற்பதை தாண்டிடுச்சே, இனிமே என்ன இருக்கு என்று நினைக்காம, உங்களோட அழகுல கவனம் செலுத்த மறக்காதீங்க.

*தினமும் இரவில், குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி மனம் விட்டுப் பேசுங்க. சினிமா, அரசியல் என, உங்களுக்குள் கருத்து வேறுபாடு வராதவரை எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுங்க.

*ஐ லவ் யூ! இந்த வார்த்தையை உங்கள் கணவரிடம் அடிக்கடி சொல்லுங்க. இந்த வார்த்தையோட பவரை புரிஞ்சுப்பீங்க.

*நீங்க தவறு செய்யும் போது, உங்க கணவரிடம் மன்னிப்பு கேட்க தயங்காதீங்க.

 *வருடத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக, உங்கள் கணவருடன் எங்காவது டூர் போயிட்டு வாங்க. குழந்தைகள் இருந்தா தாத்தா பாட்டி அல்லது நண்பர்கள் என யாரிடமாவது விட்டுச் செல்லுங்கள். அந்த நாட்களை எப்படி கொண்டாட வேண்டும் என்பதை திட்டமிட்டு என்ஜாய் பண்ணுங்க. இப்படியெல்லாம் நீங்க இருந்தா உங்க குடும்பத்துலயாவது… சண்டையாவது… பின் என்ன? வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க. வாழ்க்கை வாழ்வதற்கே!

*இஸ்லாத்தை பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் மறக்காமல் பகிர்ந்துக் கொள்ளுங்க.....

நன்றி: அஜீஸ்அஹ்மத்.வோர்ட்பிரஸ்.காம்


நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்

மஸ்ஹர் ஸகரிய்யா

இன்றைய நவீன விஞ்ஞான தொழிநுட்ப உலகில் பேசப்படும் சிந்தனைகளுள் மிகக் கவர்ச்சியான ஒரு சிந்தனையே பெண்ணியம் பற்றிய சிந்தனையாகும். ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி மற்றும் பிரான்சியப் புரட்சி என்பவற்றை தொடர்ந்தே பெண் விடுதலை தொடர்பான எண்ணக்கருக்கள் சர்வதேச ரீதியில் வலுப்பெறத் தொடங்கின.

மேற்கத்தேய சமூகத்தில் பெண்ணியம் தொடர்பாக முன்வைக்கப்படும் சிந்தனைகளுக்கு சமனும் எதிருமான சிந்தனைகள் முஸ்லிம் சமூகத்திலிருந்து முன்வைக்கப்படாததால் பெண்ணியல் வாதிகளின் சிந்தனைகள் பெரும் விமர்சனத்திற்குட்பட வேண்டியதாக இருப்பினும் அவர்களது சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தம் நவீன உலகிற்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம் தொடர்பான சில சிந்தனைகளை இக்கட்டுரையினூடாக முன்வைத்து இஸ்லாம் எதிர்பார்க்கும் பல முஸ்லிம் பெண்கள் உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

சமூக சீர்கேடு (பித்னா), குடும்ப கௌரவம் என்று பெண்களைப் பயமுறுத்தி வீட்டோடு அவர்களை முடக்கும் பாரம்பரிய மரபுகளுக்கும் பெண்ணுரிமை, பெண் விடுதலை எனும் சொல்லாடல்களைப் பயன்படுத்தி பெண்களை நிர்வாணப்படுத்தி உலகின் பிரதான விளம்பரக் கவர்ச்சிப் பொருட்களாக அவர்களை மாற்றி வரும் புதிய ஐரோ–அமெரிக்க தாராளவாத சிந்தனை மரபுகளுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

இவ்விரு சிந்தனைகளும் மனித சிந்தனையை நேர்முரணாண இரு தீவிர நிலைகளுக்கு இட்டு சென்றிருப்பதன் காரணமாகவே பெண்கள் தொடர்பான ஆய்வுகள் உலகின் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
அண்மையில்ஒரு சஞ்சிகை பூகோள ரீதியில் பெண்களின் முன்னேற்றத்தை தரப்படுத்தி ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது. பெண்கள் தொடர்பாக நிலவிவரும் மேற்கூறிய இரு துருவ நிலைப்பாடுகளின் விளைவாக ஏற்பட்ட அறிக்கையாகவே இந்த அறிக்கையை நோக்க வேண்டி இருக்கின்றது.

எந்ந நாடுகளிலெல்லாம் பெண்ணியம் தொடர்பான சிந்தனைகள் அதிகம் பேசப்பட்டு பெண்கள் கவர்ச்சிப் பொருட்களாக மாற்றப்பட்டுள்ளனரோ அந்த நாடுகள் இவ்வறிக்கையில் முதலிடங்களைப் பெற்றுள்ளன. அதே சமயம் மிக பிற்போக்கான சமூகமாக இன்றும் கருதப்படும் ஆபிரிக்க நாடுகள் தரப்படுத்தலில் இறுதி இடங்களை பெற்றுள்ளன.

இவ்வாய்வறிக்கையின் சுருக்கம் பெண்களுக்கு பூரண சுதந்திரத்தைக் கொடுத்து சமூக வாழ்வில் அவர்களுக்கும் சம அந்தஸ்தை கொடுப்போர் மேற்கத்தேய சமூகம். பெண்கள் தொடர்பான பிற்போக்கான சிந்தனைகளுடன் இன்றும் வாழும் ஒரு சமூகமே முஸ்லிம் சமூகம் என்ற இனவாதக்கருத்துகள் இவ்வாய்வுகட்டுரையூனூடாக மறைமுகமாக முன்வைக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

உண்மையில் இஸ்லாம் இவ்விரு துருவ சிந்தனைகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு நடுநிலையான சிந்தனையொன்றை முன்வைக்கின்றது. அந்த நடுநிலையான சிந்தனையை நடைமுறைப்படுத்திக் காட்டுவதில் தொடர்ந்தேர்ச்சையாக முஸ்லிம் சமூகம் தவறிழைத்து வருவதன் காரணமாக இஸ்லாம் கூறும் பெண்கள் தொடர்பான முற்போக்கான சிந்தனைகள் தொடர்ந்தும் ஊடகங்களால் இரட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

பெண்களைப் போகப் பொருட்களாகவும் ஆன்மாவற்ற உயிர்களாகவும் பேய்களாகவும் வர்ணித்துக் கொண்டிருந்த உலகிற்கு பெண்ணியம், பெண்விடுதலை என்ற கோஷங்களை முன்வைத்து எந்த ஒரு புரட்சியும் ஏற்படலாம் என்பதற்கு எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லாதிருந்த காலப்பிரிவிலேயே இஸ்லாம் பெண்ணுரிமைகளை அறிமுகப்படுத்தி சமூகத்தில் ஆண்களுக்கு நிகரான அந்தஸ்தைப் பெறுவோராக அவர்களை அடையாளப்படுத்தி அவர்களை சங்கைப்படுத்திய மார்க்கமே இஸ்லாம் என்றால் மிகையாகாது.

பெண்கள் ஆண்களுக்காக படைக்கபடவில்லை. சமூகத்தில் ஆணும், பெண்ணும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை ஒத்தவர்கள். பெண்ணிண் மார்க்க பங்களிப்பு மற்றும் அவளின் சமூக அந்தஸ்து என்பன ஆணை விட எந்த வகையிலும் குறைந்ததல்ல என்ற கருத்துகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே முன்வைத்தது.

இந்த சிந்தனைகளைத் தெரியாத மேற்கத்தேய சமூகம் ஒரு புறமும் இந்த சிந்தனைகளை நடைமுறைப்படுத்திக் காட்ட முயற்சிக்காத அல்லது பிழையாக விளங்கி கொண்டுள்ள முஸ்லிம் சமூகம் மறுபுறமும் இருப்பதன் காரணமாக இன்று முஸ்லிம் பெண்களின் சமூக பங்களிப்பு தொடர்ந்தும் அபிப்பிராய பேதங்களுக்குட்பட்ட, மேற்கு நாடுகளால் விமர்சிக்கப்படும் பிரச்சினையாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது.

எமது சமூகத்தில் பெண்கள் தொடர்பாக பேசப்படுகின்ற, எழுதப்படுகின்ற விடயங்கள் அதிகம் என்பது மறுக்கத்தக்க விடயமல்ல. எமது நூலகங்களில் பெண்கள் விவகாரத்துடன் தொடர்புறும் நூற்கள் அதிகம் உள்ளன. எனினும் அவற்றுள் பெரும்பாலானவை பெண்களின் உடலமைப்பு, தோற்ற அமைப்பு என்பவற்றை மையப்படுத்தி அவர்களது பொறுப்புக்களை வரையறுக்கும் முயற்சிகளையே அவை செய்து வருகின்றன. பெண்களின் சமூக பங்களிப்பு, பெண்கள் கல்வி, பெண்கள் அரசியல் பிரவேசம், பெண்கள் தலைமைப் பொறுப்புக்களை ஏற்றல் போன்ற சிந்தனைகள் ஆங்காங்கே எப்போதாவது பேசப்படும் சர்ச்சைக்குட்பட்ட சிந்தனைகளாகவே இருந்து வருகின்றன.

அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் வளர்ச்சி தேக்க நிலையிலே இன்றும் உள்ளது என்பதை ஏற்கத்தான் வேண்டும். அதே சமயம் மேற்கில் பெண்களின் கட்டற்ற சுதந்திரம் ஒரு வளர்ச்சியல்ல. அது ஒரு வீக்கமே என்பதை அவர்கள் கிட்டிய எதிர்காலத்தில் உணர்ந்து கொள்வார்கள். இத்தேக்க நிலைக்கும், வீக்க நிலைக்கும் மத்தியில் ஒரு முஸ்லிம் பெண் எப்படி வாழ வேண்டும், மார்க்கத்திற்கு அவள் எத்தகைய பங்களிப்புக்களை வழங்க முடியும் என்ற தெளிவான சிந்தனைகளை அல்குர்ஆனும் ஸுன்னாவும் இஸ்லாமிய வரலாறும் எமக்கு அறிமுகப்படுத்துகின்றது.
இன்று இஸ்லாம் எழுச்சியடைந்து வருகின்றது என்பதற்கான பிரதான சான்று முஸ்லிம் பெண்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களே. எனினும் தற்போதிருக்கின்ற நிலை வளர்ச்சியின் ஒரு படி நிலையே அன்றி முழுமையான வளர்ச்சியல்ல.

முன்பொரு காலம் இருந்தது. அப்போது வீட்டை விட்டு தனது ஆயுட்காலத்தில் இருமுறை வெளியேறும் பெண்ணே சிறந்த பெண்ணாகக் கருதப்பட்டாள். அவள் பிறந்த வீட்டிலிருந்து கணவனின் வீட்டிற்கு போகும் சந்தர்ப்பம், கணவனின் வீட்டிலிருந்து மண்ணறைக்கு போகும் சந்தர்ப்பம் என்பவையே அவை. அன்று, பெண்கள் கல்வி கற்கக் கூடாது; ஏனெனில் பெண்கள் வெளியே செல்வதால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன் என்ற மனப்பதிவே காணப்பட்டது. ஆச்சரியம் என்னவெனில் இக்கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் முன்வைக்கப்பட்டமையாகும். இஸ்லாம் இத்தகையதொரு விடயத்தை எமக்குக் கற்று தரவில்லை.

மதீனத்து பெண்கள் ஐவேளை தொழுகைக்கும் பள்ளிக்குச் செல்வார்கள். ஜுமுஆவுக்குச் செல்வார்கள். மதீனாவில் முனாபிக்களும் யூதர்களும் அதிகமாக வாழ்ந்த காலத்திலேயே இந்நடைமுறை பேணப்பட்டு வந்தது.
தொழுகையில் ஆண்களின் வரிசைகளுக்குப் பின்னால் பெண்களின் வரிசைகள் காணப்படும். பள்ளிவாயலில் பெண்கள் நுழைவதற்கென்று பாபுந்நிஸா (பெண்களின் நுழைவாயில்) என்ற வாயிலே மஸ்ஜிதுந்நபவியில் காணப்பட்டது. ஒரு மனிதன் தினந்தோறும் நபி(ஸல்) அவர்களது மஸ்ஜிதுந்நபவியில் ஆண்களின் வரிசையில் இறுதி வரிசையிலேயே தொழுது வந்தார். அவர் தொடர்ந்தும் இறுதி வரிசையில் இருப்பதற்கான காரணம் ருகூவுக்குச் செல்லும் போது தனது கைகளுக்கு இடையால் பின்னால் தொழும் பெண்களை பார்ப்பதற்காகவாகும். இந்த விடயம் நபி (ஸல்) அவர்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது பித்னா ஏற்படுகின்றது எண்ணி நபி (ஸல்) அவர்கள் பெண்களின் வருகையை தடை செய்யவில்லை.

அல்லாஹுத்தஆலா பெண்ணை ஆணுக்காகப் படைக்கவில்லை. மனிதனை எந்த நோக்கத்திற்காகப் படைத்தானோ அதே நோக்கத்திற்காகத் தான் பெண்ணையும் படைத்தான். அல்லாஹுத்தஆலா மனிதனது அடிப்படையான பணியைப் பற்றி பேசும் போது இரு சாராரும் பரஸ்பர ஒத்துழைப்புடன் நிறைவேற்ற வேண்டிய பணியாகவே அப்பணியை எடுத்து காட்டினான்.
விசுவாசம் கொண்ட ஆண்களும் விசுவாசம் கொண்ட பெண்களும் ஒருவருக்கொருவர் நேசமாக நடந்து கொள்வார்கள், நன்மையை ஏவி தீமையை தடுக்கம் பணியையும் செய்வார்கள்.

எனவே பெண்ணும் அல்லாஹுத்தஆலா ஏவிய இப்பணியை செய்வதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றாள். எனவே அவளை தடுக்கும் உரிமை கணவனுக்கோ, தந்தைக்கோ, சகோதரனுக்கோ கிடையாது. எனினும் பெண்ணின் வீடு என்ற அதிமுக்கியமான தஃவா களத்தை ஒழுங்குபடுத்திய பின்னரே சமூகம் என்ற களத்திற்குப் பிரவேசிக்க வேண்டும்.
அந்த அணுகுமுறையைத்தான் ஸஹாபா பெண்மணிகள் கையாண்டனர். ஆண்கள் அனைவரும் சமூக களத்தில் இறை பணியை செய்து கொண்டிருக்கும் போது பெண்கள் வீட்டுச்சூழலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் ஒரு பரம்பரையை கட்டியெழுப்பியதுடன் தமது சக்திக்கும், இயலுமைக்கும் ஏற்ப பல பொறுப்புக்களை ஏற்றுச் செயல்பட்டனர்.
புனித இஸ்லாத்திற்குள் முதலில் நுழைந்த கதீஜா அம்மையார் தனது செல்வத்தை இந்த மார்க்கத்திற்காக முதலீடு செய்தார்கள். தனது கணவனுக்கு நல்லதொரு மனைவியாகவும், தனது பிள்ளைகளுக்கு நல்லதொரு தாயாகவும் செயற்பட்டுள்ளார்கள்.

ஆஇஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் யுத்த களத்திற்குச் சென்றார்கள், யுத்தத்தில் காயப்பட்டவர்களுக்கு வைத்தியம் செய்தார்கள். நபி (ஸல்) அவர்களது மரணத்தின் பின் ஸஹாபாக்களுக்கும் தாபிஈன்களுக்கும் ஹதீஸ்களை கற்பிக்கும் மிகச் சிறந்ததோர் ஆசிரியராக (முஹத்திஸா) இருந்துள்ளார்கள்.

சுமையா (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக உயிர் நீத்த முதல் மனிதர் என்ற பெருமையை பெற்று கொண்ட ஒரு பெண். அஸ்மா (ரலி) அன்ஹா, உம்முல் பழல் (ரலி), ஹன்ஸா(ரலி) போன்ற ஸஹாபாப் பெண்களின் வரலாறுகளை வாசித்துப் பாருங்கள். அவர்கள் மிகச்சிறந்த பரம்பரையொன்றை வளர்த்து அப்பிள்ளைகளை மார்க்கத்திற்காகவே அர்ப்பணித்தார்கள்.

