வியாழன், 6 டிசம்பர், 2012




அழைப்புப் பணி


(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். அல்குர்ஆன் 16:125

முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தனது அழைப்புப் பணியில் உற்சாகத்துடனும் உறுதியுடனும் செயல்படுவார். நன்மையைச் செய்ய ஏதேனும் தகுந்த சூழ்நிலை ஏற்படுமா என எதிர்பார்க்காமல் மனிதர்களை சத்தியத்தின்பால் அழைப்பதற்கு விரைந்து செல்வார். மனத்தூய்மையுடன் அழைப்புப் பணிபுரிபவர்களுக்கு அல்லாஹ் சித்தப்படுத்தி வைத்துள்ள அருட்கொடைகளை பெரிதும் விரும்புவார்.

அலீ (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு மனிதருக்கு உம்மூலமாக அல்லாஹ் நேர்வழி கிடைக்கச் செய்வது உமக்கு உயர்ரக செந்நிற ஒட்டகைகளைவிட மேலானதாகும்.” (ஸஹீஹுல் புகாரி)

வழிதவறி திகைத்து நிற்கும் ஒரு மனிதனின் செவியில் சத்திய அழைப்பாளர் ஒரு நல்ல வார்த்தையை போடுவதன் மூலம் அவரது இதயத்தில் நேர்வழியின் விளக்கேற்றுகிறார். அப்போது அவர் அரபுகளின் செல்வங்களில் மிக உயரியதாக கருதப்பட்ட செந்நிற ஒட்டகைகள் அவருக்கு கிடைப்பதைவிட பன்மடங்கு அதிகமான நன்மைகளை அடைந்து கொள்கிறார். இவர் மூலமாக நேர்வழி பெற்றவரின் நன்மைகளைப் போன்று இவருக்கும் கிடைக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நேர்வழியிலிருந்து விலகியிருப்பவர்களை ஏகத்துவத்தின்பால் அழைப்பதில் தங்களது செல்வங்களையும் நேரங்களையும் செலவிட்டு அறிவீனர்களிடமிருந்து வரும் தீமைகளை இன்முகத்துடன் சகித்துக் கொள்ளும் அழைப்பாளர் மீது பொறாமை ஏற்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

விரும்பத் தகுந்த இப்பொறாமை குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”இரண்டு விஷயத்திலே தவிர பொறாமை (கொள்ள அனுமதி) கிடையாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்தான். சத்தியத்திற்காக அதை அவர் செலவு செய்கிறார். மற்றொருவருக்கு அல்லாஹ் கல்வி ஞானங்களைக் கொடுத்தான். அவர் அதன்படி மக்களுக்குத் தீர்ப்பளித்து மற்றவருக்கும் கற்றுக் கொடுக்கிறார்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ்வின்பால் அழைப்புப் பணிபுரியும் முஸ்லிம் தன்னிடமுள்ள ஞானத்தை அற்பமாக நினைக்காமல் சத்திய வார்த்தைகளில் தனக்கு எது தெரியுமோ அது அல்லாஹ்வுடைய வேதத்தின் ஒரே ஒரு வசனமாயிருப்பினும் எவ்விதத் தயக்கமுமின்றி அதை பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கூறினார்கள்: ”…என்னிடமிருந்து (நீங்கள் அறிந்து கொண்டது) ஒரே ஒரு வசனமாயிருப்பினும் அதை எத்திவைத்து விடுங்கள்…” (ஸஹீஹுல் புகாரி)

ஏனெனில், ஒரு வசனம் கூட மனித இதயத்தினுள் ஊடுருவி அவன் நேர்வழிபெற போதுமானதாகி விடலாம். அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அவனது இதயத்தில் ஈமான் இடம்பெற ஒரு வசனம் போதும். அந்த ஒரு வசனம் அவனது ஆன்மாவில் ஒளியேற்றி, வாழ்வில் பெரியதொரு மாற்றத்தை உண்டு பண்ணி அவனை புதியதொரு மனிதனாக மாற்றிவிட முடியும்.

நபிமொழி கூறுவதுபோல உண்மை முஸ்லிம் தனக்கு விரும்புவதையே தமது சகோதரருக்கும் விரும்புவார். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவருக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மையே நாடுவார். அதனால் பிரகாசமான நேர்வழி தன்னிலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களிலும் குறுகிப் போய்விடாமல் உலகம் முழுவதும் பரவவேண்டுமென விரும்புவார். தனக்கும் தனது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் சுவனத்தை விரும்புவார். அதனால் நரகத்தை தூரமாக்கி சுவனத்தில் சேர்ப்பிக்கும் நேர்வழியின்பால் எல்லாக் காலங்களிலும் எல்லோரையும் அழைத்துக் கொண்டேயிருப்பார். இது அழைப்பாளர்களின் பண்பாகும். இப்பண்பைக் கடைபிடிப்பதால் அல்லாஹ்வின் தூதரின் வாழ்த்தையும் துஆவையும் பெற்றுக் கொள்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நம்மிடமிருந்து ஒரு விஷயத்தைக் கேட்டு அதைக் கேட்டவாறே பிறருக்கு எடுத்துரைக்கும் மனிதரை அல்லாஹ் செழிப்பாக்குவானாக! எத்தி வைக்கப்பட்ட எத்தனையோ மனிதர்கள் அதைக் கேட்டவரைவிட நன்கு புரிந்து கொள்கிறார்கள்.” (ஸுனனுத் திர்மிதி)

இஸ்லாமிய சமூகம், பொறுப்புகளை சுமந்து நிற்கும் சமூகமாகும். இஸ்லாம் அந்த பொறுப்புகளை தனது உறுப்பினர் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழப்பதித்துள்ளது. ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விற்கு முன் தங்களது பொறுப்புகளை நன்கறிந்து அழைப்புப் பணியை திறம்பட செய்திருந்தால் இன்று இஸ்லாமிய சமுதாயம் பின்தங்கி பலவீனப் பட்டிருப்பதை நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும்.

ஏகத்துவ அழைப்புப் பணிக்கான வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தும் அதில் குறை செய்து, கல்வி ஞானமிருந்தும் அதை மறைத்து, பதவியையும் பொருளையும் அடைந்துகொள்ள கல்வியைப் பயன்படுத்திக் கொள்பவர்களை நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவர், அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் கல்வியை உலகாதாயத்தை பெறுவதற்காக மட்டுமே கற்றுக் கொள்வாரேயானால் அவர் மறுமை நாளில் சுவனத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்.” (ஸுனன் அபூதாவூத்)

மேலும் கூறினார்கள்: ”தான் அறிந்த ஒரு விஷயத்தைப் பற்றி கேட்கும்போது அதை மறைப்பவர் மறுமைநாளில் நரக நெருப்பினாலான கடிவாளம் அணிவிக்கப்படுவார்.” (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி)

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார்    
அல்லாஹ்வின்பால் அழைப்பதன் அவசியப் பணிகளில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் ஒன்றாகும். அழைப்பாளர் அறிவுடனும், நிதானத்துடனும் அழகிய முறையில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார். கரத்தால் தடுப்பதில் கடுமையான குழப்பங்கள் எதுவும் ஏற்படாது என்றால் அத்தீமையை தனது கரத்தால் மாற்றுவார். அது இயலவில்லையென்றால் தனது நாவின்மூலம் சத்தியத்தை எடுத்துரைத்து தீமையை நன்மையாக மாற்றப் போராடுவார்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்களின் நலம் நாடி நல்லதை ஏவி, தீமையைத் தடுப்பார். ஏனெனில், மார்க்கம் என்பது பிறர் நலம் நாடுவதுதான். இதை உண்மைப்படுத்த வேண்டுமெனில் அவர் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தேயாக வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள், ”மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவது” என்று கூறியபோது நாங்கள் கேட்டோம் ”யாருக்கு?” நபி (ஸல்) அவர்கள், ”அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், பொது மக்கள் அனைவருக்கும்” என பதிலளித்தார்கள். (ஸஹீஹ முஸ்லிம்)

பிறர் நலம் நாடுவதும், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் அநீதியிழைப்பவனின் முகத்துக்கு நேராக சத்தியத்தை உரக்கச் சொல்வதற்கான துணிவை முஸ்லிமுக்கு ஏற்படுத்தித் தரும். சுதந்திரமாகவும், கண்ணியமாகவும், கெªரவத்துடனும் இச்சமூகம் நிலைபெறுவதென்பது அநியாயக்காரனுக்கு முன் ‘நீ அநியாயக்காரன்’ என்று அச்சமின்றி சொல்லும் ஆற்றல் பெற்ற வீரர்களால் மட்டுமே சாத்தியமாகும். இச்சமூகத்தில் எப்போது அச்சமின்றி சத்தியத்தை எடுத்துரைக்கும் ஒரு கூட்டம் இல்லையோ அப்போது ஒட்டுமொத்த சமுதாயமும் வீழ்ச்சியை சந்திக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அநியாயக்காரனிடம் ‘நீ அநியாயக்காரன்’ என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.” (முஸ்னத் அஹமத்)

அசத்தியத்தை எதிர்ப்பதில் வீரத்தை கடைபிடிக்க வேண்டும், அநியாயக்காரனை எதிர்ப்பது உணவையோ வாழ்வையோ குறைத்துவிட முடியாது என்று அறிவுறுத்தும் அதிகமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”மனிதரைப் பற்றிய அச்சம் நீங்கள் சத்தியத்தைக் கூறுவதிலிருந்தோ, மகத்தானதை (அல்லாஹ், மறுமை நாளை) நினைவுபடுத்துவதிலிருந்தோ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு செய்வது நிச்சயமாக உங்களது ஆயுளைக் குறைத்துவிடவோ, உணவை தூரமாக்கிவிடவோ முடியாது.” (ஸுனனுத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்தபோது ஒரு மனிதர் எழுந்து வினவினார்: ”அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்?” நபி (ஸல்) அவர்கள், ”மனிதர்களில் சிறந்தவர் அவர்களில் நன்கு குர்ஆன் ஓதுபவர், மிகுந்த இறையச்சமுடையவர், அவர்களில் மிக அதிகம் நன்மையை ஏவி தீமையை தடுப்பவர், அவர்களில் மிக அதிகமாக இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பவர்” என்று கூறினார்கள்  (முஸ்னத் அஹமத்)

இஸ்லாமிய சமூகத்தில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது முஸ்லிம்களின் வீரத்தையும், துணிச்சலையும் அடிப்படையாகக் கொண்ட தாகும். தீமைகளை எதிர்கொள்வதிலும், அநீதி இழைக்கப்பட்டோருக்கு உதவி புரிவதிலும், வீரத்தை வெளிப்படுத்த வேண்டும்.

சத்தியத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு அல்லாஹ்வின் உதவி உள்ளதென்றும், சத்தியத்தை எடுத்துரைக்காமல் வாய் மூடியிருக்கும் கோழைகளுக்கு இழிவு உள்ளதென்றும் விவரிக்கும் ஏராளமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு முஸ்லிமை கேவலப் படுத்துகிறார்கள்; அவனுடைய கண்ணியத்தைத் தாக்குகிறார்கள்; அந்த இடத்தில் ஒருவன் அந்த முஸ்லிமைக் காப்பாற்றவில்லையென்றால் அல்லாஹ்வுடைய உதவி அவனுக்குத் தேவைப்படும் ஒரு இக்கட்டான தருணத்தில் அல்லாஹ் அவனை கைவிட்டு விடுவான். ஒரு முஸ்லிம் கேவலப்படுத்தப்படும்போது, அவனுடைய கண்ணியம் தாக்கப்படும் போது யாராவது அவனுக்கு உதவி செய்தால் அவன் ‘அல்லாஹ்வுடைய உதவி கிடைக்காதா’ என்று ஏங்கும் தருணத்தில் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான்.” (ஸுனன் அபூதாவூத்)

முஸ்லிம் அசத்தியத்தை சகித்துக்கொள்ள மாட்டார். சத்தியத்திற்கு உதவி செய்வதில் சோர்வடைய மாட்டார். தனது சமூகத்தில் அநீதம் பரவுவதையும், சபைகளில் தீமைகள் பரவுவதையும் ஒருபோதும் விரும்பமாட்டார். எப்போதும் தீமைகளை தடுத்துக் கொண்டேயிருப்பார். ஏனெனில் தீமையைத் தடுக்காதிருந்தால் அல்லாஹ்வின் வேதனை வாய்மூடி கோழையாக இருப்பவர்களையும் சூழ்ந்து கொள்ளும்.

அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் கலீஃபாவாக பொறுப்பேற்ற போது மிம்பரில் ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்த பின் கூறினார்கள்: மனிதர்களே நீங்கள் அல்லாஹ்வின் திருவசனமான, ”விசுவாசிகளே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழிதவறிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது…” (அல்குர்ஆன் 5:105) என்ற திருவசனத்தை ஓதுகிறீர்கள். நீங்கள் அந்த திருவசனத்திற்கான பொருளை உரிய வகையில் விளங்கிக்கொள்வதில்லை. நிச்சயமாக நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் ”மனிதர்கள் தீமைகளைக் காணும்போது அதை தடுக்காமல் இருந்தால் வெகுவிரைவில் அல்லாஹ்வின் வேதனை அவர்கள் அனைவரையும் சூழ்ந்துகொள்ளும்.” (ஸுனன் அபூதாவூத்)

ஒரு முஸ்லிமின் மார்க்கப் பற்று உண்மையாக இருந்து, அவரது ஈமான் உயிரோட்டமுடையதாக இருந்தால் நன்மையை ஏவுவதில் தீவிரமாகவும், தீமையை எதிர்கொள்வதில் வீரத்துடனும் இருப்பார். தீமைகளை அகற்ற முடிந்தளவு போராடுவார். ஏனெனில் மார்க்கத்தின் எல்லா அம்சங்களும் முக்கியமானவைதான். அதன் எந்தப் பகுதியிலும் அலட்சியம் கூடாது. அதன் கொள்கைகள் அனைத்தும் உறுதியானவை; சந்தேகமற்றவை. தங்களது மார்க்க விஷயங்களில் யூதர்கள் அலட்சியம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்கானதுபோல, முஸ்லிம்களும் பலியாகிவிடக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களுக்கு முன் வாழ்ந்த சமூகமான பனூ இஸ்ராயீல்களில் ஒருவர் தவறு செய்தால் அதைத் தடுத்து கண்டிக்க வேண்டியவர் தடுப்பார். அதற்கு அடுத்த நாள் அந்த நபருடன் அமர்ந்து சாப்பிடவும், குடிக்கவும் செய்வார். அவர் நேற்று எந்த தவறுமே செய்யாதது போன்று நடந்துகொள்வார். இதை அல்லாஹ் அவர்களிடையே கண்டபோது அவர்கள் மாறுசெய்து, வரம்பு மீறியதன் காரணமாக தாவூது (அலை), ஈஸா (அலை) அவர்களின் நாவினால் சபித்து அம்மனிதர்கள் சிலரின் உள்ளங்களை வேறு சிலரின் உள்ளங்களோடு கலந்துவிட்டான். எவனது கைவசம் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவுங்கள், தீமையைத் தடுத்துக் கொள்ளுங்கள். தவறிழைப்பவனின் கரங்களைப் பிடித்து அவனை சத்தியத்தின்பால் திருப்பிவிடுங்கள். அவ்வாறு செய்யவில்லையானால் அல்லாஹ் உங்களது இதயங்களை ஒன்றோடொன்று இணைத்து விடுவான். (தீமைகளோடு ஒத்துப் போய் விடுவீர்கள்) அந்த இஸ்ரவேலர்களை சபித்ததுபோல உங்களையும் சபித்து விடுவான்.” (முஃஜமுத் தப்ரானி)

அழைப்புப் பணியில் மிருதுவாகவும், விவேகமாகவும் நடந்து கொள்வார்
முஸ்லிம் அழைப்பாளர் தனது ஏகத்துவ அழைப்புப் பணியில் விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

(நபியே!) நீர் (மனிதர்களை) நளினமாகவும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின் வழியின்பால் அழைப்பீராக!……(அல்குர்ஆன் 16:125)

அல்லாஹ்வின்பால் அழைப்பவர் இதயங்களை ஊடுருவும் ஆற்றல் பெற்று, அதில் ஈமான் மீதான நேசத்தைப் பதிய வைத்து, மார்க்கத்தின் பால் மக்கள் விரைந்துவரும் ஆர்வத்தைத் தூண்டுபவராக இருக்கவேண்டும். அவர்களுக்கு சிரமத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது. எனவே அவர் மனிதர்களிடம் தன்னிடமுள்ள கல்வி, ஞானங்களை ஒரே நேரத்தில் கொட்டிவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக முன் வைத்து அவர்களது உணர்வுகளையும் இதயங்களையும் அவ்வப்போது தொடவேண்டும். அந்தச் சந்தர்ப்பங்களில் சிரமப்படுத்தும் நீண்ட உபதேசங்களை தவிர்த்திட வேண்டும். இதுதான் நபி (ஸல்) அவர்கள் மனிதர்களிடையே நடந்து கொண்ட முறையாகும்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் ஒவ்வொரு வியாழனன்றும் மக்களுக்கு உபதேசம் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஒருவர் ”அபூ அப்துர் ரஹ்மானே! நீங்கள் தினந்தோறும் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டுமென விரும்புகிறோம்” என்றார்.

இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் ”உங்களுக்கு சடைவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமே தினந்தோறும் உபதேசிப்பதிலிருந்து என்னைத் தடுக்கிறது. எங்களுக்கு சடைவு ஏற்படக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் எப்படி நாட்களை நிர்ணயித்தார்களோ அவ்வாறே நானும் உங்களுக்கு உபதேசம் செய்ய நாட்களை நிர்ணயித்துள்ளேன்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அழைப்புப் பணியில் நீண்ட பிரசங்கத்தை தவிர்த்துக் கொள்வது விவேகமான அணுகுமுறையாகும். அதிலும் மிகப்பெரிய கூட்டங்களில் உரையாற்றும்போது அதில் வயோதிகர்கள், பலவீனர்கள், நோயாளிகள் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு சுருக்கமாக உரையாற்றுவது பிரசங்கம் செய்பவர் அழைப்புப்பணியை நன்கறிந்தவர் என்பதையும் மக்களின் மனநிலையை விளங்கியவர் என்பதையும் வெளிப்படுத்துவதாகும்.

அம்மார் இப்னு யாஸிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”நிச்சயமாக ஒரு மனிதரின் நீண்ட தொழுகையும், சுருக்கமான குத்பாவும் அவர் அறிவாளி என்பதற்கான அடையாளமாகும். தொழுகையை நீளமாக்குங்கள், குத்பாவை சுருக்கிக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். (ஸஹீஹ் முஸ்லிம்)

அறிவும், விவேகமும் கொண்ட அழைப்பாளர் பிறரை சத்தியத்தின்பால் மென்மையாக அழைப்பார். மக்களின் அறியாமையையும், அவர்களுக்கு விளங்குவதில் ஏற்படும் தாமதத்தையும், அவரை சோர்வடையச் செய்யும் மிக அதிகமான கேள்விகளையும், தவறுகளையும், பொறுமையுடன் சகித்துக் கொள்ளவேண்டும். இது விஷயத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு தனது இதயத்தை விரிவாக்கி அவர்களுக்கு பதிலளிப்பதிலும், போதனை செய்வதிலும் விவேகத்தைக் கடைபிடித்த நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும்.


முஆவியா இப்னு ஹகம் அஸ்ஸலமி (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஒரு மனிதர் தும்மினார். நான் ‘யர்ஹமுக்கல்லா?’ என்று கூறினேன். உடனே மக்கள் என்னைப் பார்வையால் துளைத்தார்கள். நான் ”உங்களது தாய் உங்களை இழக்கட்டும்! என்னை இவ்வாறு பார்க்கின்றீர்களே. உங்களுக்கு என்னவாயிற்று?” என்று கேட்டேன். அம்மக்கள் கரங்களால் தங்களது தொடைகளைத் தட்ட ஆரம்பித்தனர். அவர்கள் என்னை மெªனமாக இருக்கச் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு நான் மெளனம் காத்தேன்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது, எனது தாயும் தந்தையும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அதற்கு முன்னாலும் அதற்குப் பிறகும் அவர்களைப் போன்ற ஓர் அழகிய போதனையாளரை நான் கண்டதில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! என்னை கடுகடுப் போடு பார்க்கவில்லை; திட்டவுமில்லை; அடிக்கவுமில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”இது தொழுகை. இதில் உலகப் பேச்சு பேசுவது முறையாகாது, தொழுகை என்பது தஸ்பீஹும், தக்பீரும், குர்ஆனை ஓதுவதும்தான்” என்றோ அல்லது இதைப் போன்ற வார்த்தைகளையோ கூறினார்கள்.

நான் கேட்டேன்: ”அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்துக்கு சமீபமானவன் (நான் சமீபத்தில்தான் இஸ்லாமை ஏற்றேன்). இப்போது அல்லாஹ்வே இஸ்லாமைத் தந்தான். எங்களில் சிலமனிதர்கள் சோதிடக்காரனிடம் செல்கிறார்கள்!” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ”நீர் அவர்களிடம் செல்லாதீர்.” நான், ”எங்களில் சிலர் சகுனம் பார்க்கிறார்கள்” என்றேன். நபி (ஸல்) அவர்கள்,”அது அவர்களுடைய உள்ளங்களில் ஏற்படும் ஓர் உணர்வாகும். அது அவர்களைத் தடுத்து விடவேண்டாம்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

(அது அவர்களை தடுத்துவிட வேண்டாம் என்பதின் பொருள்: மனதில் ஏற்படும் தடுமாற்றத்தால் எந்த காரியத்தையும் நிறுத்திட வேண்டாம் என்பதே.)

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களை நன்மையின்பால் அழைக்கும் போது தீங்கிழைத்தவரை நேரடியாக கண்டிக்க மாட்டார்கள். அதற்கு காரணம் இவ்வழி முறையால் அவரது உணர்வுகளும் கண்ணியமும் பாதுகாக்கப்படும். மேலும் இவ்வழிமுறை உள்ளங்களில் கருத்துக்களை ஆழமாக பதியவைத்து, தவறுகளைக் களைவதில் வெற்றிகரமான அணுகுமுறையாகும்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு மனிதரைப் பற்றி ஏதேனும் செய்தி கிடைத்தால் ‘அம்மனிதர் இப்படிச் சொல்கிறாரே!’ என்று கூறமாட்டார்கள். மாறாக ‘சிலர் இப்படி, இப்படிக் கூறுகிறார்களே!’ என்றே கூறுவார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

வெற்றிகரமான அழைப்பாளனுக்கு வேண்டிய பண்புகளில் ஒன்று தனது பேச்சை தெளிவாக, விரிவாக எடுத்துரைப்பதாகும். முக்கியமான கருத்துக்களை பலமுறை கூறவேண்டும். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ”நபி (ஸல்) அவர்கள் பேசினால் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வார்த்தைகளை மூன்றுமுறை கூறுவார்கள். ஏதேனும் ஒரு கூட்டத்தாரிடம் வந்து ஸலாம் கூறினால் அவர்களுக்கு மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ”நபி (ஸல்) அவர்களின் பேச்சு தெளிவான பேச்சாக அமைந்திருக்கும், அதை கேட்கும் அனைவரும் புரிந்துகொள்வார்கள்.” (ஸுனன் அபூதாவூத்)

நன்றி:www.ரீட்இஸ்லாம்.நெட்



மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்!


இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதையும் அறிவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” மேலும் கூறினார்கள்: “மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.” (முஃஜமுத் தப்ரானி)

முஸ்லிமின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்.

அபூ மூஸப் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:

“நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே!  நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்” என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)

இந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதரின் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல், அழமான இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஒயாது அடித்துகொண்டே இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கருணை காட்டுவதில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடன் அது இரண்டறக் கலந்துவிட்டது. அவர்களது மனம் கருணையைப் பொழிந்தது. எந்தளவுக்கென்றால் அவர்கள் தொழுகையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்கள். “குழந்தையின் அழுகையால் தாய்க்கு சிரமமேற்படுமே’ என நினைத்த நபி (ஸல்) அவர்களின் இதயத்தில் கருணை சுரந்து, தொழுகையை சுருக்கிக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் தொழவைக்க ஆரம்பிக்கிறேன், அதை நீளமாக்க விரும்புகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். நான் குழந்தையின்  அழுகையால் அதன் தாய்க்கு எற்படும் சிரமத்தை எண்ணி எனது தொழுகையை சுருக்கிக் கொள்கிறேன்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தமது பேரரான ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) “எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி (ஸல்) அவர்கள் “எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

உமர் (ரழி) அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல “குழந்தைகளை முத்தமிடமாட்டேன்’ என்று சொல்வதைக் கேட்டார்கள். அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: “உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்ட வில்லையானால் எப்படி நீர் மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”  முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.”  அனஸ்(ரலி) ஸஹீஹுல் புகாரி

ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார்  நபி(ஸல்) அவர்கள்  கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.

(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.

நபி (ஸல்) அவர்கள் கருணையின் வட்டத்தை மனிதர்களுடன் சுருக்கிக் கொள்ளாமல் அதனுள் விலங்கினங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்றபோது கடுமையான தாகம் எற்பட்டது. ஒரு கிணற்றைக் கண்டு அதனுள் இறங்கி தண்ணீர் அருந்திவிட்டு வெளியேறினான். அப்போது அங்கு ஒரு நாய் தாகத்தால் நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது. அம்மனிதன் “எனக்கு ஏற்பட்ட தாகத்தைப் போன்றே இந்த நாய்க்கும் ஏற்பட்டுவிட்டது’ என்று நினைத்தவனாக கிணற்றினுள் இறங்கி தோலாலான தனது காலுறையில் நீரை நிரப்பிக் கொண்டு அதை தனது வாயில் கவ்வியபடி மேலே வந்து நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனின் நற்செயலுக்க பகரமாக அவனை மன்னித்து விட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள் “விலங்குகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உயிருள்ள ஒவ்வொரு பிராணியின் விஷயத்திலும் நற்கூலி உண்டு.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு பூனையின் விஷயத்தில் ஒரு பெண் வேதனையளிக்கப்பட்டாள். அவள் அதை அடைத்து வைத்துவிட்டாள். அது பசியால் செத்துவிட்டது. அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அப்போது (மலக்குகள்) கூறினார்கள், நீ அதற்கு உணவளிக்காமல், தண்ணீர் புகட்டாமல் அதை அடைத்துவிட்டாய். அதை நீ வெளியே விட்டிருந்தால் பூமியிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டிருக்கும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் ஒர் இடத்தில் தங்கியபோது ஒரு பறவை நபி (ஸல்) அவர்களின் தலையின்மேல் பறந்து கொண்டிருந்தது. ஒருவர் தனது முட்டையை எடுத்து அநீதமிழைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டது போன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் “உங்களில் இந்தப் பறவையின் முட்டையை எடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த முட்டையை எடுத்தேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “அதன் மீது கருணைகூர்ந்து அதை திருப்பிக் கொடுத்துவிடு” என்றார்கள். (முஃஜமுத் தப்ரானி)

இந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இதயங்களில் விசாலமான கருணைச் சிந்தனையை விதைத்துவிட எண்ணினார்கள். அப்போது அவர்கள் விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதை தன் இயல்பாகக் கொள்வார்கள். விலங்கின் மீதே கருணை காட்டும் பண்பைப் பெற்றவர்கள் ஒருபோதும் மனிதனான தனது சகோதரனிடம் கருணையற்று கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்துக்கும் விலங்கினங்களுக்கும் கருணை காட்டவேண்டுமென கட்டளையிட்டார்கள். முஸ்லிம்கள் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கருணை முழு உலக முஸ்லிம்களையும் உள்ளடக்கி சமுதாயங்களையும் தேசங்களையும் சூழ்ந்துகொள்ள வேண்டும். பூமியில் கருணைப் பண்பு பரவலாகிவிடும்போது வானத்திலிருந்து அல்லாஹ்வின் கருணை பொழிகிறது.

நன்றி:www.ரீட்இஸ்லாம்.நெட்




வஞ்சகப் புகழ்ச்சி


உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும். அதிகமான மக்கள் வஞ்சப் புகழ்ச்சியில் சிக்கிக் கொண்டு தங்களை அறியாமலேயே நயவஞ்சகம் என்ற அழிவில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் பனூ ஆமிர் என்ற கூட்டத்தினர் புகழ்ச்சியாகக் கூறினர்: ”நீங்கள் எங்களது தலைவர்.” உடனே நபி (ஸல்) அவர்கள் ”தலைவன் அல்லாஹ் மட்டுமே” என்று கூறினார்கள். அக்கூட்டத்தினர், ”நீங்கள் எங்களில் மிகவும் சிறப்புக்குரியவர், மகத்தான அந்தஸ்துடையவர்” என்று கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ”உங்களது இந்த வார்த்தைகளை முழுமையாகவோ, அதன் ஒரு பகுதியையோ கூறிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் ஷைத்தானுக்கு துணை போகாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் என்னை எந்த அந்தஸ்தில் படைத்துள்ளானோ அதைவிட மேலாக நீங்கள் என்னை உயர்த்துவதை நான் விரும்பவில்லை. நான் முஹம்மது இப்னு அப்துல்லாஹ், அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதருமாவேன்” என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

நபி (ஸல்) அவர்கள்தான் முஸ்லிம்களின் தலைவர், அவர்களில் சிறப்பானவர் என்பது சந்தேகத்துக்கிடமின்றி இருந்தாலும் புகழ்வதை அனுமதித்தால் மக்கள் வரம்பு மீறிச் சென்று புகழுக்குத் தகுதியற்றவர்களை மேன்மைக்குரியவர், தலைவர் என்றெல்லாம் புகழ்ந்து விடுவார்கள் என்பதால்தான், தன்னைப் புகழ்ந்தவர்களை தடுத்தார்கள். மேலும், இம்மாதிரியான புகழ்ச்சிக்கு இடமளித்தால் அது மக்களை நயவஞ்சகத்தனம் என்ற அழிவின்பால் சேர்த்துவிடும். இவ்வாறு புகழ்வது பரிசுத்தமான இஸ்லாமின் அடிப்படைக்கு முரண்பட்டதாகும்.

புகழ்பாடுவது, புகழ்பவனை நயவஞ்சகத் தன்மையை நோக்கி இழுத்துச் சென்றுவிடும். அவ்வாறே புகழப்படுபவனை பெருமைக்கு ஆளாக்கிவிடும் என்பதால்தான் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்கள் மனிதர்களின் முகத்துக்கு எதிரே புகழ்வதை தடுப்பவர்களாக இருந்தார்கள்.

அபூ பக்ரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அவரது முகத்துக்கு முன்னால் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ”நீர் நாசமடைவீராக! உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர். உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர்” என மூன்றுமுறை கூறினார்கள். பிறகு, ”எவரேனும் தனது சகோதரரை அவசியம் புகழ்வதாக இருந்தால் அவரைப் பற்றி இவ்வாறு கருதுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன் என்று (மட்டும்) அவர் சொல்லட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே அதைக் கூறவேண்டும். அல்லாஹ்வுக்கு முன் யாரையும் தூய்மையானவர் என்று (எவரும்) கூறவேண்டாம்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கண்டிப்பாக புகழவேண்டிய நிலை ஏற்பட்டால் அந்தப் புகழ், புகழப்படுபவனுக்கு உண்மையில் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும். வரம்பு மீறாமல் கூடுதல் குறைவின்றி நடுநிலையுடன் அமைய வேண்டும். அதன்மூலமே சமூகத்தை பொய், நயவஞ்சகம், ஏமாற்றுதல், முகஸ்துதி போன்ற இழி குணங்களிலிருந்து தூய்மைப்படுத்த முடியும்.

ரஜா (ரஹ்) அவர்கள் மிஹஜன் (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்களும் மிஹஜனும் மஸ்ஜிதில் இருந்தபோது தொழுது ருகூவு, ஸுஜூது செய்து கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவர் குறித்து இவர் யார்? என வினவினார்கள். மிஹஜன் (ரழி) அவரை அதிகம் புகழ ஆரம்பித்து ”இவர் இப்படி, இப்படி சிறப்புக்குரியவர்” என்றார். நபி (ஸல்) அவர்கள் ”போதும். நிறுத்திக்கொள்! அவர் கேட்கும்படி கூறாதே. அவரை அழித்து விடுவாய்” என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

முஸ்னத் அஹமத் கிரந்தத்தின் ஓர் அறிவிப்பில் கூறப்படுவதாவது: ”அல்லாஹ்வின் தூதரே! இம்மனிதர் மதீனா வாசிகளில் மிக அழகியவர் என்றோ மதீனாவாசிகளில் மிக அதிகமாகத் தொழுபவர்” என்றோ கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ”அவர் கேட்கும்படி புகழாதே. அவரை நீ அழித்துவிடுவாய்” என இரண்டு அல்லது மூன்றுமுறை கூறிவிட்டு நீங்கள் (எல்லா விஷயங்களிலும்) இலகுவானதையே நாடப்பட்ட சமுதாயத்தினர்.” என்றும் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவரின் முன்னிலையில் அவரைப் புகழ்வது அழிவை ஏற்படுத்தும்’ என்று கூறினார்கள். ஏனெனில் அவ்வாறு தன்னை புகழ்வதைக் கேட்கும்போது மனித மனம் அதை மிகவும் விரும்பும். அதைக் கேட்பவர் அகந்தையும், ஆணவமும் கொண்டு மக்களிடமிருந்து தனது முகத்தை திருப்பிக் கொள்வார்.

