செவ்வாய், 6 நவம்பர், 2012



கண்ணியமிக்க எனது சகோதர சகோதரிகளே!
அபுல் அஃலா மெளதூதி


கண்ணியமிக்க எனது சகோதர சகோதரிகளே! நானும் சிந்திக்கிறேன், நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நாம் ஏன் இறைவனின் அன்பிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறோம்? எல்லாப் புறங்களிலும் துன்பங்கள் ஏன் சூழ்ந்துக் கொண்டிருக்கின்றன? காபிர்கள் இறைவனை வழிபடாதவர்கள் என்று யாரை நாம் சொல்கிறோமோ அவர்கள் நம்மை விட எல்லா விதத்திலும் ஏன் மோலோங்கி நிற்கிறார்கள்? இறைவனுடை சட்டத்துக்கு பணிந்து நடப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் நாம் ஏன் ஒவ்வொரு இடத்திலும் தாழ்வுற்றுக் கிடக்கிறோம்?

அதாவது, பெயர் ரீதியான அடிப்படையைத்தவிர வேறு எந்த வகையிலும் நமக்கும் மற்றவர்களுக்கு மிடையில் வேறுபாடு கிடையாது. இறைவனை அலட்சியம் செய்வது, இறையச்சமின்மை, இறைவனின் கட்டளைக்கு கீழ்படியாமை முதலான செயல்களில் நாமும் அவர்களைப் போல் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றோம். திருக்குர்ஆன் இறைவன் அருளிய வேதம் என்று நமக்கு தெரிந்த போதிலும், ஒரு நிராகரிப்பாளன் அந்த தெய்வ நூலுடன் எவ்வாறு நடந்து கொள்கிறானோ அதே போல்தான் நாமும் நடந்து கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் இறைவனுடைய திருத்தூதர் என்று நமக்குத் தெரியும். அதே நேரத்தில் முஸ்லிம் அல்லாதவன் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதை விட்டு விலகிச் செல்வதைப்போல் நாமும் அவர்களைப் பின்பற்றுவதிலிருந்து விலகிச் செல்கிறோம்.

பொய் பேசுவது இறைவனுடைய சினத்தைத் தேடித்தரும். லஞ்சம் கொடுப்பவனையும் வாங்குபவனையும் நரகத்தில் தள்ளுவதாகவும், வட்டி கொடுப்பவனையும் வட்டி வாங்குபவனையும் மிக மட்டமான குற்றவாளிகள் என்று அவன் தீர்ப்பு வழங்கியிருக்கிறான். புறம் பேசுவது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிடுவதற்கு நிகரானது என்று தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறான். கெட்ட பேச்சு, வெட்கங்கெட்ட செயல், தரக்குறைவான நடத்தை ஆகியவற்றிற்குக் கொடிய தண்டனை உண்டு என்று அவன் குறிப்பிட்டு இருக்கிறான்.

இதெல்லாம் நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இப்படியெல்லாம் தெரிந்து கொண்ட பிறகும், இறைவனுடைய அச்சம் நமக்கு அறவே இல்லை என்பதைப்போல் நாம் இந்தச் செயல்கள் அனைத்தையும் மற்றவரைப் போல் தயங்காமல் தாராளமாகச் செய்கின்றோம். இதனால் ஏற்பட்ட விளைவு நாம் மற்றவரைக் காட்டிலும் கொஞ்சம் முஸ்லிமாக இருப்பதுபோல் காட்சி அளித்தாலும் நமக்கு அன்பளிப்பு கிடைக்க முடியாது; தண்டனைதான் கிடைக்கும். மற்றவர்கள் நம்மீது அதிகாரம் செலுத்துவது எல்லா வழிகளிலும் நம்மை அவர்கள் தாழ்த்துவது இதே குற்றத்தால் ஏற்ப்பட்ட விளைவுதான்! காரணம், இஸ்லாம் என்ற அருட்பேறு நமக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் அதனை நாம் மதிக்கத் தவறிவிட்டோம்.

திருக்குர்ஆனுடைய அறிவுரை என்ன, நபி (ஸல்) அவர்கள் போதித்த வழி என்ன, இஸ்லாம் என்றால் என்ன என்பனவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்திருக்க வேண்டும். இந்த அறிவு இல்லாமல் ஒரு மனிதன் முஸ்லிமாக முடியாது. ஆனால் வேதனைக்குறிய விஷயம் என்னவென்றால், இந்த அறிவை அடைவதற்கு நீங்கள் சிந்திப்பதுகூட இல்லை. இதிலிருந்து நீங்கள் எத்துணைப் பெரிய அருட்பேற்றினை இழந்துவிட்டீர்கள் என்பதை நீங்கள் உணராமல்தான் இருக்கிறீர்கள்.

இறைவனுடைய நூல் உங்களிடம் இருக்கிறது ஆனால் அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. இதைவிடப் பெரிய நஷ்டம் வேறு என்ன இருக்க முடியும்? நீங்கள் தொழுகிறீர்கள். ஆனால் அந்தத் தொழுகையில் நீங்கள் இறைவனிடம் எதைக் கேட்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. இதைவிடப் பெரிய நஷ்டம் ஒன்று உண்டா? இன்னும் சொல்லப்போனால் கலிமாவின் பொருள்கூட நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை. அந்தக் கலிமாவை கூறியதுடன் உங்கள்மீது சுமத்தப்பட்ட பொறுப்புக்கள் யாவை என்று நீங்கள் அறிந்து கொள்ளவில்லை.

வயல் எரிந்து பொசுங்கிப் போனால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். வேலை கிடைக்காவிட்டால் என்னவாகும் என்று உங்களுக்கு தெரியும். உங்கள் உடமைக்கு பாதகம் ஏற்பட்டால் அந்த நஷ்டம் உங்களுக்குத் தெரியும். ஆனால், இஸ்லாத்தைப் பற்றித்தெரிந்து கொள்ளாமலிருப்பது எவ்வளவு பெரிய நஷ்டமென்று உங்களுக்குத் தெரியவில்லை! இந்த நஷ்டத்தை நீங்கள் உணர்ந்து கொண்டால் நீங்களாகவே வந்து “எங்களை யாரேனும் இதிலிருந்து காப்பாற்ற மாட்டார்களா? என்று கேட்பீர்கள். நீங்கள் இப்படி கேட்கும்போது இறைவன் நாடினால், இந்த நஷ்டத்திலுருந்து மீளுவதற்கு உரிய வழியும் பிறந்துவிடும்.

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்

வெள்ளி, 2 நவம்பர், 2012



நபிக்குப்பின் நபித்தோழர்கள்
S.கமாலுத்தீன் மதனி


“என்னுடைய பேச்சை செவியுற்று அதை மனனம் செய்து பாதுகாத்து அதை செவியுற்றது போன்று பிறருக்குச் சொல்லக்கூடியவனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! எனது செய்தி எத்திவைக்கப்படுகின்ற எத்தனையோ பேர் எத்திவைப்பவரைவிட சிறந்தவராக இருக்கின்றனர்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத், திர்மிதீ)

நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற அமானிதத்தை எல்லா முஸ்லிம்களுக்கும் எத்தி வைப்பது தம்மீது கடமை என நபித்தோழர்கள் உணர்ந்தார்கள். இக்கடமையைச் செயல்படுவதற்காக நபித்தோழர்கள் உலகின் பல பாகங்களுக்கும் பரந்து சென்றுள்ளார்கள். இவர்கள் அவர்களை அடுத்த காலத்தினரான தாபியீன்கள் மத்தியில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றனர். நபித்தோழர்கள் இருக்கும் இடத்தை தேடி தாபியீன்கள் நீண்ட பிரயாணம் சென்றனர். நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை நபி(ஸல்)த்தோழர்களிடமிருந்து திரட்டலானார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்களுடைய ஹதீஸ் எல்லா முஸ்லிம்களிடையிலும் பரவ ஆரம்பித்தது. (நபித்தோழர் என்பவர் நபி(ஸல்)யைப் பார்த்து நம்பிக்கை கொண்டவர். ‘தாபியீ’ என்பவர் நபித்தோழரைப் பார்த்து நம்பிக்கை கொண்டவர்)

நபி(ஸல்)வழியை அறிவிப்பதில் நபித்தோழர்கள் எல்லோரும் ஒரே தராதரத்தில் இருந்ததில்லை. சுபைர்(ரழி), சைது பின் அர்கம்(ரழி) இம்றான் பின் ஹுஸைன்(ரழி) போன்ற நபித்தோழர்கள் மிகக்குறைவாகவே நபிவழியை அறிவித்திருக்கிறார்கள். சுபைர்(ரழி)வின் மகன் அப்துல்லாஹ் என்பவர் தனது தந்தையிடத்தில், சிலர் நபி(ஸல்) அவர்களுடைய ஹதீஸ்களை அறிவிப்பது போன்று தாங்கள் அறிவிக்க நான் கேட்டதில்லையே! என்ன காரணம் என்று கேட்டார்கள். அதற்கு, ‘நான் நபி(ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமலே அருகில் இருந்தேன் என்றாலும், என்மீது யார் பொய் சொல்லுகின்றானோ அவன் ஒதுங்குமிடம் நரகம்தான் என நபி(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டதால் அவர்களைப் பற்றி ஹதீஸ்களை அறிவிக்க நான் அஞ்சுகிறேன்’ என்று சொன்னார்கள். நூல்: புகாரி

சைது பின் அர்க்கம்(ரழி) என்ற நபித்தோழரிடத்தில் எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் பற்றிய ஹதீஸ்களைச் சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டபோது ‘நாங்கள் முதியவர்களாகி விட்டோம், மறந்து விட்டோம், நபி(ஸல்)அவர்களைப் பற்றி ஹதீஸ்களை அறிவிப்பது சாதாரண விஷயமல்ல’ என்று சொன்னார்கள். நூல்: ஜாமிஉ இப்னு அப்துல்பர்

