வெள்ளி, 29 மார்ச், 2013




உண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்!



அல்லாஹ் கூறுகின்றான்:

“(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்’ (23:51)

‘அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (2;60)

ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரைக் கூற மறந்துவிட்டால்!

உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அல்லாஹ்வின் பெயரை (“பிஸ்மில்லாஹி” என்று) கூறி (ஆரம்பம் செய்யட்டும்). ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்து (இடையில் நினைவு வந்து)விட்டால்

‘பிஸ்மில்லாஹி அவ்வலஹூ வஆகிரஹூ’

எனக் கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி.

பொருள்: இதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப் பெயர் கொண்டு (நான் உண்கிறேன்)

பிஸ்மில்லாஹ் கூறாமல் சாப்பிட்டால் அவ்வுணவு ஷைத்தானுக்கு போய் சேருகிறது!

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், ‘பிஸ்மில்லாஹ்’ கூறாத உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.”  அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலியல்லாஹு அன்ஹு)- ஆதாரம்: முஸ்லிம.;

நின்றுகொண்டு நீர் அருந்துவது கூடாது!

‘நின்றுக் கொண்டு நீர் அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்’ அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்-குத்ரி, ஆதாரம்: முஸ்லிம்.

‘உங்களில் எவரும் நின்றுக்கொண்டு நீர் குடிக்க வேண்டாம். மறந்து குடித்திருந்தால் வாந்தி எடுக்கட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.

குடிக்கும் பாத்திரத்தில் ஊதி குடிக்கலாகாது!

குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடுவதையும் (ஊதி குடிப்பதையும்) நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: திர்மிதி, அபூதாவுத், இப்னுமாஜா

“(குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்.

‘உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்’ அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி), ஆதாரம்: புகாரி

இடது கையால் குடிப்பதோ சாப்பிடுவதோ கூடாது!

‘உங்களில் எவரும் இடது கையால் குடிக்கவோ, சாப்பிடவோ வேண்டாம். ஏனெனில் ஷைத்தான் தான் இடது கையால் குடிக்கிறான்; சாப்பிடுகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்; இப்னு உமர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவுத், திர்மிதி.

தங்கம், வெள்ளியிலான பாத்திரத்தில் குடிப்பது கூடாது!

‘எவர் தங்கம், வெள்ளிப் பாத்திரத்தில் குடிப்பாரோ அவர் தன் வயிற்றில் நரகத்தின் நெருப்பையே விழுங்குகிறார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.

“வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் மிடறுமிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறான்.” அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி), ஆதாரம்: புகாரி   “நாங்கள் ஹுதைஃபா(ரலி) அவர்களுடன் புறப்பட்டோம். அவர்கள், ‘தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருகாதீர்கள். (ஆண்கள்) சாதாரணப் பட்டையும் அலங்காரப் பட்டையும் அணியாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்கம், மறுமையில் (இறைநம்பிக்யாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா (ரஹ்), புகாரி.

வீண் விரயம் செய்வது கூடாது!

“உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.” (7:31)

ஒரே மூச்சில் நீர் அருந்தாமல் மூன்று முறை மூச்சுவிட்டு அருந்த வேண்டும்!

(என் பாட்டனார்) அனஸ் (ரலி) பாத்திரத்தில் (பருகும் போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்ததாகக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் (ரஹ்), ஆதாரம்: புகாரி

உணவா? தொழுகையா? எது முதலில்?

“இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்.” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); ஆதாரம்: புகாரி.

‘உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்

உணவில் எலி விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: மைமூனா (ரலி), ஆதாரம்: புகாரி.

தட்டின் நடுப்பகுதியிலிருந்து சாப்பிடக் கூடாது! ஓரத்திலிருந்து சாப்பிட வேண்டும்!

‘பரக்கத் உணவின் நடுப்பகுதியில் இருக்கிறது. எனவே ஓரங்களில் சாப்பிடுங்கள்; உணவின் நடுப்பகுதியில் இருந்து சாப்பிடாதீர்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா

உணவுத் தட்டில் வலது கரத்தால் அருகில் இருப்பதை எடுத்துச் சாப்பிட வேண்டும்!

(நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) கூறினார்: நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. ஆதாரம்: புகாரி.

உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதை சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்!

(சாப்பிடும் போது) உங்களிடமுள்ள (உணவு) ஒரு துண்டு கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தமான பொருள் ஒட்டியிருந்தால் அதை நீக்கிவிட்டு சாப்பிடவும். அதை ஷைத்தானுக்கு விட்டுக்கொடுக்க வேண்டாம். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.

விரல்களை சூப்பி சாப்பிட வேண்டும்! கைக்குட்டையால் துடைக்க வேண்டாம்!

“தனது விரல்களை சப்பாமல் கைக்குட்டையால் கையை துடைக்க வேண்டாம். ஏனெனில் எந்த உணவில் பரக்கத் உள்ளது என்று அஅவன் அறிய முடியாது!” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.

இருக்கின்ற உணவை பங்கிட்டுச் சாப்பிட வேண்டும்!

“இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.

வயிறு முட்ட சாப்பிடுவது உண்மையான முஃமினுக்கு அழகல்ல!

“(உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்.’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.

“இப்னு உமர் (ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி) ‘நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள் ‘இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்’ எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்), ஆதாரம்: புகாரி.

சாய்ந்தவாறு அல்லது வயிற்றில் படுத்தவாறு சாப்பிடுவது கூடாது!

“நான் சாய்ந்தபடி சாப்பிடமாட்டேன்.” என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.

உணவில் குறை கூறாதீர்கள்!

“நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.

பால் அருந்திய பிறகு வாய்கொப்பளித்தல்:

(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள். அப்போது, ‘இதில் (பாலில்) கொழுப்பு இருக்கிறது’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சாப்பிட்டார்கள்?

“நபி (ஸல்) அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) சாப்பிட்டதில்லை; பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்தும் சாப்பிட்டதில்லை; அவர்களுக்காக மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதுமில்லை.” அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) யூனுஸ் இப்னு அபி ல்ஃபுராத் அல்குறஷீ(ரஹ்) கூறினார்.

இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்களிடம், ‘எதன் மீது அமர்ந்து அவர்கள் சாப்பிடுவார்கள்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(தோலாலான) உணவு விரிப்புகளின் மீது’ என்று பதிலளித்தார்கள்.

ஒரு சபையில் பானங்களை வலது புறத்திலிருந்து கொடுத்து வரவேண்டும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக் வந்திருந்தபோது அவர்கள் பால் அருந்தியதை பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காகக் கிணற்றிலிருந்து (நீர் எடுத்துக்) கலந்தேன். அவர்கள் (பால்) கிண்ணத்தை வாங்கி அருந்தினார்கள். அவர்களின் இடப் பக்கத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்திருந்தனர். (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டு, ‘வலப்பக்கத்தில் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப் பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும், இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதியளிப்பாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) எவருக்காகவும் நான் விட்டுத் தரமாட்டேன்’ என்று பதில் கூறினார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதை அச்சிறுவரின் கையில் வைத்துவிட்டார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம்: புகாரி.

பானங்களை பரிமாறுபவர் இறுதியில் தான் பருக வேண்டும்!

‘….(பானங்களை) ஊற்றுபவர் தான் இறுதியில் பருக வேண்டும்’ (முஸ்லிமில் இடம்பெறும் நீண்ட ஹதீஸில் இடம் பெறும் வாசகம்.) அறிவிப்பவர்; அபூ கதாதா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.

உணவுப் பாத்திரங்களை மூடி வைக்கவேண்டும்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்’ என்று கூறினார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), ஆதாரம்: புகாரி.

தோல் பையின் வாயிலிருந்து நீர் அருந்துவது கூடாது!

நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாய்ப் பகுதியிலிருந்து (தண்ணீர் அருந்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.

உண்ணும் போதும் பருகும் போதும் அல்லாஹ்வைப் புகழ்ந்தால் அதை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்!

‘ஒரு அடியான் உணவைச் சாப்பிடும் போது அந்த உணவுக்காக அவனைப் புகழ்வதையும், நீரைப் பருகும் போது அந்த நீருக்காக அவனைப் புகழ்வதையும் அல்லாஹ் பொருந்திக்கொள்கிறான். அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அஹ்மத்

சாப்பிட்டபிறகு கூற வேண்டிய துஆ!  

“அல்ஹம்துலில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஸகனீஹி மின்கைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்” என யாரேனும் கூறினால் அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும். ஆதாரம்: அபூதாவூது, திர்மிதி   பொருள்: “எனது எவ்வித சக்தியும் ஆற்றலும் இன்றி எனக்கு இவ்வுணவை வழங்கி உண்ணச்செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்”   நபி (ஸல்) அவர்கள் முன்னாலிருந்து சாப்பாட்டுத் தட்டு எடுக்கப்படுமானால் ‘அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி கைர முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹூ ரப்புனா’  என்று கூறுவார்கள்.

பொருள்: துய்மையான ஏராளமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. இறைவா! நீ உணவின் பால் தேவையுடையவன் அல்லன்! உன்னை யாரும் விட்டுவிட முடியாது!

நன்றி: சுவனத்தென்றல்.காம்

வியாழன், 21 மார்ச், 2013



பாவமன்னிப்பு தேடுவது எவ்வாறு?


ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருப்பின், அவர் மனம் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவராக தூய மனதுடன் அவனிடம் பாவமன்னிப்பு கோருவாராயின், அந்த முஃமின் ஷிர்க் போன்ற படுபயங்கரமான பாவங்களைச் செய்திருப்பினும் அவருடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவதாக அல்லாஹ் தன் திருமறையிலே கூறியிருக்கிறான்.

அதுமட்டுமல்லாமல் அளவற்ற அருளாளனும் தன்னுடைய படைப்பினங்களின் மேல் கொண்டுள்ள அளவில்லாத கருணையினாலும் அந்த முஃமினுடைய பாவங்களை மன்னிப்பதோடு அல்லாமல் அவர் செய்த தீய செயல்களை நற்செயல்களாக மாற்றி விடுவிடுகிறான்.

அளவற்ற அன்புடையயோனாகிய அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவதற்கான நிபந்தனைகள்: -

மனத் தூய்மையுடன் பாவமன்னிப்பு கோரவேண்டும்

செய்துக் கொண்டிருக்கின்ற பாவமான செயல்களை உடனே நிறுத்த வேண்டும். மீண்டும் அந்தப் பாவமான செயல்களின் பால் திரும்பக் கூடாது
தாம் செய்த பாவமான செயல்களை நினைத்து கைசேதப்படவேண்டும்
ஒரு அடியான் மற்றொரு அடியானுக்குச் செய்த பாவங்களுக்காக முதலில் அந்த அடியானிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மரணத்தருவாயில் உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன்னர் பாவமன்னிப்பு கோரவேண்டும்

சூரியன் மேற்கில் உதயமாவதற்கு முன்னர் பாவமன்னிப்பு கோரவேண்டும்
வரம்பு மீறி தீங்கிழைத்த பாவிகளையும் அல்லாஹ் மன்னிக்கிறான்: -

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 39, வசனங்கள் 53-54 ல் கூறுகிறான்: -

39:53 ‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

39:54 ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

செய்த தவறுக்காக உடனே அல்லாஹ்வை நினைத்து, வருந்தி பாவமன்னிப்பு கோரினால் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களுக்கு சுவனபதியை பரிசாக தருவான்: -

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 3, வசனங்கள் 135-136 ல் கூறுகிறான்: -

3:135 தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.

3:136 அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.

தவ்பா செய்து, ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்பவருடைய பாவங்களை நன்மையாக அல்லாஹ் மாற்றி விடுகிறான்: -

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 25, வசனங்கள் 63-71 ல் கூறுகிறான்: -

25:63 இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் ‘ஸலாம்’ (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.

25:64 இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.

25:65 ‘எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்’ என்று கூறுவார்கள்.

25:66 நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.

25:67 இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.

25:68 அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

25:69 கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

25:70 ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

25:71 இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.

அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பாவத்தை விட்டும் திருந்திக் கொண்டால் அல்லாஹ் மன்னிக்கிறான்: -

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 6, வசனம் 54 ல் கூறுகிறான்: -

6:54 நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.

பாவ மன்னிப்பு கோருபவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

‘யார் தாம் செய்த பாவத்திற்காக பாவமன்னிப்பு கோருகிறாரோ அவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்’ (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், ஆதாரம்: திர்மிதி)

உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன் பாவமன்னிப்பு கோரவேண்டும்: -

‘அல்லாஹ் தன்னுடைய அடியானுடைய பாவமன்னிப்பை மரணத்தருவாயில் அவர் உயிர் விடும் வரைக்கும் ஏற்றுக் கொள்கிறான்’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர், ஆதாரம்: திர்மிதி)

பாவமன்னிப்புக் கோருவதன் அவசியம்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன்” அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம்

முன் பின் பாவங்கள் மன்னிக்கபட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களே அல்லாஹ்விடம் தினமும் நூறு முறை பாவமன்னிப்பு கோரினார்கள் என்றால் நாம் எவ்வாறு கோரவேண்டும் என்பதைச் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (அல்குர்ஆன் 2:286)

நன்றி: சுவனத்தென்றல்.காம்

சனி, 16 மார்ச், 2013



இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம்!


இஸ்லாம் ஏனைய மதங்களைப் போலல்லாமல் சகோதரத்துவத்தை அதிகமாக வலியுறுத்துகின்றது. அதற்கென இருக்கின்ற வழிகாட்டல்களை தெளிவாக விளக்குகின்றது. சகோதரத்துவத்திதை இல்லாமல் ஆக்குகின்ற அல்லது அதற்கு களங்கம் ஏற்படுத்துகின்ற அனைத்து வழிகளையும் முற்றாக தடை செய்திருப்பதோடு அதை மீறி செயல்படுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு எனவும் எச்சரிக்கைச் செய்கின்றது. இதன் மூலம் பலம் வாய்ந்த ஒரு சமுதாயத்தையும், ஈமானிய சமுதாயத்தையும் ஒற்றுமையை வளர்ப்பதுவுமே இதன் குறிக்கோளாகும். இது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.

இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது இதன் உண்மை நிலையை அறிந்துக் கொள்ளலாம். நபி (ஸ்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன்னிருந்த அக்கால அரேபியர்கள் எந்த முறையில் வாழ்ந்து  கொண்டிருந்தார்கள்? புனிதமான அந்நகரில் அவர்களுக்கு மத்தியில் கோத்திர வெறி தலைவிரித்தாடியது! கோத்திரங்களுக்கிடையில் வருடக்கணக்காக சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள்! வாழையடி வாழையாக அதனைத் தொடர்ந்து செய்துகொண்டே வந்தார்கள். அடிமை, எஜமான் என்ற பாகுபாடு அதிகமாக காணப்பட்டன! எஜமானர்களோ தங்களது அடிமைகளை தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடத்தினார்கள். நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம், மொழிக்கு மொழி, கோத்திரத்திற்கு கோத்திரம், இனத்திற்கு இனம், நிறத்திற்கு நிறம் என்றெல்லாம் பலவிதமான பாகுபாடுகளுடன் வாழ்ந்து வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்ட பிறகு இஸ்லாம் இவை அனைத்திற்குமே முற்றுப்புள்ளி வைத்தது. அல்-குர்ஆன் அருளப்பட்டது! ஈமானிய ஒளி பிரகாசித்தது! நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் அச்சமுதாய மக்களின் உள்ளத்துக்கு தெளிவுபடுத்தினார்கள். அவர்களுக்கு சிறந்த அறிவைக்கொண்டு நேர்வழியை அடைவதற்குரிய வழிமுறையைக் காட்டினார்கள். இதனால் அவர்களது உள்ளங்கள் அமைதி பெற்றன. இறைவிசுவாசம் என்ற ஒரே கோட்பாட்டின் கீழ் அவர்கள் ஒன்றினைந்தார்கள். அனைத்து வேற்றுமைகளில் இருந்தும் நீங்கிக்கொண்டார்கள். கோத்திர வெறி மற்றும் உலக ஆசைகள் இவைபோன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பகரமாக ஈமானிய சகோதரத்துவத்தை உருவாக்கினார்கள். அதே கோட்பாட்டின் கீழ் அனைவருமே ஒன்றினைந்து செயற்பட்டார்கள்! இதனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வல்லரசை ஏற்படுத்துகின்ற அளிவிற்கு மிகப்பெரும் வெற்றியையும் பெற்றார்கள்!

இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்!

(1) இஸ்லாம் சகோதரத்துவத்தை இறைவிசுவாசத்துடன் இணைத்துக் கூறுகின்றது. இரண்டு சகோதரர்களுக்கு மத்தியில் பிணக்கு ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைக்கவும் கட்டளையிடுகின்றது (அல்-குர்ஆன் 49:10).

