சனி, 13 ஜூலை, 2013



ரமளானின் சிறப்பு - பாகம் 1 (ஆங்கிலத்தில்)
Dr. ஜாகிர் நாயக் 

சனி, 20 ஏப்ரல், 2013



எது தர்மம்?
ஆக்கம்: இப்னு ஹனீஃப்

"தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்" என்று இறுதி இறைத்தூதர் பெருமானார் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறியபோது மக்கள், "ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?" என்று கேட்டார்கள்.

அதற்கு நபி( ஸல்) அவர்கள், "அவர் தம் இரு கைகளால் (அவர்) உழைத்துத் தாமும் பயனடைவார். தர்மம் செய்(து பிறரையும் பயனடைய செய்)வார்!" என்று கூறினார்கள்.

அதற்கு மக்கள், "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையென்றால் அல்லது அவர் அதைச் செய்யா(செய்ய இயலா)விட்டால் (என்ன செய்வது)?" என்று கேட்டனர்.

நபி(ஸல்) அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையுடையோருக்கு அவர் உதவட்டும்!" என்றார்கள்.

மக்கள், "(இதையும்) அவர் செய்ய (இயல)வில்லையென்றால்?" என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அப்போது, "அவர் நற்காரியங்கள் செய்யும்படி பிறரை ஏவட்டும்!" என்றார்கள்.

"இதையும் அவர் செய்யாவிட்டால்?" என்று மீண்டும் கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள், "அவர் (பிறருக்கு எதுவும்) தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்" என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ் அரீ (ரலி), நூல்: புகாரி, ஹதீஸ் எண் 6022.

தர்மம் என்பது, 'பணத்தையும், பொருளையும் கொடுத்து உதவுவது மட்டுமே!' என்று விளங்கி வாழ்ந்து வரும் இன்றைய கால கட்டத்திற்கும் ஏற்ப, ஏறத்தாழ 1420 ஆண்டுகளுக்கும் முன்னர் மனித சமூகத்திற்கு வழி காட்ட அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர் மூலம் அல்லாஹ் மிகவும் அழகான முறையில தர்மத்தின் விளக்கத்தை வழங்கியுள்ளான்.

இந்த நபிமொழி மூலம், சில்லறைகளை எடுத்து வறியவருக்கு இறைத்து விடுவதுதான் தர்மம் என்று பலர் கருதுவது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்பதை உணர்த்தி, மக்களது சிந்தனைகளில் இது நாள் வரை இருந்து வந்த தர்மம் குறித்த தவறான கருத்துக்கள் அடங்கிய மூடத்திரைகளை இறைவன் அழகாக அகற்றுகின்றான்.

தர்மம் செய்வது பொருளாதாரத்தின் மூலம் செல்வந்தர்களாக இருப்பவர்கள் மட்டும் செய்யும் காரியமன்று என்பதை இந்நபிமொழி தெளிவாக எடுத்துரைக்கின்றது.

தன்னிடம் எது இருக்கின்றதோ அதனை தேவையுடையவர்களுக்குக் கொடுப்பதும், தன்னிடம் எதுவுமே இல்லை எனில் மற்றவர்களை நன்மைகளை செய்வதற்கு ஏவுவதும் அதற்கும் இயலாதெனில் யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் இருப்பதும் தர்மமே என்று இஸ்லாம் தர்மத்திற்கு விரிவான விளக்கம் அளிக்கின்றது. இதன் மூலம் நன்மைப் பெற்றுத் தரும் எளிய வழிமுறையை இஸ்லாம் மனித சமூகத்திற்கு கற்றுத் தருகிறது.

பெரும்பொருள் படைத்த செல்வந்தர்கள் மட்டுமின்றி தன்னிடம் அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாத ஒரு பரம ஏழையும் இவ்வழிகாட்டல் மூலம் தர்மம் செய்து நன்மைகளை இலகுவாகப் பெற முடியும்.

அத்துடன், தர்மம் எனும் பெயரில் மக்களை மானமிழந்து, மதியிழந்து செயல்படும் நிலையிலிருந்து வெளியேற்றி தர்மத்தின் மகத்துவத்தையும், அதே நேரத்தில் உழைப்பின் அவசியம் மற்றும் சிறப்பையும் இந்த நபிமொழி மிகவும் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகின்றது.

இதைத் தொடர்ந்து, தேவையுடைய ஒருவருக்கு அவர் தம் பணிகளில், அல்லது அவரது தேவைகளை நிறைவேற்ற உடலாலோ உள்ளத்தாலோ உழைப்பதும் தர்மமாக கணிக்கப்பட்டு அவருக்கும் இதன் மூலம் நற்பலன்கள் பெற இயலும் என்று கூறி ஒரு சுமூகமான, புரிந்துணர்வுடன் கூடிய சமூக ஒற்றுமையைக் கொண்டதொரு வாழ்க்கை முறையை மனித சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதையும் அவதானிக்க முடிகின்றது.

மேலும் உடல் ஊனங்களோ, பலவீனங்களோ, முதுமையோ, வறுமையோ ஒருவர் தர்மம் செய்து நன்மைகள் பெற தடையாக நிற்காது என்றும், நல்லதைச் செய்ய தன்னால் இயலவில்லையென்றாலும், பிறரை அதற்காக ஏவுதலும் உபதேசித்தலும் கூட தர்மத்தின் நன்மையைப் பெற்றுத் தரவல்லவை எனும் உன்னதமான நல்வழியை இஸ்லாம் சமூகத்திற்குக் கற்றுத் தருகிறது.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ஒருவருக்குச் செல்வமோ, உடல் வலிமையோ, ஆற்றலோ, நாவன்மையோ அல்லது இதில் எதுவுமே இல்லையென்றாலும் (சொல்லாலும் செயல்களாலும் உள்ளத்தாலும் பிறருக்கு ஏற்படும்) தீங்குகளிலிருந்து விலகி இருப்பதும் தர்மம் ஆகும் என்று இஸ்லாம் உபதேசிக்கிறது.

"ஒருவருக்குத் தீங்குகள் ஏற்படுத்தாமல் செயல்படுவதும் நன்மையை பெற்றுத் தரும்" எனும் ஓர் உன்னதமான உயரிய சிந்தனையை இந்த இரத்தினச் சுருக்கமான நபிமொழி எடுத்தியம்பி கலாச்சாரச் சீரழிவுகளில் அலைமோதி, மனித நேயமும் ஒழுக்க மாண்புகளையும் மறந்து மனித சமூகத்திற்கெதிராக பல்வேறு அக்கிரமங்கள் புரிந்து வாழ்ந்து மரணிக்கும் மனித சமூகத்திற்குத் தெளிவான வாழ்வியல் நெறியை அக்கறையோடு இந்நபிமொழி நினைவூட்டுகின்றது.

இறுதியாக, நன்மையென்பது அதை செய்பவருக்கு மட்டுமன்றி அது யாருக்கு செய்யப்படுகிறதோ அவருக்கும் நன்மையென்பதுடன், யாருக்கும் நன்மை செய்ய இயலவில்லையெனினும் எந்தத் தீங்கையும் செய்யாமல் இருப்பதே அவருக்கு (தர்மம் செய்த) நன்மையென்று கூறி, ஒவ்வொரு தனி மனிதனையும் ஒட்டு மொத்த சமூகத்துடன் மனித நேயத்துடன் வாழுமாறு இந்த நபிமொழி பிணைத்து விடுகிறது.

இது போன்ற செயல்களின் நற்பலன்கள், மறுமையில் மட்டுமின்றி இம்மை வாழ்க்கைக்கும் பயனுள்ளது என்பதை மக்கள் அனைவரும் உணர முற்பட்டால், உண்மையிலேயே மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கையின் நிலை மிகவும் சிறப்பானதாக மாறிவிடும். மறுமையில் வெற்றியும் பெற வழி பிறக்கும். எல்லாம் வல்ல (இவ்வுலகின் ஏக இறைவனாகிய) அல்லாஹ் நமக்கு அதற்காக உதவிகள் மற்றும் நல்லருள் புரிய எந்நேரமும் அயராமல் பிராத்திப்போமாக. ஆமீன்.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

வெள்ளி, 29 மார்ச், 2013




உண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்!