புகழ்பவர்களில் சிலர் ஏமாற்றுபவர்களாகவும், பொய்யர்களாகவும், நயவஞ்சகர்களாகவும் இருப்பதால் மீண்டும் மீண்டும் புகழும்போது புகழைக் கேட்பவர்கள் அதில் இன்பமடைய ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குப் பின் அவர்கள் வரம்பு மீறிய புகழைத் தவிர அறிவுரையையும், விமர்சனத்தையும் விரும்பமாட்டார்கள். அப்போது அவர்களது அதிகாரத்தில் சத்தியம் வீணடிக்கப்படும், நீதம் அழிக்கப்படும், மாண்புகள் குழி தோண்டிப் புதைக்கப்படும், சமூகம் சீரழிவைச் சந்திக்கும். இவ்வாறு ஆட்சி அதிகாரங்கள் உடையவர்களை சுற்றி நின்று புகழ்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

நயவஞ்சகமாகப் புகழ்பவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் அதிகரித்து, நயவஞ்சகமும் முகஸ்துதியும் அதிகரித்துவிடக் கூடாது என்பதால் நபி (ஸல்) அவர்கள் புகழ்பவனின் முகத்தில் மண்ணை வீசுமாறு தங்களது தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

ஒரு மனிதர் ஆட்சியாளர்களில் ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசியபோது மிக்தாத் (ரழி) அவர்கள் அம்மனிதரின் முகத்தை நோக்கி மண்ணை அள்ளி வீசிவிட்டுக் கூறினார்கள்: ”அதிகமதிகம் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களது முகத்தில் மண்ணை எடுத்து வீசுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபித்தோழர்கள் இவ்வாறு புகழ்ப்படுவதைக் கேட்டு மிகவும் வெறுப்படைந்தார்கள். தாம் அழிந்து விடுவோம் என்ற அச்சத்தில் அந்தப் புகழ் வார்த்தைகளுக்கு தகுதியுடையவர்களாக இருந்தும் அதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயல்களி லிருந்து விலகி இஸ்லாமின் தூய பண்புகளைப் பெற்றிருந்தார்கள்.

நாபிஃ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களை ”மனிதர்களில் மிகச் சிறந்தவரே! அல்லது மனிதர்களில் மிகச் சிறந்தவரின் மகனே!” என்று அழைத்தார். இப்னு உமர் (ரழி) அவர்கள் ”நான் மனிதர்களில் சிறந்தவனுமல்ல, மிகச் சிறந்த மனிதரின் மகனுமல்ல. அல்லாஹ்வின் அடிமைகளில் ஒருவன். அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைக்கிறேன். அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு மனிதனை அழிக்காதவரை நீங்கள் ஓயமாட்டீர்கள்” என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

இது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து அந்தரங்கத்திலும் பகிரங்கத்திலும் அவர்களது வழிமுறையை முழுமையாக பின்பற்றிய பிரபல நபித்தோழரின் விவேகமான பதிலாகும். நயவஞ்சகத் தன்மையை வெற்றி கொள்வதற்கென நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த நேர்வழியைப் பின்பற்றிய நபித்தோழர்கள் இது விஷயத்தில் மிகக் கவனமாக இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக மனத்தூய்மையுடன் செய்யப்படும் அமல்களுக்கும், நயவஞ்சகத்தனத்துடன் செய்யப்படும் செயல்களுக்கு மிடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக அறிந்திருந்தார்கள்.

இப்னு உமர் (ரழி) அவர்களிடம் சிலர்: ”அதிகாரத்தில் உள்ளவர்களிடம் நாங்கள் செல்லும்போது அவர்களிடமிருந்து வெளியேறிய பின் எதைக் கூறுவோமோ அதற்கு மாற்றமாக அவர்களிடம் பேசுகிறோம்” என்றார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் ”நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இதை நயவஞ்சகத்தனம் எனக் கருதினோம்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

முகஸ்துதியிலிருந்து விலகியிருப்பார்
உண்மை முஸ்லிம் முகஸ்துதியிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். ஏனெனில், அவை நற்கூலியை அழித்து நற்செயல்களை வீணாக்கிவிடும். மகத்தான இரட்சகனின் முன்னிலையில் நிற்கும் மறுமை நாளில் இழிவை தேடித்தரும். இத்தூய மார்க்கத்தின் அடிப்படைகளில் தலையாயது, மனிதனின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மனத் தூய்மையுடன் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.

ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 52:56)

எந்த வணக்கமும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யப்பட்டால் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.

(எனினும் அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து அல்லாஹ் ஒருவனையே வணங்கி தொழுகையையும் கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறேயன்றி (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98:5)

தங்களது பொருளை ஏழைகளுக்கு செலவு செய்யும்போது அதை சொல்லிக் காண்பித்து ஏழைகளின் கண்ணியத்தை காயப்படுத்துபவர்களை அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கிறான். முகஸ்துதி கலந்துவிட்டால் அவ்வணக்கம் வீணாகிவிடும்.

விசுவாசிகளே! நீங்கள் உங்களுடைய தர்மத்தை (ப்பெற்றவனுக்கு) இகழ்ச்சியையும், துன்பத்தையும் (செய்வது) கொண்டு (அதன் பலனை) வீணாக்கிவிடாதீர்கள். அவ்வாறு (செய்பவன்) அல்லாஹ்வையும் கடைசி நாளையும் விசுவாசம் கொள்ளாது (தான் தர்மவான் என்பதைப் பிற) மனிதர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு தன் பொருளை செலவு செய்து (வீணாக்கி) விட்டவனுக்கு ஒப்பாவான். அவனுடைய உதாரணம்; ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன்மீது மண் படிந்தது. எனினும் ஒரு பெரும் மழை பொழிந்து அதை (க் கழுவி) வெறும் பாறையாக்கிவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்). ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததிலிருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:264)

ஏழைகளுக்கு தான் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது, அந்த தர்மத்தின் நற்பலன்களை வழுக்குப் பாறையில் ஒட்டியிருந்த மணலை பெரும் மழை அடித்துச் சென்றுவிடுவதுபோல அழித்து விடுகிறது. புகழுக்காக தர்மம் செய்பவர் அல்லாஹ்வின் நேர்வழிக்குத் தகுதியற்றவர், அவர் நிராகரிப்பாளர்களுடன் இணைக்கப்பட்டு விடுவார் என்பதை இந்த வசனத்தின் பிற்பகுதி சுட்டிக் காட்டுகிறது.

”மேலும் அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் ஜனங்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.” முகஸ்துதிக்காரர்கள், மனிதர்கள் தங்களைப் புகழவேண்டும் என்பதற்காக நல் அமல்களைச் செய்வார்கள். மகத்தான இரட்சகனின் திருப்பொருத்தத்தை நாடமாட்டார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்…

அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர் களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே அன்றி அல்லாஹ்வை தியானிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:142)

அவர்கள் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கிதன் காரணமாக அவர்களது அமல்கள் மறுக்கப்படும். தனது திருப்தியை நாடி, தூயமனதுடன் செய்யப்படும் அமல்களை மட்டுமே அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான்.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்: அல்லாஹ் கூறுகிறான், ”நான் இணைவைப்பவர்களின் இணையை விட்டும் தேவையற்றவன். ஒருவன் ஏதேனும் அமல் செய்து என்னுடன் மற்றெவரையும் கூட்டாக்கினால் நான் அவனை அவனது இணைவைக்கும் செயலுடன் விட்டு விடுகிறேன்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

தூய இதயத்துடன் வருவது தவிர வேறெந்த செல்வமும் மக்களும் பலனளிக்காத அந்நாளில் முகஸ்துதிக்காரர்கள் சந்திக்கும் இழிவையும் வேதனையையும் நபி (ஸல்) அவர்கள் விவரித்துக் கூறினார்கள்:

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன். ”மறுமை நாளில் முதன் முதலாக தீர்ப்பளிக்கப் படுபவர்களில் ஒருவன் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட தியாகி. அவன் கொண்டு வரப்பட்டு அவனுக்கு உலகில் அருளப்பட்ட அருட்கொடைகள் எடுத்துரைக்கப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் அதைக் கொண்டு என்ன அமல்களைச் செய்தாய் என்று கேட்கப்படும். ”அவன் உனக்காக போர் செய்து ஷஹீதாக்கப்பட்டேன்” என்று கூறுவான். அல்லாஹ் ”நீ பொய் சொல்கிறாய். நீ வீரன் என்று புகழப்படுவதற்காக போர் செய்தாய். அவ்வாறு உலகில் சொல்லப்பட்டு விட்டது” என்று கூறிவிடுவான். பிறகு, முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.

மற்றொரு மனிதன் கல்வியைக் கற்று பிறருக்கு கற்றுக் கொடுத்தான். குர்ஆனை ஓதியிருந்தான். அவன் கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அதை ஒப்புக் கொள்வான். அல்லாஹ் ”அதன்மூலம் என்ன அமல்களைச் செய்தாய்?” என்று கேட்பான். அவன் ”நான் கல்வியை கற்று பிறருக்குக் கற்றுக் கொடுத்தேன். உன் திருப்திக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் ”நீ பொய் சொல்கிறாய். நீ ஆலிம் என்று புகழப்படுவதற்காக கல்வி கற்றாய், காரி என்று புகழப்படுவதற்காக குர்ஆனை ஓதினாய், அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது” என்று சொல்வான். பிறகு அவனை முகம்குப்புற நரகில் வீசி எறியுமாறு உத்தரவிடப்படும்.

இன்னொரு மனிதன், அல்லாஹ் அவனுக்கு உலகில் பல்வேறு அருட்கொடைகளை வழங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தியிருந்தான். அவனைக் கொண்டு வரப்படும். அவனுக்கு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் ”அதைக்கொண்டு என்ன அமல்களைச் செய்தாய்?” என்று கேட்கப்படும். அவன் ”எந்த வழிகளில் செலவு செய்வது உனக்குப் பிரியமானதோ அந்த அனைத்து வழிகளிலும் நான் செலவு செய்தேன்” என்று கூறுவான். ”அல்லாஹ் நீ பொய் சொல்கிறாய், நீ கொடைவள்ளல் என புகழப்படுவதற்காக செய்தாய், அவ்வாறு உலகில் சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறுவான். பிறகு அவனை முகம்குப்புற இழுத்துச்சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த நபிமொழி தர்மம், வீரம், ஞானம் போன்ற நல் அமல்களில் தீய எண்ணங்களைக் கலந்து விடுவதால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது. தீய எண்ணத்துடன் அமல் செய்வதால் மகத்தான அந்நாளில் அகில உலக மக்களுக்கு முன்னால் அகிலங்களின் இரட்சகனால் கடும் தண்டனை வழங்கப்படுவது எவ்வளவு பெரிய இழிவு? அவர்கள் செய்த அமல்கள் தூய எண்ணத்துடன் அமைந்திருந்தால் எத்தகு நன்மைகளைப் பெற்று சுவனத்தில் நுழைவிக்கப்படுவர்களோ! அந்த அனைத்து நன்மைகளும் உரியப்பட்டு மாபெரும் இழிவும், கேவலமும் சூழ்ந்த நிலையில் முகங்குப்புற நரகில் வீசி எறியப்படுவ தென்பது ஈடுசெய்யவே இயலாத மகத்தான இழப்பல்லவா?

மார்க்கச் சட்டங்களை அறிந்த பேணுதலுள்ள முஸ்லிம் தனது அனைத்து செயலிலும் முகஸ்துதியிலிருந்து விலகி, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எவர் பெருமைக்காக அமல் செய்கிறாரோ அல்லாஹ் அவரை மறுமையில் இழிவுபடுத்துவான். எவர் முகஸ்துதிக்காக அமல் செய்வாரோ மறுமை நாளில் அல்லாஹ் அவரது குற்றங்களை பகிரங்கப்படுத்துவான்.” (ஸஹீஹுல் புகாரி)

நன்றி:www.ரீட்இஸ்லாம்.நெட்



நோயாளியிடம் நலம் விசாரித்தல்


 உண்மை முஸ்லிம் நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்ல வேண்டுமென இந்நேரிய மார்க்கம் மிகவும் வலியுறுத்துகிறது. எனவே நோய் விசாரிக்கச் செல்வது கடமையாகும். நோயாளியிடம் சென்று ஆறுதல் கூறும்போது நபி (ஸல்) அவர்களின் கட்டளையை நிறை வேற்றுகிறோம் என்று மனம் நிறைவடைய வேண்டும்.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

 பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி (ஸல்) அவர்கள் எங்களை ஏவினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

 நபி (ஸல்) அவர்களின் போதனைகள் இஸ்லாமிய சமூகத்தில் வெகு ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வாழ்வில் ‘தான் நோய்வாய்ப்பட்டால் தனது சகோதரன் தன்னை நலம் விசாரிக்க வர வேண்டும், அது அவனது கடமை’ என்று எண்ணுமளவு இப்பண்பு வலுப்பெற்றுள்ளது. அதை மறந்துவிட்டால் அல்லது அதில் குறை ஏதும் செய்துவிட்டால் அவன் தனது சகோதரனின் கடமையை மறந்தவன். அல்லது சகோதரனின் கடமைகளில் குறை செய்தவனாகிறான். அவன் இஸ்லாமின் மேலான பார்வையில் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்ட பாவியாகிறான்.

 நபி (ஸல்) அவர்கள், ”முஸ்லிமின் மீது ஒரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து” என கூறியபோது நபி (ஸல்) அவர்களிடம் அது என்ன? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ”அவரை நீ சந்தித்தால் ஸலாம் கூறு, அவர் உன்னை அழைத்தால் ஏற்றுக்கொள், உன்னிடம் அவர் நல்லுபதேசத்தை எதிர்பார்த்தால் அவருக்கு உபதேசம் செய், அவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதில் கூறு, நோய்வாய்ப்பட்டால் நலம் விசாரி, அவர் மரணித்தால் (ஜனாஸா) உடன் செல்.” (ஸஹீஹுல் புகாரி)

 ஒரு முஸ்லிம் தனது சகோதரனை நோய் விசாரித்தால் அவர் ஏதோவொரு கடமையைச் செய்து முடித்தோம் என்று எண்ணிவிடக் கூடாது. மாறாக, தனது செயலுக்காக அவர் ஆனந்தமடைய வேண்டும். பின்வரும் நபிமொழியின் கருத்தைக் கவனிக்கும்போது நலம் விசாரிப்பதன் மேன்மையை அறிந்துக் கொள்ளலாம்.

 நபி (ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் ”ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப்பட்டேன். நீ நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். மனிதன், எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். நான் எப்படி உன்னை நலம் விசாரிக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”உனக்குத் தெரியுமா? எனது இன்ன அடியான் நோயுற்றான். நீ நலம் விசாரிக்கச் செல்லவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அந்த இடத்தில் என்னை பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.

 ”ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”நீ அறிவாயா? எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.