இந்த வசனம் நமக்கு எதனைப் போதிக்கின்றது? இறைவிசுவாசிகள் அனைவருமே சகோதரர்கள் என்பதன் மூலம் சகோதரத்துவத்தைத் தூண்டக்கூடியதாகவும், சகோதரத்திற்கு களங்கம் ஏற்படுகின்ற விசயங்கள் நடந்துவிட்டாலும் அதைத் தீர்த்து வைக்கவும் ஏவுவதன் மூலம் சகோதரத்துவம் மென்மேலும் உருவாகும் என்பதனை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. நபித்தோழர்களது வாழ்க்கையும் இவ்வாறே அமைந்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் தனது தோழர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் வருகின்ற போது அவ்வப்போது அவற்றை தீர்த்துவைத்து ஒற்றுமையாக்கியிருக்கின்றார்கள். இதனால் தான் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுடன் பேசாமல் இருப்பதைக் கூட இஸ்லாம் தடை செய்திருக்கின்றது.

(2) ஒரு முஃமின் இன்னொரு முஃமினை நேசிப்பதற்கும் இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்).

நமது முஸ்லிம் சமூகத்தில் தற்போது நிலவுகின்ற ஒற்றுமை இன்மைக்கும் அதனால் நமது சமூகம் பல பிரிவுகளாகப் பிரிந்து சின்னாபின்னமாகப் போயிருப்பதற்கும் தற்காலத்தில் மிக முக்கிய காரணமாக அமைவது இந்த நபிமொழியில் அடங்கியிருக்கின்ற மிகக்கடுமையான எச்சரிக்கையை அலட்சியம் செய்து அதற்கு மாற்றமாக நடப்பதுவேயாகும் என்றால் அது மிகையாகாது!

ஒருவன் தனது வாழ்வில் முன்னேறிச் செல்கின்றபோது இன்னொருவன் அதனைப் பார்த்துப் பொறாமைக் கொள்ளக் கூடியவனாகவும் அவனது முன்னேற்றத்தை தடைச் செய்வதற்கும் முயற்சிக்கின்றான். இதனால், மேற்கண்ட நபிமொழியில் கூறப்பட்ட, இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்தை பின்பற்றாததால், தான் விரும்பக்கூடிய, ‘வாழ்க்கையில் முன்னேறுவதை’ இன்னொரு சகோதரனும் அடைவதை விரும்பாததால், அவன் துன்பப்படுவதைக் கண்டு இவன் இன்பமடைவதால் அங்கு பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன. இதனால் தான் ஒரு பிரச்சனையின் ஆரம்பத்தையே இஸ்லாம் தடுத்து சகோதரத்துவத்தை விரும்பக்கூடிய விசயங்களை ஊக்குவிக்கின்றது.

(3) எப்படிப்பட்ட விசயங்களுக்காக சகோதரத்துவ நட்பு வைக்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுத்தருகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்காகவே ஒருவனை வெறுத்து நடங்கள்’ (ஆதாரம் : அஹ்மத்)

அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்வதென்றால், நேசிப்பதென்றால் என்ன?

ஒன்றாகப் பழகும் சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கக்கூடியவாறு நல்லுபதேசங்களைச் செய்துகொள்ள வேண்டும்.  இவ்வாறு நட்பாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்கின்றபோது வணக்கவழிபாடுகளைப் புறக்கணிக்கின்ற போது மற்றவர் அச்சகோதரனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவன் அவற்றை அலட்சியப்படுத்துகின்றபோது, நல்லுபதேசங்களைக் கேட்காதபோது, அவற்றை அவர் ஏற்று செயல்படுத்தும் வரை அவரை அல்லாஹ்வுக்காக வெறுத்து நடக்கவேண்டும்.

(4) இஸ்லாம் இனம், நாடு, நிறம், சாதி, மொழி ஆகியவற்றுக்கிடையே எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை! மாறாக ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவரையும் ‘முஸ்லிம்கள்’ என்றே பார்க்கின்றது. இவற்றை நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களது வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறியலாம். பிலால் (ரலி) அவர்களைப் பொருத்தவரையில் ஒரு மிகப்பெரும் குரைசிக்குலத் தலைவனுக்கு அடிமையாக வாழ்ந்தவர். மேலும் அவர் கருமை நிறமுடையவராக இருப்பதோடு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவரும் ஆவார். நபி (ஸல்) அவர்களோ அல்லது நபித்தோழர்களோ அவரை ஒருபோதும் பிரித்துப்பார்க்கவில்லை! மாறாக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சகோதரர்கள் என்றகையில் அக்கால நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒற்றுமை இருந்தது.  இதனால் இவர் அபூபக்கர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்டார்கள். உலகிலேயே இரண்டாவது தரத்தில் இருக்கின்ற அல்-மஸ்ஜிதுல் நபவியில் முஅத்தினாக இருந்தார். மக்கா வெற்றியின் போது பெரும் பெரும் நபித்தோழர்கள் மக்காவிலே இருக்கின்ற சந்தர்ப்பத்திலே யாரை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்கு அழைத்துச் செல்வார் என்று எpதிர்ப்பார்த்திருந்தபோது ஆரம்பத்திலே அடிமையாகவும், நிறத்திலே கருமையாகவும் இருந்த பிலால் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்குள்ளே அழைத்துச் சென்றார்கள். இவைகள் அனைத்துமே, இஸ்லாம் சகோதரத்துவத்திற்கு பாகுபாடு காட்டுவதில்லை என்பதையே உணர்த்துகின்றது.  இதே போன்று ஏராளமான நிகழ்வுகள் நடந்திருப்பதையும் இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது விளங்கிக்கொள்ளலாம்.

மக்களுக்கு மத்தியில் இருக்கும் குலங்களும் கோத்திரங்களும் அவர்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் அறிந்துக்கொள்வதற்காகவே என்று இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. அவர்களுக்கு மத்தியில் எவ்வித உயர்வு தாழ்வு கிடையாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.

“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 49:13)

இந்த அல்-குர்ஆன் வசனம், அல்லாஹ் மனிதனை ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து படைத்தான் என்பதன் மூலம் அனைத்துப் பாகுபாடுகளையும் ஆரம்பத்திலேயே தடுக்கின்றது. வசனத்தின் இறுதியில் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர் யார் என்பதற்கு ஒரு அளவு கோலையும் தருகின்றது. அவர்களே அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர்! அவர்கள் தான் இறையச்சமுடையவர்கள். தற்போது உலகில் பெரும் பிரச்சனையாக கருப்பர், வெள்ளையர் பிரச்சனை இருப்பதை தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் அறியலாம். அதே போன்று சாதிப்பிரச்சனைகள் இந்தியாவில் பல இயங்களிலும் இது ஊடுருவி இருப்பதை பார்க்கலாம். இவைகள் அனைத்துக்கும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

‘அரபிக்கும் அஜமிக்கும், அஜமிக்கும் அரபிக்கும் மத்தியிலும் கருப்பனுக்கும் வெள்ளையனுக்கும் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும் மத்தியிலும் வித்தியாசங்கள் கிடையாது. அனைவருமே ஆதமில் இருந்து வந்தவர்கள்; ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர்’ (ஆதாரம் : அஹ்மத்)

இவ்வாறாக இன, நிற, இட, தேச, மொழி என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் இஸ்லாம் சகோதரத்துவத்தை முக்கியப்படுத்தி வலியுறுத்துவதை அறியலாம்.

நன்றி: சுவனத்தென்றல்.காம்


குர்ஆனின் ஏராளமான இடங்களில் அல்லாஹ் மிக்க கருணையாளன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் உண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆகவே இறைவன் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?
மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன்  அனைத்து மதத்தவர்களும்


குர்ஆனின் ஏராளமான இடங்களில் அல்லாஹ் மிக்க கருணையாளன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் உண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆகவே இறைவன் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?.


1. அல்லாஹ் அளவிலா கருணையாளன்..!

அல்லாஹ் அளவிலா கருணையாளன் – என்று அருள்மறை குர்ஆன் பலமுறை கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 114 அத்தியாயங்களில் ஒரேயொரு அத்தியாயம் (அத்தியாயம் 9 ஸுரத்துத் தௌபா)வைத் தவிர, மற்ற அனைத்து அத்தியாயங்களும் ‘பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ – என்கிற அழகிய வாக்கியத்தோடு ஆரம்பமாகின்றன. ‘பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ – என்கிற அரபிப் பதத்தின் பொருள் – அளவிலா கருணையும், இணையிலா கிருபையுமுடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் – என்பதாகும்.

2. அல்லாஹ் மன்னிப்பாளன்.

அருள்மறை குர்ஆனின் உள்ள ஏராளமான வசனங்கள் அல்லாஹ் மன்னிப்பாளன் என்று கூறுகின்றது. குறிப்பாக அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன்னிஸாவின் 25வது வசனமும், ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 74வது வசனமும் கீழ் கண்டவாறு கூறுகின்றன.

‘..இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்..(Al-Quran – 4:25).

‘..அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், பெரும் கருணையாளனாகவும் இருக்கின்றான்..(Al-Quran – 5:74).

3. அல்லாஹ் தண்டனை பெறத் தகுதியானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குகிறான்.

அல்லாஹ் கருணையாளனாகவும், மன்னிப்போனாகவும் இருந்தாலும் – தண்டனை பெறத் தகுதியானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதில் விதிவிலக்கில்லாமல் தண்டனை வழங்குகிறான். அருள்மறை குர்ஆனின் வசனங்கள் பலவற்றில் இறை விசுவாசம் கொள்ளாதவர்களுக்கும், இறை உண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு என்று குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்க மறுத்தவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகிறது. அருள்மறை குர்ஆனின் பல வசனங்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்க மறுத்தவர்களுக்கு நரகத்தில் வழங்கப்படும் கடுமையான தண்டனைகளின் வகைகள் என்ன?. அவைகள் எவ்வாறு வழங்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றது.

‘யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்: அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.’ ( Al-Quran4:56)

4. அல்லாஹ் நீதியாளன்.

அல்லாஹ் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?. என்பதே இங்கு கேட்கப்பட்ட கேள்வி. இங்கு ஒரு முக்கியமான கருத்தை நாம் கவனிக்க வேண்டும். அல்லாங் மன்னிப்பவன். மிக்க கருணையாளன். அதே நேரத்தில் அல்லாஹ் நீதி பரிபாலிப்பவனும் ஆவான். எனவே நீதி பரிபாலிக்கப்பட வெண்டுமெனில், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கியேத் தீர வேண்டும்.

அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன்னிஷாவின் 40வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.

‘நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஒரு அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்;…’ (Al-Quran 4:40)

மேலும் அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியாவின் 47வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது.

‘இன்னும் கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது: மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறு கணக்கெடுக்க நாமே போதும்.’ (Al-Quran 21:47)

5. தேர்வில் காப்பி அடிக்கும் மாணவனை – மன்னிக்கக்கூடிய ஆசிரியர் ஓர் உதாரணம்:

ஆசிரியர் ஒருவர் தேர்வு நடந்து கொண்டிருக்கும் பொழுது மாணவன் ஒருவன் காப்பி அடிப்பதை கையும் களவுமாக பிடித்து விடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆசிரியர் கருணை உள்ளம் கொண்டவர். மன்னிக்கும் மனோ பக்குவமும் உள்ளவர். எனவே தொடர்ந்து காப்பி அடிக்க மாணவனை அனுமதித்து விடுகிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். இரவு முழுவதும் கண் விழித்து படித்து விட்டு வந்து தேர்வு எழுதும் மற்ற மாணவர்கள் ஆசிரியரை கருணை உள்ளம் கொண்டவர் என்றும், மன்னிக்கும் மனோ பக்குவம் உள்ளவர் என்றும் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், மாணவர்கள் – ஆசிரியரை அநியாயக்காரர் என்று அழைப்பார்கள். ஆசிரியரின் கருணையுள்ளம் மேலும் பல மாணவர்களை தேர்வில் காப்பி அடிக்கத் தூண்டும். இதுபோல எல்லா ஆசிரியர்களும் கருணையுள்ளம் கொண்டு மாணவர்களை தேர்வில் காப்பி அடிக்க அனுமதித்தால், எல்லா மாணவர்களிடமும் தேர்வுக்காக படித்து எழுதும் பழக்கம் மாறி, காப்பி அடிக்கும் பழக்கம் உருவாகும். காப்பி அடித்ததால் எல்லா மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவார்கள். தேரிவியலில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறும் மாணவர்கள், நடைமுறை வாழக்கையில் தோல்வியைத்தான் சந்திப்பார்கள். மாணவர்களுக்காக தேர்வு நடத்துவதின் முழு நோக்கமும் தோல்வியைத் தழுவும் என்பது நிச்சயம்.

6. மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை, மறுமை வாழ்க்கைக்கான தேர்வு.

நம்முடைய இவ்வுலக வாழ்க்கையானது மறுமை வாழ்க்கைக்கு உரிய தேர்வுதான். அருள்மறை குர்ஆனின் 67வது அத்தியாயம் ஸுரத்துல் முல்க் – ன் 2வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது.

‘உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்: மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்: மிக மன்னிப்பவன்.’(Al-Quran – 67:2)

7. அல்லாஹ் எல்லா மனிதர்களையும் தண்டனை அளிக்காமல், மன்னித்து விடுவதாக இருந்தால் யார்தான் அல்லாஹ்வுக்கு அடிபணிவார்?.

அல்லாஹ் எந்த மனிதருக்கும் தண்டனை அளிப்பதில்லை. எல்லா மனிதர்களுக்கம் மன்னிப்பளித்து விட்டு விடுவான் என்கிற நிலை இருக்கும் எனில் – மனிதர்கள் ஏன் அல்லாஹ்வுக்கு அடி பணிந்து நடக்க வேண்டும்?. யாரும் நரகத்துக்கு போகமாட்டார்கள் என்பதை நானும் ஆதரிக்கிறேன். ஆனால் மனிதர்கள் வாழும் இந்த உலகம் அல்லவா நரகமாகப் மாறி விடும். எல்லா மனிதர்களும் பாரபட்சமின்றி சொர்க்கத்திற்குத்தான் செல்வார்கள் எனில் – மனிதன் இவ்வுலகில் படைக்கப் பட்டதின் நோக்கம்தான் என்ன?. எனவே இவ்வுலக வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைக்கு உண்டான ஒரு தேர்வேயன்றி – வேறில்லை.

8. அல்லாஹ் – தன் கட்டளைகளுக்குக் கீழ் படிகிறவர்களுக்கு மாத்திரம்தான் மன்னிப்பு வழங்குவான்.

அல்லாஹ் – தன் கட்டளைககளுக்குக் கீழ் படிகிறவர்களுக்கு மாத்திரம்தான் மன்னிப்பு வழங்குவான். அருள்மறை குர்ஆனின் 39வது அத்தியாயம் ஸுரத்துஜ் ஜுமரின் 53 முதல் 55வது வசனங்கள் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

‘என் அடியார்களே!. (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.’ (Al-Quran– 39:53)

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்: (வேதனை வந்து விட்;டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (Al-Quran– 39:54)

நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறவைனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றை பின்பற்றுங்கள். (Al-Quran– 39:55)

நான்கு வகையான செயல்கள் மூலம் நிங்கள் செய்கிற தவறுகளிலிருந்து திருந்திக் கொள்ள முடியும். அவையாவன:

1. முதலில் நீங்கள் செய்யும் தவறான செயல்கள் சரியானது இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

2. இரண்டாவதாக செய்யும் தவறுகளை உடனடியாக நிறுத்துங்கள்.

3. மூன்றவதாக நீங்கள் செய்த தவறுகளை இனி ஒருபோதும் செய்யாதீர்கள்.

4. கடைசியாக நீங்கள் செய்த தவறுகளால் எவரேனும் பாதிக்கப் பட்டிருந்தால், பாதிக்கப் பட்டதற்கான பரிகாரம் தேடுங்கள்;.

நன்றி: சுவனத்தென்றல்.காம்

வியாழன், 14 மார்ச், 2013




பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப் பணி


உலகையும் அதில் உள்ள மனிதர்கள் உட்பட அனைத்தையும் படைத்த படைப்பாளனைக் குறித்து அறிந்து கொள்ளாமல் படைப்புகளை வணங்கிக் கொண்டிருக்கும் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் பணியே அழைப்புப் பணியாகும்.

தொழுகை, நோன்பு ஆகியனபோல் அழைப்புப் பணியும் கலிமாச் சொன்ன ஒவ்வொரு முஸ்லிமின் அடிப்படைக் கடமையாகும். அதுபோல் முஸ்லிம்கள் சமகாலத்தில் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அவர்கள்மீது இழைக்கப்படும் அனைத்துக் கொடுமைகளுக்கும் அழைப்புப் பணியைச் சரிவரச் செய்யாததும் ஒரு முக்கியக் காரணம் என்றால் அது மிகையானதல்ல. அந்தளவு முக்கியப் பணியான அழைப்புப் பணியைப் பற்றி விளக்கமாகவும் இயக்கப் பிரிவுகள் குறித்துச் சுருக்கமாகவும் பிரிவுகளுக்கு மத்தியில் எவ்வாறு அழைப்புப் பணி செய்வது என்பது குறித்தும் இன்ஷா அல்லாஹ் இக்கட்டுரையில் காண்போம்.

