ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013



ஓதுவோம் வாருங்கள்! -3


கவிதைக்கு அனுமதியும், கவிஞர்களுக்கு அங்கீகாரமும்

அல்லாஹ் தன் திருமறையில் கவிஞர்களைக் கண்டித்து விட்டு அதிலிருந்து சிலருக்கு விலக்கமளிக்கிறான். அந்தச் சிலர் கண்டனத்திற்கு உரியவர்கள் அல்லர் என்பதையும் தெளிவுபடுத்துகிறான். நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டிய வசனத்திற்கு அடுத்த வசனங்களில் பின்வருமாறு கூறுகிறான்.

“எவர் விசுவாசம் கொண்டு, நற்கருமங்களைச் செய்து, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்ந்து, (பிறர் நிந்தனையால்) பாதிக்கப்பட்ட பின்னர் (தம் கவிதையால்) பழி வாங்கினார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் மேற்கூறிய கண்டனத்திற்குரியவர்கள்) (அல்குர்ஆன் 26 :227)

இந்தத் திருவசனத்தில் “பிறரைக் கவிதையால் வசைபாடுவதை முதலில் நாம் துவக்கக் கூடாது. நியாயமில்லாமல் கவிதையால் நாம் அர்ச்சிக்கப்படும் போது, கவிதையால் அவர்களை அர்ச்சிக்கலாம்” என்று வல்ல இறைவன் அனுமதிக்கின்றான்.

இந்த அடிப்படையிலேயே நபி(ஸல்) அவர்கள் பல கவிஞர்களை அங்கீகாரம் செய்தனர்.

நபி(ஸல்) அவர்கள், ஹஸ்ஸான் (ரழி) அவர்களை நோக்கி, (கவிதையால்) “இந்தக் காபிர்கள் மீது வசைபாடு! உன்னுடன் ஜிப்ரில்(அலை) இருக்கிறார்கள்” என்றார்கள்.

அறிவிப்பவர் ” பரா இப்னு ஆஸிப் (ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

ஹஸ்ஸான் (ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (குரைஷிக் காபிர்களை வசை பாட அனுமதி கேட்ட போது, நபி(ஸல்) அவர்கள் ‘என் குலத்தைப் பற்று எப்படி (வசைபாடுவாய்?) என்று கேட்டார்கள், அதற்கு ஹஸ்ஸான்(ரழி) அவர்கள் “குழைத்த மாவிலிருந்து மயிர் நீக்கப்படுவது போல், (அவ்வளவு பக்குவமாக) உங்கள் குலத்தைச் சேர்ந்த அவர்களை வசைபாடும் போது அவர்களை விட்டும் நான் உங்களை நீக்கி விடுவேன்” என்றார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷத(ரழி) நூல் : புகாரி

ஹஸ்ஸான்(ரழி) அவர்கள் பள்ளிவாசலில் கவிதை இயற்றிப் படிக்கும்போது, உமர்(ரழி) அவர்கள் அவரைக் கண்டிக்கும் விதமாகப் பார்த்தார்கள். அப்போது ஹஸ்ஸான் (ரழி) அவர்கள் அருகே இருந்த அபூஹுரைரா(ரழி) அவர்களை நோக்கி, “ஹஸ்ஸான்! அல்லாஹ்வின் தூதர் சார்பாக (இவர்களுக்கு) நீர் பதில் கொடுப்பீராக! யா அல்லாஹ்! இவரை ஜிப்ரீல் மூலம் வலுப்படுத்துவாயாக!” என்று நபி(ஸல்) அவர்கள் (என்னைப்பற்றி புகழ்ந்து) கூறியதை நீ செவியேற்றதுண்டா? என்ற கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா(ரழி) அவர்கள் “ஆம்” என்றனர்.

அறிவிப்பவர் : ஹஸ்ஸான்(ரழி) நூல் : புகாரி

நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸானுக்காக பள்ளிவாசலில் ஒரு மேடையை ஏற்படுத்தி இருந்தனர். அதில் நின்ற வண்ணம் நபி(ஸல்) அவர்கள் மீது எவர் வசை பாடினாரோ, அவரை ஹஸ்ஸான்(ரழி) வசைபாடுவார். அப்போது நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் தூதருக்காக இவர் பதிலடி கொடுக்கும் போது, ஹஸ்ஸானுடன் ஜிப்ரில்(அலை) இருப்பார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : அபூதாவூது.

நபி(ஸல்) அவர்களை மக்கத்துக் காபிர்கள் – கவிஞர்கள் – தரக்குறைவான வார்த்தைகளால் வசை பாடியபோது, இழி மொழிகளால் அவர்களை அர்ச்சனை செய்த போது ஹஸ்ஸான் (ரழி) போன்ற கவிஞர்கள் மூலம் காபிர்களுக்கு பதில் சொல்ல வைத்தார்கள். அவர்கள் மீது கூறப்பட்ட அவதூறுகளையும், அவர்கள் மீது சுமத்தப்பட்ட களங்கத்தையும் துடைத்தெறியச் செய்தார்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில் களங்கத்தை துடைத்தெறிவதற்காக, கவிதை இயற்றலாம் என்று தெரிவாகின்றது.

கருத்துள்ள கவிதைகள்
சிலரை வசைபாடும் விதத்தில் கவிதை இயற்றுவதென்றால், முதலில் நாம் துவக்கக் கூடாது. எவ்வித நியாயமின்றி நம் மீது களங்கம் சுமத்தப்பட்டால் அதற்கு அதே கவிதையால் பதில் தரலாம் என்பதைக் கண்டோம்.

இன்னும் சில கவிதைகளுக்குப் பொதுவாக அனுமதி உண்டு என்பதையும் ஹதீஸ்கள் நமக்கு உணர்த்துகின்றன. அல்லாஹ்வின் வல்லமையைப் பறைசாற்றும் கவிதைகள் – இஸ்லாமியக் கடமைகளில் ஆர்வமூட்டும் கவிதைகள், இஸ்லாம் தடை செய்துள்ள காரியங்களை தவிர்த்துக் கொள்ளத் தூண்டும் கவிதைகள், இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணில்லாத – கருத்தாழ மிக்க கவிதைகள்  ஆகியவற்றுக்கு பொதுவாக அனுமதி உண்டு.

“நாங்கள் இந்த உலகில் வாழும் காலமெல்லாம் (இஸ்லாத்தை நிலை நாட்டிட) போர் புரிவதாக முஹம்மதிடம் உறுதிமொழி கொடுத்தவர்கள்” என்ற பொருள்பட அன்ஸார்கள் ஒரு போர்க் களத்தில் கவிதை பாடினார்கள். (இதைச் செவியுற்ற) நபி(ஸல்) அவர்கள் “இறைவா! மறு உலக வாழ்வைத் தவிர வேறு வாழ்வு கிடையாது. அன்ஸார்களையும், முஹாஜிர்களையும் நீ சங்கைப்படுத்துவாயாக” என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல் : புகாரி.

இறைவனுக்காக தியாகம் செய்வதை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ள இந்தக் கவிதையை நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் செய்துள்ளதை நாம் காண்கிறோம்.

ஆமிர் இப்னுல் அக்வஃ என்ற நபித் தோழர் ஒரு கவிஞராக இருந்தார். ஒரு போர்க்களத்தில், அல்லாஹ்விடம் துஆ செய்யும் கருத்துக்களடங்கிய சில கவிதைகளைப் பாடினார். அதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “இவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக” என்று அவருக்காக துஆ செய்தனர். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர் : சலமா இப்னுனனனல் அக்வஃ(ரழி) நூல் : புகாரி

இந்த ஹதீஸ் இறைவனிடம் துஆ செய்யும் விதமாக அமைந்துள்ளது . இதையும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளனர். நல்ல கருத்துள்ள கவிதையையும் நபி(ஸல்) அவர்கள் ரசித்துள்ளனர். இஸ்லாமியர் இயற்றிய கவிதைகளை மட்டுமின்றி, காபிர்கள் இயற்றிய கவிதைகளையும் கூட ரசித்துள்ளனர்.

மாற்றாரின் கவிதைகள்
நான் நபி(ஸல்) அவர்களின் வாகனத்தின் பின்னே அமர்ந்திருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் “உமையா இப்னு அபிஸ்ஸல்த் (இவர் காபிராக இருந்தவர்) என்பவரின் கவிதைகளில் ஏதேனும் உனக்குத் தெரியுமா? என்று கேட்டனர். நான் “ஆம்! தெரியும் என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “எனக்குப் பாடிக்காட்டு!” என்றவுடன் நான் ஒரு கவிதை வரியைக் கூறினேன், “இன்னும் பாடு” என்றனர். மேலும் ஒரு வரியைப்பாடினேன். “இன்னும் பாடு!” என்று அவர்கள் மறுபடியும் கேட்டார்கள். இப்படியே நூறு வரிகளை நான் பாடிக் காட்டினேன்.

அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஷரீத் (ரழி) நூல் : முஸ்லிம்

இவ்வாறு நான் பாடிக்காட்டிய போது, “(உமையா என்ற) அந்தக் கவிஞர் தனது கவிதையின் கருத்தில் இஸ்லாத்தை நெருங்கி விட்டார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஷரீத்(ரழி) நூல் : முஸ்லிம்

“உமையாவின் கவிதை ஈமான் கொண்டுள்ளது. அவரது கல்பு (இதயம்) காபிராக உள்ளது” என்றும் நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல் : பத்ஹுல் பாரி, அல்பிதாயா வன்னிஹாயா

இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணில்லாத வகையில் மாற்று மதத்தவர்களால் இயற்றப்பட்ட பாடல்களையும். எடுத்துச் சொல்லலாம்; கேட்கலாம் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களால் இயற்றப்பட்டு, முஸ்லிம்களால் பாடப்பட்டால் அது இஸ்லாமியப் பாட்டு என்று நம்மவர்களில் பலர் தவறாகக் கருதுகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணாக அமைந்திருந்தாலும் கூட அவை இஸ்லாமிய பாடல்கள் என்று கருதப்படுகின்றன. கவிதையின் கருத்தை அடிப்படையாகக் கொண்டே, இஸ்லாம் கவிதைகளை அங்கீகரிக்கவோ மறுக்கவோ செய்கின்றது. இயற்றுகின்ற, பாடுகின்ற ஆட்களைப் பொறுத்தல்ல. நம்மவரின் கவிதைகள் “நமனை விரட்ட நாகூரில் மருந்து விற்பதாக” கூறினால் “அது இஸ்லாமியக் கவிதை ஆகி விடாது” ஒரு காபிரின் கவிதையில் இஸ்லாமிய போதனைகள் இருக்குமானால், அதை இஸ்லாம் அங்கீகரிக்கின்றது, என்ற உண்மையைத் தான் மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு விளக்குகின்றன. இனி நபி(ஸல்) அவர்கள் கவிபாடி இருக்கிறார்களா என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள் கவி பாடினார்களா?
நபி(ஸல்) அவர்கள் சில கவிதைகள் பாடியதாக ஒரு சில அறிவிப்புகளில் காணப்படுவதை அடிப்படையாகக் கொண்டு நபி(ஸல்) அவர்களுக்குக் கவிதைப் பாடத் தெரியும். கவித்திறமை அவர்களுக்கு உண்டு என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். இப்படிக் கருதிக் கொண்டு பல பொய்யான கதைகளையும் உருவாக்கி விட்டனர்.

‘புர்தா’ போன்ற அரபிக் கவிதையையும், ‘சீறா’ போன்ற தமிழ்க் கவிதையையும் அந்தந்தக் கவிஞர்கள் பாடியபோது நபி(ஸல்) அவர்கள் கனவில் தோன்றி அதை அங்கீகரித்ததாகவும், அந்தக் கவிஞர்கள் கவிதை இயற்றும் வேளையில் அடுத்து எப்படிப் பாடுவது என்று தடுமாறிய போதும் நபி(ஸல்) அவர்கள் அடுத்த அடியை எடுத்துக் கொடுத்ததாகவும் கதைகள் பல உண்டு. அந்தக் கவிதைகளில் எவரும் குறை கண்டு விடக்கூடாது என்று திட்டமிட்டு இப்படி ஒரு பொய்யைச் சொல்லி அதற்கு மிகப்பெரும் மதிப்பை ஏற்படுத்தி விட்டனர். காசிம் புலவர் “திருப்புகழ்” பாடும்போது, ஓரிடத்தில் தடுமாறும் போது, நபி(ஸல்) அவர்கள் “நேரடியாகவே தோன்றி அடுத்த அடியை எடுத்துக் கொடுத்தனர்” என்று கூட  எழுதி வைத்துள்ளனர். (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை இயற்றக் கற்றுக் கொடுக்கவில்லை, அது அவருக்குத் தகுமானதுமல்ல. (அல்குர்ஆன் 36 : 69)

திருக்குர்ஆன் மிகத் தெளிவாகவே நபி(ஸல்) அவர்களுக்கு கவிதை தெரியாது என்றும், அவர்களுக்கு அது தகுதியானதுமல்ல என்றும் சொல்கின்றது. அல்லாஹ் அவர்களுக்கு கவிதையைக் கற்றுத்தரவில்லை என்று தெளிவாகச் சொல்லி இருக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் கவிதைக்குத் திருத்தம் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது குர்ஆனுக்கு முரண்பட்டதாகும்.

நபி(ஸல்) அவர்களுக்கு சொந்தமாகக் கவிதை இயற்றத் தெரியாது என்பது மட்டுமின்றி பிறர் கவிதைகளை உதாரணத்துக்குக் கூறும் நேரங்களில் கூட முறையாகக் கூற மாட்டார்கள். எதுகை, மோனைகளைக் கவனிக்க மாட்டார்கள்.