 ”ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை” என்று கூறுவான். அம்மனிதன் ”எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் ”எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்” என்று கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)

 நோயாளியை நலம் விசாரிப்பது எவ்வளவு பரக்கத் பொருந்திய நற்செயல்! பலவீனப்பட்ட நோயாளியான தமது சகோதரனின் விருப்பத்தை நிறைவு செய்வது எவ்வளவு உயர்ந்தது! நலம் விசாரிப்பவன் அந்த சந்தர்ப்பத்தில் மகத்துவமிக்க தனது இரட்சகனிடம் நிற்கிறான். அல்லாஹ் அவனது நற்செயலுக்கு சாட்சியாகி மாபெரும் கொடையை வாரி வழங்குகிறான். இதன்மூலம் நலம் விசாரிப்பதை பரக்கத்தானதாகவும் மிக உயர்ந்த செயலாகவும் அல்லாஹ் நிர்ணயித்து அதனை செய்யத் தூண்டுகிறான். இவ்வாறு நலம் விசாரிக்காதவன் எவ்வளவு பெரிய நஷ்டவாளி, மாபெரும் இழிவும் வேதனையும் அவனை மறுமையில் சூழ்ந்து கொள்கிறது. உலகப் படைப்புகள் அனைத்தின் முன்னிலையில் அவனிடம் ”ஆதமின் மகனே! நான் நோயுற்றபோது நலம் விசாரிக்க ஏன் வரவில்லை? எனது இன்ன அடியான் நோயுற்றபோது நீ நலம் விசாரிக்கவில்லை. அவனை நலம் விசாரித்திருந்தால் அங்கு என்னை நீ பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?” என்று அல்லாஹ் கூறுவது அவனுக்கு மாபெரும் கேவலமாகும். தனது சகோதரனை நலம் விசாரிக்காமல் தவறிழைத்த மனிதன் அடையப்போகும் சஞ்சலம், கைசேதம் பற்றி இப்போதே சிந்திப்போம். ஏனெனில் மறுமை நாள் வந்தபின் உலகிற்கு மீண்டு வரமுடியுமா?

 இஸ்லாமிய சமூகத்தில் நோயாளி என்பவன் தனது துன்பத்திலும் சிரமத்திலும் உழன்று கொண்டிருக்கும் நிலையிலும் ‘தான் ஆதரவற்ற அனாதையல்ல, தன்னை இந்தச் சிரமத்திலிருந்து மீட்பதற்கு அல்லாஹ்வின் துணையுடன் உதவியாளர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு அவனது உள்ளத்தில் தோன்ற வேண்டும். இது மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இஸ்லாமின் உன்னதப் பண்பாகும். இது முஸ்லிம்களிடையே தவிர வேறெங்கும் காணமுடியாத அற்புதப் பண்பாகும். மேற்கத்திய நாடுகளில் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளும், திறமையான மருத்துவர்களும், உயர்ந்த மருந்துகளும் உள்ளன. எனினும் உறவினர்கள், நண்பர்களின் கனிவான அணுகுமுறை, ஆறுதலான வார்த்தைகள், மலர்ந்த புன்னகை, தூய்மையான பிரார்த்தனைகள் என்பது அந்த நேயாளிகளுக்கு மிகக் குறைவாகவே கிட்டுகின்றன. பொருளியலை அடிப்படையாகக் கொண்ட சிந்தனை மேற்கத்தியரை ஏமாற்றிவிட்டதுதான் இதற்குக் காரணமாகும். அது மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் அழித்து உலகில் பலன் கிடைக்காத நற்செயல்கள் செய்வதிலிருந்து அவர்களைத் தடுத்துவிட்டது. மனிதன் நோயாளியை சந்தித்து ஆறுதல் சொல்வதால் விளையும் நன்மைகளை உணரமாட்டான். ஒருவரை தான் சந்தித்து, அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமெனில் அவரிடமிருந்து தனக்கு உடனடியாகவோ, பிற்காலத்திலோ ஏதேனும் பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் அவனது அணுகுமுறை அமைந்திருக்கும். ஆனால் ஒரு முஸ்லிமுக்கு நோயாளியை சந்தித்து, ஆறுதல் கூற தூண்டுகோலாக அமைவதெல்லாம் இந்த நேரிய பாதையில் செல்பவர்களுக்கென அல்லாஹ் தயார் செய்துள்ள நன்மைகள்தான். இதற்கான சான்றுகள் ஏராளமானவை. இவை சகோதரத்துவ உணர்வை வளர்த்து நோயாளியை சந்திக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நிச்சயமாக ஒரு முஸ்லிம், தனது முஸ்லிம் சகோதரரை நோய் விசாரிக்கச் சென்று திரும்பும்வரை சுவனத்தின் கனிகளை பறித்துக் கொண்டிருக்கிறார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு முஸ்லிம், சகோதர முஸ்லிமை நலம் விசாரிக்க காலையில் செல்வாரேயானால் எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக மாலைவரை துஆச் செய்வார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கென சுவனத்தின் கனிகள் தயாராக வைக்கப்படும்.” (ஸுனனுத் திர்மிதி)

 நபி (ஸல்) அவர்கள், நோய் விசாரிப்பதால் நோயாளியின் மனதிலும் அவரது குடும்பத்தினரிடையேயும் மனிதநேயச் சிந்தனைகள் வளர்வதை அறிந்திருந்தார்கள். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் நோயாளிகளின் நலம் விசாரிப்பதில் ஒருபோதும் சடைந்ததில்லை. அவர்கள் நோயாளிகளுக்கு ஆறுதல் கூறி பிரார்த்தனையும் செய்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தனக்கு பணிவிடை செய்து வந்த யூதச் சிறுவனைக் கூட நலம் விசாரிக்கச் சென்றதிலிருந்து நபி (ஸல்) அவர்களின் மேலான வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.

 அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல்நலம் குன்றியபோது நபி (ஸல்) அவர்கள் அவனிடம் நலம் விசாரிக்கச் சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்தார்கள். பின்பு அச்சிறுவனிடம் ‘நீ இஸ்லாமை ஏற்றுக்கொள்’ என்று கூறினார்கள். அச்சிறுவன் அருகிலிருந்த தனது தந்தையைப் பார்த்தான். அவர் ”நீ அபுல் காஸிமுக்கு கட்டுப்படு!” என்று கூறினார். அச்சிறுவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள், ”இச்சிறுவரை நரக நெருப்பிலிருந்து காத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்” என்று கூறியவர்களாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

 நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரை நோய் விசாரிக்கச் சென்ற சந்தர்ப்பத்திலும் அவரை இஸ்லாமின்பால் அழைக்கத் தவறவில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரை நோய் விசாரிக்கச் சென்றது, அச்சிறுவர் மனதிலும் அவரது தந்தையின் மனதிலும் நபி (ஸல்) அவர்களின் கருணையையும், மேன்மையையும் ஆழப்பதியச் செய்தது. எனவே அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகை அவர்களுக்கு நேர்வழியை அருளியது. நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறும்போது அவர்கள் அச்சிறுவரை நரகிலிருந்து விடுவித்த அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் தான் எத்தகு மகத்தான மனிதர்! அவர்களது இறையழைப்புதான் எவ்வளவு விவேகமானது! நபி (ஸல்) அவர்கள் நோயாளிகளை நலம் விசாரிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவமளித்ததுடன் அது விஷயத்தில் தங்களது தோழர்களுக்கு சில அடிப்படைகளையும் கற்றுக் கொடுத்தார்கள். அதில் ஒன்றுதான் நோயாளியின் தலைமாட்டில் அமர்ந்து நலம் விசாரிப்பதும்.

 இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எவரையேனும் நோய் விசாரிக்கச் சென்றால் அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஏழுமுறை பின்வரும் துஆவைக் கூறுவார்கள்: ”உமக்கு ஷிஃபா அளிக்க வேண்டுமென மகத்தான அர்ஷின் இரட்சகனான, மகத்தான அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்.” (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஒழுக்கங்களில் ஒன்றுதான் தங்களது வலது கரத்தால் நோயாளியை தடவிக் கொடுத்து, அவருக்காக துஆச் செய்வதும்.

 அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றால் தமது வலது கரத்தால் அவரை தடவிக் கொடுத்து அல்லாஹ்¤ம்ம ரப்பன்னாஸ், அத்ஹ¢பில் பஃஸ, இஷ்ஃபி, அன்த்தஷ்ஷாஃபீ, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக, ஷிஃபாஅன் லாயுஃகாதிரு ஸகமா” என்று பிரார்த்திப்பார்கள். அதன் பொருள், ”யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! நோயைப் நீக்குவாயாக! அறவே நோயில்லாமல் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

 இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் நலம் விசாரிக்கச் சென்றால் ”கவலைப்பட வேண்டாம்! இறைவன் நாடினால் இது (உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்” என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)

 நோயாளிகளை நலம் விசாரிப்பதில் முஸ்லிம்கள், தலைமுறை தலைமுறையாக இப்புகழுக்குரிய நபிவழியைப் பின்பற்றி வருகிறார்கள். ஒருவருக்கொருவர் கருணையிலும் அன்பிலும் உதவி செய்து கொள்வதிலும் எடுத்துக்காட்டாகத் திகழும் இப்பண்பு முஸ்லிம்களின் தனித் தன்மையான அடையாளமாகவே நிலைபெற்றுத் திகழ்கிறது. இப்பண்பு வாழ்க்கை சுமையால் அழுந்திப்போன முதுகை நிமிர்த்துகிறது; கவலையில் வீழ்ந்தவனின் கண்ணீரைத் துடைக்கிறது; துன்பங்களால் சூழப்பட்டவனை விடுவிக்கிறது; நிராசையடைந்தவனுக்கு நம்பிக்கையை துளிர்க்கச் செய்கிறது; சகோதரத்துவ அன்பை உறுதிப்படுத்துகிறது; வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வலிமையைத் தருகிறது.

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்




நடுநிலைச் சமுதாயத்தின் இன்றைய நிலை!


ஒன்று பட்டிருந்த மனித சமுதாயம் ஷைத்தானின் மேலாதிக்கத்தால், பகமை மேலோங்கி, மூடத் தனத்தில் மூழ்கி, நரக நெருப்புக்குழியின் கரையில் நெருங்கிய போதெல்லாம், இறைவன் தன் கருணையால் நபிமார்களை அனுப்பினான். நேர்வழி காட்டுதலையும் அந்நபிமார்கள் மூலம் சிதருண்ட மக்களுக்கு அவ்வப்போது அருளி சகோதரர்களாக்கினான்.

இவ்வாறு அருளப்பட்ட அனைத்து முந்தைய வேதங்களையும் உள்ளடக்கியதே இறுதி மறையாம் அல்குர்ஆன். இக்குர்ஆனில் முந்திய காலங்களில் நடந்த அனைத்து நல்லது கெட்டதுகளையும், மிகத்தெளிவாக விளக்கி எச்சரித்து, மக்களை பண்பட்ட இறை நெருக்கமுள்ளவர்களாக வாழ வகை செய்துள்ளான் வல்ல அல்லாஹ்.

இவ்வளவு தெளிவான இறுதி வேதமுள்ள நிலையிலும் உலக மக்களும், குறிப்பாக இதைப் பின்பற்றுகிறோம் என்று வானளாவ சொல்லும் முஸ்லிம்களும், இறைவழி காட்டுதலுக் கொப்ப வாழ்கிறார்களா? முந்தைய ஒன்றுபட்ட சமுதாயத்தைக் கூறு போட்டுச் சிதைத்து, மக்களைச் சுரண்டி தங்களின் வயிறுகளை நிரப்புவதோடு மறுமையில் மிகப் பெறும் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்கள் புரோகித பூசாரிகள் என்பதை இறைவன் தனது திரு மறையில் மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறான்.எனினும் நாம் எவ்வித படிப்பினையும் பெறாதவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அன்றைய, இன்றைய யூத கிறிஸ்தவ சமுதாயங்கள் எப்படி புரோகித குருமார்களை சுய சிந்தனையற்று, குறுட்டுத்தனமாக நம்பி மோசம் போனதோ, இப்போதும் போய்க் கொண்டிருக்கின்றனவோ, அதே வழியில் இறுதிவேதம் கொடுக்கப்பட்ட நாமூம் மோசம் போய் கொண்டிருக்கிறோம்.

வல்ல அல்லாஹ் தனது திருமறையில் நன்மையை ஏவி, தீமயைத் தடுத்து அல்லாஹ்வைத் திடமாக நம்பும் இந்த உம்மத்தில் உள்ளவர்களைப் பார்த்து “மேன்மைமிக்க சமுதாயம்” என்கிறான் (3:110). மற்ற சமுதாயத்திலுள்ள மக்களுக்கு நம்மை சாட்சியளார்களாக ஆக்கி நம்மை “நடு நிலைச் சமுதாயம்” (2:143) என்று புகழாரம் வேறு சூட்டுகிறான்.

உண்மையில் நாம் மேன்மைமிக்க சமுதாயமா? சுயசிந்தனையற்று ஆடுமாடுகளைப் போல் முல்லாக்களுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டு குர்ஆன்-நபிவழிக்கு மாற்றமாக நடந்து கொண்டிருக்கும் நாம் நடுநிலைச் சமுதாயமா? சிந்தியுங்கள்! நம் நிலையைச் சீர்தூக்கிப் பாருங்கள்.

“முஸ்லிம்” என்ற அல்லாஹ் கொடுத்த ஒரே இயக்கமாக ஒரே தலைமயின் கீழ் ஒன்றுபட்டு இயங்கக் கடமைப்பட்ட முஸ்லிம் சமுதாயம் பிரிந்து பல இயக்கங்களாக பல தலைமைகளின் கீழ் செயல் படுவதால்தான் பதவி ஆசையால்தான் இந்த அலங்கோலம் என்பதை யாரால் மறுக்க முடியும்? ஒன்றுபட்ட் சமுதாயத்தை பிளந்து சுய ஆதாயம் தேடும் மதப்புரோகிதர்களையும், அற்ப உலக ஆதாயத்தைக் குறிக்கோளாகப் கொண்டுள்ள அரசியல் வாதிகளான இயக்கங்களையும் புறக்கணிப்போம்.

மக்களை மடையர்களாக்கி, பிரித்து சின்னாப்படுத்தி, சிதைத்து வழி நடத்திக் கொண்டிருக்கும் அவர்களைக் கண்மூடி பின்பற்றும் நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடித்திருக்கிறீரகளா? நமது நிலைகளை ஒரு கனம் எண்ணிப் பார்ப்போம், சீர்திருந்துவோம். முஸ்லிம்களாக ஒரணியில் ஒன்றுபடுவோம்; அணி திரள்வோம். வல்ல அல்லாஹ் நம்மை நேர்வழியில் நடத்திச் செல்வானாக.

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்

ஞாயிறு, 2 டிசம்பர், 2012




அல்லாஹ்வின் அத்தாட்சிகள் 


إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا ، وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا 

'அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!'. (அல்குர்ஆன் 18:07,08)

இவ்விரு வசனங்களில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.
இறைவன் எத்தகைய ஆற்றல் மிக்கவன் என்பது ஒரு செய்தி!
மனிதர்களுக்கு இவ்வுலகில் இன்பங்களை வாரி வழங்கியிருப்பது ஏன் என்பது மற்றொரு செய்தியாகும். இவ்வசனத்தில் தனது வல்லமையைக் கூற வெகு தொலைவுக்கு மனிதனை இழுத்துச் செல்லாமல் அவன் எந்த மண்ணில் வாழ்கின்றானோ அந்த மண்ணையே இதற்குக் களமாக்கிக் காட்டுகின்றான்.

எவ்வித கவர்ச்சியும் அலங்காரமும் இல்லாமல் கட்டாந்தரையாகக் கிடந்த பூமியின் மேல் மழையை விழச்செய்து அவற்றில் மரம் செடி கொடிகளை முளைக்கச் செய்கிறான். இவ்வாறு முளைத்தவுடன் பூமிக்கு புதுப் பெண்ணின் கவர்ச்சி வந்து விடுகின்றது. இதை நாம் தான் செய்கின்றோம் என்று இங்கே சுட்டிக் காட்டுகின்றான்.  திருக்குர்ஆனின் வேறு இடங்களில் இன்னும் அழுத்தமாகத் தனது இந்த ஆற்றலை மனிதனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கின்றான்.

'அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகின்றோம். பேரிச்சை மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன. திராட்சைத் தோட்டங்களையும் (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வௌ;வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கின்றோம்) அவை (பூத்துக்) காய்ப்பதையும் பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன'. (திருக்குர்ஆன் 6:99)

'பந்தல்களில் படர விடப்பட்ட கொடிகளும் படர விடப்படாச் செடிகளும் பேரீச்சை மரங்களும் உள்ள சோலைகளையும் புசிக்கத் தக்க விதவிதமான காய், கறி தானியங்களையும் ஒன்று போலவும் வௌ;வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும் அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை'. (அல்குர்ஆன் 6:141)

'இன்னும் பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும் விளைநிலங்களையும் கிளைகள் உள்ளதும் கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான், இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப் பட்டாலும் அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கி இருக்கிறோம். நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன'. (அல்குர்ஆன் 13:04)

'அதனைக் கொண்டே (விவசாயப்) பயிர்களையும் ஒலிவ (ஜைத்தூன்) மரத்தையும் பேரீச்சை மரங்களையும் திராட்சைக் கொடிகளையும் இன்னும் எல்லா வகைக் கனி வர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு (தக்க) அத்தாட்சி இருக்கிறது'. (அல்குர்ஆன் 16:11)

'இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணையை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது)'. (அல்குர்ஆன் 23:20)

'அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்'. (அல்குர்ஆன் 26:07)

'அன்றியும் வானங்களையும் பூமியையும் படைத்து உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கின்றோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்'. (அல்குர்ஆன் 27:60)

'அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா? - நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால்நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?'. (அல்குர்ஆன் 32:27)

'பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும் (மனிதர்களாகிய) இவர்களையும் இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்'. (அல்குர்ஆன் 36:36)

'நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுக்களில் ஓடச் செய்கிறான். அதன் பின் அதைக் கொண்டு வௌ;வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால் அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர். பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது'. (அல்குர்ஆன் 39:21)

'(பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?'. (அல்குர்ஆன் 56:63,64)

கடவுள் என்று ஒருவன் இருக்கின்றான் என்பதற்கும் அவனது வல்லமைக்கும் மண்ணில் முளைக்கும் பயிர் பச்சைகள் மிகப் பெரும் சான்றாகவுள்ளதால் தான் இதை முக்கியத்துவத்துடன் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.

இனிப்பான மாம்பழத்தை மாமரம் உற்பத்தி செய்கிறது என்றால் மாங்கொட்டையில் அந்த இனிப்பு இருக்கவில்லை. அது புதைக்கப்பட்ட மண்ணிலும் அந்த இனிப்பு இருக்க வில்லை. ஊற்றுகின்ற தண்ணீரிலோ வீசுகின்ற காற்றிலோ வெளிச்சத்திலோ இனிப்பு இருந்ததில்லை. ஆனாலும் மாம்பழங்கள் இனிக்கின்றன. இப்படிப் பல்வேறு சுவைகள் கொண்ட கனிகளை மனிதன் உண்ணும் போது அதைப் பற்றி சிந்தித்தால் 'சூப்பர் பவர்' உள்ள ஒருவன் ஆட்டிப் படைக்கின்றான் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வான்.
இலைகள், பூக்கள், காய்கள், கனிகளில் தான் எத்தனை வண்ணங்கள்! அந்த வண்ணங்கள் எப்படி வந்தன? என்றெல்லாம் ஆராயும் ஒருவன் கடவுளை மறுக்கவே மாட்டான்.

அடிக்கடி பார்த்துப் பழகியதால் நாம் இதை உரிய விதத்தில் சிந்திப்பதில்லை. மண்ணில் முளைத்தெழும் ஒவ்வொன்றிலும் கணக்கிட முடியாத அதிசயங்கள் புதைந்து கிடப்பதை இதனால் தான் நாம் சிந்திப்பதில்லை. எப்போதும் தூரத்தில் இருப்பது தான் நமக்கு அதிசயமாகத் தோன்றும். நம் பக்கத்தில் நிற்கும் அதிசயங்கள் அதிசயங்களாகத் தோன்றாது.

மனிதன் இதைச் சிந்திக்க மாட்டான் என்பதற்காகத் தான் இம்மண்ணின் மேல் உள்ளவற்றை மண்ணுக்கு அலங்காரமாக ஆக்கினோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். இதை மட்டும் கூறிவிட்டு நிறுத்திக் கொண்டால் கூட இதெல்லாம் இயற்கை என்று மனிதன் கூறி விடுவான். நாளை வறண்ட பாலைவனமாகவும் நாம் ஆக்குவோம் என்று சேர்த்துக் குறிப்பிடுகின்றான்.

உரிய நேரத்தில் உரிய அளவில் மழை பெய்த பிறகு இயற்கையாக முளைத்தன என்று கூறும் மனிதனே! உரிய நேரத்தில் மழை பெய்ததும் இயற்கையா? உரிய அளவில் மழை பெய்ததும் இயற்கையா? மேலப்பாளையத்தில் பெய்து விட்டு பாளையங்கோட்டையில் பெய்யாமல் இருந்ததும் இயற்கையா? காற்றும் குளிர்ந்து தரையும் குளிர்ந்து இதோ மழை வரப் போகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ராஜஸ்தான் பாலைவனத்தில் - அனலாய் கொதிக்கும் பூமியில் - மழையை விரட்டிச் சென்று பெய்விப்பவன் யார்?

இதற்கு இயற்கை என்று எவரும் காரணம் சொல்ல முடியாது அல்லவா? இதனால் தான் தனது வல்லமைக்கு பசுமையை மட்டும் சான்றாகக் கூறி நிறுத்திக் கொள்ளாமல் வறட்சியை ஏற்படுத்துவதும் நாம் தான் எனக் கூறி ஆப்பு வைக்கிறான்.

இந்த இடத்தில் ஏன் இத்தனை வருடங்களாக மழை பெய்யவில்லை என்ற கேள்விக்கு 'இயற்கை' என்று விடை கூற முடியாது. யாரோ ஒருவன் தான் இதற்குக் காரணமாக இருக்கின்றான் என்பது தான் இதற்கு விடையாக இருக்க முடியும்.

இறைவனை மனிதன் நம்ப வேண்டும், அதுவும் சிந்தித்து விளங்கி நம்ப வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த சின்னஞ்சிறு சொற்றொடருக்குள் சேர்த்துக் கூறிவிடுகின்றான்.

நன்றி:தமிழ்அல்லாஹ்.ப்ளாக்ஸ்பாட்.காம்

சனி, 1 டிசம்பர், 2012



ஸலவாத்! (பிரார்த்தனை)


இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (33:56)

பாங்கு கூறுபவரின் பாங்கை நீங்கள் கேட்டால் அவர் கூறியது போன்று கூறுங்கள். பின்பு என் மீது 'ஸலவாத்" கூறுங்கள். என்மீது ஒரு முறை ஸலவாத் கூறினால் அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத் கூறுகிறான். அம்ர் இப்னு ஆஸ்(ரலி) திர்மிதி, முஸ்லிம், அபூதாவூத்.
ஸலவாத் என்றால் என்ன?

ஸலாத் என்ற வார்த்தையின் பன்மை தான் ஸலவாத். ஸலாத் என்ற வார்த்தைக்குத் தொழுகை என்று பொருள் கொண்டாலும் பிரார்த்தனை என்ற பொருளும் உள்ளது.

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக. நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். 9:103

ஜகாத் நிறைவேற்றியவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யும்படி அல்லாஹ் நபி(ஸல்) அவர்களை ஏவுகிறான்.

ஒரு முறை எனது தந்தை அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் ஜகாத்தை நபி(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தபோது நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹும்ம ஸல்லி அலாஆலீ அபீ அவ்ஃபா" (இறைவா அபீ அவ்ஃபா குடும்பத்தினருக்கு நீ அருள் செய்வாயாக ) எனப் பிரார்த்தித்தார்கள். அவ்ஃபா (ரலி) புகாரி.

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (33.56)

அ) அல்லாஹ்வின் ஸலவாத் - அருள்புரிதல்
ஆ) மலக்குகளின் (வானவர்) ஸலவாத் - பாவமன்னிப்பும், அருளும் வேண்டுதல்.
இ) முஃமின்களின் ஸலவாத் - பிரார்த்தித்தல், உயர்வை வேண்டுதல்.

ஸலவாத்

ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே உங்கள் மீது 'ஸலாம்" உரைப்பதை அறிந்து வைத்துள்ளோம். ஆனால் 'ஸலவாத்" சொல்வது எவ்வாறு என்று கேட்டோம். இதனை செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பின்னர் 'அல்லாஹும்ம ஸல்லி அலாமுஹம்மதின் வஅலா ஆலிமுஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத்" எனக் கூறும்படி கூறினார்கள் புகாரி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூத் - கஃப் இப்னு உஜ்ரா (ரலி).

பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ(புகழப்பட்டவனும்) புகழுக்குரியவனும், கண்ணியத்திற்குரியவனுமாவாய்.

இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் பரக்கத் (அபிவிருத்தி) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அபிவிருத்தியை(பரக்கத்தை) அருள்வாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும், கண்ணியத்திற்குரியவனுமாவாய்.

ஸலவாத்தின் சிறப்பு

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என் மீது கூறப்படும் ஸலாத்தினை பூமியில் (அதற்கென) சுற்றித் திரியும் மலக்குகள் எனக்கு எத்திவைக்கின்றனர். திர்மிதி, ஹாகிம், நஸாயீ இப்னு மஸ்வூத் (ரலி)

மறுமை நாளில் எனக்கு மிக நெருக்கமானவர்கள் என் மீது அதிகம் ஸலவாத்து கூறியவர்களே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்கள் - அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் - திர்மிதி

ஸலவாத் எந்தெந்த நேரங்களில் கூறவேண்டும்?

1. பாங்கு சொல்லி முடிந்ததும்
நீங்கள் பாங்கு சொல்பவரின் (பாங்கு) சப்தத்தைக் கேட்டால் அவர் கூறுவதுபோல் (பாங்கு வாசகங்களைக்) கூறுங்கள். பிறகு என் மீது ஸலவாத்துக் கூறுங்கள். எவர் என் மீது ஸலவாத்து ஒரு முறை சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள்புரிகிறான். பிறகு எனக்காக அல்லாஹ்விடம் 'வஸீலா"வைக் கேளுங்கள். 'வஸீலா" என்பது சுவர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் ஒரு பதவியாகும். அது அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கு மட்டுமேயன்றி வேறு எவருக்கும் கிடைக்காது. அந்த ஒருவர் நானாக இருக்கவேண்டு மென நான் ஆதரவு வைக்கிறேன். எவர் எனக்காக 'வஸீலா" எனும் அப்பதவி கிடைக்க (அல்லாஹ்விடம்) வேண்டுகிறாரோ அவருக்கு (என்) பரிந்துரை (ஷஃபாஅத்) நிச்சயம் உண்டு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி)

பாங்கு துஆ
'அல்லாஹூம்ம ரப்பஹாதித் தஃவதித் தாம்மத்தி வஸ்ஸலாதில் காயிமத்தி ஆத்தி முஹம்மதினில் வஸீலத்த வல்ஃபளிலத்த வப்அஃத்ஹூ மகாமன் மஹ்மூதினில்லதி வத்ததஹ்"" என்று பிராத்தனை செய்தால் அவருக்கு மறுமையில் எனது பரிந்துரை (கடமையாகிவிட்டது) கிடைக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் - ஜாபிர் (ரலி) புகாரி

மற்றொரு அறிவிப்பில் "வஸீலா என்பது சுவர்க்கத்திலுள்ள ஒரு உயர்வான நிலையாகும். அது அல்லாஹ்வின் அடியார்களில் எவராவது ஒருவருக்குத் தான் கிடைக்கும். அது எனக்காக இருக்க வேண்டும் என நான் ஆதரவும், நம்பிக்கையும் வைக்கிறேன்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் - முஸ்லிம்
பொருள்:
பரிபூரணமான இப்பிரார்த்தனைக்கும், நிரந்தரமான தொழுகைக்கும் உரிய இரட்சகனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு சுவர்க்கத்தில் உள்ள வஸீலா எனும் உயர்வான அந்தஸ்த்தையும் சிறப்பையும் வழங்குவாயாக!

2. வெள்ளிக்கிழமைகளில்
உங்களின் நாட்களில் மிகவும் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் நபி ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதே நாளில் தான் அவர்களின் உயிரும் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் தான் சூர் (எக்காளம்) ஊதப்படும். அந்நாளில் தான் மக்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள். இத்தினத்தில் என் மீது அதிகமாக ஸலவாத்தைக் கூறுங்கள். எவர் என்மீது ஒரு முறை ஸலவாத்தைக் கூறுகிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள்புரிகிறான். நீங்கள் கூறும் ஸலவாத் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறிய போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே நீங்கள் மரணமாகி மக்கிப் (மண்ணோடு மண்ணாகிப்) போன பின்னர் எவ்வாறு உங்களுக்கு எடுத்துக்காட்டப்படும் என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக நபிமார்களின் உடல்களை மண் திண்பதை அல்லாஹ் தடுத்து (ஹரமாக்கியு)ள்ளான் எனக் கூறினார்கள் - அவ்ஸ் இப்னு அவஸ் (ரலி) - அபூதாவூத், நஸயீ

3. நபி(ஸல்) அவர்களின் பெயர் கூ(றும் போது)றப்பட்டால்
எனது பெயர் எவரிடம் கூறப்படுகின்றதோ அவர் என் மீது 'ஸலவாத்" கூறட்டும். எவர் என் மீது ஒரு முறை 'ஸலவாத்" கூறுகின்றாரோ அல்லாஹ் அவர் மீது பத்து முறை அருள்புரிகின்றான் அனஸ் (ரலி) திர்மிதி
மற்றொரு அறிவிப்பில் எவரிடம் எனது பெயர் கூறப்பட்டு அவர் என் மீது 'ஸலவாத்" கூறவில்லையோ அவன் நாசமாகட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹாகிம்: கஃப் இப்னு உஜ்ரா (ரலி)

4. பிரார்த்தனை புரியும் போது
உங்களில் யாராவது பிராத்தனை புரிந்தால் அவர் முதலில் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து விட்டு என்மீது 'ஸலவாத்" கூறிய பின்னர் தனது பிராத்தனையை ஆரம்பிக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் புழாலா இப்னு உபைத் (ரலி) திர்மிதி, அஹ்மத், முஸன்னஃப்

5. பொதுவாக நேரம் கிடைக்கும் போதெல்லாம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே உங்கள் மீது அதிகமதிகம் ஸலவாத் கூற விரும்புகிறேன் அப்படியானால் நான் உங்கள் மீது 'ஸலவாத்" கூற வேண்டிய அளவு என்ன? என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ விரும்பும் அளவுக்கு கூறும் என்றதும் (எனது நேரத்தில்) கால் பகுதியை ஆக்கிக்கொள்ளவா? எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதைவிட அதிகப்படுத்திக் கொள்வது உனக்கு (நன்மை) நல்லது என்றார்கள். (எனது நேரத்தின்) அரைப்பகுதியை ஸலவாதிற்காக ஒதுக்கட்டுமா? என்றதற்கு நபி(ஸல்) அவர்கள் அதைவிடவும் அதிகப்படுத்திக் கொள்வது உனக்கு நல்லது என்றார்கள். அப்படியானால் எனது முழு நேரத்ததையும் உங்கள் மீது '"ஸலவாத்" கூறுவதற்காக ஒதுக்கிக் கொள்கிறேன் என்றேன். அப்படி நீர் செய்தால் உமது சஞ்சலம் (கஷ்டம்) நீங்கி, உமது பாவமும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அஹ்மத், ஹாகிம்: உபை இப்னு கஃப் (ரலி).

ஸலவாத்து கூறுவதில் பித்அத்
1. பாங்கு சொல்வதற்கு முன்
2. இரண்டு முஸ்லிம்கள் கை (லாகு)கொடுத்துக் கொள்ளும் போது
3. கடமையான ஐந்து வேளை தொழுகைகளுக்குப் பின்னால்
4. இரவுத்(தராவீஹ்)தொழுகைக்குப் பின்னால்

மேலும் பல சந்தர்ப்பங்களில்...
ஸலாத்துன்னாரியா, மௌலூத் ஓதுதல்

இவற்றில் வல்ல இறைவனுக்கு இணை வைக்கும் வாசகங்களும், வரம்பு மீறிய புகழ்ச்சியும், நபி (ஸல்)அவர்கள் தடுத்துள்ள சொல், செயல்களும் மலிந்து கிடக்கின்றன. நபி(ஸல்)அவர்களோ, அவர்களின் தோழர்களோ சொல்லாத, காட்டித்தராத செயல்(பித்அத்) பள்ளிவாயிலின் ஒழுக்கங்கள் பாதிக்கிறது. பின்னால் தொழுபவர்களுக்கு இடைஞ்சலாக ஏற்படுத்துகிறது.

''அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (72:18)

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் மர்யமின் குமாரர் ஈஸா(அலை) அவர்களை கிருஸ்தவர்கள் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழ வேண்டாம். நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். என்னை அல்லாஹ்வின் அடியார் என்றும், அவன் தூதர் என்றும் கூறுங்கள். புகாரி, முஸ்லிம், உமர்(ரலி)

வணக்கங்கள் ஏற்கப்பட இரண்டு நிபந்தனைகள்:
1. மனத்தூய்மை(இஃலாஸ்)
2. நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல். (இத்திபா)

மேற்கூறிய ஸலாத்துன்னாரியா, மௌலூத் ஓதுதல் போன்ற (பித்அத்தான) விஷயங்கள் நபியவர்களின் வழிகாட்டுதலில் உள்ளவை அல்ல.  எனவே ஸலவாத் என்பதன் உள்ளர்த்தத்தினை ஆதாரப்பூர்வமான நபிவழிப்படி முழுமையாக விளங்கி அதனைக் கடைபிடித்து முழுமையான நன்மைகளை பெற்றவர்களாக முயற்சி செய்வோம்.

தொகுப்பு: அபூ ஸாலிஹா
நன்றி:www.சத்தியமார்க்கம்.காம்



மரணத்திற்கு  அப்பாலும்  ஹயாத்துண்டா?


நபித்துவத்தையுடையவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகிப் போய் விடுவதில்லை! உடல்களும் நசிப்பதில்லை, ஜீவியத்தில் இருந்தது போலவே கபுரிலும் சடலம் கோர்வை குலையாமலிருக்கும்.

"அன்பியாக்களுடைய உடல்களைத் தின்பதை இறைவன் நிச்சயமாக பூமிக்கு ஹறாமாக்கிவிட்டான்" என்று நபிகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருவாய் மலர்ந்தருளியுள்ள ஹதீது அபூதாவூது - இபுனு மாஜா - பைஹகீ முதலிய ஸஹீஹான கிரந்தங்களில் காணப்படுகின்றது. ஆகவே, அவர்கள் ஜீவியத்தில் எப்படியிருந்தார்களோ அப்படியே, பூலோகத்தை விட்டு மறைந்த பின்பும் கபுரில் இம்மைக்கும் மறுமைக்கும் மத்தியிலுள்ள ஆலம் மிதாலாகிய பர்ஜகில் உலகமுடிவு நாள் வரை ஹயாத்தாகவே இருப்பார்கள்.

"அல்லாஹ்வுடைய பாதையில் (பீஸபீலில்) வெட்டப்பட்டவர்களை மவுத்தானவர்களென்று சொல்லாதீர்கள். அவர்கள் ஹயாத்தையுடையவர்கள். ஆனால், அறியமாட்டீர்கள்" (2:154) என்றும், ஆண்டவனுடைய பாதையில் வெட்டப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நினைக்கவும் வேண்டாம். ஆனால் அவர்கள் ஜீவனுள்ளவர்கள். ஆண்டவன் பக்கமிருந்து ரிஸ்கை கொடுக்கப் படுகிறார்கள், ஆனந்தமாக இருக்கிறார்கள் (3:169,170) என்றும் அல்லாஹுதஆலா குர்ஆன் ஷரீபில் திருவுளம் பற்றியுள்ளான்.

மேலே கண்ட ஆயத்திற்கு விளக்கமாக, முஷ்ரிக்குடன் யுத்தஞ்செய்து வெட்டப்பட்டு ஷஹீதானாலும் சரிளூ தம்முடைய நப்ஸுடன் ஆத்மார்த்திகப் போர் செய்து அதை வெட்டி வீழ்த்தினாலும் சரி, இரண்டுமே பீஸபீல்தான் என்று மெய்ஞ்ஞான சொரூபர், ஷைகுல் அக்பர், முஹ்யித்தீன் இபுனு அறபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்களது தப்ஸீரீல் 1-வது பாகம், 137-வது பக்கத்தில் கூறியுள்ளார்கள்.

இவ்வாறே ஷைகு இஸ்மாயில் ஹக்கீ பரூஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்களது தப்ஸீர் ரூஹுல் பயானில் 2-வது பாகம் 126-வது பக்கத்திலும் சொல்லியுள்ளார்கள்.மேலும் இவ்வாறே தப்ஸீர் அறாயிஸுல் பயான், தப்ஸீர் ஹுஸைன், தப்ஸீர் அஸீஸீ ஆகியவற்றிலும் வருகின்றன. இவ்வாறாகவே, அல்லாமா காழீ தனாவுல்லா பானிபட்டீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் தஸ்கிரதுல் மவுத்தா-வல்-குபூரி என்னும் கிரந்தத்தில் கூறுகின்றார்கள். இவ்வாறாக அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவர்கள் தத்துவாதிகளைப் பொதிந்து ஜோதிவொளியில் ஐக்கியமாகிவிடுகிறபடியால் ஹயாத்துள்ளவர்கள் நாயனிடம் ரிஸ்கு-உணவு பெறுகிறார்கள். ஒரு இல்லத்திலிருந்து மறு இல்லத்திற்கு மாறுகிறார்கள். இதற்கிணங்க, தன் நபுஸின் பேரில் பீஸபீல் செய்து தன் நபுஸில் செலுகின்றவர்களின் ஹயாத்தானது மவுத்தில் ஹயாத்தாய், ஒளியோடு ஒளியாய் சேர்ந்துக் கொள்வதாய் சொல்லப்படுகிறது.

ஒரு சமயம் நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக்கு யுத்தத்தில் வெற்றி பெற்று ஜெயபேரிகையுடன் ஸஹாபாக்கள் சகிதம் மதீனா நகருக்குள் நுழைந்த போது, சிறிய போரிலிருந்து பெரிய போர் அளவில் மீண்டுள்ளோம் என்று கூறினார்கள். உடனே, ஸஹாபாக்கள், யாரஸுலல்லாஹ்! இப்போது பீஸபீல் செய்து திரும்பினோம். இதைவிட பெரிய பீஸபீல் யாது என்று வினவ, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபுஸுடன் போராடுவதுதான் பெரிய (பீஸபீல்) போராட்டம் என்று விடையளித்தார்கள். இந்த ஹதீது பைஹகீ, இஹ்யா உலூமித்தீன், தப்ஸீர் ரூஹுல் பயான் ஆகியவற்றில் காணப்படுகின்றது.

அல்லாஹ்வுக்கு வழிபட்டு தன்னுடைய நபுஸுடன் போர் புரிபவர் எவரோ, அவரே வீரர் என்ற ஹதீதும் மிஷ்காத்தில் காணப்படுகின்றது. எனவே, பீஸபீலில் போர்புரிந்து உயிர்த் தியாகம் செய்த ஷுஹதாக்களும், நபுஸுடன் போர் தொடுத்து வெற்றியடைந்த மகானுபாவர்களும் மவுத்திற்குப் பின்பும் ஹயாத்தை உடையவர்கள் என்பது குன்றின் மேலிட்ட தீபம் போல தெரியக் கிடக்கின்றது. இந்த அஸ்திவார அடிப்படையிலே மையித்துகள் கேட்கின்றன- பார்க்கின்றன- சுற்றத்தாரையும் அன்பர்களையும் அறிகின்றன - ஸலாமுக்குப் பதிலும் சொல்கின்றன என்னும் விஷயங்கள் பற்றி ஹதீதுகள் பலவற்றைக் குறிப்பிட்டு, இமாம் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஷரஹுஸ்ஸுதூரில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இதுவே ஸுன்னத்து வல்ஜமாஅத்தாரின் ஏகோபித்த அகீதாவெனும் கொள்கையாகும். மையித்துக்கு உணர்வு இருப்பதால்தான் மவுத்துக்குப் பிறகும், கபுரில் (ஆலம் அஜ்ஸாமுக்கும் ஆலம் அர்வாஹுக்கும் இடையே ஆலம் பர்ஜக்கில்) கேள்விகளும், பாவபுண்ணியங்களுக்குத் தக்க பலாபலன்களும் ஏற்படுகின்றன. அவற்றிற்கு அத்ததைய உணர்ச்சிகள் இல்லை எனின் நன்மை தீமைகளுக்குள்ள பலாபலனை, சுகதுக்கத்தை எவ்வாறு அவை அனுபவித்தறிய முடியும்?

மரணத்திற்குப் பிறகு, கல் கரடுகளைப் போல் கேட்டறிய சக்தியில்லை என்று எண்ணுவது ஷீயா, முஃத்தஸிலா, கவாரிஜியா  போன்ற வழிகெட்ட கூட்டத்தார்களுடைய கொள்கையாகும். மையித்து செவியேற்காது என்று கூறுகிறவன் மடையனும் (ஜாஹிலும்) வழிகெட்டவனும் (முல்ஹிதும்) ஆவான். என்பதாய் நான்கு மதுஹபுகளையுடைய ஸுன்னத் வல் ஜமாஅத்து உலமாக்கள் அனைவரும் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.

பத்ரு யுத்தத்தில் மரணித்த குப்பார்களுடைய பிரேதங்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்திற்கு, போர் ஓய்நத பின்பு நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று அங்கு நின்று கொண்டு அப்பிரேதங்களை நோக்கி எங்கள் நாயன் கூறிய வாக்குறதியை நாங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டோம். உங்கள் நாயன் கூறிய வாக்குறுதியை நீங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டீர்களா? என்று கேட்டபோது அங்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனிருந்த உமர்பாறூக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் யாறஸுலுல்லாஹ்! மரணமடைந்தோர் எங்ஙனம் தங்கள் வார்த்தைகளைக் கேட்பார்கள்?, என்று வினவினார்கள். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களை விட அவர்கள் நன்றாகக் கேட்பார்கள். உங்களுக்கு வெளிக்காது உண்டு. அவர்களுக்கு ஆன்மார்த்தச் செவியுண்டு, அதனால் அவர்கள் எல்லாவற்றையும் கேட்கிறார்கள் என்பதாக விடையளித்தார்கள், என்று ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் வருகின்றது.

மையித்து உனது பாதரட்சையின் சப்தத்தையும் கூட கேட்கின்றது என்பதாக ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூது, நஸயீ ஆகிய கிரந்தங்களில் வந்திருக்கின்றது.
இது சம்பந்தமாக அநேகமான ஹதீதுகளை குறிப்பிட்டு அதிவிரிவாக, ஷரஹுஸ்ஸுதூர் பீஷரஹில் மவுத்தா வல் குபூர் என்ற நூலில் இமாம் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.

உதாரணத்திற்காக சில நிகழ்ச்சிகளை இங்கு கூறுவது பொருத்தமெனக் கருதுகின்றோம்.

நபி பிரான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவரை இஸ்லாத்தின் பால் அழைத்த போது அவர், குழந்தைப் பருவத்தில் இறந்து போன தனது மகளை உயிர் பெறச் செய்தால் ஈமான் கொள்வதாகக் கூறினார். அக்குழந்தையின் கபுருக்குச் சென்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அக்குழந்தையைக் கூப்பிட்டு அழைத்தார்கள். உடனே அக்குழந்தை, அடிபணிந்தேன் என்று மறுமொழி கூறியது. திரும்பி உலகுக்கு வரக்கூடிய எண்ணமுண்டா என்று கேட்டார்கள். அல்லாஹ்வுடைய றஸுலே! ஆண்டவன் மீது சத்தியமாக எனக்கு அத்தகைய எண்ணமில்லை. இம்மையை விட மறுமையையே மேலாகக் காண்கிறேன் என்று பதில் கூறியது. இவ்வரலாற்றை இமாம் பைஹகீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தலாயிலில் சொல்வதாய், ஹுஜ்ஜதுல்லாஹி அலல் ஆலமீன் 422-வது பக்கத்தில் அல்லாமா ஷெய்கு யூசுபுன்னபஹானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு கூறுகின்றார்கள்.

நபிமார்கள் ஜீவனுள்ளவர்களாக இருக்கின்றார்கள், அவர்கள் கபுருகளில் (பர்ஜகில்) தொழுது கொண்டுமிருக்கிறார்கள் என்று அனஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு பைஹகீ ஹதீதுக் கிரந்தத்தில் ரிவாயத்துச் செய்யப்பட்டுள்ளது.(உதாரணம்) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செம்மை நிறமான மேட்டின் மீதுள்ள கபுரில் நின்று தொழுது கொண்டிருந்ததை மிஃராஜ் உடைய இரவில் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டார்கள் என்ற ஹதீது அனஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு ஸஹீஹ் முஸ்லிம், நஸயீ கிரந்தங்களில் ரிவாயத்துச் செய்யப் பெற்றிருக்கிறது.

நபிமார்கள், ஷுஹதாக்கள், அவுலியாக்கள் ஆகியோர் ஹயாத்துள்ளவர்கள். அவர்களுடைய கபுருகளில் அவர்கள் தொழுது கொண்டும், ஹஜ்ஜு செய்து கொண்டும் இருக்கின்றார்கள். இங்ஙனம் ஸஹீஹான ஹதீதுகள் வந்திருக்கின்றன என்பதாய் இமாம் றமலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு கூறுவதாக, அல்லாமா இமாம் ஷெய்கு சுலைமானுல் ஜமல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அல்புதூஹாத்துல் அஹ்மதிய்யா 90-வது பக்கத்திலும் அல்லாமாசதிக்கு ஹஸனுல் அதவி மிஸ்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மஷாரிகுல் அன்வார் 67-வது பக்கத்திலும், அல்லாமா ஷைகு யூசுபுன் னபஹானீ மிஸ்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஷவாஹிதுல் ஹக்கு 69-வது பக்கத்திலும் வரைகின்றார்கள்.

(உதாரணம்): மக்கா, மதீனாவுக்கிடையே நபி கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று கொண்டிருக்கையில், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காதில் கையை வைத்து தல்பியாச் சொல்லிக் கொண்டு அர்ஜுக் ஓடையைக் கடந்து சென்று கொண்டிருந்ததைப் பார்த்ததாகவும், அவர்களது நிறம், முடியின் இலட்சணம் பற்றியும் விபரித்துள்ளார்கள்.

மேலும் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கம்பளி ஜிப்பாவுடன் சென்னிற ஒட்டகையில் ஷாஷாலுப்த் என்னுமிடத்தில் ஓடையைக் கடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டதாயும் ஒட்டகையின் மூக்கணாங்கயிறு பேரீத்த மரத்தின் நாரினால் செய்யப்பட்டிருந்தது என்றும் திருவுளம் பற்றியுள்ளார்கள். இந்த ஹதீது இபுனு அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு ஸஹீஹ் முஸ்லிமில் ரிவாயத்துச் செய்யப்படுகின்றது.

அல்லாஹ்வுடைய அவுலியாக்கள் நிச்சயமாக மரிப்பதில்லை. ஆனால் ஓர் இல்லத்திலிருந்து மறு இல்லத்திற்குச் செல்கிறார்கள். என்ற ஹதீதை, ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் முஹம்மது கஸ்ஸாலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அர்பயீன் ஹதீது என்ற நூலிலும், இமாம் பக்ருத்தீன் றாஜீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தப்ஸீர் கபீர் 3-வது பாகம் 95-வது பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள்.

(உதாரணம்): பிரபல்யமான வலியுல்லாஹ் அபூஸயீது கர்ராஜ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மக்காவிலிருந்த காலத்தில் ஒரு வாலிபரின் மையித்து பனூஷைபா வாசலில் இருந்தது. அதை அவர்கள் உற்றுநோக்கினார்கள். அபூஸயீதே! ஆண்டவனுடைய நேசர்கள் ஜீவனுள்ளவர்கள். அவர்கள் ஓரில்லத்திலிருந்து மறு இல்லத்திற்கு செல்வதே மரணமாகும் என்பதை அறியவில்லையா? என்பதாய் அந்த மையித்து சிரிப்புடன் சொல்லிற்றாம். இந்நிகழ்ச்சியை இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஷரஹுஸ்ஸுதூர் 86-வது பக்கத்தில் கூறுகின்றார்கள்.