அழைப்புப் பணி – திருமறையின் பார்வையில்

திருக்குர்ஆனில் அழைப்புப் பணி குறித்து, “உதுஊ இலா ஸபீலி ரப்பிக்”, “வ தவா ஸவ்பில் ஹக்”, “தஃமுரூன பில் மஹ்ரூஃபி வதன்ஹவ்ன அனில் முன்கர்”, “இகாமத்துத் தீன்” எனப் பல்வேறு பெயர்களில் இறைவன் குறிப்பிட்டுக் காட்டுகிறான். திருமறையில் அழைப்புப் பணி குறித்து எண்ணற்ற வசனங்கள் இருப்பதால் உதாரணத்திற்கு ஓரேயொரு வசனத்தைக் குறிப்பிட்டு காட்டுகிறேன்: “எவர் அல்லாஹ்வின்பால் (மக்களை) அழைத்து, நல்ல செயல்களைச் செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களைச் சார்ந்தவன்” என்று கூறுகிறாரோ, அவரைவிட சொல்லில் அழகியவர் யார் ? (திருக் குர்ஆன் 41:33) என அல்லாஹ் இப்பணியைக் குறித்து சிலாகித்துச் சொல்லிக் காட்டுகிறான்.

அழைப்புப் பணி – சுன்னாவின் ஒளியில்

முஹம்மது (ஸல்) தம் இறுதிப் பேருரையில் கூடியிருந்த மக்களிடம், "என்னிடமிருந்து ஓரேயொரு செய்தி தெரிந்தாலும் பிற மக்களிடம் கொண்டு செல்லுங்கள்" என்று கூறிய கட்டளையை ஏற்று உத்தமத் தோழர்களான ஸஹாபாக்கள் உலகின் பல்வேறு பாகங்களுக்குச் சென்று அழைப்புப் பணியாற்றியதை வரலாற்றில் காண்கின்றோம். தனக்குப் பிடித்தமானவர்கள் என்றில்லாமல் தன்னைக் கடுமையாக எதிர்த்த அபூஜஹலும் எரிச்சல் அடையும்வரையில் அழைப்புப் பணியை அவனிடமும் நபி (ஸல்) செய்ததைக் காண்கின்றோம். அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக ! உம்மைக் கொண்டு ஒரு மனிதனுக்கு நேர்வழி கிடைப்பது சிவந்த ஒட்டகங்கள் கிடைப்பதைவிடச் சிறந்தது" எனக் கூறினார்கள் (புகாரி, முஸ்லீம்)

அழைப்புப் பணியும் இயக்க பிரிவுகளும்

இஸ்லாத்தை இம்மண்ணில் நிலைநாட்டுவதற்காகவே போராடுவதாக சொல்லும் இஸ்லாமிய, சமுதாய இயக்கங்கள், போராட்டத்தின் சமகால வடிவமான அழைப்புப் பணியை எடுத்து செல்வதில் பிறருக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆனால் வேதனைக்குரிய யதார்த்தம் என்னவென்றால் இயக்கங்களின் செயல்பாடுகள் அழைப்புப் பணியை வேகப்படுத்துவதற்குப் பதிலாக அழைப்புப் பணியின் வேகத்தை மட்டுப்படுத்துவதாகவும் அதற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் உள்ளன என்றால் அது பிழையான கருத்தல்ல.

பிரிவுகளால் ஏற்ப(ட்ட)டும் பாதிப்புகள்

தமிழகத்தில் 1990களுக்கு முன்னால் இயக்கங்கள் குறைவாக இருந்தாலும் அங்கங்கு சில தன்னலமற்ற தனிமனிதர்கள் மற்றும் சில அமைப்புகளின் தன்னலமற்ற தியாகம் காரணமாக மீனாட்சிபுரங்கள் ரஹ்மத் நகராக மாறும் அளவுக்கு அழைப்புப் பணி ஆரவாரமின்றி நடைபெறத்தான் செய்தது. ஆனால் 90களின் தொடக்கத்தில் இயக்கங்கள் அதிகரித்த பிறகு அழைப்புப் பணி வெகு ஆரவாரத்தோடு நடைபெறுவதாக காட்சியளித்தாலும் அதன் பக்க விளைவுகளும் அதிகம் என்பதை மறுக்க இயலாது. ஏனென்றால் ஒரே அடிப்படையில் உள்ள அமைப்புகளே வெகுசில காரணங்களுக்காகப் பலஅமைப்புகளாகச் சிதறிக் கிடப்பதால் ஒவ்வொன்றும் தத்தம் இருப்பை உறுதி செய்யவும் தங்கள் செல்வாக்கை அதிகரிப்பதிலுமே அதிகக் கவனம் செலுத்துவதால் அழைப்புப் பணியை இலக்காகக் கொண்டு செயற்படுவதற்குப் பதிலாக ஓய்வுநேர/பகுதிநேரப் பணியக்ச் செய்யும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அழைப்புப் பணி நிகழ்ச்சிகளை நடத்துவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி ஸ்லாட்டுகளில்கூட அழைப்புப் பணியைவிட அதிகமாகப் பிறசகோதர இயக்கங்களின் மீதான வசைபாடலே அதிகரித்து உள்ளது. இதனால் இயல்பாக அந்த நேரத்தில் இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் தொலைக்காட்சியைப் பார்க்கும் பிறமதச் சகோதரர்கள் இஸ்லாம் மீது வெறுப்பு கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இஸ்லாமிய அமைப்புகள் பிரிவுபடாமல் ஒற்றுமையாக இருந்தால் எந்தளவு வலிமையாக அழைப்புப் பணி இருக்கும் என்பதற்கு ஒரு நேரடியான உதாரணம். சென்னை மண்ணடிப்பகுதி முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பகுதி மட்டுமல்ல, பிற சமூக மக்களும் அதிகமாக கலந்து வாழ்வதால் அழைப்புப் பணிக்கு ஏற்ற களமாய் உள்ளது. மண்ணடியில் சமுதாய இயக்கங்களின் அலுவலகங்கள் பல குறுகிய சந்துகளில் இருக்கின்றன. எளிதாக அடையாளம் காண முடியாமல் குறுகிய சந்துகளில் இருக்கும் எத்தனையோ அமைப்புகளின் அலுவலகங்களில் உள்ள அழைப்புப் பணி மையங்களுக்கு எந்தப் பிறமதச் சகோதரர்கள் ஆர்வத்தோடு வருவார்கள்? எப்படி மக்களைத் தங்களை நோக்கி அழைக்க முடியும்?. அதேநேரத்தில் எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து அல்லது குறைந்தபட்சம் அழைப்புப் பணிக்காக மட்டுமாவது இணைந்து, சென்னை கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் மிகப்பெரும் கட்டடத்தில் Jesus Calls எனும் பெயரில் மிகப்பெரும் அழைப்பு நிலையம்போல் வைத்திருந்தால் அல்லாஹ் நாடினால் நம் முயற்சிகள் இப்போது இருப்பதைவிடப் பலமடங்கு பலன் தரும் என்பதில் ஐயமில்லை.

பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புபணி

இன்றைய சூழலில் பிரிவுகள் என்பன யதார்த்தபூர்வமானது. அவற்றையெல்லாம் ஒழித்து, ஓரே நாளில் ஓரே அமைப்பாக மாற வேண்டும் என்பது நல்ல இலட்சியமாக இருந்தாலும் உடனடியாக நடப்பதற்கான சாத்தியம் குறைவானது. எனவே அவற்றிற்கு மத்தியில் அழைப்புப் பணி எவ்வாறு செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

இருக்கின்ற அமைப்புகளில் பெரும்பான்மையானவை அழைப்புப் பணி செய்ய கூடியதாக அல்லது அதற்கு உதவி செய்ய கூடிய ஒன்றாக அல்லது குறைந்த பட்சம் ஆர்வப்படக் கூடிய ஒன்றாக உள்ளதைப் பார்க்கின்றோம். எனவே பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப் பணி இரண்டு விதமாகச் செய்யலாம்.

முதலாவதாக ஒவ்வொரு அமைப்பும் பல பணிகளைச் செய்தாலும் அவை ஒவ்வொன்றும் மக்கள் சேவை, பத்திரிகையியல், கல்வி், மருத்துவ உதவி, தற்காப்பு, சமூக சீர்திருத்தம், அமல்களில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், ஃபிக்ஹ் என ஏதேனும் ஒரு தளத்தில் பிரதானமாக செயற்படுவதைக் காண்கின்றோம். அதுபோல் சில அமைப்புகள் ஒரு சில மாநிலத்தில் மட்டும் அல்லது ஒரு சில பகுதிகளில் மட்டும் செயற்படுவதைக் காண்கின்றோம். எனவே எல்லா அமைப்புகளும் தங்கள் பகுதிகளில் தங்கள் தளங்களில் செயற்பட்டுக் கொண்டு, தங்கள் தொண்டர்களில் ஒரு பகுதியினரையும், அதுபோல் தங்கள் பொருளாதாரத்தில் ஒரு பகுதியையும் அழைப்புப் பணிக்கென அர்ப்பணிக்க வேண்டும். இப்படியாக எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து மேலே சொன்னதுபோல் சென்னை Jesus calls போன்று முக்கிய நகரங்களில் எல்லா வசதிகளுடன் எல்லாரையும் சென்றடையும் வகையில் மையங்களை நிறுவிக் கூட்டாக அழைப்புப் பணி செய்யலாம்.

எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து மேற்கண்டவாறு அழைப்புப் பணியில் ஈடுபட முடியாவிட்டால், குறைந்த பட்சம் எல்லா அமைப்புகளும் தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில், தங்கள் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு அழைப்புப் பணியை திறம்படச் செய்ய வேண்டும். ஆனால் தங்கள் பிரசார பணியில் எக்காரணத்தைக் கொண்டும் பிற அமைப்புகளை விமர்சித்தலை, அதிலும் குறிப்பாகத் தனிமனித விமர்சனத்தை முழுமையாய்த் தவிர்க்க வேண்டும். பிறமதச் சகோதரர்களுக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ள பிரிவு பிரச்னைகளைப் பேசக் கூடாது. இஸ்லாத்துக்கு எதிரான தர்கா வழிபாடு, பித்அத்தான செயல்களை எதிர்ப்பதில் எச்சமரசமும் தேவையில்லை. தங்கள் பகுதியில் பிற அமைப்புகள் நடத்தும் அழைப்புப் பணி நிகழ்ச்சிகளுக்கு முடிந்த ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் தடைகற்களை ஏற்படுத்தாமலாவது இருக்க வேண்டும்.

எக்குழுவிலும் இல்லாத தனிநபர்களும் தங்களால் முடிந்த அளவு இஸ்லாத்தைப் பிறமக்களுக்கு எடுத்துச் சொல்வதில் முனைப்பாக இருக்க வேண்டும். தாங்கள் ஒரு ஜமாஅத்தில் இல்லை என்பது இப்பணியைத் தட்டிக் கழிப்பதற்கான காரணமாக இருக்கக் கூடாது. முடிந்தவரை மஹல்லா போன்ற குறுகிய வட்டத்திலாவது ஒத்த கருத்துள்ளவர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாக செயல்பட்டால் அவர்களின் பணி இன்னும் மிகப் பெரிய பலனைத் தோற்றுவிக்கும். இஸ்லாத்தைப் பற்றிய அறிவை, புத்தகங்கள் படித்தல், ஒலி – ஒளி பேழைகளைக் கேட்டல், அறிஞர்களுடன் கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அழைப்பு பணியின் பல் வேறு முறைகள்

எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஓரேஅமைப்பாக செயல்பட்டாலும் அல்லது ஒவ்வொன்றும் தனித்தனியே அழைப்புப் பணியைச் செய்தாலும் அல்லது தனித்தனி மனிதர்கள் அழைப்புப் பணியில் ஈடுபட்டாலும் எல்லோருக்கும் பொதுவான அழைப்புப் பணி முறைகளில் ஒரு சிலவற்றை விவரிக்கிறேன்.

தனிப்பட்ட மனிதர்கள் அழைப்புப் பணி செய்யும் உத்திகள்

இயக்க பின்புலம் இல்லாத தனிப்பட்ட மனிதர்கள்கூட அழைப்புப் பணி செய்ய ஏற்றமுறை தனிப்பட்ட முறையில் மக்களைச் சந்திப்பது. நாம் ஒவ்வொருவரும் தினந்தோறும் சந்திக்கும் மனிதர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். ஒன்று நாம் எப்போதும் அல்லது அடிக்கடி சந்திக்கும் அலுவலக நண்பர்கள், அண்டை வீட்டார்கள், அடிக்கடி போகும் கடை அல்லது உணவகத்தில் வேலை செய்பவர்கள் போன்றவர்கள். மற்றொன்று நம் பிரயாணத்தில் சந்திக்கும் நபர்கள், கடைவீதிகளில், டீ கடைகளில் சந்திக்கும் நபர்கள் போன்றோர்கள். இருவேறு குழுக்களிடம் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளைக் கையாண்டு அழைப்புப் பணி செய்ய வேண்டும்.

நடைமுறையில் கிறித்துவர்கள் செய்வதைப் போன்று பேருந்து நிலையம், இரயில் நிலையம், கடைகள் போன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இஸ்லாம் குறித்த பிரசுரங்களையும் புத்தகங்களையும் விநியோகிக்கலாம். மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் பொதுவாகத் தங்களை யாரும் விசாரிக்க வரமாட்டார்களா என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். அப்படிப்பட்ட நிலையிலுள்ளவர்களிடம் சென்று நோய் விசாரித்து ஆறுதல் மொழி சொல்லி அவர்களுக்காகப் பிராத்திப்பது அவர்களிடத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டுமல்ல, அது ஒரு சுன்னாவும் ஆகும். ஆனால் வருந்தத்தக்க விதத்தில் நமக்கு இதில் முன்னோடியாக அரபு நாடுகளில்கூட கிறித்துவர்களே உள்ளனர். அதுபோல் சிறைச்சாலைகளில் குறிப்பாக அமீரகத்தில் உள்ள சிறைகளில் முஸ்லிம்களில் சிலரே அவர்களை எந்த ஒரு சமுதாயச் சொந்தமும் சந்திக்காமல், கிறித்துவர்களின் குழு சென்று சந்தித்து பொருளாதார உதவி செய்ததன் ஒரே காரணத்தால் தன்னை விசாரிக்க சிறைக்கு வராத இஸ்லாமியச் சகோதரர்களைவிட, தன்ன்னிடம் வந்து கனிவான சொற்கள்பேசி, காசுபண உதவியும் செய்யக்கூடிய கிருஸ்த்துவக் குழுவினரிடம் ஈர்ப்பும் கொண்ட முஸ்லிம்களையும் நாம் காணமுடிகிறது. கிருஸ்த்துவர்கள் பின்பற்றும் பிரச்சார உத்தியைக் கையிலெடுத்து, சிறைகளில் நாம் அழைப்பு பணியைச் செய்தால் இறைவன் நாடினால் அதிலிருந்து வாய்மையான முஸ்லிம்கள் கிடைப்பார்கள்.

குழு ரீதியாக அழைப்புப் பணி செய்யும் உத்திகள்

தனிப்பட்ட முறையில் செய்வதைவிட ஜமாஅத்தாக அழைப்புப் பணி செய்வது கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குழுவாகச் செய்யப்பட வேண்டிய அழைப்புப் பணி உத்திகளில் சில:

* ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் விடுமுறை தினங்களில் எல்லா சமய மக்களையும் ஒன்று கூட்டி இஸ்லாம் குறித்த சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு வரும் மக்களின் இஸ்லாம் குறித்த ஐயங்களுக்குத் தெளிவு தரும் வகையில் கேள்வி – பதில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யலாம்

* இஸ்லாம் குறித்த தெருமுனைப் பிரசாரங்கள் சேரிகள்முதல் அக்ரஹாரம்வரை நடத்தப்பட வேண்டும். நகரின் மையப்பகுதியில் இஸ்லாம் குறித்த செய்திகளை உதாரணத்திற்கு 112 வது அத்தியாயத்தை, "இறைவன் என்பவன் யார்?" அல்லது "இறைவனின் பண்புகள்" எனும் தலைப்பில் டிஜிட்டல் போர்டுகளாக வைக்கலாம்.

* பெருநாள் விடுமுறைகளில் பிற சமூக மக்களுக்கு விருந்து கொடுத்து இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் “ஈத் மிலன்” நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

* பொதுவான தலைப்புகளில் அனைத்து மதத்தாரையும் சேர்த்து, கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

* சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது தாராளமாக உதவி செய்வதன் மூலம் இஸ்லாம் குறித்த நல்லபிப்ராயத்தைப் பிறமக்களிடம் ஏற்படுத்தலாம்.