அல்லாஹ் கூறுகின்றான்:

“(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்’ (23:51)

‘அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (2;60)

ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரைக் கூற மறந்துவிட்டால்!

உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அல்லாஹ்வின் பெயரை (“பிஸ்மில்லாஹி” என்று) கூறி (ஆரம்பம் செய்யட்டும்). ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்து (இடையில் நினைவு வந்து)விட்டால்

‘பிஸ்மில்லாஹி அவ்வலஹூ வஆகிரஹூ’

எனக் கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி.

பொருள்: இதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப் பெயர் கொண்டு (நான் உண்கிறேன்)

பிஸ்மில்லாஹ் கூறாமல் சாப்பிட்டால் அவ்வுணவு ஷைத்தானுக்கு போய் சேருகிறது!

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், ‘பிஸ்மில்லாஹ்’ கூறாத உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.”  அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலியல்லாஹு அன்ஹு)- ஆதாரம்: முஸ்லிம.;

நின்றுகொண்டு நீர் அருந்துவது கூடாது!

‘நின்றுக் கொண்டு நீர் அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்’ அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்-குத்ரி, ஆதாரம்: முஸ்லிம்.

‘உங்களில் எவரும் நின்றுக்கொண்டு நீர் குடிக்க வேண்டாம். மறந்து குடித்திருந்தால் வாந்தி எடுக்கட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.

குடிக்கும் பாத்திரத்தில் ஊதி குடிக்கலாகாது!

குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடுவதையும் (ஊதி குடிப்பதையும்) நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: திர்மிதி, அபூதாவுத், இப்னுமாஜா

“(குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்.

‘உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்’ அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி), ஆதாரம்: புகாரி

இடது கையால் குடிப்பதோ சாப்பிடுவதோ கூடாது!

‘உங்களில் எவரும் இடது கையால் குடிக்கவோ, சாப்பிடவோ வேண்டாம். ஏனெனில் ஷைத்தான் தான் இடது கையால் குடிக்கிறான்; சாப்பிடுகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்; இப்னு உமர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவுத், திர்மிதி.

தங்கம், வெள்ளியிலான பாத்திரத்தில் குடிப்பது கூடாது!

‘எவர் தங்கம், வெள்ளிப் பாத்திரத்தில் குடிப்பாரோ அவர் தன் வயிற்றில் நரகத்தின் நெருப்பையே விழுங்குகிறார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.

“வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் மிடறுமிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறான்.” அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி), ஆதாரம்: புகாரி   “நாங்கள் ஹுதைஃபா(ரலி) அவர்களுடன் புறப்பட்டோம். அவர்கள், ‘தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருகாதீர்கள். (ஆண்கள்) சாதாரணப் பட்டையும் அலங்காரப் பட்டையும் அணியாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்கம், மறுமையில் (இறைநம்பிக்யாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா (ரஹ்), புகாரி.

வீண் விரயம் செய்வது கூடாது!

“உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.” (7:31)

ஒரே மூச்சில் நீர் அருந்தாமல் மூன்று முறை மூச்சுவிட்டு அருந்த வேண்டும்!

(என் பாட்டனார்) அனஸ் (ரலி) பாத்திரத்தில் (பருகும் போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்ததாகக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் (ரஹ்), ஆதாரம்: புகாரி

உணவா? தொழுகையா? எது முதலில்?

“இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்.” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); ஆதாரம்: புகாரி.

‘உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்

உணவில் எலி விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: மைமூனா (ரலி), ஆதாரம்: புகாரி.

தட்டின் நடுப்பகுதியிலிருந்து சாப்பிடக் கூடாது! ஓரத்திலிருந்து சாப்பிட வேண்டும்!

‘பரக்கத் உணவின் நடுப்பகுதியில் இருக்கிறது. எனவே ஓரங்களில் சாப்பிடுங்கள்; உணவின் நடுப்பகுதியில் இருந்து சாப்பிடாதீர்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா

உணவுத் தட்டில் வலது கரத்தால் அருகில் இருப்பதை எடுத்துச் சாப்பிட வேண்டும்!

(நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) கூறினார்: நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. ஆதாரம்: புகாரி.

உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதை சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்!

(சாப்பிடும் போது) உங்களிடமுள்ள (உணவு) ஒரு துண்டு கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தமான பொருள் ஒட்டியிருந்தால் அதை நீக்கிவிட்டு சாப்பிடவும். அதை ஷைத்தானுக்கு விட்டுக்கொடுக்க வேண்டாம். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.

விரல்களை சூப்பி சாப்பிட வேண்டும்! கைக்குட்டையால் துடைக்க வேண்டாம்!

“தனது விரல்களை சப்பாமல் கைக்குட்டையால் கையை துடைக்க வேண்டாம். ஏனெனில் எந்த உணவில் பரக்கத் உள்ளது என்று அஅவன் அறிய முடியாது!” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.

இருக்கின்ற உணவை பங்கிட்டுச் சாப்பிட வேண்டும்!

“இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.

வயிறு முட்ட சாப்பிடுவது உண்மையான முஃமினுக்கு அழகல்ல!

“(உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்.’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.

“இப்னு உமர் (ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி) ‘நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள் ‘இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்’ எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்), ஆதாரம்: புகாரி.

சாய்ந்தவாறு அல்லது வயிற்றில் படுத்தவாறு சாப்பிடுவது கூடாது!

“நான் சாய்ந்தபடி சாப்பிடமாட்டேன்.” என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.

உணவில் குறை கூறாதீர்கள்!

“நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.

பால் அருந்திய பிறகு வாய்கொப்பளித்தல்:

(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள். அப்போது, ‘இதில் (பாலில்) கொழுப்பு இருக்கிறது’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சாப்பிட்டார்கள்?

“நபி (ஸல்) அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) சாப்பிட்டதில்லை; பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்தும் சாப்பிட்டதில்லை; அவர்களுக்காக மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதுமில்லை.” அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) யூனுஸ் இப்னு அபி ல்ஃபுராத் அல்குறஷீ(ரஹ்) கூறினார்.

இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்களிடம், ‘எதன் மீது அமர்ந்து அவர்கள் சாப்பிடுவார்கள்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(தோலாலான) உணவு விரிப்புகளின் மீது’ என்று பதிலளித்தார்கள்.

ஒரு சபையில் பானங்களை வலது புறத்திலிருந்து கொடுத்து வரவேண்டும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக் வந்திருந்தபோது அவர்கள் பால் அருந்தியதை பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காகக் கிணற்றிலிருந்து (நீர் எடுத்துக்) கலந்தேன். அவர்கள் (பால்) கிண்ணத்தை வாங்கி அருந்தினார்கள். அவர்களின் இடப் பக்கத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்திருந்தனர். (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டு, ‘வலப்பக்கத்தில் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப் பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும், இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதியளிப்பாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) எவருக்காகவும் நான் விட்டுத் தரமாட்டேன்’ என்று பதில் கூறினார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதை அச்சிறுவரின் கையில் வைத்துவிட்டார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம்: புகாரி.

பானங்களை பரிமாறுபவர் இறுதியில் தான் பருக வேண்டும்!

‘….(பானங்களை) ஊற்றுபவர் தான் இறுதியில் பருக வேண்டும்’ (முஸ்லிமில் இடம்பெறும் நீண்ட ஹதீஸில் இடம் பெறும் வாசகம்.) அறிவிப்பவர்; அபூ கதாதா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.

உணவுப் பாத்திரங்களை மூடி வைக்கவேண்டும்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்’ என்று கூறினார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), ஆதாரம்: புகாரி.

தோல் பையின் வாயிலிருந்து நீர் அருந்துவது கூடாது!

நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாய்ப் பகுதியிலிருந்து (தண்ணீர் அருந்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.

உண்ணும் போதும் பருகும் போதும் அல்லாஹ்வைப் புகழ்ந்தால் அதை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்!

‘ஒரு அடியான் உணவைச் சாப்பிடும் போது அந்த உணவுக்காக அவனைப் புகழ்வதையும், நீரைப் பருகும் போது அந்த நீருக்காக அவனைப் புகழ்வதையும் அல்லாஹ் பொருந்திக்கொள்கிறான். அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அஹ்மத்

சாப்பிட்டபிறகு கூற வேண்டிய துஆ!  

“அல்ஹம்துலில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஸகனீஹி மின்கைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்” என யாரேனும் கூறினால் அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும். ஆதாரம்: அபூதாவூது, திர்மிதி   பொருள்: “எனது எவ்வித சக்தியும் ஆற்றலும் இன்றி எனக்கு இவ்வுணவை வழங்கி உண்ணச்செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்”   நபி (ஸல்) அவர்கள் முன்னாலிருந்து சாப்பாட்டுத் தட்டு எடுக்கப்படுமானால் ‘அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி கைர முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹூ ரப்புனா’  என்று கூறுவார்கள்.

பொருள்: துய்மையான ஏராளமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. இறைவா! நீ உணவின் பால் தேவையுடையவன் அல்லன்! உன்னை யாரும் விட்டுவிட முடியாது!

நன்றி: சுவனத்தென்றல்.காம்

வியாழன், 21 மார்ச், 2013



பாவமன்னிப்பு தேடுவது எவ்வாறு?


ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருப்பின், அவர் மனம் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவராக தூய மனதுடன் அவனிடம் பாவமன்னிப்பு கோருவாராயின், அந்த முஃமின் ஷிர்க் போன்ற படுபயங்கரமான பாவங்களைச் செய்திருப்பினும் அவருடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவதாக அல்லாஹ் தன் திருமறையிலே கூறியிருக்கிறான்.

அதுமட்டுமல்லாமல் அளவற்ற அருளாளனும் தன்னுடைய படைப்பினங்களின் மேல் கொண்டுள்ள அளவில்லாத கருணையினாலும் அந்த முஃமினுடைய பாவங்களை மன்னிப்பதோடு அல்லாமல் அவர் செய்த தீய செயல்களை நற்செயல்களாக மாற்றி விடுவிடுகிறான்.

அளவற்ற அன்புடையயோனாகிய அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவதற்கான நிபந்தனைகள்: -

மனத் தூய்மையுடன் பாவமன்னிப்பு கோரவேண்டும்

செய்துக் கொண்டிருக்கின்ற பாவமான செயல்களை உடனே நிறுத்த வேண்டும். மீண்டும் அந்தப் பாவமான செயல்களின் பால் திரும்பக் கூடாது
தாம் செய்த பாவமான செயல்களை நினைத்து கைசேதப்படவேண்டும்
ஒரு அடியான் மற்றொரு அடியானுக்குச் செய்த பாவங்களுக்காக முதலில் அந்த அடியானிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மரணத்தருவாயில் உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன்னர் பாவமன்னிப்பு கோரவேண்டும்

சூரியன் மேற்கில் உதயமாவதற்கு முன்னர் பாவமன்னிப்பு கோரவேண்டும்
வரம்பு மீறி தீங்கிழைத்த பாவிகளையும் அல்லாஹ் மன்னிக்கிறான்: -

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 39, வசனங்கள் 53-54 ல் கூறுகிறான்: -

39:53 ‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

39:54 ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

செய்த தவறுக்காக உடனே அல்லாஹ்வை நினைத்து, வருந்தி பாவமன்னிப்பு கோரினால் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களுக்கு சுவனபதியை பரிசாக தருவான்: -

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 3, வசனங்கள் 135-136 ல் கூறுகிறான்: -

3:135 தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.

3:136 அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.

தவ்பா செய்து, ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்பவருடைய பாவங்களை நன்மையாக அல்லாஹ் மாற்றி விடுகிறான்: -

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 25, வசனங்கள் 63-71 ல் கூறுகிறான்: -

25:63 இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் ‘ஸலாம்’ (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.

25:64 இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.

25:65 ‘எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்’ என்று கூறுவார்கள்.

25:66 நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.

25:67 இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.

25:68 அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

25:69 கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

25:70 ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

25:71 இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.

அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பாவத்தை விட்டும் திருந்திக் கொண்டால் அல்லாஹ் மன்னிக்கிறான்: -

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 6, வசனம் 54 ல் கூறுகிறான்: -

6:54 நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.

பாவ மன்னிப்பு கோருபவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

‘யார் தாம் செய்த பாவத்திற்காக பாவமன்னிப்பு கோருகிறாரோ அவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்’ (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், ஆதாரம்: திர்மிதி)

உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன் பாவமன்னிப்பு கோரவேண்டும்: -

‘அல்லாஹ் தன்னுடைய அடியானுடைய பாவமன்னிப்பை மரணத்தருவாயில் அவர் உயிர் விடும் வரைக்கும் ஏற்றுக் கொள்கிறான்’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர், ஆதாரம்: திர்மிதி)

பாவமன்னிப்புக் கோருவதன் அவசியம்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன்” அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம்

முன் பின் பாவங்கள் மன்னிக்கபட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களே அல்லாஹ்விடம் தினமும் நூறு முறை பாவமன்னிப்பு கோரினார்கள் என்றால் நாம் எவ்வாறு கோரவேண்டும் என்பதைச் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (அல்குர்ஆன் 2:286)

நன்றி: சுவனத்தென்றல்.காம்

சனி, 16 மார்ச், 2013



இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம்!


இஸ்லாம் ஏனைய மதங்களைப் போலல்லாமல் சகோதரத்துவத்தை அதிகமாக வலியுறுத்துகின்றது. அதற்கென இருக்கின்ற வழிகாட்டல்களை தெளிவாக விளக்குகின்றது. சகோதரத்துவத்திதை இல்லாமல் ஆக்குகின்ற அல்லது அதற்கு களங்கம் ஏற்படுத்துகின்ற அனைத்து வழிகளையும் முற்றாக தடை செய்திருப்பதோடு அதை மீறி செயல்படுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு எனவும் எச்சரிக்கைச் செய்கின்றது. இதன் மூலம் பலம் வாய்ந்த ஒரு சமுதாயத்தையும், ஈமானிய சமுதாயத்தையும் ஒற்றுமையை வளர்ப்பதுவுமே இதன் குறிக்கோளாகும். இது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.

இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது இதன் உண்மை நிலையை அறிந்துக் கொள்ளலாம். நபி (ஸ்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன்னிருந்த அக்கால அரேபியர்கள் எந்த முறையில் வாழ்ந்து  கொண்டிருந்தார்கள்? புனிதமான அந்நகரில் அவர்களுக்கு மத்தியில் கோத்திர வெறி தலைவிரித்தாடியது! கோத்திரங்களுக்கிடையில் வருடக்கணக்காக சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள்! வாழையடி வாழையாக அதனைத் தொடர்ந்து செய்துகொண்டே வந்தார்கள். அடிமை, எஜமான் என்ற பாகுபாடு அதிகமாக காணப்பட்டன! எஜமானர்களோ தங்களது அடிமைகளை தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடத்தினார்கள். நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம், மொழிக்கு மொழி, கோத்திரத்திற்கு கோத்திரம், இனத்திற்கு இனம், நிறத்திற்கு நிறம் என்றெல்லாம் பலவிதமான பாகுபாடுகளுடன் வாழ்ந்து வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்ட பிறகு இஸ்லாம் இவை அனைத்திற்குமே முற்றுப்புள்ளி வைத்தது. அல்-குர்ஆன் அருளப்பட்டது! ஈமானிய ஒளி பிரகாசித்தது! நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் அச்சமுதாய மக்களின் உள்ளத்துக்கு தெளிவுபடுத்தினார்கள். அவர்களுக்கு சிறந்த அறிவைக்கொண்டு நேர்வழியை அடைவதற்குரிய வழிமுறையைக் காட்டினார்கள். இதனால் அவர்களது உள்ளங்கள் அமைதி பெற்றன. இறைவிசுவாசம் என்ற ஒரே கோட்பாட்டின் கீழ் அவர்கள் ஒன்றினைந்தார்கள். அனைத்து வேற்றுமைகளில் இருந்தும் நீங்கிக்கொண்டார்கள். கோத்திர வெறி மற்றும் உலக ஆசைகள் இவைபோன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பகரமாக ஈமானிய சகோதரத்துவத்தை உருவாக்கினார்கள். அதே கோட்பாட்டின் கீழ் அனைவருமே ஒன்றினைந்து செயற்பட்டார்கள்! இதனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வல்லரசை ஏற்படுத்துகின்ற அளிவிற்கு மிகப்பெரும் வெற்றியையும் பெற்றார்கள்!

இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்!

(1) இஸ்லாம் சகோதரத்துவத்தை இறைவிசுவாசத்துடன் இணைத்துக் கூறுகின்றது. இரண்டு சகோதரர்களுக்கு மத்தியில் பிணக்கு ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைக்கவும் கட்டளையிடுகின்றது (அல்-குர்ஆன் 49:10).

இந்த வசனம் நமக்கு எதனைப் போதிக்கின்றது? இறைவிசுவாசிகள் அனைவருமே சகோதரர்கள் என்பதன் மூலம் சகோதரத்துவத்தைத் தூண்டக்கூடியதாகவும், சகோதரத்திற்கு களங்கம் ஏற்படுகின்ற விசயங்கள் நடந்துவிட்டாலும் அதைத் தீர்த்து வைக்கவும் ஏவுவதன் மூலம் சகோதரத்துவம் மென்மேலும் உருவாகும் என்பதனை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. நபித்தோழர்களது வாழ்க்கையும் இவ்வாறே அமைந்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் தனது தோழர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் வருகின்ற போது அவ்வப்போது அவற்றை தீர்த்துவைத்து ஒற்றுமையாக்கியிருக்கின்றார்கள். இதனால் தான் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுடன் பேசாமல் இருப்பதைக் கூட இஸ்லாம் தடை செய்திருக்கின்றது.

(2) ஒரு முஃமின் இன்னொரு முஃமினை நேசிப்பதற்கும் இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்).

நமது முஸ்லிம் சமூகத்தில் தற்போது நிலவுகின்ற ஒற்றுமை இன்மைக்கும் அதனால் நமது சமூகம் பல பிரிவுகளாகப் பிரிந்து சின்னாபின்னமாகப் போயிருப்பதற்கும் தற்காலத்தில் மிக முக்கிய காரணமாக அமைவது இந்த நபிமொழியில் அடங்கியிருக்கின்ற மிகக்கடுமையான எச்சரிக்கையை அலட்சியம் செய்து அதற்கு மாற்றமாக நடப்பதுவேயாகும் என்றால் அது மிகையாகாது!

ஒருவன் தனது வாழ்வில் முன்னேறிச் செல்கின்றபோது இன்னொருவன் அதனைப் பார்த்துப் பொறாமைக் கொள்ளக் கூடியவனாகவும் அவனது முன்னேற்றத்தை தடைச் செய்வதற்கும் முயற்சிக்கின்றான். இதனால், மேற்கண்ட நபிமொழியில் கூறப்பட்ட, இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்தை பின்பற்றாததால், தான் விரும்பக்கூடிய, ‘வாழ்க்கையில் முன்னேறுவதை’ இன்னொரு சகோதரனும் அடைவதை விரும்பாததால், அவன் துன்பப்படுவதைக் கண்டு இவன் இன்பமடைவதால் அங்கு பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன. இதனால் தான் ஒரு பிரச்சனையின் ஆரம்பத்தையே இஸ்லாம் தடுத்து சகோதரத்துவத்தை விரும்பக்கூடிய விசயங்களை ஊக்குவிக்கின்றது.

(3) எப்படிப்பட்ட விசயங்களுக்காக சகோதரத்துவ நட்பு வைக்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுத்தருகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்காகவே ஒருவனை வெறுத்து நடங்கள்’ (ஆதாரம் : அஹ்மத்)

அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்வதென்றால், நேசிப்பதென்றால் என்ன?

ஒன்றாகப் பழகும் சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கக்கூடியவாறு நல்லுபதேசங்களைச் செய்துகொள்ள வேண்டும்.  இவ்வாறு நட்பாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்கின்றபோது வணக்கவழிபாடுகளைப் புறக்கணிக்கின்ற போது மற்றவர் அச்சகோதரனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவன் அவற்றை அலட்சியப்படுத்துகின்றபோது, நல்லுபதேசங்களைக் கேட்காதபோது, அவற்றை அவர் ஏற்று செயல்படுத்தும் வரை அவரை அல்லாஹ்வுக்காக வெறுத்து நடக்கவேண்டும்.

(4) இஸ்லாம் இனம், நாடு, நிறம், சாதி, மொழி ஆகியவற்றுக்கிடையே எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை! மாறாக ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவரையும் ‘முஸ்லிம்கள்’ என்றே பார்க்கின்றது. இவற்றை நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களது வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறியலாம். பிலால் (ரலி) அவர்களைப் பொருத்தவரையில் ஒரு மிகப்பெரும் குரைசிக்குலத் தலைவனுக்கு அடிமையாக வாழ்ந்தவர். மேலும் அவர் கருமை நிறமுடையவராக இருப்பதோடு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவரும் ஆவார். நபி (ஸல்) அவர்களோ அல்லது நபித்தோழர்களோ அவரை ஒருபோதும் பிரித்துப்பார்க்கவில்லை! மாறாக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சகோதரர்கள் என்றகையில் அக்கால நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒற்றுமை இருந்தது.  இதனால் இவர் அபூபக்கர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்டார்கள். உலகிலேயே இரண்டாவது தரத்தில் இருக்கின்ற அல்-மஸ்ஜிதுல் நபவியில் முஅத்தினாக இருந்தார். மக்கா வெற்றியின் போது பெரும் பெரும் நபித்தோழர்கள் மக்காவிலே இருக்கின்ற சந்தர்ப்பத்திலே யாரை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்கு அழைத்துச் செல்வார் என்று எpதிர்ப்பார்த்திருந்தபோது ஆரம்பத்திலே அடிமையாகவும், நிறத்திலே கருமையாகவும் இருந்த பிலால் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்குள்ளே அழைத்துச் சென்றார்கள். இவைகள் அனைத்துமே, இஸ்லாம் சகோதரத்துவத்திற்கு பாகுபாடு காட்டுவதில்லை என்பதையே உணர்த்துகின்றது.  இதே போன்று ஏராளமான நிகழ்வுகள் நடந்திருப்பதையும் இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது விளங்கிக்கொள்ளலாம்.

மக்களுக்கு மத்தியில் இருக்கும் குலங்களும் கோத்திரங்களும் அவர்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் அறிந்துக்கொள்வதற்காகவே என்று இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. அவர்களுக்கு மத்தியில் எவ்வித உயர்வு தாழ்வு கிடையாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.