ஸுபிய்யாக்கள் (அவுலியாக்கள்) மவுத்தாவதில்லை. எனினும் மனிதர்களுடைய வெளிரங்கமான பார்வையை விட்டும் மறைகிறதேயல்லாது வேறில்லை. ஏனெனில் அவர்களையும் மவுத்தானார்களென்று சொல்வதற்காகவே. முஷாஹிதீன், முஹக்கிகீன்களுடைய உடல்களும் கோர்வை குலையாது. குத்ஸியான ரூஹ் நிச்சயமாக ஒருபோதும் அழியாது. இது போல் கியாமத் வரை ஹயாத்தும் அழியாது. இத்தகைய ஹயாத்தும் ரூஹும் உடைய கபுரில் (ஆலமுல்பர்ஜகில்) ஜீவனுள்ளவர்களாகவே இருப்பர். அவர்களுடைய திரேகம் உலகிலிருந்தது போலவே இருக்கும். இப்பதவியுடையவர்கள் அந்தரங்கமான ஹயாத்துடனே இருப்பார்கள், ரூஹுல் குதுஸியுடனுமிருப்பார்கள். மரணித்திற்கப்பாலும் பூமியில் நடந்து திரிவார்கள். அவ்வமயம் எந்த மனிதரும் அவர்களைக் காண்பார்கள். அவர்களுடன் பேசிக் கொள்ளவும் செய்வார்கள். அவர்களை இன்னாரென தெரியவராது. அவர்கள் நாடின போதெல்லாம் கபுரில் மறைந்து விடுவார்கள். அவர்களுடைய திரேகத்தை மண், புழு, பூச்சி, ஐவா மிருகம் எதுவுமே தின்னாது. ஆதிமுதல் அந்தம் வரையில் ஹயாத்து. ரூஹு, ஜிஸ்மு இம்மூன்றுடனும் இறுதிநாள் வரையிலிருப்பார்கள். அவர்கள் புவியிலிருக்கையில் உந்தியின் கீழிருந்து மூச்செழும்பி மூளைக்கேறி வெளிப்படுவது இயற்கை. கபுரில் இயற்கைக்கு மாற்றமாகவே, மூச்சு மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும். இதனால் யாக்கையழியாது (வயிற்றிலிருக்கும் சிசுக்களுக்கும், சொர்க்கவாதிகளுக்கும் இவ்வாறே) கபுரில் ஜீவனைப் பெற்றவராயிருந்தால் ஜீவனுக்குள்ள இலட்சணங்கள் ஒன்றுமே குறையாது என்பதாக மிர்அத்துல் முஷாஹிதீனில் சொல்லப்பட்டுள்ளது.

வலியுடைய கபுரை ஒருவர் ஸியாரத்துச் செய்தால் அவரை அந்த வலி அறிவார். அவர் ஸலாம் சொன்னால் வலி அதற்குப் பதில் சொல்வார். அவருடைய கபுருக்கு அருகாமையாக ஒருவர் திக்கு செய்தால் அந்த வலியும் சேர்ந்து திக்ரு செய்வார். லாஇலாஹ இல்லல்லாஹு எனும் திக்ரைச் செய்தாலோ அந்த வலி சம்மனங் கொட்டி உட்கார்ந்து திக்ரு செய்பவருடன் சேர்ந்து திக்ரு செய்வார். அவுலியாக்கள் மவுத்துக்குப் பிறகும் ஹயாத்துப் பெற்றவர்களே. மவுத்தின் மூலம் அவர்களை ஒரு வீட்டை விட்டு மறு வீட்டளவில் திருப்பப் பட்டிருக்கிறது. ஹயாத்தில் அவர்களை சங்கை செய்வது போல் மவுத்திலும் சங்கை செய்யவேண்டும். ஒரு வலி மவுத்தானால் அன்னார் பேரில், அன்பியா அவுலியாக்களுடைய அர்வாஹுகள் தொழும் என்பதாக குத்பு றப்பானீ, இமாம் அப்துல் வஹ்ஹாபு ஷஃரானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தபகாத்துல் குப்ரா பாகம் 2 பக்கம் 65ல் கூறுகின்றார்கள்.

ஸியாரத்துச் செய்ய மிகவும் ஏற்றமான நாள் திங்கள், வியாழன், வெள்ளி, சனி இந் நான்குமாக இருக்கும். ஜும்ஆத் தொழுகைக்குப் பின்பு ஸியாரத்துச் செய்வது மிகவும் சிறப்பானதாகும் என்று பதாவா ஆலம்கீரியில் வந்துள்ளது.

மவுத்தானவர்கள் வெள்ளிக்கிழமை இரவிலும், வெள்ளிக்கிழமை முழுநேரங்களிலும், சனிக்கிழமை, காலையிலும், எந்த நேரங்களிலும் ஜியாரத்து செய்பவர்களை அறிவார்கள். இதற்காக அந்நேரங்களில் ஸியாரத்துச் செய்வது முஸ்தஹப்பாகும் என்பதாக மஷாரிகுல் அன்வாரில் வந்துள்ளது.மவுத்தானவர்கள் ஸியாரத்துச் செய்யக் கூடியவரை அறிவார்கள், பேச்சையும் கேட்பார்கள் எனறு ஹதீதுகளின் மூலம் அறியப்பட்டிருக்கிறது என்பதாயும் மஷாரிகுல் அன்வாரில் சொல்லப்பட்டுள்ளது.மையித்தானது தன்னைக் குளிப்பாட்டுபவர்களையும் சுமந்து செல்பவர்களையும், கபுருக்கு முடுகி நிற்பவர்களையும் அறிவார்கள் பேச்சுக்களையும் கேட்பார்கள் என்று பதாவா குப்ராவில் தலீல் அத்தாட்சிகளுடன் நகல் செய்யப்படுகிறது. மேலும் இவ்வாறே ஷரஹுஸ்ஸுதூரிலும், ஷரஹுபர்ஜகிலும் விரிவாக நகல் செய்யப்பட்டுள்ளது.

ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இபுனு அரபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் வபாத்தான பிறகு அவர்களே தங்களது வீட்டிற்கு வந்தார்கள். தங்களது வெள்ளாட்டியைக் கண்டு அவளது சுக செய்திகளையும் நிலைமைகளையும் விசாரித்தார்கள். எல்லா விஷயங்களையும் அவள் சவிஸ்தாரமாக எடுத்துக் கூறினாள். அவர்கள் அவளிடமிருந்து விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து சென்றார்கள் என்பதாக புஸுஸுல் ஹிக்கம் உடைய ஷரஹில் இமாம் ஷைகுஜுந்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுவதாக ஸஆதத்துத் தாரைன் 402-வது பக்கத்தில் வரையப்பட்டுள்ளது.

அவுலியாக்களுக்கு ஆண்டவனால் அருளப்பட்டிருக்கும் கறாமாத்து அதிசயத்தின் பொருட்டால் ரூஹானியத்தான சக்தியைக் கொண்டு ஹயாத்திலும் மவுத்துக்குப் பிறகும் அவர்கள் வெளிப்பட்டு உலகில் நடமாடும் சக்தியுண்டு என்பதாக இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அல்கபருத்தால்லு அலா-வுஜுதில் குத்பி வல் அப்தால், என்ற நூலிலும், இமாம் ஸெய்யிது ஷஹாபுத்தீன் அஹ்மது ஹுஸைனீ ஹமவீ ஹனபீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் நபஹாத்துல் குர்பிவல் இத்திஸால், என்ற நூலிலும் கூறுகின்றார்கள்.

அவுலியாக்களில் பெரும்பாலோர் வபாத்துக்குப் பிறகும் கபுருகளிலிருந்து புறப்பட்டு வெளியே போகவும் செய்கிறார்கள். திரும்பவும் கபுருக்குள் மீளவும் செய்கிறார்கள். போகவர அவர்களுக்கு எத்தகைய தடையுமில்லை என்பதாக அல்குத்பு இமாம் ஷஃறானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் லத்தாயிபுல் மினன் 1-வது பாகம் 144-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.

நபிகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தங்களது மவுத்தாகிப் போன ஸஹாபாக்களின் அர்வாஹுகள் சகிதம் எல்லா உலகங்களையும் சுயேச்சையாகச் சுற்றி வருவதை அவுலியாக்கள் கண்கூடாகக் கண்டிருக்கின்றார்கள் என்பதாக இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஆதாரத்துடன் கூறுவதை, தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 10, பக்கம் 99ல் காணலாம்.

இதற்காதாரமாக வபாத்துக்குப் பிறகு நிகழ்ந்த சில சம்பவங்களைக் காண்க:இமாம் அப்துல் வஹ்ஹாபு ஷஃரானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஸியாரத்துச் செய்வதற்காக ஸெய்யித் உமர் இபுனு பாரிலு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய கபுரு ஷரீபுக்குச் சென்றபோது அங்கு அவர்களைக் காணாதபடியால் திரும்பிவிட்டார்கள். பிறகு உமர் இபுனு பாரிலு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இமாம் ஷஃரானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு இடம் சென்று தேவையை முன்னிட்டு வெளியே சென்றிருந்ததாகத் தெரிவித்து மன்னிப்புக் கோரியதாக இமாம் ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களே தங்களுடைய ஷலதாயிபுல் மினன் 1-வது பாகம் 144-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள். ஸெய்யிது ஷைகு அப்பாஸ் முர்ஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை சனிக்கிழமை சூரியோதயத்திற்கு முன்னும், ஸெய்யிது இபுறாஹிமுல் அஃரஜ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை வெள்ளிக்கிழமை மக்ரிபுக்குப் பின்பும் ஸெய்யிது யாக்கூத்துர் அர்ஷீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைச் செவ்வாய்க்கிழமை லுஹருக்குப் பின்பும் அவரவர்களுடைய கபுருக்குச் சென்று ஸியாரத்துச் செய்யும் படியும் அவர்களெல்லோரும் குறிப்பிட்ட அந்த நேரங்களில் தான் கபுரில் ஆஜராயிருப்பார்களென்றும், இவ்வுண்மையை அகக்கண்ணை உடையவர்களைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்களாகையால், கபுருகளில் அவர்கள் இருக்கவே செய்கின்றார்கள் என்ற எண்ணத்துடன் கஷ்பில்லாதவர்கள் செய்யவேண்டுமென்றும் ஸெய்யிது அலி பதவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் உபதேசித்திருப்பதாக மேற்சொன்ன லாதயிபுல் மினன் அதே பக்கத்தில் வரையப்பட்டுள்ளது.ஆகவே, இறப்பு என்பது அழிவுக்குரியதன்று. சில படித்தரங்களைக் கொண்ட ஐடதத்துவ மாறுதலாகும் - ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு முன்னேறிச் செல்வதாகும். ஏனெனில், ஆத்மா அழிவில்லாதது. இறப்பும் பிறப்புமற்ற நிலையிலுள்ளது.

இமாம் கஸ்ஸாலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கீமியாயே-ஸஆதத் பீடிகையில் குறிப்பிடும். மனுஷ்ணன் அனாதியல்லனாயினும் முடிவற்றநித்தியன் எனும் பொன் மொழியிலிருந்து, மரணத்தோடு மனிதனின் வாழ்க்கை முடிவடைந்து விடவில்லை என்ற உண்மை வெளியாகின்றது. நிர்யாணத்தினின்று ஒரு புதிய வாழ்க்கை உதயமாகி அது என்றும் அழியா நித்தியமாய் நின்று நிலவத் தொடங்குகிறது. ஜடவுலகத்தைப் பற்றி நிற்கும் பூததேகத்தின் சுகபோக இன்பங்களின் வாசல் அடைபட, சகல நுகர்ச்சிகளையும் அந்தரங்கத்திலிருந்து அனுபவித்து வந்த அந்த மனுஷ்யன் என்ற சுயம்பொருள் சூட்சமமாய்க் கிரியை புரிய சக்தி பெறுகின்றது. பிணி, மூப்பு, தளர்ச்சி, இயலாமை முதலிய தங்கட, சங்கடமின்றி மறதியற்ற முழுமனிதப் பண்பும் அவனில் அமைந்து காணப்படுகின்றது.

இவ்வுலகில் சஞ்சரித்து வந்தது போலவே எல்லாவிதமான புலன்களும் வதியத்தக்க யோக்கியதையுடையவனாய் ஆகும் போது தேகமும் அவற்றைத் தொடர்ந்தே நிற்கும். இம்மையில் பூத குணத்தின் மிகைப்பால் ரூஹு உடலுக்குள் மறைந்து காணப்படுவது போல, மறுமையில் ரூஹானிய்யத்தின் மிகைப்பால் தேகம் ரூஹுக்குள் மறைந்து காணப்படும். ஹிஸாபு என்ற கேள்வி கணக்கிற்கும், பாவ புண்ணியத்திற்கேற்ற பலா பலன்களுக்கும் இத்தேகமே பொறுப்பாக விளங்கும்.

அல்லாஹ்வின் சிருஷ்டிகளுள் எனது ஜோதியே முதன்மையானது என்று பெருமானார் நபிகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள். எனவே, ஒளிவாகிய நூர் என்னும் ஒரே அஸ்திவாரத்திலான உயிர்-உடல் என்ற இவ்விரு வஸ்துக்களும் ஒன்றோடொன்று ஐக்கியப்பட்டு மறைவதும், வெளிப்படுவதும் ஆன்ம சக்திமிக்கப் பெரியாரிடத்து அதிசயிக்கத்தக்க கருமமன்று.

அவுலியாக்களிடத்தில் ஸ்தூலத்திற்கும், சூட்சுமத்திற்கும் மத்தியில் பிரமாதமான வித்தியாசம் ஒன்றுமில்லை. சூட்சுமத்துள் ஸ்தூலம் அடங்குவது அன்னாரிடத்தில் ஒரு பெரிய கருமமன்று. அல்லாஹ்வின் மெய்யடியாரான அவுலியாக்கள், தாங்கள் சிருஷ்டிகளின் பார்வையிலிருந்து மறைய நாடும் போது மரணம் என்ற போர்வைக்குள் புகுந்து கொள்வதும், அடக்கம் செய்யப்பட்ட பின் ஸ்தூலத்தை சூட்சுமத்துள்ளடக்கி கபுருகளிலிருந்து வெளியே புறப்படுவதும் அன்னவர்களுக்கு எளிதான கருமமாகும். ஆண்டவன் அவர்களுக்கு அத்தகைய தத்துவத்தைக் கொடுத்துள்ளான். இத்தியாதி காரணங்களைக் கொண்டு மரணத்திற்குப் பின்னும் அவுலியாக்கள் ஜீவனுள்ளவர்கள், அழியாத தேகத்தை உடையவர்கள் கிரியைகள் புரியும் சக்தியுடையவர்கள் எனத் தெரிய வருகின்றது. அடியிற்கண்ட நிகழ்ச்சிகளே இதற்குப் போதிய சான்றுகளாகும்.

ஹஜ்ரத் கிலுரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இமாமுல் அஃலம் அபூஹனீபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது வஃளு மஜ்லிசுக்குத் தினந்தோறும் காலை வேளையில் ஆஜராகி ஷரீஅத்துடைய இல்முகளைக் கற்று வந்தார்கள். இமாம் அவர்கள் வபாத்தான பிறகு அந்த மஜ்லிசு நடைபெறவில்லை. கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆண்டவனது உத்தரவு பெற்று, ஹயாத்தில் நடந்தது போலவே மவுத்துக்குப் பின்பும் இமாமுல் அஃளம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது கபுரு ஷரீபுக்கு ஒவ்வொரு காலையிலும் சென்று, ஷரீஅத்துடைய இல்முகளைக் கேட்டுவந்ததாக இமாம் இபுனு ஜவ்ஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு ஷபதாயிஉ எனும் பிக்ஹுக் கித்தாபில் வருகிறதாக ஷைகு ஹஸனுல் அதவீ மிஸ்ரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மஷாரிக்குல் அன்வார் 69-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.

நான்கு மதுஹபுடைய இமாம்களுள் ஒருவராகிய அஹ்மது இபுனு ஹம்பலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது ஸியாரத்திற்குச் சென்ற குத்பு றப்பானீ கௌதுஸ்ஸமதானீ, முஹிய்யித்தீன் அப்துல் காதிரு ஜீலானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அன்னாருடைய கபுறு ஷரீபுக்கெதிரே, அதபுடன் நின்று, அஸ்ஸலாமு அலைக்கும் யாஇமாமல் கிராம் (சங்கைக்குரிய இமாம் அவர்களே) என்று அழைத்து ஸலாம் சொன்னார்கள். உடனே, கபுரு ஷரீபு இரண்டாகப் பிளந்தது. இமாம் அவர்கள் ஜோதிப் பிரகாசத்தோடு வெளியே பிரசன்னமாகி கௌதுல் அஃளம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கட்டித் தழுவி ஆலிங்கனஞ் செய்தார்கள் நூரானீயான பரிவட்டத்தைப் போர்த்தி, ஸெய்யிது அப்துல் காதிரே, ஷரீஅத்துடைய இல்முகளும், ஹகீகத்துடைய இல்முகளும் தங்கள்பால் ஹாஜத்தாகின்றன, என்று பகர்ந்து விடைபெற்று மறைந்தார்கள். இச்சம்பவம் ஷபஹ்ஜத்துல்-அஸ்றாரு கிரந்தத்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதாய் ஷதப்ரீஜுல்காத்திர் 40-வது பக்கத்திலும், ஷபஸ்லுல் கிதாபு 129-வது பக்கத்திலும் ஹள்ரத் ஷெய்கு அப்துல்ஹக் முஹத்திதுத் திஹ்லவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் ஷஜுப்ததுல் அஸ்றார் நூலிலும் காணப்படுகின்றது.