ஸாயின் இப்னு யஸீது(ரழி) அவர்கள் சொல்கிறார்கள் “நான் மதீனாவிலிருந்து மக்காவரை அபூசயீதில் குத்ரி(ரழி) என்ற நபி(ஸல்)த்தோழருடன் பிரயாணம் செய்தேன், நபி(ஸல்) அவர்கள் பற்றி ஒரு ஹதீஸ்கூட எனக்கு அறிவிக்கவில்லை” நூல் ஜாமிஉ இப்னு அப்துல்பர்

அனஸ் பின் மாலிக்(ரழி) என்ற நபி(ஸல்)த்தோழர் நபி(ஸல்) அவர்களைப் பற்றிய ஹதீஸ்களைக் கூறிவிட்டு, அல்லது நபி(ஸல்) அவர்கள் சொன்னது போன்று என்ற வார்த்தையை சொல்லுவார்கள். நபி(ஸல்) அவர்கள் மீது பொய்யாக ஏதாவது சொற்கள் தம் நாவிலிருந்து வந்துவிடுமோ என்ற அச்சத்தால்தான் அவ்வாறு சொல்வதாகச் சொன்னார்கள். நூல்: அஸ்ஸுன்னத்து வமகானத்துஹா

இந்த நபித்தோழர்களெல்லாம் நபி(ஸல்) அவர்கள் பற்றி மிக அதிகமாக அறிந்திருந்தும் மிகக்குறைவாக அறிவித்திருப்பதின் காரணம், அவர்களை அறியாமலேயே நபி(ஸல்) அவர்களைப் பற்றி பொய்யாக ஏதும் தம்மிலிருந்து வந்துவிடுமோ என்ற அச்சம்தான்.

நபித்தோழர்களில் சிலர் நபி(ஸல்) அவர்கள் பற்றிய ஹதீஸ்களை அறிவிப்பதில் பிரசித்து பெற்றுள்ளனர். அபூஹுரைரா(ரழி) அவர்கள் ஒரு ஹதீஸ் பேழையாகவே விளங்கினார்கள். அவர்கள் வாயிலாக முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏராளமான நபிமொழிகள் கிடைத்திருக்கின்றன. இவ்வாறே அப்துல்லாஹ்பின் அப்பாஸ்(ரழி) அதிகமான ஹதீஸ்களை மூத்த நபி(ஸல்)த்தோழர்களிடமிருந்து சேகரித்தார்கள். இந்தப் பாதையில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. “ஒரு நபித்தோழரிடம் ஒரு ஹதீஸ் இருக்கிறது என்ற செய்தி எனக்கு கிடைக்குமானால் அவரை என்னிடத்தில் வரவழைத்து அந்த ஹதீஸை நான் தெரிந்துள்ள முடியும் என்றாலும், நானே அந்த நபித்தோழரைத் தேடிச் சென்று அவருடைய வாசலில் காத்திருந்து அந்த ஹதீஸைக் கேட்டுத் தெரிந்ததின் பின்னரே திரும்பி விடுவேன்” என அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். நூல்: ஜாமிஉ பயானில் இல்மி

இவ்வாறு நபிமொழிகளை தெரிந்து கொள்வதற்காக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் பல சிரமங்களை மேற்கொண்டு நபித்தோழர்களிடமிருந்து நபிமொழிகளை தெரிந்திருந்தார்கள். வேறு சில சஹாபாக்கள் தங்கள் பெயரால் நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பொய்யான செய்திகள் பரவ ஆரம்பிப்பது தெரிய வந்ததும் அந்த ஸஹாபாக்களும், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் ஹதீஸ்களை அறிவிப்பதைக் குறைத்துக் கொண்டார்கள் என அறிவிக்கப்படுகிறது. நூல்: ஜாமிஉ பயானில் இல்ம்

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்

வியாழன், 1 நவம்பர், 2012



ஹதீஸ்களைத் தேடிச்சென்ற நபித்தோழர்கள்
கமாலுத்தீன் மதனி



இஸ்லாத்தின் முதல் இரு கலீபாக்களான அபுபக்ரு(ரழி), உமர்(ரழி) இருவரின் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் நபி(ஸல்)வழிகளைத் தங்கள் நெஞ்சங்களில் பாதுகாத்து வைத்திருந்தனர். அக்காலத்தில் நபி(ஸல்)மொழிகள் பல பாகங்கலிலும் பரவாமலேயே இருந்தன. காரணம், மிக மிக்கியமான நபித்தோழர்களைத் தவிர மற்ற நபித்தோழர்களை மதினாவின் வெளியே செல்வதை உமர்(ரழி) அவர்கள் தடை செய்திருந்தனர்.

கலீபா உதுமான்(ரழி) அவர்களுடைய காலத்தில் நபித்தோழர்கள் உலகின் பல பாகங்களிலும் பரந்து செல்ல அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. ஆங்காங்குள்ள மக்கள் நபி(ஸல்)வழியைத் தெரிந்துகொள்ள இளைய நபித்தோழர்கள் பால் தேவைப்பட்டனர். காரணம், மூத்த நபித்தோழர்கள் இவ்வுலகைப் பிரிந்து கொண்டே இருந்தார்கள்.

நபி(ஸல்)வழிகள் எதிர்கால மக்களுடைய பார்வைக்கு கிடைக்காமல் போய் விடுமோ என அஞ்சிய இளைய நபித்தோழர்கள் பல சிரமங்களை மேற்கொண்டும், பல ஊர்களுக்கும் பிரயாணம் செய்தும் முதிய நபித்தோழர்களிடமிருந்து நபி(ஸல்)வழியைத் திரட்டினார்கள்.

நபித்தோழர்களில் ஒருவரான ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) கூறுகிறார்கள்:

நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்காத ஹதீஸ் ஷாம் நாட்டில் இருக்கும் அப்துல்லாஹ் இப்னு அனீஸ் அல்அன்ஸாரி என்ற நபி(ஸல்)த்தோழரிடம் இருப்பதாக அறிந்தேன். எனவே அந்த ஹதீஸைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக சுமார் ஒரு மாதகாலம் பிரயாணம் செய்து ஷாம் நாட்டிற்குச் சென்று அந்த ஹதீஸை அறிந்து வந்தேன் என்று கூறினார்கள். நூல்: புகாரி இமாமிம் ‘அல்அதபுல் மஃப்ரத்’

எகிப்தில் இருந்த உக்பத் இப்னு ஆமிர் அல்ஜுஹனி என்ற நபி(ஸல்)த்தோழரிடம் நபி(ஸல்) அவர்களுடைய ஒரு ஹதீஸ் இருப்பதாக அறிந்த அபூ அய்யுபு அல் அன்ஸாரி என்ற நபித்தோழர் ஹதீஸை அறிய வேண்டுமென்பதற்காக பல மாதங்கள் பிரயாணம் செய்து அந்த ஹதீஸைப் பெற்று வந்ததாகக் கூறினார்கள். நூல்: ஜாமிவு பயானில் இல்ம்

இவ்வாறாக நபி(ஸல்)வழி அறிவிப்புகள் நாலா பாகங்களிலும் பரவ ஆரம்பித்தது. காலம் செல்லச் செல்ல எஞ்சி இருந்த நபித்தோழர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தாபியீன்கள் அவர்களைத் தேடிச் சென்று அவர்களிடத்திலுள்ள ஹதீஸ்களைச் சேகரித்தார்கள் ஒரு நபித்தோழர் ஏதேனும் ஒரு நகருக்குச் சென்றால், அவர்களைச் சூழ அந்நகர வாசிகள் ஒன்று திரண்டு மிக்க கண்ணியத்தோடும், மரியாதையோடும் நபி(ஸல்)அவர்களுடைய அன்புத் தோழர் வந்திருக்கிறார் என்ற ஆவலோடு அவர் வாயிலாக நபி(ஸல்)வழிகளைக் காது தாழ்த்திக் கேட்டுத் தெரியலானார்கள்.

சில நபித்தோழர்கள் அதிகமான நபி(ஸல்)வழிகளை அறிவித்திருக்கிறார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரழி) என்பவர் இவர்களில் ஒருவாராவர். காரணம், அவர்களுக்கு நபி(ஸல்) அவர்களுடன் ஏற்பட்ட தோழமை பழமையானதாகும். அனஸ் இப்னு மாலிக்(ரழி) அதிகமான ஹதீஸ்ளை அறிவிக்கக் காரணம், இல்லற வாழ்க்கையில் ஏற்படும் எல்லா நிகழ்வுகளையும் அறியும் வாய்ப்புப் பெற்றவர்களாக இருந்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி), அபூஹுரைரா(ரழி) போன்ற நபித்தோழர்கள் நபி(ஸல்)வழியைத் தெரிவதிலும், அதைப் பிறருக்கு அறிவிப்பதிலும் பேரார்வம் கொண்டவர்களாக இருந்தமையால் அதிகமான நபி(ஸல்)வழிகளை அறிவிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்கள்.

நபித்தோழர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ்களை எந்த சந்தேகமும் இல்லாமல் மக்கள் அப்படியே நம்பி ஏற்று வந்தனர். நபித்தோழர்களில் சிலர் வேறு சிலரிடமிருந்து, நபி(ஸல்)வழியைப் பெற்று கொள்வார்கள். அவர்கள் எவ்வித பொய்யையும் நுழைப்பதில்லை. முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோது தான் நபி(ஸல்)வழி அறிவிப்புகளில் பொய்கள் நுழைய ஆரம்பித்தன.