“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 49:13)

இந்த அல்-குர்ஆன் வசனம், அல்லாஹ் மனிதனை ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து படைத்தான் என்பதன் மூலம் அனைத்துப் பாகுபாடுகளையும் ஆரம்பத்திலேயே தடுக்கின்றது. வசனத்தின் இறுதியில் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர் யார் என்பதற்கு ஒரு அளவு கோலையும் தருகின்றது. அவர்களே அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர்! அவர்கள் தான் இறையச்சமுடையவர்கள். தற்போது உலகில் பெரும் பிரச்சனையாக கருப்பர், வெள்ளையர் பிரச்சனை இருப்பதை தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் அறியலாம். அதே போன்று சாதிப்பிரச்சனைகள் இந்தியாவில் பல இயங்களிலும் இது ஊடுருவி இருப்பதை பார்க்கலாம். இவைகள் அனைத்துக்கும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

‘அரபிக்கும் அஜமிக்கும், அஜமிக்கும் அரபிக்கும் மத்தியிலும் கருப்பனுக்கும் வெள்ளையனுக்கும் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும் மத்தியிலும் வித்தியாசங்கள் கிடையாது. அனைவருமே ஆதமில் இருந்து வந்தவர்கள்; ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர்’ (ஆதாரம் : அஹ்மத்)

இவ்வாறாக இன, நிற, இட, தேச, மொழி என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் இஸ்லாம் சகோதரத்துவத்தை முக்கியப்படுத்தி வலியுறுத்துவதை அறியலாம்.

நன்றி: சுவனத்தென்றல்.காம்


குர்ஆனின் ஏராளமான இடங்களில் அல்லாஹ் மிக்க கருணையாளன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் உண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆகவே இறைவன் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?
மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன்  அனைத்து மதத்தவர்களும்


குர்ஆனின் ஏராளமான இடங்களில் அல்லாஹ் மிக்க கருணையாளன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் உண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆகவே இறைவன் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?.


1. அல்லாஹ் அளவிலா கருணையாளன்..!

அல்லாஹ் அளவிலா கருணையாளன் – என்று அருள்மறை குர்ஆன் பலமுறை கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 114 அத்தியாயங்களில் ஒரேயொரு அத்தியாயம் (அத்தியாயம் 9 ஸுரத்துத் தௌபா)வைத் தவிர, மற்ற அனைத்து அத்தியாயங்களும் ‘பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ – என்கிற அழகிய வாக்கியத்தோடு ஆரம்பமாகின்றன. ‘பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ – என்கிற அரபிப் பதத்தின் பொருள் – அளவிலா கருணையும், இணையிலா கிருபையுமுடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் – என்பதாகும்.

2. அல்லாஹ் மன்னிப்பாளன்.

அருள்மறை குர்ஆனின் உள்ள ஏராளமான வசனங்கள் அல்லாஹ் மன்னிப்பாளன் என்று கூறுகின்றது. குறிப்பாக அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன்னிஸாவின் 25வது வசனமும், ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 74வது வசனமும் கீழ் கண்டவாறு கூறுகின்றன.

‘..இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்..(Al-Quran – 4:25).

‘..அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், பெரும் கருணையாளனாகவும் இருக்கின்றான்..(Al-Quran – 5:74).

3. அல்லாஹ் தண்டனை பெறத் தகுதியானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குகிறான்.

அல்லாஹ் கருணையாளனாகவும், மன்னிப்போனாகவும் இருந்தாலும் – தண்டனை பெறத் தகுதியானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதில் விதிவிலக்கில்லாமல் தண்டனை வழங்குகிறான். அருள்மறை குர்ஆனின் வசனங்கள் பலவற்றில் இறை விசுவாசம் கொள்ளாதவர்களுக்கும், இறை உண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு என்று குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்க மறுத்தவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகிறது. அருள்மறை குர்ஆனின் பல வசனங்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்க மறுத்தவர்களுக்கு நரகத்தில் வழங்கப்படும் கடுமையான தண்டனைகளின் வகைகள் என்ன?. அவைகள் எவ்வாறு வழங்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றது.

‘யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்: அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.’ ( Al-Quran4:56)

4. அல்லாஹ் நீதியாளன்.

அல்லாஹ் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?. என்பதே இங்கு கேட்கப்பட்ட கேள்வி. இங்கு ஒரு முக்கியமான கருத்தை நாம் கவனிக்க வேண்டும். அல்லாங் மன்னிப்பவன். மிக்க கருணையாளன். அதே நேரத்தில் அல்லாஹ் நீதி பரிபாலிப்பவனும் ஆவான். எனவே நீதி பரிபாலிக்கப்பட வெண்டுமெனில், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கியேத் தீர வேண்டும்.

அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன்னிஷாவின் 40வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.

‘நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஒரு அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்;…’ (Al-Quran 4:40)

மேலும் அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியாவின் 47வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது.

‘இன்னும் கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது: மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறு கணக்கெடுக்க நாமே போதும்.’ (Al-Quran 21:47)

5. தேர்வில் காப்பி அடிக்கும் மாணவனை – மன்னிக்கக்கூடிய ஆசிரியர் ஓர் உதாரணம்:

ஆசிரியர் ஒருவர் தேர்வு நடந்து கொண்டிருக்கும் பொழுது மாணவன் ஒருவன் காப்பி அடிப்பதை கையும் களவுமாக பிடித்து விடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆசிரியர் கருணை உள்ளம் கொண்டவர். மன்னிக்கும் மனோ பக்குவமும் உள்ளவர். எனவே தொடர்ந்து காப்பி அடிக்க மாணவனை அனுமதித்து விடுகிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். இரவு முழுவதும் கண் விழித்து படித்து விட்டு வந்து தேர்வு எழுதும் மற்ற மாணவர்கள் ஆசிரியரை கருணை உள்ளம் கொண்டவர் என்றும், மன்னிக்கும் மனோ பக்குவம் உள்ளவர் என்றும் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், மாணவர்கள் – ஆசிரியரை அநியாயக்காரர் என்று அழைப்பார்கள். ஆசிரியரின் கருணையுள்ளம் மேலும் பல மாணவர்களை தேர்வில் காப்பி அடிக்கத் தூண்டும். இதுபோல எல்லா ஆசிரியர்களும் கருணையுள்ளம் கொண்டு மாணவர்களை தேர்வில் காப்பி அடிக்க அனுமதித்தால், எல்லா மாணவர்களிடமும் தேர்வுக்காக படித்து எழுதும் பழக்கம் மாறி, காப்பி அடிக்கும் பழக்கம் உருவாகும். காப்பி அடித்ததால் எல்லா மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவார்கள். தேரிவியலில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறும் மாணவர்கள், நடைமுறை வாழக்கையில் தோல்வியைத்தான் சந்திப்பார்கள். மாணவர்களுக்காக தேர்வு நடத்துவதின் முழு நோக்கமும் தோல்வியைத் தழுவும் என்பது நிச்சயம்.

6. மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை, மறுமை வாழ்க்கைக்கான தேர்வு.

நம்முடைய இவ்வுலக வாழ்க்கையானது மறுமை வாழ்க்கைக்கு உரிய தேர்வுதான். அருள்மறை குர்ஆனின் 67வது அத்தியாயம் ஸுரத்துல் முல்க் – ன் 2வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது.

‘உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்: மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்: மிக மன்னிப்பவன்.’(Al-Quran – 67:2)

7. அல்லாஹ் எல்லா மனிதர்களையும் தண்டனை அளிக்காமல், மன்னித்து விடுவதாக இருந்தால் யார்தான் அல்லாஹ்வுக்கு அடிபணிவார்?.

அல்லாஹ் எந்த மனிதருக்கும் தண்டனை அளிப்பதில்லை. எல்லா மனிதர்களுக்கம் மன்னிப்பளித்து விட்டு விடுவான் என்கிற நிலை இருக்கும் எனில் – மனிதர்கள் ஏன் அல்லாஹ்வுக்கு அடி பணிந்து நடக்க வேண்டும்?. யாரும் நரகத்துக்கு போகமாட்டார்கள் என்பதை நானும் ஆதரிக்கிறேன். ஆனால் மனிதர்கள் வாழும் இந்த உலகம் அல்லவா நரகமாகப் மாறி விடும். எல்லா மனிதர்களும் பாரபட்சமின்றி சொர்க்கத்திற்குத்தான் செல்வார்கள் எனில் – மனிதன் இவ்வுலகில் படைக்கப் பட்டதின் நோக்கம்தான் என்ன?. எனவே இவ்வுலக வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைக்கு உண்டான ஒரு தேர்வேயன்றி – வேறில்லை.