“பிறர் கவிதையில் எதையாவது நபி(ஸல்) அவர்கள் உவமையாகக் குறிப்பிடுவதுண்டா?” என்று அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது. “கவிதை அவர்களுக்கு மிகவும் பிடிக்காததாகும். சில சமயங்களில் ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துச் சொல்லும்போது, அதன் ஆரம்பத்தைக் கடைசியிலும், கடைசியை ஆரம்பத்திலும் ஆக்கிவிடுவார்கள். அப்போது அபூபக்ரு(ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே!” அந்தக் கவிதை அவ்வாறு இல்லை” என்று சுட்டிக் காட்டினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நான் கவிஞனல்ல. அது எனக்குத் தகுதியானதுமல்ல.” என்று குறிப்பிட்டார்கள் என அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: இப்னுஜரீர், இப்னு அபீஹாதம்

அப்பாஸ் என்ற கவிஞரின் கவிதை ஒன்றை முன் பின்னாக மாற்றிச் சொல்லி, “நீர் தான் இந்தக் கவிதையை இயற்றியவரோ?” என்று அந்தக் கவிஞரிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “நான் அப்படி இயற்றவில்லை” என்று கூறி கவிதையை முறையாகச் சொல்லிக் காட்டினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் “எல்லாம் ஒன்று தான்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்பாஸ்(ரழி) நூல்: பைகஹீ (தலாயில)

பிறர் கவிதையை எடுத்துச் சொல்லும்போது கூட, “யாப்பிலக்கண” அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் கூற மாட்டார்கள் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. அப்பாஸ் என்ற கவிஞர் பற்றிய ஹதீஸில் கருத்தை அடிப்படையாகக் கொண்டே “எல்லாம் ஒன்று தான்” என்று கூறினார்கள். ஆனால் யாப்பிலக்கணப்படி அந்தக் கவிஞர் கூறியதே முறையானது. இவைகளெல்லாம், “நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கவிதை இயற்றும் தன்மையை அறிவித்துக் கொடுக்கவில்லை” என்ற குர்ஆன் வசனத்திற்கு நிதர்சனமான எடுத்துக்காட்டாகும்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் ஓரிருவரிகள் பாடியதாக வந்துள்ளவை தற்செயலாக கவிதை அமைப்பில் அமைந்தது என்றே முடிவு செய்ய வேண்டும். திட்டமிட்டு கவிதை இலக்கண விதிகளின்படி இயற்றினார்கள் என்று கருதக் கூடாது.

கிராமப் புறத்தில் உள்ள மொழியிலக்கணம் அறியாத சிலரது பேச்சுக்கள் கூட சில சமயங்களில் கவிதை அமைப்பில் அமைந்துவிடுவதை இன்றும் நாம் காண்கிறோம். அதனால் அவருக்குக் கவிதை ஞானம் உண்டு என்ற முடிவுக்கு வரமுடியாது. இதை நபி(ஸல்) அவர்களே தெளிவு படுத்தியுள்ளனர்.

நான் என் புறத்திலிருந்து அடிப்படையில், நபி(ஸல்) அவர்கள் சில கவிஞர்களுக்குக் கவிதையைச் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது பச்சைப்பொய் என்று அறியலாம்.

இது கனவில் தானே நடந்துள்ளது. கனவில் எது வேண்டுமானாலும் நடக்கலாமே! என்ற ஐயம் சிலருக்கு இங்கே தோன்றலாம். அது உண்மை என்றாலும், கனவில் எது வேண்டுமானாலும் தோன்றலாம். நபி(ஸல்) அவர்கள் இதிலிருந்து விலக்குப் பெற்றவர்கள் என்பதற்கு ஆதாரமுண்டு.

“யார் கனவில் என்னைக் கண்டானோ அவன் என்னையே கண்டான். என் வடிவத்தில் ஷைத்தான் தோன்ற மாட்டான்” (நபிமொழி)

அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரழி) நூல்: புகாரி: முஸ்லிம்

மற்றவர்கள் தோற்றத்தில் ஷைத்தான் விளையாடுவது போல் நபி(ஸல்) அவர்களுடைய தோற்றத்தில் விளையாட முடியாது. நபி(ஸல்) அவர்கள் வாழும் போது எந்த போதனைகளைச் சொன்னார்களோ, அதற்கு மாற்றமாகக் கனவில் சொல்ல மாட்டார்கள் என்று இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.

அந்த அப்பா பாடலில் அடியெடுத்துக் கொடுத்தார்கள் என்பதும், இந்த இமாமுடைய கவிதையில் பிழைதிருத்தம் செய்தார்கள் என்பதும் வடிகட்டிய – உண்மை கொஞ்சமும் கலக்காத பச்சைப் பொய்களாகும்.

கவிதைகள் பொதுவாக இஸ்லாத்தில் தடுக்கப்படவில்லை என்பதையும், இஸ்லாத்தின் எந்த போதனைக்கு முரண்படாத கவிதைகளுக்கு அங்கீகாரம் உண்டு என்பதையும் இதுவரை நாம் கண்டோம். அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் இதை இரத்தினச் சுருக்கமாக சொல்லி விடுகிறார்கள்.

கவிதையில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. நல்லதை எடுத்துக் கொள்! கெட்டதை விட்டுவிடு!”

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்: புகாரி இமாமின் அல்அதபுல் முஃபரத்

மேலும் எந்தக் கவிஞர்களின் கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி அடி எடுத்துக் கொடுத்தார்கள் என்று கூறப்படுகிறதோ அந்தக் கவிஞர்களின் கவிதைகளில் இஸ்லாத்தின் அடிப்படைக்கும் முரணானவை காணப்படுகின்றன. இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரண்பட்ட, இத்தகைய கவிதைகளை நிச்சயம் நபி(ஸல்) அங்கீகரித்திருக்கவே மாட்டார்கள் என்று நாம் உணரலாம்.

“சீறா” என்ற புராணம் பாடிய உமறு என்பவரின் கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி, அவரது புராணத்திற்கு அங்கீகாரம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரண்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய “சீறாவுக்கு” ஒரு போதும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்திருக்க மாட்டார்கள். மாதிரிக்கு “சீறா”வின் சில கருத்துக்களைக் காண்போம்.

புலவர் உமறு, நபி(ஸல்) அவர்களின் அருமைமகள் பாத்திமா(ரழி) அவர்களுக்கும். அலி(ரழி) அவர்களுக்கும் திருமணம் செய்து வைத்ததைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்.

அந்தத் திருமணச் செய்தி மதீனா நகரெங்கும் முரசறைந்து அறிவிக்கப்படுகிறதாம்! இதைச் செவியுற்ற மதீனா நகரத்து மக்கள்! தங்கள் வீடுகளையும், மாடங்களையும் அலங்கரித்தார்களாம்! தங்கள் வீடுகளின் சுவர்களில் கோலமிட்டார்களாம்! ஒவியம் வரைந்தார்களாம்! தோரணம் கட்டினார்களாம்! பந்தல்கள் போட்டார்களாம்! அந்தப் பந்தல்களில் தொங்கவிடப்படாத பொருட்களே இல்லையாம்! தரை தெரியாத அளவுக்கு மலர்கள் தூவினார்களாம்! தங்கம் வெள்ளிப் பாத்திரங்களில் அறுசுவை உணவுகளைச் சமைத்தார்களாம்!

பெண்கள் புத்தாடை அணிந்து குயில் போல் பாடினார்களாம்! இளைஞர்கள் வீதிதோறும் வாழ்த்துப்பா பாடினார்களாம் முதியவர்கள் தெருத் தெருவாய் குர்ஆனை உரத்த குரலில் ஓதிக்கொண்டு வலம் வந்தனராம்! பின்னர் அலி(ரழி) அவர்கள் குதிரை மீது ஏறி பவனி வந்தார்களாம்! உலகத்தில் உள்ள எல்லா இசைக்கருவிகளும் வரவழைக்கப்பட்டு விண்ணும் மண்ணும் அதிர இசைக்கப்படுகிறதாம்! அலி(ரழி) அவர்களின் பேரழகை கன்னிப் பெண்கள் தம் கடைக்கண்களால் பருகினார்களாம்! அடைந்தால் இவரைப் போன்ற அழகரை அடைய வேண்டும்; இல்லாவிட்டால் செத்து மடிய வேண்டும் என்று எண்ணி ஏங்கினார்களாம்! இவருடைய அழகை பாத்திமா(ரழி) ஒருவர் தானா அடைய வேண்டும் என்று பொறாமைப்பட்டார்களாம்!

இப்படி எல்லாம் கதைவிடுகிறார் உமறுப்புலவர். எந்த வரலாற்று நூலில் இதைப் படித்தாறோ நாமறிவோம். மார்க்கம் அனுமதிக்காத தங்கம், வெள்ளிப் பாத்திரங்களை மதீனா மாநகர மக்கள் (அதாவது சஹாபாக்கள்) பயன்படுத்தியதாக பழி சுமத்துகிறார். கடைக்கண்களால் அன்னிய ஆடவரின் அழகைப் பருகியதாக சஹாபாப் பெண்மணிகள் மீது களங்கம் கற்பிக்கிறார். இசைக் கருவிகளைத் தடை செய்த இஸ்லாத்தில், சஹாபாக்கள் விண்ணும் மண்ணும் அதிர இசைக்கருவிகளை முழங்கச் செய்ததாகக் கூறுகிறார். இந்தக் கருத்துக்களை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்திருப்பார்களா? தம் வாழ்நாளில் எந்தத் தீமைகளை ஒழிக்க நபி (ஸல்) அவர்கள் பாடுபட்டார்களோ அந்தத் தீமைகளை நபி(ஸல்) அவர்களின் பெயராலேயே அரங்கேற்றம் செய்கிறார்.

“தமிழ்க் கலாசாரத்தைக் தழுவி இப்படிப் பாடிவிட்டார்” என்றெல்லாம் சிலர் சமாதானம் கூறலாம். கற்பனைக் கதைகளில் வரும் கதாநாயகர்களைப் பற்றி அவர் இப்படிப் பாடி இருந்தால் இந்த சமாதானத்தை ஏற்கலாம்! கற்பனை என்று ஒதுக்கி விடலாம், பாதுகாக்கப்பட்டட வரலாறாகத் திகழ்கின்ற அல்லாஹ்வின் திருத் தூதரின் வரலாறு தானா இவரது கற்பனைக்கு வடிகாலாக வேண்டும்? நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை முஸ்லிம் சமுதாயம் முழுவதும் பின்பற்றி நடக்கக் கடமைப்பட்டு உள்ளனர். அவர்களின் பெயரால் இப்படி எல்லாம் கதைவிடுவதை ஒரு முஸ்லிம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

நல்ல வேளை! அவர் இருபதாம் நூற்றாண்டில் வாழவில்லை. இப்போது இருந்திருந்தால் அந்தத் திருமண நிகழ்ச்சியை வீடியோவில் பதிவு செய்து உலகில் உள்ள எல்லாத் தொலைக்காட்சி நிலையங்களும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பியதாகவும் பாடி இருப்பார். குதிரையில் பவனி வரச் செய்திருக்க மாட்டார், சொகுசுக் காரில் பவனி வரச் செய்திருப்பார். உலகின் பல பாகங்களிலிருந்தும் மன்னர்கள் விமானம் மூலம் வந்து மதீனாவில் நடைபெற்ற திருமணத்தைக் கண்டு மகிழ்ந்தனர் என்று பாடி இருப்பார். உலகின் எல்லா நாளிதழ்களும் அந்த திருமணச் செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டன என்றும் பாடி இருப்பார்.

இதை விடவும் மோசமான பல கவிதைகள் அதில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தக் கவிதைகளை நபி(ஸல்) அவர்களே அங்கீகரித்துள்ளனர் என்று கூறி இந்தத் தவறுகள் நியாயப்படுத்தப்படுகின்றன. சொன்னதைச் செய்து காட்டிய நபி(ஸல்) இந்தப் பொய் புராணத்தை ஒரு போதும் அங்கீகரித்திருக்க மாட்டார்கள் என்பதே திண்ணம்.

சில தமிழ்க் கவிஞர்கள் இந்த இடத்தில் நம்மீது ஆத்திரப்படலாம். நாம், உமறுப் புலவரின் தமிழறிவையோ, அதன் இலக்கியத் தரத்தையோ விமர்சனம் செய்யவில்லை. அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, அவர்கள் போதித்த போதனைகளுக்கு மாற்றமாக சித்தரித்துக் காட்டியதைத்தான் நாம் விமர்சிக்கிறோம். நபி(ஸல்) அவர்களின் வாழ்வு கூடுதல், குறைவின்றி உள்ளபடி மக்கள் முன் வைக்கப்பட வேண்டும், அவ்வாறு வைக்கப்படவில்லை என்கிறோம்.

உமறுப் புலவரின் சீறாவுக்கு மட்டுமல்ல. இன்னும் பல கவிதைகளுக்கும் கூட நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் வழங்கியதாக கதைகள் பல உண்டு. அவற்றில் உள்ள தவறுகளை நியாயப்படுத்தி உயர்ந்த அந்தஸ்தில் வைத்து மக்கள் போற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இப்படிக் கதைகள் விடப்படுகின்றன.

காசிம் புலவர் என்பவர் நபி(ஸல்) அவர்களின் பெயரில் திருப்புகழ் பாட எண்ணிய போது எப்படித் துவக்குவது என்று அவருக்குத் தோன்றவில்லையாம்! அவரது கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி “பகரும்” என்று முதலடியைத் துவக்கி கொடுத்தார்களாம்! உடனே அவர் “பகருமுருவிலி அருவிலி வெருவிலி” என்று தன் திருப்புகழைத் துவக்கினாராம்!

இவ்வாறு பாடிக் கொண்டு வரும்போது, ஒரு செய்யுளின் இறுதியடியில் “மக்கப்பதிக்கும்” என்று சொன்னாராம்! அடுத்த வார்த்தை அவரது நாவில் வரவில்லையாம்! திரும்பத் திரும்ப “மக்கப்பதிக்கம் மக்கப்பதிக்கும்” என்று புலம்பிக் கொண்டே ஒரு குளத்தில் இறக்கி விடுகிறாராம்! தண்ணீர் தொண்டை அளவுக்கு வந்துவிட்டதால் இனி ஓரடி எடுத்து வைத்தால் அவர் மூழ்கி விடுவார் என்ற நிலையில் நபி(ஸல்) அவர்கள் திருக்காட்சி நல்கி “மக்கப்பதிக்கும் உணர் சொர்க்கம் பதிக்கும் மா இரசூலே” என்று அதனை முடித்துக் கொடுத்தார்களாம்!

இது உமறுப் புலவரின் பெயரால் கூறப்படும் பொய்யைவிட பயங்கரப் பொய்யாகும். உமறுப் புலவருக்கு கனவில் மட்டும் தான். நபி(ஸல்) அவர்கள் வந்ததாக கதை விடப்பட்டது. இவருக்கு கனவில் தோன்றி ஆரம்பித்துக் கொடுத்ததோடு நேரடியாகவும் நபி(ஸல்) அவர்கள் திருக்காட்சி நல்கினார்கள் என்று பச்சைப் பொய் சொல்லப்படுகிறது.