குத்புஸ்ஸமான், இமாம் அப்துல் வஹ்ஹாபு ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:-
நான் எனது குருநாதர் (உஸ்தாது) ஹஜ்ரத் ஸெய்யிது முஹம்மது ஷனாவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடன் அல்குத்புஷ்ஷஹீர், ஸெய்யிது அஹ்மது பதவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது தர்காவுக்கு ஸியாரத்திற்காகச் சென்றிருந்தேன். அவ்வமயம் எனது உஸ்த்தாதவர்கள் கபுரு ஷரீபை முன்னோக்கி, நாயகமே! இன்ன காரியத்தை முன்னிட்டு மிஸ்ருக்குப் போகப் பிரயாணமாயிருக்கிறேன். விடை கொடுத்தனுப்புங்கள் என விண்ணப்பித்து நின்றார்கள். அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்தவராய் போய் வருக என்ற நல்வாக்கு கபுருக்குள்ளிருந்து வெளிவந்த சப்தத்தை எனது வெளிரங்கமான இரு காதுகளைக் கொண்டும் நன்கு கேட்டேன் என்பதாக. இவ்வரலாற்றை இமாம் ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் லதாயிபுல் மினன் 1-வது பாகம், 180-வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அமீருல் முஃமினீன், ஸெய்யிதுனா அபூபக்கர் ஸித்தீக்கு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் வபாத்தாகும் போது, என்னுடைய ஜனாஸாவை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முபாரக்கான அறையின் முன்னால் வையுங்கள். கதவு திறக்கப்பட்டு, அபூபக்கரை உள்ளே கொண்டு வாருங்கள் என்று உத்தரவு வந்தால் மட்டில் அவ்வறையிலேயே அடக்கம் செய்யுங்கள். இன்றேல், பொதுக்கபுருஸ்தானத்தில் அடக்கி விடுங்கள் என்று வஸிய்யத்துச் செய்திருந்தார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பூட்டப்பட்ட அறைவாயிலின் முன்பு ஜனாஸாவை வைக்கப்பட்டபோது, வாயில் கதவு தானாகவே திறந்து கொண்டது.தோழரைத் தோழரிடம் அனுப்பி வையுங்கள் என்ற உத்தரவு புனிதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ரவுளா ஷரீபிலிருந்து வெளிவந்தது. அவ்விதமே அங்கு அடக்கப்பட்டார்கள். இவ்வரலாற்றை இமாம் பக்ருத்தீன் றாஜீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தப்ஸீர் கபீர், 5-வது பாகம் 685-வது பக்கத்தில் கூறுவதாய் தப்ரீஹுல் அத்கியா பீ-அஹ்வாலில் அன்பியா, பாகம் 2, பக்கம் 376-ல் வரையப்பட்டுள்ளது.

இத்தகைய நிகழ்ச்சிகள், ஆதாரங்கள் இன்னும் எவ்வளவோ காண்பிக்கலாம். உலகத்தார் யாவரும் ஏற்றிருக்கும் இமாம்கள் சம்பந்நதபட்டவற்றையும், அவை பற்றிய அங்கீகரிக்கப்பட்ட (முஃத்தபரான) ஆதாரப்பூர்வமான கிரந்தங்களையுமே ஆதாரங்களாகக் காண்பித்துள்ளோம். அன்பியா, அவுலியாக்கள் மவுத்துக்குப் பின்பும் ஹயாத்துள்ளவர்கள் என்பதற்கு மேற்கூறிய உதாரணங்களோடு இன்னும் இரண்டு தருகின்றோம்.

உதயகிரி முதல் அஸ்தகிரி வரை பிரபல்யமடைந்து, உலகம் ஒப்புக்கொண்டு ஓதிவரும் தலாயிலுல்-கைறாத் இயற்றிய அல்லாமத்துல் பகீஹ், ஆரிபுல் காமில் முஹம்மது இபுனு சுலைமானுல் ஜுஸுலிஷ் ஷாதுலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது எண்ணிக்கையற்ற கராமத்துக்களில் நின்றும் ஒன்று ஜாமிவுல் கறாமாத் 1-வது பாகம், 165-வது பக்கத்தில் காணப்படுகிறது. அடியில் அதைக் குறிப்பிட்டுள்ளோம்.குத்புஷ் ஷஹீர், ஷைகு முஹம்மது இபுனு சுலைமானுல் ஜஸுலிஷ் ஷாதுலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 870-வது வருஷத்தில் வபாத்தாகி, சூயஸ்பட்டணத்தில் அடக்கப்பட்டார்கள். 77 வருஷங்களுக்குப் பிறகு ஹிஜ்ரி 947-வது வருஷம் அவர்களது கபுரைத் தோண்டப்பட்டது. அவ்வமயம் அவர்களது திரேகம் (தபன்) அடக்கம் செய்யப்பட்ட சமயம் எவ்விதமிருந்ததோ அவ்விதமே உறுப்பில் எத்தகைய சேதமும், மாறுபாடுமின்றி. கபன் துணியில் கூட மண் ஒட்டாமலிருந்தது, அந்தத் திரேகம் கஸ்தூரி வாடையுடன் கமழ்ந்துக் கொண்டிருந்ததைக் கண்ணுற்ற திரளான ஜனங்கள் பேராச்சரியப்பட்டு மயங்கி நின்றனர். ஆண்டவனுடைய பாதையில் ஷஹீதானவர்கள் இறந்தவர்கள் அல்லர். அவர்கள் ஜீவனுள்ளவர்கள். அவர்களுடைய பூத உடல்களை மண் தின்னாது. புழுப்பூச்சி, ஐவாமிருகங்கள் எதுவுமே தீண்டாது என்று அல்லாஹ்வும், றஸுலும் கூறியவாக்குகளை மெய்ப்பிக்கும் அத்தாட்சிகளாகவே அவர்கள் காணப்பட்டார்கள்.

மேலே குறிப்பிட்ட சம்பவத்தின் போது அக்கூட்டத்திற்கு சிலர் சோதிப்பதற்கென்றே, வசீகரத்துடன் ஜோதிப் பிரகாசமாக இலங்கிக்கொண்டிருந்த அந்த வலியுல்லாஹ் அவர்களுடைய திருமுகத்தில் விரலைவைத்து அழுத்திப் பார்த்தனர். விரல் பட்ட இடத்தைச் சூழ்ந்து செந்நிறமாக இரத்தத்தின் அறிகுறி காணப்பட்டது. விரலை எடுத்ததும் அந்த உதிரக்கட்டு உடலில் பரவி மறைந்தது. பிறகு அவர்களது பரிசுத்தத் திருமேனி ஆப்பிரிக்காவிலுள்ள மொராக்கோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது கபுரு ஷரீபில் இன்று வரை ஸலவாத்தின் பரக்கத்தை முன்னிட்டு கஸ்தூரி வாடை கமழ்ந்து கொண்டிருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் ஸியாரத்திற்காகச் சென்று, தலாயிலுல் கைறாத்தை ஓதி நற்பேறுகளைப் பெற்று வருகின்ர்ரானர்.

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸஹாபாத் தோழர்களான ஹஜ்ரத் ஹுதைபத்துல் யமனீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஹஜ்ரத் அப்துல்லாஹ் இபுனு ஜாபிருல் அன்சாரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆகிய இருவரும் ஷஹீதாகி இறாக்கில் பகுதாது நகருக்குச் சமீபமாக ஆற்றோரத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்கள். பிற்காலத்தில் வெள்ளப் பெருக்கால் இரு கபுருகளுக்கும் சேதம் ஏற்பட்டது. அவை ஆற்றில் மூழ்கிப் போய் விடுமோ என்ற பீதியும் உண்டானது. அது சமயம் இறாக்கில் ஆட்சிபுரிந்த அமீர்பைஸல் (மக்கா ஷரீபு ஹுஸைனுடைய மகன்) உலமாக்களிடம் பத்வா (மார்க்கத் தீர்ப்பு) வாங்கி அவ்விரு கபுருகளையும் தோண்டி எடுத்து அவற்றை வேறு இடத்தில் அடக்கம் பண்ண ஏற்பாடு செய்தார். இவ்விஷயம் விளம்பரப் படுத்தப்பட்டது. உலகின் நாலா பக்கங்களிலிருந்தும் இலட்சக் கணக்கான ஜனங்கள் குறிப்பிட்ட தேதியில் அங்கு ஆஜராயினர். அவ்விரு கபுருகளும் 1300 வருடங்களுக்குப் பிறகு தோண்டப்பட்டு அவ்விரு சடலங்களும் வெளியே எடுக்கப்பட்டு உயர்ந்த மேஜை மீது வைக்கப்பட்டன. திரேகத்தில் எவ்வித பேதமும், மாறுபாடும் காணப்படவில்லை. வியர்வை சொட்ட அவ்விரு முகங்களும் ஒளிப்பரகாசத்துடன் இலங்கின. அனைவரும் இக்காட்சியைக் கண்டு பேராச்சரியத்தில் மூழ்கிப் போயினர். காரீ ஒருவர், அல்லாஹ்வுடைய பாதையில் வெட்டப் பட்டவர்களை மரணித்தவர்களென்று நீங்கள் நினைக்கவேண்டாம். அவர்களோ ஜீவனுள்ளவர்கள். ஆண்டவன் பக்கமிருந்து அவர்களுக்கு உணவளிக்கப் படுகிறது. அதையருந்தி அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்ற கருத்துள்ள குர்ஆன் வேத வாக்கை ஓத ஆரம்பித்தார்.அதற்கு அத்தாட்சியாகக் கண்முன் பிரத்தியட்சமாக அவ்விரு நாதாக்களின் பரிசுத்தத் திருமேனிகள் இருக்கும் காட்சியை நோக்கும் போது இந்த ஆயத் அவ்வயமந்தான் அருளப்பட்து போல காணப்பட்டதாம்!

நன்றி: www.மெயில்ஒ/ப்இஸ்லாம்.காம்


பெருமானாரின் பத்துக் கட்டளைகள்


1417 ஆண்டுகளுக்கு முன் …. ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு….பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அரபாத் பெருவெளியில்  உரை நிகழ்த்தினார்கள் :-

அதில் பத்து விஷயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.(மக்களே!) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது) இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.(மக்களே!) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல, அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ, பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ, பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3.(மக்களே!) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.(மக்களே!) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.

5.(மக்களே!) பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர்க்கு உரிமையுண்டு. அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.(மக்களே!) எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள்.

7.(மக்களே!) எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.  ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.

8.(மக்களே!) உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். (எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)

9.(மக்களே!) அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!

இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல.. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்..) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

10.(மக்களே!) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?

'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!'

அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.

இதைக்கேட்ட இறுதித்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!

இறைவா! நீயேஇதற்கு சாட்சி! இறiவா!நீயே இதற்கு சாட்சி!

இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.

மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.

(ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி, முஸ்னது அஹ்மது, இப்னுஜரீர், இப்னுஹிஷhம், ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்

நன்றி: www.மெயில்ஒ/ப்இஸ்லாம்.காம்



இறைவன் அல்லாதவர்களை புகழலாமா?


புகழ்கள் 4 வகைப்படும் 

1. இறைவன் தன்னைத்தானே புகழ்வது
2. இறைவன் மற்றவர்களை புகழ்வது
3. மனிதன் இறைவனைப் புகழ்வது
4. மனிதர்கள் மனிதர்களை புகழ்வது


இறைவன் தன்னைத்தானே புகழ்வது

O அவன் (யாவற்றையும்) மிகைத்தவன், ஞானமுள்ளவன் (57:1)

O அல்லாஹ் மகா பரிசுத்தமானவன் (17:1)

இதே போன்று ஏராளமான குர்ஆன் வசனங்கள் உள்ளன. இவை இறைவன் தன்னை தானே புகழ்வதற்கு உதாரணங்கள் ஆகும்.



இறைவன் மற்றவர்களை புகழ்வது

உதாரணமாக இறைவன் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களை புகழ்வது:

O நபியே! நீங்கள் நிச்சயமாக உயர்ந்த நட்குணத்தின் மீது இருக்கிறீர்கள்  (சூரா நூன் 04 )

O நபியே! நாம் உம் புகழை (வானளாவ) உயர்த்தி விட்டோம்  (சூரா அலம் நஸ்ரஹ் 04 )

O அனைத்து உலகத்தினருக்கும் அருளாகவே (ரஹ்மத்) தவிர (நபியே!) உம்மை நாம் அனுப்பவில்லை." (21:107)

இதே போன்று ஏராளமான குர்ஆன் வசனங்களில் இறைவன் நபிகள் நாயகத்தையும் ஏனைய நபிமார்களையும் வலிமார்களையும் புகழ்ந்து கூறி உள்ளான்.


மனிதன் இறைவனை புகழ்வது

இதற்கு விளக்கம் தேவையில்லை. ஏனென்றால் நாம் எல்லோரும் எந்நேரமும் இறைவனை புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.

சுபானல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்! என்று புகழ்ந்து கொண்டு இருக்கிறோம்.


மனிதர்கள் மனிதர்களை புகழ்வது

இதையும் நமது வாழ் நாளில் நாம் செய்துக்கொண்டு தான் இருக்கிறோம். தந்தை பிள்ளையை புகழ்வதும், கணவன் மனைவியை புகழ்வதும், பிள்ளை தாயை புகழ்வதும், காதலன் காதலியை புகழ்வதும், மனிதன் அரசனை புகழ்வதும், ஆசிரியர் மாணவரை புகழ்வதும், அரசன் அமைச்சர்களை புகழ்வதும், சீடர்கள் தலைவனை புகழ்வதும், பாமரன் அறிவாளியை புகழ்வதும் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இவை அனைத்தும் புகழ்தான். அப்படியென்றால் நாம் வாழ்நாளில் செய்து கொண்டிருப்பது தவறா? இல்லை. அப்படியென்றால் இறைவன் கூறுகிறானே: "புகழ் அனைத்தும் இறைவனுக்கே" என்று. அப்படியாயின் நாம் மற்றவர்களை புகழ்ந்தால், இறைவனுக்கு எப்படி புகழ் சென்றடையும்?

அதற்குரிய விடை

நாம் யாரை புகழ்ந்தாலும் எல்லாப் புகழும் இறைவனுக்குரியதே, ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து படைப்பினங்களும் இறைவனின் படைப்பினங்கள். நாம் எந்த மனிதர்களை புகழ்ந்தாலும், எந்த வஸ்துவை புகழ்ந்தாலும் அவை அனைத்தும் இறைவனின் குத்ரத்துகள். நாம் அந்த படைப்பை புகழும் பொழுது, அந்த புகழ் அந்த குறிப்பிட்ட படைப்பினத்திற்கு சென்றடையாது. அந்த புகழ் இறைவனுக்குச் சொந்தமானது. எனவே அந்த புகழ் இறைவனிடம்தான் சென்றடையும். இதுதான் உண்மையான தவ்ஹீத். ஆனால் இன்று தவ்ஹீத் என்ற பெயரில் ஷிர்க்கையும், வழிக்கேட்டையும் போதிக்கிறார்கள். நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதற்கு தான் நாம் உண்மையான தவ்ஹீத் வாதிகளான சஹாபாக்கள், தாபியீன்கள், தபஅத் தாபியீன்கள், இமாம்கள், சூபியாக்கள் காட்டிச்சென்ற எழுதிவைத்த கிதாபுகளை வாசித்தால் எமக்கு தெளிவான தவ்ஹீத் கிடைக்கும். ஆனால் இன்று சிலர் மக்களுக்கு தஹ்வா பணி செய்கிறோம், தவ்ஹீதை நிலை நாட்ட போகிறோம், தீன் உடைய வேலையை செய்கிறோம், தப்லீக் உடைய வேலையை செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, மக்களை குழப்பி உண்மையான தவ்ஹீதை போதிப்பதற்கு பதிலாக, வழிகேட்டையும், ஷிர்க்கையும் போதிக்கிறார்கள்.

உண்மையான இஸ்லாமிய (அகீதா) கொள்கையான சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் இறுதி மூச்சு வரை நாம் இருக்க இறைவன் அருள் புரிவானாக!

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!!

நன்றி: www.மெயில்ஒ/ப்இஸ்லாம்.காம்