நபி(ஸல்)வழியில் இடைச்செருகல்கள்
ஹிஜ்ரி 40ம் ஆண்டுவரை நபி(ஸல்)வழி அறிவிப்புகளில் எந்த இடைச்செருகல்களும் இடம் பெறவில்லை. நபித்தோழர்கள் பொய்யான ஹதீஸ்களை அறிவிப்பதை விட்டும் தூய்மையானவர்களாக இருந்தார்கள். ஹதீஸ்களில் எந்தவித கையாடல்களும் 40ம் ஆண்டுவரை இடம் பெறவில்லை. அரசியல் நோக்கங்களுக்காகவோ, அல்லது சமூகத்தில் ஏற்பட்ட பிரிவினைகளுக்கு ஆதாரமாகவோ யாரும் நபி(ஸல்)வழியைப் பயன்படுத்தவில்லை. ஹிஜ்ரி 40ம் ஆண்டு அலி(ரழி) அவர்களுக்கும், முஆவிய(ரழி) அவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், போராக மாறி அதன் மூலம் பல உயிர்கள் கொல்லப்பட்டு, இரத்த ஆறு ஓட்டப்பட்டது. ஆரம்பத்தில் அலி(ரழி) அவர்களுக்கு ஆதரவாக இருந்த காரிஜியாக்கள் என்போர் ஒரே நேரத்தில் அலி(ரழி) அவர்களையும், முஆவிய(ரழி) அவர்களையும் எதிர்த்து சதி செய்தார்கள். அலி(ரழி) அவர்கள் கொல்லப்பட்டபோது, அஹலுபைத்தைச் சார்ந்தவர்களில் (நபி(ஸல்) குடும்பத்தாரில்) சிலர் தங்களுக்கும் கிலாஃபத்தில் பங்கு உண்டு என வாதாடினார்கள். இதனால் உமையாக்கள் ஆட்சியில் பிளவு ஏற்பட்டது.

இது போன்ற அரசியல் கருத்து வேறுபாடுகள் முஸ்லிம்களை பல பிரிவுகளாக ஆக்குவதற்குக் காரணமாக அமைந்தன. அதோடு மட்டும் நின்று விடாமல், இந்தப் பிரிவினைகள் மார்க்கத்திலும் தன் பலத்தைக்காட்ட ஆரம்பித்தன. இதனால் இஸ்லாத்தில் மார்க்க அடிப்படையிலான பிரிவுகள் தோன்ற ஆரம்பித்தன. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் பிரிவின் கொள்கையை ஆதரிப்பதற்காக குர்ஆன், ஹதீஸை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

ஆனால் குர்ஆன், ஹதீஸ்கள் இவ்விரண்டும் ஒவ்வொரு பிரிவின் கொள்கைக்கும் வளைந்து கொடுப்பது அல்ல என்பதே உண்மை. குர்ஆன், ஹதீஸ் இவ்விரண்டும் ஏதாவது ஒன்றை ஆதரிக்குமேயல்லாமல், எல்லாப்பிரிவின் கொள்கைகளையும் ஒரு போதும் ஆதரிப்பதில்லை. இதனால் சில பிரிவைச் சார்ந்தவர்கள் குர்ஆனின் வசனங்கள் எந்த நோக்கத்திற்காக இறங்கியதோ அதைவிட்டு மாற்றுப் பொருள்கள் கொடுத்து விளக்கலானார்கள். நபி(ஸல்)மொழி வாசங்கங்களுக்கு பொருத்தமற்ற வியாக்கியானங்கள் செய்ய ஆரம்பித்தார்கள். குர்ஆன் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உள்ளத்தில் மாறாது பாதுகாக்கப் பட்டிருந்ததின் காரணத்தால் அதில் இடைச்செருகல்களை நுழைக்க இயலாமல் போனபோது, தங்கள் வாதத்தை நிலைநாட்டுவதற்காக நபி(ஸல்) அவர்கள் சொல்லாதவற்றைச் சொன்னதாகப் புனைந்து கூற ஆரம்பித்தார்கள்.

உண்மையான நபி(ஸல்)மொழியோடு தங்கள் சுய கருத்துக்களையும் இணைத்துக் கூறினார்கள். இதனால் சரியான நபி(ஸல்)வழியோடு பொய்யானவையும் கலக்க ஆரம்பித்தன. இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் என்பதை நபி(ஸல்) அவர்கள் முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.

”என் மீது யார் வேண்டுமென்றே பொய் சொல்கின்றானோ அவன் செல்லுமிடம் நரகம் தான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

நபி(ஸல்) அவர்கள் தன் தோழர்களை எச்சரித்து, என்னைப் பற்றிய அறிவிப்புகளை ஏற்றுக் கொள்வதில் மிகக் கவனமாக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று உணர்த்தி விட்டார்கள். நபி(ஸல்)வழிகள் தொகுப்பு வடிவில் எழுதிப் பாதுகாக்கப்படாமலிருந்த காரணத்தினால் நபி(ஸல்)வழியில் இடைச்செருகல் செய்வது மிக எளிதாக இருந்தது. பொய்யாகப் புனையப்பட்ட ஹதீஸ்களை சர்வ சாதாரணமாக ஒவ்வொரு பிரிவினரும் நுழைக்க ஆரம்பித்தார்கள். இது ஹிஜ்ரி முதல் இரண்டு நூற்றாண்டுகளில் அதிகம் வளர ஆரம்பித்தது.

தனி மனிதர் சிறப்பு.
தனி மனிதர்களின் சிறப்புப் பற்றித்தான் முதல் முதலாக ஹதீஸ்களைப் புனைய ஆரம்பித்தார்கள். ஒவ்வாரு பிரிவினரும் தங்கள் தலைவரைப் பற்றிப் புகழ்ந்து ஹதீஸ்களை தயாரித்து அவற்றை நபி(ஸல்) அவர்கள் கூறியதாகச் சொல்லலானார்கள். இதில் முதலில் ஈடுபட்டவர்கள் ஷியாக்கள். பல பிரிவுடைய இவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தலைவரைப் பற்றி புகழ்ந்து பொய்யாக ஹதீஸ்களைச் சொல்வதைக் கண்ட சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களில் போதிய ஞானமற்றவர்கள் ஷியாக்களை எதிர்ப்பதற்காக இவர்களும் ஸஹாபாக்களில் சிலரைப் புகழ்ந்து ஹதீஸ்களை உருவாக்கினார்கள்.

ஷியாக்கள் பொய்யான ஹதீஸ்களை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கிறார்கள் என்று அறிந்ததினால்தான் இமாம் அபூ ஹனீபா (ரஹ்), அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்), மாலிக் (ரஹ்) ஷுரைக் பின் அப்துல்லாஹ் (ரஹ்), யஸீது பின் ஹாரூன் (ரஹ்) போன்ற இமாம்கள் ஷியாக்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்வதில்லை.

இடைச்செருகல்களின் ஆரம்பம்
இஸ்லாத்தின் மூன்றாவது கலீபாவான உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்களுடைய ஆட்சி காலத்தின் பிற்பகுதியில் முஸ்லிம்களுக்கிடையில் பெரும் பிளவுகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டன. உதுமான் (ரழி) அவர்களைப் பழிவாங்க வேண்டுமெனத் திட்டம் போட்டு, அதனால் சமூகத்தில் ஒரு சாரார் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினர், இறுதியாக உதுமான் (ரழி) அவர்களின் உயிரையே சூறையாடினார்கள். இந்நிகழ்ச்சி முஸ்லிம்களுக்கிடையில் பெரும் பரபரப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்தியது என்றாலும் இதற்காக நபி(ஸல்)வழியை ஆதாரமாகப் பயன்படுத்த எவரும் முன் வரவில்லை. ஒரு சில பொய்யான ஹதீஸ்கள் மட்டுமே பரப்பப்பட்டிருந்தன.

‘அப்துர்ரஹ்மான் பின் அத்தீஸ்’ என்பவர்தான் முதன் முதலாக பொய்யான அறிவிப்பைப் புகுத்தியவராவார். இவர் உதுமான் (ரழி) அவர்களின் கொலையிலும் பங்கெடுத்துள்ளார். இவர் ஒருமுறை மிம்பரில் ஏறி ”அறிந்து கொள்ளுங்கள் உபைதா என்பவர் தன் வாகனத்தை விட்டும் வழி தவறியதை விட உதுமான் மிகப்பெரிய வழி தவறியாவார். என நபி(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்” எனக் கூறினார். இதைச் செவியுற்ற உதுமான் (ரழி) அவர்கள் ”அல்லாஹவின் மீது ஆணையாக இப்னு அத்தீஸ் பொய் சொல்லி விட்டார்” என்று கூறினார்கள். நூல்:தாரிகுத்தபரி

இதன் மூலம் இப்னு அத்தீஸ் என்பவர்தான் உதுமான் (ரழி) அவர்கள் காலத்தில் முதன் முதலாக பொய்யான ஹதீஸைப் புனைந்து கூறியவர் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் ஹிஜ்ரி 40ம் ஆண்டிற்குப்பின் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பின்னரே ஹதீஸில் இடச்செருகல்கள் அதிகமாகத் தொடங்கியது. உமய்யாக்கள் ஆட்சியில் உள்ளவர்கள் தங்கள் ஆட்சிக்குச் சாதகமாக ஹதீஸ்களை உருவாக்கிக் கூறினார்கள்.

‘இராக்’ நாடும், இடைச்செருகல்களும்
பொய்யான ஹதீஸ்களை உற்பத்தி செய்வதில் இராக் நாடு பிரசித்திப் பெற்றிருந்தது. குறிப்பாக அந்நாட்டின் முக்கிய பட்டணமான கூஃபா இந்த விஷயத்தில் முன்னணியில் இருந்தது. கூஃபாவில் உமையாக்களின் ஆட்சியை எதிர்த்து வந்த ஷியாக்கள், உமையாக்களை இழிவுபடுத்தி பல ஹதீஸ்களை உற்பத்தி செய்தனர்.