மார்க்கத்தை கற்று கொள்வதில் அன்றைய பெண்கள் வெட்கப்படவில்லை. ஆண்களுடன் போட்டி போட்டு கொண்டு மார்க்கத்தை கற்பதில் ஆர்வத்துடன் செயற்பட்டனர். நபி (ஸல்) அவர்களுடன் பேசி பெண்கள் மார்க்கத்தை கற்பதற்கு தனியான ஒரு நாளையே வாரந்தோறும் ஒதுக்கி கொண்டார்கள்.
மார்க்கத்திற்காக வாழ்ந்து தம்மை மார்க்கத்திற்காகவே அர்ப்பணித்தக் கொண்ட மனிதர்களின் வரலாறுகள் பேசப்படும் போது அதிக ஆண்களின் வரலாறுகளே பேசப்படுகின்றன. எனினும் மார்க்கத்தை பாதுகாப்பதில் பெண்களும் மிகப்பெரும் பங்களிப்பு செய்துள்ளனர் என்பதை எம்மால் மறந்து விடமுடியாது. ஒன்றில் அவர்கள் ஆண்களின் தியாகத்தின் பிண்ணியில் இருந்திருப்பார்கள். அல்லது அவர்களே மிகப் பெரும் தியாகியாக இருந்திருப்பார்கள்.

நாம் ஏற்கனவே மார்க்கத்திற்காக உயிர்தியாகம் செய்த முதல் மனிதர் ஒரு முஸ்லிம் பெண்மணி என்று பார்த்தோம். மார்க்கத்தை பாதுகாத்து கொள்ளும் நோக்குடன் இடம் பெற்ற முதலாவது ஹிஜ்ரத்தான அபீஸீனியாவுக்கான ஹிஜ்ரத்தில் ஆண்கள் 83 பேருடன் 19 பெண்களும் கலந்து கொண்டனர். குறைஷி காபிர்கள் இஸ்லாத்தைத் தீர்த்து கட்டும் நோக்கில் முஸ்லிம்களை அபூதாலிப் கணவாயில் போட்டு 3 வருடங்கள் அவர்களுடன் இருந்த தொடர்பை முழுமையாக துண்டித்து கொண்டனர். அங்கு முஸ்லிம்கள் அனைவரும் உண்ண உணவோ தாகத்தை தீர்க்கும் நீரோ இன்றி அதிக சிரமப்பட்டனர். அந்த சோதனையால் அதிகம் சிரமப்பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜ்ரத் என்ற 300 கி.மீ தொலைவான நீண்ட பயணத்தை எடுத்து கொள்ளுங்கள். உயர்ந்த மலைகள், அபாயம் நிறைந்த பாதைகள், இவற்றை முஸ்லிம் பெண்கள் கடந்து சென்று முஹாஜிரா என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளவில்லையா? உம்மு ஸலாமா (ரழி) அவர்கள் வழித்துணையின்றி தனியாக இம்மிகப்பெரும் தூரத்தை கடந்து செல்லவில்லையா? கர்ப்பிணி தாய்மார்கள், பால்குடி தாய்மார்கள் வயோதிப பெண்கள் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் இம்மாபெரும் சோதனையை எதிர்கொண்டார்கள்.

உஹத் யுத்தத்தில் நபி (ஸல்) அவர்களை தாக்க வந்து கொண்டிருந்த இப்னு கமிஆவை தடுத்து நிறுத்தி அவனுடன் போராடியதில் உம்மு அமாரா (ரழி) அவர்களது உடலில் 12 காயங்கள் ஏற்பட்டன. இப்போரில் ஆயிஷா (ரழி) மற்றும் உம்மு ஸுலைம் (ரழி) போன்றோர் தொடர்ந்தும் காயப்பட்ட வீரர்களுக்கு வைத்தியம் செய்து பராமரித்து கொண்டிருந்தனர். பலமுறை தண்ணீர் நிரப்பி வந்து படைவீரர்களின் தாகத்தை தணிக்க உதவினர். உம்மு ஸல்மா (ரழி) அவர்கள் சிதறி ஓடிக்கொண்டிருந்த முஃமீன்களை அழைத்து ரோஷமூட்டி யுத்தத்தில் ஈடுபட செய்தார்கள். இப்படி அன்றைய முஸ்லிம் பெண்கள் நல்ல தாய்மார்களாக, நல்ல குடும்பத் தலைவிகளாக இருந்துள்ளதுடன் அவர்களில் பலர் சமூக களங்களிலும் தம்மால் இயலுமான பங்களிப்பை செய்திருப்பதை காண முடியும்.

நேர்வழிபெற்ற 4 கலீபாக்களின் காலத்திலும் இத்தகைய புரட்சிப் பெண்கள் பலரை நாம் காண்கின்றோம். அவர்கள் சமூகத்தில் அனைத்து தளங்களிலும் தமது பங்களிப்புக்களை வழங்கி வந்தனர். ஸஹாபி பெண்களிடமிருந்து மார்க்கத்தை கற்கும் நோக்கில் பல தாபியீன்கள் அவர்களை சந்திக்க வந்துள்ளனர். பிற்காலங்களில் பெண்களுக்கென்று தனியான இல்முடைய மஜ்லிஸ்கள் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.
பெண்களின் பிரதான பொறுப்பு ஒரு தாயாக, குடும்பத் தலைவியாக இருந்து மிகச்சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதாகும். எனினும் இதன் பொருள் அவள் வீட்டில் முடங்கி கிடக்க வேண்டும் என்பதல்ல. பெண்கள் ஆண்களுக்கு பணிவிடை செய்வதற்காக படைக்கபட்டவர்களல்ல. ஒரு பெண்ணிண் பிரதான பணி எப்போதும் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருப்பது என்ற கருத்தை நாம் மார்க்கத்தில் எங்கும் காண முடியாது. அப்படி ஒரு பெண் இருப்பது கடமையுமல்ல. வரவேற்கத்தக்கது என்பதே பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்து. எனவே அவளது பணியை அவள் செய்வதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது.

பெண்கள் விவாகரத்தில் இன்று மற்றொரு பிழையான மனப்பதிவும் சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. ஒரு பெண் கல்வி கற்கலாம், பல்கலைக்கழகத்திற்கு செல்லலாம். ஏன் தனியாக வெளிநாட்டிற்கு தொழில் வாய்ப்புக்களுக்காகக் கூடச் செல்லலாம். ஆனால் ஐவேளை தொழுகைக்குச் செல்வதற்கு மட்டும் தடை விதிக்கப்படுகின்றது. இது தொடர்பாக நவீன கால அறிஞர் யூசுப் அல்கர்ழாவி பின்வருமாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

'நான் தென்னாசிய நாடுகளுக்குச் சென்ற போது பள்ளிவாயல்களில் ஒரு பெண்ணையேனும் என்னால் காண முடியவில்லை. இது தொடர்பாக நான் அவர்களிடம் வினவிய போது இமாம் அபூஹனீபா பெண்கள் பள்ளிக்கு வருவதை தடை செய்துள்ளார்கள் என்று கூறினார்கள். அப்போது நான் 'இக்கருத்து அபூஹனீபாவின் பழைய கருத்து. தற்போது பெண் சந்தைக்கும், பல்கலைக்கழகத்திற்கும் செல்கின்றாள். விமானத்தில் தனியாக பறக்கின்றார். ஏன் அவள் பள்ளிக்கு வருவதை மட்டும் தடை செய்கின்றீர்கள்?' என்று கேட்டார். 'சமூக பாரதூர செயல்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் பெண்கள் நீதிபதியாகக் கூட இருக்க முடியும் என்று கூறியவரே அபூஹனீபா. அந்த மனிதரின் பெயரைகூறி நீங்கள் இத்தகைய குறுகிய நிலைப்பாட்டுக்கு வந்துள்ளீர்களே' என்று கூறி கர்ளாவி அவர்களை கண்டித்தார்கள்.

ஒரு பெண் பள்ளிக்கு தொழுகைக்காகவோ அல்லது கற்பதற்காகவோ செல்வதற்கு அனுமதி கேட்டால் தடை செய்யும் அதிகாரம் ஆணுக்கு இல்லை என்று கூறுகின்ற மார்க்கமே இஸ்லாம். அத்தகைய மார்க்கத்தின் பெயரை பயன்படுத்தி எப்படி பெண்களை வீட்டில் அடைத்து வைக்க முடியும்?
எமது சமூகத்தில் இருக்கின்ற ஆண்களின் நிலை வியப்பை அளிக்கின்றது. அவர்கள் தமது மனைவிமார்களின் பெயர்களையோ அல்லது தாய்மார்களின் பெயர்களையோ அல்லது சகோதரிகளின் பெயர்களையோ உச்சரிப்பதற்கே கூச்சப்படுகின்றார்கள். பெண்களின் பெயர்களை அவர்கள் தரக்குறைவாக நினைக்கின்றனரா? அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா? அதே சமயம் ஸஹாபாப் பெண்களின் பெயர்களை கூச்சப்படாமல் சொல்கின்றோம் ஏன் இந்த இரட்டை வேடம்?

அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் வரலாறும் எமக்கு முன்மாதிரியான பெண் ஆளுமைகள் பலரை அறிமுகப்படுத்துகின்றன. பெண்கள் தொடர்பான சரியான எண்ணக்கருக்கள் மறைய ஆரம்பித்து மார்க்கத்தின் பெயரால் பெண் எப்போது வீட்டில் அமர்த்தப்பட்டாளோ அன்று இஸ்லாமிய சமூகத்தின் வீழ்ச்சியும் ஆரம்பமாக தொடங்கின. சமூகத்திலிருந்து பெண்கள் முழுமையாக ஓரங்கட்டப்பட்டனர்.

பெண்ணியல் வாதிகள் கூறுவது போன்று முஸ்லிம் சமூகத்தில் பெண் வன்முறை ,பெண் அடிமைத்துவம் என்பன அன்று உருவாகாவிட்டாலும் கூட மார்க்கத்தின் பெயரால் அவளை சமூகத்தை விட்டு ஓரங்கட்டும் நடவடிக்கை ஆரம்பமானது. பெண்களிடம் கலந்தாலோசனை செய்து விட்டு அதற்கு மாற்றமாக முடிவெடுங்கள், அவர்களுக்கு எழுத்தறிவைக் கற்பிக்க வேண்டாம். பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம். என்ற கருத்துக்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் ஆழமாக பதிய ஆரம்பித்தன.

பெண்ணை சமூகத்திலிருந்து ஓரம் கட்டும் முயற்சியை அன்றைய முஸ்லிம் சமூகம் பெண் வன்முறையாக கருதவில்லை. பெண்ணும் கூட அது தன் மீது ஏற்படுத்தபட்ட ஒரு அடிமைத்துவ வாழ்வு என்று எண்ணவில்லை. பெண்கள் தமது வீட்டையும் குடும்பத்தையும் நிர்வகிப்பதில் அவர்களிடம் எத்தகைய தயக்கமும் இருக்கவில்லை. ஏனெனில் பெண்ணினத்திற்குக் கிடைக்க வேண்டிய மரியாதையும் பாதுகாப்பும் அபரிமிதமாகவே கிடைத்தது.
நாகரீகம் வளர வளர பெண் வீட்டை விட்டு காலடி வைக்க துவங்கியதும் தான் பெண் சுதந்திரம் என்பது உணரப்பட்டு அதன் தேவை அறியப்பட்டு அந்த உணர்வு எண்ணமாகி, சிந்தனையாகி இன்றைய கால கட்டத்தில் சொல்லாகி, செயலாக வடிவெடுத்துள்ளது. இந்த சிந்தனை எல்லை கடந்து பேசப்பட்டதன் காரணமாக மேற்கத்தேய சூழலில் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள் உருப்பெற்று மேற்கில் பெண்களுக்கு எல்லை மீறிய சுதந்திரம் கொடுக்கப்பட்டன. கூடவே முஸ்லிம் நாடுகளில் பெண்ணை இஸ்லாம் அடக்கி ஒடுக்குகின்றது என்ற சிந்தனையும் பரப்பப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தாலிபானகளின் பெண்கள் குறித்த கருத்துக்களும், ஆபிரிக்க நாடுகளில் முஸ்லிம் பெண்களின் பிற்போக்கான சிந்தனைகளும் அவர்களது கருத்துக்களுக்கு ஆதாரம்களாகக் கொள்ளப்பட்டன. பெண்ணியல்வாதிகளின் இக்கருத்துக்களுக்குச் சார்பாக முஸ்லிம் சமூகத்திலிருந்தும் ஓரிரு குரல்கள் ஒலிக்கவே அந்த நிலைப்பாடு உறுதியானது.
\
உண்மையில் முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் இன்று மிகக்குறைவாகவே காணப்படுகிறது. சமூக தளத்திற்குள் காலடி எடுத்து வைத்து அவள் தனது பங்களிப்பை வழங்குவது ஒரு புறமிருக்கட்டும். அவளது முதற்களமான வீட்டைக் கூட அவளால் இன்னும் ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியாத பலவீனம் காணப்படுகின்றது. இந்நிலை முஸ்லிம் சமூகத்திற்குள் திட்டமிட்டு ஏற்படுத்தபட்ட ஒரு நிலை என்பதை விட பெண்களின் மார்க்க அறிவீனத்தின் காரணமாக அவர்களே தமக்கு இழைத்து கொண்ட ஒரு அநீதமே இது. இந்த அநீதியிலிருந்து முஸ்லிம் பெண் தன்னை காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். முஸ்லிம் பெண்ணின் பிற்போக்கான நடைமுறைகளைப் பயன்படுத்தி இஸ்லாமும் முஸ்லிம் சமூகமும் குற்றஞ்சாட்டப்படும் பயங்கரத்திற்கெதிராக போராடும் மிகப் பெரும் பொறுப்பை முஸ்லிம் பெண் சுமந்து கொள்ள வேண்டும்.

அது சிந்தனையாகி சொல்லாகி செயலாக நடைமுறையாக மாற வேண்டும். பெண்ணியம் பேசும் மனிதர்களின் சிந்தனைகளை இஸ்லாமிய மூலாதாரங்களின் துணை கொண்டு எதிர்க்கும் ஆற்றலை எப்போது முஸ்லிம் பெண் சமூகம் பெற்றுக்கொள்ளுமோ அது இஸ்லாமிய எழுச்சியின் முக்கிய மைல் கல்லாக மாறி விடும். இன்று உலக சனத்தொகையில் ஏறக்குறைய 90 கோடி முஸ்லிம் பெணகள் உள்ளனர். இவர்களுள் விரல் விட்டெண்ணக் கூடிய பெண் ஆளுமைகளே இப்பெரும் பொறுப்பை சுமந்துள்ளனர். ஆனால் இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணிய சிந்தனைகளின் அடிப்படையில் பல்லாயிரம் அமைப்புக்களையே உருவாக்கி வெற்றிகரமாக தமது பணியை செய்து வருகின்றனர். ஆனால் சத்தியத்தின் பக்கம் உள்ள எம்மிடம் ஆஇஷாக்களாக, உம்மு அமாராக்களாக, சுமையாக்களாக ஓரிரு பெண்களே   உருவாகியுள்ளனர்.

எனினும் அந்த விரல்விட்டெண்ணக்கூடிய பெண்களின் பங்களிப்பு இன்று முஸ்லிம் உலகின் போக்கையே தலைகீழாக மாற்றி வருகின்றது. இப்பெண்களின் தொகை அதிகரிக்கும் பட்சம் மிக வேகமான இஸ்லாமிய எழுச்சியொன்றை முஸ்லிம் உலகில் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை எமது சமூகத்தில் ஏற்படுத்துவதற்காக நவீன இஸ்லாமிய எழுச்சிக்குப் பங்களிப்புச் செய்த சில முஸ்லிம் பெண் ஆளுமைகளை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.