* இலவச ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள் போன்றவற்றை அனைத்து சமூகத்தினரும் வாழும் பகுதியில் நடத்தலாம்.

* முஸ்லிம்கள் தாங்கள் நடத்தும், தங்கும் உணவகங்களில் (Hotels) விருந்தினர் அறைகளில் குர்ஆன் மற்றும் இதர இஸ்லாமிய புத்தகங்களை வைக்கலாம்.

* தங்களுடைய திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலான குத்பாவில் பிறமதத்தாரை மையப்படுத்திப் பேசலாம். இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் புத்தகங்களையும் அவர்களுக்கு விநியோகிக்கலாம்.


ஊடகங்களின் மூலம் அழைப்புப் பணி உத்திகள்

இன்றைய உலகில் ஒரு கொள்கையைப் பிரசாரம் செய்வதில், ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்களிப்பை யாரும் புறக்கணிக்க முடியாது. அவ்வளவு வலிமையான ஊடகங்களை பயன்படுத்தி அழைப்புப் பணி செய்யும் உத்திகளில் சில:

* இஸ்லாத்தின் கொள்கைகளை எளிமையான நடையில் சொல்லும் புத்தகங்களை மலிவு விலைப் பதிப்பாக வெளியிடலாம்.

* புத்தகக் கண்காட்சிகளில் ஸ்டால் எடுத்து இஸ்லாமியப் புத்தகங்கள், அல்குர்ஆன், முஹம்மது (ஸல்) வரலாறு போன்ற புத்தகங்களைப் பிற சமூகத்தினருக்குக் கழிவு விலையில் கொடுக்க வேண்டும்.

* அஞ்சல் வழியாக மாற்று சமூகத்தினரின் வீடுகளுக்குப் புத்தகங்கள் அனுப்ப வேண்டும்.

* ஒவ்வோர் ஊரிலும் ஒரு பொது நூலகம் ஒன்றை ஏற்படுத்தி, அதில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் வைக்க வேண்டும்.

* முக்கிய செய்தித்தாள்களில் தினமும் அல்லது வாரம் ஒருமுறை அச்சூழலுக்கு ஏற்ற மாதிரி - உதாரணத்திற்கு அண்மையில் புதிதாக வந்துபோன ஸ்வைன் ப்ளு நோய் பற்றி - குரான் வசனங்கள், ஹதீஸ்களை வெளியிடலாம்.

* கேபிள் டி.வி. நெட்வொர்க்கைப் பயன்படுத்தி தினமும் இஸ்லாமியச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

* இணையத்தளங்களிலும் chat groupகளிலும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட விளக்கங்களை அளிக்கலாம்

* தற்போது தொலைக்காட்சிகளில் இஸ்லாமிய அமைப்புகள் கைவசம் உள்ள ஸ்லாட்டுகளில் பிற இயக்கத்தினரை விமர்சிப்பதை விடுத்து, அழைப்புப் பணி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

அழைப்புப் பணி என்பது ஒரு சில இயக்கங்களின் மீதோ அல்லது ஒரு சில குழுக்களின் மீதோ மட்டும் கடமையானதல்ல. மாறாக அது கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையானதாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதைத் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் செய்ய வேண்டும். இயக்கங்களின் பிரிவுகள் அழைப்புப் பணியில் பக்கவிளைவுகளை (side effects) ஏற்படுத்தியிருந்தாலும் அது நாம் அப்பணியைச் செய்யாமல் கைவிடுவதற்கு ஒரு காரணமாய் இருக்கக் கூடாது. மாறாக பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப் பணி பல்வேறு உத்திகளின் மூலம் செய்வது என்று இதுவரை பார்த்தவற்றிற்கு ஏற்ப நம் சக்திக்கு உட்பட்ட வகையில் அழைப்புப் பணி செய்ய வேண்டியது அவசியமானது மட்டுமல்ல இன்றைய சூழலில் அவசரமானதும் கூட.

நன்றி : சத்திய மார்க்கம்





வட்டியின் அடையாள அட்டை


பெயர்: வட்டி

புனைப்பெயர்: இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சி, உயிர்க்கொல்லி

உடன் பிறந்தோர்: ஒரு பைசாவிலிருந்து பல பைசா வட்டி வகைகள், கந்து, மீட்டர், இன்ஷூரன்ஸ், வங்கிக் கடன், நிதியுதவி (எ) ஃபைனான்ஸ், க்ரெடிட் கார்டு வட்டிகள்

நண்பர்கள்: பணக்கார ஃபைனான்ஸியர்கள், சேட்டுகள், வட்டிக்குக் கடன் கொடுப்போர், லேவாதேவிக்காரர்கள்

எதிரி: தர்மம், ஸகாத்

தொழில்: சுரண்டல்

உபதொழில்: தற்கொலைக்குத் தூண்டுதல், கற்பை நஷ்ட ஈடாகப் பெறுதல்

முகவரி: வங்கிகள், அடகுக்கடை, ஃபைனான்ஸ் (நிதி நிறுவனங்கள்)

விருப்பம்: சொத்து, உயிர், கற்பு

வெறுப்பு: தனக்கெதிரான பிரச்சாரம், வட்டியில்லாக் கடன்

எதிர்காலத் திட்டம்: கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பது

சாதனை: உலக வங்கியில் வட்டிக்குக் கடன் வாங்கியதில் இந்தியாவுக்கு முதலிடம் (ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் 24,000 ரூபாய் கடன்).

பரிசு: நிரந்தர நரகம்


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).


அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, எந்தவிதமான கஷ்ட காலங்களிலும் வட்டியின் பக்கம் மட்டும் தலைசாய்த்து விடாதீர்கள். ஏனெனில் வட்டி சம்பந்தப்பட்ட அனைத்தையும் அல்லாஹ் வெறுக்கின்றான்.


இதைப்பற்றி, அல்லாஹ் தன் திருமறையில்,

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை ( (2:276) என்றும்,


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக் கூடிய வட்டியை(வாங்கி)த் தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி(இதைத் தவிர்த்து)க் கொண்டால் வெற்றியடைவீர்கள் (3:130) என்றும் எச்சரிக்கிறான்.


"வட்டி வாங்குபவர்கள், வட்டி கொடுப்பவர்கள், அதை எழுதுபவர்கள் மற்றும் ஸதகா கொடுக்க மறுப்பவர்கள் – இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். - அறிவிப்பாளர் : அலீ (ரலி); திர்மிதி 5347.


பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். - அவ்னிப்னி அபீ ஜுஹைஃபா (ரலி); புகாரீ 2086.


"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "இறைத்தூதர் அவர்களே! அவை எவை?" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,

1."அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது

2.சூனியம் செய்வது

3.நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வது

4.வட்டி உண்பது

5.அனாதைகளின் செல்வத்தை உண்பது

6.போரின்போது புறமுதுகு காட்டி ஓடுவது

7.அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின்மீது அவதூறு கூறுவது" என்று (பதில்) கூறினார்கள். - அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி); புகாரீ 2766.

இப்படி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெறுக்கின்ற வட்டியின் பக்கம் நாம் போகலாமா?

"பிறரிடம் உதவி கேட்டால் தர மறுக்கிறார்கள். வட்டியில்லா கடனும் கொடுக்க மறுக்கிறார்கள். பிறகு என்னதான் செய்வது? வட்டிக்குத்தான் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது" என்று சிலர் கூறுகிறார்கள். செலவழிக்கப் பணம் இல்லாவிட்டால் வட்டிக்குப் பணம் கிடைக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டு வட்டியின் பக்கம் போகிறோம். வட்டி என்பதே கிடையாது என்று நினைத்தால் போவோமா? சற்றுச் சிந்தியுங்கள். தங்களது ஆடம்பரச் செலவுகளுக்கும் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிறர் பார்த்து மெச்சுவதற்காக ஊராருக்கு விருந்து போடுவதற்கும் வட்டிக்குப் பணம் வாங்கும் எத்தனையோ பேர் நம் சமுதாயத்திலும் உள்ளனர். பன்றிமாமிசம் ஹராம் என்று எல்லோருக்கும் தெரியும். எந்த அளவு பசியிருந்தாலும் பன்றி மாமிசத்தை உண்ண மாட்டோமல்லவா. உணவு எதுவும் கிடைக்காத, உயிர்போகும் பட்சதில் பன்றி மாமிசத்தை உண்ணலாம் என்று சலுகை இருந்தும் நாம் உண்ண மாட்டோம். அதேபோன்றே இந்த வட்டியையும் ஒரு பன்றி மாமிசமாகக் கருத வேண்டும்.

ஏனெனில் இந்த வட்டியின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் எத்தனை? தனது கற்பைப் பறிகொடுத்த பெண்கள் எத்தனை? தம் பெற்றோர், பிள்ளைகள், உறவினர்களை இழந்தோர் எத்தனை? இவை யாவற்றையும் கணக்கிட முடியாது. அந்த அளவிற்கு இந்த வட்டியின் கொடுமை தலை விரித்தாடுகிறது. வட்டிக்காகப் பணம் கொடுப்பது, வட்டிக்குப் பணம் வாங்குவது மட்டுமல்ல, அதற்காக சாட்சிக் கையெழுத்துப் போடுவதும் பாவமேயாகும். அதற்கு மறுமையில் மிகப்பெரும் வேதனை மட்டுமல்ல, நிரந்தர நரகமும் உண்டு.

இதைப்பற்றி அல்லாஹ் தன் திருமறையில்,

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُواْ إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىَ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللّهِ وَمَنْ عَادَ فَأُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழமாட்டார்கள். அதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது. என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:275) என்று எச்சரிக்கிறான்.

இன்னும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். என்னிடம் வந்தவர்கள் தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக் கொண்டு நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது, அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! "அவர் யார்?" என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள், "ஆற்றில் நீங்கள் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!" எனக் கூறினார்கள். - அறிவிப்பாளர் : ஸமுரா (ரலி); புகாரீ 2085.

எனவே அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே,

நம்மில் வசதியுள்ளவர்கள் ஏழ்மையில் உழல்வோருக்குக் கண்டிப்பாக வட்டியில்லாக் கடன் கொடுக்க முன்வர வேண்டும். வசதியற்றவர்கள் வட்டிக்காகப் பணம் வாங்குதலும், நகை அடகு வைத்தலும் செய்யாமல் இருக்க வேண்டும். வட்டியை ஒழிக்கப் போராட வேண்டும். வட்டியில்லாக் கடன் திட்டத்தை ஒவ்வொரு ஊரிலும் ஏற்படுத்த வேண்டும். அப்போது இந்த உயிர்க் கொல்லியான வட்டி, இந்த உலகை விட்டு ஒழியும், இன்ஷா அல்லாஹ்.

நன்றி: இஸ்லாமிய பூங்கா


 "நோய்" - அல்லாஹ்வின் ரஹ்மத்


''யா அல்லாஹ், என்மேல் கருணை காட்டக் கூடாதா?'' என்று ஒரு நோயாளி கேட்பதே அறியாமையால்தான்.


ஏனெனில் அல்லாஹ் சொல்கிறான்: "என் அடியானுக்கு எதை ரஹ்மத்தாகத் தந்திருக்கிறேனோ அதிலேயே மீண்டும் எப்படி ரஹ்மத் செய்ய முடியும்?''
-- (ஹதீஸ் குத்ஸி)


நமக்குத் தெரிந்தவர்களிடம் நலம் விசாரிக்கின்றபோது பலரும் பொதுவாகச் சொல்லும் பதில்...


"அத ஏன் கேட்கிறீங்க..? எப்ப பாத்தாலும் ஏதாவது நோய்... நிம்மதியே இல்லை.''


ஏதோ இவ்வுலகிலுள்ள ஒட்டு மொத்த மூஸீபத்துகளும் துன்பங்களும் தனக்கே வந்துவிட்டது போல் நொந்து போய்விடுகின்றார்.


உண்மையில் நோய் என்பது என்ன? சோதனையா? அருளா? அதனால் மனிதன் நிம்மதி பெற வேண்டுமா அல்லது துக்கமா?



நோய் என்பது இறைவனின் ஒரு வகை ரஹ்மத்-அருளாகும். ஒரு முஸ்லிம் நோயாளியானால் எப்படி இருக்க வேண்டும் என இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளது.


நோய்வாய்ப்பட்டு மரணத் தருவாயில் கிடந்த ஒரு வாலிபனிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்" எப்படி இருக்கிறீர்கள்?''
இறைத்தூதர் அவர்களே, அல்லாஹ்வின் ரஹ்மத்தை நம்பிக்கை வைத்தவனாகவும் என் பாவங்களை நினைத்து பயந்தவனாகவும் இருக்கிறேன்.''


"இந்த இரண்டு சிந்தனையும் எந்த மனிதனின் உள்ளத்தில் இருந்தாலும் சரியே, அல்லாஹ் அவனுடைய நம்பிக்கைக்கு மோசம் செய்ய மாட்டான். அவன் பயப்படுவதிலிருந்து பாதுகாப்பும் கொடுப்பான்' என்று நபி(ஸல்)  அவர்கள் கூறினார்கள்.


நோய் மூலம் உடலாலும் உள்ளத்தாலும் மனிதன் அடைகின்ற பலா பலன்கள் ஏராளம்.


1. தீமைகள் மன்னிக்கப்படுகின்றன:

நபி (ஸல்)  அவர்கள் கூறுகிறார்கள். ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு எந்த ஒரு சிறிய சோதனையோ கவலையோ துக்கமோ ஒரு முள் குத்துவதால் வரும் சிறிய வேதனையோ எது வந்தாலும் சரி அதன் மூலம் அல்லாஹ் அவனின் பாவங்களை மன்னிக்காமல் விடுவதில்லை.


'ஒரு மூமின் நம்பிக்கையாளன் தன் குடும்பம்,குழந்தைகள்,தன் செல்வம் இவற்றில் தொடர்ந்து சோதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான் எனில் அல்லாஹ்வை மறு மையில் சந்திக்கும்போது அவனுடைய வினைப் பட்டியலில் எந்தத் தவறும் இருக்காது'' என்றும் நபி (ஸல்)  அவர்கள் கூறியுள்ளார்கள்.


ஒரு முஸ்லிம் பாவங்கள் செய்து அவை மன்னிக்கப்பட அவன் வேறு முயற்சிகள் செய்யாதபோது கவலை, நோய் போன்றவற்றால் அல்லாஹ் அவற்றை மன்னிக்கின்றான்.


எனவே தான் அரபியில் ஒரு பழமொழி கூறப்படுகிறது. "சோதனைகள் மட்டும் இல்லாவிட்டால் மறுமையில் நாம் நன்மைகள் இல்லாதவர்களாக அல்லாஹ்வின் முன் நிற்போம்.'


2. மறுமையில் பன்மடங்கு நன்மைகள்:


ஜாபிர்(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸ் திர்மிதியில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது. "மறுமையில் ஒரு கூட்டத்தினர் இப்படி நினைப்பார்கள். உலகில் வாழ்கின்ற போது தங்களின் உடல்கள் வெந்நீரில் போட்டு கொதிக்க வைக்கப்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?


காரணம் உலகில் சோதிக்கப்பட்டவர்கள் மறுமையில் கிடைக்கும் நன்மைகளை கண்ணால் காணுகின்ற போது இப்படி நினைப்பார்கள். உலகின் சோதனைகள் மறுமையில் நன்மைகளே.


3. நோயாளியுடன் அல்லாஹ்வின் நெருக்கம்:


சாதாரண நெருக்கமல்ல மிக அதிக நெருக்கம்.

மறுமையில் அல்லாஹ் கேட்பான். ஆதத்தின் மகனே, நான் உலகில் பசித்திருந்தேன், தாகித்திருந்தேன், நீ ஏன் உண வளிக்கவில்லை; நீர் புகட்டவில்லை என்று தொடங்கும் ஹதீஸின் தொடரில் "நான் நோய் வாய்ப்பட்டிருந்தேன். என்னை நீ நலம் விசாரிக்க வர வில்லையே'' என்று கேட்டு "இன்ன அடியான் நோயாளியாக இருந்தான். அவனை நோய் விசாரித்திருந்தால் என்னை அங்கு நீ கண்டிருப்பாய்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.


இந்த ஹதீஸில் பசி தாகம் பற்றிக் கூறும்போது "எனக்கு உணவளித்திருப்பாய், எனக்கு நீர் புகட்டியிருப்பாய்' என்று கூறும் இறைவன், நோய் நலம் விசாரிப்பதைப் பற்றிக் கூறும் போது "என்னையே கண்டிருப்பாய்' என்கிறான். அந்த அளவுக்கு நோயாளியுடன் அல்லாஹ்வின் நெருக்கம் இருக்கிறது.


4. பொறுமையின் அளவைத் தெரிந்து கொள்ள...