‘முக்தாருக் தகபி’ என்பவர் அன்ஸாரி நபித்தோழர் ஒருவரிடத்தில் ”நான்தான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் கலீபாவாக வரவேண்டியவன்” என்பது பற்றி ஒரு ஹதீஸை உருவாக்கிச் சொல்லுமாறும் அதற்காக பத்தாயிரம் திர்ஹம்களும், ஒரு வீடும், ஒரு வாகனமும், ஒரு வேலைக்காரனும் தருவதாகக் கூறினார். ஆனால் அன்ஸாரி நபித்தோழர் அதை மறுத்து விட்டார்கள். நூல்: மீசானுல் இஃதிலால்

இராக் பொய்யான ஹதீஸ்களை அறிவிப்பதில் முதல் இடம் வகுத்த காரணத்தினால் இராக் அறிஞர்களுக்கு ஹதீஸ் கலை வல்லுனர்களிடத்தில் செல்வாக்குக் குறைந்தது. எனவே இராக்கை சார்ந்தவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ்களை தீர ஆராய்ந்த பின்னரே அதை ஏற்றுக்கொண்டார்கள்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். ‘இராக்வாசிகளே’ ஷாம் நாட்டுக்காரர்கள் உங்களை விடச் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். காரணம் அங்கு அதிகமான நபித்தோழர்கள் சென்றார்கள், ஆனால் நாங்கள் அறிந்த விஷயங்களையே அறிவித்தார்கள். ஆனால் உங்களிடத்தில் மிகக் குறைந்த நபித்தோழர்களே வந்தார்கள், ஆனால் நாங்கள் அறிந்த விஷயங்களையும் அறியாத பல விஷயங்களையும் எங்களுக்கு அறிவித்தீர்கள். நாங்கள் அறியாத விஷயங்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? நூல்: தாரீகுல்கபீர்

இராக்கிலிருந்து ஒரு கூட்டம் மக்காவிலிருந்த அப்துல்லாஹ பின் அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களிடம் வந்து ”எங்களுக்கு ஹதீஸ்களைச் சொல்லுங்கள்” என்று சொன்னர்கள். அதற்கு ”இராக்கில் ஒரு கூட்டம் இருக்கிறது, அவர்கள் பொய்யான ஹதீஸ்களைச் சொல்லிவிட்டு கேலி செய்வார்கள்” என்று கூறினார்கள். நூல்: தபகாத் இப்னு ஸஅத்

மார்க்கத் தீர்ப்புகளுக்கு இராக்கிலிருந்து கொடுக்கப்படும் தீர்ப்புகளை அறிஞர்களும், நாட்டுத் தலைவர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. ஷாம் நாட்டிலும், மதீனாவிலும் உள்ள மார்க்க அறிஞர்களின் தீர்ப்பையே ஏற்றுக் கொள்வார்கள். இராக்கிலிருந்து உருவாகும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று மற்ற நாட்டு அறிஞர்களை இமாம் மாலிக் (ரஹ்) எச்சரித்துள்ளார்கள்.

அப்துர்ரஹ்மான் பின் மஹதி என்பவர் ஒருமுறை இமாம் மாலிக் அவர்களிடம் ”மதீனாவில் நாற்பது நாட்களாகக் கேட்ட ஹதீஸ்களை ஒரே நாளில் இராக்கிலிருந்து கேட்கிறேன், இது குறித்து என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ”உங்களிடம் உள்ளது போன்ற நாணய உற்பத்தி இயந்திரம் எங்களிடம் எங்கே இருக்கிறது? இரவிலே அச்சடிக்கிறீர்கள், பகலிலே செலவு செய்கிறீர்கள்” என இமாம் மாலிக் அவர்கள் கூறி இராக்கில் நடக்கும் பொய்யான ஹதீஸ் எவ்வளவு வேகமாகப் பரவியது என்பதற்கு ஒரு உதாரணத்தை முன் வைத்தார்கள்.

பொய்யான ஹதீஸ்கள் இராக் நாட்டில் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருந்தாலும், அவைகளை தரம் பிரித்தறிகின்ற பல மார்க்க மேதைகள் அங்கு இருந்தனர். சுமார் முன்னுறுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் இராக்கின் முக்கிய நகரமான கூஃபாவிற்குச் சென்றுள்ளார்கள். அவர்களில் எழுபது பேர் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களாவர். இவர்களில் அப்துல்லாஹ பின் மஸ்வூத் (ரழி) அவர்களும் ஒருவராவார்.

கதாதா, யஹயா பின் அபீகதீர், அபூ இஸ்ஹாக், அஃமஷ், அத்தவ்ரிய்யு, இப்னு உயைனா போன்ற பெரும் மேதைகள் கூஃபாவிலும், பஸராவிலும் வாழ்ந்திருக்கிறார்கள். எனவே இடைச்செருகல் செய்யப்பட்ட ஹதீஸ்களை மிக எளிதாகக் கண்டுபிடித்து பொது மக்களுக்கு உணர்த்துவதில் இவர்கள் பெரும் சேவை செய்துள்ளனர். இவர்களில் பலர் சரியான ஹதீஸ்களை அறிவிக்கும் நேர்மையாளர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலரின் வாயிலாகக் கிடைக்கப் பெற்ற ஹதீஸ்களை இமாம் புகாரி (ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்) தங்கள் ஹதீஸ் தொகுப்புகளில் இடம் பெறச் செய்துள்ளனர். இவர்களில் அப்துர்ரஸாக் அஸ்ஸன் ஆனி, ஜரீர் இப்னு அப்துல்ஹமீத், இஸ்மாயில் இப்னு அஃப்பான், அய்யுப்னுல் ஜஅது போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.


நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்

புதன், 31 அக்டோபர், 2012



ஸலாம் கூறுங்கள்



”நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருக்கும்போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, நான் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார். (அவர் அனுமதி கேட்ட முறை சரியில்லை என்பதற்காக) நபி(ஸல்) அவர்கள் தம் பணியாளரிடம், நீ சென்று அனுமதி கேட்கும் முறையை அவருக்குச் சொல்லிக்கொடு (அதாவது) ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா என்று கேட்கும்படிச்சொல் என்று கூறினார்கள். இதைச் செவிமடுத்த அம்மனிதர், ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா என்று கேட்டார். அப்போது நபி(ஸல்)அவர்கள் அனுமதி வழங்க, அவர் உள்ளே வந்தார்” என ரிப்யீ இப்னு ஹிராஷ்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)

------------------<<<<OOOOO>>>>-------------------

”நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து. ‘ஸலாம்’ கூறாமல், அவர்கள் இருந்த அறையில் நுழைந்துவிட்டேன். நீ திரும்பச் சென்று, ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா என்று கேட்டுவிட்டு, பின்னர் உள்ளே வா என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என கில்தா இப்னு ஹன்பல்(ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: அஹ்மது, அபூதாவூத்ு மற்றும் திர்மிதீ)

------------------<<<<OOOOO>>>>-------------------

”அனுமதி பெறுவது (மார்க்கச்) சட்டமாக ஆக்கப்பட்டது பார்வையின் காரணத்தால்தான் என்று நபி(ஸல்) கூறினார்கள்” என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, திர்மிதீ மற்றும் நஸயீ)

------------------<<<<OOOOO>>>>-------------------

”நபி(ஸல்) அவர்கள் ஒரு சமுகத்தாரின் (வீட்டு) வாசலுக்கு வந்தால், வாசலுக்கு நேராக நின்று அனுமதி பெறாமல், வாசலுக்கு வலப்புறமோ, இடப்புறமோ ஒதுங்கி நின்று, ‘அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்வார்கள்”" என அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)

------------------<<<<OOOOO>>>>-------------------

”முன் அனுமதி பெறாமல் பிறருடைய வீட்டின் உட்பகுதிகளைப் பார்ப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அப்படி ஒரு முஸ்லிம் (பிறருடைய வீட்டின் உட்பகுதிகளை) பார்த்துவிட்டால் (அவர் அனுமதி பெறாமல்) அவ்வீட்டில் புகுந்தவர் போன்று ஆகிவிடுகிறார்” என தவ்பான்(ரலி) அறிவிக்கிறார் .(நூல்: அபூதாவூத்், திர்மிதீ) மேற்கண்ட நபிமொழியை இமாம் புகாரி அவர்கள், தம் ‘அல்அதபுல் முஃப்ரத்” எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

------------------<<<<OOOOO>>>>-------------------

”ஒருவர் தன் பார்வையை ஒரு வீட்டினுள் முறையற்று செலுத்தும்போது அவ்வீட்டுக்காரர் உற்றுப் பார்த்த அவரின் கண்ணைப் பறித்தால்கூட, அதற்காக அவரை நான் குறை கூறமாட்டேன். அடைக்கப்படாத (திரையிடப்படாத) ஒரு வாசலை, யாரேனும் உற்று நோக்கினால், நோக்கியவர் மீது குற்றம் ஏதுமில்லை. வீட்டுக்காரர்களே குற்றவாளிகளாவர் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”"என அபூதர்(ரலி) அறிவிக்கிறார். (நூல் : திர்மிதீ)

------------------<<<<OOOOO>>>>-------------------

”வீட்டில் ஓர் ஆண் தொழுது கொண்டிருக்கும்போது அவரின் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்டால், தொழுது கொண்டிருப்பவர் தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் என்று) சொல்வதே அனுமதி அளித்ததாகும். பெண் ஒருத்தி தொழுது கொண்டிருக்கும்போது அவ்வீட்டினுள் நுழைவதற்கு அனுமதி கேட்கப்பட்டால், அப்பெண் தன் புறங்கையைப் புறங்கையில் அடித்து சப்தம் உண்டாக்குவதே அனுமதி அளிப்பதாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்” என அபூஹ{ரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: பைஹகீ)