1924 இல் இஸ்லாமிய கிலாபத் வீழ்ச்சியுற்றதை அடுத்து சர்வதேச ரீதியில் இஸ்லாமிய கிலாபத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கமும், இந்திய உபகண்டத்தில் ஜமாஅத்தே இஸ்லாமியும் தோற்றம் பெற்றன. முஸ்லிம் சமூகம் பெண்களை சமூக தளத்திலிருந்து ஓரங்கட்டியிருந்த சமயம் இவ்விரு இயக்கங்களும் இஸ்லாமிய எழுச்சி ஒன்றை ஏற்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் நன்கு விளங்கி வைத்திருந்தனர். மேலும் பெண்ணிய சிந்தனைகளால் இஸ்லாம் களங்கமுறும் நிலையையும் அவதானித்த இவ்விரு இயக்கங்களும் தமது இயக்கங்களின் ஒரு பிரிவாக பெண்கள் பிரிவையும் ஆரம்பித்தார்கள்.
ஒரு பெண்ணிண் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பணிகள் ஒரு சிறந்த குடும்ப அலகைக் கட்டியெழுப்புவதாக அமைய வேண்டும் என்று எதிர்பார்த்த அவர்கள் அவர்கள் பெண்களின் சமூக பங்களிப்புக்கும் இடம் கொடுத்தார்கள்.
இவ்விரு இயக்கங்களும் பெண்ணிய சிந்தனைகளைப் போலன்றி பெண் சுதந்திரம் என்பதன் யதார்த்த வடிவத்தை மிகச் சரியாக விளங்கியிருந்தார்கள். இவ்விரு இயக்கங்களின் தோற்றத்துடன் முஸ்லிம் உலகெங்கும் ஹிஜாப் தொடர்பான மிகச்சரியான சிந்தனைகள் தோற்றம் பெற்றன.

அவற்றின் பெண்கள் பகுதிகள் இன்று குடும்பத்தை ஒழுங்குபடுத்தல், மிகச்சிறந்ததொரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படைகளை இடல் என்பவற்றையும் கடந்து முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இஸ்லாத்தின் தூய பெண்ணிய சிந்தனைகளை உலகறிய செய்வதன் மூலம் பெண்ணிய வாதிகளின் வாதங்களிலிருந்து இஸ்லாத்தை பாதுகாத்தல், பெண்களின் சமூக பங்களிப்பின் வரையறைகள், பெண்களின் அரசியற் பிரவேசத்தின் நியாயங்களும் வரையரைகளும் போன்ற சிந்தனைகளையும் முன் வைத்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எகிப்தில் செயற்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம் சகோதரிகள் அமைப்பு 1932 இலேயே தோற்றம் பெற்றது. மக்கா காலத்தில் ஸஹாபா பெண்கள் மார்க்கத்தை பாதுகாப்பதற்காக எத்தகைய தியாகங்களை மேற்கொண்டார்களோ அதற்கு சமனான தியாகங்களை இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த பல பெண்கள் அனுபவித்தனர். அதற்கு மிகச்சிறந்த உதாரணமே ஸைனப் அல் கஸ்ஸாலி. அவர்களது தியாகத்தின் விளைவாக இன்று பரவலான ஓர் இஸ்லாமிய எமுச்சி ஏற்பட்டு வருகின்றது. இந்த எழுச்சியின் சிம்ம சொப்பனங்களாக கருதப்படும் இன்றைய முஸ்லிம் பெண்களில் ஒரு சிலரை அடையாளப்படுத்த விரும்புகின்றேன்.

மர்வா ஷேர்பின் - நவீன கால சுமையா (ரழி) அன்ஹா
இவ்வருடம் ஜுலை மாதம் ஜேர்மனியில் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்பட்ட அகோர நிகழ்வை உலகம் எளிதில் மறந்து விடாது. மர்வா ஷேர்பின் என்றழைக்கபட்ட முஸ்லிம் பெண் அரச நீதிமன்றத்தில் 18 தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யபட்ட நிகழ்வே அது. மர்வா ஷேர்பின் என்றழைக்கபட்ட சாதாரண முஸ்லிம் கர்ப்பிணி பெண் தனது மார்க்கத்தை அடையாளப்படுத்தும் வகையில் ஹிஜாப் அணிந்து சென்ற போது அலெக்ஸ் என்ற இளைஞன் அவரை தீவிரவாதி என்று கூறி மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி இஸ்லாத்தையும் அந்த இஸ்லாமிய பெண்ணையும் தூற்றினான். தனது மார்க்க உரிமையை பாதுகாக்க மர்வா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். வழக்கின் முடிவு மர்வாவுக்கு சார்பாக இருந்த போது குற்றவாளி திடீரென பாய்ந்து தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை உறுவி 3 மாத கர்ப்பிணி பெண்ணாண மர்வாவின் வயிற்றில் குத்தி மர்வாவையும் அவரது வயிற்றில் வளர்ந்து வரும் கருவையும் கொலை செய்தான். இந்த நிகழ்வை ஜேர்மன் காவற்துறை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததோடு மர்வாவை காப்பாற்ற வந்த அவரது கணவரையும் சுட்டதில் அவர் படுகாயமுற்றார்.

ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம் பெண்கள் தமது இஸ்லாமிய தனித்துவத்தை பாதுகாப்பதற்காக நாளாந்தம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருக்கின்ற ஆட்சியாளர்களும் முஸ்லிம் பெண்களின் உரிமைக்கெதிராக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். இவ்விரு முறுகல் நிலைக்கும் மத்தியில் அங்கு மிக வேகமான ஓர் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டு வருகின்றது. அந்த எழுச்சி அங்கு வாழும் மர்வா போன்ற இஸ்லாமிய விழுமியங்களைப் பேணிவரும் பெண்களால் ஏற்பட்டு வரும் எழுச்சியே என்றால் அது ஒரு மிகையான கருத்தாக இருக்காது.

யெமனிலிருந்து உதித்த புதிய நங்கை தவக்குல் கர்மான் உம்மு ஐய்மனாக
உம்மு ஐம்மான் (ரழி) அவர்களை நாம் மறந்திருக்க மாட்டோம். உஹத் யுத்தத்தில் முஸ்லிம்கள் பின் வாங்கி ஓடிக்கொண்டிருந்ததை பார்த்த உம்மு ஐமன் போர்க்களத்திற்கு வந்து ஓடுகின்றவர்களது முகத்தில் மண்ணை வாரி வீசுகின்றார். அவர்களை பார்த்து இந்தா 'இக் கைராட்டையை நீ எடுத்து கொண்டு வாளை என்னிடம் தா' என்று கூறி பின் வாங்கி கொண்டிருந்த முஸ்லிம்களை ரோஷமூட்டி தூண்டிக் கொண்டே இருந்தார்.

யெமனில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சி போராட்டத்தில் தவக்குல் கர்மான் என்ற 32 வயது நிரம்பிய அரபு பெண்ணிண் பங்களிப்பை உம்மு ஐமன் (ரழி) அவர்களின் பங்களிப்புடன் ஒப்பிட்டு பார்ப்பதில் தவறேதும் இருக்காது.
அல் - இஸ்லாஹ் என்ற இஸ்லாமிய கட்சியின் அங்கத்தவர்களுள் ஒருவரான தவக்கல் கர்மான் ஸாலிஹின் சர்வாதிகார ஆட்சிக்கெதிராக பல வருடங்களாக சவால் விடுத்து வருகின்றார். ஹிஜாப் அணிந்த நிலையில் இஸ்லாமிய விழுமியங்களைப் பேணி அஹிம்சை வழிப்போராட்டத்தை மேற்கொண்டுள்ள தவக்குல் கர்மான் யெமன் புரட்சியின் தலைவர் என்றழைக்கபடுகின்றார். இவரது அயராத போராட்டம் இவரை நோபல் பரிசு வரை அழைத்து சென்றுள்ளது. நோபல் பரிசு பெறும் முதல் அரபு பெண் தவக்குல் கர்மான் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நோபல் பரிசு வழங்குவதாக அறிவிக்கபட்டதையடுத்து யெமனியர்களும் உற்சாகமடைந்து தமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக அதை கருதி புதியதொரு வீரியத்துடன் போராட்டங்களை மேற்கொண்டு யெமனில் நல்லாட்சி ஏற்பட வழி செய்தனர். தனது இப்பரிசை கர்மான் டியூனீசியா, எகிப்து,யெமன்,லிபியா, சிரியா போன்ற நாடுகளில் நல்லதொரு ஆட்சியை அமைக்கும் நோக்கில் உயிரிழந்துள்ள ஷஹீத்களுக்கு சமர்ப்பித்துள்ளமை முஸ்லிம் பெண்களுக்கு அவரது முன்மாதிரியை பறைசாற்றி நிற்கின்றது

 அரேபிய வசந்தம் என்ற பெயரில் கடந்த ஒரு வருட காலமாக அரபு நாடுகளில் நடந்து வரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் நவீன இஸ்லாமிய எழுச்சிக்கான ஒரு படிக்கல்லே. இன்று நடைபெற்றுவரும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களின் விளைவாக இன்று டியூனீசியா,மொரோக்கா, எகிப்து போன்ற நாடுகளில் இஸ்லாமிய கட்சிகளின் கை ஓங்கியுள்ளது. இந்த மக்கள் எழுச்சி போராட்டங்களில் தவக்குல் கர்மானை போன்று பல்லாயிரக்கனக்கான பெண்கள் தமது விடுதலைக்காக வீதியில் இறங்கி போராட்டம் நடாத்துகின்றார்கள். எகிப்தில் சர்வாதிகார ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியை வீழ்த்திய பெருமை அஸ்மா மஹ்பூத் என்ற 26 வயதுடைய முஸ்லிம் பெண்ணுக்கே உரித்தாகியது. அஸ்மா மஹ்பூதின் உணர்ச்சிகரமான வார்த்தைகளே எகிப்தின் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை தஹ்ரீர் சதுக்கத்திற்கு அழைத்து வந்தது. எனவே இந்த நவீன மக்கள் எழுச்சி போராட்டங்களில் சாதாரண முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு அளவிட முடியாததாகும்.

இந்த வரிசையில் முஸ்லிம் உலகிற்கு பரிசாக கிடைத்த மற்றொரு ஊடகவியலாளரே யுவோன் ரிட்லி. 2003 இல் இஸ்லாத்தை ஏற்று கொண்ட யுவோன் ஆப்காணிஸ்தானுக்கும், பலஸ்தீனுக்கும் நேரடியாக சென்று அவர்கள் படும் அவலங்களை உலகறிய செய்தார். பிரித்தானியாவில் பிறந்த யுவோன் ரிட்லி மேற்கில் இஸ்லாம் தொடர்பாக முன்வைக்கபடும் குற்றசாட்டுகளுக்கு சர்வதேச ஊடகங்களை பயன்படுத்தி விடையளித்து வருகின்றார். ஈரான் … என்ற தொலைக்காட்சி ஊடகத்தில்   தற்போதைய ஊடகவியலாளராக உள்ள யுவோன் இஸ்லாத்தை ஏற்க முன் பல முஸ்லிம் சாரா சர்வதேச ஊடகங்களுக்காக வேலை செய்தவர். அரேபிய எழுச்சிப் போராட்டங்கள் குறித்து யுவோன் ஊடகங்களில் தெரிவித்த கருத்துக்கள் சர்வதேச உலகின் கவனத்தை ஈர்த்த விடயங்களாகும்.

இப்படி பெண்களில் ஒரு சாரார் வீதிக்கிறங்கி நேரடியான போராட்டங்களில் ஈடுபட மற்றுமொரு சாரார் ஊடகங்கள் மூலம் கருத்தியல் ரீதியான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அன்றைய ஹன்ஸா- இன்று உம்மு முஹம்மத்
உம்மு முஹம்மத் என்பவர் கலாநிதி அப்துல்லாஹ் அஸாமின் மனைவி. பலஸ்தீன், ஆப்கானிஸ்தான் ஜிஹாதிகளில் கலந்து கொண்ட அப்துல்லாஹ் அஸாமை எதிரிகள் குண்டு வைத்துக் கொலை செய்தனர். அவரும் அவரது மகன் முஹம்மத், இப்ராஹீம் ஆகியோரும் பயணம் செய்த கார் ஒன்றிலே அந்த குண்டு பொருத்தப்பட்டிருந்தது. இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தந்தையும், இரு மகன்களும் ஷஹீதாகின்றார்கள். ஷஹீத்களின் குடும்பத்தினரை தரிசித்து ஆறுதல் சொல்லும் நோக்குடன் அப்துல்லாஹ் அஸாமிற்கு கீழ் பணியாற்றிய முஜாஹித்கள் கவலை தோய்ந்த முகத்துடன் உம்மு முஹம்மதிடம் வருகின்றார்கள். அவர்களது கவலை தோய்ந்த முகத்தை பார்த்த உம்மு முஹம்மத் 'ஏன் கவலைப்படுகின்றீர்கள். ஒரு அப்துல்லாஹ் அஸாம் நிலத்தில் புதைந்து விட்டால் அவரிலிருந்து எண்ணற்ற அப்துல்லாஹ் அஸாம்கள் புத்துயிர் பெற்று வருவார்கள். இது ஒரு வெற்றியாகும்.எமது ஜிஹாதிய வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை' என்று கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இந்த உம்மு முஹம்மதின் வார்த்தைகள் அன்று ஹன்ஸா (ரழி) அவர்கள் கூறிய வார்த்தைகளை ஒத்தாகவே அமைந்துள்ளன. காதிஸிய்யா யுத்ததிற்கான அழைப்பு விடுக்கப்பட்ட போது ஹன்ஸா (ரழி) அவர்கள் அன்று தனது நான்கு புதல்வர்களையும் யுத்தத்திற்கு அனுப்பி வைக்கின்றார். நான்கு பேரும் ஷஹீதான செய்தி கேள்விப்படவே ஹன்ஸா ஆனந்த கண்ணீர் வடித்த வண்ணம் என்னுடைய புதல்வர்கள் மூலம் என்னை கண்ணியப்படுத்திய அல்லாஹுவுக்கே எல்லாப்புகழும் என்று கூறுகின்றார்கள்.

உண்மையில் இத்தகைய எண்ணற்ற ஹன்ஸாக்கள் இன்று உம்மு முஹம்மத்களாக பலஸ்தீனிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தனது பிள்ளை மார்க்கத்திற்காக போராடி ஷஹீதாகுவதன் மூலம் இறைவனிடம் தான் கண்ணியம் பெற வேண்டும் என்பதே ஒவ்வொரு பலஸ்தீன் தாய்மாரின் நோக்கமாக இருந்து வருகின்றது. அந்த இலட்சியத்தை தமது குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் கலந்து ஊட்டிவிடுகின்றார்கள். இத்தகைய பெண்களால் தான் இன்றும் பலஸ்தீன் வல்லரசுகளின் இரும்புப் பிடிகளுக்கு மத்தியிலும் துணிச்சலுடன் எழுந்து நிற்கின்றது. குறிப்பாக பலஸ்தீன், சூடான், டியூனீசியா போன்ற நாடுகளில் நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் பங்களிப்பு ஆரோக்கியமாகவே காணப்படுகின்றன.

இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆஇஷா
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களை திருமணம் முடித்ததற்கான காரணம் தனது மரணத்தின் பின் குடும்பவாழ்வு மற்றும் பெண்களுடன் தொடர்பான மார்க்க விவகாரங்கள் மறைந்து விடக்கூடாது. இளம் வயதில் காணப்படும் ஆஇஷா (ரழி) அன்ஹா அவர்கள் அந்த சிந்தனைகள் சமூகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலாகும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றார்கள். உண்மையில் ஆஇஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது மரணத்தின் பின் மிகப்பெரும் ஆசிரியையாக இருந்துள்ளார்கள். ஸஹாபாக்களும், தாபிஈன்களும் தினந்தோறும் ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்து மார்க்கத்தை கற்று கொள்வார்கள்.

அந்த ஆயிஷா (ரழி) அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு வளர்ந்த நவீன காலப் பெண்ணே பின்த் ஷாதிஃ என்றழைக்கபடும் ஆயிஷா அப்துர்ரஹ்மான். மிகச்சிறந்த எழுத்தாளராக, சிந்தனையாளராகவும், மொழியியலாளராகவும் இருந்த ஆயிஷா அப்துர்ரஹ்மான் கலாநிதி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அல்குர்ஆன் விளக்கவுரை துறையில் அல்குர்ஆனை அல்குர்ஆனின் மூலமே விளக்கும் ஒரு புதுமுகப்பார்வையை ஏற்படுத்தியவரே ஆஇஷா அப்துர்ரஹ்மான். ஸஹாபாப் பெண்களின் வரலாறுகள், நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம் தொடர்பாக ஆஇஷா எண்ணற்ற புத்தகங்களை எழுதியுள்ளார். ஆசிரியராக, பல பல்கழைகழகங்களில் பேராசியராக, உலகின் முன்னோடி பத்திரிகைகளின் ஊடகவியலாளராக என்று பல பதவிகளை ஆஇஷா வகித்துள்ளார். அரபு மொழியின் வளர்ச்சிக்காக ஆஇஷா மேற்கொண்ட முயற்சிகள் எண்ணற்றவை. இதற்காக சர்வதேச அளவில் பைஸல் விருது உட்பட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார்.