நபி(ஸல்) அவர்கள் நேரடியாகவே இவருக்குத் திருக்காட்சி நல்கியதாக ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்? நபி(ஸல்) அவர்கள் திருக்காட்சி நல்குவார்கள் என்றால், இந்த சமுதாயத்தில் பல பிளவுகள் போர்க்களங்கள் ஏற்பட்ட போது திருக்காட்சி நல்கி சமுதாய ஒற்றுமைப் படுத்தி இருக்க மாட்டார்களா? (“நபி(ஸல்) அவர்கள் எவருக்கும் நேரடியாக திருக்காட்சி நல்க மாட்டார்கள்” என்பதற்கு விரிவான ஆதாரங்களுடன் இதே தொடரில் முன்னர் நாம் விளக்கினோம்.)

கொஞ்சம் சிந்தித்தாலே இது பச்சைப் பொய் என்பதை எவரும் உணரலாம்! இவர் நபி(ஸல்) அவர்களை “மக்கப்பதிக்கு ரசூல்” என்கிறார். ஆனால் அல்லாஹ், தன் திருமறையில் “உலக மக்கள் அனைவருக்கும் ரசூல் என்கிறான்.

(உலக) மக்கள் அனைவருக்குமே நாம் உமமைத் தூதராக அனுப்பியுள்ளோம். (அல்குர்ஆன் 34 : 28) அகில உலகுக்கும் அருட்கொடையாக உலக மாந்தர் அனைவருக்கும் அல்லாஹ்வின் திருத்தூதராக அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் மக்கப்பதிக்கு மட்டும் தூதர் என்று ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்?

அடுத்து “சொர்க்கம் பதிக்கும் ரசூல்” என்கிறார். சொர்க்கத்தில் ஏவல், விலக்கல் எதுவும் கிடையாது. உள்ளம் விரும்பக் கூடியதெல்லாம் சொர்க்கத்தில் உண்டு (அல்குர்ஆன் 43 :71) அல்லாஹ்வை நேரடியாகவே காணுகின்ற பெரும் பேறு சுவனத்தில் உண்டு (அல்குர்ஆன் 75 : 23) என்பது திருக்குர்ஆன் மூலம் நிருபணமாகின்றது. அங்கே ஏவல், விலக்கலைச் சொல்லித்தர தூதர்கள் இல்லை. விரும்பியபடி நடந்து கொள்ளலாம்! இவரோ “சொர்க்கப் பதிக்கும் இரசூலே” என்கிறார். ‘மக்கப்பதிக்கு ரசூல்’ என்று சொன்னதன் மூலம் நபி(ஸல்) அவர்களைக் குறுகிய வட்டத்துக்குத் தூதராக்குகிறார் “உயர் சொர்க்கப் பதிக்கும் இரசூல்” என்று இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டுகிறார். அந்தப் புலவர், தானே இப்படிப் பாடியதாகக் கூறப்பட்டால், அவரது அறியாமை என்று ஒதுக்கி விடலாம். அல்லாஹ்வின் திருத்தூதர்(ஸல்) அவர்களே இந்த அடியை எடுத்துக் கொடுத்தார்கள் என்றால் எவ்வளவு பெரிய பழியை நபி(ஸல்) அவர்கள் மீது சுமத்துகிறார்.

அதே திருப்புகழில், இவர் செய்த விபச்சாரத்துக்கும், மது அருந்தியதற்கும், கொலை செய்ததற்கும், களவு செய்ததற்கும். அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்ட இவர், அக்குற்றங்களையெல்லாம் மன்னிக்கும்படி அல்லாஹ்வின் தூதரிடம் வேண்டுகிறார்.

வறுமையென்னும் படர் தீயாலே

எனதுடலினுறும் பிணி நோயாலே – பசி

வலியடுமின் சுவை ஊணாலே – இடை

புனையாடை வகையது ஒன்றும் இலாதாலே

கொலை களவு பொய் குண்டுணி கோளாலே -தினம்

வறிதில் நிறைந்திடு தாழ்வாலே – விலை

மடமானார் உறவு செய்தின்புறுமாலாலே

கொடுமறநெறி வஞ்சனை சூதாலே -தனி

உலகில் உழன்று அவமே வாழ்நாளில்

உறைவேனோ உறுபகையின் கொடியேனானாலும்

நின்னடிமையை நின்கைவிடாதோமா மனம்

உருகி இரங்கிவினோர்மேல் வீடினி – அருள்வாயே!

என்று பாடி அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் கருத்தை உதிர்க்கிறார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை எப்படி அங்கீகரித்திருப்பார்கள்? எந்த ஷிர்கை வேரறுக்க அனுப்பட்டார்களோ அதே ஷிர்கை ஒரு போதும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்க மாட்டார்கள்.

இதுபோல் ஆலிப்புலவர் என்பவர் ‘மிராஜ் மாலை’ என்று ஒரு காப்பியம் இயற்றி அதைக் கோட்டாறு என்ற ஊரில் அரங்கேற்றினாராம். பாடிக் கொண்டே பின்வரும் வரிகளைச் சொன்னாராம்!

நாலாம் வானமிலங்கும் ஞானரத்ன மஃமூரில்

வாலாயமாய் வீற்ற வான்பரியை – கோலத்தூண்

தான் துளைத்துக் கட்டியரோ தாஹா

சென்றாரைந்தாம் வானகத்தின் உள்ளே மகிழ்ந்து

என்ற வெண்பாவைப் பாடினாராம்.

(கருத்து :- புராக் வாகனத்தின் மிஃராஜ் செல்லும் போது மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளியில் உள்ள ஒரு தூணில், தம் விரல்களால் துளையிட்டு அதில் புராக் வாகனத்தைக் கட்டிவிட்டு ஐந்தாம் வானம் சென்றார்கள்.)

இதைப் பாடியபோது நபி(ஸல்) அவர்கள் உடனே விஜயம் செய்து “புலவரே! அந்தச் செய்தி எனக்கும், என்னுடன் வந்த ஜிப்ரீலுக்கும் தானே தெரியும்! உமக்கெப்படித் தெரிந்தது?” என்று கேட்டார்களாம்; அதற்கு அவர் “அண்ணலே! இயல்பாகவே, என்வாயில் அப்படி வந்து விட்டது” என்று சொல்லி உடனே மூர்ச்சையுற்று கீழே விழுந்து விட்டாராம்.

இதற்கு என்ன ஆதாரம்? என்று நம்மில் எவரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக முன் ஜாக்கிரதையாக அணை போடுகின்றனர். இந்தப் பொய்யை அல்லாஹ்வின் தூதர் அவர்களே அங்கீகரித்து விட்டதாகச் சொல்லி விட்டால் எல்லோருடைய வாயையும் அடைத்து விடலாம் என்று திட்டமிட்டு இப்படிக் கதை கட்டியிருக்கிறார்கள்.

இன்றவளவும் கோட்டாறு மக்களில் சிலர் “நபி(ஸல்) அவர்கள் கோட்டாறுக்கு விஜயம் செய்ததாக நம்புகின்றனர். மிஃராஜ் மாலையைப் புனிதமாகக் கருதி, அங்கே விழாக்களும் நடத்தி பக்திபரவசமாகப் பாடுகின்றனர்.

ஆக, கடந்த காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த முஸ்லிம் கவிஞர்களில் விரல்விட்டு எண்ணப்படும் சிலரைத்தவிர, பெரும்பாலோர் தங்கள் கற்பனையில் தோன்றியதை எல்லாம் இஸ்லாத்தின் பெயரால் கவிதைகளாகத் தந்துள்ளனர்.

அந்தத் தவறுகளை மக்களும் மார்க்க அறிஞர்களும் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக, நபி(ஸல்) அவர்களே இவற்றை அங்கீகரித்து விட்டதாகச் சொல்லி வாயடைத்தனர்.

இந்தக் கவிதைகளின் கருத்துக்களைக் காணும்போது, நபி(ஸல்) இவற்றைக் கனவிலோ நேரிலோ அங்கீகரித்திருக்க மாட்டார்கள் என்பது தெளிவு. நபி(ஸல்) அவர்களுக்குக் கவிபாடத் தெரியாது என்று குர்ஆன், ஹதீஸ் மூலம் நாம் ஏற்கனெவே நிரூபித்ததன் அடிப்படையிலும் இவை பொய்யேயன்றி வேறில்லை என்று உணரலாம்.

மவ்லிதுகள், கவிதை என்ற காரணத்துக்காக மறுக்கப்படவில்லை என்பதை இதுவரைக் கண்டோம். இனி மவ்லிது மறுக்கப்படுவதற்கான காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்
தொடரும்.....
நன்றி: ரீட்இஸ்லாம்.நெட்


ஓதுவோம் வாருங்கள்! -2


நமது முன்னோர்கள்

“பெரிய, பெரிய மேதைகள் எல்லாம் செய்திருக்கிறார்களே” என்ற பதில் சரியானதன்று என்பதை நாம் தெரிந்து கொண்டோம். குறிப்பாக நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் எனப்படுவோரில் பெரும்பாலோர் அறிஞர்களாக, குர்ஆன் ஹதீஸை அறிந்தவர்களாக இருந்திருக்கவில்லை. மாறாக அரபுத்தமிழ் படித்துவிட்டுத் தங்களை அறிஞர்கள் என்று காட்டிக் கொண்டனர். தெளிவான சிந்தனை அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அதனால்தான் “ஆங்கிலம் படிப்பது ஹராம்” என்று ‘பத்வா’ வழங்கினார்கள். முழுக்கால்சட்டை (பேண்ட்) அணிவது கூடாது என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள் முடி வளர்த்திருக்க, நபித்தோழர்களில் மிகப் பெரும்பாலோர் முடி வளர்த்திருக்க, இவர்கள் மொட்டை அடிப்பதை மார்க்கமாக்கினார்கள். பல இளைஞர்கள் நாத்திகத்தை நோக்கிச் செல்வதற்கு இது போன்ற ஆதாரமற்ற தீர்ப்புகளே காரணங்களாயின.

“முஸ்லிம்களில் பலர் கோவில்களுக்குச் செல்லத் துவங்கிவிட்டனர்” என்று காரணம் காட்டி சமாதிகளைக் கோவில்களாக்கினர். “கோவில்களுக்கு முஸ்லிம்கள் செல்வதைத் தடுத்துவிட்டோம்” என்று கூறிக் கொண்டனர். இஸ்லாத்திற்குள்ளேயே பல தெய்வ வணக்கத்தை ஏற்படுத்தியதை அவர்கள் உணரவில்லை.

தேர்த்திருவிழாக்களுக்கு முஸ்லிம்களும் சென்று தேர் இழுக்கத் துவங்கி விட்டதைக் கண்ட அந்த முன்னோர்கள், “நீங்கள் அங்கே செல்ல வேண்டாம்! இங்கேயே நாம் தேர் இழுப்போம்!” என்று தர்ஹாக்களில் தேர்களைப் பவனிவரச் செய்தனர் – அந்தக்காலத்து அறிஞர்கள். (?)

கடவுள் சிலைகளுக்குப் பால் அபிஷேகம் செய்வதைக் கண்டவர்கள், இங்கே சமாதிகளுக்கு சந்தன அபிேஷகம் செய்யத்தூண்டினர்; அங்கே ‘துவஜாரோகனம்’ என்ற பெயரில் கொடியேற்றினால் இங்கேயும் கொடியேற்றம்.

அங்கே கதாகலேட்சேபம், வில்லுப்பாட்டு என்று நடந்து கொண்டிருக்க, இங்கே அதே அமைப்பில் நூறுமஸாலா அப்பாஸ் நாடகம் என்ற பெயர்களில் இஸ்லாத்திற்குச் சம்பந்தம் இல்லாத கட்டுக் கதைகள் அரங்கேற்றினார்கள். இதற்கெல்லாம் காரண கர்த்தாக்கள் இந்த முன்னோர்களே.

சாவு வீட்டில் திதி, திவசம் என்று பணம் பறிக்கும் மோசடியை மூன்றாம், ஏழாம், நாற்பதாம் பாத்திஹா என்ற பெயரில் இங்கே உருவாக்கினர். தங்கள் தொப்பையை அதன்மூலம் வளர்த்துக் கொண்டனர்.

திருனீறு, விபூதி என்று அங்கே வழங்கப்பட்டால், இங்கே அதே பக்தி சிரத்தையுடன், காய்ந்து போன பூக்களையும் சாம்பிராணிச் சாம்பலையும் ‘தப்ரூக்’ என்ற பெயரில் வழங்கத் துவங்கினர், அன்றைக்கு அறிஞர்கள் என்று பெயர் வாங்கியவர்கள்.

அங்கே இறந்து போனவர்களுக்காகப் பலவிதமான உணவு பொருட்களை வைத்துப் படையல் செய்யப்படுவதற்கு ஈடாக இங்கே பாத்திஹா என்ற பெயரில், படையலை உண்டாக்கியவர்களும் அன்றைய அறிஞர்களே!(?)

அவர்கள் தெய்வங்களுக்குப் பூ, பழம், தேங்காய், சூடம் என்று காணிக்கை செலுத்தப்படுவதற்குப் பதிலாக இங்கே சர்க்கரை ஊதுபத்தி என்று ஏற்படுத்தினார்கள். அங்கேயும் உண்டியல் இங்கேயும் உண்டியல்!

தாயத்துக் கட்டுவதையும், தகடுகள் எழுதுவதையும், நூல் முடிவதையும் அங்கிருந்து கற்றுக் கொண்டனர். பெயர் சூட்டுவதும் திருமணம் நடத்துவது, மரணச் சடங்குகள் நடத்துதல், கட்டிடங்களுக்கு அஸ்திவாரம் இடுதல், நிலை வைத்தல், புதுமனை புகுவிழா மற்றும் பெண்கள் பருவம் எய்துதல், வெளியூர்ப் பயணம் செல்லல் போன்றவற்றுக்குச் சில சடங்குகளை உருவாக்கி, “புரோகிதர்கள் இல்லாமல் அவற்றைச் செய்ய முடியாது” என்று அங்கே உள்ளது போல் இங்கேயும் புரோகிதர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டவர்களும் இந்த அறிஞர்களே.

இப்படி எல்லாம் தங்கள் மார்க்கத்தைப் புரோகிதர்களிடமிருந்து கற்றுக் கொண்டு அதனை இஸ்லாம் என்ற ‘லேபிளி’ல் பரவச் செய்தனர். குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் இவர்கள் தங்கள் மார்க்கத்தைக் கற்றிருக்கவில்லை.