------------------<<<<OOOOO>>>>-------------------

”நான் நபி(ஸல்) அவர்களிடம் இரவு மற்றும் பகல் நேரங்களில் வருவேன். நான் இரவில் வரும்போது அவர்கள் கனைத்து எனக்கு அனுமதி அளிப்பார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அனுமதி கேட்கும்போது அவர்கள் தொழுது கொண்டிருந்தால் கனைப்பார்கள்; நான் நுழைந்துவிடுவேன். அவர்கள் தொழாமல் இருந்தால் எனக்கு (வாய்மொழியில்) அனுமதி அளிப்பார்கள்” என அலி இப்னு அபீ தாலிப்(ரலி) (நூல்: நஸயீ)

------------------<<<<OOOOO>>>>-------------------

”நபி(ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள் வந்து அனுமதி கோர, யார் அது என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு, அபூபக்ர் என்று பதில் சொன்னார்கள். அதன் பிறகு உமர்(ரலி) வந்து அனுமதி கேட்டார்கள். யார் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, உமர் என்றார்கள் அதன் பின்பு வந்த உதுமான்(ரலி) அவர்களும் தம் பெயர் கூறியே அனுமதி பெற்றார்” என அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) (நூல்: புகாரி, முஸ்லிம்)

------------------<<<<OOOOO>>>>-------------------

”என் தந்தைக்கு இருந்த கடன் விஷயமாக, நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, (அவர்கள் வீட்டுக்) கதவைத் தட்டினேன். (வீட்டிற்குள்) இருந்து நபி(ஸல்) அவர்கள் (கதவைத் தட்டுவது) யார் எனக் கேட்டார்கள். நான்தான் என்று குரல் கொடுத்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நான்தான் ”என்றால் யார்” என்று அதிருப்தியோடு கேட்டார்கள்” என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், மற்றும் திர்மிதீ)

------------------<<<<OOOOO>>>>-------------------

”நபி(ஸல்) அவர்களுடன் நான் சென்ற இடத்தில் ஒரு பாத்திரத்தில் பால் இருந்தது. நபி(ஸல்) அவர்கள், அபூஹுரைராவே, திண்ணைத் தோழர்களை இங்கே அழைத்து வாருங்கள் என்றார்கள். நான் திண்ணைத் தோழர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்” என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி)

------------------<<<<OOOOO>>>>-------------------

”இரவில் நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டிற்குத் திரும்பி வரும்போது, தூங்குபவர்கள் எழுந்துவிடாத முறையிலும் விழித்திருப்பவர்களுக்கு (மட்டும்) கேட்கும்படியாகவும் ‘ஸலாம்” கூறுவார்கள்” என மிக்தாத்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம்)

------------------<<<<OOOOO>>>>-------------------

”ஒரு மனிதன் தன் வீட்டிற்குள் நுழையும்போது, யா அல்லாஹ்! நல்ல முறையில் நுழைவதையும் நல்ல முறையில் வெளியேறுவதையும் உன்னிடம் வேண்டுகிறேன். இறைவா! உன் திருப்பெயர் கொண்டே நுழைகிறோம். உன் திருப்பெயர் கொண்டே வெளியேறுகிறோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம் என்று கூறிவிட்டுப் பிறகு தன் வீட்டில் உள்ளவர்களுக்கு ‘ஸலாம்” கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மாலிக்கில் அஷ்அரி(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)

    ------------------<<<<OOOOO>>>>-------------------

(அடுத்தவர் வீட்டினுள் செல்ல) அனுமதி கேட்பது மூன்று     தடவையே. உனக்கு (மூன்று தடவைகளுக்குள்) அனுமதி அளிக்கப்பட்டுவிட்டால்,     (அவ்வீட்டில் நுழையலாம்) அவ்வாறு அனுமதி கிடைக்கவில்லையெனில், திரும்பிவிடு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூமூஸா அல் அஷ்அரி(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, முஅத்தா, அபூதாவூத் மற்றும் திர்மிதீ)

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்

ஞாயிறு, 28 அக்டோபர், 2012



 அல்லாஹ்வின் மீது நம்பிக்கை
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா


அடிப்படை விளக்கம்
அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும் என்பதின் விளக்கம் என்னவென்றால் அல்லாஹ் தன்னைக் குறித்து அல்குர்ஆனில் கூறியிருக்கும் தன்மைகள் (ஸிஃபத்துகள்) செயல்கள் அனைத்தும் உண்மையே என நம்புவதாகும். அந்தத் தன்மைகளையும் செயல்களையும் கொண்டுதான் அல்லஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும். அத்துடன் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப்பற்றி கூறியுள்ள தன்மைகளையும், செயல்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்குர்ஆனிலும் ஆதாரமிக்க நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளதில் நமது அறிவைக் கொண்டு கருத்து, பொருள் மாற்றத்தையோ செய்யக்கூடாது.
அவனுடைய தன்மைகளுக்கும் செயல்களுக்கும் படைப்பினங்களின் தன்மைகளையும் செயல்களையும் உதாரணமாக உவமையாக கூறக்கூடாது.
படைப்பினங்களின் தன்மைகளைக் கொண்டும் செயல்களைக் கொண்டும் அல்லாஹ்வின் தன்மைகளையும் செயல்களையும் விவரிக்கக் கூடாது.
அல்லாஹ்வின் தன்மைகள், செயல்கள் பற்றி கூறப்பட்டுள்ள குர்ஆனின் வசனங்களை பொருளற்றவை என்று கூறக்கூடாது.
அல்லாஹ் தன்னைப்பற்றி அல்குர்ஆனில் கூறியிருக்கும் வசனத்திற்கேற்ப அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும்.

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ  وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ

..... அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை அவன் (யாவற்றையும்) செவியுறுபவனாகவும்) உற்று நோகியவனாகவும் இருக்கிறான். (ஸுரா அஷ்ஷுறா 42:11)

இதன் அடிப்படையில் அல்லாஹ் தன்னைப் பற்றி கூறியிருக்கும் எந்த தன்மைகளையும் அவை அவனுக்கு இல்லை என்று மறுக்கக் கூடாது. அல்லாஹ்வின் வசனங்களை மாற்றக் கூடாது. அவைகளை புரட்டி, திருத்தி மாற்றுப் பொருள் கூறவும் கூடாது. அல்லாஹ்வின் வசனங்களிலும் அவனது அழகிய திருப்பெயர்களிலும் முரண்பட்ட பொருளை புகுத்தக்கூடாது. எந்நிலையிலும் அல்லாஹ்வின் தன்மைகளுக்கு படைப்பினங்களின் தன்மைகளை உவமையாக கூறக் கூடாது.

நிச்சயமாக அல்லாஹ்விற்கு நிகரானவர் எவரும் இல்லை. அவனுக்கு சமமானவரும் எவரும் இல்லை. அவனுடைய தன்மையைப் பெற்றவரும் எவருமில்லை. அல்லாஹ்வை அவனது படைப்பினங்களைக் கொண்டு கணித்துவிடக் கூடாது. கணித்துவிடவும் முடியாது. அல்லாஹ் தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் மிக அறிந்தவன். அவன்தான் முற்றிலும் உண்மையை உரைப்பவன். அவனது படைப்பினங்கள் அனைத்தையும் விட அவன்தான் மிக அழகிய முறையில் பேசுபவன். ஆகவே அவன் தன்னைப் பற்றி கூறியிருக்கும் அனைத்தும் சரியானைவையும், உண்மையானவையுமாகும். அவன் தன்னைப் பற்றி கூறியிருக்கும் தன்மைகளுடன்தான் நாம் அவனை ஈமான் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அவனது தூதர்கள் அனைவரையும் உண்மையாளர்கள் என்றும் அல்லாஹ்வால் மெய்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் நம்பிக்கைக் கொள்ளவேண்டும். ஆகவே இறைத்தூதர்கள் அல்லாஹ்வைப் பற்றி கூறியுள்ள அழகிய தன்மைகள் அனைத்தும் அவனுக்கு உரியனவே என ஈமான் கொள்ள வேண்டும். அல்லாஹ்வைப் பற்றி உறுதியான ஆதாரமும், தெளிவான அறிவுமின்றி பேசுபவர்களின் வழிமுறையை நாம் பின்பற்றக் கூடாது. இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக. இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்.

இவ்வசனங்களிலிருந்து நாம் விளங்க வேண்டியவை என்னவெனில்:

1. இறைத்தூதர்களுக்கு முரண்பட்டு அல்லாஹுவை பற்றி வர்ணிப்பவர்களின் வர்ணணைகளை விட்டும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

2. இறைத்தூதர்கள் அல்லாஹுவை பற்றி கூறுவது அனைத்தும் எல்லாக் குறைகளை விட்டும் தவறுகளை விட்டும் பாதுகாக்கப்பட்டது. எனவேதான் அவர்களுக்கு அவனது அருளும் பாதுகாப்பும் உண்டு என வாக்களிக்கின்றான்.