8. அல்லாஹ் – தன் கட்டளைகளுக்குக் கீழ் படிகிறவர்களுக்கு மாத்திரம்தான் மன்னிப்பு வழங்குவான்.

அல்லாஹ் – தன் கட்டளைககளுக்குக் கீழ் படிகிறவர்களுக்கு மாத்திரம்தான் மன்னிப்பு வழங்குவான். அருள்மறை குர்ஆனின் 39வது அத்தியாயம் ஸுரத்துஜ் ஜுமரின் 53 முதல் 55வது வசனங்கள் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

‘என் அடியார்களே!. (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.’ (Al-Quran– 39:53)

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்: (வேதனை வந்து விட்;டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (Al-Quran– 39:54)

நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறவைனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றை பின்பற்றுங்கள். (Al-Quran– 39:55)

நான்கு வகையான செயல்கள் மூலம் நிங்கள் செய்கிற தவறுகளிலிருந்து திருந்திக் கொள்ள முடியும். அவையாவன:

1. முதலில் நீங்கள் செய்யும் தவறான செயல்கள் சரியானது இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

2. இரண்டாவதாக செய்யும் தவறுகளை உடனடியாக நிறுத்துங்கள்.

3. மூன்றவதாக நீங்கள் செய்த தவறுகளை இனி ஒருபோதும் செய்யாதீர்கள்.

4. கடைசியாக நீங்கள் செய்த தவறுகளால் எவரேனும் பாதிக்கப் பட்டிருந்தால், பாதிக்கப் பட்டதற்கான பரிகாரம் தேடுங்கள்;.

நன்றி: சுவனத்தென்றல்.காம்

வியாழன், 14 மார்ச், 2013




பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப் பணி


உலகையும் அதில் உள்ள மனிதர்கள் உட்பட அனைத்தையும் படைத்த படைப்பாளனைக் குறித்து அறிந்து கொள்ளாமல் படைப்புகளை வணங்கிக் கொண்டிருக்கும் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் பணியே அழைப்புப் பணியாகும்.

தொழுகை, நோன்பு ஆகியனபோல் அழைப்புப் பணியும் கலிமாச் சொன்ன ஒவ்வொரு முஸ்லிமின் அடிப்படைக் கடமையாகும். அதுபோல் முஸ்லிம்கள் சமகாலத்தில் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அவர்கள்மீது இழைக்கப்படும் அனைத்துக் கொடுமைகளுக்கும் அழைப்புப் பணியைச் சரிவரச் செய்யாததும் ஒரு முக்கியக் காரணம் என்றால் அது மிகையானதல்ல. அந்தளவு முக்கியப் பணியான அழைப்புப் பணியைப் பற்றி விளக்கமாகவும் இயக்கப் பிரிவுகள் குறித்துச் சுருக்கமாகவும் பிரிவுகளுக்கு மத்தியில் எவ்வாறு அழைப்புப் பணி செய்வது என்பது குறித்தும் இன்ஷா அல்லாஹ் இக்கட்டுரையில் காண்போம்.

அழைப்புப் பணி – திருமறையின் பார்வையில்

திருக்குர்ஆனில் அழைப்புப் பணி குறித்து, “உதுஊ இலா ஸபீலி ரப்பிக்”, “வ தவா ஸவ்பில் ஹக்”, “தஃமுரூன பில் மஹ்ரூஃபி வதன்ஹவ்ன அனில் முன்கர்”, “இகாமத்துத் தீன்” எனப் பல்வேறு பெயர்களில் இறைவன் குறிப்பிட்டுக் காட்டுகிறான். திருமறையில் அழைப்புப் பணி குறித்து எண்ணற்ற வசனங்கள் இருப்பதால் உதாரணத்திற்கு ஓரேயொரு வசனத்தைக் குறிப்பிட்டு காட்டுகிறேன்: “எவர் அல்லாஹ்வின்பால் (மக்களை) அழைத்து, நல்ல செயல்களைச் செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களைச் சார்ந்தவன்” என்று கூறுகிறாரோ, அவரைவிட சொல்லில் அழகியவர் யார் ? (திருக் குர்ஆன் 41:33) என அல்லாஹ் இப்பணியைக் குறித்து சிலாகித்துச் சொல்லிக் காட்டுகிறான்.

அழைப்புப் பணி – சுன்னாவின் ஒளியில்

முஹம்மது (ஸல்) தம் இறுதிப் பேருரையில் கூடியிருந்த மக்களிடம், "என்னிடமிருந்து ஓரேயொரு செய்தி தெரிந்தாலும் பிற மக்களிடம் கொண்டு செல்லுங்கள்" என்று கூறிய கட்டளையை ஏற்று உத்தமத் தோழர்களான ஸஹாபாக்கள் உலகின் பல்வேறு பாகங்களுக்குச் சென்று அழைப்புப் பணியாற்றியதை வரலாற்றில் காண்கின்றோம். தனக்குப் பிடித்தமானவர்கள் என்றில்லாமல் தன்னைக் கடுமையாக எதிர்த்த அபூஜஹலும் எரிச்சல் அடையும்வரையில் அழைப்புப் பணியை அவனிடமும் நபி (ஸல்) செய்ததைக் காண்கின்றோம். அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக ! உம்மைக் கொண்டு ஒரு மனிதனுக்கு நேர்வழி கிடைப்பது சிவந்த ஒட்டகங்கள் கிடைப்பதைவிடச் சிறந்தது" எனக் கூறினார்கள் (புகாரி, முஸ்லீம்)

அழைப்புப் பணியும் இயக்க பிரிவுகளும்

இஸ்லாத்தை இம்மண்ணில் நிலைநாட்டுவதற்காகவே போராடுவதாக சொல்லும் இஸ்லாமிய, சமுதாய இயக்கங்கள், போராட்டத்தின் சமகால வடிவமான அழைப்புப் பணியை எடுத்து செல்வதில் பிறருக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆனால் வேதனைக்குரிய யதார்த்தம் என்னவென்றால் இயக்கங்களின் செயல்பாடுகள் அழைப்புப் பணியை வேகப்படுத்துவதற்குப் பதிலாக அழைப்புப் பணியின் வேகத்தை மட்டுப்படுத்துவதாகவும் அதற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் உள்ளன என்றால் அது பிழையான கருத்தல்ல.