ஹதீஸ் துறையில் மிக ஆழமான புலமை கொண்டிருந்த ஆஇஷா பெண்களுக்கு அறிவூட்டுவதை தனது முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தார். நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம் தொடர்பாகப் பேசும் இத்தகைய பெண்களின் அறிவுப்பங்களிப்பை எப்படி இஸ்லாமிய உலகம் மறந்து விட முடியும்? இஸ்லாமிய உலகில் அறிவியல் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செலுத்தியதனூடாக நவீன இஸ்லாமிய எழுச்சியின் பங்காளிகளாக மாறிய பல இஸ்லாமிய பெண் பிரபலங்கள் இங்கு நினைவு கூறப்பட வேண்டும். இக்கட்டுரையின் விரிவஞ்சி அவர்களது வரலாறுகளை சுருக்கமாக முன்வைக்கின்றேன்.

மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கழைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் உதவிப் பேராசிரியராக கடமையாற்றும் கலாநிதி ஸீனத் கௌஸர் தென்னாசியாவில் பேசப்படும் மிகப் பெரும் ஆளுமையாகும். இஸ்லாமிய அரசியல் சிந்தனை, நவீனத்துவம், ஐரோப்பிய தத்துவங்கள், முஸ்லிம் பெண்களின் சமூக பாத்திரம், மேற்கத்தேய ஆய்வுமுறைகள் போன்ற விடயங்களில் ஸீனத் மிகவும் விரிவான ஆய்வுகளை நடாத்தி பல நூல்களை படைத்து முஸ்லிம் உலகிற்கு பெருமை சேர்த்து வருகின்றார்.
டியூனீயாவின் நஹ்ழா இயக்கத்தை ஸ்தாபித்த ராஷித் அல்கன்னூஷி என்றழைக்கபடும் மிகப்பெரிய இஸ்லாமிய ஆளுமையின் மகள் கலாநிதி சுமையா அல் கன்னூஷி முஸ்லிம் சமூகம் கண்டு வரும் மற்றொரு மிகப்பெரும் அறிவாளுமை என்பதில் சந்தேகமில்லை.

… என்ற பிரபலமான இஸ்லாமிய வலைப்பின்னலில் தொடர்ச்சியாக பங்காற்றி வரும் சுமையாவின் எழுத்துகளும், பேச்சும் அரசியல் தத்துவம், இடைக்கால வரலாறு, சமகால மத்தியகிழக்கு அரசியல், பெண்ணிய சிந்தனைகளை கட்டுடைத்து தூய இஸ்லாத்தை முன்வைத்தல், ஸியோனிஸத்தை கருத்தியல் ரீதியாக எதிர்த்தல் போன்ற தலைப்புகளிலேயே அமைந்துள்ளது. அரபுலகில் நடந்து வரும் மக்கள் எழுச்சி போராட்டங்கள் தொடர்பாக கலாநிதி சுமையா கார்டியன், அல்ஜஸீரா போன்ற ஊடகங்களில் எழுதிவரும் கருத்துக்கள் மிக முக்கியமானவை.
இன்று நவீன இஸ்லாமிய உலகம் கண்டு வரும் வேறு இருபெரும் ஆளுமைகளே சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் தலைவர் யூசுப் அல் கர்ளாவியின் இரு புதல்விகளான கலாநிதி இல்ஹாம் அல் கர்ளாவி, கலாநிதி ஹிஷாம் அல் கர்ளாவி என்போராகும். நவீன இஸ்லாமிய எழுச்சியில் இவர்களது பங்களிப்பு தனியாக ஆய்வுக்கெடுத்து கொள்ள வேண்டிய விடயங்களாகும்.

அதே போன்று 2008 களில் மரணித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞர் தாஹா ஜாவிர் அலவானியின் மனைவி முனா அபுல் பழ்ல் மற்றுமொரு மிகப்பெரும் பெண் ஆளுமை.

இந்த வகையில் நவீன இஸ்லாமிய எழுச்சிக்கு இன்று ஐரோப்பிய நாடுகளிலும் சரி, அரபுலகிலும் சரி முஸ்லிம் பெண்கள் செய்து வரும் பங்களிப்புக்களை அவதானிக்கும் போது அன்றைய ஸஹாபாப் பெண்களின் பங்களிப்புக்களே கண்முன் தோன்றுகின்றன.

எமது இலங்கைத் திருநாட்டிலும் மார்க்க விடயங்களில் பெண்களின் பங்களிப்பு முன்பிருந்ததை விட ஆரோக்கியமானதாகவே காணப்படுகின்றது. எனினும் அவர்களுல் பெரும்பாலானோர் ஓரிரு சொற்பொழ்வுகளுக்குச் சென்று அவற்றைக் கேட்பதுடன் அவர்களது பங்களிப்பை சுருக்கிக் கொள்கின்றனர். என்னும் சமூகத்தில் வாழும் மற்றொரு பெண் சாரார் சமூகத்தில் கர்தி தொடர்பாக காத்திரமான பங்களிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்து வருடங்களுக்கு முன்னர் ஆண்கள் மார்க்கத்தைக் கற்பதற்கு நாடு பூராகவும் எண்ணற்ற கலாநிலையங்கள் காணப்பட்டன. ஆனால் அன்று பெண்கள் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ள எந்ந ஏற்பாடுகளும் காணப்படவில்லை. ஆனால் இன்று அந்த நிலை பரவலாக மாறி வருவதை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. தற்போது கல்வி தொடர்பான பெண் சமூகத்தில் காணப்படும் விழிப்புணர்வு ஆண் சமூகத்தில் காணப்படும் விழிப்பணர்வை விட அதிகமாகவே உள்ளன.

ஒரு சில இஸ்லாமிய இயக்கங்களின் பெண்கள் அமைப்புக்கள் மிக ஆர்வத்துடன் பெண்கள் சமூகத்திற்கு இஸ்லாத்தின் தூய செய்தியை கொண்டு செல்கின்றனர். சிறார்களுக்கு ஆரம்ப மார்க்க அறிவையும் அல் குர்அனிய அறிவையும் வழங்கும் பல மத்ரஸாக்களின் ஆசிரியர்களாக பெண்களே உள்ளனர். மேலும் பாலர் பாடசாலைகள் முழுமையாக பெண்கள் மூலமே நிர்வகிக்கப்படுகின்றன. பெண்கள் பாடசாலைகள் அதிகரிக்க வேண்டும், ஆண் பெண் கலப்புக் கல்வி தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து அனைத்து தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றன. இவை யாவும் இஸ்லாம் எழுச்சி அடைந்து வருகின்றது என்பதற்குச் சிறந்த உதாரணங்களே.


இந்த அடிப்படைகளிலிருந்தே நாம் எமது சமூகத்தில் பெண்களின் தொடர்பான ஆரோக்கியமான வாதப் பிரதிவாதங்களை முன்னெடுக்க வேண்டும். வீட்டில் இல்லத்தரசிகளாக வாழும் பெண்களுக்கு மார்க்கத்தை கற்பித்து அவர்களை சிறந்த குடும்பப்பெண்களாக, தமது பிள்ளைகளுக்கு இலட்சிய உணர்வை ஊட்டும் தாய்மார்களாக அவர்களை மாற்றும் பெரும் பொறுப்பை பெண்கள் சமூகமே பொறுப்பேற்க வேண்டும். பாலர் பாடசாலைகள், அல் குர்ஆன் மத்ரஸாக்கள், கனிஷ்ட பாடசாலைகள் என்பனவே ஒரு சமூகத்தின் அடிப்படை அத்திவாரங்கள். அந்த அத்திவாரங்களை நிர்மாணிக்கும் பொறுப்பைச் சுமந்தவர்கள் பெண்களே. இந்த அலகுகளை உருவாக்கி அவற்றை மேம்படுத்தும் பொறுப்புக்களையும் பெண்களே செய்ய வேண்டும். இது தவிர கல்வி , எழுத்து , வைத்தியம், மகளிர் விவகாரம், பெண் தலைமைகளை உருவாக்கள், போன்ற துறைகளிலும் பெண்கள் சமூகம் அதிக அக்களை செலுத்த வேண்டும். இலங்கை போன்ற ஒரு சிறுபான்மை நாட்டில் பெண்களின் இத்தகைய முயற்சிகள் சமூகத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது சந்தேகமற்ற விடயமாகும்.

நன்றி: http://azeezahmed.wordpress.com


நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம்
மெளலவி JSS அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி

புகழ் அனைத்தும் அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்விற்கே உரியது. நிச்சயமாக இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களின் இம்மை, மறுமை, வாழ்விற்குத் தேவையான எல்லா வற்றையும் சரியான முறையிலும் இலேசான முறையிலும் கற்றுத் தரக்கூடிய மார்க்கம்.

அம்மார்க்கம் பெண்களின் ஆடை விஷயத்தில் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்ற ஒழுக்கமான நன்னடத்தையையும், கண்ணியமான தூய வாழ்க்கைக்கும் வழி காண்பிக்கின்றது. இவ்விஷயத்தில் ஆழமாக சிந்தித்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்வும், முழுமையான ஒழுக்கங்களையும் உள்ளடக்கிய மார்க்கம் இஸ்லாம் என்று தெளிவாக விளங்க முடியும்.

இறைவன் அருள்மறையில் கூறுகிறான். நபியே ! நீர் உன் மனைவி மார்களுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களின் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர் களென) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்.

அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க அன்புடையோன் (அல் அஹ்ஜாப் 59) மேலும் கூறுகிறான். நபியே ! முஃமினான பெண்களிடம் நீர் கூறுவீராக ! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத்தலங்களைப் பேணிப் பாதுகாத்தும் கொள்ள வேண்டும் மேலும் தங்கள் அலங்காரத்தை அவற்றில் வெளியே தெரியக்கூடியதைத் தவிர (வேரெதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் தங்களின் மார்பகங்களை மறைத்துக் கொள்ளட்டும்.

மேலும் அவர்கள் தங்களின் கணவரிடத்திலே தவிர தங்களின் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். (அந்நூர் 31) மேலும் கூறுகிறான் (நபியின் மனைவியர்களே) நீங்கள் உங்களின் வீடுகளிலேயே தங்கி விடுங்கள். முன்னர் அறியாமைக் காலத்துப் பெண்கள் திரிந்ததைப்போன்று திரிந்து கொண்டிருக்காதீர்கள். (அல் அஹ்ஜாப் 33) மேலும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்களின் மனைவியரிடம் நீங்கள் ஏதாவது ஒரு பொருளைக் கேட்பதாகயிருந்தால் திரை மறைவிலிருந்து கேட்டுக் கொள்ளுங்கள். (அல் அஹ்ஜாப் 53) என்று விரிவாக நம்மிடம் பேசுகிறான்.

நிச்சயமாக இஸ்லாமியப் பெண்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமான கடமைகளில் உள்ள ஒன்றுதான் பர்தா அணிந்து கொள்வது. இஸ்லாம் மட்டுமே ஒரு குடும்பம் வீழ்ந்து சின்னாபின்னப் பட்டு சிதைந்து போகாமல் அதைப் பாதுகாப்பதின் மீது அக்கறை கொண்டுள்ளது.

இயற்கைச் சூழ்நிலையை கேடு படுத்திடாமல் குடும்பங்கள் ஆரோக்கியமாகவும், சமுதாயம் தூய்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்காக இஸ்லாம் ஒழுக்கங்கள், நற்குணங்கள் என்ற உறுதிவாய்ந்த சுவரை எழுப்பியுள்ளது. காரணம் இஸ்லாம், குழப்பத்தின் பால் இழுத்துச் செல்லக்கூடியவற்றை தடுப்பதற்காக பர்தா என்ற திரையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களும், பெண்களும் சந்திக்கும்போது தங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளும்படியும் ஏவுகிறது. நிச்சயமாக அல்லாஹ் பெண்களை கண்ணியப்படுத்து வதற்காகவும்,

இழிவிலிருந்து அவளின் தன்மானத்தை தற்காத்துக் கொள்ளவும், மேலும் குழப்பவாதிகள் தீய எண்ணம் உடையவர்களின் கெடுதியைவிட்டும் பெண்களை தூரப்படுத்துவதற்காகவும், கண்ணியம், விலைமதிப்பு, மானம் மரியாதையை அறியாதவர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அதே சமயம் விஷப் பார்வைகளுக்குக் காரணமான குழப்பத்தின் வாசலை அடைத்திடுவதற்குமே அல்லாஹ் பெண்களுக்கு பர்தாவை மார்க்க மாக்கியுள்ளான். என்பதை தெளிவாக விளங்க முடிகிறது. இதை விட்டு விட்டு இஸ்லாம் பெண்களை ஆண்களை விட்டும் நீங்கி அந்நிய ஆடவருடன் கலந்துரையாடுவதை தடை செய்திருக்கின்றது என்று தவறாக விளங்கி தேவையில்லாத அறிவற்ற பிரச்சாரத்தை சில விஷமிகள் பரப்பி வந்தனர் வருகின்றனர்.

இஸ்லாம் பெண்களை ஆண்களை விட்டும் தூரப்படுத்தி அவர்களின் சுதந்திரத்தை பரித்து ஆணாதிக்கத்திற்கு கீழ்படிந்துதான் வாழவேண்டும் என்றெல்லாம் சிலர் பர்தா முறையை தவறாக விளங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இன்று ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் யார் யாரெல்லாம் அப்பிரச்சாரங்களை செய்து வந்தார்களோ அவர்களே பர்தா முறையை வரவேற்று பெண்களுக்கு பாதுகாப்பு பர்தா என்ற திரைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும் அனைத்துப் பெண்களின் நற்குணங்கள், குடும்ப அமைப்பு, சிறப்புக்கள் மற்றும் கண்ணியமான நடைமுறைகளை பாதுகாப்பதற்கும், குழப்பங்களையும் தவறான எண்ணங்களையும் தடுத்து நிறுத்துவதற்கும் இஸ்லாமிய சட்டங்கள் மட்டுமே சரியான வழிமுறைகளை வகுத்துத்தந்துள்ளது. நம்மைச் சீர்திருத்திக் கொள்வதுடன் சமூகத்தையும் சீர்திருத்தச் சொல்லும் மார்க்கம்தான் இஸ்லாம் என்பதை அவர்கள் மட்டுமல்ல அனைத்து சமூகமும் ஒப்புக்கொண்டுள்ளது. காரணம் குழப்பம் சூழ்ந்து  பரவிக்கிடக்கும் இந்தக் காலத்தை விட குழப்பத்தின் பயம் வேறு எந்தக்காலத்தில் அதிகமாக இருக்கமுடியும் நல்லவர்கள் இறையச்சமுடையவர்களை விட பாவிகள் நிறைந்து போய் விட்டனர்.


கடைவீதிகளிலும் பல்வேறு இடங்களில் நின்றுகொண்டு தன் தவறான விஷப்பார்வையால் தன் கையில் வைத்திருக்கும் மொபைலின் மூலம் (செல்போன்) அன்றாட சமையல் தேவைக்காக காய்கறி மற்றும் மீன் இறைச்சி வாங்குவதற்காக பஜாருக்கு வரும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து அதை மற்றவர்களுக்கும் S.M.S.மூலமாகவும் E.மெயில், இண்டர்நெட் என அனுப்பி தான் ஒரு பகுத்தறிவு படைத்த மனிதன் என்பதையே மறந்து ஷைத்தானுக்கு வழிபட்டு மிருகத்தனமான செயல்களிலே ஈடுபடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்விஷயத்தில் அல்லாஹ் கடுமையான எச்சரிக்கையை தருகின்றான். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின் பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் (ஷைத்தான்) உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான்.

நிச்சயமாக அவன் (ஷைத்தான்) தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும், அல்லாஹ்வைப்பற்றி நீங்கல் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். (அல்பகரா 168 மற்றும் 169) என்று இறைவன் கூறுகிறான்.
இவ்வாறான தவறான எண்ணம் கொண்ட விஷமிகளிடமிருந்து சமுதாயப் பெண்கள் பாதுகாப்புப் பெற்று கண்ணியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகத்தான் பர்தாவை இஸ்லாம் மார்க்க மாக்கியுள்ளது.
எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே ஒழுக்கமும் நன்னடத்தையும் நமது உடலில் உள்ள உயிரையும் நாம் சுவாசிக்கும் சுவாசத்தையும் போன்றது. குர்ஆனிலும் நபி மொழியிலும் அல்லாஹ்வின் மார்க்கம் ஒரு வலுவான கட்டடத்திற்கு உதாரணமாகச் சொல்லப்பட்டுள்ளது.