3. அல்லாஹ் அவனுக்கு வைத்துக் கொண்ட பெயர்களிலும், அவன் வர்ணிக்கும் அவனது அழகிய பண்புகளிலும் அவன் கூறும் முறை என்னவெனில், அவன் தனக்கு தகுதியற்றதை தன்னிடம் இல்லையென்றும், தனக்கு தகுதியானதை தனக்கு இருக்கின்றது என்றும் கூறுகின்றான்.
எனவே, நபிவழியையும் நபித்தோழர்களையும் பின்பற்றும் நன்மக்கள் எந்நிலையிலும் அல்லாஹ்வின் தூதர்கள் கற்றுக் கொடுத்த இறைக் கொள்கையிலிருந்தும், ஈமானிய வழியிலிருந்தும் திரும்பிடக் கூடாது. நிச்சயமாக இதுவே மிக நேரான வழியாகும். இது அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்கள் .இறைத்தூதர்கள், "ஸித்தீக்' என்ற உண்மையாளர்கள், "ஷஹீத்' என்ற இறை பாதையில் உயிர்நீத்த தியாகிகள், "ஸôலிஹ்' என்ற நல்லோர்கள் ஆகியோரின் வழியாகும்.

அல்லாஹ் தன்னைப்பற்றி வர்ணித்துள்ள வசனங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த, திருக்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமானது என்று கூறப்பட்ட சூரத்துல் இக்லாஸ் இக்கருத்தைத்தான் உறுதிப்படுத்துகிறது.

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُلَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ  وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவருடைய) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.அன்றியும், அவனுக்கு நிகராகவும் ஒன்றுமில்லை. (ஸூரா அல்இக்லாஸ் 112:1-4)

மேற்கூறப்பட்ட திருவனங்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள  வேண்டியவைகள்:

1) அல்லாஹ் என்ற வார்த்தை அகிலத்தைப் படைத்து பரிபாலித்து இரட்சித்து வரும் ஏக இறைவனுக்குரிய பெயராகும். இது "இலாஹ்' என்ற பதத்திலிருந்து வந்ததாகும். இதன் பொருள் "உண்மையில் வணக்கத்திற்கு தகுதியானவன்' என்பதாகும்.

2) அல்லாஹ் ஏகனே. அவனது உள்ளமை, அவனது பெயர்கள், அவனது தன்மைகள், அவனது செயல்கள் அனைத்திலும் அவனுக்கு இரண்டாமவர் இல்லை, அவனுக்கு நிகரானவர் இல்லை, அவனுக்கு ஒப்பானவர் இல்லை.

3) அஸ்ஸமது (தேவையற்றவன்) என்ற வார்த்தையின் பொருளாவது "தனது ஆட்சி, அறிவு, கண்ணியம், சிறப்பு அனைத்திலும் அவன் பூரணமானவன். அவன் யாருடைய தேவையுமற்றவன், அவனைத் தவிர யாவரும் அவன்பால் தேவையுடையவர்களே.

4) அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை. அதாவது அவன் யாருடைய தகப்பனுமல்ல. அவன் எவருக்கும் பிறந்தவனுமல்ல. அதாவது அவன் எவரின் பிள்ளையுமல்ல. அவன் முற்றிலும் படைப்பினங்களுக்கு அப்பாற்பட்டவன். அவனே முந்தியவனும் முதலாமவனுமாவான். படைப்பினங்களை விட்டும் படைப்பினங்களின் தன்மையை விட்டும் முற்றிலும் தூய்மையானவன்.

5) ஆகவே, அவனுக்கு நிகராக எவருமில்லை. அவனைத் தவிர அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவையே. அந்த படைப்பினங்களில் எதுவும் அவனுக்கு சமமாகவோ நிகராகவோ ஒப்பானதாகவோ இல்லவே இல்லை. அல்லாஹ்தான் பூரணமானவன்.

இவ்வாறே திருக்குர்ஆனின் மிக மகத்தான வசனம் என்று வர்ணிக்கப்பட்ட "ஆயத்துல் குர்ஸி' என்ற பின்வரும் வசனமும் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.

ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلۡحَىُّ ٱلۡقَيُّومُ‌ۚ لَا تَأۡخُذُهُ ۥ سِنَةٌ۬ وَلَا نَوۡمٌ۬‌ۚ لَّهُ ۥ مَا فِى ٱلسَّمَـٰوَٲتِ وَمَا فِى ٱلۡأَرۡضِ‌ۗ مَن ذَا ٱلَّذِى يَشۡفَعُ عِندَهُ ۥۤ إِلَّا بِإِذۡنِهِۦ‌ۚ يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ‌ۖ وَلَا يُحِيطُونَ بِشَىۡءٍ۬ مِّنۡ عِلۡمِهِۦۤ إِلَّا بِمَا شَآءَ‌ۚ وَسِعَ كُرۡسِيُّهُ ٱلسَّمَـٰوَٲتِ وَٱلۡأَرۡضَ‌ۖ وَلَا يَـُٔودُهُ ۥ حِفۡظُهُمَا‌ۚ وَهُوَ ٱلۡعَلِىُّ ٱلۡعَظِيمُ

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்காது, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.

மேற்கூறப்பட்ட திருவசனத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவை:

1) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்குரியவன் இல்லை. எனவே அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது. அல்லாஹ்விற்கு செய்யும் வணக்க வழிபாடுகளை அவனைத் தவிர வேறு யாருக்கும் செய்யக்கூடாது.

2) அவனே என்றென்றும் உயிருள்ளவன்; நிலையானவன். அவனைத் தவிர  இவ்வுலகத்தில் உள்ள அனைத்து வஸ்துக்களும் அழியக்கூடியவையே ஆகும்.  அவனுக்கு மரணமுமில்லை, சிறு தூக்கமுமில்லை. அவன் எந்நேரமும் படைப்பினங்கள் அனைத்தையும் கண்காணித்தவனாகவே இருக்கின்றான். வானங்களில் உள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே சொந்தமானவை. ஏனெனில் அவனே அவைகளை படைத்தான். அவைகளை படைக்கும் விஷயத்தில் அவனுக்கு வேறு எந்த உதவியாளரும் இல்லை. அவ்வாறே படைப்பினங்களை நிர்வகிப்பதிலும் அவனே முழு அதிகாரம் பெற்றவன்.

3) அவன் அனுமதி கொடுக்காமல் எவரும் எவருக்கும் சிபாரிசு செய்ய முடியாது. படைப்பினங்கள் எவ்வளவுதான் அந்தஸ்தில் உயர்ந்தாலும் அவைகள் அல்லாஹ்வின் அடிமைகளே. அல்லாஹ்வே அனைத்தையும் அடக்கி ஆளும் அகிலங்களின் அனைத்தின் அரசனாக இருக்கின்றான். அவனிடம் எவரும் துணிவு கொள்ளவோ அதிகாரம் செலுத்தவோ அவனை நிர்பந்திக்கவோ முடியாது. எவரும் அல்லாஹ்விடத்தில் தனக்குரிய அந்தஸ்தைக் கொண்டு தான் விரும்பியவர்களுக்கெல்லாம் அவனிடம் பரிந்துரை செய்யலாம் என்று துணிந்துவிட முடியாது. மாறாக, பரிந்துரை செய்வதற்கும், யாருக்காக பரிந்துரை செய்யலாம் என்றும் அல்லாஹ் அனுமதி வளங்க வேண்டும். அப்போதுதான் பரிந்துரையையும் அவன் ஏற்றுக் கொள்வான்.

4) அல்லாஹ்வின் அறிவே முழுமையானது.  அல்லாஹ் எதையும் அவன் நாடிய அளவே படைப்பினங்கள் அறிந்து கொள்ள முடியும். படைப்பினங்களின் அறிவு முழுமையானதல்ல!.

5) அவன் தன் படைப்பினங்களை விட்டும் உயர்ந்தவன், மகத்தானவன். ஏழு வானங்களுக்கு மேல் அவன் அமைத்திருக்கும் "குர்ஸி" ஏழு வானங்களை விடவும் ஏழு பூமிகளை விடவும் மிக விசாலமானது என்று அவன் கூறியதிலிருந்து அவனது மகத்தான ஆற்றலையும் மாபெரும் வல்லமையையும் விளங்கிக் கொள்ளலாம்.

6) வானங்கள் பூமிகளை படைத்தது அவனுக்கு இலகுவானதே. அதில் எவ்வித சிரமமோ அவனுக்கு இல்லை. அவ்வாறே அதில் கோடானக் கோடி படைப்பினங்களை படைத்ததும் அவனுக்கு சிரமமானதல்ல. வானங்களையும் பூமிகளையும் அதிலுள்ள அனைத்து படைப்பினங்களையும் பாதுகாப்பதும் இரட்சிப்பதும் நிர்வகிப்பதும் அவனுக்கு மிக இலகுவானதே. அவன் அத்தகைய மாபெரும் ஆற்றலும் சக்தியும் படைத்தவன்.

"குர்ஸி என்பது அல்லாஹ்வுடைய பாதத்தின் ஸ்தலமாகும்'' என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. (முஸ்தத்ரகுல் ஹாகிம், முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரகுத்னி, முஃஜமுத் தப்ரானி, ஸஹீஹ் இப்னு குஜைமா.)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒருவர் இரவில் இவ்வசனத்தை ஓதுகிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலர் இருப்பார். காலை வரை ஷைத்தான் அவரை அணுகமாட்டான். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒருவர் ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குப் பின்பும் ஆயத்துல் குர்ஸியை ஓதுவாரோ அவர் சுவனம் நுழைய மரணத்தைத் தவிர வேறெந்த தடையும் இல்லை. (ஸூனனுன் நஸôயீ, அஸ்ஸில்ஸலத்துல் ஸஸீஹா)

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி வர்ணித்து இருக்கும் அனைத்து தன்மைகளையும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் திருக்குர்ஆனின் விளக்கவுரை களாகும். ஆகவே நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிஞர்களால் ஏற்று கொள்ளப்பட்ட உறுதிமிக்க, சரியான (ஸஹீஹ்) ஹதீஸ்களில் வந்துள்ள அல்லாஹ்வின் தன்மைகள், செயல்கள், பண்புகள் அனைத்தும் அவனுக்கு உண்டு என நாம் ஈமான் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் குர்ஆனில் ஏராளம் உள்ளன. பார்க்க 4:13, 4:80, 4:59, 33:36.