சோதனைகள் இல்லையெனில் பொறுமையின் சிறப்பு வெளியே தெரியாது. பொறுமை எல்லா நன்மையையும் கொண்டு வரும்.


"அதிக நற்கூலி அதிக சோதனைகளில் உள்ளது. எவரை அல்லாஹ் சோதிக்கின்றானோ அவர்களை அல்லாஹ் அதிகம் நேசிக்கின்றான். யார் சோதனைகளைப் பொறுத்தாரோ அவரை அல்லாஹ்வும் பொருந்திக் கொள் கிறான். அவற்றைக் கண்டு கோபப் படுகின்றவர் மீது அல்லாஹ்வும் கோபப்படுகிறான்' என்று நபி (ஸல்)  கூறுகிறார்கள்.


5. உள்ளத்தால் இறைவனைத் தேடுதல்..


அல்லாஹ்வை மறந்து அவனிடம் துஆ எதுவும் கேட்காமல் ஓர் அடியான் இருந்தால் அவனை சோதிக்க நோயை கொடுக்கின்றான் அல்லாஹ்.


நோய்வாய்ப்பட்டவன் இறைவனை அதிகமாக நினைப் பதை நாம் கண்கூடாகக் காண்பதுண்டு. தன்னிடம் கேட்பதை இறைவன் அதிகம் விரும்புகின்றான்.


"அவனை ஏதாவது ஒரு தீங்கு தொட்டாலோ நீண்ட நெடிய இறைஞ்சுதல்களைப் புரியத்தொடங்குகிறான்.'' (குர்ஆன் 41:51)



"நீண்ட நெடிய இறைஞ்சுதல்கள்' என்று அல்லாஹ்வே கூறுவதைக் கவனியுங்கள். ஏதோ படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அப்போதுதான் உணர்ந்தவன் போல் ஆகி விடுகின்றான். சோதனைகளின் போதுதான் "தான் அல்லாஹ்வின் அடிமை' என்ற உணர்வு ஏற்படுகிறது.


உலகில் பார்க்கிறோம். அல்லாஹ்வின் பக்கம் சிலர் அதிகம் நெருக்கமாக என்ன காரணம் என்று ஆராய்ந்தால் சோதனைகள்தான் காரணம். சில நோயாளிகள் குணமான பின்பு தொடர்ந்து தொழுவதையும் மார்க்கத்தைப் புரிய முயல்வதையும் நாம் கண்ணால் பார்க்கிறோம். நோய் தந்த நன்மைதான் இது.


6. பெருமை, கர்வம், தலைக்கனம் தகர்க்கப்படுகின்றன:


இவை ஒருவனிடம் குடிகொள்ளும்போதுதானே தலைகால் தெரியாமல் ஆடுகிறான். நோயை அவனுக்குக் கொடுக்கும் போது... பசித்திருக்கின்றான்; உடல் வேதனையை அனுபவிக்கின்றான். அதற்காக யாரிடமும் கோபப்பட முடிவதில்லை. உள்ளம் உடைந்துபோய்.. பெருமை, கர்வம் பறந்துபோய் விடுகிறது.


"உள்ளங்கள் உடைந்து போனவர்களுடன் நான் இருக்கிறேன்' எனும் அல்லாஹ்வின் வாக்கும் "அநீதி இழைக்கப்பட்டவன், பயணி, நோயாளி ஆகியோரின் பிரார்த்தனைகள் உடனே ஏற்றுக் கொள்ளப்படும்' எனும் நபிமொழியும் ஒரே கருத்தையே வலியுறுத்துகிறது.


இவர்களும் உள்ளம் உடைந்தவர்கள்தானே. பாதிப்பாலும் பசியாலும் பயணத்தாலும் நொந்து நூலாகிப் போனவர்கள்தானே. எனவே தான் இவர்களின் பிரார்த்தனையை இறைவன் உடனே ஏற்றுக் கொள்கிறான்.


7. நோயாளிக்கு அல்லாஹ் நன்மையை நாடுதல்:


நபி (ஸல்)  அவர்கள் "எவருக்கு நன்மை செய்யவேண்டும் என்று அல்லாஹ் விரும்புகின்றானோ அவரை சோதிப்பான்.' (புகாரி)


எனவே எவருக்கு நன்மை செய்ய அல்லாஹ் நாடவில்லையோ அவருக்கு எந்தச் சோதனையும் இல்லை. நோயும் ஒரு சோதனைதானே. அபூஹுரைரா (ரழி) அவர்கள் ஒரு நபிமொழியை அறிவிக்கிறார்கள்.



நபி (ஸல்)  அவர்கள் ஒருநாள் உடல் ஆரோக்கியமுள்ள திடகாத்திரமான ஒரு கிராமவாசியை சந்திக்கிறார்கள். அவருடைய உடல் வலிமையை ஆச்சரியத்துடன் நோக்கியவர்களாய் அவரை அழைத்துக் கேட்டார்கள். "கடும் வேதனையுடன் கூடிய உடல் சூட்டை அடைந்திருக்கின்றாயா எப்போதாவது?''


"அப்படி என்றால் என்ன?''


"காய்ச்சல்'"


"காய்ச்சல் என்றால் என்ன?''


"தோலுக்கும் எலும்புக்கும் இடையே ஏற்படும் கடும் சூடு''


"என் வாழ்நாளில் அப்படி எதையும் நான் அனுபவிக்கவில்லை'"


நபி (ஸல்)  அவர்கள் மீண்டும் கேட்டார்கள். "தலைவலி எப்போதாவது வந்த துண்டா?''


"தலைவலி என்றால் என்ன?''


"நெற்றியின் இரண்டு கீழ்பகுதிக்கும் தலைக்குமிடையே ஏற்படும் கடும் வலி.''



"என் வாழ்நாளில் அப்படி எதையும் நான் அனுபவித்தது இல்லை.''


அந்தமனிதர் சென்ற பின் நபி (ஸல்)  தம் தோழர்களிடம் கூறினார்கள். "நரகவாசியைக் காண வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இவரைக் கண்டு கொள்ளட்டும்.


'' எனவே காய்ச்சலும் தலைவலியும் இறைவனின் கருணையே. ஓர் அடியான் நோயாளியாகிற போது சாதாரண வேளையில் எவ்வளவு நற்செயல்கள் செய்தானோ அதே கூலி இப்போதும் கிடைக்கும்.


நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள். ''ஒருவர் நோயாளியானதால் நற்செயல்கள் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டால் வானவர்களிடம் அல்லாஹ், எனது அடியான் ஆரோக்கியமாக இருந்தபோது இரவும் பகலும் என்னென்ன நற்செயல்கள் செய்தாரோ அதையே இப்போதும் எழுதுங்கள்' என்று கூறுவான்.''


ஆக, நோய் என்றாலே நன்மை தானா? உலகில் மனிதர்களுக்கு இறைவன் அருளும் எல்லா அருட் கொடைகளையும் விட நோய்தான் சிறந்ததா?


அப்படியானால் "இறைவா, எனக்கு என்றென்றும் நோயைத் தா'' என்று பிரார்த்திக்கலாமா? இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் மனத்தில் இப்படி ஒரு கேள்வி எழும்.


இல்லை; ஒருபோதும் அவ்வாறு பிரார்த்திக்கக் கூடாது. மாறாக நபியவர்கள் நமக்குக் கற்றுத்தந்த மிகச் சிறந்த பிரார்த்தனையே ""மன்னிப்பையும் உடல் நலத்தையும் அல்லாஹ்விடம் கேளுங்கள். ஈமான் இறைநம்பிக்கைக்குப் பின் ஆரோக்கியத்தைத் தவிர சிறந்த அருள் எதுவும் இல்லை'' என்பதுதான்.

நன்றி: இஸ்லாமிய பூங்கா


இறைவனைப் பற்றி எழும் வினாக்கள்!


இறைவன் இருக்கிறானா? இல்லையா? என்ற கேள்வி ஒவ்வொரு மனிதனின் மனதிலும் எழுவது இயல்பே! ஏனெனில் இறைவனை யாரும்பார்த்தது கிடையாது. இறைவனின் பேச்சை நம்மில் யாரும் கேட்டதும் கிடையாது.அப்படி இருக்கையில் இறைவனைப் பற்றிய நம்பிக்கையை நாம் எப்படி வளர்த்துக் கொள்வது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார்கள். கிறித்தவர்களிலும் கர்த்தரைப் பற்றிய எண்ணத்தில் தெளிவாகவே இருப்பார்கள். சிலர் ஏசுவையும், பரிசுத்த ஆவியையும் வணங்கலாம். இந்து நண்பர்களில் பலர் ஒரு கடவுளை ஒத்துக் கொண்டாலும், தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக கடவுளாக வழிபடுவார்கள்.

கடவுள் மறுப்பில் இருக்கும் நாத்திகர்களை எடுத்துக் கொள்வோம். இந்த உலகம் நிலையானது என்று கடவுளை மறுப்பவர்கள் கூறுகின்றனர். இந்த உலகம் எப்படி தோன்றியது என்று நாம் வினவினால் 'உலகம் தோன்றவில்லை. அது என்றும் நிரந்தரமாக உள்ளது' என்பார்கள். அதே போல் 'கடவுளும் தோற்றுவிக்கப் படவில்லை. அவன் எக்காலத்திலும் உள்ள நிரந்தரன்' என்று ஆத்திகர்கள் கேட்டால் 'அது எப்படி ஒருவன் தோற்றுவிக்கப்படாமல் இறைவன் தோன்ற முடியும்? என்னால் ஒத்துக் கொள்ள முடியாது' என்பார்கள்.

உலகம் பற்றிய வாதத்தில் ஒரு நிலை. இறைவன் பற்றிய வாதத்தில் வேறொரு நிலை. மானிடனின் அறிவில் புரிந்து கொள்ள முடியாத எந்த ஒன்றுமே எங்கும் இருக்க முடியாது என்ற தவறான எண்ணமே இதற்க்கெல்லாம் காரணம்.

வார்னர் ஹைசன்பர்க் என்ற அறிவியல் அறிஞர் ஒரு புரட்சிகரமான கோட்பாட்டை 1926-ல் உருவாக்கினார். அநிச்சய தத்துவம்(Uncertainity Principle) என்பது அதன் பெயர். அணுவுக்குள் இருக்கும் மின் அணுவான எலக்ட்ரான் எனும் மிகமிக சூட்சுமமான துகள்கள் அணுவின் மையக் கருவைச் சுற்றி ஒளியின் வேகத்தில் சுழல்கின்றன. அத்துகள்களின் ஒரு நேரத்தில் உள்ள வேகம், அந்த நேரத்தில் சுற்றுப் பாதையில் அது இருக்கும் இடம், இவை இரண்டையும் அளக்க முயலும் போது ஏற்படும் விளைவிலிருந்து ஹைசன்பர்க் இக்கோட்பாட்டை உருவாக்கினார்.

இக்கோட்பாட்டிலிருந்து அறிஞர்கள் கண்ட உண்மை என்னவெனில் 'துகளின் இருப்பிடத்தை எவ்வளவு துல்லியமாக நீங்கள் அளக்க முயல்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு துல்லியமற்ற நிலையிலேயே துகளின் வேகத்தை உங்களால் அளக்க முடியும்.' என்ற முடிவுக்கு வந்தனர். துகளின் இருப்பிடத்தையும், அத்துகளின் துல்லியமான வேகத்தையும் நம்மால் துல்லியமாக கண்டறிய முடியாது. எனவே இச் சோதனையிலிருந்து ஹைசன்பர்க் அவர்கள் 'மனிதனின் அறியும் ஆற்றலுக்கு மிக நிச்சயமாக ஒரு எல்லை உண்டு' என்பதை நிரூபித்தார்.

அற்பப் பொருளான அணுவைப் பற்றியே முழுமையாக அறிந்து கொள்ள இயலாதவனாக மனிதனைப்படைத்துள்ளான் இறைவன். அப்படி இருக்கையில் அந்த அணுவையும் படைத்து கோடானு கோடி கோள்களையும், உயிரினங்களையும் படைத்து பரிபாலிக்கும் அந்த இறைவனைப் பற்றியும, அவன் எப்படி உண்டானான் என்பது பற்றிய அறிவும் எனக்கு இருக்க வேண்டும் என்று மனிதன் எப்படி எதிர் பார்க்க முடியும்? இறைவனைப் பற்றி எனக்கு விளங்காதவரை இறைவன் இருக்கிறான் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறுவது உயிர் என்றால் என்னவென்று எனக்கு புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறுவதற்க்கு ஒப்பாகும்.

'முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்.' என்று கூறுவீராக.
-குர்ஆன் 17:85

'ஒவ்வொரு அறிந்தவனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான்' 
-குர்ஆன் 12:76

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் இறைவனைப் பற்றிய செய்திகளுக்கு குர்ஆன் தெளிவாக விளக்கமளிக்கிறது. ஹைசன்பர்க்கும், அறிவியல் அறிஞர் ஹாக்கிம் அவர்களும் எதை உறுதிப் படுத்துகிறார்களோ, அதை குர்ஆன் உண்மைப் படுத்துகிறது. நமக்கு குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளதால் ஒரு குற்ப்பிட்ட அளவுக்கு மேல் நம்மால் ஆய்வு செய்ய முடியாது என்பதை இதிலிருந்து விளங்குகிறோம்.

சரி. அப்படி என்றால் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை எப்படி நம்புவது? எப்படி

உயிர் என்பதை பார்க்காமல் ஒத்துக் கொள்கிறோமோ அது போல் உலகில் உள்ள இறைவனின் அத்தாட்சிகளைப் பார்த்து நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.நம்முடைய பிறப்பையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு துளி விந்திலிருந்து ஒரு குழந்தை பிறக்கிறது. தகப்பனின் நிறம்,குரல்,சாயல்,குணம் அனைத்தையும் ஒரு துளி விந்தில் ஜிப் செய்யப்பட்டிருக்கிறதே அதை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? 10 நிமிடம் நம்மால் மூச்சு விடாமல் இருக்க முடியவில்லை. ஒன்பது மாதம் வயிற்றுக்குள் உணவும் தந்து, சுவாசிக்கவும் தகுந்த ஏற்ப்பாட்டை உண்டாக்கியது யார்? மனிதன் உண்டாக்கும் பல பொருட்களுக்கும் மூலப் பொருட்கள் உண்டு. அந்த மூலப் பொருட்களை உண்டாக்கியது யார்? பேரண்டத்தில் எத்தனையோ கோள்கள் இருக்க பூமியை மட்டும் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்தது யார்? இப்படி ஒவ்வொரு அதிசயங்களுக்கும் சூத்திரதாரி யார் என்பதை உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள். விடை தானாக தெரியும்.

நன்றி: இஸ்லாமிய பூங்கா



சூனியம், ஜோதிடம், குறி பார்த்தல்


பரவலாகக் காணப்படக்கூடிய ஷிர்க்கின் வகைகளில் சூனியம், ஜோதிடம், குறிபார்த்தல் ஆகியவையும் அடங்கும்.

சூனியம் செய்வது குஃப்ர் எனும் இறை நிராகரிப்பாகும். நாசத்தைத் தரக்கூடிய ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். அதில் தீமை இருக்கிறதே தவிர நன்மையில்லை. சூனியத்தைக் கற்றுக் கொள்வதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்: “(உண்மையில்) தங்களுக்கு தீங்கிழைப்பதையும் எவ்வித நன்மையையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள்” (2:102)
மேலும் கூறுகிறான்: “சூனியக்காரன் எங்கு சென்றாலும் (ஒரு போதும்) வெற்றி பெறமாட்டான்” (20:69) சூனியம் பார்க்கச் செல்பவன் காஃபிராவான். அல்லாஹ் கூறுகிறான்: “அவர்கள் சுலைமானுடைய ஆட்சியின் போது ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். ஆனால் சுலைமான் ஒருபோதும் நிராகரிப்பவர் – காஃபிர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். மேலும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கும் இறக்கி வைக்கப்பட்டதையும் அவர்கள் பின்பற்றினார்கள். ஆனால் அவ்விருவரும் நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்று) நீங்கள் காஃபிர்களாகி விடாதீர்கள் என்று கூறி எச்சரிக்காத வரையில் எவருக்கும் அந்த சூனியத்தைக் கற்றுக் கொடுக்கவில்லை” (2:102)

சூனியக்காரன் பற்றிய சட்ட நிலை, அவனைக் கொலை செய்ய வேண்டும். அவனுடைய சம்பாத்தியம் விலக்கப்பட்டது, மோசமானது என்பதாகும். அறிவீனர்களும் அக்கிரமக்காரர்களும் பலவீனமான ஈமான் உடையவர்களும் சிலரின் மீது வரம்பு மீறுவதற்காக அல்லது அவர்களைப் பழிவாங்குவதற்காக சூனியம் செய்ய சூனியக்காரர்களிடம் செல்கிறார்கள்.