அதனால் தான், சில பைத்தியக்காரர்களைக் கூட ‘மஸ்தான்கள்’ என்று பட்டம் சூட்டி மக்கள் வழி தவறும்போது மவுனம் சாதித்தனர். அங்கே தீட்சை வழங்குவது போல், இங்கே முரீது வியாபாரத்தைச் சிலர் துவக்கியபோது, மவுன விரதத்தை மேற்கொண்டனர். எத்தனையோ கிஸ்ஸாக்கள் இஸ்லாத்தின் பெயரால் விற்பனையாகிக் கொண்டிருந்தபோது அதற்கு எதிராக, வாய் திறவாமல் இருந்தனர். அவ்லியாக்களின் வாரிசுகள் என்று, கஞ்சா அடித்துக் கொண்டு பக்கிரிசாக்கள் ஊர்ஊராக வலம் வந்து மக்களை ஏமாற்றியபோதும் அதைப் பற்றி வாய் திறந்ததில்லை இவர்கள்.

தமிழ் மக்கள் இஸ்லாத்தை முழுமையாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, குர்ஆனையும் நபிமொழிகளையும் தமிழில் தராமல் மறைத்ததும் நமது முன் அறிஞர்களே.

ஆண்களும், பெண்களும் கலந்து, ஒட்டி உரசிக் கொள்ளும் சந்தனக்கூடு நிகழ்ச்சிக்குத் தன் மனைவி மக்களை அழைத்துச் சென்ற மிகப் பெரிய அரபிக் கல்லூரி முதல்வர்களும் இருந்திருக்கிறார்கள். கந்தூரியன்று நடக்கும் பல தீமைகளில் தாமும் இரண்டறக் கலந்து கொண்ட மிகப்பெரும் (?) அறிஞர்களும் இருந்திருக்கின்றனர். அவர்களை இன்றைக்குக்கூட “பெரிய ஹஜ்ரத்” என்ற லேபிளில் தான் மக்கள் குறிப்பிடவும் செய்கின்றனர்.

கப்ருக்களுக்குக் கட்டிடம் கட்டும் விழாவுக்கும் அதன் திறப்பு விழாவுக்கும் தலைமை தாங்கிய ஆலிம்களும் இருந்திருக்கின்றனர்; இருக்கின்றனர். தங்கள் வயிறு நிறைவதற்காக எது செய்யவும் தயாராக இருந்தவர்கள் கடந்த காலத்தில் அறிஞர்கள் என்ற பெயரில் உலா வந்தவர்களில் பெரும்பாலோர்.

இத்தகையவர்களைப் பின்பற்றினால் எப்படி நேர்வழி அடைய முடியும்? எனது சொந்த ஊரில் நடந்ததாகப் பெருமையோடு மக்கள் பேசிக்கொள்ளும் ஒரு நிகழ்ச்சியை இங்கே நினைவுபடுத்துகிறேன். பள்ளிவாசலும் ஒரு சமாதியும் அருகருகே இருக்கின்றன. சமாதியில் ஒரு கந்தூரி விழா! அதில் மவ்லிது நடந்ததாம். அதில் ஒரு அவ்லியா கலந்து கொண்டாராம். மாலை நான்கு மணிக்குத் துவங்கிய மவ்லிது இரவு ஒன்பது மணிக்கு முடிந்ததாம். அதுவரை அந்த அவுலியா மவ்லிதில் லயித்திருந்தாராம். இடையில் எழுந்திருக்கவே இல்லையாம். இதைப் பெருமையாக எனது ஊர் மக்கள் இன்றளவும் பேசுகின்றனர். அருகே இருக்கின்ற பள்ளியில் அஸர் தொழுகை நடக்கின்றது! அவுலியா வரவில்லை; பின்னர் மஃரிபு தொழுகை நடக்கின்றது! அவுலியா வரவில்லை; இஷாஜமாஅத் நடக்கிறது! அவுலியா அதில் கலந்து கொள்ளவில்லை. அவர் மவ்லிதில் லயித்துப் போய் இருக்கிறார். இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களைத்தான் நாம் மகான்கள், மேதைகள் என்று ஏமாந்து போய்க் கொண்டிருக்கிறோம். தொழுகையை விட, ஒருவன் மனதைப் பாடல்கள் கவருமானால் அவன் எப்படி இறை நேசனாக இருக்க முடியும்?

நான் எல்லா ஆலிம்களையும், ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டவில்லை. மிகப் பெரும்பாலோர் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். தங்கள் வருவாய் ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு மார்க்கத்தைச் சீரழித்த இந்த முன்னோர்களைப் பின்பற்றுவதால் எப்படி நேர்வழி அடைய முடியும்? எண்ணிப் பாருங்கள்.

அவர்கள் நரகவாதிகளா?
சதகத்துல்லா அப்பா போன்ற ஞான மேதைகள் தானே இதனை இயற்றினார்கள். அவர்கள் நரகவாதிகளா என்ற ஒரு கேள்வியும் இங்கே கிளம்புகிறது. ஒரு மனிதர் இறந்து போய்விட்டால், அவர் பெயரால் சில மோசடிக்காரர்கள் கதைகளைச் கட்டிவிடுவார்கள். அப்போதுதான் அவர்கள் வியாபாரம் நடக்கும் நல்லவர்கள் இதனைச் செய்திருக்கமாட்டார்கள்.

அப்படியே செய்திருந்தாலும் அவர்கள் நரகவாதிகளா? சொர்க்கவாதியா, என்று நாம் முடிவு எடுக்க வேண்டிய அவசியமில்லை. அவன் நாடினால் மன்னிக்கலாம்! அல்லது தண்டிக்கலாம்! “நாம் நரகவாதியாக ஆகாமல் இருக்க என்ன சேய்ய வேண்டும்” என்பதைத் தான் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:-

அந்த சமூகத்தினர் சென்று விட்டனர். அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே! நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தததைப் பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். -அல்குர்ஆன் 2:134,141.

இந்தத் திருவசனத்திலிருந்து “முன்னோர்களில் தனிப்பட்ட நபர்களைப் பற்றி நாம் எந்த முடிவும் எடுக்க வேண்டிய அவசியமில்லை” என்று இறைவன் உணர்த்துகிறான்.

நமது காரியங்கள் குர்ஆன், ஹதீஸ் வழியில் அமைத்துக் கொண்டு செல்ல வேண்டியது தான் நமது கடமை. முன்னோர்கள் நல்லவைகளைச் செய்திருந்தால் அதற்கான பரிசுகள் நமக்குக் கிடைக்கப் போவதில்லை; அவர்கள் தீமையைச் செய்திருந்தால் அதற்கான தண்டனைகளையும் நாம் அனுபவிக்கப் போவதில்லை. நமது செயல்களை நாம் திருத்திக் கொள்வோம். இதுவரை நாம் எழுதியவற்றிலிருந்து , “முன்னோர்” என்ற மாயை தவறானது என்று புரிந்து கொண்டோம்.

மார்க்கப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இருப்பவர்கள். அதனை நியாயப்படுத்துபவர்கள் இந்த உலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இல்லை, ஆயிரம் முறை பரிசீலனை செய்து “தங்களுக்கு நல்லது” என்று தெரிந்தால் மட்டுமே, உலக பிரச்சனைனனனகளில் முன்னோர்களைப் பின்பற்றுகின்றார்கள்.

‘முன்னோர்கள் கால்நடையாகப் பல நூறு மைல்கள் பயணம் செய்தார்கள்’ என்பதற்காக எவரும் இன்று அவ்வாறு பயணம் செய்யத் தயாராக இல்லை. அன்று மண்ணென்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தினார்கள் என்பதற்காக, இன்று எவரும் மின் விளக்குகளைப் பயன் படுத்தாமலில்லை. முன்னோர் மண் குடிசையில் வாழ்ந்தார்கள் என்பதற்காக, இன்று எவரும் உறுதிவாய்ந்த கட்டிடங்களைக் கட்டிக் கொள்ளாமலில்லை.

‘பெரியார்கள் சொன்னார்கள்’ என்பதற்காக மார்க்கப் பிரச்சனைகளில் அவர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இருப்பவர்கள், உலகப் பிரச்சனைகளில் பெரியார்களைக் மூடிப் பின்பற்றத் தயாராக இல்லை. மாறாக, பலமுறை பரிசீலனை செய்து தங்களுக்குப் பயன் தந்தால் மட்டுமே பெரியார்களைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். ‘நம்மிடம் இருக்கின்ற மதிப்பு மிக்க ஒரு பொருளைக் சாக்கடையில் எறியும்படி, ஒரு பெரியார் சொன்னால் நாம் அதனை நிறைவேற்ற முன் வருவதில்லை. ஆனால் மார்க்க பிரச்சனைகளில் மட்டும் அவ்வாறு பரிசீலனை செய்ய நம்மில் பெரும்பாலோர் தயாராக இல்லை. இந்த முரண்பாட்டுக்குக் காரணம் என்ன? என்ன?

இந்த உலகப் பொருட்கள், அவைகளால் ஏற்படும் பயன்களைப் புரிந்து வைத்துள்ள அளவு, அவற்றின் மதிப்பை நாம் உணர்ந்து வைத்துள்ள அளவு மறு உலகப் பொருட்களின் மதிப்பையோ, நமது வணக்கத்தின் மதிப்பையோ நம்மவர்கள் உணர்ந்திருக்கவில்லை என்பது தான் இதற்குக் காரணமாகும்.

“மவ்லிது ஓதலாம், ஓத வேண்டும்” என்று கூறுபுவர்களின் முதல் ஆதாரமான முன்னோர்கள் மீது வைத்துள்ள குருட்டு நம்பிக்கை குர்ஆனின் தெளிவான வசனங்களால் தகர்த்தெறியப்பட்ட பின்பும் தங்கள் மனோ இச்சையை சிலர் விடுவதற்குத் தயாராக இல்லை. மாறாக அதை எப்படியேனும் நியாயப்படுத்திட பொருத்தமற்ற காரணங்களைக் கூறுகின்றனர்.

முன்னோர்களைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றுவதைக் கண்டிக்கும் குர்ஆன் வசனங்கள் தங்களுக்குப் பொருந்தாது. அவை காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்கள். “காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, எங்களைப் போன்ற மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா?” என்றும் கேட்கின்றனர். இந்தக் கேள்வி எவ்வளவு தவறானது? என்பதையும், அவர்களின் கேள்வியிலேயே அவர்களுக்கு பதிலும் அமைந்துள்ளது என்பதையும் பார்ப்போம்.

“அல்லாஹ் இறக்கியருளியவற்றின் பாலும் (அவன்) தூதரின் பாலும் வாருங்கள்!” என்று அவர்களுக்குச் சொல்லப்படும் போது, எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 5: 104)

“குர்ஆனையும், நபிவழியையும் பின்பற்றுங்கள்!” என்று சொல்லப்பட்ட போது “எங்கள் முன்னோர்களையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று காபிர்கள் சொன்னார்கள். அதில் சந்தேகமில்லை. இதுபோன்ற வசனங்கள் காபிர்கள் பற்றியே இறங்கியது என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் இப்படிச் சொன்னதால் தான் காபிர்கள் என்ற பெயரைப் பெற்றோர்களேயன்றி, காபிராகவே பிறக்கவில்லை. முஸ்லிம், காபிர் என்ற பேதம் பிறப்பால் உருவாவது அல்லவே! எந்த வாதத்தை எடுத்து வைத்ததினால் ஒரு சமுதாய மக்கள் காபிர்களானவர்களோ – அவர்கள் காபிர்களாக ஆனதற்கு எது காரணமாக இருந்ததோ -அதை முஸ்லிம்கள் (என்ற தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள்) எப்படி எடுத்து வைக்க முடியும்?

“ஒரு கருத்தை ஒரு சமுதாயம் சொன்னால் அது மாபாதகமாம்! அதே கருத்தை இன்னொரு சமுதாயம் சொன்னால் அதில் தவறு ஏதும் கிடையாதாம்!” இது எந்த வகையில் நியாயமாகும்? இறைவனின் தீாப்பு இந்த அடிப்படையில் தான் இருக்கும் என்று எண்ணுகிறார்களா?

முஸ்லிம்கள் என்றால் நபிமார்களும், அவர் தம் தோழர்களும் எந்த வாதங்களை எடுத்து வைத்தார்களோ அவற்றை மட்டும் எடுத்து வைக்க வேண்டும்! பிர்அவ்னும். நம்ரூதும், அபூஜஹ்லும் நபிமார்களின் எதிரிகளும் எடுத்து வைத்த வாதத்தை ஒரு முஸ்லிம் எப்படி எடுத்து வைப்பான்?

“நான் தான் உங்களின் மிகப் பெரும் கடவுள்” என்று பிர்அவ்ன் சொன்னான். அது குற்றம். “நாங்கள் முஸ்லிம்களாக இருப்பதால் நாங்கள் இதே வார்த்தையைப் பயன்படுத்துவோம். இது குற்றமாகாது” என்று இவர்கள் சொல்லப் போகிறார்களா?

“வேதங்களில் சிலவற்றை நாங்கள் நம்புவோம்! சிலவற்றை நிராகரிப்போம்!” என்று யூதர்கள் தான் சொல்லக் கூடாது! நாங்கள் இதே வார்த்தையைச் சொல்லலாம் என்று எண்ணுகிறார்களா?

ஈஸாவை அல்லாஹ்வின் குமாரர் என்று கிறிஸ்தவர்கள் சொன்னால் தான் தவறு. நாங்கள் முஸ்லிம்களாக உள்ளதால், அப்படிச் சொல்ல எங்களுக்கு அனுமதி உண்டு” என்று கருதுகிறார்களா?

“நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள்” என்று மக்கத்து காபிர்கள் சொன்னார்கள். அது தவறு. நாங்கள் தான் முஸ்லிம்களாயிற்றே! இதே வார்த்தையை நாங்கள் சொல்லலாம் என்று கூறப்போகிறார்களா? அப்படியானால் முஸ்லிம், காபிர், என்ற வேறுபாடு பிறப்பை அடிப்படையாகக் கொண்டது என்று அவர்கள் காட்ட முற்படுகிறார்கள். முஸ்லிம் குடும்பத்தில் ஒருவன் பிறந்து விட்டால் அவன் இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லலாம்! அவன் காபிர் குடும்பத்தில் பிறந்து விட்டால் அவன் இப்படிச் சொல்லக் கூடாது என்று அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள். நபிமார்களில் சிலரின் மக்கள் ஏன் காபிரானார்கள்? என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கட்டும்! இது போன்ற வாதங்களில் கடுகளவும் நியாயமே இல்லை. சிந்தனை உடையவர்களிடம் இது அறவே எடுபடக் கூடியதுமல்ல.