அந்த மாளிகையின் அடித்தளமாயிருப்பது ஈமான் என்றால் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள தூண்களும், சுவர்களும், மேற் கூரையுமே இஸ்லாமாகும். இஸ்லாம் என்ற மாளிகையை கட்டி எழுப்புவதற்கும் அதை உறுதியாய் எழிலுடன் நிலை நிறுத்துவதற்கும் தேவையான இரண்டு விஷயங்கள்தான் தக்வா எனும் இறையச்சம் இஹ்ஸான் எனும் ஒழுக்கமும் நன்னடத்தையுமாகும்.

இறைவன்  அந் நஹ்ல் 128 வது வசனத்தில் எவர்கள் இறையச்சம் கொள்கிறார்களோ மேலும் நன்னடத்தையை மேற்கொள்கிறார்களோ அத்தகையவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்று கூறுகிறான். எனவே அல்லாஹ் எனக்கும் உலக மக்கள் அனைவர்களுக்கும் ஒழுக்கமுள்ள நல்ல சிந்தனைகளை வழங்கி இறைவனுக்கும் இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் வழிபட்டு நடக்கும் பாக்கியத்தை வழங்கு வானாக ஆமீன் வஸ்ஸலாம்

நன்றி:- முதுகுளத்தூர்.காம்

திங்கள், 17 செப்டம்பர், 2012



மாமனிதர்
எழுதியவர்/பதிந்தவர்/உரை அபூ உமர்


வரலாற்றை புரட்டிப்பார்த்தால் எத்தனையோ தலைவர்களும் அறிஞர்களும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக ஒரு இறைத்தூதராகத்தான் இருக்கவேண்டும் என்று அவரின் வாழ்க்கையை படித்து தன் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.

இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்?
- வாஷிங்டன் இர்விங் –

ஆனால் துவேசம் கக்கும் ஒருசிலர் முஹம்மது நபியின் வாழ்க்கையை படித்திராதவர்களிடம் அவதூறு பரப்புவதில் தீவிரமாக இருந்தாலும் இத்தகைய எள்ளல்களின் விளைவுகள் அவர்களின் எண்ணங்களுக்கு எதிராகத்தான் இதுவரை அமைந்துவந்திருக்கிறது.

இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.
- ஜி.ஜி. கெல்லட் -

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
- எஸ். எச். லீடர் –

இத்தகைய போற்றுதலுக்கு காரணம் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவராக, ஏழைகளின் துயர் நீக்க பாடுபட்டவராக, நம்பிக்கைக்கு உரியவராக, பொய் சொல்லாதவராக, ஆன்மீக தலைவராக, சிறந்த ஆட்சியாளராக, மெளட்டீகத்தை உடைத்தெரிந்தவராக, எளிமையை கடைப்பிடித்தவராக இன்னும் பல நற்பண்களை தனது வாழ்க்கையில் கடைப்பிடிப்பவராக இருந்ததால்தான்.

முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.
- பெர்னாட்ஷா –

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தபின்னர், மற்ற அரசர்கள் அச்சம் கொள்ளும் அளவுக்கு வல்லரசாகவே திகழ்ந்தார். ஆனால் வல்லரசு நாட்டின் ஆட்சித் தலைவர் விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்க்கை பின்வருமாறுதான் இருந்தது.

எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்பு பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். என் சிறிய தாயாரே அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் பேரீச்சம் பழமும் தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தது சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள் அதை அருந்துவோம் என விடையளித்தார்கள்.
நூல்: புகாரி, முஸ்லிம்

நபிகள் நாயம்(ஸல்) அவர்கள் தீட்டப்பட்ட (தோல் நீக்கப்பட்ட) கோதுமையில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா? என்று நபிகள் நாயகத்தின் பணியாளர்களில் ஒருவரான ஸஹல் பின் ஸஅது அவர்களிடம் கேட்டேன் அதற்கு அவர்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இறைவன் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை சலிக்கப்பட்ட மாவில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதேயில்லை என்றார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்தனவா? என்று கேட்டேன். அதற்கவர்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் சல்லடையைப் பார்த்ததில்லை என்றார்கள். தீட்டப்படாத (தோல் நீக்கப்படாத) கோதுமை மாவைச் சலிக்காமல் எப்படி சாப்பிடுவீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் நாங்கள் தீட்டப்படாத கோதுமையைத் திருவையில் அரைப்போம் பின்னர் வாயால் அதை ஊதுவோம் உமிகள் பறந்துவிடும் எஞ்சியதைத் தண்ணீரில் குழைத்துச் சாப்பிடுவோம் என்று விடையளித்தார்கள்.
நூல்: புகாரி

ஹஜ் பெருநாள் பண்டிகையின் போது கறிக்குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டின் கால் பகுதியை பதினைந்து நாட்களுக்குப் பிறகு எடுத்து வைப்போம் அதை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சாப்பிடுவார்கள் என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா(ரலி) கூறினார்கள் இதற்கு என்ன அவசியம் நேர்ந்தது? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் சிரித்து விட்டு குழம்புடன் கூடிய ரொட்டியை முஹம்மது நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினாராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையே என விளக்கமளித்தார்கள்.
நூல்: புகாரி

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பசியோடு இருந்ததை அறிந்து எனது வீட்டிலிருந்து கோதுமை ரொட்டியையும் வாசனை கெட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். அவர்களின் வீட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு மரக்கால் கோதுமையோ அல்லது வேறு ஏதேனும் தானியமோ இருந்ததில்லை என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ்(ரலி) கூறினார்கள்.
நூல்: புகாரி

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன் உடனே என் தாயார் உம்மு சுலைம் அவர்களிடம் வந்து இதைக் கூறினேன். அதற்கவர்கள் என்னிடம் ஒரே ஒரு ரொட்டித்துண்டும் சில பேரீச்சம் பழங்களும் தான் உள்ளன. அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய்விடும் என்றார்கள், என நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி

ரொட்டியுடன் தொட்டுக் கொள்வதற்கு குழம்பு இல்லாமல் வினிகரை வைப்போம் வினிகர் சிறந்த குழம்பாகவுள்ளதே எனக் கூறி அதை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சாப்பிடுவார்கள் என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல். புகாரி

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012



மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்!

ஒவ்வொரு முஃமினுக்கும் புனிதமான குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையும் படித்து மார்க்க அறிவை பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: -

“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப் பெற்றது …” (அல்-குர்ஆன் 2:185)

அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)

ஹா, மீம். விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (அல்-குர்ஆன் 43:1-3)

அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். (அல்-குர்ஆன் 12:1-2)

இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அல்-குர்ஆன் 16:2)

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை. (அல்-குர்ஆன் 41:2-4)

தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். (அல்-குர்ஆன் 18:1-3)

(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது; (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 43:43-44)

முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்: -

“ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” (திர்மிதி)

“இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்காக, இஸ்லாமிய அறிவை பெற்றுக் கொண்டிருக்கும்போது யார் உயிர் நீத்தார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் நபிமார்களுக்கு அடுத்த நிலையில் இருப்பார்கள்” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (முஸ்லிம்)

முஹம்மது நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்: -

யார் ஒருவர் தன்னுடைய சகோதரனை இந்த உலக ஆசைகளின் துன்பங்களில் இருந்து நீக்குகிறாரோ, அவரை அல்லாஹ் மறுமை நாளின் துன்பங்களில் இருந்து நீக்குவான். யார் ஒருவர் இந்த உலகத்தில் ஒரு முஸ்லிமின் குற்றத்தை மறைக்கிறாறோ, அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய குற்றத்தை மறைப்பான்; தன்னுடைய சகோதரனுக்கு பின்னால் இருந்து உதவி செய்யக் கூடியவனுக்கு,  அல்லாஹ் அவரின் பின்னால் இருந்து உதவி செய்வான். அறிவைப் பெறுவதற்காக யார் நடந்து செல்கிறார்களோ அவருக்கு அல்லாஹ் அவருடைய பாதையை இலகுவாக்குகிறான்; சொர்க்கத்திற்கான வழியையும் காட்டுகிறான்; யாரெல்லாம் அல்லாஹ்வின் இல்லத்தில் ஒன்று கூடி குர்ஆனை ஓதி, பிறருக்கும் கற்றுக்கொடுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்ளும் மலக்குகளும் சுழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ் தனக்கு அருகில் உள்ளவர்களிடம் அவர்களைப்பற்றி சிலாகித்துக் கூறுவான். (திர்மிதி)

முஹம்மது நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்: -

இரவில் ஒரு மணி நேரம் மார்க்க அறிவைப் பெறுவதற்காக வெளியே செல்வது முழு இரவிலும் நின்று வணங்கி செலவழிப்பதை விட சிறந்தது. (திர்மிதி)

இறை இல்லத்தில் இரண்டு கூட்டங்களின் பக்கம் (நபி {ஸல்}) சென்றார்கள்; இரண்டு வகுப்பினரும் சிறந்தவர்கள் என்றாலும், ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினரைவிட சிறந்தவர். ஒரு வகுப்பினர் அல்லாஹ்விடம் துவா கேட்டுக் கொண்டிருந்தனர். அல்லாஹ் நாடினால் அவர்கள் கேட்டதை அவர்களுக்கு வழங்குவான் அல்லது தாமதப்படுத்துவான்; மார்க்கத்தைப் புரிந்து கொள்வதற்காக மார்க்க அறிவைப் பெற முயற்சித்து அதை அறியாதவர்களுக்கும் கற்பித்துக் கொண்டும் அந்த இரண்டாம் வகுப்பினரே சிறந்தவர். நிச்சயமாக நான் ஒரு கற்றுக் கொடுப்பவனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்” என்று சொல்லி அவர்களிடையே அமர்ந்து விட்டார்கள்.

இஸ்லாமிய அடிப்படை அறிவைப் பெறுவது ஒவ்வொரு பருவ வயதை அடைந்த, புத்தி சுவாதீனமுள்ள முஸ்லீம்கள் அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று எல்லா இஸ்லாமிய அறிஞர்களும் சட்ட வல்லுனர்களும் ஒரு மனதாக குரல் கொடுக்கின்றனர்.

ஒரு சில மக்கள் தான், மார்க்க அறிவைப் பெருவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக, வெட்கப்பட்டு, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை சொல்லி தங்களுடைய செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.

மார்க்க அறிவைப் பெறுவதற்கு ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் முயற்சிக்க வேண்டும் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

நன்றி : www.islamhelpline.com


இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம் - 5
P. ஜைனுல் ஆப்தீன் அவர்களின் நூலிலிருந்து 


சரியான மொழி பெயர்ப்பு

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். 'நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே மறுத்து விடாதே!' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். 'இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா? (அல்குர்ஆன் 2:102)

முதலில் நாம் எடுத்துக் காட்டிய மொழி பெயர்ப்பு எந்த வகையில் தவறானது என்பதை முதலில் காண்போம்.

ஹாரூத், மாரூத் எனும் பெயர் கொண்ட இரண்டு மலக்குகள் மனிதர்களிடம் வந்து ஸிஹ்ர் எனும் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததாக முதலில் நாம் எடுத்துக் காட்டிய மொழி பெயர்ப்பு பொருள் தருகின்றது.

அதாவது இந்த சூனியத்தை இறைவன் புறத்திலிருந்து மலக்குகள் கற்றுக் கொண்டு அதை மக்களுக்கு கற்றுக் கொடுத்ததாக மேற்கண்ட பொருள் விளக்குகின்றது.

மலக்குகள் எப்படி இந்த சூனியத்தைக் கற்றுக் கொடுக்க முடியும்? என்ற நியாயமான கேள்விக்கு விளக்கமளிப்பதற்காக ஒரு கதையையும் சில விரிவுரையாளர்கள் எழுதி வைத்துள்ளனர்.

மனித சமுதாயத்தை இறைவன் அடிக்கடி புகழ்ந்து பேசுவதைக் கேட்ட வானவர்கள் பொறாமைப்பட்டு இறைவனிடம் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தார்களாம். மனிதர்கள் செய்யும் பாவங்களை எல்லாம் பட்டியல் போட்டுக் காட்டினார்களாம். அதற்கு இறைவன் 'மனிதர்களுக்கு ஆசை என்ற உணர்வை நான் வழங்கியுள்ளேன். இதனால் அவர்கள் பல சமயங்களில் தவறுகளைச் செய்து விடுகிறார்கள். உங்களில் இரண்டு பேரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களுக்கும் நான் ஆசை எனும் உணர்வை வழங்குகிறேன். அவர்கள் மண்ணுலகம் செல்லட்டும்!' என்றானாம். மலக்குகள் ஹாரூத், மாரூத் என்ற இருவரைத் தேர்வு செய்தார்களாம். அவ்விருவ ரும் பூமிக்கு வந்து மனிதர்களை விட அதிக அளவுக்குப் பாவங்கள் செய்தார்களாம். அவர்கள் தான் சூனியத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். இப்படி போகிறது கதை!

இந்தக் கதையும், இந்த கதையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட மேற்கண்ட அர்த்தமும் சரியானது தானா? என்று நாம் ஆராயும் போது திருக்குர்ஆனின் பல வசனங்களுடன் மேற்கண்ட அர்த்தம் மோதுவதைக் காணலாம்.

மனித சமுதாயத்தை இறைவன் படைக்கவிருப்பதாக அறிவித்தவுடனேயே மலக்குகள் தங்கள் ஆட்சேபணையை வெளியிட்டார்கள். அப்போது 'மனிதர்கள் குழப்பம் ஏற்படுத்துவார்கள், இரத்தம் சிந்துவார்கள்' என்றெல்லாம் குற்றங்களை அடுக்கினார்கள். (பார்க்க அல்குர்ஆன் 2:30)

ஆதம் (அலை) அவர்களின் சிறப்பையும், தகுதியையும் இறைவன் நிரூபித்துக் காட்டிய பிறகு 'நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்' என்று கூறி தங்கள் தவறுக்கு மலக்குகள் வருந்தி விட்டனர். (பார்க்க அல்குர்ஆன் 2:34)

அது மட்டுமின்றி மனிதனுக்காக அவர்கள் ஸஜ்தாவும் செய்து தங்கள் தவறுக்குப் பரிகாரம் தேடிக் கொண்டனர். (பார்க்க அல்குர்ஆன் 2:34)

மனிதனின் தகுதியைப் பற்றி முன்பே விமர்சனம் செய்து அந்த விமர்சனம் தவறு என்று இறைவன் விளக்கிய பிறகு தவறு என்று ஒப்புக் கொண்டவர்கள் வானவர்கள்.

இத்தகைய இயல்பு படைத்த வானவர்கள், இன்னொரு முறை எப்படி இறைவனிடம் ஆட்சேபணை செய்திருப்பார்கள்? முன்பு ஆட்சேபணை செய்த போது அவர்களுடன் ஷைத்தான் இருந்தான். மேற்கண்டவாறு ஆட்சேபணை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும்.

ஷைத்தான் அவர்கனை விட்டும் வெளியேற்றப்பட்ட பிறகு முதல் ஆட்சேபணைக்காக ஏற்கனவே சூடுபட்டிருந்த மலக்குகள் எப்படி மறுபடியும் ஆட்சேபணை செய்திருப்பார்கள்?

அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன் 66:6)

அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள். (அல்குர்ஆன் 21 : 26, 27)

மேற்கண்ட வசனங்களில் மலக்குகளின் பண்புகளும் இயல்புகளும் தெளிவாக விளக்கப்படுகின்றன. இத்தகைய பண்புகளைக் கொண்ட வானவர்கள் இறைவன் செயல்பாட்டில் குறை கண்டு ஆட்சேபணை செய்திருப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும்?

மனிதனை இறைவன் படைக்க எண்ணிய போது, மலக்குகள் எப்படி ஆட்சேபணை செய்திருக்க முடியும்? என்று இந்த இடத்தில் கேள்வி எழலாம். அந்த சமயத்தில் வானவர்கள் செய்த ஆட்சேபணைக்கும், இந்தக் கதையில் கூறப்படும் ஆட்சேபணைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

மனிதனைப் படைப்பதற்கு முன் இறைவன் மலக்குகளிடம் கருத்துக் கேட்டான். இறைவன் அவர்களின் கருத்தைக் கேட்ட காரணத்தினாலேயே அவர்கள் தங்கள் கருத்தைக் கூறினார்கள். இதை ஆட்சேபணை என்றோ, அதிகப்பிரசங்கித்தனம் என்றோ கூற முடியாது.