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்



அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்
ஷேக் முகம்மது ஸாலிஹ் இபின் அல்-உதைமீன்


இந்தக்கடமையே கடமையே மகத்தானதும் கட்டாயமானதுமாகும். ஏனெனில் அது மகத்தான படைப்பாளனான, அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் அரசனாகிய அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளாகும். அவனே இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து தனது எல்லையில்லா ஞானத்தின் மூலம் நிர்ணயம் செய்து வருபவன்.

இன்னபொருள் என்று கூறுவதற்கு இயலாத நிலையிலிருந்து இல்லாமையிலிருந்து படைத்தவன் அவனே. தாயின் வயிற்றில் மூன்று இருள் உரைகளுக்குள்ளே இருந்தபோது அல்லாஹ்வே தனது அருளினால் வளர்த்துப் பரிபாலித்தான். அந்த நிலையில் அவனைத்தவிர எந்த சக்தியும் உனக்கு உதவி செய்ய இயலாத நிலையிலிக்க, உணவளித்து உனது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தேவைப்படும் அனைத்தையும் அருளினான்.

وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لاَ تَعْلَمُونَ شَيْئا ً وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالأَبْصَارَ وَالأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ 

ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில் உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி உங்களுக்குச் செவிகளையும் கண்களையும் அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் 16 : 78)

கண்சிமிட்டும் நேரம் அல்லாஹ் தன் அருளை மறுத்துவிட்டால் மனிதன் அழிந்துவிடுவான்; ஒரு வினாடி அவன் தனது உதவியைத் தடை செய்துவிட்டால் மனிதனால் வாழ்முடியாது. அல்லாஹ்வின் அருளும் அவனது உதவியும் மகத்தானது.

وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلاَةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لاَ نَسْأَلُكَ رِزْقا ً نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى

 (நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான். (அல்குர்ஆன் 20 : 132)

 உன்னிடமிருந்து அல்லாஹ் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான். அதனால் விளையும் நற்பலன்களும் உன்னையே வந்தடைகின்றன.
அவன் உன்னிடம் தன்னை மட்டுமே வணங்கவேண்டும்; எதையும் இணையாக்கக் கூடாது என்பதையே விரும்புகிறான்.

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالإِنسَ إِلاَّ لِيَعْبُدُونِ مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْق ٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِ إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ 

ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிபட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. அவர்களிடத்தில் நான் யாதொரு பொருளையும் கேட்கவில்லை. அன்றி எனக்கு ஆகாரம் கொடுத்துக் கொண்டிருக்குமாறும் கோரவில்லை. (நபியே! நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும் அசைக்கமுடியாத பலசாலியுமாவான். (அல்குர்ஆன் 51 : 56, 57, 58)

 அல்லாஹ்தான் நமது ரப்பு, நாம் அவனுடைய அடிமைகள். அவன் யாவற்றையும் வளர்த்து காப்பவனாக இருக்கின்றான். அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அடியார்களாக நாம் இருக்கின்றோம்.

 அல்லாஹ்வின் அருட்கொடைகள் நம்மீது இடைவிடாது பொழிந்துகொண்டிருக்க அவனுக்கு நன்றி செலுத்தாமல் அவனை நிராகரித்தால் அவனுக்கு மாறு செய்தால் அது எவ்வளவு பெரிய வெட்கங்கெட்ட செயலாகும்.

 மனிதர்கள் எவரேனும் உபகாரம் செய்திருந்தால் அவருக்கு மாறுசெய்யவும் அவரது விருப்பத்துக்கு முரணாகவும் நடப்பதற்கு நீ நிச்சயமாக வெட்கப்படுகிறோம். அவ்வாறிருக்க நாம் அடைந்திருக்கும் அனைத்து அருட்கொடைகளும் அவனது உபகாரம்தான். தீங்குகளிலிருந்து காப்பாற்றப்படுவது அது அல்லாஹ்வின் அருளினால்தான. அப்படி இருக்க அல்லாஹ்விற்கு மாறு செய்வது எப்படி நியாயமாகும்.

 அல்லாஹ் கூறுகிறான்.

 وَمَا بِكُمْ مِنْ نِعْمَة ٍ فَمِنَ اللَّهِ ثُمَّ إِذَا مَسَّكُمُ الضُّرُّ فَإِلَيْهِ تَجْأَرُونَ

 உங்களுக்குக் கிடைத்துள்ள பாக்கியம் யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம். உங்களை யாதொரு தீங்கு அணுகும் பட்சத்தில் அவனிடமே முறையிடுகிறீர்கள். (அல்குர்ஆன் 16 : 53)

 وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِه ِِ هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَج ٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيداً عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ فَأَقِيمُوا الصَّلاَةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلاَكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ

(விசுவாசிகளே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்கவேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களைத் தெரிந்தேடுத்(து மேன்மையாக்கி வைத்)திருக்கிறான். இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை. இது உங்கள் தந்தையாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப்பெயரிட்டவர். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே உங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது. இதற்கு) நம்முடைய இத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். நீங்கள் மற்ற மனிதர்களுக்கு சாட்சியாக இருங்கள். தொழுகையைக் கடைபிடித்தொழுகுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். அவன்தான் உங்களுடைய இரட்சகன். இரட்சகர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன். உதவி செய்கிறவர்களிலும் அவனே மிக்க நல்லவன். (அல்குர்ஆன் 22 : 78)

அடிப்படைக் கடமைகள்

 1.அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதும், நற்செயல்கள் செய்வதும் அல்லாஹ்வை நேசிப்பதும், அவனை கணியப்படுத்துவதன் மூலம் மனம் தூய்மையடைகிறது. அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை உறுதியடைகிறது.

 2.ஒவ்வொரு நாளும் இரவு பகலில் ஐந்துவேளை தொழுகையை நிலைநாட்டவேண்டும். அதன் காரணமாக அல்லாஹ் தவறுகளை மன்னித்து அந்தஸ்தை உயர்த்துகிறான். இதயத்தையும் சூழ்நிலைகளையும் சீர்படுத்துகிறான். இந்த நல் அமலை அடியான் இயன்ற வகையில் நிறைவேற்றியே ஆகவேண்டும்.

فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا وَأَنفِقُوا خَيْرا ً لِأنْفُسِكُمْ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِه ِ فَأُوْلَائِكَ هُمُ الْمُفْلِحُون

 உங்களால் சாத்தியமான வரையில் அல்லாஹ்வுக்குப் பயந்து அவனுக்குச் செவிசாய்த்து வழிப்பட்டு நடந்து, தானமும் செய்யுங்கள். இது உங்களுக்குத்தான் மிக நன்று. எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அத்தகையோர் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள் (அல்குர்ஆன் 64 : 16)

 நபி (ஸல்) அவர்கள் இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) நோய் வாய்ப்பட்டிருந்தபோது கூறினார்கள் : நின்ற நிலையில் நீர் தொழுது கொள்வீராக! அது உமக்கு இயலவில்லையென்றால் உட்கார்ந்த நிலையில், அதுவும் உமக்கு இயலாவிட்டால் படுத்த நிலையில் தொழுதுகொள்வீராக! நூல் : புகாரி.

 3.ஜகாத்
அது உனது செல்வத்தின் சிறு பகுதியாகும். அதை முஸ்லிம்களில் வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் கடனில் மூழ்கியவருக்கும் வழிப்போக்கர்களுக்கும் ஜகாத்துக்குத் தகுதிபெற்ற இவர்களல்லாதவர்ககளுக்கும் வழங்கவேண்டும்.

 4.வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்றல்
எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமளான் அல்லாத) மற்ற நாட்களில் (விட்டுப்போன நாட்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும்… (அல்குர்ஆன் 2 : 185)

 நிரந்தரமாக பலவீனமடைந்து நோன்பு நோற்கச் சக்தியற்றவர் ஒவ்வொரு நோன்புக்குப் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்.

 5.வசதி பெற்றவர் வாழ்வில் ஒருமுறை ஹஜ் செய்வது.
இந்த ஐந்தும் அல்லாஹ்வுக்கு நிறைவேற்றவேண்டிய அடிப்படைக் கடமைகளாகும். இவையல்லாத அனைத்தும் சூழ்நிலைகளுக்கேற்ப விதியாகும் கடமைகளாகும். உதாரணம் : அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது, அல்லது காரணங்களால் ஏற்படும் கடமையாகும். உதாரணமாக அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்வது.

 இக்கடமைகளை செய்வது மிக எளிதானது. இக்கடமைகளை நிறைவேற்றினால் இம்மை மறுமையில் ஈடேற்றமடைந்து நரகிலிருந்து விடுதலைபெற்று சுவனத்தினுள் நுழைவது நிச்சயம்.