திருமறைக் குர்ஆனில், காபிர்கள், யூதர்கள், கிறித்துவர்கள் சில தனி நபர்களின் தவறான வாதங்களை அல்லாஹ் எடுத்துச் சொல்லியிருப்பது “நாம் அதனைச் சொல்லக் கூடாது” என்பதை உணர்த்திடத்தான். அறிவுடையோர் அப்படித்தான் புரிந்து கொள்வார்கள். ஏனென்றால் இந்தக் குர்ஆன் கியாமத் நாள் வரை மக்களுக்கு வழி காட்டக் கூடிய வகையில் அருளப்பட்டது. ஒரு காலத்தோடு அதன் போதனை, எச்சரிக்கை முடிந்து விடவில்லை.

ஒரு வாதத்திற்காக அவர்களின் இந்தத் தவறான கூற்றை ஏற்றுக் கொண்டால், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற இன்னபிற கடமைகள். கட்டளைகள் எல்லாம் ஸஹாபாக்களுக்கு இறங்கியது நமக்கு அல்ல. என்றும் கூற வேண்டி வருமே! (அல்லாஹ் காப்பாற்றுவானாக)

எனவே இது போன்ற பொருந்தாக் காரணங்களைக் கூறி தங்கள் நிலைமையை நியாயப் படுத்துவதைத் தவிர்த்து குர்ஆன், ஹதீஸ் கட்டளைகளுக்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டும். அல்லாஹ் அந்த மனப்பான்மையை நமக்குத் தந்தருள்வானாக!

இதுவரை மவ்லிது ஆதரவாளர்களின் முதல் ஆதாரத்தை அலசினோம். இனி அவர்களின் இரண்டாம் ஆதாரத்தைப் பார்ப்போம். -வளரும்- இன்ஷா அல்லாஹ்

இரண்டாவது ஆதாரம்
கவிதைக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. மவ்லிது என்பது கவிதையாக உள்ளதால் அதை ஓதக் கூடாது என்று மவ்லிது மறுப்பாளர்கள் கூறவில்லை. மாறாக வேறு பல காரணங்களின் அடிப்படையில் தான் அதை மறுக்கின்றனர்.

ஆனால் மவ்லிது ஆதரவாளாகள், மக்களை திசை திருப்பும் எண்ணத்தில் இஸ்லாம் சில கவிதைகளுக்கு வழங்கியுள்ள அனுமதியை அதற்குரிய ஆதாரங்களை எடுத்து வைத்து, நபி(ஸல்) அவர்களே கவிதையை அங்கீகரித்துள்ளனர்” என்பதால் தாராளமாக மவ்லிது ஓதலாம் என்கின்றனர்.

“கவிதை” என்ற காரணத்துக்காக மவ்லிதை நாம் மறுக்கவில்லை. வேறு பல காரணங்களுக்காகவே மவ்லிது மறுக்கப்படுகின்றது. மறுப்பத்குரிய காரணங்கள் இருக்குமானால், வசனமாக இருந்தாலும் நாம் மறுப்போம். எனவே கவிதைக்கு இஸ்லாம் வழங்கியுள்ள அனுமதியை, இன்றைய மவ்லூதுகளை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்துவது பொருந்தாததாகும்.

அதை விரிவாகப் பார்ப்பதற்கு முன், கவிதை பற்றி இஸ்லாத்தின் நிலையைத் தெரிந்து கொள்வது பிரச்சனையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவும்.

கவிதையும், கவிஞர்களும்
கவிஞர்களை வழி கெட்டவர்கள் தான் பின்பற்றுகின்றார்கள். “நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகின்றனர்”. என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அவர்கள் செய்யாத காரியங்களை (செய்ததாக) கூறுகின்றனர். (அல்குர்ஆன் 26 : 224, 225, 226)

இந்தத் திருக்குர்ஆன் வசனம் “கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் இல்லை, அவர்கள் பொய்கள் பல கூறுபவர்கள்” என்று நமக்குத் தெளிவு படுத்துகின்றது.

“உள்ளங்களில் ஒருவனின் உள்ளத்தில் கவிதை நிரம்பியிருப்பதை விட, அவனது உள்ளத்தில் ‘சீழ்’ நிரம்பி இருப்பது மேலானது” என்பது நபிமொழி

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, தாரமீ

நபி(ஸல்) அவர்களுடன் ‘அர்ஜ்’ என்ற ஊருக்கு நாங்கள் சென்று கொண்டிருந்த போது, கவிதை இயற்றிக் கொண்டு ஒரு கவிஞர் தென்பட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “இந்த ஷைத்தானைப் பிடியுங்கள்! உங்களில் ஒருவரது உள்ளம் கவிதையால் நிரம்பி இருப்பதை விட ‘சீழ்’ நிரம்பி இருப்பது மேலானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயிதுல் குத்ரீ (ரழி) நூல் : முஸ்லிம்

மேற்கூறிய திருக்குர்ஆன் வசனமும், இரு நபி மொழிகளும், கவிஞர்களையும், கவிதைகளையும் கடுமையாகக் கண்டனம் செய்கின்றன. இதிலிருந்து கவிதையை இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை என்று தெரிகின்றது. எனினும் இந்தக் கண்டனம் எல்லாக் கவிஞர்களுக்கும், எல்லாக் கவிதைகளுக்கும் பொருந்தாது. அதற்குரிய ஆதாரங்களைப் அடுத்து பார்ப்போம்.
தொடரும்.....
நன்றி: ரீட்இஸ்லாம்.நெட்


ஓதுவோம் வாருங்கள்! -1


இன்றைக்கு மவ்லிது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தமிழகத்தில் விறுவிறுப்படைந்தள்ளன. பல்லாண்டுகாலமாக தமிழகம், கேரளம், இலங்கையில் இரண்டாவது கருத்துக்கு இடமினிறி புனிதமான ஒரு வணக்கமாகக் கருதப்பட்டு வந்த “மவ்லிது” இன்று படாத பாடு படுகின்றது.

மார்க்க அறிஞர்களில் ஒரு பிரிவினர், “மவ்லிது ஓதலாம்! ஓத வேண்டும்!” என்று ஒரு புறம் கூப்பாடு போடுகின்றனர். மார்க்க அறிஞர்களில் மற்றொரு பிரிவினர், “மவ்லிது ஓதக்கூடாது!” என்று எதிர் முழக்கம் செய்கின்றனர். இருதரப்பினமே தங்களின் கருத்துக்கு ஆதாரங்களை எடுத்துவைத்து, அதனை நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

“இஸ்லாத்தைப் போதிக்கிறேன்” என்று புறப்பட்டுவிட்ட சில பத்திரிக்கைகள் “மவ்லிது ஓதலாம்! ஓத வேண்டும்!” என்று தொடர் கட்டுரைகள் எழுதத் துவங்கி விட்டன.

எந்த உலமாக்களால் மவ்லிது மீது பக்தி ஊட்டப்பட்டதோ, எவர்களால் “மவ்லிது புனிதமானது” என்ற எண்ணம் வளரத் துவங்கியதோ எவர்கள் இன்றளவும் அதற்குத் துணை போய்க்கொண்டிருக்கிறார்களோ அந்த உலமாக்கள் சபை – அதாவது தமிழ் மாநில ஜமாஅத்துல் ஊலமா சபை – தமிழகத்தின் எல்லா அரபிக்கல்லூரிகளுக்கும்” மவ்லிதில் ஆட்சேபனைக்குரிய வாசகங்கள் உண்டா? என்று விளக்கம் கேட்டிருக்கின்றனர். ‘மவ்லிது’ மறுபரிசீலனை செய்யப்படவேண்டிய ஒன்றுதான்” என்ற சிந்தனை உலமாக்களில் பலரிடம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இதுவே போதிய சான்றாக அமைந்துள்ளது.

பொது மக்களைப் பொருத்த வரை, அவர்களில் பாமரத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பாதவர்களும், பெண்களின் ஒரு பகுதியினரும், “மவ்லிது ஓதக்கூடாது!” என்போரை இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவும், இஸ்லாத்திற்கே எதிரிகளாகவும் கருதுகின்றனர். எனினும் படித்தவர்கள், சிந்தனையாளர்கள் ஓரளவு “மவ்லிது என்பது சிலரது வயிற்றுப்பிழைப்புக்கான கண்டுபிடிப்பு என்ற அளவுக்கு உணரத் துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில் “மவ்லிது” பற்றி தெளிவாக, மிகவும் விரிவாக, அதுபற்றிய எல்லாவிதமான ஐயங்களையும் நீக்கும் விதமாக – மக்கள் மத்தியில் எடுத்து வைப்பது நமது கடமையாகிறது.

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆராயும்போது “மவ்லிது என்பது பல தவறான விளைவுகளையே மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது” என்று கருதுகிறோம். “மவ்லிது தோற்றுவிக்கப்பட்ட நோக்கம் சரியானதல்ல. அதில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் பல இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கின்ற நச்சுக் கருத்துக்களை உள்ளடக்கியதாக உள்ளன. பல பொய்யான கற்பனைகளையே அதிக அளவில் மவ்லிது தன்னகத்தே கொண்டுள்ளது” என்று உறுதியான முடிவுக்கே வரமுடிகின்றது.

மாற்றுத் தரப்பினரின் ஆதாரங்கள்
எனினும், மாற்றுத்தரப்பினர்கள் “மவ்லிது ஓதவேண்டும்! ஓதலாம்! என்பதற்கு எடுத்து வைக்கின்ற ஆதாரங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து வைத்து, அவற்றில் உள்ள பலவீனங்களையும், தெளிவுபடுத்திவிட்டு பின்னர், “மவ்லிது ஏன் ஓதக்கூடாது?” என்பதற்கான ஆதாரங்களை மக்கள் முன்னே வைக்கிறோம். இறுதியாக, “சுப்ஹான மவ்லிது” “முஹ்யித்தீன் மவ்லிது” “ஷாஹுல்ஹமீது மவ்லிது” பெற்றுள்ள இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்களை அரபி மூலத்துடன் உங்கள் முன்னே வைக்கிறோம். சிந்தனை உள்ள எவரும் தாமாகவே மவ்லிது பற்றி சரியான முடிவுக்கு வரும் அளவுக்கு விளக்க இருக்கிறோம் (இன்ஷா அல்லாஹ்). எதிர் தரப்பினரின் ஆதாரங்களை வரிசையாக அலசுவோம்.

முதலாவது ஆதாரம்
கடந்த காலங்களில் எவ்வளவோ அறிஞர்கள், மகான்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களெல்லாம் பெரிய ஆலிம்கள், அவர்கள் மவ்லிது மஜ்லிஸில் பக்தியோடு அமர்ந்து ஓதி இருக்கின்றனர்.

இதுதான் எதிர்தரப்பினரின் மிகப்பெரும் அஸ்திரம். எந்தப் பிரச்சனையை சொல்லப் போனாலும் ரெடிமேடாக இதனையே ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர். பொது மக்கள் மட்டுமின்றி, ஒரு சில ஆலிம்கள் கூட இதனைக் காரணமாகக் காட்டியே, மவ்லிதை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இப்படி நம்புவதற்கு ஒரு முஸ்லிமுக்கு அனுமதி உண்டா? அல்லாஹ்வும் அவனது திருத்துதாதரும் “குருட்டுத் தனமாக பெரியோர்கள் சொன்னார்கள், செய்தார்கள்” என்று நம்பிக்கைக் கொள்வதையும், அதனடிப்படையில் செயல்படுவதையும், அனுமதிக்கின்றார்களா?என்பதை குர்ஆன், நபிவழி மூலம் நாம் ஆராய்வோம்.

நபிமார்களில் பலரிடம் கூறப்பட்டப்பதில்:
முந்தைய நபிமார்கள் சத்தியத்தை எடுத்துரைக்கும் போதெல்லாம் அன்றைய மக்களால் இதே பதில் தான் சொல்லப்பட்டது. இதைச் சொல்லித்தான் தங்களின் தவறான வழிமுறைகளை, சரியானவை என்று நியாயப்படுத்தினர். பிறரையும் நம்பவைத்தனர்.

ஃபிர்அவ்ன் என்ற கொடியவனிடம் சத்தியத்தின் தூதுவரான மூஸா(அலை) அவர்களையும் ஹாரூன்(அலை) அவர்களையும் அனுப்பியபோது, ஃபிர்அவ்னும் அவனது அடிவருடிகளும் இதனையே சொன்னதாக அல்லாஹ்  திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

“எங்கள் மூதாதையர் எதைச் செய்ய நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இந்தப் பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்குமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? ஆனால் நாங்கள் எங்கள் முன்னோர்களைத்தான் பின்பற்றுவோமே தவிர உங்களிருவரையும் நம்புபவர்கள் அல்லர்” என்று அவர்கள் (ஃபிர்அவ்னின் கூட்டத்தினர்) கூறினார்கள். (அல்குர்ஆன் 10 : 78)

“ஸமூத்” என்ற பலம் பொருந்திய கூட்டத்தினரிடம் ஸாலிஹ்(அலை) அவர்களை தனது தூதராக அனுப்பி, அவர்கள் உண்மையை எடுத்துரைத்தபோது, ஸமூத் கூட்டத்தினர் இதே பதிலைக் கூறியதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

“ஸாலிஹே! இதற்கு முன்பு நீ எங்களால் நம்பப்படுபவனாக இருந்தாய்! எங்கள் முன்னோர்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தனரோ, அவற்றையே நாங்களும் வணங்குவதை நீ தடுக்கின்றாயா? மேலும், (நாங்கள் எங்கள் முன்னோர் வழியில்தான் செல்வோம்)எங்களை எதன் பால் அழைக்கிறாயோ அதில் நாங்கள் மிகப்பெரிய சந்தேகத்திலிருக்கிறோம்” என்று அவர்கள் (ஸமூது கூட்டத்தினர்) கூறினார்கள். (அல்குர்ஆன் 11 : 65)

மிகப்பெரும் நபிமார்களில் ஒருவராகிய இப்ராஹிம்(அலை) அவர்கள் தன் சமூகத்தாரிடம், ஏன் இவற்றை வணங்குகிறீர்கள் என்ற போது அன்றைய காபிர்கள் சொன்னதும் இதனைத்தான்.

“எங்கள் முன்னோரை இவ்வாறே செய்துவர நாங்கள் கண்டோம்” என்று அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன் 26:74)

எல்லா நபிமார்களும் சத்தியத்தை சொன்ன நேரங்களில் இதைச் சொல்லித்தான் சத்தியத்தை அணைத்துவிட முயன்றிருக்கின்றனர் என்பதையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவாக கூறுகிறான்.

நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்படும் போது அவர்கள் “இவர் ஒரு மனிதரேயன்றி வேறில்லை; உங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்துவிடவே இவர் விரும்புகிறார்” என்று கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 34: 43)

மேற்கூறப்பட்ட அல்லாஹ்வின் வசனங்களை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்! இன்றைக்கு மிகப்பெரும் ஆதாரமாக சிலர் கருதிக் கொண்டு எதனைக் கூறுகின்றனரோ, அதனை அன்றே ஃபிர்அவ்னும், ஸமூது கூட்டத்தினரும், ஏன் எல்லாக் காபிர்களும் கூறி இருக்கின்றனர் என்பதை மேற்கூறிய திருவசனங்கள் நமக்கு நன்றாக விளக்குகின்றன.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கத்துக் காபிர்களும், இந்தப் பதிலை ஆயுதமாகப் பயன்படுத்தித்தான் சத்தியத்தின் குரல்வளையை நெறிக்க முற்பட்டனர். இதைச் சொல்லியே அவர்கள் இஸ்லாத்தின் பால் வெறுப்பை ஏற்படுத்திக் கொண்டனர். இதனை அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் பல இடங்களில் நமக்கு எடுத்துச் சொல்கிறான். அவற்றில் சில வசனங்களைக் கீழே காண்போம்.

“அல்லாஹ் இறக்கி வைத்த இந்த வேதத்தைப் பின்பற்றுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படும்போது அவர்கள்; அப்படியல்ல, எங்களுடைய முன்னோர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமோ அந்த வழியையே நாங்களும் பின் பற்றுவோம் என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 2:170, 31:21)

“அல்லாஹ் இறக்கிவைத்த (இந்தவேதத்)தையும், இந்தத் தூதரையும் நோக்கி வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படும்போது , “எங்கள் முன்னோரை எதில் கண்டோமே அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 5 :104)

அவர்கள் (காபிர்கள்) வெறுக்கத்தக்கவைகளைச் செய்யும் போது, (அதனை நியாயப்படுத்திட) “இவ்வாறே எங்கள் முன்னோர்கள் செய்யக் கண்டோம். மேலும் அல்லாஹ் எங்களுக்கு இதனை ஏவி இருக்கிறான்” என்கின்றனர். (அல்குர்ஆன் 7:28)

“எங்கள் முன்னோர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம். நிச்சயமாக நாங்களும் அவர்களின் அடிச்சுவட்டிலேயே செல்வார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 43 : 22)

மேலே நாம் எடுத்துக் காட்டிய திருக்குர்ஆன் வசனங்கள் மூலம், இன்றைக்கு மிகப்பெரும் ஆதாரமாக எடுத்து வைப்பவை அன்றைக்கு காபிர்கள் எடுத்து வைத்த வாதமேயன்றி வேறில்லை.

யூத, கிறித்துவர் வழி தவறிய காரணம்
யூதர்களும், கிறித்தவர்களும் அல்லாஹ்விடமிருந்து வேதங்கள் கொடுக்கப்பட்டிடிருந்தனர். அந்த வேதங்கள் அவர்களுக்கு சரியான வழி காட்டிட போதுமானவைகளாக இருந்தும், அவர்கள் வழி கெட்டதற்கான காரணம் இந்த தவறான வாதம் தான். திருக்குர்ஆன் மிக அழகாக இதனைச் சொல்லி காட்டுகின்றது.

வேதமுடையவர்களே! தவ்ராத்தையும், இஞ்சீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையும் நிலைநாட்டும் வரை, நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களில்லை” என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 5 : 68)

அவர்களிடம் வேதங்களிலிருந்தும், அதனை அவர்கள் நிலைநாட்டாமல். அதன்வழி செல்லாமல், முன்னோர் வழி என்று கண்முடிச் சென்றதே அவர்கள் வழி கெட்டுப் போனதற்கான காரணமாகும். அதனால்தான் யூத, கிறித்தவர்களிடம் நேரடியாக பின்வருமாறு சொல்லி விடும்படி தனது தாதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிடுகிறான்.

வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில், ஆதாரமற்றவைகளைக்(கூறி) வரம்பு மீறாதீர்கள்! (உங்களுக்கு) முன்னர், தாங்களும் வழி கெட்டுப் பிறரையும் வழிகெடுத்த கூட்டத்தினரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்!” என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 5 : 77)

தாங்களும் வழி கெட்டுப் பிறரையும் வழி கெடுத்து விட்ட முன்னோர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று வேதமுடையோருக்கு அல்லாஹ் உணர்த்துகின்றான்.

“நீங்கள் செய்கின்ற காரியங்களுக்கு குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் ஆதாரம் காட்டுங்கள்!” என்று நாம் அவர்களிடம் கூறும்போது “முன்னோர்கள் சொன்னார்கள்” என்று பல்லவியைப் பாடுகின்றனரே, அப்படியானால் முன்னோர்கள்தான் இவர்களுக்கு சட்டமியற்றும் அதிகாரம் படைத்த இறைவனா? முன்னோர்கள்தான் இவர்களுக்கு இறைதூதர்களா? யூத, கிறித்தவ சமுதாயம் தான் தங்கள் முன்னோர்களைப்பற்றி , மத குருமார்களைப் பற்றி இத்தகைய நம்பிக்கை வைத்திருந்தனர். அதனால் வழி தவறினர் என்பதை அல்லாஹ் தெளிவாகச் சொல்லி காட்டுகிறான்.

“அவர்கள் தங்களின் பாதிரிளையும், மத குருமார்களையும் கடவுள்களாக ஆக்கிக் கொண்டனர்”. (அல்குர்ஆன் 9 : 31)

இந்தத் திருவசனத்திற்கு விளக்கம் தரப் புகுந்த அலலாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், மத குருக்கள் ஒன்றைக் “கூடும்” என்றால் அதனைக் கூடும் என்று கருதுவதும், ஒன்றை மதகுருக்கள் “கூடாது” என்றால் கூடாது என்று கருதிக் கொள்வதும், அவர்களைக் கடவுள்களாக ஆக்கியதாகும்” என்றனர். அறிவிப்பவர் : அதீ இப்னு ஹாதம்(ரழி) நூல் : அஹ்மத்

மார்க்கத்தில் ஒன்றை ஆகுமானது என்று ஆக்கவும், வேறொன்றை ஆகாது என்று தடுக்கவும் அல்லாஹ்வுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. அல்லாஹ்வின் அனுமதியோடு அல்லாஹ்வின் தூதருக்கும் உரிமையுண்டு. வேறு எவரும் ஒரு காரியத்தை நம்மீது கடமையாக்க அல்லது ஹராமாக்க (தடை செய்ய) அதிகாரம் படைத்தவர்கள் அல்ல. அவ்வாறு அதிகாரம் இருப்பதாக நம்புவது அவர்களை வணங்கியதற்கு நிகராகும். இதைத்தான் முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்கள் செய்தனர். அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளாயினர்.

எந்த முன்னோராக இருந்தாலும் குர்ஆன் ஹதீஸ்களுக்கு ஒத்திருப்பவைகளை மட்டுமே ஏற்க வேண்டும். மற்றபடி “முன்னோர்கள் சொன்னார்கள்” என்ற பதில் அந்த வல்ல நாயனின் விசாரணை மன்றத்தில் எடுபடாது. இறைவனால் ஏற்கவும் படாது. திருக்குர்ஆனில் அல்லாஹ் அதனைத் தெளிவாகச் சொல்கிறான்.

“யாரைப் பின்பற்றினார்களோ அந்தத் தலைவர்கள் நம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள். இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்களிடையே இருந்த தொடர்புகள் யாவும் அறு பட்டுவிடும். (அல்குர்ஆன் 2 : 166)

இந்தத் திருவசனம் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றி, நடந்தவர்கள் மறுமையில் தப்ப முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவித்து விடுகின்றது. மேலும் எவர்களைப் பின்பற்றி வழிகெட்டனரோஈ அவர்கள் மீதே மறுமையில் பழியைப் போடவும் இவர்கள் துணிவார்கள். அல்லாஹ் கூறுகிறான்.

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்த நாளில் “ஓ, கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! இந்த தூதருக்கும் வழிப்பட்டிருக்க வேண்டுமே! என்று கூறுவார்கள். “எங்கள் இறைவா நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியோர்களுக்கும் வழிப்பட்டோம். அவர்கள்எங்களை வழிகெடுத்து விட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். “எங்கள் இறைவா! (நாங்கள் வழி கெடுவதற்கு காரணமாக இருந்த) அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக! மேலும் அவர்களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக! (என்றும் கூறுவர்). (அல்குர்ஆன் 33 : 66, 67, 68)

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள மூன்று வசனங்களையும் பலமுறை ஆம்ந்த சிந்தனையுடன் படித்துப் பாருங்கள்! மறுமை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதுதான், ஒரு முஸ்லிம் இந்த உலகில் வாழ்கிறான், வாழ வேண்டும். அந்த மறுமை வாழ்வு பாழாவதற்கு மூல காரணம் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றுவதுதான். எனவே “காலம் காலமாக முன்னோர்கள், பெரியோர்கள் செய்து வந்தார்கள்” என்ற கூற்று அர்த்தமற்றது என்பதை நபிவழியிலும் ஆதாரம் இருந்தால் அதனை நாம் ஏற்க வேண்டும் இல்லை எனில் அதனைத் தூக்கி எறிந்து விட வேண்டும்.
தொடரும்.....

நன்றி: ரீட்இஸ்லாம்.நெட்



நேரம் தவறாமை


நேரம் தவறாமை என்பது, எவரை நோக்கி நீங்கள் போகிறீர்களோ… அவருக்கு நீங்கள் கொடுக்கின்ற மரியாதை, அவர் மீது நீங்கள் வைத்திருக்கிற மதிப்பு. “அவன் கிடக்கான் குப்பை, பத்து நிமிஷம் லேட்டா போனா ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டான்” என்ற எண்ணம் உங்களுக்கு வருமேயானால் கிட்டத்தட்ட அதே எண்ணம் அவருக்கும் உங்கள் மீது இருக்கும். நேர தவறுதல் ஏன் ஏற்படுகிறது? அக்கறையின்மையால். எதன் மீது? எந்தக் காரியத்திற்காகப் போகிறோமோ அதன் மீது நமக்கு முழு ஈடுபாடு இல்லை. எட்டு மணி அலுவலகத்திற்கு ஏழே முக்காலுக்கு நுழைபவர்தான் சரியான மனிதர்.

ஸ்கூட்டரை அலுவலக வாசலில் நிறுத்தி விட்டு வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு  காலை வணக்கம் சொல்லி,  இன்றைய பொழுது இந்த அலுவலகத்தில் நல்லபடி நகர வேண்டுமே என்ற அக்கறையோடு சில விநாடிகள் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக இருப்பின், நிச்சயம் அந்த நாள் பலம் பொருந்தியதாக இருக்கும். இந்த ஐந்து நிமிட நேரத்தில் மனம் பதற்றங்கள் நீங்கி அமைதியாகி விடும்.  மாறாக, எட்டு பதினேழுக்கு அரக்கப் பறக்க நுழைந்து,   கையெழுத்துப் போட்டு விட்டு வியர்த்து வழிய, நெஞ்சு படபடக்க சுற்றியிருப்பவர்களுக்கு முகமன் சொல்ல மறந்து போய், மூச்சு வாங்க உட்கார்ந்திருக்கும் போது, நீங்கள் கேலிப் பொருளாக மாறி விடுவீர்கள். சீக்கிரம் வந்தவர்கள் உங்களை அதிசயமான பிராணியாகத்தான் பார்ப்பார்கள்.

உங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழிக்கின்ற அலுவலகத்தில் நீங்கள் எந்த மரியாதையும் இல்லாமல் தாமதமாக வருவது, உங்கள் வேலை மீது உங்களுக்கு மதிப்பும் மரியாதையும்  இல்லை என்பதை நிச்சயமாக்குகிறது. உங்கள் வேலையை நீங்கள் நேசிக்கவில்லை என்பதும் உண்மை. ஆறு மணிக்குத் திறக்க வேண்டிய மளிகைக் கடையை ஏழு மணிக்குத் திறந்தால், இடையே உள்ள ஒரு மணி நேரத்தில் இருபது வாடிக்கையாளர்கள் வந்து போயிருப்பார்கள். ஒரு நாள் தாமதித்து, மறு நாள் நீங்கள் ஆறு மணிக்குத் திறந்தாலும், “அட… அவன் எங்க கடையைத் திறந்திருக்கப் போறான்; ஆடி அசைஞ்சு எட்டு மணிக்குத்தான் கடையையே திறக்கறான்” என்று உங்கள் கடையைப் பற்றி, உங்களைப் பற்றி ஒரு தவறான செய்தி பரவும். இதை விட வியாபரத்திற்கு இடைஞ்சலான விஷயம் எதுவுமில்லை.

குறித்த நேரத்திற்கு ஒரு இடத்திற்குப் போக முடியாதபடி இடைஞ்சலாக இருப்பது எது என்று யோசித்துப் பார்த்தால், உடனடியாக எல்லோராலும் சொல்லப் படும் விஷயம் டிராபிக்ஜெம். அந்தக் காரணம் எல்லோராலும் நிஜமாகவோ, பொய்யாகவோ சொல்லப்படுகிறது. சில சமயம் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்மையாயினும் தினந்தோறும் அப்படித்தான் என்று சொல்வதற்கில்லை. இப்படி தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் இருக்குமானால், அந்த நெரிசல் நேரத்தையும் கணக்கிட்டு, முன்கூட்டியே கிளம்பலாமே!

நேரம் தவறாமையை ஒரு முக்கியமான விஷயமாக ஏன் கருதுவதில்லை? நம்முடைய மன்னிக்கின்ற குணம்தான் காரணம் என்று தோன்றுகிறது. வெகு எளிதில் நாம் தவறுகளை மன்னித்து விடுகிறோம். “பத்து நிமிஷம் லேட்டாயிடுச்சுன்னா தலையா போயிடும்?” என்று பேசுகின்றோம். பெரிய பாவமில்லை என்று எண்ணுகின்றோம்.

தாமதத்தைப் பொறுத்துக் கொள்ளாத தன்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சந்திப்பிற்கு ஒருவர் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தாலும் அவரை புறக்கணிக்க வேண்டும். அம்மாதிரி  உறுதியோடு நீங்கள் இருப்பின், நீங்கள் தாமதமாக எந்தச் செயலையும் செய்ய மாட்டீர்கள். நேரம் தவறாமையில் அக்கறை கொள்வீர்கள். இது இரட்டை லாபம். மற்றவர் தாமதத்தை நேர் செய்வது; உங்களையும் நேரம் தவறாமையில் பழக்கிக் கொள்கிறீர்கள்.