மேலும் மக்களில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சூனியத்தை எடுப்பதற்காக சூனியக்காரர்களிடம் செல்வதன் மூலம் ஹராமான செயலைச் செய்கிறார்கள். இத்தகையவர்கள் மீது கடமை என்னவெனில் அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி ஸூரத்துல் இக்லாஸ், ஸூரத்துல் ஃபலக், ஸூரத்துந் நாஸ் போன்ற அவனுடைய வார்த்தைகள் மூலம் நிவாரணம் தேட வேண்டும்.

மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். இப்படியிருக்க ஜோதிடம் பார்ப்பவன், குறி பார்ப்பவன் ஆகிய இருவரும் மறைவான விஷயங்களைத் தாம் அறிவதாக வாதிட்டால் அவ்விருவரும் மகத்துவமிக்க அல்லாஹ்வை நிராகரிப்பவர்களாவர். இவர்களில் பெரும்பாலோர் பணம் பறிப்பதற்காக அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். இதற்காக அவர்கள் மணலில் கோடு கிழித்துப் பார்ப்பது, சோழி போட்டுப் பார்ப்பது, கைரேகை பார்ப்பது, பீங்கானில் நீர் உற்றி பார்ப்பது, கண்ணாடியில் பார்ப்பது போன்ற பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகின்றனர்.

இவர்கள் ஒரு உண்மை கூறினால் 99 முறை பொய் கூறுவார்கள். கற்பனைகளை அள்ளி வீசக்கூடிய இவர்கள் கூறுவது எந்த ஒரு தடவை உண்மையாகிறதோ அதை மட்டும் இந்த அப்பாவி மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்காகவும், திருமணம், வியாபாரம் போன்ற காரியங்களில் நன்மை, தீமையை அறிந்து கொள்வதற்காகவும், காணாமல் போன பொருட்களை கண்டு பிடிப்பதற்காகவும் அவர்களிடம் செல்கின்றனர்.

இப்படி எதிர்காலத்தைக் கணித்துச் சொல்பவர்களிடம் சென்று அவர்கள் கூறுவதை ஒருவன் நம்பினால் அவன் காஃபிராவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவனாவான். ஆதாரம்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ‘எவன் ஜோதிடம் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை நம்புகிறானோ அவன் முஹம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட(வேதத்)தை நிராகரித்தவன் ஆவான். (அஹ்மத்)

ஆனால் அவர்களிடம் செல்பவன் மறைவானவற்றை அவர்கள் அறிவார்கள் என நம்பாமல் என்ன சொல்கிறார்கள் என்று பரிசோதிப்பதற்காகச் செல்வானாயின் அவன் காஃபிராக மாட்டான். மாறாக அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் ஜோசியக்காரனிடம் சென்று எதையேனும் கேட்டால் அவரது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது’ (முஸ்லிம்).

ஆயினும் அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படா விட்டாலும் நாற்பது நாட்கள் அவன் தொழுவதும் இப்பாவத்திற்காக தவ்பா செய்வதும் அவன் மீது கடமையாகும்.

நன்றி: இஸ்லாம்குரல்.காம்

ஞாயிறு, 10 மார்ச், 2013




அமைதியான உள்ளம்!


உலகத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். நபி (ஸல்) அவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதனமும் உண்டாவதாக!

இஸ்லாமிய சமூகம் நடைமுறை வாழ்விலும் வணக்க வழிபாடுகளிலும் கொள்கைக் கோட்பாட்டிலும் தூய்மையானதாக தனித்து விளங்குகின்றது. நபி (ஸல்) அவர்கள் உள்ளத்தை அமைதியின்மையாக்கக் கூடிய்வற்றை விட்டும் பிரிவினையையும் கோபத்தையும் உருவாக்காக் கூடியவற்றை விட்டும் தடுத்திருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நீங்கள் ஒருவருக்கொருவர்  கோபித்துக் கொள்ள வேண்டாம்; பொறாமை கொள்ள வேண்டாம்; உறவினரை துண்டித்து நடக்க வேண்டாம்; தீமையின்பால் அலோசனை செய்து கொள்ள வேண்டாம், அல்லாஹ்வை வழிப்படக்கூடிய சகோதரர்களாக இருந்து கொள்ளுங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது ஹராமாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)

மக்களுக்கு மத்தியில் அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை ஏவியிருக்கின்றார்கள்.

“என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரை சுவர்க்கம் நுழைமாட்டீர்கள்; மேலும் ஒருவருகொருவர் விரும்பிக் கொள்ளாதவரை விசுவாசம் கொள்ள மாட்டீர்கள்” (ஆதாரம்: முஸ்லிம்)

“நபி (ஸல்) அவர்களிடத்தில் மனிதர்களில் சிறந்தவர் யார்? என்று வினவப்பட்டார். தனது உள்ளத்தில் இருப்பவற்றை அகற்றுபவனும் உண்மை பேசுபவனும் ஆவான் என்றார்கள். அதற்கு நபித்தோழர்கள், ‘உண்மை பேசுபவனை நாம் அறிவோம்; உள்ளத்தில் இருப்பவற்றை அகற்றுபவன் என்றால் யார்?’ என்று கேட்டார்கள். (அதற்கு நபி {ஸல்} அவர்கள்) ‘உள்ளத்தில் இருப்பதை அகற்றுபவர் என்பது இறையச்சமுள்ள பிறருடைய குறைகளை கூறுவதை விட்டும் தூய்மையாக இருப்பவன் ஆவான்; அவனிடம் எந்த பாவமும் கோபமும் குரோதமும் பொறாமையும் இருக்காது.” (ஆதாரம்: இப்னு மாஜா)

அமைதியான உள்ளம் என்பது அல்லாஹ்வின் அளப்பரிய அருட்கொடைகளிலிருந்தும் உள்ளவையாகும். சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் நுழையும் போது அவர்களுக்கு கொடுக்கப்படக் கூடியவையும் ஆகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“அவர்களின் உள்ளங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். அவர்கள் சகோதரர்களாக கட்டில்களின் மீது ஒருவரை ஒருவர் முன்னோக்கியிருப்பர்.” (அல்குர் ஆன் 15:47)

அமைதியான உள்ளமுடையவர்கள் உலகிலேயே நிம்மதியாக வாழ்வார்கள். மறுமையில் அதனை கனீமத்தாக பொற்றுக் கொள்வார்கள்  சுவர்க்கம் நுழைவதற்கு காரணியாகவும் அமையும்.

இப்னு ஹஸம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

“சிலர் தப்பான எண்ணங்களை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு தீய விஷயங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பெரும் பாவங்களை செய்கின்றனர். மறுமையில் நரகிலும் நுழைவதற்கு வழிகோலுகின்றனர். இதனால் எந்தவித தப்பும் செய்யாத பெரியவர்களையும் சிறியவர்களையும் அழிக்கின்றனர். அவர்களுக்கு சோதனைகளையும் ஏற்படுத்துகின்றனர். இத்தகையவர்கள் இதன் மூலம் தனக்கு எந்த நன்மையும் இல்லை என்பதை அறிந்தால் இத்தகைய தீய செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இவர்கள் தங்களது எண்ணத்தை தூய்மைப்படுத்தி தீயவற்றை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை முற்படுத்தி செய்தால் சந்தோஷமானவர்களாக இவ்வுலகில் வாழ்வார்கள்; மறுமையில் சுவர்கத்துக்கும் நுழைவார்கள். ”                        

தற்காலத்தில் அதிகமானவர்கள் தீய விஷயங்களை பார்ப்பதை விட்டும், ஹராமானவற்றை சாப்பிடுவதை விட்டும் பேணுதலாக இருக்கின்றனர். ஆனாலும் தனது உள்ளத்தினால் பிறரை பொறாமை, மனக்கோபம் போன்றவற்றில் பராமுகமாக இருக்கின்றனர். நான்கு விஷயங்களை நாம் பேணிக்கொள்ள வேண்டும். மனிதனது கண்ணினால் ஆகுமானவற்றை மாத்திரம் பார்வையிட வேண்டும், உள்ளத்தில் பிறரைப் பற்றி பொறாமை,  கோபம் இருக்கின்றதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு தீய விஷயங்களை செய்வதனை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய நான்கும் ஒருவரிடத்தில் இருந்தால் நிச்சயமாக அவர் அமைதியான உள்ளம் கொண்டவராவார்.                            

அமைதியான உள்ளம் கொண்டவர் சுவர்க்கம் நுழைவதற்குரிய காரணிகளுடையவராவர். அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“நாம் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கின்ற போது  நபி (ஸல்) அவர்கள் தற்போது சுவர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடத்தில் வருவார்கள் என்று கூறினார்கள். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வுழூ செய்ததன் பின்னர் தனது தாடியினால் தண்ணீர் வடிகின்ற நிலையில் இடது கையில் தனது பாதணிகளை தூக்கிய நிலமையில் வந்தார். இரண்டாவது நாளும் முதலாம் நாள் கூறியதைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதே மனிதர் அவ்வாறே  வந்தார். முன்றாவது நாளும் நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது நாள் கூறியதை போன்றே கூறினார்கள். அதே மனிதர் முன்றாவது நாளும் அதே நிலையில் வந்தார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் சென்றபோது அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அந்த மனிதரை பின்தொடர்ந்து சென்று அவருடைய நிலவரத்தை அறிய அவரிடம் மூன்று நாட்கள் தங்குவதற்கு அனுமதி கோரினார். அதற்கவர் அனுமதி வழங்கினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்: மூன்று நாட்களும் அவர் இரவில் நின்று வணங்கவில்லை; ஆனால் இரவில் படுக்கைக்கு செல்கின்றபோது அல்லாஹ்வை நினைவு கூறுவார்கள்; துஆவை ஓதுவார்கள்; பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள்; பின்னர் பஜ்ரு வரையும் தூங்குவார்கள். பிறரைப் பற்றி நல்லவற்றையே கூறுவார்கள்; மூன்று நாட்களும் இவ்வாறே நாம் அவரை அவதானித்தேன். இதன் பின்னர் அவரின் நல்லமல்களை குறைவாக மதிப்பிட எனக்கு நேரிட்டது. அப்துல்லாஹ் இப்னி அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அந்த மனிதரை பார்த்து, ‘நபி (ஸல்) அவர்கள் எம்மைப் பார்த்து சுவர்க்கவாசிகளில் ஒருவர் வருவார் என்று கூறினார்கள்; மூன்று முறையும் நீங்களே வந்தீர்கள். இதனால் நீங்கள் விஷேஷமாக எந்த நல்லமலை செய்ய வேண்டும் என்பதனை பார்க்கவே நான் உங்களிடத்தில் தங்கினேன். ஆனாலும் எந்தவித அமல்களையும் அதிகமாக நீங்கள் செய்ததாக காணவில்லை’ என்று கூறிவிட்டு அவ்வாறு ‘நபி (ஸல்) அவர்கள் உங்களை சுவர்க்கவாசி என்று கூறுவதற்கு காரணம் என்னவென்று’ அவரிடம் வினவினார். அதற்கு அம்மனிதர் கூறினார், “நான் எந்த முஸ்லிமுக்கும் தீங்கிழைக்கவும், மோசடி செய்யவும் மாட்டேன். அவ்வாறே என்னைவிட எவரையெல்லாம் அல்லாஹ் உயர்த்தி நல்லவற்றை கொடுத்திருக்கின்றானோ அவற்றில் நான் பொறாமை கொள்ள மாட்டேன்.” என்று கூறினார்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள், ‘இந்தவிஷயமே எம்மால் செய்ய முடியாத காரியமாகும். (ஹதீஸின் சுருக்கம்) (ஆதாரம் :அஹ்மத்)

கோபத்தையும், குரோதத்தையும் உருவாக்கக்கூடிய காரணிகள்:

1) ஷைத்தானுக்கு வழிப்படல்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“மிக நல்லதையே பேசுமாறு எனது அடியார்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் பகைமையை உண்டு பன்னுவான். ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்க விரோதியாகவே இருக்கின்றான்” (அல்குர் ஆன் 17:53)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அரேபியத் தீபகற்பத்தில் அல்லாஹ்வை வழிப்படுகின்றவர்களை தடுப்பதற்கு ஷைத்தானுக்கு முடியாது; ஆனாலும் அவர்களுக்கு மத்தியில் கோபத்தையும் குரோதத்தையும் ஏற்படுத்துகின்றான்” (ஆதாரம்: முஸ்லிம்)

2) கோபம்:

அனைத்து தீமைகளின் திறவுகோல் கோபமாகும். நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு கோபத்தை விட்டும் தூரமாகுமாறு வஸிய்யத் செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நீங்கள் கோபிக்க வேண்டாம்; அம்மனிதரோ எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள் என்று மீண்டும் மீண்டும் வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீங்கள் கோபிக்க வேண்டாம்’ என்று பதிலளித்தார்கள்”

கோபம் ஒருவனை பரிகசிப்பதற்கும், நோவினை செய்வதர்கும், அழித்துவிடுவதற்கும் இட்டுச்செல்வதோடு, அனைத்து பிரிவுகளுக்கும் பிரிவினைகளுக்கும் முதன்மை காரணியாகவும் அமைகின்றது.

3) கோள் கூறுவது:

இது குரோதத்தை உருவாக்குவதற்கு மிக முக்கிய காரணியாகும். இதனால் உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. மனிதர்களது உள்ளங்கள் பிளவுபடுகின்றன. அல்லாஹ் இவர்களைப் பற்றி இழிவாக அல்-குர்ஆனிலே சுட்டிக் காட்டுகின்றான்.

“(அவன்) குறை கூறி, கோள் சொல்லித்திரிபவன்” (அல்குர் ஆன் 68:11)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“கோள் கூறி திரிபவன் சுவர்க்கம் நுழையமாட்டான்”

4) பொறாமை:

இது ஒரு மனிதனுக்கு கொடுக்கப் பட்டிருக்கக்கூடிய அருட்கொடைகளை நீக்குவதற்கு மிக முக்கிய காரணியாகும். இதனால் ஒரு முஸ்லிம் துன்பப்படுவதற்கு நேரிடுகிடுகின்றது. இதனை அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் தடுத்திருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“பொறாமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன்! நிச்சயமாக நெருப்பு எவ்வாறு விறகை எரிக்குமோ அதே போன்று பொறாமை நல்லமல்களை எரித்துவிடும்” (ஆதாரம்: அபூதாவூத்)

பொறாமை என்கின்ற இத்தீய செயல், ‘பிறரை குறைகூறுதல், கோள் சொல்லுதல், பிற முஸ்லிம்கள் மீது பலி சுமத்துதல், பிறருக்கு அநியாயம் செய்தல், பெருமையடித்தல்’ போன்ற பெரும் பாவங்களுக்கு வழிவகுக்கும்.                                                                  

5) உலக விவகாரத்தில் போட்டி போட்டுக்கொள்ளுதல்:

குறிப்பாக இக்காலத்தில் இந்த விஷயம் அதிகரித்து விட்டது. மக்களது உள்ளங்கள் பிளவுபட்டு விட்டன. ஒருவன் தனது சகோதரனாகிய மற்றவரைப் பார்த்து பொறாமை கொள்கின்றான். ஏனொனில் அவனை விட இவன் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதாலும், பொருளாதாரத்தில் மிக வசதியாக இருப்பதாலுமே. இவ்வாறு ஆண்களும், பெண்களுமாக மற்றவர்கள் முன்னேறுவதை தீய நோக்கோடுப் பார்த்து அவர்களை விட்டும் உலக விவகாரத்தில் முந்தியடிக்க போட்டிபோட்டுக் கொள்கின்றனர்.
                 
6) உயர் பதவிகளையும், பிரபல்யம் அடைவதையும் விரும்புவது:

இது மிக மோசமான பழக்கமாகும். புழைல் இப்னு இயால் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

“எவனொருவன் உயர் பதவிகளை விரும்புகின்றானோ அவன் பிறர் மீது பொறாமை கொள்வான், அவர்களுடன் மோஷசமான முறையில் நடந்து கொள்வதோடு குறைகளை ஆராய்பவனாக மாறிவிடுகின்றான்.”

இந்த நிகழ்வை வேலை செய்பவர்களுக்கு மத்தியில் அதிகமாக அவதானிக்கலாம்”                                    

7) அதிகம் பரிகசித்தல்:

அதிகம் பரிகசிப்பதால் மனிதனை கோபத்தின் பால் இட்டுச் செல்லும்; அது அவனை அசிங்கமான நிலையை அடையச் செய்யும். உணவுக்கு எவ்வாறு அளவோடு உப்பு அவசியமோ அதே போன்று பரிகாசம் குறைவாக அளவோடு இருக்க வேண்டும். எவ்வாறு ஒரு உணவுக்கு உப்பு அதிகரித்தால் அந்த உணவை உண்ண முடியாதோ அதே போன்று தான் பரிகாசம் அதிகரித்தால் கோபமும், பிரிவினையும் தானாகவே வந்துவிடும்.                  

ஒரு முஸ்லிம் தனது உள்ளத்தை தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியமான விஷயமாகும். பொறாமை பொய் போன்றவற்றிலிருந்து விளகிக்கொள்ள வேண்டும்.