பிரிவுகளால் ஏற்ப(ட்ட)டும் பாதிப்புகள்

தமிழகத்தில் 1990களுக்கு முன்னால் இயக்கங்கள் குறைவாக இருந்தாலும் அங்கங்கு சில தன்னலமற்ற தனிமனிதர்கள் மற்றும் சில அமைப்புகளின் தன்னலமற்ற தியாகம் காரணமாக மீனாட்சிபுரங்கள் ரஹ்மத் நகராக மாறும் அளவுக்கு அழைப்புப் பணி ஆரவாரமின்றி நடைபெறத்தான் செய்தது. ஆனால் 90களின் தொடக்கத்தில் இயக்கங்கள் அதிகரித்த பிறகு அழைப்புப் பணி வெகு ஆரவாரத்தோடு நடைபெறுவதாக காட்சியளித்தாலும் அதன் பக்க விளைவுகளும் அதிகம் என்பதை மறுக்க இயலாது. ஏனென்றால் ஒரே அடிப்படையில் உள்ள அமைப்புகளே வெகுசில காரணங்களுக்காகப் பலஅமைப்புகளாகச் சிதறிக் கிடப்பதால் ஒவ்வொன்றும் தத்தம் இருப்பை உறுதி செய்யவும் தங்கள் செல்வாக்கை அதிகரிப்பதிலுமே அதிகக் கவனம் செலுத்துவதால் அழைப்புப் பணியை இலக்காகக் கொண்டு செயற்படுவதற்குப் பதிலாக ஓய்வுநேர/பகுதிநேரப் பணியக்ச் செய்யும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அழைப்புப் பணி நிகழ்ச்சிகளை நடத்துவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி ஸ்லாட்டுகளில்கூட அழைப்புப் பணியைவிட அதிகமாகப் பிறசகோதர இயக்கங்களின் மீதான வசைபாடலே அதிகரித்து உள்ளது. இதனால் இயல்பாக அந்த நேரத்தில் இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் தொலைக்காட்சியைப் பார்க்கும் பிறமதச் சகோதரர்கள் இஸ்லாம் மீது வெறுப்பு கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இஸ்லாமிய அமைப்புகள் பிரிவுபடாமல் ஒற்றுமையாக இருந்தால் எந்தளவு வலிமையாக அழைப்புப் பணி இருக்கும் என்பதற்கு ஒரு நேரடியான உதாரணம். சென்னை மண்ணடிப்பகுதி முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பகுதி மட்டுமல்ல, பிற சமூக மக்களும் அதிகமாக கலந்து வாழ்வதால் அழைப்புப் பணிக்கு ஏற்ற களமாய் உள்ளது. மண்ணடியில் சமுதாய இயக்கங்களின் அலுவலகங்கள் பல குறுகிய சந்துகளில் இருக்கின்றன. எளிதாக அடையாளம் காண முடியாமல் குறுகிய சந்துகளில் இருக்கும் எத்தனையோ அமைப்புகளின் அலுவலகங்களில் உள்ள அழைப்புப் பணி மையங்களுக்கு எந்தப் பிறமதச் சகோதரர்கள் ஆர்வத்தோடு வருவார்கள்? எப்படி மக்களைத் தங்களை நோக்கி அழைக்க முடியும்?. அதேநேரத்தில் எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து அல்லது குறைந்தபட்சம் அழைப்புப் பணிக்காக மட்டுமாவது இணைந்து, சென்னை கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் மிகப்பெரும் கட்டடத்தில் Jesus Calls எனும் பெயரில் மிகப்பெரும் அழைப்பு நிலையம்போல் வைத்திருந்தால் அல்லாஹ் நாடினால் நம் முயற்சிகள் இப்போது இருப்பதைவிடப் பலமடங்கு பலன் தரும் என்பதில் ஐயமில்லை.

பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புபணி

இன்றைய சூழலில் பிரிவுகள் என்பன யதார்த்தபூர்வமானது. அவற்றையெல்லாம் ஒழித்து, ஓரே நாளில் ஓரே அமைப்பாக மாற வேண்டும் என்பது நல்ல இலட்சியமாக இருந்தாலும் உடனடியாக நடப்பதற்கான சாத்தியம் குறைவானது. எனவே அவற்றிற்கு மத்தியில் அழைப்புப் பணி எவ்வாறு செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

இருக்கின்ற அமைப்புகளில் பெரும்பான்மையானவை அழைப்புப் பணி செய்ய கூடியதாக அல்லது அதற்கு உதவி செய்ய கூடிய ஒன்றாக அல்லது குறைந்த பட்சம் ஆர்வப்படக் கூடிய ஒன்றாக உள்ளதைப் பார்க்கின்றோம். எனவே பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப் பணி இரண்டு விதமாகச் செய்யலாம்.

முதலாவதாக ஒவ்வொரு அமைப்பும் பல பணிகளைச் செய்தாலும் அவை ஒவ்வொன்றும் மக்கள் சேவை, பத்திரிகையியல், கல்வி், மருத்துவ உதவி, தற்காப்பு, சமூக சீர்திருத்தம், அமல்களில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், ஃபிக்ஹ் என ஏதேனும் ஒரு தளத்தில் பிரதானமாக செயற்படுவதைக் காண்கின்றோம். அதுபோல் சில அமைப்புகள் ஒரு சில மாநிலத்தில் மட்டும் அல்லது ஒரு சில பகுதிகளில் மட்டும் செயற்படுவதைக் காண்கின்றோம். எனவே எல்லா அமைப்புகளும் தங்கள் பகுதிகளில் தங்கள் தளங்களில் செயற்பட்டுக் கொண்டு, தங்கள் தொண்டர்களில் ஒரு பகுதியினரையும், அதுபோல் தங்கள் பொருளாதாரத்தில் ஒரு பகுதியையும் அழைப்புப் பணிக்கென அர்ப்பணிக்க வேண்டும். இப்படியாக எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து மேலே சொன்னதுபோல் சென்னை Jesus calls போன்று முக்கிய நகரங்களில் எல்லா வசதிகளுடன் எல்லாரையும் சென்றடையும் வகையில் மையங்களை நிறுவிக் கூட்டாக அழைப்புப் பணி செய்யலாம்.

எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து மேற்கண்டவாறு அழைப்புப் பணியில் ஈடுபட முடியாவிட்டால், குறைந்த பட்சம் எல்லா அமைப்புகளும் தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில், தங்கள் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு அழைப்புப் பணியை திறம்படச் செய்ய வேண்டும். ஆனால் தங்கள் பிரசார பணியில் எக்காரணத்தைக் கொண்டும் பிற அமைப்புகளை விமர்சித்தலை, அதிலும் குறிப்பாகத் தனிமனித விமர்சனத்தை முழுமையாய்த் தவிர்க்க வேண்டும். பிறமதச் சகோதரர்களுக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ள பிரிவு பிரச்னைகளைப் பேசக் கூடாது. இஸ்லாத்துக்கு எதிரான தர்கா வழிபாடு, பித்அத்தான செயல்களை எதிர்ப்பதில் எச்சமரசமும் தேவையில்லை. தங்கள் பகுதியில் பிற அமைப்புகள் நடத்தும் அழைப்புப் பணி நிகழ்ச்சிகளுக்கு முடிந்த ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் தடைகற்களை ஏற்படுத்தாமலாவது இருக்க வேண்டும்.

எக்குழுவிலும் இல்லாத தனிநபர்களும் தங்களால் முடிந்த அளவு இஸ்லாத்தைப் பிறமக்களுக்கு எடுத்துச் சொல்வதில் முனைப்பாக இருக்க வேண்டும். தாங்கள் ஒரு ஜமாஅத்தில் இல்லை என்பது இப்பணியைத் தட்டிக் கழிப்பதற்கான காரணமாக இருக்கக் கூடாது. முடிந்தவரை மஹல்லா போன்ற குறுகிய வட்டத்திலாவது ஒத்த கருத்துள்ளவர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாக செயல்பட்டால் அவர்களின் பணி இன்னும் மிகப் பெரிய பலனைத் தோற்றுவிக்கும். இஸ்லாத்தைப் பற்றிய அறிவை, புத்தகங்கள் படித்தல், ஒலி – ஒளி பேழைகளைக் கேட்டல், அறிஞர்களுடன் கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அழைப்பு பணியின் பல் வேறு முறைகள்

எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஓரேஅமைப்பாக செயல்பட்டாலும் அல்லது ஒவ்வொன்றும் தனித்தனியே அழைப்புப் பணியைச் செய்தாலும் அல்லது தனித்தனி மனிதர்கள் அழைப்புப் பணியில் ஈடுபட்டாலும் எல்லோருக்கும் பொதுவான அழைப்புப் பணி முறைகளில் ஒரு சிலவற்றை விவரிக்கிறேன்.

தனிப்பட்ட மனிதர்கள் அழைப்புப் பணி செய்யும் உத்திகள்

இயக்க பின்புலம் இல்லாத தனிப்பட்ட மனிதர்கள்கூட அழைப்புப் பணி செய்ய ஏற்றமுறை தனிப்பட்ட முறையில் மக்களைச் சந்திப்பது. நாம் ஒவ்வொருவரும் தினந்தோறும் சந்திக்கும் மனிதர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். ஒன்று நாம் எப்போதும் அல்லது அடிக்கடி சந்திக்கும் அலுவலக நண்பர்கள், அண்டை வீட்டார்கள், அடிக்கடி போகும் கடை அல்லது உணவகத்தில் வேலை செய்பவர்கள் போன்றவர்கள். மற்றொன்று நம் பிரயாணத்தில் சந்திக்கும் நபர்கள், கடைவீதிகளில், டீ கடைகளில் சந்திக்கும் நபர்கள் போன்றோர்கள். இருவேறு குழுக்களிடம் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளைக் கையாண்டு அழைப்புப் பணி செய்ய வேண்டும்.