தாமதம் தவிர்த்தல் ஒரு தவம். மிக நல்ல பழக்கம். இது உங்களுக்குள் படிந்து வந்து விட்டதென்றால் திட்டமிடல் என்ற விஷயம் உங்களுக்குள் மிக வேகமாக நுழைந்து விடும். திட்டமிடுவதற்குண்டான தெளிவும் மனதிற்குள் படிந்து விடும். நேரம் தவறியதற்கு, மற்றவர்களுடைய நேரம் தவறிய செயல்களும் ஒரு காரணம் என்று அடிக்கடி சொல்லப்படும். “நான் கரெக்ட்டா பத்து மணிக்குப் போய் நின்னேன் ஸார். அந்தாள் பதிணொன்ரை மணிக்கு வரான். வந்துட்டு பேப்பர் படிக்கிறான். பேப்பர் படிச்சிட்டு டீ குடிக்கப் போயிடறான். பன்னிரெண்டேமுகாலுக்குத்தான் ஸார், வாங்க உட்காருங்கன்னு சொன்னான். ரெண்டு தடவை வேணும்னே பண்ணிரண்டு மணிக்குப் போனேன். இப்போதும் அதே மாதிரிதான் சாப்பிட்டு அப்புறம் தான் ஸார் கூப்பிடறான்.’

அவருடைய நேர தவறிய புத்தி இவருக்கும் ஒட்டிக் கொள்கிறது. “என்னங்க பண்றது. இப்படியே பழகிட்டோம். பத்து மணிக்கு வாங்க அப்படின்னாலே, புத்தி பதினோரு மணிக்குன்னு கணக்கு போட்டுக்குது’ என்று உளறுபவர்கள் உண்டு. இதற்கு செவி சாய்த்து விடக் கூடாது.

நீ திருடினால் நான் திருட வேண்டுமா? நீ லஞ்சம் வாங்கினால் நான் லஞ்சம் வாங்க வேண்டுமா? நீ பொய் சொன்னால் நான் பொய் சொல்ல வேண்டுமா? என்பது போல அவர் தாமதம் உங்களைத் தொற்றிக்கொள்ளக் கூடாது. நீங்கள் அதை மறுத்து, முன்னிலும் உறுதியாக நேர தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும். காலத்தின் மதிப்பு தெரிந்தால் நேர தவறாமை குணமும் தானாக வந்து விடும்.

நேர தவறாமை என்பது உங்களை நீங்களே மதிக்கும் சுயமரியாதை. உங்களை எப்பொழுதும் உற்சாகமாகவும் தொடர்ந்து வேலை செய்பவராகவும் வைக்கும். உங்களைச் சோம்பலிலிருந்து அப்புறப்படுத்தி சுறுசுறுப்பானவராக வைக்கும். அந்தச் சுறு சுறுப்புதான் கம்பீரம். அந்தக் கம்பீரம் தனிக் கவர்ச்சி. கவர்ச்சிதான் உங்களைப் பெரிய மனிதராக, முக்கிய மனிதராகக் காட்டும். நேரம் தவறுதலை இயல்பாகக் கொண்டவர்களின் முத்தில் எப்போதும் தூக்கம் இருக்கும். எதையும் ஊன்றிப் பார்க்காத குழப்பம் இருக்கும். அவருக்குப் புகழ் பற்றியோ, பணம் பற்றியோ எந்த வேட்கையும் இருக்காது.

“தோன்றின் புகழொடு தோன்றுக” என்பதற்குப் பக்கத்தில் நேரம் தவறாமை நிச்சயம் இருக்கிறது. நேரம் தவறாமையை நிச்சயம் கடைப்பிடிக்க முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

நன்றி: ரீட்இஸ்லாம்.நெட்


சாத்தான் வேதம் ஓதுகிறது


தூய இஸ்லாம் இன்று பெரும்பான்மை முஸ்லிம்களால் இறைமறுப்புக்கு ஒப்பாகிவிட்டது. நபி வழியை குழிதோண்டிப் புதைத்துவிட்டு பிஅத்தை (மார்க்கத்தில் புதிதாக ஒன்றை) சுன்னத் என்ற பெயரில் அறங்கேற்றி விட்டார்கள். ஹராம் ஹலாலாகவும் சபிக்கப்பட்டவை பரகத்களாகவும் பரகத் தரக்கூடியவைகள் லஃனத் (சபிக்கப்பட்டவை)களாகவும் முஸ்லிம்களால் மாற்றப்பட்டு விட்ட்ன.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில், நபித் தோழர்கள், தாபியீன்கள் வாழ்ந்த பொற்காலத்தில் இருந்த அசல் மார்க்கம் இன்று காணப்படவில்லை. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வழிகேட்டில் வீழ்த்தும் செயல்களாக கருதப்பட்டவை இன்று நேர்வழி காட்டிகளாக கருதப்படுகின்றன. இந்த மாற்றம் ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது என்று ஆராயும்பொழுது திருமறை இதற்கான பதிலை தருகின்றது.

“ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக பாதிரிகளிலும் (மார்க்க போதகர்) சந்நியாசிகளிலும் அனேகர் மக்களின் சொத்துகளைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்” அல்குர்ஆன் 9:34

அன்று சீஸர், கிஸ்ரா போன்ற ரோம், பாரசீக பேரரசுகளிடம் “கராஜ்” வரி வசூழித்து வாழ்ந்தவர்கள் நபிதோழர்கள். இன்று நபிதோழர்களின் வாரிசுகளும், நபி மார்களின் வாரிசுகளும் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் பெரியார்களின் கபுரடியில் உண்டியலை வைத்து உல்லாசமாக வாழ்கிறார்கள்.

“நீங்கள் உண்பதில் மிகச் சிறந்தது, உங்கள் உழைப்பின் மூலம் உண்பதேயாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினர். ஆயிஷா (ரழி) திர்மிதீ, நஸயீ, அபூதாவூது.

ஹலான முறையில் உழைத்து உண்பது இன்று தர்ஹா வியாபாரிகளுக்கு ஹராமாக மாறிவிட்டது. உண்டியல் காணிக்கை மட்டும் இவர்களுக்கு ஹலாலாகி விட்டது.

இன்றைய தர்காக்களின் தலமைகளாகவும், தரீக்காகளின் பரம்பரைகளாகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் மவ்லவிகள், ஆலிம்கள், லெப்பைகள், ஹஜ்ரத்கள். இவர்கள் அழகாக குர்ஆன் ஓதுவார்கள். நீண்ட ஜுப்பா, பச்சை தலைப்பாகையுடன் நடமாடும் வெளி வேடக்காரர்கள். குர்ஆனின் பொருளை திரித்து வழிகேட்டிற்கு மக்களை அழைப்பார்கள்
.
விசுவாசிகளே! தொழுகை முடிவு பெற்றால் பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப்) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். அல்குர்ஆன் 63:10 என்று அனைத்து விசுவாசிகளுக்கும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஆனால் இன்றைய மார்க்க உலமாக்கள், அல்லாஹ்வின் கட்டளையை அப்பட்டமாக மீறி, உடலுழைத்து ஹலாலை உண்ணுங்கள் என்ற நபி (ஸல்) அவர்களது கட்டளையை மீறி மார்க்க அறிஞர்களாக உலா வருகிறார்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர்களே ஆலிம்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மாறாக அவனது கட்டளைக்கு மாறு செய்து ஹராமான வருவாயை உண்ணுகிறார்கள்.

எங்கே மய்யித் வீடு என்று கத்தம் பாத்திஹாவிற்கு ஓடுகிறார்கள். மீலாது விழாக்களில் கூலிக்கு பேசுவது, கூலிக்கு மெªலூது, புர்தா ஓதுவார்கள். கல்யாணம், கத்னா, காது குத்து, பந்தக்கால் நடுதல், பைனான்ஸ், லாட்டரி கடை திறப்பு அத்தனையிலும் முதல் ஆளாக நீண்ட துஆ ஓதி காசு பார்ப்பர். இவர்களைப் போலவே யூத கிறிஸ்தவ சமூகங்களிலும் பாதிரிகள், துறவிகள் மக்களின் பொருளை அநியாயமாக விழுங்கியதாக குர்ஆன் 9:34 வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இங்கு நடைபெறும் மோசடிகள் யூத, கிறிஸ்தவர்களிடமிருந்து அடிக்கப்பட்ட அப்பட்டமான காப்பி என்பதை இவ்வசனம் தெளிவு படுத்துகின்றது. இவர்கள் அப்பாவி முஸ்லிம்களின் அறியாமையை பயன்படுத்தி இவர்கள் ஆதாயம் தேடிக்கொள்கிறார்கள். அல்லாஹ் நேர்வழி காட்டுவனாக!

நன்றி: ரீட்இஸ்லாம்.நெட்



ஆன்மீகம் அற்றுப்போகும் முஸ்லிம் வீடுகள்


உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80)

வீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக்குரியதாகவும் அமைய வேண்டும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி அமைதி பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர். வீட்டுக்குள் இருப்பவர்களாலோ அயலவர்களாலோ அல்லது சூழலில் உள்ளவர்களாலோ எந்த பிரச்சினையுமில்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றே பெரிதும் விரும்புகின்றனர். நிம்மதி மற்றும் அமைதியை மனிதன் விலைகொடுத்து வாங்க முடியாது. அமைதியான வாழ்வை, நிம்மதியான சுவாசத்தை அவனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வழிகளை இஸ்லாம் காட்டித் தந்துள்ளது.

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தையும் ரஹ்மத்துக்குரிய மலக்குகளையும் வீட்டுக்கு வரவழைக்கின்ற வழிகள் மூலமே அந்த வீடு அமைதி பொருந்திய இடமாக காட்சி தரும். அல்லாஹ்வுடைய கோபத்தையும் லஃனத்திற்குரிய ஷைத்தானையும் வீட்டுக்கு வரவழைக்கின்ற வழிகள் மூலம் அந்த வீடு மையவாடியாகக் காட்சித்தரும்.  அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை பெறுவதற்கான முதல் வழி, அல்லாஹ்வை நினைவு கூர்வதும், தொழுவதும், குர்ஆன் ஓதுவதும், திக்ருகள் செய்வதும் இபாதத்களில் ஈடுபடுவதும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய பிரகாரம் வாழ்வதுமாகும்.

அல்லாஹ் ஒருவனை கடவுளாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களது வீடுகள் இன்று சினிமா, நாடகங்கள் மூலம் ஷைத்தானின் ராகங்களை ஒளிபரப்பும் வீடுகளாக மாறி வருகின்றன. காலையிலிருந்து தூங்கச் செல்லும்வரை மெகா தொடர்களிலும் சினிமாக்களிலும் வானொலி நிகழ்ச்சிகளில் அரட்டையடிப்பதிலும் காலம் போய்க் கொண்டிருக்கிறது. அல்லாஹ்வை நினைவுபடுத்துவதற்கோ -திக்ர் செய்வதற்கோ- குர்ஆன் ஓதுவதற்கோ ஐந்து நேரம் தொழுவதற்கோ நேரமில்லை. அதற்கான எண்ணமுமில்லை.

“கேபிள் டீவி மூலமும், Dish மூலமும் நூற்றுக்கணக்கான “செனல்கள்” காண்பிக்கப்படு வருவதால் ஒவ்வொரு செனல்களிலும் எந்தெந்த நேரங்களில் என்னவிதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்பதை மனனமிட்டு வைத்திருக்கிறார்கள் அதன் மூலம் வெவ்வேறு விதமான நிகழ்ச்சிகளை பார்த்து வணக்கத்திற்கான நேரத்தை தொலைத்து விடுகிறார்கள். பெண்களும் சிறுவர்களும் தங்களுடைய அதிகமான நேரங்களை இதில் செலவிடுகின்றனர். குறிப்பாக வயது வந்த பெண்பிள்ளைககள் அரட்டையடிக்கிறார்கள். பிள்ளைகள் படிப்பில் கோட்டை விடுவதற்கும் கணவன் மனைவிக்கிடையில் விரிசல்கள் ஏற்படுவதற்கும் இதுவே பிரதான காரணமாகும். திசைமாறும் பயணங்களுக்கு இசைவான வழிகளை அமைத்துக் கொள்கிறார்கள்.

குர்ஆன் மனனம் செய்யப்பட வேண்டிய உள்ளங்கள் ஷைத்தானின் கீதங்களை பதிவு செய்கின்றன. அல்லாஹ்வுடைய வேத வசனங்கள் ஓதப்பட வேண்டிய உதடுகள் ஷைத்தானின் ராகங்களை இசைத்துக் கொண்டிருக்கின்றன. ஆன்மீகத்தை ஒதுக்கிவிட்டு அசிங்கங்களை அரங்கேற்றுகிறார்கள்.

“உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள். நிச்சயமாக ஸூறதுல் பகரா ஓதப்படும் வீட்டை விட்டு ஷைத்தான் விரண்டோடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம்)

குர்ஆன் ஓதப்படும் வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகிறான். அந்த வீட்டாரிடத்தில் எந்த விதமான தீமையை தூண்டவும் செய்ய வைக்கவும் முடியாமல் போகிறது. குர்ஆன் ஓதாது விட்டால் அந்த வீட்டாரிடத்தில் ஷைத்தானின் சூழ்ச்சிகளே அதிகம் இடம்பெறும். நன்மை செய்வதற்குப் பதிலாக தீமைகளைச் செய்வதற்கு அவன் தூண்டி விடுவான். தீமைகள் அதிகரிக்க அதிகரிக்க உள்ளங்கள் வரண்ட பூமியாக மாறிவிடும்.

“இரவில் தூங்கச் செல்லும்போது நீ ஆயதுல் குர்ஸியை ஓதிக் கொண்டால் காலை வரை அல்லாஹ்-விடத்திலிருந்து பாதுகாவலர் ஒருவர் வந்து பாதுகாத்துக் கொள்வார். ஷைத்தான் உம்மை நெருங்க மாட்டான்” என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி)

அல்லாஹ்விடத்திலிருந்து வரக்கூடிய பாதுகாவலர் ஒரு மலக்கு ஆவார். ஷைத்தான் நெருங்க முடியாத அளவிற்கு பாதுகாவல் போடப்படுகிறது. துரதிஷ்ட வசமாக அல்லாஹ்விடமிருந்து வரக்கூடிய பாதுகாவலரை விரட்டி விட்டு ஷைத்தானை துணைக்கு வரவழைக்கின்ற காரியங்கள்தான் இன்று வீடுகளில் நடக்கின்றன.