அமைதியான உள்ளத்தைப் பெறுவதற்கு  கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை பின்வருமாறு பார்ப்போம்.

அ) உளத்தூய்மை (இஹ்லாஸ்):

எவர் உளத்தூய்மையுடன் தனது செயல்பாட்டை அமைத்துக் கொள்கின்றாரோ அவர் எந்தவித மனக்கசப்பையும் பிறருடன் வைத்துக் கொள்ள மாட்டார்; அவர் பிறருக்கு நன்மையே செய்ய நாடுவார்; பிறருக்கு துன்பம் நேர்கின்ற போது கவலைப்படுவார், பிறருக்கு சந்தோசமான  நிகழ்வு ஏற்படுகின்ற போது மகிழ்ச்சியடைவார், அவைகள் உலக விவகாரமாக இருந்தாலும் மறுமையோடு சம்பந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரியே!                                                                                  

ஆ) இறைவனைப் பற்றிய பூரண திருப்தி:

இப்னு கைய்யும் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

“பிறருக்கு மோசடி செய்வதனை விட்டும் குழப்பம் விளைவிப்பதை விட்டும் உள்ளத்தை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். எவர் ஈடேற்றமில்லாத உள்ளத்தோடு அல்லாஹ்வை சந்திக்கிறானோ நிச்சயமாக அல்லாஹ் அவனை தண்டிப்பான். இறைவனது திருப்பொருத்தமும் அவனது கோபமும் இருக்கின்ற நிலையில் அவனுக்கு ஈடேற்றமான உள்ளம் கிட்டாது. எந்தளவுக்கு இறைவனை பொருந்திக் கொள்கின்றானோ அந்தளவுக்கு உள அமையை பெற முடியும். மோசடியின் மூலம் உள அமைதியை பெற முடியாது! பிறருக்கு நன்மை செய்வதனாலும் நல்லுபதேசம் செய்வதனாலுமே உள அமைதியை பெற முடியும். ”                                                                                                                

இ) அல்-குர்ஆனை பொருள் விளங்கி ஓதுவது:

அல்-குர்ஆன் அனைத்து நோய்களினதும் நிவாரணியாகும்! அதனை பொருள் விளங்காமல் ஓதுபவர் நிச்சயாமாக நஷ்டவாளியே!

அல்லாஹ் கூறுகின்றான்:

“இது (அல்-குர்ஆன்) நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நிவாரணியகவும் இருக்கும் என்று (நபியே!) நீர் கூறுவீராக…” (அல்-குர்ஆன் 41:44)

மேலும் கூறுகின்றான்:

“மேலும் நம்பிக்கையாளர்களுக்கு நிவாரணியாகவும் அருளாகவும் உள்ளவற்றையே இக்குர்ஆனில் நாம் இறக்கியுள்ளோம். அது அநியாயக்காரர்களுக்கு நஷ்டத்தை தவிர வேறெதையும் அதிககிக்காது” (அல்-குர்ஆன் 17:82)

அல்லாஹ் கூறுகின்றான்:

“மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசமும் உள்ளங்களில் உள்ளவற்றிற்கு நிவாரணியாகவும் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், கருணையும் நிச்சயமாக வந்துவிடும்” (அல்-குர்ஆன் 10:57)

அல்-குர்ஆன் உடல்,  உள, இம்மை, மறுமை இவை அனைத்குக்குமே நிவாரணி ஆகும்.                                                                                                                                          

ஈ) தன்னைப் பற்றி தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்:

பிற சகோதரர்களுக்காக செய்த துன்பங்களையும் அநியாயங்களையும், பகைமையும் நினைவுபடுத்தி, பிறரைப் பற்றி பொறாமை கொண்டமை, கோள், புறம், மன வேதனையடையும் அளவுக்கு பரிகசித்தமை அனைத்தையும் நினைவு கூறி அவற்றிலிருந்து அமைதி பெற வேண்டும்.      

உ) பிரார்த்தனை:

ஒரு அடியான் தனக்கும் பிற சகோதரர்களுக்கும் உள அமைதியை வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். அதுவே நல்லடியார்களது பண்பாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.” (அல்-குர்ஆன் 59:10)

ஊ) தர்மம் செய்தல்:

தர்மம் செய்வது மனிதனது உள்ளத்தை தூய்மைப்படுத்திவிடும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“அவர்களை தூய்மைப்படுத்தும் (ஸகாத் எனும் கடமையை) தர்மத்தை அவர்களின் செல்வங்களிலிருந்த்து (நபியே!) நீர் எடுத்து, அதன் மூலம் அவர்களை பரிசுத்தப்படுத்துவீராக!…” (அல்-குர்ஆன் 09:103)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தர்மத்தினால் உங்களது உள்ளங்களை குணப்படுத்திக் கொள்ளுங்கள்” (ஆதராம்: புகாரி)

மனிதன் குணப்படுத்த வேண்டிய நோய்களில் மிக குக்கியமானது உள நோயாகும், இவற்றில் மிக முக்கியமாக தங்களது உள்ளங்களை முதன் முதலில் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எ) சகோதரர்களுக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பிரயோகிக்காமலும். அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தாமலும் இருப்பது:
                                                                                                                 
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரனாவான்; இதன் மூலம் அவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும். மாறாக, கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் எதிர்ப்ப்தைப் போன்று ஒரு முஸ்லிமாகிய சகோதரனை எதிர்க்கக் கூடாது.

அவ்வாறு செய்வதென்பது அவனுக்கு தீங்கிளைப்பதாகவே அமைகின்றது.                                                                          

ஏ) ஸலாத்தை பரப்புதல்:

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக.நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரை சுவர்க்கம் நுழைய மாட்டீர்கள். மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் விரும்பிக் கொள்ளாத வரை விசுவாசம் கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் நற்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றை சொல்லித் தரட்டுமா? என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை பரப்பிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “இந்த நபிமொழி ஸலாத்தின் சிறப்பை தெளிவு படுத்துகின்றது. நற்பை ஏற்படுத்தக் கூடியவற்றை உருவாக்குகின்றது, கோபத்தை விட்டு தடுக்கின்றது.            

ஐ) அதிகம் கேள்வி கேட்பதை விட்டும், மனிதனது குறைகளை ஆராய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளல்: 
                                                                                           
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தனக்கு தேவையில்லாத ஒன்றை விட்டும் தவிர்ந்து கொள்வதென்பது ஒரு சிறந்த இஸ்லாமியனின் நற்குணமாகும்” (ஆதாரம்: திர்மிதி)

ஒ) சக முஸ்லிம்களுக்கு நல்லவற்றையே விரும்பவேண்டும்: 
                                                               
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இறைவன் மீது ஆனையாக ‘ஒரு சதோதரர் தான் விருப்புவதையே தான் பிற சகோதரர்களுகளுக்கும் விரும்பாதவரை உண்மையான இறைவிசுவாசியாக மாட்டான்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

ஓ) தனது உள்ளம் ஈடேற்றமாகுவதற்காக வேண்டி கோள், புறம் கேட்பதை விட்டும் தவிர்ந்து கொள்ளல்:    
                                                                                                                                             
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எனது தோழர்ளைப் பற்றி ஒருவரை ஒருவர் என்னிடம் சொல்ல வேண்டாம். நான் உங்ளுக்கு மத்தியில் ஈடேற்றம் உள்ளவனாக இருப்பதற்கு விரும்புகிறேன்” (ஆதாரம்: அஹ்மத்)

சமூதத்திலே ஒருவன் இன்னொருவனைப் பற்றி ஓரிரு வார்த்தைகளை பேசி இருப்பான்;  அதனை இருவர் அதற்கு மேற்பட்டவர்கள் பேசிக் கொள்ளும் போது பல விஷயங்களை சேர்த்து அல்லது குறைத்து தங்களது உள்ளங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற அளவுக்கு காரணியாக அமைகின்றது. இவை பெண்களுக்கு மத்தியிலும், கணவன் மனைவியர்களுக்கு மத்தியிலும், வீடுகளிலும் அதிகம் இடம் பெருவதனை அவதானிக்கலாம்.                                                                                

ஓள) /உள்ளத்தை சீர்திருத்தி அதனை சரி செய்துகொள்ள வேண்டும்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அறிந்து கொள்ளுங்கள் உள்ளத்திலே ஒரு சதைக் கட்டி இருக்கின்றது; அது சீர் பட்டுவிட்டால் முழு உடலும் சீர்பட்டுவிடும், அது சீர்கெட்டுவிட்டால் முழு உடலும் சீர்கெட்டுவிடும். அதுவே உள்ளமாகும்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

ஃ) இரண்டு பேருக்கு மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்குதல்: 
                                         
அல்லாஹ் கூறுகின்றான்:

“நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி உங்களுக்கிடையில் நிலைமையைச் சீர் படுத்திக் கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 08:01)

“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நோன்பையும், தொழுகையையும், தர்மத்தையும் விட சிறந்த அந்தஸ்தில் உள்ள ஒன்றை அறிவித்துத் தரட்டுமா? என்று கூறிய போது நபித்தோழர்கள், ‘ஆமாம்’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘பிரிந்திருக்கின்றவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்றார்கள்” (ஆதாரம்: அபூதாவூத்)

இறைவா! எமது உள்ளத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் எந்த வித கோபமும், குரோதமும், பிரச்சினையும் இல்லாத ஈடேற்றமான உள்ளமாக மாற்றுவாயாக!   ஆமீன்.

நன்றி: மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி, சுவனத்தென்றல்.காம்
   

சனி, 2 மார்ச், 2013



உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்!
மூலக்கட்டுரை (ஆங்கிலம்)  : அபூ ரிஸ்வான் 
தமிழில் :  புர்ஹான் 


அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனே (நாம் அறிந்த, அறியாத) பேரண்டத்தின் அதிபதி. அவன் இறையச்சமுடையவருக்கு நல்ல வெகுமதிகளையும், அவனுடைய வரம்பை மீறுபவர்களுக்கு பெரிய அழிவையும் தரக்கூடியவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை: அவனுக்கு யாதொரு இணையுமில்லை: சர்வ வல்லமையும், அதிகாரமும் அவனுக்கே உரியது என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், திருத்தூதருமாவார்கள்: அவர்கள் நபி மார்களுக்கு எல்லாம் இறுதி முத்திரையாக இருக்கிறார்கள்: மொத்த சமுதாயத்திற்கும் தலைவராக இருக்கிறார்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும், அவர்களுடைய தோழர்கள் மற்றும் அவர்களை இறுதி தீப்பு நாள் வரை பின்பற்றக் கூடியவர்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக.

அல்லாஹ் ஸுப்ஹானஹுவத்தஆலா, அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை, நேர்வழிகாட்டியுடனும், மனித குலத்திற்கு ஓர் அருளான சத்திய இஸ்லாமிய மார்க்கத்துடனும், நன்மைகளைப் புரிவோருக்கு ஓர் முன்மாதிரியாகவும் அனுப்பி வைத்தான். அல்லாஹ் மனித குலம் அனைத்திற்கும், அவர்கள் தங்களைச் சீர்திருத்திக் கொள்வதற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும், அதாவது மார்க்கம் மற்றும் அன்றாட அலுவல்களை இறை நம்பிக்கையுடன் நடத்திச் செல்வதற்கும், நல்ல நடத்தைகளையும், அழகிய முன்மாதிரிகளையும், போற்றத்தக்க நற்குணங்களையும், நம்முடைய நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகவும், அவர்களுக்கு அருளிய குர்ஆன் மற்றும் அவர்களுடைய சுன்னத்தான வழிமுறைகளின் மூலமாகவும் காட்டிவிட்டான்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஸஹீஹான ஹதீஸ் கூறுகிறது :

“நான் உங்களிடம் ஒரு ஒளிமயமான பாதையை விட்டுச் செல்கிறேன். அதில் இரவு கூட பகலின் ஒளியைப் போல் இருக்கிறது”

இந்தியாவிலும், இந்திய முஸ்லிம்கள் குடியேறி வசிக்கும் பகுதிகளில் எல்லாம் இப்போது நடைபெறுவது மகவும் வருத்தமான விஷயங்கள். உண்மையான இஸ்லாத்தின் போதனைகளை மிகவும் அறியாதவர்களாக நமது பெரும்பான்மையான சகோதர, சகோதரிகள் இருக்கிறார்கள். இதற்கு நாம் முன்னர் பிரிட்டீஷ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் கல்வியிலும், கலாச்சாரத்திலும் மதசார்பற்றக் கொள்கையைப் பின்பற்ற விரும்பிய இந்திய அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட மதசார்பற்றக் கல்விக் கொள்கையைத்தான் குறை கூறவேண்டியதிருக்கிறது. ஆயினும் அவ்வாறு கூறிக்கொண்டே கல்வித்துறையினர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரனான இஸ்லாமிய இலக்கியங்களையும், பிற மதங்களிலுள்ள புராணங்களையும், இதிகாசங்களையும் அதிகமான அளவில் பள்ளி மற்றும் கலைகல்லூரி மாணவர்களின் பாடத்திட்டத்தில் நுழைத்துவிட்டனர். எனவே ஒரு முஸ்லிம் மாணவன் பள்ளி அல்லது கல்லுரியிலிருந்து வெளிவரும் போது, பிற மதங்களைப் பற்றியும், அவர்களின் கடவுளர்களைப் பற்றியும் அறிந்திருக்கும் அளவிற்கு, இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையான தவ்ஹீது, மற்றும் நபி (ஸல்) அவர்களின் நேரிய வழிகாட்டுதல்களை அறிந்திருக்கவில்லை.

உண்மையான இஸ்லாத்தின் அடிப்படைகளை அறியாதவர்கள், தங்களுக்குள் நான்கு மத்ஹப்கள், பல தர்ஹாக்கள், மற்றும் ராவுத்தர்கள், மரைக்காயர்கள், தக்னிகள், லெப்பைகள் சைய்யிதுகள் போன்ற பிரிவினர்களாகப் பிரிந்துக் கிடக்கின்றனர். சில முஸ்லிம்கள் ஒரு படி மேலே சென்று, (இஸ்லாத்தின் கொள்கைகளுக்காகப் பாடுபட்ட) அவ்லியாக்களின் சமாதிகளுக்குச் செல்வதன் மூலமும், மாற்று மதத்தவர்கள் தங்களின் வழிபாட்டுத்தலங்களில் பூ , வாழைப்பழம் போன்றவைகளை வைத்து வழிபடுவதைப்போல் அந்த சமாதிகளில் சில சடங்குகளைச் செய்வதன் மூலமும், மேலும் என்றோ இறந்துவிட்ட அந்த அவ்லியாக்களிடம் பிரார்த்தித்து உதவி தேடுவதன் மூலமும் அவர்களை வழிபடுகின்றனர்.

இவ்வாறு செய்பவர்கள், மரணித்த ஒருவர் அவர் நல்லடியாராகவோ அல்லது நிராகரிப்பவராகவோ இருந்தாலும் அவரால் உயிரோடிருக்கும் ஒருவரிடமிருந்து எதையும் கேட்க முடியாது என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஏற்கனவே மரணித்து விட்ட இறைநேசர்களும், நல்லடியார்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் நியாயத் தீப்பு நாளின் போது தான் எழுப்பப்படுவாகள் என்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. ஷிர்க் செய்பவர்கள், தாம் எந்த அளவிற்கு கொடிய பாவத்தைச் செய்கிறோம் என்பதை உணராதவர்களாகவே இருக்கின்றனர். மேலும் அவர்கள் ஷிர்க் செய்வது (இணை வைப்பது) என்பது கொலை, கொள்ளை, விபச்சாரம் போன்ற கொடிய குற்றங்களைவிட ஆபத்தானது என்ற இலேசான உணர்வு கூட இல்லாதவர்களாக இருக்கின்றனர்.

திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்:

“நிச்சயமாக அல்லாஹ் இணைவைத்தலை மன்னிக்க மாட்டான். ஆனால் மற்ற பாவங்களைத் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான“(4:48)

மேலும் (இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட) பித்அத்களை (புதிய அமல்களை)ச் செய்யும் நமது முஸ்லிம் சகோதரர்கள் வேண்டுமென்றே அந்த தவறான செயல்களைச் செய்வதில்லை. உண்மையில் அவர்கள், இறைவனிடமிருந்து நல்ல வெகுமதியும், சுவர்க்கமும் கிடைக்கும் என்ற உயரிய எண்ணத்தில் தான் இச்செயல்களைச் செய்கின்றனர். அல்லாஹ் தன் திருமறையில் அருளிய தெளிவான வசனமான

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல்குர்ஆன் 5:3)

என்ற வசனத்தை நமது சகோதரர்கள் முற்றிலுமாக மறந்துவிட்டதே அவர்களுடைய அறியாமைக்கு காரணமாகும். இவ்வசனத்தின் முதல் வாயிலேயே அல்லாஹ் கூறுகிறான் இஸ்லாம் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கிவிட்டதாக. அதுவும் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே. இதன் மூலம் இஸ்லாமிய மார்க்கத்தில் எதையும் சேர்க்கவோ அல்லது குறைக்கவோ யாருக்குமே உரிமையில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஆனால் நமது சகோதரர்கள் எண்ணற்ற புதிய அமல்களை உருவாக்கிவிட்டு அவைகளை நல்ல பித்அத் (பித்அத்துல் ஹஸனாஹ்) என்றும் கூறுகின்றனர்.