كُلُّ نَفْس ٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ

 ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகிக்க வேண்டியதாகவே இருக்கின்றது. (எனினும்) உங்கள் (செயல்களுக்கான) கூலிகளை நீங்கள் பூரணமாக அடைவதெல்லாம் மறுமைநாளில்தான். ஆகவே (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் புகுத்தப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3 : 185)

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்

சனி, 27 அக்டோபர், 2012



குர்ஆனும் சுன்னாவும்


அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. அல்குர்ஆன் 33:21

குர்ஆனையும் சுன்னாவையும் மறுத்து வாழ்வது என்பது நம்முடைய நம்பிக்கையில் – ஈமானில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அது மிகப் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடியதாக இருக்கின்றது. குர்ஆனிலும் மற்றும் சுன்னாவிலும் தகுந்த பரீட்சயம் அல்லது அறிவு இல்லாததன் காரணமாக இன்றைக்கு முஸ்லிம்கள் தாங்கள் கண்களில் காண்பதெல்லாம் இஸ்லாம் என்று ஷேக்மார்கள் பின்னாலும் முரீதுகள் பின்னாலும் அவ்லியாக்கள் பின்னாலும் உலமாக்கள் பின்னாலும் ஓடிக்கொண்டு இஸ்லாம் அல்லாதவைகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வருவதைப் பார்த்து வருகின்றோம். மேலும் இவர்களைப் பின்பற்றுவதும் அவர்களிடம் தங்களது கோரிக்கைகளை வைப்பதும் அவர்களது கப்றுகளுக்கு ஜியாரத் செய்வதும் நன்மையான காரியங்கள் என்றும், அவை நன்மைகளைகளையும் இறைப் பொறுத்தத்தையும் பெற்றுத் தரும் என்றும் நம்பிக்கொண்டு அவர்களைப் புனிதமானவர்களாகக் கருதி தங்களது பிழை பொறுத்தருளப் பிரார்த்திப்பதும் இன்று நடைமுறையில் முஸ்லிம்களிடம் காணப்பட்டுக் கொண்டிருக்கும் வழிகேடுகளாகும்.

இன்னும் முக்கியமான நாட்களாக சில நாட்களைத் தேர்வு செய்து கொண்டு அந்த நாட்களில் சூரா ஃபாத்திஹாவை ஓதுவது குர்ஆனைக் குழுவாக அமர்ந்து ஓதி அதனை கத்தம் செய்வது மேள தாளத்தோடு சந்தனக் கூடு எடுப்பது அவுலியாக்களின் பிறந்த மற்றும் இறந்த தின வைபவம் கொண்டாடுவது இவைகளெல்லாம் இஸ்லாத்தில் உள்ளவை என்றும் இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இறைவனுடைய நெருக்கத்தையும் பாவ மன்னிப்பையும் நன்மைகளையும் பெற்றுத்தரக் கூடியவைகள் என்று நம் முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றார்கள். இவைகளெல்லாம் குர்ஆனைப் பற்றியும் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளான சுன்னாவைப் பற்றியும் அறியாதவர்களினால் பின்பற்றப்படுகின்ற வழிகேடுகளாகும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. இறைவனுடைய குர்ஆனையும் இறைத்துாதர் (ஸல்) அவர்களின் போதனைகளைப் பின்பற்றுவது ஒன்றே ஒரு மனிதனை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கக் கூடியதாக இருக்கும்.

இன்றைக்கு வழிகேடுகள் எல்லாம் காட்டுத் தீ போல மிக வேகமாகப் பரவி வருகின்றது. இதில் ஒரு உண்மையான முஸ்லிம் தன்னை இழந்து விடாமல் பாதுகாக்க விரும்பினால் அவன் குர்ஆனைப் பற்றியும் இறைத்துாதர் (ஸல்) அவர்களது போதனைகளைப் பற்றியும் மிகத் தெளிவாக அறிந்திருப்பதோடு தன்னுடைய வாழ்க்கையில் முழமையாக அவற்றை பின்பற்றவும் வேண்டும். மேலும் நாம் அறிந்து கொண்ட இந்த சத்தியத்தை பிறருக்கு எடுத்து வைப்பதிலும் நாம் கண்ணுக் கருத்துமாக இடை விடாது பாடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

இன்று துரதிருஷ்டவசமாக சிலர் சுன்னாவையும் அதனைப் பின்பற்றுவதன் மதிப்பையும் மறுக்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் சிலர் தாங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் நடைமுறைகள் உண்மையானவை தானா என்று அறிந்து கொள்ள முற்படாமலேயே இருக்கின்றார்கள். மேலும் சிலர் சுன்னாவைப் பற்றிய சந்தேகத்திலேயே தங்களது வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் இப்பொழுது ஒரு கடைத்தெருவுக்குப் போகின்றோம் என்றால் நமக்குத் தேவையான பொருள்களில் எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுத்து வாங்கின்றோமில்லையா? அதைப் போல சுன்னாவிலும் எது ஸஹீஹானது (ஆதாரமுள்ளது) எது ழயீஃபானது (புனைந்துரைக்கப்பட்டது பொய்யானது) என்பதை இனங் கண்டு பின்பற்றுவதும் அவசியம் தானே! அதே போல புத்தகக் கடைக்குச் சென்றால் நமக்குப் பிடித்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து அந்தப் புத்தகத்தின் மீது நம்முடைய முகங்களைத் தொலைத்து விடும் அளவுக்கு அதில் மூழ்கி விடுகின்றோம் அதைப் போலவே நமக்குப் பிடிக்காத புத்தகத்தை தொட்டுக் கூடப் பார்ப்பதில்லை. இதே போல மனநிலையை சுன்னாவிலும் செலுத்துவது எவ்வாறு? எனக்குச் சுன்னாவைப் பின்பற்றுவது பிடிக்கவில்லை அதனால் நான் அதனை அறிந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை என ஒதுங்கி விடலாமா?!

ஓருவர் இறைத்துாதர்கள் செய்து காட்டிய அற்புதங்களை மறுக்கின்றார் ஒருவர் ஐந்து நேரத் தொழுகைகளுக்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று நேரத் தொழுகைகள் போதுமென்கின்றார் நோன்பு நோற்க வேண்டும், அதற்கு எதற்கு 30 நாட்கள் ஒன்றிரண்டு நாட்கள் இருந்தால் போதும் தானே!  என இன்னும் சிலர் முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கீழ்படிவது அவர்களது வாழ்நாளுடன் முடிந்து விட்டது இப்பொழுது அதற்கு அவசியமில்லை என்று சுன்னாவை மறுப்பதில் ஒவ்வொரு அளவுகோள்களை வைத்துக் கொண்டு அதனை மறுத்துக் கொண்டு இருப்பதை நம் நடைமுறையில் காண முடிகின்றது. இவர்கள் தங்களது அலுவல்கள் மற்றும் நேரங்களை இந்த சுன்னாவை எதிர்ப்பதிலும் அதனைச் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதிலேயே கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தெளிவான ஹதீஸ்களுடன் பொய்யான ஹதீஸ்களும் கலந்து விட்டிருக்கின்ற காரணத்தால் அதனை இனம் பிரிக்கும் அளவுக்கு அதற்கான கல்வி ஞானம் இல்லாத காரணத்தால் ஹதீஸ்களை என்னால் பின்பற்ற இயலாது அதனைப் பின்பற்றுவதிலிருந்து நான் விலகி இருக்கவே விரும்புகின்றேன் என்று சிலர் கூறிக் கொண்டு முஹம்மது (ஸல்) அவர்களுடைய சுன்னாவிற்குக் கட்டுப்படாமல் அவற்றைப் புறக்கணித்துக் கொண்டு இருப்பதை நாம் காண முடிகின்றது. இந்த இவர்களது பிடிவாதத்தை விளக்க வேண்டுமென்றால் : ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவனுக்கு மருந்துகள் தேவைப்படுகின்றது. இன்று உண்மையில் மருந்துக் கடைகளில் உண்மையான மற்றும் போலி மருந்துகளும் விற்கப்படுகின்றதெனில் போலியைத் தவிர்த்து விட்டு நல்ல மருந்துகளை வாங்குவதற்கு நாம் எவ்வாறு அதில் பரிச்சயப்பட்ட நபரைத் தேடி அவரது துணையை நாம் பெற்றுக் கொள்வதில் எதுவும் நம்மைத் தடுத்து விடாது என்பது நடைமுறை உண்மையாகும். தனக்குாிய அந்த அசலான மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஒருவன் விரும்புவானா அல்லது அசலும் போலியும் கலந்திருக்கின்றது. எனவே நான் எந்த மருந்தையும் வாங்கப் போவதில்லை யாருடைய துணையையும் தேடப் போவதில்லை என்று கூறி சாவை எதிர்கொள்வானா?

இன்றைக்கு கடவுளே இல்லை என்ற கொள்கையும் நன்மைகளும் தீமைகளும் நம்மைச் சுற்றி இருந்து கொண்டிருக்கும் பொழுது நம்முடைய இந்த நிலைப்பாடு இத்தகைய தீமைகளில் நாம் ஈடுபட்டு விடுவதிலிருந்து நம்மைத் தடுத்து விடாது. எனவே ஆதாரமான ஹதீஸ்களும் ஆதாரமற்ற ஹதீஸ்களும் கலந்து இருக்கின்றது என்ற காரணத்தைக் கூறி நான் சுன்னாவைப் பின்பற்ற மாட்டேன் என்று கூறுவது சுன்னாவை அவமிதிக்கும் செயலாகும். இந்த உலக வாழ்க்கையில் நமக்கு எது நல்லது எது கெட்டது என்று நாம் தேர்ந்தெடுத்து அனுபவிக்கின்றோமோ அது போல சுன்னாவையும் நாம் எது ஆதாரமுள்ளது எது ஆதராமற்றது என்று அறிந்து சுன்னாவைப் பின்பற்றுவதும் அந்த சுன்னாவிற்குக் கட்டுப்பட்டு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும்தான் ஒரு முஸ்லிமின் மீது உள்ள அடிப்படைக் கடமையாகும். சுன்னாவைத் தேர்ந்தெடுக்கின்ற விசயத்தில் எது ஆதாரமற்றது என்று தெரிய வருகின்றதோ அதனை அறிந்த மாத்திரத்திலேயே உதறித் தள்ளிவிடுவதும் ஒரு உண்மையான முஸ்லிமின் மீதுள்ள கடமையுமாகும்.

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். அல்குர்ஆன் 16:44

இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 5:92

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். அல்குர்ஆன் 6:153

நன்றி: www.ரீட்இஸ்லாம்.காம்