ஒரு மனிதர் ஸூறதுல் கஹ்பை (இரவில்) ஓதிக் கொண்டு இருந்தார். அவரிடத்தில் ஒரு குதிரை இருந்தது. அது இரு கயிறுகளால் கட்டப்பட்டிருந்தது. அப்பொழுது ஒரு மேகம் அவரைச் சூழ்ந்து அவரிடம் நெருங்கி வர ஆரம்பித்தது. அதைக் கண்டு அவரது குதிரை விரண்டோட ஆரம்பித்தது. பின்னர் அவர் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இரவு நடந்த விபரத்தைக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது குர்ஆனுக்காக (குர்ஆன் ஓதியதற்காக) இறங்கிய ஸகீனத் (நிம்மதியம் சாந்தியும்) ஆகும் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: பராஉ இப்ன ஹாஸிப் (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்)

குர்ஆன் ஓதும் வீட்டுக்கு அல்லாஹ்விடமிருந்து அமைதி (ஸகீனத்) இறங்குகின்றபோது அந்த வீடு பாக்கியம் பொருந்திய வீடாக மாறிவிடுகிறது. குர்ஆன் ஓதுவதற்கு மாற்றமாக சினிமா, நாடகங்கள், ஆடல்-பாடல்கள் ஒலிக்கின்றபோது ஷைத்தானின் ஊசலாட்டங்களும் ஊடுருவல்களும் அந்த வீட்டில் நுழைய ஆரம்பிக்கின்றன.

“நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணங்குவதற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே என்னையே வணங்குவீராக. என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக. (20:14)

அல்லாஹ்வின் கட்டளை பிரகாரம் வாழ்வதற்கான நினைவூட்டலே தொழுகையாகும். தொழுகையை விட்டு விடுகின்றவன் அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்து விடுபடுகிறான். அல்லாஹ்வை மறந்து விட்ட பிறகு அவனது ரஹ்மத் எப்படி கிடைக்கும்? வீடு எப்படி அமைதிக்குரிய இடமாக அமையப் பெறும்?

உங்களுடைய தொழுகைகளில் ஒரு பகுதியை உங்கள் வீடுகளில் ஆக்கிக் கொள்ளுங்கள். அந்த வீடுகளை (தொழுகை இல்லாத) மண்ணறைகளைப் போன்று ஆக்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்)

உங்களில் ஒருவர் தம் (பர்லான) தொழுகையை முடித்துக் கொண்டால் தம் தொழுகையின் ஒரு பகுதியை தம் வீட்டில் ஆக்கிக் கொள்ளட்டும். நிச்சயமாக அவர் வீட்டில் தொழுவதின் காரணமாக அல்லாஹ் அவருக்கு அங்கு நலவை ஏற்படுத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: முஸ்லிம்)

மலக்குகள் வருகை தருகின்ற முக்கியமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக சுபஹ் தொழுகை பற்றியும் குர்ஆன் ஓதும் சந்தர்ப்பம் பற்றியும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.  சுபஹ் தொழுகைக்காக எழுந்து நிற்காமல் விடியும் வரை தூங்கும்போது அந்த வீடு ரஹ்மத் பெற்ற வீடாக அமையப் பெறுமா?

ஷைத்தானை தூரப்படுத்துகின்ற இக்காரியங்களுக்கு மாற்றமாக நிகழ்வுகள் நடைப்பெறும் போது “முஸீபத்துக்கள் நிறைந்த வீடாகவே அவ்வீடு மாறிவிடும். ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்களையும் நினைவில் வைத்திருப்பவர்களால் துஆ அவ்ராதுகள் மற்றும் தொழு கைகளின் நேரங்களை நினைவில்கொள்ள முடியாத அவலங்களை பார்க்க முடிகிறது. பெண்களும் தொழுவதில்லை. பிள்ளைகளையும் தொழ வைப்பதில்லை. பொறுப்புக்குரிய கணவனும் ஏவுவதில்லை.

முற்றிலுமாக அல்லாஹ்வை மறந்துவிட்டு ஷைத்தானுக்கான அனைத்து வழிகளையும் திறந்து விட்டு-முகாமிட வழிவிட்ட- பிறகு அல்லாஹ்வுடைய ரஹ்மத்தும் பரகத்தும் எப்படி இறங்கும்?

அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மூலம் (திக்ர் செய்வதன் மூலம்) உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (அல்குர்ஆன்:13:28) என அல்லாஹ் கூறுகின்றான்.

மனிதர்களது நிம்மதியான, அமைதியான, ஆரோக்கியமான வாழ்வுக்கு உள்ளம் நோயற்றதாக இருக்க வேண்டும். வாழ்வு நிம்மதியாக இருக்கும். வாழும் வீடும் சூழலும் அமைதியானதாக இருக்கும். உள்ளம் இறந்துவிட்டால் வாழ்வே நாசமாகிவிடும். ஆன்மீகத்தை அழகானதாக, ஆழமானதாக நிலைபெறச் செய்து நிம்மதியான சூழலை அமைப்போமாக.

நன்றி: ரீட்இஸ்லாம்.நெட்


வாழ்விற்கு விடை காண முற்பட்டால்!


அல்லாஹ் இவ்வுலகில் மனிதர்களை ஒரு குறிக்கோளோடு படைத்திருக்கிறான். “நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை. 51:56″ லும் “உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காகவே அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். என்று 67:2 லும் அந்தக் குறிக்கோளை தெளிவு படுத்தியும் உள்ளான். எனவே உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ‘நாம் யார்?’ எங்கிருந்து வந்தோம் எங்கே போகப் போகிறோம்? நமது இறுதி முடிவு என்ன? அது யார் கையில் இருக்கிறது? இவை போன்ற கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு விடை காண முற்பட்டால் அவர்களது வாழ்வில் நிச்சயம் ஒளி பிறக்கும். “கண்டதே காட்சி கொண்டதே கொள்கை” என்று தான் தோன்றித்தனமாக வாழ்க்கை வாழ ஒரு போதும் முற்படமாட்டார்கள்.

இன்று உலகிலுள்ள பெரும்பான்மை மக்கள் 97% குறிக்கோளே இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’ என்ற மேம்போக்கான எண்ணத்திலேயே அதிகமான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  ஏதோ குறிக்கோளுடன் வாழும் அந்தச் சிறுபான்மை 3% மக்களிலும் மிகச் சிறுபான்மையினரே வாழ்க்கையின் அசல் குறிக்கோளை விளங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் அழிந்து போகும் அற்பமான இவ்வுலகில் அவர்கள் அடையும் சொத்து, சுகம், பட்டம், பதவி, மக்களிடையே ஏற்படும் பிரபல்யம், பேர், புகழ் இவற்றைப் பெரிதாக நினைத்து தங்களது வாழ்நாளை வீண் நாள்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வுலகில் குறிக்கோளே இல்லாமல் வாழும் மக்களாக இருந்தாலும் அல்லது இவ்வுலகில் அவர்கள் அடையும் சொத்து, சுகம், பட்டம், பதவி, பேர், புகழ் இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு வாழும் மக்களும் சரி, இரு சாராரும் ஒரே வித நஷ்டத்தில் தான் இருக்கிறார்கள். அவர்கள் நிரந்தரமாக மறு உலக வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்.

இவ்வுலகில் அவர்கள் அரசராக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் தலைவராக இருந்தாலும், தொண்டராக இருந்தாலும் வாழப்போவது அதிகப்பட்சமாக நூறு ஆண்டுகளே. மிக அதிகமான மக்கள் 70 வயதைக் கூட கடப்பதில்லை. அதற்கு முன்னரே மரணத்தைத் தழுவி மறுமை வாழ்க்கையை சந்தித்து விடுகிறார்கள். ஆனால் இவர்கள் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காமல் சதா இவ்வுலக வாழ்க்கையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால், மரணிக்கும்போது மறுமைக்குறிய எவ்வித சாதனமும் இல்லாமல் வெறுங்கையினராகவே செல்கின்றனர். அதன் விளைவு? எப்படி தாயின் வயிற்றிலிருந்து இவ்வுலகிற்கு வருகைத்தரும் ஒரு குழந்தை சப்பாணியாக, குருடாக, செவிடாக, ஊமையாகப் பிறந்தால் இவ்வுலகமே அக்குழந்தைக்கு நரக வாழ்க்கையாக ஆகிவிடுகிறதோ அதே போல் ஆன்மாவின் உறுப்புகள் சிதைந்த நிலையில் மரணமடையும் ஒருவன் மறுமையில் நரக வாழ்க்கை வாழ்வது திண்ணம்.

உலகில் தோன்றிய இறைத்தூதர்கள் அனைவருமே மனிதனின் அசலான குறிக்கோளை உணர்த்தும் பணியையே செய்தனர். ஆன்மாவின் உறுப்புகள் முறையாக செவ்வனே தயாராகும் அற்புத வழியை அவர்கள் மக்களுக்குப் போதித்தனர். அதில் மிக முக்கியமானது படைத்த இறைவனுக்கு மலக்குகளையோ, நபிமார்களையோ, இறந்தவர்களையோ, இருப்பவர்களையோ இணை வைக்காமல் இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபடுவதாகும்.

இறைவனின் இக்கட்டளைக்கு முரணாக பெரும்பான்மையான மக்கள் இன்று அமரர்களையும், நபிமார்களையும், இறந்துபோன பெரியார்களையும் இறைவனுக்கு இணையாக ஆக்கி அவர்களிடம் தங்கள் தேவைகளுக்காக முறையிடுகிறவர்களாக இருக்கிறார்கள். குறைந்த பட்சம் அவர்களை தங்களுக்கும் இறைவனுக்கும் இடையில் பரிந்துரை செய்பவர்களாக கருதி வழிபடுகின்றனர்.

இறைவன் மனிதனைன் பிடரி நரம்பைவிட அவனுக்குச் சமீபமாக இருப்பதாகவும், அவனிடமே மனிதன் தனது தேவைகளைக் கேட்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். பெரியார்களை இடைத்தரகர்களாக ஆக்கி அவர்களின் பொருட்டால் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பது தனக்கு இணை வைக்கும் “ஷிர்க்” என்ற குற்றம் என்று மிகத் தெளிவாக எச்சரித்துள்ளான். பார்க்க (18:102-106, 10:18, 39:3) முற்றிலும் அந்த இறைவனையே நம்பி, அவனிடமே சரனடைந்து அவனது ஏவல் விலக்கல் படியே வாழ வேண்டும். அவர்களே உண்மையான விசுவாசிகள்-மூஃமின்கள்-முஸ்லிம்கள்.

இவ்வாறு படைத்த இறைவனுக்கு அவர்களை பரிந்துரைப்பவர்களாக ஆக்காமல் இறைவனுக்கு எதையும் யாரையும் இணையாக்காமல் பரிசுத்த முஸ்லிமாக ஒருவர் ஆகிவிட்டால் அடுத்து அவர் மீது ஐங்கால தொழுகை நீங்காக் கடமையாக ஆகிவிட்டது.  கண்டிப்பாக அவர் ஐங்கால தொழுகையை தொழுதே தீர வேண்டும். தொழுகை இல்லாத நிலையில் அவர் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை இழக்கிறார்.

ஆக எந்த நிலையிலும் சுகத்திலும், துக்கத்திலும், நோயிலும், ஆரோக்கியத்திலும், பிரயாணத்திலும் உள்ளூரிலும் அவர் கண்டிப்பாக தொழுதே ஆக வேண்டும். எதையும் எப்படிப் பட்ட நிலையிலும் தொழுகையை விடுவதற்கு காரணமாகக் கூற முடியாது. ஆனால் பிராயாணத்தில் தொழுகையை சுருக்கியும், சேர்த்தும் தொழுவதற்கும், தண்ணீர் கிடைக்காவிட்டால் தயமும் செய்து கொள்ளவும் அனுமதி பெற்றுள்ளார். அதுபோல் நோயாளில் நின்று தொழ முடியாவிட்டால் உட்கார்ந்தும் அதுவும் முடியாவிட்டால் படுத்தும் அதுவும் முடியாவிட்டால் படுத்தும், அதுவும் முடியாவிட்டால் சமிக்கை மூலம் தொழுதே தீர வேண்டும். ஆக ஓர் ஆணைப் பொருத்த மட்டிலும் தொழுகையை விட்டு விட்டு உயிர் வாழ முஸ்லிம் என்ற நிலையில் அனுமதியே இல்லை.

இறை விசுவாசத்திற்குப் பிறகு தொழுகையிலும் ஒரு முஸ்லிம் ஒழுங்குற செயல்பட ஆரம்பித்து விட்டால், அடுத்து அவர் மீது ஜகாத்- ஏழைவரி கடமையாகி விட்டது. அல்லாஹ் அனுமதித்த ஹலாலான வழியில் அவர் பொருள் ஈட்டித் தனது மனைவி மக்களைத் காப்பாற்றுவதோடும் தன்னிடமிருக்கும் பொருளாதார வகைக்குறிய பொருள்கள் ஒரு வருடம் பூர்த்தியாகி இருந்தால் அதற்கு 40-ல் ஒரு பங்கு ஜகாத் கொடுப்பது கடமையாகும். தொழுகையைப் போல் ஜகாத்தையும் முறைப்படி நிறைவேற்ற வேண்டும் என அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளான். ஜகாத் கொடுக்காதவர்களை மிகமிக கடுமையாக எச்சரித்துள்ளான்.  பார்க்க (2:43,83,110,177,277, 4:77,162, 5:12,55, 7:156, 9:5,11,18,34,35,60,71, 19:31,55, 21:73, 22:41,78, 27:3, 30:39, 31:4, 33:33,41:6,7, 58:13, 73:20, 98:5

இந்த இறை வாக்குகளை ஓதி உணர்கிறவர்கள் ‘ஜகாத்’ கடமை நிறைவேற்றா விடில் எவ்வளவு கடுமையான தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.  செல்வங்களை சேர்த்து வைத்திருக்கும் ஒருவர் இறை நம்பிக்கையில் உறுதியாக இருந்தாலும், ஐங்கால தொழுகைகளை அதனதன் நேரத்தில் ஒழுங்காக தொழுது வந்தாலும் தன்னிடமுள்ள செல்வங்களுக்கு ஒழுங்காக கணக்குப் பார்த்து ஜகாத் ஏழைவரி கொடுக்காவிட்டால் அவன் வெற்றி பெற முடியாது. மறுமையிலும் நஷ்டமடைவான்.

தன்னிடமுள்ள அனைத்து செல்வங்களுக்கும் அதாவது தனது சொந்த உபயோகத்திற்கு இருக்கும் வீடு, வாகனம், மற்றும் உபயோகப் பொருள் நீங்கலாக, தனது வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் ஈடுபடுத்தும் முதலீடுகள் அனைத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும். இதுவே நபிவழி.

நன்றி: ரீட்இஸ்லாம்.நெட்