இந்தக் கதையில், மலக்குகளிடம் இறைவன் கருத்து எதுவும் கேட்காத நிலையில், மனிதனைப் படைத்து முடித்து விட்ட நிலையில் மலக்குகள் எதிர்க் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

இது போன்ற அதிகப் பிரசங்கித்தனம் மலக்குகளின் இயல்புக்கு மாற்றமானதாகும்.

இறைவனையும், மலக்குகளையும் குறைத்து மதிப்பிடக்கூடிய மேற்கண்ட அர்த்தத்தை ஏற்க முடியாது. ஸிஹ்ர் எனும் சூனியத்தைக் கற்பிப்பது, குப்ர் எனும் இறை மறுப்பாகும் என்று மேற்கண்ட அர்த்தமே ஒப்புக் கொள்கிறது. இத்தகைய இறை மறுப்பான காரியங்களை மலக்குகள் ஒரு போதும் செய்திருக்க முடியாது.

இறைவனின் அந்தஸ்தையும் மலக்குகளின் அந்தஸ்தையும் குறைக்காத வகையிலேயே மேற்கண்ட வசனத்திற்கு பொருள் கொள்ள வேண்டும். அப்படிப் பொருள் கொள்ள ஏற்ற வகையிலும் மேற்கண்ட வசனம் அமைந்துள்ளது. அதை விபரமாகக் காண்போம்.

நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த யூத குருமார்கள் சூனியத்தின் மூலமும் பிற தவறான வழிகளிலும் பொருளீட்டிக் கொண்டிருந்தனர். மேலும், அவர்கள் இந்த சூனியத்தை நியாயப்படுத்த இரண்டு பொய்யான வாதங்களை முன் வைத்துக் கொண்டிருந்தனர்.

'இந்தக் கலை தங்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டதன்று; மாறாக, சுலைமான் நபி அவர்கள் வழியாகவே எங்களை வந்தடைந்துள்ளது. எனவே இந்தக் கலையில் ஈடுபடுவதும் இதன் மூலம் பொருளீட்டுவதும் தவறானதல்ல' என்பது அவர்களின் முதல் வாதம்.

'இந்தக் கலையை ஜிப்ரீல் மிக்காயீல் ஆகிய வானவர்கள் தாம் சுலைமான் நபியிடம் கொண்டு வந்தனர் என்பதால் இது மார்க்க அங்கீகாரம் பெற்ற செயல் தான்' என்பது அவர்களின் மற்றொரு வாதம்.

பொய்யான இந்த இரண்டு வாதங்களும் இந்த வசனத்தில் மறுக்கப்படுகின்றன. எப்படி என்பதைப் பார்ப்போம்.

'வத்தபவூ மாதத்லுஷ்ஷயாதீனு அலாமுல்கி சலைமான்' சுலைமானுடைய ஆட்சியின் போது ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்த (சூனிய)தையே இவர்கள் பின்பற்றுகிறார்கள்.

வமா கபர சுலைமானு' சுலைமான் நிராகரிப்பவராக இருந்ததில்லை.

'வலாகின்னஷ்ஷயாதீன கபரூ யுஅல்லிமூனன் னாஸஸ்ஸிஹ்ர' இந்த சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்களாக இருந்தனர்.

இந்த மூன்று வாக்கியங்களிலும் ஆழமாக சிந்தனையைச் செலுத்தும் போது ஸிஹ்ர் என்ற கலையைப் போதிப்பது இறை மறுப்பாகும். இது போன்ற இறை மறுப்பை ஸுலைமான் நபி செய்ய மாட்டார். ஷைத்தான்கள் தாம் இதைச் செய்தனர்' என்ற உண்மை தெரிகின்றது. சூனியத்துக்கும் சுலைமான் நபிக்கும் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறது.

இந்த மூன்று வாக்கியங்களுக்கும் பொருள் கொள்வதில் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை. கருத்து வேறுபாட்டுக்கு இடமுமில்லை.

'வமா உன்ஸில அலல்மலகைனி பிபாபில' இந்த வாக்கியத்திற்கு பொருள் கொள்வதில் தான் வேறுபாடு தோன்றுகிறது.

'வமா உன்ஸில' என்பதில் மா' என்ற சொல் இடம் பெறுகின்றது. அரபு இலக்கணத்தில் இது இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

'இல்லை' என்பது இதன் முதலாவது அர்த்தம்.

'மா' என்ற சொல்லுடன் வரும் விளைச்சொல் தொழிற்பெயராக மாறுதலடையும் என்பது மற்றொரு அர்த்தம். இதை விபரமாகப் புரிந்து கொள்ள சில உதாரணங்கள் காண்போம்.

கரஅ என்றால் ஓதினான் என்பது பொருள். இதன் துவக்கத்தில் மா' என்ற சொல் இணைந்து மாகரஅ' என்று ஆகும் போது ஓதவில்லை' என்றும் அர்த்தம் கொள்ளலாம். ஓதுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஓதினான் என்பதுடன் மா' சேர்ந்ததால் வினைச்சொல் என்ற நிலைமாறி ஓதுதல் எனும தொழிற்பெயராக ஆகின்றது. மா' வுக்கு இல்லை' என்று பொருள் கொண்டால் ஓதினான்' என்பது ஓதவில்லை' என்று ஆகும்.

இரண்டு விதமாகவும் மா' எனும் பதம் பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கு மேற்கண்ட வசனத்தின் முற்பகுதியையே மற்றொரு உதாரணமாகக் கொள்ளலாம்.

மா தத்லுஷ்ஷயாதீனு

மா கபர சுலைமானு

ஆகிய இரு இடங்களில் மா இடம் பெறுகின்றது.

தத்லு என்றால் ஓதுவார்கள் என்பது பொருள்.

மாதத்லூ என்றால் ஓதியவை என்று ஆகின்றது.

இந்த இடத்தில் மா' என்பது பின்வரும் வினைச் சொல்லை தொழிற் பெயராக மாற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

கபர' என்றால் நிராகரித்தார் என்பது பொருள்.

மா கபர' என்று கூறும் போது நிராகரிக்கவில்லை என்று பொருள் கொள்ளப்படுகின்றது.

இங்கே உடன்பாட்டு வினை; எதிர்மறை வினையாக மாறுகின்றது. மேற்கண்ட ஒரு வசனத்திலேயே மா' என்பது இரண்டு அர்த்தங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் 'வமா உன்ஸில அலல் மலகைனி' என்பதற்கு

'அந்த இரண்டு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்பட்டிருக்கவில்லை' என்றும் பொருள் கொள்ளலாம்.

'இரண்டு வானவர்களுக்கு அருளப்பட்டதையும் (அவர்கள் பின்பற்றினார்கள்) என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்த இரண்டாவது அர்த்தத்தையே பெரும்பாலான விரிவுரை யாளர்கள் செய்திருந்தாலும் இதற்குச் சான்றாக பொய்யான கதை ஒன்றைப் புனைந்திருந்தாலும் நாம் முன்னர் சொன்ன காரணங்களால் இந்த அர்த்தம் பொருத்தமற்றதாகின்றது.

மற்றொரு காரணத்தினாலும் இந்த அர்த்தம் பொருந்தாமல் போகின்றது. ஷைத்தான்கள் இந்த சூன்யத்தைக் கற்றுக் கொடுத்ததாக இவ்வசனத்தின் முற்பகுதி காணப்படுகின்றது.

ஷைத்தான்கள் இதைக் கற்றுக் கொடுத்திருக்கும் போது, ஷைத்தான்களிடமிருந்து அவர்கள் அதைக் கற்றிருக்கும் போது அவர்களுக்கு முன்பே தெரிந்த ஒரு கலையை மலக்குகள் வந்த கற்றுக் கொடுத்தார்கள் என்பது அறிவுக்குப் பொருந்தவில்லை. இந்தக் காரணத்தினாலும் இந்த இரண்டாவது அர்த்தம் பொருந்தி வரவில்லை.

'அந்த இரண்டு மலக்குகள் மீது இந்தக் கலை அருளப் படவில்லை' என்று பொருள் கொள்ளும் போது யூதர்கள் இதற்கு மார்க்க அங்கீகாரம் அளிக்க முயன்றது முறியடிக்கப் படுகின்றது. மலக்குகளின் கண்ணியம் காக்கப்படுகின்றது. முன்னுள்ள வாசகத்துடனும் இது ஒத்துப் போகின்றது.

வமாகபர சுலைமானு - சுலைமான் நிராகரிப்பவராக இருக்கவில்லை

வமா அன்ஸில அலல் மல கைனி - அந்த இரண்டு மலக்குகள் மீதும் அது அருளப்படவில்லை என்று அடுத்தடுத்து வருவது பொருத்தமாகவும் இருக்கிறது.

இரண்டு வானவர்கள் என்று இங்கே இறைவன் குறிப்பிடுவது யாரை? இது அடுத்தபடியாக நாம் அலச வேண்டிய விசயமாகும்.

இங்கே அலா மலகைனி' என்று இறைவன் குறிப்பிடாமல் அலல் மலகைனி' என்று குறிப்பிடுகின்றான்.

மலகைனி என்பதற்கும் அல் மலகைனி என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

மலகைனி என்றால் இரு வானவர்கள் என்று பொருள்.

அல்மலகைனி என்றால் அந்த இரு வானவர்கள் என்று பொருள்.

இறைவன் அல்மலகைனி என்று குறிப்பிடுவதால் முன்பு கூறப்பட்ட இரண்டு வானவர்களையே இங்கே குறிப்பிடுகிறான்.

இந்த வசனத்திற்கு முன்னால் இரண்டு வானவர்கள் பற்றி ஏதும் குறிப்பிடப்பட்டிருக்கின்றதா? என்று ஆராயும் அவசியம் நமக்கு ஏற்படுகின்றது.

இந்த வசனத்திற்கு ஐந்து வசனங்களுக்கு முன்னால் இரண்டு வானவர்கள் பற்றிக் குறிப்பிடுவதை நாம் காண முடிகிறது.

அல்லாஹ்வுக்கும், வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான். (அல்குர்ஆன் 2:98)

இந்த வசனத்தில் பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு மலக் குகள் பற்றி பேசப்படுகின்றது. அந்த இரண்டு மலக்குகளையே இறைவன் இங்கே குறிப்பிடுகின்றான் என்பதே சரியானதாகும்.

இது வரை நாம் ஆராய்ந்த வாசகங்கள் வரையிலான பொருள்களைக் காண்போம்.

வத்தபவூ மாதத்தலுஷ் ஷயாதீனு அலாமுல்கி சுலைமான - சுலைமானுடைய ஆட்சியின் போது ஷைத்தான்கள் போதித்ததை அவர்கள் (யூதர்கள்) பின்பற்றினார்கள்.

வமா கபர சுலைமானு - சுலைமான் நிராகரிப்பவராக இருக்கவில்லை.

வலாகின்னஷ் ஷயாதீன கபரூ யுஅல்லிமூனன் னாஸஸ் ஸிஸ்ர - மக்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்து ஷைத்தான்கள் தாம் காபிர்களாக ஆனார்கள்.

வமா உன்ஸில அலல் மலகைனி பிபாபில - பாபிலோனில் (ஜிப்ரீல் மீகாயில்) ஆகிய அந்த இரு வானவர்கள் மீதும் அந்தக் கலை அருளப்படவில்லை.

இப்படிப் பொருள் கொள்ளும் போது, சூனியக் கலைக்கும் சுலைமான் நபிக்கும் சம்பந்தமில்லாதது போல், ஜிப்ரீல், மீகாயீல் போன்ற வானவர்களுக்கும் சூனியக் கலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தெளிவுபடுத்தப்படுகின்றது.

அரபு இலக்கண அடிப்படையில் இவ்வாறு பொருள் கொள்ள இடமிருப்பதாலும் இவ்வாறு பொருள் கொள்ளும் போது வானவர்கள் கண்ணியம் காக்கப்படுவதாலும்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மா உன்ஸில' என்பதற்கு லம்யுன்ஸிலில்லாஹு' (அல்லாஹ் இறக்கியருளவில்லை) என்று விளக்கமளித்திருப்பதாலும்

இவ்வாறு பொருள் கொள்வதே சரியானதாகத் தோன்றுகிறது.

ஹாரூத் மாரூத்

2:102 வசனம் சூனியத்தின் மூலம் பெரிதாக ஒன்றையும் செய்ய முடியாது என்பதை அறிந்தோம். இவ்வசனத்தை எடுத்துக் காட்டி விட்டதால் அதில் கூறப்படும் ஹாரூத் மாரூத் என்போர் யார் என்பதையும் இது பற்றி விரிவுரையாளர்கள் மத்தியில் நிலவும் கருத்து வேறுபாட்டையும் இங்கே சுட்டிக் காட்டுவோம்.

பில்லி சூனியத்துடன் அந்த விளக்கம் தொடர்புடையது அல்ல என்றாலும் இவ்வசனம் பற்றி சரியான அறிவைப் பெறுவதற்காக இதை விளக்குகிறோம்.

அப்படியானால் ஹாரூத், மாரூத் என்போர் யார்? அவர்களைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன. அதையும் விபரமாக நாம் பார்த்து விடுவோம்.

வத்தபவூ மாதத்லுஷ் ஷயாதீனு' - ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்ததையே இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று இவ்வசனம் துவங்குகின்றது.

ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்தார்கள் என்றால் ஷைத்தான்களே நேரடியாகக் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது தீய மனிதர்களை இங்கே ஷைத்தான்கள் என்று குறிப்பிடப்படுகின்றதா?

இதை முதலில் நாம் விளங்க வேண்டும்.

ஷைத்தான்' என்ற பதப்பிரயோகம் உண்மையான ஷைத்தானுக்குப் பயன்படுத்துவது போலவே, மோசமான மனிதர்களுக்கும் பயன்படுத்தப்படுவதுண்டு. அரபியரின் வழக்கத்தில் மட்டுமின்றி, திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் கூட இது போன்ற பிரயோகங்களை நாம் காணலாம்.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது 'நம்பிக்கை கொண்டுள்ளோம்' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது 'நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே' எனக் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 2:14)

இந்த இடத்தில் ஷைத்தான் என்று கூறப்படுவது அவர்களின் தலைவர்களையே என்பதில் ஐயமில்லை.

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். (முஹம்மதே) உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக! (அல்குர்ஆன் 6:112)

அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர். (அல்குர்ஆன் 114:5, 6)

இந்த வசனங்களிலிருந்து மனிதர்களில் மோசமானவர்களையும் ஷைத்தான்கள் என்று கூறப்படுவதுண்டு என்பதை அறிய முடிகின்றது.

தனியாகப் பயணம் செய்பவன் ஷைத்தான் என்றும் (அபூதாவூத் 2240, திர்மிதீ 1597)

கவிஞர்களை ஷைத்தான் என்றும் (முஸ்லிம் 4193)

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகின்றது. இந்த ஷைத்தான்கள் என்பது உண்மையான ஷைத்தான்களைக் குறிக்கின்றதா? என்ற ஐயம் எழுகின்றது. இந்த ஐயத்தை அகற்றுவதற்கே இறைவன் 'ஹாரூத் மாரூத்' என்கிறான்.

அதாவது இவர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் யாரெனில் அவர்கள் ஹாரூத் மாரூத் எனும் பெயர் கொண்ட மோசமான மனிதர்களாவர் என்று அடையாளம் காட்டுகிறான்.

அரபு மொழியில் பல அர்த்தங்களுக்கு இடமுள்ள சொல்லைப் பயன்படுத்திவிட்டு அதன் பிறகு விளக்கமாக மற்றொரு சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. இதை பத்ல்' என்று அரபு இலக்கணம் கூறும். ஷைத்தான்கள் என்பதன் விளத்ககமே ஹாரூத், மாரூத் என்பது.

யூதர்களுக்கு சூனியக் கலையைக் கற்றுத் தந்தது சுலைமான் நபியுமன்று. மலக்குகளும் அல்லர். மாறாக ஹாரூத், மாரூத் என்ற (மனித) ஷைத்தான்களே கற்றுத் தந்தனர் என்பது இது வரை நாம் கூறியவற்றின் சுருக்கமான கருத்தாகும்.