நமது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் “என்னுடைய வழிமுறைகளையும் நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறைகளையும் வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். இவைகளை உங்களின் கடைவாய் பற்களுக்கு இடையில் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். (இஸ்லாத்தில்) நுழைக்கப்படும் புதிய அமல்களைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள். ஒவ்வொரு புதிய அமலும் பித்அத் ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். ஓவ்வொரு வழிகேடும் நரகத்திற்குரியவை” என்று கூறினார்கள். (ஸஹீஹ் அல்-ஜாமிஅஸ் ஸகீர். ஹதீஸ் எண். 2549)

பித்அத் பற்றி விவாக அறிந்துக்கொள்வதற்கு மற்றொரு உதாரணத்தை நாம் எடுத்துக் கொள்வோம்: - 

கூத்தாநல்லூரில் (திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்) உள்ள பள்ளிவாயில் ஒன்றில் பஜ்ர் தொழுகைக்காக நாம் செல்வதாக வைத்துக் கொள்வோம். பஜ்ருடைய கடமையான தொழுகை இரண்டு ரக்அத் என்பதை, அதிகப்படுத்தி நான்கு ரக்அத் களாக மாற்றியமைத்த அந்தப்பள்ளியின் இமாம், இதை தாம் மறதியில் செய்யவில்லை என்றும் பஜ்ருடைய கடமையான இரண்டு ரக்அத்தை நான்கு ரக்அத்களாக அதிகப்படுத்த விரும்பியே அவ்வாறு செய்ததாகவும் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இப்போது இதை நாம் அங்கீகரித்து அவரை அவ்வாறு மாற்றுவதற்கு அனுமதிப்போமா? நிச்சயமாக அனுமதிக்க மாட்டோம். ஏனென்றால் பஜ்ருடைய கடமையான தொழுகை இரண்டு ரக்அத்கள் என்பதும், இதுவே நமது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறை என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். ஆகையால் அதை மாற்றுவதற்கு யாருக்குமே உரிமையில்லை. எவருக்கும் அந்த உரிமை இல்லை. நாம் அனைவரும் இவ்விசயத்தில் ஒற்றுமையாக இருக்கிறோம். இதைப்போலவே ஒவ்வொரு புதிய அமலும் தடுத்து நிறுத்தப்படவேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு புதிய அமலும் நபி (ஸல்) அவர்களால் “ஹராம்” என்று தடை செய்யப்பட்ட பித்அத் ஆகும்.

மேலும் மற்றொரு ஸஹீஹான ஹதீஸில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“என்னால் அனுமதிக்கப்படாத எந்த அமலும் நிராகாக்கப்படும்”

இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் ஒரு முஸ்லிம் புதிய அமலை (பித்அத்) செய்வானாயின், அவருக்கு எந்த நற்கூலியும் கிடைக்காது. ஆனால் பாவங்கள் அதிகரிக்கும். இதை பின்வரும் இரண்டு உதாரணங்கள் மூலம் விளக்கலாம். அல்லாஹ் சுப்ஹானஹு வத்தஆலா, உமர் (ரலி) அவர்களுக்கு கனவின் மூலம் தொழுகைக்கான அழைப்பை (பாங்கு) கற்றுத்தந்ததை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள். மேலும் மற்றொரு நபித்தோழரும் இதே கனவைக் கண்டார். நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அந்த பாங்கு அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று ஆரம்பமாகின்றது. ஆனால் தற்போது சில கிராமங்களில் பாங்கு கூற ஆரம்பிக்குமுன் நபி (ஸல்) அவர்களின் ஸலவாத்தைக் கூறி ஆரம்பம் செய்கின்றனர். இன்னும் சில கிராமங்களில் கலிமா தம்ஜீது (ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ…) ஓதி அதன்பின்னர் ஸலவாத்து கூறி பாங்கை ஆரம்பம் செய்கின்றனர். சில காலங்கள் கழித்து, பாங்கிற்கு முன் இன்னும் வேறு சிலவற்றையும் அவர்கள் சேர்க்கக் கூடும்.

கூத்தாநல்லூரில் சிலர் பாங்கு கூறும் போது திருக்குர்ஆனின் ஆயத்துக்களைக் கூடச் சோத்து விட்டனர். “இன்னல்லாஹ வமலாயிகத்திஹி யுஸல்லூன அலன்னபி யா அய்யுகல்லதீன ஆமனூ ஸல்லூ அலைஹி வஸல்லிமு தஸ்லீமா” என்பதையும் சோத்துக் கூறி பின்னர் ஸவாத்து, கலிமா போன்றவற்றை ஓதி பாங்கை கூறத்துவங்குகின்றனர். இன்னும் சில வருடங்கள் சென்ற பிறகு, குர்ஆன் ஓதுவது நல்ல அமல் என்று நினைத்து குர்ஆனின் நீண்ட அத்தியாயமான சூரத்துல் பகராவை பாங்கு கூறுவதற்கு முன்னால் ஒருவர் ஓத முனைந்தால், யாராவது அதை அனுமதிப்பாரா?

இவைகள் எல்லாம் எதை குறிக்கிறது? சலவாத்து, மூன்றாம் கலிமா மற்றும் குர்ஆன் ஆயத்துக்களை ஓதுதல் இவைகள் ஒவ்வொன்றுமே நல்ல அமல்களாக இருந்த போதிலும், இவைகளை தொழுகைக்கான பாங்கு கூறுவதற்கு முன்னால் சேர்ப்பது, அல்லாஹ் ஸுப்ஹானஹு வத்த ஆலா மற்றும் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்படாததாகும். அல்லாஹ்வும், ரஸுல் (ஸல்) அவர்களும் அங்கீகரிக்காத ஒன்றை ஒரு முஸ்லிம் எப்படி பாங்கில் சேர்க்க முடியும்? அதிகப்பிரசங்கித்தனமான இச்செயல்களைச் செய்வது, இது போன்ற நல்ல அமல்களைக் அல்லாஹ்வும், ரஸுல் (ஸல்) அவர்களும் காட்டித்தரவில்லை, அதனால் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த முஸ்லிம்கள் இவைகளைக் கண்டுபிடித்து மார்க்கத்தில் சேர்த்தனர் என்று பிரகடனப்படுத்துவதாகும். என்ன ஒரு தைரியம்? (நவூது பில்லாஹி மின்ஹா). ஷைத்தான்கள் நம்மை மூழ்கடிக்க விரும்பும் இது போன்ற தீமைகளிலிருந்து அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாத்து மன்னிக்கவேண்டும். அதனால் தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: து அல்லிமுஹுமுல்லாஹு ஃபீ தீனிகும்? பொருள்: அல்லாஹ்வுக்கு அவனுடைய மாக்கத்தை அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்களா?

அல்லாஹ் நமக்காக அவனுடைய மாக்கத்தை அனைத்து துறைகளிலும் பரிபூரணப்படுத்திவிட்டு, அதை அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாக நமக்கு காட்டிவிட்டான். இதன் மீது ஏதேனும் சந்தேகம் இருப்பவர்களே புதிய அமல்களை உருவாக்குகிறார்கள். புதிய அமல்களைச் செய்பவர்களை அல்லாஹ் தண்டிப்பது, அவர்கள் அந்த அமல்களைச் செய்வதினால் அல்ல. மாறாக, அவர்கள் ரஸுல் (ஸல்) அவர்களுடைய கட்டளையான மார்க்கத்தில் எதையும் புதிதாக உருவாக்கக் கூடாது என்பதை மீறியதற்காகவும், அல்லாஹ்வுடைய வார்த்தையான “அல்லாஹ் மார்க்கத்தை பரிபூரணமாக்கிவிட்டான்” என்பதற்கு எதிரான நம்பிக்கையான ‘மார்க்கம் இன்னும் பரிபூரணமாக்கப்படவில்லை, அதனால் தான் புதிய அமல்களை உருவாக்கி அதைச் செம்மைப்படுத்துகிறோம்’ என்ற தவறான நம்பிக்கையைக் கொண்டிருந்ததற்காகவும் தான் அல்லாஹ் அவர்களைத் தண்டிக்கிறான். நவூதுபில்லாஹி மின்ஹா.

நாம் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். நபி (ஸல்) அவர்கள் ஒரு நபித்தோழர் (ரலி) ஒருவருக்கு தூங்குவதற்கு முன் ஓதவேண்டிய நீண்ட துஆ ஒன்றைக் கற்றுக்கொடுத்தார்கள். அது பின்வருமாறு ஆரம்பமாகிறது. ‘ஆமன்து பிகிதாபிக்கல்லதீ அன்ஜல்த வநபிய்யிக்கல்லதீ அர்ஸல்த’ என்று செல்கிறது அந்த துஆ. அதைக் கற்றுக் கொண்ட நபித்தோழர் (ரலி) தன் வீட்டிற்குச் சென்றுவிட்டு மனனம் செய்து மறுநாள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முந்தைய தினம் தாம் மனனம் செய்ததை ஒப்புவிக்கும் போது, ‘ஆமன்து பிகிதாபிக்கல்லதீ அன்ஜல்த வரஸுலிக்கல்லதீ அர்ஸல்த’ என்று கூறியபோது நபி (ஸல்) அவர்கள் “லா” இல்லை. நான் எதைக் கூறினேனோ அதையே நீயும் கூறு என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கும், அந்த நபித்தோழார் (ரலி) கூறியதற்கும் என்ன வித்தியாசம்? நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த “நபி” என்ற வாத்தைக்குப் பதிலாக, “ரஸுல்” என்ற வார்த்தையைக் கூறினார் நபித்தோழர். இரண்டு வார்த்தைகளும் தூதர் என்ற ஒரே பொருளைக் கொண்டது தான். உண்மையில் “ரஸுல்” என்ற வார்த்தை “நபி” என்ற வார்த்தையைவிட சற்று அந்தஸ்து கூடியது. ஏனென்றால் “ரஸுல்” என்பவர் வேதங்களும், சட்டதிட்டங்களும் கொடுத்து அனுப்பப்பட்ட தூதர் ஆவார். “நபி” என்பவர் மக்களை எச்சரிக்கைச் செய்ய அனுப்பப்பட்ட தூதர் ஆவார். எனினும் நபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழருக்கு ஒரே ஒரு வாத்தையைக் கூட மாற்றுவதற்கு அனுமதியளிக்கவில்லை. இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் காலத்திலும், அவர்களுக்குப் பின் வந்த காலத்திலும் இஸ்லாம் எந்தவொரு மாற்றத்திற்கும் உட்படாமல் பாதுகாக்கப்பட்டது. ஆனால் நம்முடைய காலத்தில் நடைபெறுவது என்ன? நம்முடைய முன்னோர்களும், ஹஜ்ரத் மார்களும், நாமும் இஸ்லாத்தின் பல விஷயங்களில் மாற்றம் செய்ததோடல்லாமல், எண்ணற்ற புதிய அமல்களையும் உருவாக்கி அவைகளை நல்ல அமல்கள் (பித்அத்துல் ஹஸனா) என்று வேறு அழைக்கிறோம். ஆனால் இன்னமும் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தைப் பின்பற்றி வாழ்பவர்கள் நாங்கள் என்று நம்மை நாமே கூறிக்கொள்கிறோம். இது விசித்திரமாக இல்லையா?

நம் குடும்பத்தில் மரணித்த ஒருவருக்காக ஓதப்படும் 3 ஆம் நாள் பாத்திஹாவை எடுத்துக் கொள்வோம். தம் உறவினர் இறந்ததற்காக 3ஆம் நாள் பாத்திஹா ஓதுதல் என்ற புதிய அமலை (பித்அத்) செய்யும் ஒருவர், பின்வரும் இரு விஷயங்களோடு சம்பந்தப்படுகிறார். (அதாவது பின்வரும் குற்றங்களைச் செய்தவர் போலாகிறார்)

1. அல்லாஹ் இந்த நல்ல அமலைச் செய்யச் சொல்லவில்லை. அதனால் நானே இதை உருவாக்கினேன். அதாவது இறந்தவருக்கு சுவர்க்கத்தைத் தரக்கூடியவல்ல இந்த அற்புதமான அமலை அல்லாஹ் கூறுவதற்கு மறந்து விட்டான். அதனால் தான் நான் இதைக் கண்டுபிடித்து இஸ்லாத்தில் சோத்து விட்டேன். அல்லது யாரோ ஒருவர் கண்டுபிடித்து ஏற்கனவே மார்க்கத்தில் சோத்துவிட்டார். நானும் அதை பின்பற்றுகிறேன்.
என்ன ஒரு இறை நிந்தனை! நவூதுபில்லாஹ் மின்ஹா! குர்ஆன் சூரத்துல் மர்யமில் அல்லாஹ் கூறுகிறான் “வமா காண ரப்புக்க நஸீயா” பொருள்: உமது இறைவன் எதையும் மறக்கக்கூடியவன் அல்ல. மற்றொரு வசனத்தில் (ஆயத்துல் குர்ஸி), அல்லாஹ் தன்னைப்பற்றியே கூறுகிறான், “லா த ஹுதூஹும் சினத்துன் வலா நவ்ம்” - பொருள்: அவன் தூங்குவதும் இல்லை, மேலும் சிற்றுறக்கமும் அவனைப்பிடிப்பதில்லை (அல்குர்ஆன் 2:255)

2. மேலும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை மனிதகுலம் முழுவதற்கும் நபியாகவும், அனைத்து இறை நம்பிக்கையாளார்களுக்கும் மார்க்க விஷயங்களில் பின்பற்றவேண்டியதற்கு ஓர் முன்மாதிரியாகவும் அனுப்பினான். யாராவது ஒரு முஸ்லிம் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகள் எங்களுக்குப் போதவில்லை, அதனால் தான் நாங்கள் இன்னும் சில நல்ல புதிய அமல்களையும் செய்து, இறைவனிடமிருந்து திருப்தியைப் பெற்று அதற்குப் பரிகாரமாக சுவர்க்கத்தை அடைய விரும்புகிறோம் என்று நினைத்தால், அது நபி (ஸல்) அவர்களை அவமதித்து, அவர்களின் நபித்துவத்தையே கேலிக்குரியதாக்கி, அவர்கள் நமக்கு நல்லமல்கள் எல்லாவற்றையும் கூறவில்லை, சிலவற்றை கூறாமலேயே சென்றுவிட்டார்கள் என்று கூறுவது போலாகும். என்ன ஒரு மோசமான இறை நிந்தனை! இது நமது நபி (ஸல்) அவர்களை மட்டும் இழிவுபடுத்தவில்லை, மேலும் அல்லாஹ்வுக்கு தூதரைத் தோந்தெடுக்கத் தெரியவில்லை என்றும் பொருள்படுகிறது. இவ்விசயம் மீண்டும் அல்லாஹ்விடமே செல்கிறது. அல்லாஹ் நம்மனைவரையும் இதுபோன்ற புதிய பித்அத்களை செய்வதிலிருந்து காப்பாற்றி மன்னிப்பானாகவும். அஸ்த பிருல்லாஹில் அளீம்.

நாம் செய்யக்கூடிய இந்த புதிய அமல்கள் எவ்வளவு பெரிய கொடிய பாவம் என்பதை நாம் உணர்வதில்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு பித்அத் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் செயல்களாகிவிட்டது. அனுதினமும் சிலையை வணங்கும் ஒருவர் அவ்வாறு செய்வது தவறு என்று எப்படி உணராமல் இருக்கிறாரோ, அதுபோலவே பித்அத் புரியும் முஸ்லிமும் தான் செய்யும் தீமையின் விளைவுகளை உணராமல் அதை தொடாந்து செய்துவருகிறார். அல்லாஹ் ஒவ்வொரு நிமிட நேரத்திலும், வினாடியிலும் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் பதிவுசெய்தவாறு இருக்கிறான். நம்முடைய அனைத்துச் செயல்களுக்கும் இறுதிதீப்பு நாளில் நாம் கணக்கு கூறவேண்டியதிருக்கிறது. நாம் அல்லாஹ்வுக்கு பயந்து பித்அத் போன்ற செயல்களை செய்வதில் இருந்தும் தவிர்ந்து இருக்க வேண்டும்.

அல்லாஹ், நம்மை அவனுடைய மார்க்கத்தில் தெளிவு உள்ளவர்களாக்கி, நம்முடைய இதயத்தையும் ஒளிவுள்ளதாக்கி, அவனால் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றக்கூடியவர்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாகவும். ஆமின். வஆகிருதாவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

நன்றி: சுவனத்தென்றல்.காம்