நடைமுறையில் கிறித்துவர்கள் செய்வதைப் போன்று பேருந்து நிலையம், இரயில் நிலையம், கடைகள் போன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இஸ்லாம் குறித்த பிரசுரங்களையும் புத்தகங்களையும் விநியோகிக்கலாம். மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் பொதுவாகத் தங்களை யாரும் விசாரிக்க வரமாட்டார்களா என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். அப்படிப்பட்ட நிலையிலுள்ளவர்களிடம் சென்று நோய் விசாரித்து ஆறுதல் மொழி சொல்லி அவர்களுக்காகப் பிராத்திப்பது அவர்களிடத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டுமல்ல, அது ஒரு சுன்னாவும் ஆகும். ஆனால் வருந்தத்தக்க விதத்தில் நமக்கு இதில் முன்னோடியாக அரபு நாடுகளில்கூட கிறித்துவர்களே உள்ளனர். அதுபோல் சிறைச்சாலைகளில் குறிப்பாக அமீரகத்தில் உள்ள சிறைகளில் முஸ்லிம்களில் சிலரே அவர்களை எந்த ஒரு சமுதாயச் சொந்தமும் சந்திக்காமல், கிறித்துவர்களின் குழு சென்று சந்தித்து பொருளாதார உதவி செய்ததன் ஒரே காரணத்தால் தன்னை விசாரிக்க சிறைக்கு வராத இஸ்லாமியச் சகோதரர்களைவிட, தன்ன்னிடம் வந்து கனிவான சொற்கள்பேசி, காசுபண உதவியும் செய்யக்கூடிய கிருஸ்த்துவக் குழுவினரிடம் ஈர்ப்பும் கொண்ட முஸ்லிம்களையும் நாம் காணமுடிகிறது. கிருஸ்த்துவர்கள் பின்பற்றும் பிரச்சார உத்தியைக் கையிலெடுத்து, சிறைகளில் நாம் அழைப்பு பணியைச் செய்தால் இறைவன் நாடினால் அதிலிருந்து வாய்மையான முஸ்லிம்கள் கிடைப்பார்கள்.

குழு ரீதியாக அழைப்புப் பணி செய்யும் உத்திகள்

தனிப்பட்ட முறையில் செய்வதைவிட ஜமாஅத்தாக அழைப்புப் பணி செய்வது கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குழுவாகச் செய்யப்பட வேண்டிய அழைப்புப் பணி உத்திகளில் சில:

* ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் விடுமுறை தினங்களில் எல்லா சமய மக்களையும் ஒன்று கூட்டி இஸ்லாம் குறித்த சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு வரும் மக்களின் இஸ்லாம் குறித்த ஐயங்களுக்குத் தெளிவு தரும் வகையில் கேள்வி – பதில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யலாம்

* இஸ்லாம் குறித்த தெருமுனைப் பிரசாரங்கள் சேரிகள்முதல் அக்ரஹாரம்வரை நடத்தப்பட வேண்டும். நகரின் மையப்பகுதியில் இஸ்லாம் குறித்த செய்திகளை உதாரணத்திற்கு 112 வது அத்தியாயத்தை, "இறைவன் என்பவன் யார்?" அல்லது "இறைவனின் பண்புகள்" எனும் தலைப்பில் டிஜிட்டல் போர்டுகளாக வைக்கலாம்.

* பெருநாள் விடுமுறைகளில் பிற சமூக மக்களுக்கு விருந்து கொடுத்து இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் “ஈத் மிலன்” நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

* பொதுவான தலைப்புகளில் அனைத்து மதத்தாரையும் சேர்த்து, கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

* சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது தாராளமாக உதவி செய்வதன் மூலம் இஸ்லாம் குறித்த நல்லபிப்ராயத்தைப் பிறமக்களிடம் ஏற்படுத்தலாம்.

* இலவச ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள் போன்றவற்றை அனைத்து சமூகத்தினரும் வாழும் பகுதியில் நடத்தலாம்.

* முஸ்லிம்கள் தாங்கள் நடத்தும், தங்கும் உணவகங்களில் (Hotels) விருந்தினர் அறைகளில் குர்ஆன் மற்றும் இதர இஸ்லாமிய புத்தகங்களை வைக்கலாம்.

* தங்களுடைய திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலான குத்பாவில் பிறமதத்தாரை மையப்படுத்திப் பேசலாம். இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் புத்தகங்களையும் அவர்களுக்கு விநியோகிக்கலாம்.


ஊடகங்களின் மூலம் அழைப்புப் பணி உத்திகள்

இன்றைய உலகில் ஒரு கொள்கையைப் பிரசாரம் செய்வதில், ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்களிப்பை யாரும் புறக்கணிக்க முடியாது. அவ்வளவு வலிமையான ஊடகங்களை பயன்படுத்தி அழைப்புப் பணி செய்யும் உத்திகளில் சில:

* இஸ்லாத்தின் கொள்கைகளை எளிமையான நடையில் சொல்லும் புத்தகங்களை மலிவு விலைப் பதிப்பாக வெளியிடலாம்.

* புத்தகக் கண்காட்சிகளில் ஸ்டால் எடுத்து இஸ்லாமியப் புத்தகங்கள், அல்குர்ஆன், முஹம்மது (ஸல்) வரலாறு போன்ற புத்தகங்களைப் பிற சமூகத்தினருக்குக் கழிவு விலையில் கொடுக்க வேண்டும்.

* அஞ்சல் வழியாக மாற்று சமூகத்தினரின் வீடுகளுக்குப் புத்தகங்கள் அனுப்ப வேண்டும்.

* ஒவ்வோர் ஊரிலும் ஒரு பொது நூலகம் ஒன்றை ஏற்படுத்தி, அதில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் வைக்க வேண்டும்.

* முக்கிய செய்தித்தாள்களில் தினமும் அல்லது வாரம் ஒருமுறை அச்சூழலுக்கு ஏற்ற மாதிரி - உதாரணத்திற்கு அண்மையில் புதிதாக வந்துபோன ஸ்வைன் ப்ளு நோய் பற்றி - குரான் வசனங்கள், ஹதீஸ்களை வெளியிடலாம்.

* கேபிள் டி.வி. நெட்வொர்க்கைப் பயன்படுத்தி தினமும் இஸ்லாமியச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

* இணையத்தளங்களிலும் chat groupகளிலும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட விளக்கங்களை அளிக்கலாம்

* தற்போது தொலைக்காட்சிகளில் இஸ்லாமிய அமைப்புகள் கைவசம் உள்ள ஸ்லாட்டுகளில் பிற இயக்கத்தினரை விமர்சிப்பதை விடுத்து, அழைப்புப் பணி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

அழைப்புப் பணி என்பது ஒரு சில இயக்கங்களின் மீதோ அல்லது ஒரு சில குழுக்களின் மீதோ மட்டும் கடமையானதல்ல. மாறாக அது கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையானதாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதைத் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் செய்ய வேண்டும். இயக்கங்களின் பிரிவுகள் அழைப்புப் பணியில் பக்கவிளைவுகளை (side effects) ஏற்படுத்தியிருந்தாலும் அது நாம் அப்பணியைச் செய்யாமல் கைவிடுவதற்கு ஒரு காரணமாய் இருக்கக் கூடாது. மாறாக பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப் பணி பல்வேறு உத்திகளின் மூலம் செய்வது என்று இதுவரை பார்த்தவற்றிற்கு ஏற்ப நம் சக்திக்கு உட்பட்ட வகையில் அழைப்புப் பணி செய்ய வேண்டியது அவசியமானது மட்டுமல்ல இன்றைய சூழலில் அவசரமானதும் கூட.

நன்றி : சத்திய மார்க்கம்