தப்ஸீர் கலையில் மேதையாகிய இமாம் குர்துபி அவர்கள் 'இந்த வசனத்திற்குப் பல்வேறு வகையில் அர்த்தம் செய்யப்பட்டாலும் இதுவே மிகச் சிறந்த விளக்கமாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

குர்துபி அவர்கள் குறிப்பிட்ட இந்த விளக்கத்தை இப்னு கஸீர் அவர்களும் தமது தப்ஸீரில் எடுத்தெழுதுகிறார்கள்.

இந்த இடத்தில் அரபு இலக்கண ரீதியாக எழுகின்ற ஒரு ஐயத்தையும் நாம் அகற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அரபு மொழியில் ஒருமை, இருமை, பன்மை என்று மூன்று வகைகள் உள்ளன. இந்த இருமை பெரும்பாலான மொழிகளில் கிடையாது. ஒரு வார்த்தைக்கு விளக்கமாக வரும் மற்றொரு வார்த்தை ஒருமைக்கு ஒருமையாகவும், இருமைக்கு இருமையாகவும், பன்மைக்கு பன்மையாகவும் அமைய வேண்டும்.

இங்கே ஷைத்தான்கள் என்பது பன்மையாகவும், ஹாரூத், மாரூத் இருமையாகவும் - இருவரைக் குறிப்பதாக - உள்ளது. எனவே ஷைத்தான்கள் என்பதற்கு ஹாரூத், மாரூத் என்பது விளக்கமாக முடியாது என்பதே அந்த ஐயம்.

'சில சமயங்களில் இருமைக்கு பன்மையும் பன்மைக்கு இருமையும் பயன்படுத்தப்படுவதுண்டு' என்று குர்துபி அவர்கள் விடையளிக்கின்றார்கள். இதற்குச் சான்றாக பின்வரும் வசனத்தைச் சமர்ப்பிக்கிறார்கள்.

இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு (அல்குர்ஆன் 4:11)

இங்கே சகோதரர்கள் என்ற பன்மையான பதம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இரண்டு சகோதரர்கள் இருக்கும் போதும் இதுவே சட்டமாகும். இதில் எவரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. இது போன்ற அரபு இலக்கியங்களிலும் பரவலாக நாம் காண முடியும். ஆகவே இந்த ஐயமும் அடிபட்டுப் போகின்றது.

ஷைத்தான்கள்' என்று அவ்வசனத்தில் கூறப்படுவோர் ஹாரூத், மாரூத் என்போர் தான் என நாம் குறிப்பிடுகிறோம். அதன் இலக்கண விதியையும் விளக்கி உள்ளோம்.

'ஷயாதீனு' என்பதற்கு, ஹாரூத், மாரூத் என்பது விளக்கம் என்றால் ஹாரூது, மாரூது' என்று உகரத்தில் அவ்வார்த்தையின் இறுதி அமைய வேண்டும். ஏனெனில் ஷயாதீனு' என்பதன் இறுதி உகர'த்தில் அமைந்துள்ளது என்று சிலர் ஆட்சேபிப்பர்.

இவ்வசனத்தில் ஷயாதீன் என்பது இரண்டு தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஷஹாதீனு என்று உகரக் குறியீட்டுடன் ஒரு தடவையும், ஷயாதீன என்று அகரக் குறியீட்டுடன் ஒர தடவையும் இச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அகரக் குறியீட்டுடன் பயன்படுத்தப்பட்டுள்ள ஷயாதீன என்பதைக் கவனத்தில் கொண்டு ஹாரூத மாரூத என்பதும் அகரக் குறியீட்டுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொண்டால் இந்தச் சந்தேகம் நீங்கி விடும்.

மனிதர்களில் உள்ள ஷைத்தான்கள் தான் ஹாரூத், மாரூத் என்றால் 'நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். இதைக் கற்று காபிர்களாகி விடாதீர்கள் என்று எச்சரிக்காமல் எவருக்கும் அவர்கள் கற்றுக் கொடுக்கவில்லை' என்று இறைவன் கூற மாட்டான். மலக்குகளாக இருந்தால் தான் அவ்வாறு கூறியிருக்க முடியும் என்பது சிலரது ஆட்சேபனை.

இந்த காரணத்தைக் கூறி அவர்கள் மலக்குகள் என வாதிக்க முடியாது. காரணம் மோசமான அல்லது சிரமமான ஒரு கலையில் தேர்ந்தவர்கள் பிறருக்குக் கற்றுக் கொடுக்கும் போது 'உனக்கேன் இந்த வேண்டாத வேலை' என்பது போன்ற வார்த்தைகளைக் கூறுவது சகஜமானது தான். எனவே அவர்கள் பயன்படுத்திய இந்த வாசகத்தின் காரணமாக அவர்கள் மலக்குகள் என வாதிக்க முடியாது. மேலும் அவர்கள் மலக்குகளாக இருக்க முடியாது என்பதற்கு பல காரணங்களை நாம் கூறியுள்ளோம். அவற்றுக்கு முரணில்லாத வகையிலே இதை விளங்க வேண்டும்.

நாங்கள் சோதனையாக இருக்கிறோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்களே! சோதனையாக இருக்கிறோம் என்பதை மலக்குகள் தானே கூறியிருக்க முடியும் என்று வேறு சிலர் ஆட்சேபனை செய்யலாம்.

சோதனையாக என்று தமிழாக்க.ம் செய்யுமிடத்தில் ஃபித்னா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஃபித்னா என்ற பதத்துக்கு சோதனை என்ற அர்த்தம் இருப்பது போலவே குழப்பம்' என்ற அர்த்தமும் உண்டு.

நாங்கள் குழப்பம் செய்பவர்கள் என்று பொருள் கொண்டால் எவ்வித முரண்பாடும் இன்றி எந்த வசனத்துடனும் மோதுதலின்றி பொருந்திப் போகின்றது.

உண்மையை உள்ளபடி அறிய அல்லாஹ் துணை செய்வானாக- ஆமீன்!

......முற்றும்......



இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம் - 4
P. ஜைனுல் ஆப்தீன் அவர்களின் நூலிலிருந்து 


இறைத் தூதராக இருந்தாலும் எந்த மனிதரும் அறிந்து கொள்ள முடியாத ஐந்து விசயங்கள் உள்ளன. எந்தக் கருவறைகளில் எத்தனை குழந்தைகள் உண்டாகும்? ஒரு கருவறையில் குழந்தை உருவாகுமா? ஆகாதா என்பதும் அவற்றில் ஒன்றாகும்.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன். (திருக்குர்ஆன் 31:34)

தனது நூறு மனைவிகளும் கருவுறுவார்கள் என்று சுலைமான் நபியவர்கள் நிச்சயம் கூறியிருக்க முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விசயத்தில் எந்த இறைத்தூதரும் மூக்கை நுழைக்க மாட்டார்கள்.

'நூறு மனைவிகளும் கருவுறுவார்கள் என்று இறைவன் சுலைமான் நபிக்கு அறிவித்துக் கொடுத்திருக்கலாம் அல்லவா?' என்று சிலர் விளக்கம் கூறுவது கேலிக் கூத்தாகும். இறைவன் அறிவித்துக் கொடுத்திருந்தால் நூறு மனைவிகளும் நூறு ஆண் குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு நடக்காததால் சுலைமான் நபி தன்னிச்சையாகத் தான் இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்ற கருத்தைத் தான் மேற்கண்ட ஹதீஸிலிருந்து பெற முடியும்.

இறைவன் அறிவித்துக் கொடுக்காத இந்த விசயம் குறித்து எந்த நபியும் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள்.

ஜக்கரிய்யா நபி அவர்களுக்கு தள்ளாத வயது வரை குழந்தை இல்லை. அல்லாஹ்விடம் அவர்கள் செய்து வந்த பிரார்த்தனையை ஏற்று அவர்களுக்கு ஒரு குழந்தையை அளிப்பதாக இறைவன் தெரிவிக்கிறான். தனது மனைவி கருவுற்று விட்டார் என்றால் அதை உடனடியாக அறிந்து கொள்ள அவர்கள் ஓர் அடையாளத்தைக் கேட்டார்கள். மூன்று நாட்கள் உனக்குப் பேச முடியாமல் போவது தான் அடையாளம் என்று இறைவன் கூறினான். 'ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப் பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத் தியதில்லை' (என இறைவன் கூறினான்) 'என் இறைவா! எனக்கு எப்படி புதல்வன் பிறப்பான்? என் மனைவியோ பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். நானோ முதுமையின் இறுதியை அடைந்து விட்டேன்' என்று அவர் கூறினார். 'அப்படித் தான். அது எனக்கு எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் உம்மைப் படைத்தேன்' என்று உமது இறைவன் கூறுகிறான் என்றார். 'என் இறைவா! எனக்கொரு அடையாளத்தைக் காட்டு!' என்று அவர் கேட்டார். 'குறைபாடற்ற நிலையில் நீர் இருந்தும் மூன்று இரவுகள் மனிதர்களிடம் நீர் பேச மாட்டீர் என்பதே உமக்கு அடையாளம்' என்று அவன் கூறினான். (திருக்குர்ஆன் 19:7, 8, 9, 10)

தமது மனைவியின் கருவறையில் குழந்தை உருவான பின்னரும் கூட அதை ஜக்கரியா நபியால் அறிந்து கொள்ள முடியவில்லை என்று குர்ஆன் கூறும் போது நூறு மனைவியரும் குழந்தை பெற்றெடுப்பார்கள் என்று சுலைமான் நபி கூறியிருக்க முடியாது. அவ்வாறு கூற அவர்களுக்கு அதிகாரம் கிடையாது.

நூறு மனைவிகளும் குழந்தை பெறுவார்கள் என்பதை மட்டும் சுலைமான் நபி கூறவில்லை. ஆண் குழந்தையைத் தான் பெற்றெடுப்பார்கள் என்று அடித்துக் கூறுகிறார்கள். அந்த நூறு பேரும் வளர்ந்து பெரியவர்களாகி நல்லடியார்களாக வாழ்ந்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் என்றெல்லாம் எதிர் காலம் பற்றி பல விசயங்களை அவர்கள் கூறியதாக அந்த ஹதீஸ் கூறுகிறது.

அவர்கள் கூறியவாறு எதுவுமே நடக்காததால் சுயமாகத் தான் அவர்கள் இவ்வாறு கூறியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படியெல்லாம் சுலைமான் நபியும் கூற மாட்டார்கள். சுலைமான் நபி கூறியதாக நபிகள் நாயகமும் கூறியிருக்க மாட்டார்கள்.

மேலும் இன்ஷா அல்லாஹ்' என்று கூறுமாறு வானவர் சுட்டிக் காட்டிய பிறகும் அவர்கள் கூறவில்லை என்பது ஏற்கும்படி இல்லை.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட இன்ஷா அல்லாஹ் கூற மறந்து விட்டால் யாராவது சுட்டிக் காட்டினால் உடனே திருத்திக் கொள்கிறோம். ஒரு வானவர் நினைவூட்டிய பின்னரும் சுலைமான் நபி அதைச் செய்யவில்லை என்பது அவர்களின் தகுதிக்கு ஏற்புடையதாக இல்லை.

எனவே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கும் வகையில் இது அமைந்திருப்பதால் இதை அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களாக இருந்த போதும் இதை நாம் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும். இதை உண்மை என நம்பினால் குர்ஆனின் பல வசனங்களை நாம் மறுத்தவர்களாகி விடுவோம்.

இது போக அந்த அறிவிப்பில் காணப்படும் முரண்பாடுகள் இந்த முடிவை மேலும் உறுதிப்படுத்துகிறது.

நூறு பெண்களுடன் இன்றிரவு உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி 5242

எழுபது பெண்களுடன் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி 3424

தொண்ணூறு பெண்களுடன் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி 6639, 6720

அறுபது மனைவியரிடம் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி 7469

ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன.

இந்த அனைத்து ஹதீஸ்களும் அபூஹுரைரா (ரலி) வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. 60, 70, 90, 100 என்று முரண்பட்ட எண்ணிக்கை இதில் சந்தேகத்தை அதிகமாக்குகிறது.

'நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது' என்று காரணம் கூறி இதை உண்மை என்று நம்பினால் சுலைமான் நபி அவர்களின் தகுதிக்கு அது குறைவை ஏற்படுத்தும். திருக்குர்ஆனின் பல வசனங்களுடனும், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுடனும் மோதும் என்பதைக் கவனத்தில் கொண்டு நம்மால் கண்டு பிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை இதில் இருக்கலாம் என்று கருதி இதை நிராகரித்து விட வேண்டும்.

மற்றொரு ஹதீஸையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

உயிரைக் கைப்பற்றும் வானவர் மூஸா நபியிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்ததும் மூஸா நபியவர்கள் அவரை அறைந்து விட்டார். உடனே வானவர் இறைவனிடம் சென்று 'மரணத்தை விரும்பாத அடியாரிடம் என்னை நீ அனுப்பி விட்டாயே?' என்று முறையிட்டார். அதற்கு இறைவன் 'நீ மீண்டும் அவரிடம் செல்! காளை மாட்டின் முதுகின் மேல் அவரது கையை வைக்கச் சொல்! அவரது கையின் அடியில் உள்ள ஒவ்வொரு முடிக்கும் ஒரு வருடம் என்ற அளவில் வாழ் நாள் கொடுக்கப்பட்டதாகக் கூறு!' என்று சொல்லியனுப்பினான். அவர் வந்து மூஸா நபியிடம் இதைத் தெரிவித்தார். அதற்கு மூஸா நபியவர்கள் 'இறைவா! அதன் பின்னர் என்ன?' என்று கேட்டார். 'அதன் பின்னர் மரணம் தான்' என்று இறைவன் கூறினான். 'அப்படியானால் இப்போதே மரணிக்க நான் தயார்' என்று மூஸா (அலை) கூறினார்.

இது அபூஹுரைரா (ரலி)யின் கூற்றாகவும், நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகவும் புகாரி 3407 வது ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரியில் இது பதிவு செய்யப்பட்டதாலும், இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருப்பதாலும் இதை அப்படியே ஏற்க இயலுமா?

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டுக்கோ, திருக்குர்ஆன் வசனங்களுக்கோ முரணாக இல்லாவிட்டால் இதை ஏற்றுத் தான் ஆக வேண்டும்.

இந்த ஹதீஸைப் பொருத்த வரை திருக்குர்ஆனின் ஏராளமான வசனங்களுடன் முரண்பட்டு நிற்கிறது.

ஒரு வானவர் இறைக் கட்டளையை நிறைவேற்றாமல் தோல்வியுடன் திரும்பிச் சென்றார் என்று இதில் கூறப்படு கிறது. இது சரி தானா என்பதை முதலில் ஆராய்வோம்.

வானவர்களுக்கு என்று சில இலக்கணங்கள் உள்ளதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர். (திருக்குர்ஆன் 16:49, 50)

'அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்' எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள். (திருக்குர்ஆன் 21:26,27)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள். (திருக்குர்ஆன் 66:6)

இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பினானோ அதைச் செய்து முடிப்பது தான் வானவர்களின் இலக்கணம். மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற ஒரு வானவரை இறைவன் அனுப்பினால் அவர் அந்த வேலையைச் செய்யாமல் திரும்ப மாட்டார். இந்த இலக்கணத்திற்கு எதிரான கருத்தை அந்த ஹதீஸ் கூறுகிறது.

மேலும் நபிமார்கள் இறைவன் அனுப்பி வைத்த தூதரை அடித்து விரட்டுவார்களா? இறைவனின் ஏற்பாட்டுக்கு செவி சாய்க்க மறுப்பார்களா என்றால் நிச்சயம் அப்படிச் செய்ய மாட்டார்கள்.

மிகச் சிறந்த இறைத் தூதர்களில் ஒருவரான மூஸா நபியவர்கள் இந்த ஹதீஸில் கூறப்பட்டவாறு நடந்திருப் பார்களா? என்பதும் சிந்தித்துப் பார்க்க வேண்டியதாகும்.

'இவ்வுலக வாழ்க்கை அற்பமானது. மறுமை வாழ்வு தான் நிலையானது' என்பது எல்லா இறைத் தூதர்களின் போதனையாக இருந்தது. தமக்கு மரணம் வந்து விட்டது என்பதை மூஸா நபியவர்கள் அறிந்து கொண்டால் அதற்கு தம்மை தயார் படுத்திக் கொள்வார்களே தவிர அதை எதிர்த்து எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டார்கள்.

மேலும் வானவர்கள் சுயமாக எந்தக் காரியத்திலும் இறங்க மாட்டார்கள். அல்லாஹ் இட்ட கட்டளையைத் தான் செய்வார்கள் என்பது நமக்கே தெரியும் போது மூஸா நபிக்கு இந்த உண்மை தெரியாமல் இருக்க முடியாது.

'இறைவனால் அனுப்பப்பட்ட தூதரை அறைவது இறைவனை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்குச் சமமாகும்' என்பதைக் கூட மூஸா நபியவர்கள் அறிந்திருக்கவில்லை என்ற கருத்திலமைந்த ஹதீஸை நாம் எவ்வாறு நம்ப இயலும்?

அப்படியே மூஸா நபியவர்கள் வானவரை அறைந்தால் இறைவன் பணிந்து கெஞ்சிக் கொண்டிருப்பானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

யூனுஸ் நபியவர்கள் இறைவனுடன் கோபித்துக் கொண்டு போனதற்காக அவரை எவ்வாறு நடத்தினான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். 'உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்' என்று இருள் களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்த னையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம். (திருக்குர்ஆன் 21:86,87)

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான் (திருக்குர்ஆன் 68:49)

மூஸா நபி இவ்வாறு நடந்திருந்தால் இது போன்ற கடும் நடவடிக்கை எடுப்பது தான் இறைவனது தனித்தன்மை. தனது பெருமை விசயத்தில் அவன் சமரசம் செய்து கொண்டதே இல்லை. இறைவனைப் பொருத்த வரை அவனது கௌரவம் தான் அவனுக்கு முதன்மையானதாகும்.

இந்த அடிப்படையையும் இந்த ஹதீஸ் அறவே தகர்த்து எறிவதால் இந்த ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

இது போல் அமைந்த மற்றொரு ஹதீஸையும் இறுதியாக நினைவு படுத்துகிறோம்.

ஸாம் எனும் இளைஞர் அபூஹுதைபா (ர) வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தமது மனைவியுடன் ஸாம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபூஹுதைபாவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. இது பற்றி அபூஹுதைபாவின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது 'ஸாமுக்குப் பாலூட்டு! இதனால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்ம் 2638, 2636, 2639, 2640 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

அன்னிய இளைஞர் ஒருவருக்குப் பால் கொடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) நிச்சயம் கட்டளையிட்டிருக்க மாட்டார்கள். பால் ஊட்டுதல் என்பது இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தான் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியை ஏற்காது நாம் விட்டு வருகிறோம். நம்மால் கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை இந்த அறிவிப்பில் இருக்கலாம். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்கிறோம்.

இதை சரியானது என்று எவராவது வாதிட்டால் இன்றைக்கு இதனடிப்படையில் நடக்கலாம் என்று ஃபத்வா வழங்குவார்களா? நிச்சயம் வழங்க மாட்டார்கள்.

அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில ஹதீஸ்களின் கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராக உள்ளன. இது போன்ற ஹதீஸ்களை நம்பி இஸ்லாத்தின் அடிப்படையையும் குர்ஆன் வசனங்களையும் மறுக்கும் நிலை ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இதைக் குறிப்பிடுகிறோம்.

இது போல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டார்கள் என்று நம்பி மேலே நாம் எடுத்துக்காட்டிய அத்தனை வசனங்களையும் மறுப்பதை விட அந்த வசனங்களை ஏற்று அந்த ஹதீஸை ஏற்காது விட்டு விடுவது தான் சிறந்ததாகும்.

அந்தச் செய்தியில் எங்கோ தவறு ஏற்பட்டுள்ளது என்பதை இந்தச் செய்தி பலவிதமாக அறிவிக்கப்படுவதிலிருந்தே நாம் முடிவு செய்து விடலாம்.

சீப்பு, உதிர்ந்த முடிகள் ஆகியவற்றின் மூலம் சூனியம் செய்யப்பட்டு கிணற்றில் புதைக்கப்பட்டதாக இது குறித்த ஹதீஸ்களில் கூறப்படுகிறது.

முரண்பட்ட அறிவிப்புக்கள்

எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா என்று ஆயிஷா (ரலி) கேட்ட போது 'அப்புறப்படுத்தவில்லை; அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரியின் 3268, 5763, 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

'நபி(ஸல்) அவர்கள் உடனடியாக அக்கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தினார்கள்' என்று புகாரியின் 5765, 6063 வது ஹதீஸ்களின் கூறப்பட்டுள்ளது.

அப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் அறிவிப்பிலும் முரண்பாடு காணப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தியதாக, அப்புறப்படுத்தக் கட்டளையிட்டதாக புகாரியின் 5765, 6063 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நஸயீயின் 4012 வது ஹதீஸில் ஆட்களை அனுப்பி வைத்து அதை அப்புறப்படுத்தியதாகவும், அப்புறப்படுத்திய பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவும் உடனே அவர்கள் குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அஹ்மத் 18467 வது ஹதீஸிலும் இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அருகில் இரண்டு வானவர்கள் அமர்ந்து தமக்கிடையே பேசிக் கொண்டதாகவும் அதன் மூலம் தனக்கு சூனியம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரி 6391வது ஹதீஸ் கூறுகிறது.

நஸயீயின் 4012வது ஹதீஸில் ஜிப்ரீல்(அலை) வந்து 'உமக்கு யூதன் ஒருவன் சூனியம் வைத்துள்ளான்' என்று நேரடியாகக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்திகளின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டாலும் அதில் கூறப்படும் கருத்துக்கள் குர்ஆனுக்கு எதிராக அமைந்துள்ளதாலும், அந்த அறிவிப்புக ளில் முரண்பாடு இருப்பதாலும் இதை நாம் ஏற்கக் கூடாது.

இவ்வாறு விரல் விட்டு எண்ணக் கூடிய ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை மட்டும் தான் ஏற்கக் கூடாது என்று தக்க காரணத்துடன் கூறுகிறோம்.

இவ்வாறு இல்லாத பல்லாயிரம் ஹதீஸ்களை நாம் ஏற்கிறோம். ஏற்கத் தான் வேண்டும் என்கிறோம். குர்ஆன் மட்டும் போதும், நபிவழி அவசியமில்லை எனக் கூறுவோர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டனர் என்பதை திர்மிதீ தமிழாக்கத்தின் முன்னுரையிலும், அல்முபீன் மாத இதழில் தொடர் கட்டுரையிலும் தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதை நினைவூட்டுகிறோம்.

113, 114வது அத்தியாயங்கள்

திருக்குர்ஆனின் 113, 114வது அத்தியாயங்களின் அடிப்படையிலும் சூனியத்தின் மூலம் அதிசயங்களை நிகழ்த்த இயலும் என்று வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட போது அதை நீக்குவதற்காக ஃபலக், நாஸ் எனும் அத்தியாயங்கள் அருளப்பட்டன. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்வதற்காக 12 முடிச்சுக்கள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்தது என்ற செய்தியின் அடிப்படையிலும் நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதை நிரூபிக்க முயல்கின்றனர்.

சில தஃப்ஸீர்களில் அறிவிப்பாளர் வரிசையில்லாமல் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாகவும் இதில் ஏராளமான ஆட்சேபனைகள் உள்ளதாகவும் இப்னு கஸீர் அவர்கள் தமது விரிவுரையில் கூறுகிறார்கள்.

மேலும் மேற்கண்ட இரண்டு அத்தியாயங்களும் மதீனாவில் தான் அருளப்பட்டது என்பதற்குக் கூட ஆதாரமில்லை. இதிலேயே கருத்து வேறுபாடு உள்ளது.

அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் மொழி பெயர்த்த தமிழாக்கத்தில் 'இவ்விரு அத்தியாயங்களும் மக்காவில் அருளப்பட்டவை' என்று கூறுகிறார்.

நிஜாமுத்தீன் மன்பயீ அவர்கள் மொழி பெயர்த்த தமிழாக்கத்தில் 'இவ்விரு அத்தியாயங்களும் மதீனாவில் அருளப்பட்டவை' என்று கூறுகிறார்.

எங்கே அருளப்பட்டது என்பதற்கே ஆதாரம் கிடையாது என்பதால் 12 முடிச்சுக்கள் அவிழ்ந்ததாகக் கூறுவது கட்டுக்கதை என்பது உறுதியாகிறது.

முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்

'முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்' (113:4) என்ற சொற்றொடரை வைத்துக் கொண்டு சூனியத்தினால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று வாதிடுகின்றனர்.

முடிச்சுக்களில் ஊதி சூனியம் செய்யும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடச் சொல்வதால் அவர்களால் தீங்கிழைக்க இயலும் என்பது உறுதியாகிறதே என்று இவர்கள் கேட்கின்றனர்.

இவர்களின் வாதப்படி நபிகள் நாயகத்துக்கு லபீத் என்ற ஆண் தான் சூனியம் வைத்தான். எனவே சூனியம் செய்யும் பெண்களுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை.

இவர்கள் வாதப்படி இந்த அத்தியாயத்தில் சூனியம் வைக்கும் பெண்களிடமிருந்து தான் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். ஆண்கள் சூனியம் செய்தால் அதிருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லை என்ற கருத்து வரும்.

'முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்' என்பதற்கு சூனியக் காரிகள் என்று அல்லாஹ்வின் தூதர் விளக்கம் கூறவில்லை.

ஹதீஸ்களின் துணையுடன் இதை விளங்கினால் ஷைத்தானைத் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் என்பதை அறியலாம்.

மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது. தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2269, 1142)

நாம் நல்லறங்கள் செய்து விடாதவாறு ஷைத்தான் தடைகளை ஏற்படுத்துகிறான். அந்தத் தடைகளைத் தான் இங்கே முடிச்சுக்களில் ஊதுதல் எனப்படுகிறது. அதிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு தான் இறைவன் இவ்வசனத்தின் மூலம் நமக்குக் கற்றுத் தருகிறான்.

முடிச்சு என்றவுடன் நூல் போடப்படும் முடிச்சு என்று சிலர் நினைத்து விடுகின்றனர். மூஸா நபியவர்கள் தமது நாவில் உள்ள குறைபாட்டை நீக்குமாறு அல்லாஹ்விடம் கேட்ட போது முடிச்சு என்று தான் கூறினார்கள்.

எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

(திருக்குர்ஆன் 20:26, 27) நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

மேலும் ஊதுதல் என்ற சொல்லும் ஹதீஸ்களில் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது. ஷைத்தானின் ஊதுதலை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அபூதாவூத் 651

தீய சக்திகளைக் குறிக்கும் போது பெண் பாலாகக் குறிக்கும் வழக்கம் அரபு மொழியில் உள்ளது. இதன் காரணமாகவே பெண் பாலாக இங்கே குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும், சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

அடுத்து மற்றொரு வசனத்தையும் ஆதாரமாகக் காட்டி சூனியத்தால் எதையும் செய்யலாம் என்று கூறுகின்றனர்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். 'நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே மறுத்து விடாதே!' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். 'இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா? (அல்குர்ஆன் 2:102)

ஹாரூத், மாரூத் என்பவர்களிடம் மக்கள் வந்து ஸிஹ்ரைக் கற்றுக் கொண்டதாக குறிப்பிடும் இறைவன், அதன் அதிகபட்ச விளைவு என்ன என்பதை நமக்கு அடையாளம் காட்டுகின்றான்.

ஸிஹ்ர் எனும் கலை மூலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றிருந்தால் அந்த மிகப்பெரிய பாதிப்பை இறைவன் இங்கே கூறியிருப்பான். அந்த மக்களும் அதனையே கற்றிருப்பார்கள்.

கை, கால்களை முடக்க முடியும் என்றோ, ஒரு ஆளைக் கொல்ல முடியும் என்றோ இருந்திருந்தால் அதைத் தான் அம்மக்கள் கற்றிருப்பார்கள். அல்லாஹ்வும் அதைத் தான் சொல்லியிருப்பான்.

ஸிஹ்ருடைய அதிகபட்ச விளைவு என்னவென்றால் கணவன் மனைவியரிடையே பிளவையும், பிரிவையும் ஏற்படுத்துவது தான் என்பது இதிலிருந்து புலனாகிறது.

அதாவது இருவருடைய உள்ளத்திலும் சந்தேகத் தீயை மூட்டி அதனால் பிரிவை ஏற்படுத்த முடியும். இல்லாத ஒன்றை இருப்பதாகவோ, இருப்பதை இல்லாதது என்றோ மனித மனங்களில் ஐயத்தை ஏற்படுத்த முடியும். இது தான் ஸிஹ்ருடைய அதிகபட்சமான விளைவு.

ஒருவனது கை, கால்களை இந்தக் கலையின் மூலம் முடக்க முடியாது என்றாலும், தனது கைகால்கள் முடங்கி விட்டன என்ற எண்ணத்தை அவனுக்கு ஏற்படுத்த முடியும்.

'உனக்கு இந்த நபர் இந்த மாதிரியான ஸிஹ்ர் செய்துள்ளார்' என்று தெரிவித்து விட்டால் அதுவே ஒருவனைப் படுக்கையில் தள்ளிவிடப் போதுமானதாகும். இல்லாததை எல்லாம் இருப்பதாக எண்ண ஆரம்பித்து விடுவான்.

இந்த விளைவைக் கூட திட்டவட்டமாகச் செய்து விட முடியுமா? முடியாது என்கிறான் இறைவன். இதன் மூலம் அல்லாஹ் நாடினால் அன்றி அவர்களால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று மேற்கண்ட வசனத்தில் தெரிவிக்கின்றான்.

2:102 வசனத்தை ஆதாரமாகக் கொண்டு சூனியம் என்பது உண்மையில் நிகழ்த்தப்படும் அதிசயமே என்று வாதிடுவது தவறு என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.

சூனியம் என்பது தந்திரமான ஏமாற்று வித்தையாக இல்லாமல் உண்மையாக நிகழ்த்தப்படும் அதிசயமாக இருந்தால் என்ன நிகழ வேண்டும்?

சூனியம் வைக்கிறேன் என்று ஏமாற்றும் பேர்வழிகள் அவர்களது பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடும் நாத்திகர்கள் மற்றும் நம்மைப் போன்றவர்களுக்கு எதிராக சூனியம் செய்து வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும். அப்படி அவர்களால் செய்ய முடிவதில்லை.

ஒரு சில தந்திரங்களைக் கற்று வைத்துக் கொண்டு அதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர். யார் அவர்களின் பித்தலாட்டத்தை உண்மை என்று நம்புகிறார்களோ, அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் செய்வது பித்தலாட்டம் தான் என்பதில் யார் உறுதியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

தவறான மொழிபெயர்ப்பு

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். ஆனால், ஸுலைமான் ஒரு போதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். இன்னும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் பின்பற்றினார்கள். ஆனால் அவர்கள் இருவரும் 'நிச்சயமாக நாங்கள் சோதமையாக இருக்கிறோம். (இதைக்கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்களாகி விடாதீர்கள்' என்று சொல்லி எச்சரிக்காத வரையில் எவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. அப்படி இருந்தும் கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி, அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும் எந்தவித நன்மையும் தராததையுமே அவர்கள் கற்றுக் கொண்டார்கள். சூனியத்தை விலைக்கு வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளனர். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப் பெற்றுக் கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 2: 102)

திருக்குர்ஆனின் 2:102வது வசனத்திற்கு மேற்கண்டவாறு தான் பெரும்பாலான விளக்கவுரைகளிலும் மொழிபெயர்ப்புகளிலும் பொருள் காணப்படுகின்றது. வார்த்தைகளில் வித்தியாசம் இருந்தாலும் இந்தக் கருத்தைத் தான் பெரும்பாலான மொழி பெயர்ப்புக்கள் தருகின்றன.

அரபு இலக்கண அடிப்படையில் மேற்கண்டவாறு பொருள் கொள்ள இடமிருந்தாலும் வேறு பல காரணங்களால் இந்த மொழி பெயர்ப்பை ஏற்க முடியவில்லை. அதே அரபு இலக்கண அடிப்படையில் மற்றொரு விதமாகப் பொருள் கொள்ளவும் இடமிருக்கின்றது. அந்தப் பொருளே சரியானதாகவும் தோன்றுகின்றது.
 
தொடரும்.........